செய்திகள்

மதுரையில் இன்று மீனாட்சி சுந்தரேசுவரர் தேரோட்டம்

Published On 2019-04-18 06:40 GMT   |   Update On 2019-04-18 06:40 GMT
மதுரையில் இன்று மீனாட்சி சுந்தரேசுவரர் தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது. பக்தர்கள் திரண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
சைவமும், வைணவமும் இணையும் வகையில் கொண்டாடப்படும் விழா மதுரை சித்திரை திருவிழா. மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம், திருக்கல்யாணம், தேரோட்டம், கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குவது என 15 நாட்கள் ஆண்டுதோறும் மதுரையில் இந்த விழாகளைகட்டி காணப்படும்.

சித்திரை திருவிழாவை காண பல்வேறு மாவட்டங்களில் மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் ஆண்டுதோறும் திரள்வது உண்டு.

இந்த ஆண்டு மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரர் சித்திரை திருவிழா கடந்த 8-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதனை தொடர்ந்து தினமும் காலை, இரவு வேளைகளில் சுவாமி- அம்மன் வீதிஉலா கோலாகலமாக நடைபெற்றது. இரவில் நடைபெறும் சுவாமி ஊர்வலத்தின்போது சிறுவர், சிறுமியர் மீனாட்சி, சொக்கநாதர் மற்றும் கடவுள்கள் வேடங்களில் வந்து ஆடிபாடி செல்வதை காண மாசிவீதிகளில் கூட்டம் அலைமோதியது.

முக்கிய நிகழ்ச்சியான பட்டாபிஷேகம், திருக்கல்யாணம் போன்றவை விமரிசையாக நடைபெற்றது. திருக்கல்யாணத்தில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு புதுதாலி மாற்றி கொண்டனர். கோவில் சார்பில் நடைபெற்ற திருமண விருந்து நிகழ்ச்சியிலும் திரளானோர் கலந்து கொண்டனர்.

மீனாட்சி அம்மன் சித்திரை திருவிழாவின் முத்தாய்ப்பு நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை விமரிசையாக நடைபெற்றது. முதலில் விநாயகர், முருகப்பெருமான் தேர்கள் இழுக்கப்பட்டன. காலை 4.30 மணிக்கு பிரியாவிடையுடன் சொக்கநாதர் பெரிய தேருக்கு எழுந்தருளினார். தொடர்ந்து மீனாட்சி அம்மன் சிறிய தேருக்கு எழுந்தருளினார்.

காலை 5.45 மணிக்கு மாவட்ட கலெக்டர் நடராஜன், கோவில் தக்கார் கருமுத்துகண்ணன், இணை ஆணையர் நடராஜன் ஆகியோர் வடம்பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.

தொடர்ந்து அங்கு திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஓம் நமச்சிவாய... என்ற பக்தி கோ‌ஷத்துடன் தேரை இழுத்தனர். 4 மாசி வீதிகளிலும் சுவாமி- அம்மன் தேர்கள் வலம் வந்ததை காண ஏராளமான பக்தர்கள் குழந்தைகளுடன் வீதிகளில் திரண்டிருந்தனர்.

தேருக்கு முன்பாக அலங்கரிக்கப்பட்ட கோவில் யானை மற்றும் காளை வலம் வந்தன. இதனை கண்டு சிறுவர்-சிறுமிகள் உற்சாகம் அடைந்தனர். இளைஞர்கள் ஆர்வத்துடன் வடங்களை பிடித்து தேர் இழுத்தனர். இந்த சித்திரை திருவிழாவால் மதுரை இன்று களைகட்டி காணப்பட்டது.

பக்தர்கள் வெள்ளத்தில் நீந்தி வந்த தேர்கள் கீழமாசி வீதியில் உள்ள நிலையை அடைந்ததும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. சுவாமி-அம்மன் தேர்களுக்கு பின்னால் சண்டிகேஷ்வரர், பஞ்சமூர்த்திகள் சப்பரங்களில் வீதிஉலா வந்தனர்.

மீனாட்சி அம்மன் சித்திரை திருவிழாவை தொடர்ந்து நாளை கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் நடை பெற உள்ளது. இதற்காக அழகர்மலையில் இருந்து கள்ளழகர் நேற்று மதுரை புறப்பட்டார். அவருக்கு வழிநெடுக பல்வேறு மண் டகப்படிகளில் பக்தர்கள் திரண்டு வரவேற்பு கொடுத்தனர்.

இன்று மாலை மூன்று மாவடியில் எதிர்சேவை நடக்கிறது. நாளை அதிகாலை தல்லாகுளம் பெருமாள் கோவிலில் இருந்து தங்க குதிரை வாகனத்தில் புறப்படும் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

இந்த நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள் இதனால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
Tags:    

Similar News