search icon
என் மலர்tooltip icon
    • 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணிக்கும், பிளஸ்-1 தேர்வு முடிவுகள் மதியம் 2 மணிக்கு வெளியாகிறது.
    • மாணவர்களுக்கு செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி வழியாகவும் தேர்வு முடிவுகள் அனுப்பப்பட உள்ளன.

    தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த ஏப்ரல் 6ம் தேதி முதல் 20ம் தேதி வரை நடைபெற்றது. பிளஸ்-1 பொதுத்தேர்வு மார்ச் 13ம் தேதி முதல் ஏப்ரல் 5ம் தேதி வரை நடைபெற்றது.

    10ம் வகுப்பு பொதுத்தேர்வை 9.40 லட்சம் மாணவ- மாணவிகளும், பிளஸ்-1 பொதுத்தேர்வை 7.70 லட்சம் மாணவ- மாணவிகளும் எழுதினார்கள். இதற்கான விடைத்தாள் திருத்தும் பணிகள் ஏப்ரல் 15ம் தேதி தொடங்கி மே 4ம் தேதி வரை நடைபெற்றது.

    இந்த நிலையில் 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-1 தேர்வு முடிவுகள் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிடப்படுகிறது. 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணிக்கும், பிளஸ்-1 தேர்வு முடிவுகள் மதியம் 2 மணிக்கு வெளியாகிறது.

    சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட உள்ளன. மாணவ- மாணவிகள் தேர்வு முடிவுகள் மற்றும் மதிப்பெண் விவரங்களை www.tnresults.nic.in, www.dge.in.gov.in ஆகிய இணையதளத்தில் தங்களது பதிவு எண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தெரிந்து கொள்ளலாம்.

    அதே போல் ஒவ்வொரு மாவட்டத்திலும் கலெக்டர் அலுவலகத்தில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும், அனைத்து மைய மற்றும் கிளை அலுவலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

    மேலும், மாணவ- மாணவிகள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். மாணவர்கள் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதி மொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள செல்போன் எண்ணுக்கும், தனித்தேர்வர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது வழங்கிய செல்போன் எண்ணுக்கும் குறுஞ்செய்தி வழியாக தேர்வு முடிவுகள் அனுப்பப்பட உள்ளன.

    • பெஷாவர் நகரின் ரிங் ரோட்டில் உள்ள ஹோட்டலுக்கு அருகில் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்துள்ளது.
    • குண்டு வெடிப்பில் 200 கிராம் மேம்படுத்தப்பட்ட வெடிக்கும் சாதனம் (ஐஇடி) பயன்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்.

    பாகிஸ்தானில் உள்ள பெஷாவர் மாகாண தலைநகரில் நேற்று ஒருவரின் மோட்டார்சைக்கிள் பழுது பார்த்துக் கொண்டிருந்தபோது திடீரென குண்டு வெடித்தது.

    மோட்டார் சைக்கிளில் பொருத்தப்பட்டிருந்த குண்டு வெடித்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும், மோட்டார்சைக்கிளின் உரிமையாளர் உள்பட 3 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதில், ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    பெஷாவர் நகரின் ரிங் ரோட்டில் உள்ள ஹோட்டலுக்கு அருகில் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்துள்ளது.

    வெடிகுண்டு செயலிழப்பு குழுவின் அறிக்கையின்படி, "குண்டு வெடிப்பில் 200 கிராம் மேம்படுத்தப்பட்ட வெடிக்கும் சாதனம் (ஐஇடி) பயன்படுத்தப்பட்டுள்ளது. குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது" என குறிப்பிடப்பட்டிருந்தது.

    • ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் 2வது சுற்றில் தோல்வி கண்டு வெளியேறிய ரபேல் நடால்.
    • நான் மீண்டும் களம் திரும்புவது எப்போது என்பது குறித்து காலக்கெடு எதுவும் நிர்ணயம் செய்யவில்லை என்றார்.

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் வருகிற 28ம் தேதி பாரீசில் தொடங்குகிறது. இந்த போட்டியில் இருந்து 22 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவரும், முன்னாள் நம்பர் ஒன் வீரருமான ரபேல் நடால் (ஸ்பெயின்) விலகி இருக்கிறார்.

    கடந்த ஜனவரி மாதம் நடந்த ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் 2வது சுற்றில் தோல்வி கண்டு வெளியேறிய ரபேல் நடால் இடுப்பு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக அதன் பிறகு எந்தவொரு போட்டியிலும் விளையாடவில்லை.

    36 வயதான ரபேல் நடால் நேற்று அளித்த பேட்டியில், "விஷயங்கள் எப்படி மாறும் என்பது தெரியாது. ஆனால் அடுத்த ஆண்டு எனது டென்னிஸ் வாழ்க்கையின் கடைசி ஆண்டாக இருக்கும் என்று நினைக்கிறேன். நான் தற்போது பயிற்சி பெறுவதற்கு தயாராக இல்லை. நான் மீண்டும் களம் திரும்புவது எப்போது என்பது குறித்து காலக்கெடு எதுவும் நிர்ணயம் செய்யவில்லை' என்று தெரிவித்தார்.

    ரபேல் நடால் பிரெஞ்சு ஓபன் பட்டத்தை 14 முறை வென்று சாதனை படைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஆந்திர பிரதேச உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பிரசாந்த் குமார் மிஸ்ரா, மூத்த வழக்கறிஞர் கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
    • நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி மற்றும் நீதிபதி எம்.ஆர்.ஷா ஆகியோர் ஓய்வு பெற்றனர்.

    உச்ச நீதிமன்றத்திற்கு 2 புதிய நீதிபதிகளை நியமனம் செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

    ஆந்திர பிரதேச உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பிரசாந்த் குமார் மிஸ்ரா, மூத்த வழக்கறிஞர் கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 2 பேரும் இன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக பதவியேற்க உள்ளனர்.

    நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி மற்றும் நீதிபதி எம்.ஆர்.ஷா ஆகியோர் ஓய்வு பெற்றதையடுத்து, உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை தற்போது 32 ஆக குறைந்துள்ளது.

    மிஸ்ரா மற்றும் விஸ்வநாதன் இருவரும் இன்று பதவியேற்க உள்ளதை அடுத்து, இது உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் பலத்தை 34 ஆக உயர்த்தும்.

    உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்த 48 மணி நேரத்தில் இரண்டு புதிய நீதிபதிகள் நியமனம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
    • கர்நாடக மக்களின் விருப்பங்களை நிறைவேற்ற வேண்டும்.

    கர்நாடக முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட சித்தராமையாவுக்கும், துணை முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் டி.கே.சிவகுமாருக்கும் முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து பசவராஜ் பொம்மை தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    கர்நாடக முதல்வராக தேர்வு செய்யப்பட்ட சித்தராமையாவுக்கு வாழ்த்துகள். கர்நாடக மக்களின் விருப்பங்களை நீங்கள் நிறைவேற்ற வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

    கர்நாடகாவின் துணை முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட டி.கே.சிவகுமாருக்கு வாழ்த்துகள். கர்நாடக மக்களின் விருப்பங்களை நிறைவேற்ற வேண்டும்.

    இவ்வாறு டுவீட் செய்துள்ளார்.

    • சார் தாம் யாத்திரை கடந்த ஏப்ரல் மாதம் 22ம் தேதி அக்‌ஷய திரிதியை அன்று தொடங்கியது.
    • சார் தாம் யாத்திரைக்கு வரும் பக்தர்களுக்கு அனைத்து வசதிகளையும் செய்துள்ளதாக அம்மாநில முதல்வர் தெரிவித்தார்.

    உத்தரகாண்ட் மாநிலத்தின் உத்தர்காசி மாவட்டத்தில் உள்ள யமுனோத்ரி கோவிலில் இருந்து தொடங்கி உயரமான இடங்களில் அமைந்துள்ள மற்ற மூன்று கோவில்களுக்கு செல்வதுதான் சார் தாம் யாத்திரை.

    இந்த சார் தாம் யாத்திரை கடந்த ஏப்ரல் மாதம் 22ம் தேதி அக்ஷய திரிதியை அன்று தொடங்கியது. அதன் பின்னர் நேற்றைய தேதி வரை சார் தாம் யாத்திரைக்கு யாத்ரீகர்களின் வருகையின் எண்ணிக்கை 10 லட்சத்தைத் தாண்டியுள்ளதாக உத்தரகாண்ட் காவல்துறை தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து வெளியான செய்திக்குறிப்பில், " முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி சார் தாம் யாத்திரையில் வரும் பக்தர்களின் சுமூகமான தரிசனத்திற்காக உத்தரகாண்ட் காவல்துறை அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. நேற்று மே 18ம் தேதி வரை, சார் தாம் யாத்திரையில் சென்ற யாத்ரீகர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தைத் தாண்டியுள்ளது " என்று குறிப்பிட்டிருந்தது.

    மேலும், சார் தாம் யாத்திரைக்கு வரும் பக்தர்களுக்கு அனைத்து வசதிகளையும் செய்ய மாநில அரசு முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக உத்தரகாண்ட் மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்துள்ளார்.

    • விமானி, தம்பதியர் என 3 பேரின் உடல்களை கைப்பற்றினர்.
    • குழந்தைகளை தேடும் பணியில் 100 ராணுவ வீரர்கள் களமிறக்கப்பட்டனர்.

    உலகின் மிகப்பெரிய மழைக்காடான அமேசான் வனப்பகுதியில் இருந்து தம்பதி தனது 11 மாத கைக்குழந்தை உள்பட 4 குழந்தைகளுடன் ஹெலிகாப்டரில் சன் ஜொஷி டி கவ்ரி நகருக்கு கடந்த மாதம் 1ம் தேதி சென்றுள்ளனர்.

    அமேசான் அடவனப்பகுதியில் சென்றபோது ஹெலிகாப்டர் திடீரென விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானி, தம்பதி என 3 பேர் உயிரிழந்தனர். ஆனால் அதிர்ஷ்டவசமாக 11 மாத கைக்குழந்தை உள்பட 4 பேர் இந்த விபத்தில் உயிர் பிழைத்தனர்.

    இந்த விபத்து குறித்து தகவலறிந்த போலீசார், மீட்புக்குழுவினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான இடத்தை கண்டுபிடித்தனர்.

    அங்கு விமானி, தம்பதியர் என 3 பேரின் உடல்களை கைப்பற்றினர். இதையடுத்து, குழந்தைகளை தேடும் பணியில் 100 ராணுவ வீரர்கள் களமிறக்கப்பட்டனர்.

    இந்நிலையில், 17 நாட்கள் தீவிர தேடுதலுக்கு பின் பச்சிளம் குழந்தை உள்பட 4 குழந்தைகளை உயிருடன் மீட்கப்பட்டனர்.

    • நேர்மறையான வேலை சூழலை உருவாக்கும் விதமாக ஏற்படுத்தப்பட்டுள்ள இந்நடைமுறை ஜூன் 12ல் அமலுக்கு வருகிறது.
    • ஊழியர்களுக்கு மதுபானங்கள் வழங்க அனுமதி அளித்து மாநில கலால் கொள்கையில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.

    அரியானாவின் குருகிராம் பகுதியில் உள்ள கார்ப்பரேட் அலுவலகங்களில், ஊழியர்களுக்கு மதுபானங்கள் வழங்க அனுமதி அளித்து மாநில கலால் கொள்கையில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.

    ஹரியானாவில் திருத்தப்பட்ட கலால் கொள்கையானது குறிப்பிட்ட அளவுகோல்களை பூர்த்தி செய்யும் விதமாக கார்ப்பரேட் அலுவலகங்களுக்குள் பீர், ஒயின் மற்றும் குடிப்பதற்கு தயாராக உள்ள பானங்களை வைத்திருப்பதற்கும், பயன்படுத்துவதற்கும் சலுகைகளும் அறிமுகப்படுத்துகிறது.

    நேர்மறையான வேலை சூழலை உருவாக்கும் விதமாக ஏற்படுத்தப்பட்டுள்ள இந்நடைமுறை ஜூன் 12ல் அமலுக்கு வருகிறது.

    இந்த சலுகையை பெற அலுவலகத்தில் குறைந்தது 5 ஆயிரம் ஊழியர்கள் பணிபுரிய வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. அலுவலகம் ஒரு வாளகத்திற்குள் குறைந்தபட்சம் ஒரு லட்சம் சதுர அடி பரப்பளவை வைத்திருக்க வேண்டும் என்றும் அது சுயமானதாகவோ அல்லது குத்தகைக்கு விடப்பட்டதாகவோ இருக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    • ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 186 ரன்களை குவித்தது.
    • பெங்களூரு அணி 19.2 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் எடுத்தது.

    16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

    இந்நிலையில் ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்ற 65-வது லீக் ஆட்டத்தில் ஐதராபாத் சன்ரைசர்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதின.

    டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் டு பிளசிஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி, ஐதராபாத் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் ஷர்மா 11 ரன்னிலும், ராகுல் திரிபாதி 15 ரன்னிலும் அவுட்டாகினர்.

    அடுத்து இறங்கிய கேப்டன் மார்கிராமுடன் கிளாசன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 3வது விக்கெட்டுக்கு 76 ரன்கள் சேர்த்த நிலையில் மார்கிராம் 18 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    பொறுப்புடன் ஆடிய கிளாசன் அதிரடியாக ஆடி சதமடித்து அசத்தினார். அவர் 104 ரன்னில் அவுட்டானார். கடைசி கட்டத்தில் ஹாரி புரூக் 27 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார்.

    இறுதியில், ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 186 ரன்களை குவித்தது.

    இதையடுத்து, 187 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணி களமிறங்கியது. 

    இதில், அதிகபட்சமாக விராட் கோலி 63 பந்துகளில் சதம் அடித்து ஆட்டத்தை இழந்தார். தொடர்ந்து, பிளெஸ்ஸி 71 ரன்கள் எடுத்தார். மேக்ஸ்வெல் 5 ரன்களும், பிரேஸ்வெல் 4 ரன்களும் எடுத்து ஆட்டத்தை இழக்காமல் விளையாடினர்.

    இந்த ஆட்டத்தின் முடிவில், பெங்களூரு அணி 19.2 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் எடுத்தது. இதன் மூலம், 8 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அணி ஐதரபாத்தை வீழ்த்தி அபாரமாக வெற்றிப் பெற்றுள்ளது.

    • சுரங்க வேலையில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கினர்.
    • விபத்தில் படுகாயமடைந்த 3 பேரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    மேற்கு ஆப்பிரிக்க நாடான கானாவின் கிழக்கே அமைந்துள்ள சின்குவா பகுதியில் உள்ள தங்கசுரங்கத்தில் தொழிலாளர்கள் சிலர் தங்கம் வெட்டி எடுக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

    அப்போது எதிர்பாராதவிதமாக அந்த பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவால் தங்கசுரங்கம் இடிந்து விழுந்தது. இதில் அங்கு சுரங்க வேலையில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கினர்.

    தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக் குழுவினர், மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் சுரங்க தொழிலாளர்கள் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    மேலும் படுகாயமடைந்த 3 பேரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    • சென்னையில் சேப்பாக்கத்தில் வரும் மே 23-ம் தேதி முதல் தகுதிச் சுற்றுப் போட்டியும், மே 24-ம் தேதி எலிமினேட்டர் போட்டியும் நடைபெறுகிறது.
    • அகமதாபாத்தில் மே 26 அன்று 2-வது தகுதிச் சுற்று போட்டியும், மே 28 அன்று இறுதிப் போட்டியும் நடைபெறுகிறது.

    16-வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.

    இதில் ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள அணிகளுடன் தலா ஒரு முறையும், அடுத்த பிரிவில் உள்ள அணிகளுடன் தலா 2 முறையும் மோதும். இதன்படி ஒவ்வொரு அணியும் மொத்தம் 14 ஆட்டங்களில் விளையாட வேண்டும்.

    லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறும். அதன்படி, பிளேஆப் மற்றும் இறுதிப்போட்டி மே 23 முதல் மே 28 வரை சென்னை மற்றும் அகமதாபாத்தில் நடைபெறுகிறது.

    சென்னையில் சேப்பாக்கத்தில் வரும் மே 23-ம் தேதி முதல் தகுதிச் சுற்றுப் போட்டியும், மே 24-ம் தேதி எலிமினேட்டர் போட்டியும் நடைபெறுகிறது. அகமதாபாத்தில் மே 26 அன்று 2-வது தகுதிச் சுற்று போட்டியும், மே 28 அன்று இறுதிப் போட்டியும் நடைபெறுகிறது.

    இந்நிலையில் சேப்பாக்கம் மைதானத்தில் நடக்க உள்ள பிளே ஆப் சுற்று போட்டிகளுக்கான ஆன்லைன் டிக்கெட் விற்பனை இன்று தொடங்குகிறது. நண்பகல் 12 மணிக்கு ஆன்லைனில் டிக்கெட் விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்ட்டுள்ளது. பிளே ஆப் போட்டிகளுக்கு ஆன்லைனில் மட்டுமே டிக்கெட் விற்பனை செய்யப்படும் என அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.

    • விஷச்சாராயத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகள் தொடர்பாக தமிழ்நாடு அரசிடம் ஆளுநர் விரிவான அறிக்கை கேட்டுள்ளார்.
    • அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    விழுப்புரம் மாவட்டம் எக்கியார்குப்பம், செங்கல்பட்டு மாவட்டம் பெருக்கரணை, பேரம்பாக்கம் கிராமங்களில் சாராயம் அருந்திய 22 பேர் பலியாகி உள்ளனர். 30க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த சம்பவத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் போலீசார் கள்ளச்சாராய வேட்டை நடத்தி கள்ளச்சாராயம் காய்ச்சும் கும்பலை அதிரடியாக கைது செய்து வருகின்றனர். மேலும் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி போலீசார் வசம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. சாராயத்தை ஒழிக்க தவறிய குற்றத்துக்காக போலீஸ் அதிகாரிகள் மீது பணியிடை நீக்க நடவடிக்கையும் எடுக்கப்பட்டு உள்ளது.

    இதற்கிடையே, செங்கல்பட்டு, விழுப்புரத்தில் விஷச்சாராயத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகள் தொடர்பாக தமிழ்நாடு அரசிடம் ஆளுநர் ஆர்.என்.ரவி விரிவான அறிக்கை கேட்டுள்ளார்.

    இந்நிலையில், விஷச்சாராய உயிரிழப்புகள் தொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து மனு அளிக்க அதிமுக முடிவு செய்துள்ளது.

    நேற்று நடந்த அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் விஷச்சாராய உயிரிழப்புகள் தொடர்பாக கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்து மனு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    ×