புதுச்சேரி

புத்தாண்டை வரவேற்க தயாராகும் புதுவை- களைகட்டிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

Published On 2022-12-21 10:03 GMT   |   Update On 2022-12-21 10:03 GMT
  • டிசம்பர் மாத இறுதி முதல் ஜனவரி முதல் வாரம் வரை அறைகள் இல்லை என பல விடுதிகள் கைவிரித்து வருகின்றன.
  • ஓட்டல்களில் புத்தாண்டை வரவேற்கும் வகையில் உணவு திருவிழா, கேளிக்கை, நடன, இசை நிகழ்ச்சிகள் நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.

புதுச்சேரி:

புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக பல்வேறு மாநிலங்களிலிருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் புதுவைக்கு வருவது வாடிக்கை.

கொரோனா தாக்கத்தால் 2 ஆண்டுகள் புதுவையில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெறாமல் போனது. கடந்த ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டம் நடந்தது. இருப்பினும் கொரோனா அச்சம் காரணமாக அதிகளவில் மக்கள் கூடவில்லை. இந்த ஆண்டு கொரோனா அச்சம் முற்றிலுமாக விலகி புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு புதுவை தயாராகி வருகிறது.

டிசம்பர் மாத தொடக்கத்திலிருந்தே சுற்றுலா பயணிகளின் வருகை நாளுக்கு நாள் புதுவையில் அதிகரித்து வருகிறது. கிறிஸ்துமஸ், அரையாண்டு விடுமுறை விடப்பட உள்ளது. புதுவையில் தற்போது குளு, குளுவென குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவுகிறது. புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக ஓட்டல்கள், விடுதிகளில் முன்பதிவும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. நட்சத்திர விடுதி முதல் சாதாரண விடுதி வரை ஆன்லைன் மூலம் வெளிமாநிலத்தினர் முன்பதிவு செய்து வருகின்றனர்.

டிசம்பர் மாத இறுதி முதல் ஜனவரி முதல் வாரம் வரை அறைகள் இல்லை என பல விடுதிகள் கைவிரித்து வருகின்றன. ஓட்டல்களில் புத்தாண்டை வரவேற்கும் வகையில் உணவு திருவிழா, கேளிக்கை, நடன, இசை நிகழ்ச்சிகள் நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.

இதற்காக நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்துகளில் அனுமதி பெற வேண்டும் என அரசு அறிவித்துள்ளது.

பல்வேறு மைதானம், திடல்கள், கடற்கரைகளில் புத்தாண்டு கொண்டாட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. புதுவையில் பல்வேறு கடற்கரைகள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. இங்கும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்படுகிறது.

கிறிஸ்துமஸ் பண்டிகை சில நாட்களே உள்ளதால் பண்டிகை பொருட்கள் விற்பனை சூடுபிடித்துள்ளது.

மிஷன்வீதி, காந்திவீதி, நேருவீதிகளில் கிறிஸ்துமஸ் குடிலுக்கு தேவையான பொருட்கள் விற்கப்படுகிறது. இவற்றை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர். மிஷன்வீதி ஜென்மராக்கினி மாதா கோவில் எதிரே குடில்களுக்கு தேவையான சொரூபங்கள் விற்பனை ஜரூராக நடக்கிறது. கிறிஸ்துமஸ் கேரல்ஸ், கலைநிகழ்ச்சிகளும் களைகட்டியுள்ளது.

தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் குடில் அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. வருகிற 24-ந் தேதி நள்ளிரவு கிறிஸ்துமஸ் திருப்பலியும், 25-ந்தேதி காலை பிரார்த்தனையும் நடக்கிறது. கிறிஸ்தவர்கள் தங்கள் வீடுகளில் ஸ்டார், குடில்களை அமைத்து கிறிஸ்து பிறப்பு பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாட தயாராகி வருகின்றனர்.

Tags:    

Similar News