என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கோயம்புத்தூர்
- மழையின் காரணமாக ஆட்டம் 7 ஓவர்கள் கொண்ட போட்டியாக குறைக்கப்பட்டது.
- ரவிசந்திரன் அஷ்வின் அதிரடியாக விளையாடி 20 பந்துகளில் 45 ரன்கள் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
8 அணிகள் பங்கேற்றுள்ள 8-வது தமிழ்நாடு பிரீமியர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சேலத்தை அடுத்த வாழப்பாடியில் உள்ள சேலம் கிரிக்கெட் பவுண்டேசன் ஸ்டேடியத்தில் கடந்த 5-ம் தேதி தொடங்கியது.
இங்கு அரங்கேறிய முதல் 9 லீக் ஆட்டங்கள் கடந்த 11-ம் தேதி நிறைவடைந்ததை அடுத்து தற்போது 2-வது கட்ட லீக் ஆட்டங்கள் கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
நேற்று இரவு சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற சேப்பாக் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
ஆனால் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் துவங்குவதில் தாமதம் ஏற்பட்டது. மழையின் காரணமாக ஆட்டம் 7 ஓவர்கள் கொண்ட போட்டியாக குறைக்கப்பட்டது.
முதலில் களமிறங்கிய திண்டுக்கல் அணியில் டாப் 4 பேட்ஸ்மேன்களில் 3 பேர் டக் அவுட்டாகி வெளியேறினர். ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களமிறங்கிய ரவிசந்திரன் அஷ்வின் அதிரடியாக விளையாடி 20 பந்துகளில் 45 ரன்கள் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 7 ஓவர்கள் முடிவில், 6 விக்கெட் இழப்பிற்கு 64 ரன்கள் எடுத்தது திண்டுக்கல் அணி. சேப்பாக்க அணி தரப்பில் அபிஷேக் தன்வர், கணேசன் பெரியசாமி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
65 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய சேப்பாக் அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன் சந்தோஷ் குமார் துரைசாமி முதல் பந்திலேயே டக் அவுட்டாகி வெளியேறினார். பின்னர் ஜோடி சேர்ந்த நாராயண் ஜெகதீசன், பாபா அபார்ஜித் திண்டுக்கல் அணியின் பந்துவீச்சை நாலாபக்கமும் சிதறடித்தனர்.
4.5 ஓவர்களில் 65 ரன்கள் அடித்து சேப்பாக் அணி எளிதாக இப்போட்டியில் வென்றது. அதிரடியாக விளையாடிய நாராயண் ஜெகதீசன் 32 ரன்களும் பாபா அபார்ஜித் 31 ரன்களும் அடித்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இப்போட்டியில் வென்றதன் மூலம் புள்ளிப்பட்டியலில் 5 ஆம் இடத்திலிருந்து 3 ஆம் இடத்திற்கு சேப்பாக் சூப்பர் கில்லீஸ் முன்னேறியுள்ளது.
- 2-வது கட்ட லீக் ஆட்டங்கள் கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
- சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி புள்ளிப்பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது.
8 அணிகள் பங்கேற்றுள்ள 8-வது தமிழ்நாடு பிரீமியர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சேலத்தை அடுத்த வாழப்பாடியில் உள்ள சேலம் கிரிக்கெட் பவுண்டேசன் ஸ்டேடியத்தில் கடந்த 5-ம் தேதி தொடங்கியது.
இங்கு அரங்கேறிய முதல் 9 லீக் ஆட்டங்கள் கடந்த 11-ம் தேதி நிறைவடைந்ததை அடுத்து தற்போது 2-வது கட்ட லீக் ஆட்டங்கள் கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இன்று இரவு 7.15 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோத உள்ளன. இப்போட்டியில் டாஸ் வென்ற சேப்பாக் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி இதுவரை 3 லீக் ஆட்டங்களில் ஆடி 1 வெற்றி, 2 தோல்வி கண்டு புள்ளிப்பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது.
- இன்று சேலம் ஸ்பார்டன்ஸ் - திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் மோதின.
- திருச்சி கிராண்ட் சோழாஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்கள் குவித்தது.
8 அணிகள் பங்கேற்றுள்ள 8-வது தமிழ்நாடு பிரீமியர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சேலத்தை அடுத்த வாழப்பாடியில் உள்ள சேலம் கிரிக்கெட் பவுண்டேசன் ஸ்டேடியத்தில் கடந்த 5-ம் தேதி தொடங்கியது.
இங்கு அரங்கேறிய முதல் 9 லீக் ஆட்டங்கள் கடந்த 11-ம் தேதி நிறைவடைந்ததை அடுத்து தற்போது 2-வது கட்ட லீக் ஆட்டங்கள் கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிமைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இன்று சேலம் ஸ்பார்டன்ஸ் - திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற சேலம் ஸ்பார்டன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன் படி முதலில் களமிறங்கிய திருச்சி கிராண்ட் சோழாஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்கள் குவித்தது. அதிரடியாக விளையாடிய சஞ்சய் யாதவ் 33 பந்துகளில் 68 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். சேலம் அணி தரப்பில் பொய்யாமொழி 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
அடுத்ததாக களமிறங்கிய சேலம் ஸ்பார்டன்ஸ் அணி வீரர்கள் திருச்சி அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். 18.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 163 ரன்களை மட்டுமே சேலம் அணி எடுத்தது.
இதன் மூலம் 35 ரன்கள் வித்தியாசத்தில் திருச்சி அணி அபார வெற்றி பெற்றது. சேலம் அணி தரப்பில் அதிகபட்சமாக முகமது அட்னான் கான் 40 ரன்களும் விவேக் 33 ரன்களும் எடுத்தனர். திருச்சி அணி தரப்பில் சரவண குமார் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
- முதலில் ஆடிய மதுரை 156 ரன்கள் எடுத்தது.
- அடுத்து விளையாடிய திருப்பூர் 157 ரன்களை எடுத்து வென்றது.
கோவை:
டி.என்.பி.எல். தொடரில் இன்று நடைபெற்ற முதலாவது ஆட்டத்தில் மதுரை பாந்தர்ஸ், திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற திருப்பூர் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த மதுரை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 156 ரன்கள் சேர்த்துது. சசிதேவ் அதிரடியாக விளையாடி 19 பந்துகளில் 41 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். கவுஷிக் 28 ரன்னும், ஸ்ரீ அபிஷேக் 21 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
திருப்பூர் சார்பில் அஜித் ராம் 3 விக்கெட்டும், ராமலிங்கம் ரோகித் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 157 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் திருப்பூர் பேட்டிங் செய்தது. அந்த அணியின் பாலசந்தர் அனிருத் அதிரடியாக ஆடி அரை சதமடித்து 52 ரன்னில் அவுட்டானார்.
இறுதியில், திருப்பூர் அணி 18.2 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. முகமது அலி 28 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார். நடப்பு தொடரில் திருப்பூர் பெறும் முதல் வெற்றி இதுவாகும்.
மதுரை சார்பில் முருகன் அஷ்வின் 4 விக்கெட் வீழ்த்தினார்.
- "ஈஷாவின் சூழல் தரும் அனுபவம் வெறும் வார்த்தைகளில் கூற முடியாது, அதனை உணரத் தான் முடியும்" எனக் கூறினார்.
- ஈஷாவில் சூர்யகுண்டம், லிங்கபைரவி, தியானலிங்கம் மற்றும் ஆதியோகி ஆகிய இடங்களில் தரிசனம் செய்தனர்.
தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL) எனும் கிரிக்கெட் போட்டித் தொடர் நடைப்பெற்று வருகிறது. அந்த வகையில் இந்தாண்டிற்கான போட்டிகள் இம்மாதம் துவங்கி தமிழகத்தின் முக்கிய நகரங்களில் நடைப்பெற்று வருகிறது.
இந்நிலையில் TNPL தொடரில் ஆடும் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர், கேப்டன் மற்றும் சக வீரர்கள் உள்ளிட்ட 20 பேர் கொண்ட குழு ஈஷாவிற்கு வருகை புரிந்தனர். அவர்கள் ஈஷாவில் சூர்யகுண்டம், லிங்கபைரவி, தியானலிங்கம் மற்றும் ஆதியோகி ஆகிய இடங்களில் தரிசனம் செய்தனர்.
திண்டுக்கல் அணியின் பயிற்சியாளர் இவ்வருகை குறித்து கூறுகையில், "தற்போது TNPL தொடரில் ஆடி வருகிறோம். லீக் விளையாட்டுகளில் ஆடுவதற்காக கோவை வந்துள்ளோம். ஈஷாவிற்கு எப்போது வந்தாலும் இந்த மொத்த சூழலுமே மிக அருமையாக இருக்கிறது. அதனால் அமைதியாகவும், மன குவிப்புத்திறன் அளிக்க கூடியதாகவும் மற்றும் மிகவும் ரிலாக்ஸாகவும் இருக்கிறது. இது எங்களுக்கு எப்போதும் உதவியாக இருக்கும். இந்த அனுபவத்தை வெறும் வார்த்தைகளில் விவரிக்க முடியாது. அதனை உணரத்தான் முடியும்" எனக் கூறினார்.
கோவை ஈஷா யோகா மையம், தமிழகத்தில் மிக முக்கிய ஆன்மீகத் தலமாக இருந்து வருகிறது. ஈஷாவிற்கு ஆண்டுதோறும் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதிலும் இருந்து ஆதியோகியை தரிசிக்கவும், யோகப் பயிற்சிகள் மேற்கொள்ளவும் லட்சக்கணக்கான மக்கள் வந்து செல்வது குறிப்பிடத்தக்கது.
- ஈஷா யோக மையத்தினர் மீது பதியப்பட்ட வழக்கில் எவ்வித முகாந்திரம் இல்லை.
- எந்த அதிகாரத்தின் அடிப்படையில் இவர்கள் ஈஷா யோக மையத்தில் ஆய்வுசெய்ய நுழைந்தனர் என கேள்வி எழுப்பினார்.
கோவை:
ஈஷா யோகா மையம் முறையான அனுமதிகளைப் பெற்று நவீன எரிவாயு மயானம் ஒன்றை அமைத்து வருகிறது. இதற்கு இடையூறு ஏற்படுத்தும் வண்ணம் சிவஞானம், சுப்ரமணியன் மற்றும் காமராஜ் ஆகியோர் செயல்பட்டு வந்தனர்.
இதுதொடர்பாக ஈஷா மையம் சார்பில் தொடரப்பட்ட வழக்கில் மயானக் கட்டுமானப் பகுதிக்குள் தொடர்பில்லாத நபர்கள் யாரும் உள்ளே நுழையக் கூடாது என கோவை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது. இதுதொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இதற்கிடையே, கடந்த மாதம் 14-ம் தேதி த.பெ.தி.க.வை சேர்ந்த ராமகிருஷ்ணன் என்ற நபரின் தலைமையில் சில உதிரி அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் தான்தோன்றித்தனமாக 'உண்மை கண்டறியும் குழு' என்ற பெயரில் ஈஷாவின் மயானக் கட்டுமானப் பகுதிக்குள் அத்துமீறி உள்ளே நுழைய முயற்சி செய்தனர். அவர்களை காவல்துறையினரும், கிராம மக்களும் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர்.
இதையடுத்து, ஈஷாவிற்குள் நுழைய முயன்று முடியாமல் போனதன் காரணமாக ராமகிருஷ்ணன் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதனை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், ஈஷா யோக மையத்தினர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கில் எவ்வித முகாந்திரமும் இல்லை. மயான கட்டுமானப் பகுதிக்குள் நீதிமன்ற உத்தரவை மீறி அத்துமீறி நுழைய முயற்சித்த த.பெ.தி.கவை சேர்ந்த ராமகிருஷ்ணன் உள்ளிட்ட நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்க காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
மேலும், எந்த அதிகாரத்தின் அடிப்படையில் இவர்கள் ஈஷா யோக மையத்தில் ஆய்வுசெய்ய நுழைந்தனர் என த.பெ.தி.க. நடவடிக்கை குறித்து நீதிபதி கேள்வி எழுப்பினார்.
- மறுநாள் காலையில் புஷ்பா மற்றும் அவரது குழந்தைகள் 2 பேரும் வீட்டில் உள்ள தண்ணீர் தொட்டியில் பிணமாக மிதந்தனர்.
- கைதான தங்கராஜ் கோவை 3-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டு மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
கோவை:
கோவை ஒண்டிப்புதூர் நெசவாளர் காலனி எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 40). பெயிண்டர்.
இவரது மனைவி புஷ்பா (35). இவர்களுக்கு ஹரிணி (9), சிவானி (3) ஆகிய 2 மகள்கள் இருந்தனர். தங்கராஜ், குடிப்பழக்கத்துக்கு அடிமையானவர். வேலைக்கு செல்லாமல் தினமும் குடித்து விட்டு தனது மனைவியிடம் தகராறு செய்வதை வழக்கமாக கொண்டு இருந்தார். அதேபோல் சம்பவத்தன்று இரவும் தங்கராஜ் குடிபோதையில் வந்து மனைவி புஷ்பாவிடம் தகராறு செய்துள்ளார்.
மறுநாள் காலையில் புஷ்பா மற்றும் அவரது குழந்தைகள் 2 பேரும் வீட்டில் உள்ள தண்ணீர் தொட்டியில் பிணமாக மிதந்தனர்.
இதுதொடர்பாக சிங்காநல்லூர் போலீசார் தங்க ராஜிடம் விசாரணை மேற்கொண்டனர். குடிபோதையில் இருந்த நான் மூத்த மகள் ஹரிணியை தண்ணீர் தொட்டியில் தள்ளிவிட்டேன். இதைப்பார்த்து எனது மனைவி, 2-வது குழந்தையுடன் தண்ணீர் தொட்டியில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார் என தெரிவித்தார். அதன்பேரில் தங்கராஜ் மீது போலீசார் கொலை மற்றும் தற்கொலைக்கு தூண்டுதல் என 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
விசாரணையின் போது தங்கராஜ் தொடர்ந்து முன்னுக்கு பின் முரணான தகவல்களை தெரிவித்துள்ளார். மனைவி மற்றும் 2 குழந்தைகளையும் தங்கராஜே தண்ணீர் தொட்டியில் தள்ளி அவர்களை மூச்சு திணறடித்து கொலை செய்து இருக்கலாம் என போலீசார் சந்தே கிக்கிறார்கள். குழந்தையை காப்பாற்ற தண்ணீர் தொட்டிக்குள் குதித்த புஷ்பா, மூடியை மேலே தள்ளி விட்டு வெளியே வந்து இருக்க வாய்ப்புள்ளது. ஆனால் குடிபோதையில் இருந்த தங்கராஜ், மூடியை திறக்க முடியாதவாறு தடுத்து இருக்கலாம் என்ற சந்தேகமும் போலீசாருக்கு உள்ளது. புஷ்பா மற்றும் 2 குழந்தைகளின் பிரேத பரிசோதனை சிங்காநல்லூர் இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் நடந்துள்ளது. அதன் முடிவுகள் வர இன்னும் சில நாட்கள் ஆகும்.
பிரேத பரிசோதனை முடிவில் தான் அவர்கள் எப்படி இறந்தார்கள் என்ற விவரம் தெரியவரும். அதன்பிறகே தங்கராஜ் மீது அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். 3 பேரும் கொல்லப்பட்டது உறுதியாகும்பட்சத்தில் தங்கராஜ் மீது கடுமையான சட்ட நடவடிக்கைகள் பாயும் என போலீசார் தெரிவித்தனர்.
கைதான தங்கராஜ் கோவை 3-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டு மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டார். இதற்கிடையே புஷ்பா மற்றும் 2 குழந்தைகளின் உடல்கள் நேற்று அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. நஞ்சுண்டாபுரத்தில் அவர்களின் இறுதிச்சடங்குகள் நடந்தன.
- தடுப்பணை பகுதிக்கு தண்ணீர் தேடி ஊசிக்கொம்பன் என்ற ஆண் காட்டு யானை ஒன்று வந்தது.
- சேற்றில் சிக்கி யானை உயிரிழந்துள்ளதா அல்லது வேறு ஏதேனும் காரணமா என வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேட்டுப்பாளையம்:
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனச்சரகத்துக்கு உட்பட்ட நெல்லிமலை வனப்பகுதியில் காட்டு யானைகள் அதிக அளவில் வாழ்ந்து வருகின்றன.
அடர்ந்த மலை பகுதியாக உள்ள இந்த வனப்பகுதியில் இருந்து உணவு மற்றும் தண்ணீர் தேடி காட்டு யானைகள் அவ்வப்போது இடம் பெயர்ந்து வருகின்றன.
இதனிடையே இந்த வனப்பகுதியில் மழை காலங்களில் பெய்யும் தண்ணீரை சேமிக்க தாசம்பாளைத்தில் தடுப்பணைகள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று இரவு இந்த தடுப்பணை பகுதிக்கு தண்ணீர் தேடி ஊசிக்கொம்பன் என்ற ஆண் காட்டு யானை ஒன்று வந்தது. அந்த யானை திடீரென்னு தடுப்பணையில் படுத்தவாறு உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று அதிகாலை அந்த பகுதியில் ரோந்து சென்ற வனத்துறையினர் ஆண் காட்டு யானை உயிரிழந்தது குறித்து தகவல் அறிந்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
பின்னர் நிகழ்விடத்திற்கு வந்த மேட்டுப்பாளையம் வனச்சரக அலுவலர் ஜோசப் ஸ்டாலின் மற்றும் வனத்துறையினர் யானை எப்படி இறந்தது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் யானை தண்ணீரில் படுத்தவாறு உயிரிழந்துள்ள நிலையில் கிடப்பதால், சேற்றில் சிக்கி யானை உயிரிழந்துள்ளதா அல்லது வேறு ஏதேனும் காரணமா என வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்
- முதுநிலை வேளாண் படிப்புகளுக்கு சேர்வதற்கான நுழைவுத் தேர்வு கடந்த ஜூன் 23-ந் தேதி நடைபெற்றது.
- நுழைவுத்தேர்வு திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது மாணவர்களிடையே குழப்பத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
வடவள்ளி:
கோவையில் செயல்படும் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் கீழ் 18 உறுப்பு கல்லூரிகளும் 28 இணைப்பு கல்லூரிகளும் செயல்பட்டு வருகிறது.
இந்த பல்கலைக்கழகத்தில் உள்ள முதுநிலை வேளாண் படிப்புகளுக்கு சேர்வதற்கான நுழைவுத் தேர்வு கடந்த ஜூன் 23-ந் தேதி நடைபெற்றது.
இந்த தேர்வினை ஏராளமான மாணவர்கள் எழுதி, முதல்நிலை படிப்பில் சேர்வதற்காக காத்திருந்தனர். இந்த நிலையில் இந்த தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களின் இ-மெயில் முகவரிக்கு நேற்று இரவு தகவல் அனுப்பப்பட்டுள்ளது.
வேளாண் பல்கலைக்கழகம் சார்பில் மாணவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள இ-மெயிலில், ஜூன் 23-ல் நடைபெற்ற தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் செலுத்திய விண்ணப்ப கட்டணம் திரும்பி வழங்கப்படும்.
2024-2025-ம் கல்வி ஆண்டிற்கான முதுநிலை மாணவர்கள் சேர்க்கை நுழைவுத் தேர்வு குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நுழைவுத்தேர்வு திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது மாணவர்களிடையே குழப்பத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி அளித்துள்ள விளக்கத்தில் கூறியிருப்பதாவது:-
சாப்ட்வேர் பிரச்சனை மற்றும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. 10 நாட்களுக்குள் நுழைவுத் தேர்வு நடைபெறுவது குறித்தும், தேர்வு நடைபெறும் தேதி குறித்து அறிவிப்பு வெளியிடப்படும்.
சாப்ட்வேர் பிரச்சனை மற்றும் தொழில்நுட்ப கோளாறுகள் சரி செய்யப்பட்டு, தேர்வுகள் நடத்தப்படும். இளநிலை படிப்பு செப்டம்பர் மாதம் முடியும் நிலையில், செப்டம்பர் இறுதியிலேயே முதுநிலை படிப்புகளுக்கான வகுப்புகள் ஆரம்பமாகும். மாணவர்கள் சேர்க்கை தாமதம் இன்றி நடைபெறும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- தமிழகம் முழுவதிலும் 1,52,000 மரக்கன்றுகள் விவசாய நிலங்களில் நடப்பட்டுள்ளன.
- பருவ மழைக் காலங்களில் விவசாய நிலங்களில் மரக்கன்றுகளை நடும் பணியில் மிகத் தீவிரமாக ஈடுபடுகிறது.
வன மகோத்சவத்தை முன்னிட்டு காவேரி கூக்குரல் இயக்கம் சார்பாக ஜூலை 1 முதல் 7 வரை தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மரக்கன்றுகள் நடும் விழாக்கள் நடைப்பெற்றன. இதன் மூலம் தமிழகம் முழுவதிலும் 1,52,000 மரக்கன்றுகள் விவசாய நிலங்களில் நடப்பட்டுள்ளன.
மக்களிடம் சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், மரம் வளர்க்கும் பழக்கத்தை ஊக்குவிக்கவும் தேசிய அளவில் ஆண்டுதோறும் ஜூலை முதல் வாரம் 'வன மகோத்சவம்' விழா கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் நடைப்பெற்ற மரக்கன்றுகள் நடும் விழாக்கள் மூலம் தமிழகத்தின் 38 மாவட்டங்களில் உள்ள 86 இடங்களில், 472 ஏக்கர் பரப்பளவிலான விவசாய நிலங்களில் மொத்தம் 1,52,000 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.
காவேரி கூக்குரல் இயக்கம், தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநிலங்களில் உள்ள காவிரி வடிநிலப் பகுதிகளில் மரம் சார்ந்த விவசாயம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது மற்றும் அது சார்ந்த வேளாண் பயிற்சி வகுப்புகளையும் நடத்தி வருகிறது. இதன் மூலம் 1,72,600 விவசாயிகள் மரம் சார்ந்த விவசாயத்திற்கு மாறி உள்ளனர். மேலும் விவசாய நிலங்களில் பெருமளவு மரக்கன்றுகளை நடுவதால் மண்ணின் தரமும், அதன் நீர்பிடிப்பு திறனும் மேம்படுகிறது.
இது சுற்றுச்சூழல் சார்ந்த பலன்களோடு விவசாயிகளுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் பொருளாதாரப் பலன்களையும் தருகிறது.
மரம் சார்ந்த விவசாயத்தின் மூலம் விவசாயிகள் பொருளாதார பலன்களை பெறுவதற்காக இவ்வியக்கம் சார்பில் மரப்பயிர் சாகுபடி, சமவெளியில் நறுமணப் பயிர்கள் சாகுபடி, உணவுக்காடு வளர்ப்பு, வேளாண் பொருட்கள் மதிப்பு கூட்டுதல் போன்ற பல்வேறு பயிற்சிகளை மாநில அளவில் தொடர்ந்து நடத்தி வருகிறது. மேலும் உள்ளூர் விவசாயிகள் பயன்பெறும் வகையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் வட்டார அளவிலும் பயிற்சி வகுப்புகள் நடத்தபடுகிறது.
இவ்வியக்கம் பருவ மழைக் காலங்களில் விவசாய நிலங்களில் மரக்கன்றுகளை நடும் பணியில் மிகத் தீவிரமாக ஈடுபடுகிறது. அதனுடன் மரம் சார்ந்த விவசாயம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஆண்டின் சில முக்கிய நாட்களில் மரம் நடும் விழாக்களை பெரிய அளவில் நடத்துகிறது. அந்த வகையில் வன மகோத்சவத்தின் போது மட்டுமின்றி உலக சுற்றுச்சூழல் தினம், காந்தி ஜெயந்தி, நதிகளுக்கு புத்துயிரூட்டும் தினம், நம்மாழ்வார், நெல் ஜெயராமன், மரம் தங்கசாமி போன்ற சூழலியல் முன்னோடிகளின் நினைவு நாட்களிலும் மாபெரும் மரம் நடு திருவிழாக்களை நடத்துகிறது. இவர்கள் மூவரும் ஈஷாவின் பல்வேறு சுற்றுச்சூழல் பணிகளில் ஆரம்பம் முதல் உறுதுணையாக இருந்து வழிகாட்டிகளாக செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஈஷா நாற்றுப்பண்ணைகள் மூலமாக இயற்கை முறையில் உற்பத்தி செய்யப்பட்ட விலை மதிப்பு மிக்க மரக்கன்றுகளை விவசாயிகளுக்கு 3 ரூபாய் மானிய விலையில் வழங்குகிறது. மேலும் இப்பண்ணைகளில் மரக்கன்றுகள் வாங்கவும், இவ்வியக்கம் குறித்த கூடுதல் தகவல்களுக்கும் 80009 80009 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.
- மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர்.
- விபத்து குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேட்டுப்பாளையம்:
நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றுபவர் சுந்தரவடிவேல். இவரது கார் நேற்று ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையம் நோக்கி வந்தது. காரில் போலீஸ் சூப்பிரண்டின் மனைவி மற்றும் உறவினர்கள் இருந்ததாக கூறப்படுகிறது. காரை தமிழ்குடிமகன் என்ற போலீஸ்காரர் ஓட்டி வந்தார்.
கார் மேட்டுப்பாளையம் அருகே உள்ள கல்லாறு தூரிப்பாலம் பகுதியில் வந்து கொண்டிருந்தது. அப்போது எதிரே வேகமாக வந்த மோட்டார்சைக்கிள் போலீஸ் சூப்பிரண்டின் கார் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர்.
விபத்தில் சிக்கிய மோட்டார் சைக்கிள் திடீரென தீப்பிடித்து எரிந்தது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து மோட்டார் சைக்கிளில் பற்றி எரிந்த தீயை தடுத்து அணைத்தனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரும் ஊட்டி காந்தல் பகுதியைச் சேர்ந்த அல்தாப் (21), அவரது நண்பர் முகமது ஜூனைத் (19) என்பது தெரியவந்தது. அவர்கள் 2 பேரும் மீட்கப்பட்டு மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். முதலுதவி சிகிச்சைக்கு பின் அவர்கள் கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி அல்தாப் நேற்று மரணம் அடைந்தார்.
முகமது ஜூனைத்துக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அவரும் சிகிச்சை பலனின்றி இன்று காலை இறந்தார். இதனால் இந்த விபத்தில் பலி எண்ணிக்கை 2 ஆக உயர்ந்தது.
விபத்து குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். காரை ஓட்டி வந்த போலீஸ்காரர் தமிழ்குடிமகனிடம் விசாரணை நடத்தப்படுகிறது.
பலியான அல்தாப் தனியார் காட்டேஜில் ஊழியராக பணியாற்றி வந்தார். முகமது ஜூனைத் அரசு கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இவர் ஊட்டி காந்தல் பகுதியைச் சேர்ந்த அன்சார் எனபவரின் மகன் ஆவார்.
காந்தல் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவரும், வாலிபரும் இறந்ததால் அந்த பகுதி சோகத்தில் மூழ்கி உள்ளது. அவர்களது உறவினர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதபடி இருந்தனர்.
- போலீசார் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை:
கோவை சிங்காநல்லூர் நெசவாளர் காலனியை சேர்ந்தவர் தங்கராஜ் (வயது40). கட்டிட தொழிலாளி.
இவரது மனைவி புஷ்பா (28). இவர்களுக்கு ஹரிணி (9), ஷிவானி (3) என்ற 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
புஷ்பா வீட்டு வேலைக்கு சென்று வந்தார். இந்த நிலையில் தங்கராஜ் வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கும் வரும் போது குடித்து விட்டு வருவார்.
குடித்து விட்டு வந்து, மனைவியுடன் தகராறில் ஈடுபடுவதை வழக்கமாக வைத்துள்ளார். இதனால் 2 பேருக்கும் இடையே அடிக்கடி தகராறும் ஏற்பட்டு வந்தது. இதனை உறவினர்கள் பேசி சமாதானப்படுத்தி வந்தனர்.
நேற்று மாலை தங்கராஜ் குடிபோதையில் வீட்டிற்கு வந்தார். இதனை அவரது மனைவி கண்டித்தார். இதனால் 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தகராறு முற்றவே 2 பேரும் ஒருவருக்கொருவர் திட்டிகொண்டனர்.
சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் இது வழக்கமாக நடப்பது தான் என்று நினைத்து கொண்டனர். இந்த நிலையில் இன்று காலை வெகு நேரமாகியும் புஷ்பா மற்றும் அவரது குழந்தைகள் வெளியில் வரவே இல்லை.
இதையடுத்து அக்கம்பக்கத்தினர், வீட்டு வாசலில் இருந்த தங்கராஜிடம், மனைவி மற்றும் மகள்களை எங்கே என்று கேட்டனர். அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசினார்.
இதனால் அவர் மீது அக்கம்பக்கத்தினருக்கு சந்தேகம் ஏற்பட்டது. உடனடியாக அவர்கள் சம்பவம் குறித்து சிங்காநல்லூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
பின்னர் வீட்டிற்குள் சென்று பார்த்தனர். அப்போது வீட்டில் உள்ள தண்ணீர் தொட்டியில் புஷ்பா மற்றும் அவரது 2 பெண் குழந்தைகளும் பிணமாக கிடந்தனர்.
போலீசார் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து புஷ்பாவின் கணவர் தங்கராஜிடம் போலீசார் விசாரித்தனர். அவர் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை தெரிவித்தார். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, தண்ணீர் தொட்டியில் 3 பேரும் இறந்து கிடந்தது எப்படி? யாராவது கொன்று தண்ணீர் தொட்டியில் போட்டனரா? அல்லது அவர்கள் தற்கொலை செய்து கொண்டனரா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்