இந்தியாவில் 5ஜி சேவை எப்போது பயன்பாட்டுக்கு வரும்? - மத்திய மந்திரி விளக்கம்
- 5ஜி அலைக்கற்றை ஏலம் ஜூலை மாத இறுதிக்குள் நிறைவடையும்.
- மத்திய அமைச்சரவை தற்போது 5ஜி அலைக்கற்றை ஏலத்திற்கான பரிந்துரைகளுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.
5ஜி தொலைதொடர்பு சேவை உலகின் பல்வேறு நாடுகளில் பயன்பாட்டில் உள்ளது. ஆனால் இந்தியாவில் தற்போது வரை, 4ஜி அலைக்கற்றை மூலம் இணைய சேவை மற்றும் தொலைதொடர்பு சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்தியாவில் 5ஜி சேவை எப்போது தொடங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், இந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் 2022 இறுதிக்குள் இந்தியாவில் 5ஜி சேவை நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கு செயல்வடிவம் கொடுக்கும் வகையில், மத்திய அமைச்சரவை தற்போது 5ஜி அலைக்கற்றை ஏலத்திற்கான பரிந்துரைகளுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. வருகிற ஜூலை மாதத்திற்குள் இந்த ஏலத்தை நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் 5ஜி சேவை குறித்து மத்திய தகவல் தொடர்பு மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் கூறுகையில், 5ஜி அலைக்கற்றை ஏலம் ஜூலை மாத இறுதிக்குள் நிறைவடையும். ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்திற்குள் 5ஜி சேவைகள் அறிமுகப்படுத்தப்படும். மார்ச் 2023க்குள் இந்தியாவில் 5ஜி சேவைகள் முழுமையாக பயன்பாட்டுக்கு வரும் என அவர் கூறினார்.