புதுச்சேரி

பள்ளிநேரத்தில் வேகமாக சென்ற 30 மணல் லாரிகள் மீது வழக்கு

Published On 2024-07-09 06:48 GMT   |   Update On 2024-07-09 06:48 GMT
  • சில மாதங்களுக்கு முன்பு கல்லூரி மாணவர்கள் இருவர் மணல் லாரியால் விபத்து ஏற்பட்டு உயிர் இழந்துள்ளனர்.
  • ஓட்டுநர் உரிமம் உட்பட ஆவணங்கள் இன்றி வாகனங்கள் இயக்குவது தெரிந்தது.

புதுச்சேரி:

புதுவை மாநிலம் காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு பகுதிகளில் இருந்து சாலை மற்றும் ரெயில்வே பணி விரிவாக்க பணிகளுக்காக தினந்தோறும் மணல் ஏற்றிக் கொண்டு 100-க்கும் மேற்பட்ட லாரிகள் சென்று வருகிறது.

இந்த லாரிகள் எந்தவித சாலை விதிகளையும் பின்பற்றாமல் அதிவேகத்தில் செல்வதால் தொடர் விபத்துகள் ஏற்படுகிறது. லாரிகளில் இருந்து வெளியேறும் மண் புழுதிகளால் எதிரில் வரும் வாகனங்களுக்கு விபத்து ஏற்படுவதாக பொது மக்கள் குற்றம்சாட்டி வந்தனர்.

அதிவேகமாக சென்று வரும் லாரிகளால் விபத்தும், உயிரிழப்பும் ஏற்பட்டுள்ளது. சில மாதங்களுக்கு முன்பு கல்லூரி மாணவர்கள் இருவர் மணல் லாரியால் விபத்து ஏற்பட்டு உயிர் இழந்துள்ளனர்.

பள்ளிகளுக்கு மாணவர்களுக்கு சென்று வரும் நேரத்தில் அதிவேகத்தில் மணல் லாரி இயக்கப்படுவதாக மாவட்ட போக்குவரத்துத் துறை போலீசாரிடம் பொதுமக்கள் புகார் கூறினர்.

இதனால் காலை 8.30 மணியிலிருந்து 9.30 மணி வரையும், மாலை 4 முதல் 5 மணி வரையும் லாரிகள் இயக்கக் கூடாது என்று உத்தரவு போடப்பட்டது. ஆனால் உத்தரவை காற்றில் பறக்க விட்டு மணல் லாரிகள் வழக்கம் போல் பள்ளி விடும் நேரத்தில் அதிவேகமாக இயங்கி வந்தன.

இதையடுத்து திருநள்ளாறு சாலையில் போக்குவரத்து ஆய்வாளர் லெனின் பாரதி தலைமையான போலீசார் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அதிவேகமாக சென்ற 30-க்கும் மேற்பட்ட லாரிகளை மடக்கிப் பிடித்தனர். இதில் பெரும்பாலானோர் ஓட்டுநர் உரிமம் உட்பட ஆவணங்கள் இன்றி வாகனங்கள் இயக்குவது தெரிந்தது. அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

ஆய்வின்போது ஒரு ஓட்டுநர் தனக்கு தெரிந்த வி.ஐ.பி. பேசுவதாக கூறி போனை ஆய்வாளரிடம் கொடுக்க வந்தார். போனை வாங்க மறுத்த ஆய்வாளர் கடுமையான எச்சரிக்கை விடுத்தார். பொது மக்களின் உயிர் மீது அக்கறை இல்லாமல், பாதுகாப்பு அம்சங்கள் ஏதுமின்றி லாரிகளை இயக்கினால் இனிவரும் காலங்களில் தண்டனை கடுமையாக இருக்கும் என எச்சரித்து அவர்களை அனுப்பி வைத்தார்.

Tags:    

Similar News