புது விளம்பர வீடியோ.. அடுத்த சர்ச்சையில் ஆப்பிள்
- கதாபாத்திரங்கள் அலுவல் பயணமாக தாய்லாந்து செல்கின்றன.
- முந்தைய நிலையை மட்டும் காண்பிக்கும் வகையில் உள்ளதாக நெட்டிசன்கள் குற்றச்சாட்டு.
ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ள புது விளம்பர வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. தாய்லாந்தை சேர்ந்த பலர் இந்த வீடியோவுக்கு சமூக வலைதளங்களில் கண்டனக்குரல் எழுப்பி வருகின்றனர்.
பத்து நிமிடங்கள் ஓடும் புது விளம்பர வீடியோ கடந்த ஜூலை 18 ஆம் தேதி ஆப்பிள் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் பதிவேற்றம் செய்யப்பட்டது. இது "Apple at Work – The Underdogs" சீரிசின் கீழ் வெளியாகி இருக்கும் ஐந்தாவது வீடியோ ஆகும்.
வீடியோவில் நான்கு கதாபாத்திரங்கள் "அன்டர்டாக்ஸ்" என்று காட்டப்படுகின்றன. இவை பணியாற்றும் இடங்களில் ஆப்பிள் சாதனங்கள் மற்றும் மென்பொருள் மூலம் எப்படி எதிர்கொள்கின்றனர் என்பதை சுட்டிக்காட்டும் வகையில் உருவாக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் சமீபத்திய வீடியோவில், கதாபாத்திரங்கள் அலுவல் பயணமாக தாய்லாந்து செல்கின்றன. இது தொடர்பாக காட்சிகளில் அந்த கதாபாத்திரங்கள் ரெயில் மற்றும் டக்டக் வண்டிகளில் பயணம் செய்யும் காட்சிகள் இடம்பெற்று உள்ளன. இவை தாய்லாந்தின் 50 ஆண்டுகளுக்கு முந்தைய நிலையை மட்டும் காண்பிக்கும் வகையில் உள்ளதாக நெட்டிசன்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்த வீடியோவில், தாய்லாந்தின் தொழில்நுட்ப வளர்ச்சி, இன்றைய கால சூழல் உள்ளிட்டவைகளை வெளிப்படுத்தும் வகையில் எந்த காட்சிகளும் இடம்பெறவில்லை. இதற்கு தாய்லாந்தை சேர்ந்த பலர் தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.