புதுச்சேரி

தி.மு.க.வை விமர்சிக்க புதுவை காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு "திடீர்" தடை

Published On 2024-01-18 09:03 GMT   |   Update On 2024-01-18 09:03 GMT
  • பாராளுமன்ற தேர்தல் நெருக்கத்தில் காங்கிரஸ், தி.மு.க. இடையிலான கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
  • காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் தி.மு.க.வின் கண்டனத்திற்கு பதில் தெரிவிக்காமல், வாய்மூடி மவுனமாக உள்ளனர்.

புதுச்சேரி:

புதுவை மாநில காங்கிரஸ், தி.மு.க. கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

காங்கிரஸ் சார்பில் நடந்த நல்லிணக்க பொங்கல் விழாவில் தி.மு.க.வை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்ற சுயேட்சை எம்.எல்.ஏ.வை அழைத்து பாராட்டியதற்கு தி.மு.க.வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

மேலும் அந்த விழாவில், 2026 சட்டமன்ற தேர்தலில் சுயேட்சை எம்.எல்.ஏ.வுக்கு சீட் கிடைக்காவிட்டால், கூட்டணியை மறுபரிசீலனை செய்வோம் என காங்கிரஸ் தலைவர்கள் பேசியுள்ளனர். கூட்டணியை முடிவு செய்ய புதுவை மாநில தலைவர்களுக்கு அதிகாரம் அளித்தது யார்? என தி.மு.க.வினர் கேள்வி எழுப்பியுள்ளனர். தி.மு.க. மாநில அமைப்பாளரும், எதிர்கட்சித்தலைவருமான சிவா, தி.மு.க. தனது உரிமையை ஒருபோதும் விட்டுக்கொடுக்காது என தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற தேர்தல் நெருக்கத்தில் காங்கிரஸ், தி.மு.க. இடையிலான கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் மாநில காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி. புதுவை மாநில காங்கிரஸ் நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளார். அந்த உத்தரவில், தி.மு.க.வை பொது வெளியிலோ, கூட்டங்களிலோ விமர்சிக்கக்கூடாது என்றும், தி.மு.க.வுக்கு எதிர்ப்பான கருத்துக்களை சமூகவலை தளங்களில் பதிவு செய்யக்கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளார்.

இதனால் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் தி.மு.க.வின் கண்டனத்திற்கு பதில் தெரிவிக்காமல், வாய்மூடி மவுனமாக உள்ளனர். பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் புதுவையில் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. இதனால் கூட்டணியில் ஏற்பட்டுள்ள விரிசல், அதிருப்தி வெற்றியை பாதிக்கும் என காங்கிரசார் அஞ்சுகின்றனர்.

Tags:    

Similar News