செய்திகள்

சித்திரை திருவிழா கோலாகலம்: கள்ளழகர் பச்சைபட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார்

Published On 2019-04-19 01:19 GMT   |   Update On 2019-04-19 08:15 GMT
பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார். இதனை 10 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்தனர். #Kallalagar #ChithiraiThiruvila
மதுரையில் ஆண்டு தோறும் நடைபெறும் சித்திரை திருவிழா வரலாற்று சிறப்புமிக்க நிகழ்ச்சியாகும். இது விழா மட்டுமல்ல. வைணவம் - சைவம் இணையும் முத்திரை பதிக்கும் வைபவமாகும்.

சிவபெருமான் - விஷ்ணு பெருமாள் இருவரையும் மக்கள் ஒன்றாக தரிசித்து விழா எடுத்ததுதான் சித்திரை திருவிழா. இந்த விழாவைக்காண தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் மதுரை வருவதுண்டு.

இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழாவில் மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கலயாணம், தேரோட் டம் 12 நாட்கள் விமரிசையாக நடந்தது. இந்த விழாக்களின் போது ஏராளமான சிறுவர்-சிறுமிகள், மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் மற்றும் பல்வேறு கடவுள் வேடம் அணிந்து வீதி உலா சென்றனர்.

இந்த விழாவை கண்டு தரிசனம் பெற்றமக்கள் அடுத்து எதிர்பார்த்தது கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவத்தை தான். மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் கொடுக்கவும் மீனாட்சியின் திருக்கல்யாணத்தை காணவும் அழகர் மலையில் இருந்து சுந்தர்ராஜ பெருமாள் கடந்த 17-ந்தேதி தோளுக்கினியான் வேடத்தில் புறப்பட்டார்.

அழகர் கோவிலின் காவல் தெய்வமான பதினெட்டாம்படி கருப்பண்ண சாமியிடம் காவல் பொறுப்பை ஒப்படைத்த சுந்தர்ராஜ பெருமாள் அங்கிருந்து கள்ளர் திருக்கோலத்தில் மதுரை நோக்கி புறப்பட்டார்.

அவருக்கு முன்பாக கள்ளர் வேடமணிந்த பக்தர்கள். துள்ளல் ஆட்டம் போட்டு ஆடிப்பாடி வந்தனர். மதுரை வந்த கள்ளழகரை ஏராளமான மண்டகப்படிகளில் பக்தர்கள் வரவேற்றனர்.

நேற்று காலை மூன்று மாவடியில் பக்தர்கள் கள்ளழகருக்கு எதிர் சேவை கொண்டு வரவேற்பு கொடுத்தனர். அதன் பின்னர் புதூர் மாரியம்மன், ரிசர்வ் லைன் மாரியம்மன் கோவில் பகுதிகளுக்கு சென்றுவிட்டு இரவில் தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோவிலில் கள்ளழகர் எழுந்தருளினார்.

அங்கு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த சுடர்மாலை மற்றும் அங்கவஸ்திரம் பெரு மாளுக்கு அணிவிக்கப் பட்டது. இதனை ஏராள மான பக்தர்கள் கண்டு தரிசனம் பெற்றனர்.

இன்று அதிகாலை 2.30 மணிக்கு அங்கி ருந்து புறப்பட்ட கள்ள ழகர், தல்லாகுளம் கருப் பண்ணசாமி கோவிலுக்கு வந்ததும் அங்கு ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளினார். நள் ளிரவு மட்டுமல்ல அதி காலையிலும் பக்தர்கள் அலைகடலென திரண்டு அழகரை தரிசித்தனர். இதனால கோரிப்பாளையம், தல்லாகுளம் வைகை ஆற்றுப் பாலம் என எங்கு பார்த்தாலும் மக்கள் தலைகளே காணப்பட்டன.

அதிகாலை 3 மணிக்கு கருப்பண்ணசாமி கோவிலில் இருந்து பச்சைப்பட்டு உடுத்தி தங்க குதிரை வாகனத்தில் கள்ளழகர் வைகை ஆற்றுக்கு புறப் பட்டார். அப்போது பக்தர்கள் கோவிந்தா... நாராயணா... என பக்தி கோ‌ஷம் எழுப்பினர்.



வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் வைபவத்துக்காக வைகை அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் நேற்று இரவே வைகை ஆற்றை வந்தடைந்தது. இன்று காலை 5.50 மணிக்கு வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கினார். 10 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்தனர். அவர் தங்க குதிரை வாகனத்தில் துள்ளிக்குதித்து வருவதைப் போல சீர்பாத தூக்கிகள் தங்கள் உள்ளங்கைகளில் தூக்கி போட்டு பிடித்தபடி ஆட்டம் போட்டது மெய்சிலிர்க்க வைக்கும் வகையில் அமைந்தது.

நீண்ட தூர பயணம் செய்து வந்த கள்ளழகரை குளிர்விக்கும் வகையில், கள்ளழகர் வேடமணிந்த பக்தர்கள் துருத்தி நீரை அழகர் மீது பாய்ச்சி குளிர வைத்தனர்.

கள்ளழகர் பச்சைப் பட்டு உடுத்தி இறங்கியதால், நாட்டில் விவசாயம் செழித்து நாடு செழிப்பாக இருக்கும் என அங்கு திரண்டிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தெரிவித்தனர்.

தொடர்ந்து அவர்கள் வைகை ஆற்றின் கரையிலே தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். சிலர் முடி காணிக்கை செலுத்தினர். மேலும் சிலர் நாட்டுச்சர்ககரை நிரப்பப் பட்ட செம்பில் சூடம் ஏற்றி வழிபட்டனர். லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டிருந்ததால் போலீஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டு இருந்தது. மாநகரில் போக்குவரத்தும் மாற்றி அமைக்கப்பட்டு இருந்தது. #Kallalagar #ChithiraiThiruvila

Tags:    

Similar News