விண்டோஸ், மேக்ஓஎஸ்-க்கு போட்டியாக சொந்த ஆபரேட்டிங் சிஸ்டத்தை அறிமுகம் செய்தது சீனா
- அமெரிக்க கருவூலத்துறை மந்திரி சீனாவுக்கு வருவதற்கு முன்னதாக இந்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
- OpenKylin என்ற பெயர், பழம்பெரும் சீன புராணங்களில் உள்ள ஒரு புராணக்கதையை குறிக்கிறது.
கம்ப்யூட்டர் செயல்பாடுகளில் மிகவும் முக்கியமான பணியை செய்வது இயங்குதளம் (Operating System). கம்ப்யூட்டர் பாகங்கள் உயிர்பெற்று இயங்குவதற்கு இயங்குதளம் அவசியமானது. இந்த தொழில்நுட்பத்தில் உலகம் முழுவதும் விண்டோஸ், மேக்ஓஎஸ் ஆகியவை ஆதிக்கம் செலுத்திவருகின்றன.
இந்நிலையில், சீன அரசு உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட முதல் ஓபன் சோர்ஸ் கம்ப்யூட்டர் ஆபரேட்டிங் சிஸ்டத்தை அறிமுகம் செய்திருக்கிறது. அமெரிக்காவுடனான போட்டி அதிகரித்துள்ள நேரத்தில், வெளிநாட்டு சார்பைக் குறைக்கும் முயற்சியாக இந்த புதிய சிஸ்டம் உருவாக்கப்பட்டிருக்கிறது.
அமெரிக்க கருவூலத்துறை மந்திரி ஜேனட் யெல்லன் சீனாவுக்கு வருவதற்கு முன்னதாக இந்த புதிய இயங்குதளம் தொடர்பான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
ஓபன்கிளின் (OpenKylin) என்று அழைக்கப்படும் இந்த இயங்குதளம், உலகம் முழுவதும் பயன்பாட்டில் இருக்கக்கூடிய Windows மற்றும் MacOS அமைப்புகளுக்கு போட்டியாக வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும், இந்த மென்பொருளின் முந்தைய பதிப்புகள் சில அரசுத் துறைகளின் கம்ப்யூட்டர்களில் ஏற்கனவே பயன்படுத்தப்பட்டுள்ளன என்றும் சீன அரசு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
Windows மற்றும் MacOS அமைப்புகளின் செயல்பாடுகளை ரகசியமாக வைத்திருக்கும் மைக்ரோசாப்ட் மற்றும் ஆப்பிள் நிறுவனங்கள் போன்று அல்லாமல், OpenKylin பயனர்கள் மென்பொருளின் குறியீடுகளை பெற முடியும். அத்துடன், தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப மாற்றிக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
OpenKylin என்ற பெயர், பழம்பெரும் சீன புராணங்களில் உள்ள ஒரு புராணக்கதையை குறிக்கிறது. இது பிரபலமான ஓபன் சோர்ஸ் லினக்ஸ் ஆபரேட்டிங் சிஸ்டத்தை அடிப்படையாகக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.