ஒரே மாதத்தில் 15.7 லட்சம் பயனர்களை இழந்த வோடபோன் ஐடியா நிறுவனம் - டிராய் தகவல்
- நகர்ப்புறங்களில் வயர்லெஸ் சந்தாதாரர்களின் எண்ணிக்கை 62.4 கோடியாகக் குறைந்துள்ளது.
- அதே நேரத்தில் கிராமப்புறங்களில் வயர்லெஸ் சந்தாதாரர்களின் எண்ணிக்கை 51.8 கோடியாக அதிகரித்துள்ளது.
இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய், வெளியிட்டுள்ள அறிக்கையின் படி. கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 16.82 லட்சம் புதிய வாடிக்கையாளர்களை பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டு உள்ளது. இதற்கு அடுத்தபடியாக ஏர்டெல் நிறுவனம் புதிதாக 8.1 லட்சம் வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளது.
அதேபோல் மற்றொரு முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான வோடபோன் ஐடியா ஏப்ரல் மாதத்தில் மட்டும் 15.68 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்துள்ளதாக டிராய்யின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இதன்மூலம் இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமாக ரிலையன்ஸ் ஜியோ உருவெடுத்துள்ளது. 35.5 சதவீத மார்க்கெட் ஷேர் உடன் ரிலையன்ஸ் ஜியோ முதல் இடத்திலும், 31.61 சதவீத மார்க்கெட் ஷேர் உடன் ஏர்டெல் இரண்டாம் இடத்திலும், 22.68 சதவீதத்துடன் வோடபோன் ஐடியா மூன்றாவது இடத்திலும் உள்ளது.
ஏப்ரல் 2022 இறுதியில் இந்திய வயர்லெஸ் சந்தாதாரர்களின் எண்ணிக்கை 114.3 கோடியாக அதிகரித்துள்ளது. நகர்ப்புறங்களில் வயர்லெஸ் சந்தாதாரர்களின் எண்ணிக்கை 62.4 கோடியாகக் குறைந்துள்ளது. அதே நேரத்தில் கிராமப்புறங்களில் வயர்லெஸ் சந்தாதாரர்களின் எண்ணிக்கை 51.8 கோடியாக அதிகரித்துள்ளது.
புதிதாக 16.82 லட்சம் பயனர்களை பெற்றுள்ள ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், 40.5 கோடி மொபைல் சந்தாதாரர்களுடன் இந்திய தொலைத்தொடர்பு சந்தையில் முன்னணியில் உள்ளது. புதிதாக 8.1 லட்சம் பயனர்களை பெற்றுள்ள ஏர்டெல் நிறுவனம் 36.11 கோடி சந்தாதாரர்களுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது. மறுபுறம் 15.68 லட்சம் பயனர்களை இழந்துள்ள வோடபோன் ஐடியா நிறுவனத்தின் மொத்த சந்தாதாரர் எண்ணிக்கை 25.9 கோடியாக குறைந்துள்ளது.
பிராட்பேண்ட் சேவைகளைப் பொருத்தவரை ரிலையன்ஸ் ஜியோ ஏப்ரல் மாதத்தில் 3.31 லட்சம் புதிய சந்தாதாரர்களைப் பெற்றுள்ளது. ஏர்டெல் நிறுவனம் 71 ஆயிரத்து 297 பிராட்பேண்ட் பயனர்களை பெற்றுள்ளது. பிராட்பேண்ட் சந்தாதாரர்களில் ரிலையன்ஸ் ஜியோவின் சந்தைப் பங்கு 25.85 சதவீதமாகவும், ஏர்டெல் 23.54 சதவீதமாகவும் உள்ளது. ஏப்ரல் 2022 இறுதியில் இந்திய வயர்லைன் சந்தாதாரர்களின் எண்ணிக்கை 2.51 கோடி அதிகரித்துள்ளது.