புதுச்சேரி

நாளை குடியரசு தின விழா- புதுவை கடற்கரை சாலையில் கவர்னர் தமிழிசை கொடியேற்றுகிறார்

Published On 2023-01-25 07:06 GMT   |   Update On 2023-01-25 07:06 GMT
  • காவல்துறையின் பல்வேறு பிரிவினர், என்.சி.சி., என்.எஸ்.எஸ்., அரசு, தனியார் பள்ளி மாணவர்களின் அணிவகுப்பு நடக்கிறது.
  • அரசு துறைகளின் அலங்கார வாகனங்களின் அணிவகுப்பு நடக்கிறது.

புதுச்சேரி:

நாட்டின் குடியரசு தினவிழா நாளை கொண்டாடப்படுகிறது.

புதுவை அரசின் சார்பில் கடற்கரை சாலையில் குடியரசு தின விழா கொண்டாடப்படுகிறது. இதற்காக அங்கு கொடிக்கம்பத்துடன் மேடை, பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. சட்டசபை, கவர்னர் மாளிகை, பாரதி பூங்கா, ஆயிமண்டபம், தலைமை செயலகம் ஆகியவை வண்ணவிளக்குளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

நாளை காலை 9.30 மணிக்கு குடியரசு தினவிழா தொடங்குகிறது. 9.25 மணிக்கு கவர்னர் தமிழிசை கடற்கரை சாலைக்கு வருகிறார். மேடைக்கு செல்லும் அவர் தேசியக்கொடியை ஏற்றுகிறார். தொடர்ந்து அவர் போலீசாரின் அணி வகுப்பு மரியாதையை பார்வையிடுகிறார். மேடைக்கு திரும்பும் அவர் சாதனை படைத்த போலீசாருக்கு விருது, பதக்கம், பாராட்டு சான்றிதழ், பரிசுகளை வழங்குகிறார்.

தொடர்ந்து காவல்துறையின் பல்வேறு பிரிவினர், என்.சி.சி., என்.எஸ்.எஸ்., அரசு, தனியார் பள்ளி மாணவர்களின் அணிவகுப்பு நடக்கிறது. தொடர்ந்து அரசு துறைகளின் அலங்கார வாகனங்களின் அணிவகுப்பு நடக்கிறது. இதை தொடர்ந்து மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. தொடர்ந்து தேசியகீதம் இசைக்கப்பட்டு விழா நிறைவுபெறுகிறது.

குடியரசு தின விழாவையொட்டி போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீஸ் சூப்பிரண்டு மாறன் கூறியதாவது:-

வடக்கு பகுதி வழியாக விழா வரும் முக்கிய பிரமுகர்கள், பங்கேற்பாளர்கள் அனுமதி பெற்றவர்கள் பழைய சாராய ஆலை, பிரமனைடு வழியாக வந்து விழா பந்தலின் வடக்கு பகுதியில் கடற்கரை ரோட்டில் கிழக்கு பகுதியில் நிறுத்த வேண்டும்.

மற்றவர்கள் தங்கள் இருசக்கர வாகனங்களை கொம்பாங்கி வீதி, செயின்மார்ட்டின் வீதி, லாதி லோரிஸ்தான் வீதியில் நிறுத்தி நடந்து வர வேண்டும். தெற்கு பகுதி பிரமுகர்கள் புஸ்சி வீதி வழியாக வந்து பந்தலின் தெற்கு பகுதியில் கடற்கரை ரோட்டில் நிறுத்த வேண்டும். மற்ற வாகனங்கள் சுய்ப்ரேன் வீதி வர்த்தக சபை அருகில் நிறுத்த வேண்டும்.

அணிவகுப்பில் பங்கேற்பவர்கள் வாகனங்களை ரோமன்ரோலண்ட் வீதி, கஸ்ரேன் வீதி, குர்கூப் வீதி, துமாஸ்வீதி, புஸ்சி வீதியில் தெற்கு நோக்கி பழைய துறைமுகம் வரை நிறுத்தலாம். பிற பகுதிகளில் எந்த வாகனங்களும் நிறுத்த அனுமதி கிடையாது.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News