search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • அரசின் எந்த நியமனமும் இடஒதுக்கீட்டு விதிகளை கடைப்பிடிக்க வேண்டும்.
    • லேட்டரல் எண்ட்ரி நியமனத்தில் இட ஒதுக்கீடு இல்லாதது கவலை அளிக்கிறது.

    மத்திய அரசின் இணைச் செயலாளர்கள், இயக்குநர்கள், துணைச் செயலாளர்கள் போன்ற முக்கிய பதவிகளை ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற யுபிஎஸ்சியில் தேர்ச்சி பெற்றவர்களையும், குரூப் ஏ சேவை அதிகாரிகள் மூலமே நிரப்பப்பட்டு வந்தன.

    ஆனால் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் லேட்டரல் என்ட்ரி என்ற அரசுப் பணியில் அல்லாத துறை சார்ந்த வல்லுநர்களை கொண்டு மத்திய அமைச்சகத்தின் முக்கிய பதவிகளில் நியமனம் செய்யும் முறையை பாஜக அரசு தொடங்கியது. இந்தத் திட்டத்தில் இதுவரை 63 பேர் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.

    இந்நிலையில், லேட்டரல் என்ட்ரி முறையில் மத்திய அமைச்சகங்களில் காலியாகவுள்ள 10 இணைச் செயலாளர்கள் மற்றும் 35 இயக்குநர்கள் / துணைச் செயலாளர்கள் பதவிகளை நிரப்புவதற்கான விளம்பரத்தை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது.

    மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு மத்திய அமைச்சர் சிராக் பஸ்வான் எதிர்ப்பு தெரிவித்துள்ளது பாஜக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த விவகாரம் தொடர்பாக பேசிய அவர், "அரசின் எந்த நியமனமும் இடஒதுக்கீட்டு விதிகளை கடைப்பிடிக்க வேண்டும் என்பதில் நானும், என் கட்சியும் உறுதியாக உள்ளோம். லேட்டரல் எண்ட்ரி நியமனத்தில் இட ஒதுக்கீடு இல்லாதது கவலை அளிக்கிறது. இதில் எங்கள் கட்சி முற்றிலுமாக உடன்படவில்லை" என்று தெரிவித்தார்.

    பாஜக அரசின் அறிவிப்பிற்கு பாஜக கூட்டணியில் உள்ள லோக் ஜனசக்தி கட்சி தலைவர் எதிர்ப்பு தெரிவித்திருப்பது தேசிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இதற்கு முன்னதாக இந்த லேட்டரல் என்ட்ரி முறைக்கு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி கடும் கண்டனம் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    அவரது எக்ஸ் பதிவில், "லேட்டரல் என்ட்ரி என்பது தலித், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் ஆதிவாசிகள் மீதான தாக்குதல் ஆகும். பாஜகவின் திரிக்கப்பட்ட ராம ராஜ்ஜியம், அரசியலமைப்பை அழிக்கவும், தாழ்த்தப்பட்டோரிடம் இருந்து இடஒதுக்கீட்டை பறிக்கவும் முயல்கிறது" என பதிவிட்டுள்ளார்.

    • பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம்.
    • அவசரபிரிவு சேவைகள் அனைத்தும் வழக்கம் போல் இயங்கும்.

    புதுச்சேரி :

    புதுச்சேரி ஜிப்மர் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    சமீபத்தில் கொல்கத்தாவில் நடந்த கொடூரமான சம்பவத்திற்கு எதிராக நாடு முழுவதும் நடைபெற்று வரும் போராட்டங்களின் ஒரு பகுதியாக ஜிப்மர் மருத்துவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் ஜிப்மரின் வெளிப்புற நோயாளி பிரிவுகளில் உள்ள மருத்துவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. இதனை கருத்தில் கொண்டு போராட்டங்கள் முடிவுக்கு வரும் வரை, திங்கட்கிழமை (19.08.2024) முதல் வெளிப்புற நோயாளி பிரிவுகள் காலை 08:00 முதல் 10:00 மணி வரை மட்டுமே இயங்கும்.

    இந்த நேரத்தில் அவசரமற்ற அல்லது நீண்டகால நோய் சிகிச்சை பெறுவோர் வெளிப்புற நோயாளிகள் பிரிவுக்கு வருவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இதனால் மருத்துவர்கள் அவசர சிகிச்சை தேவைப்படும் நோய்களைக் கொண்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் கவனம் செலுத்த முடியும். இன்னும் சில நாட்களில் போராட்டம் முடிவுக்கு வரும் என நம்புகிறோம். அதனைத் தொடர்ந்து முழு வெளிப்புற பிரிவு சேவைகள் வழக்கம்போல் இயங்கும் என்ற அறிவிப்பு பொதுமக்களுக்கு செய்தித்தாள் மற்றும் ஊடகங்களின் மூலம் தெரிவிக்கப்படும்.

    இது பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். இருப்பினும், மருத்துவ பராமரிப்பு அவசியமாக தேவைப்படும் நபர்களின் கவனிப்புக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் இது மேற்கொள்ளப்படுகிறது.

    அவசரபிரிவு சேவைகள் அனைத்தும் வழக்கம் போல் இயங்கும். மேலும் உயிர்காக்கும் பராமரிப்பு தேவைப்படும் அனைத்து நோயாளிகளுக்கும் சரியான நேரத்தில் சிகிச்சை அளிப்பதை உறுதிசெய்கிறோம்.

    நோயாளிகள் மற்றும் பொதுமக்களின் நலனுக்காக சுகாதார சேவைகளை தொடர்ந்து வழங்குவதில் ஜிப்மர் அர்ப்பணிப்புடன் உள்ளது.

    இந்த இக்கட்டான நேரத்தில் பொதுமக்கள் மற்றும் நோயாளிகள், ஒத்துழைப்பையும் உதவியையும் அளிப்பதன் மூலம் அத்தியாவசிய மற்றும் அவசரமான சேவைகளை அதிகபட்சமாக முடிந்தவரை வழங்க இயலும் என்பதை ஜிப்மர் நிறுவனம் அறிவுறுத்துகிறது. பொதுமக்களின் இந்த ஒத்துழைப்பிற்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • புதுச்சேரி சுதந்திரம் அடைந்தாலும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் யூனியன் பிரதேசமாக உள்ளது.
    • மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு அதிகாரம் வேண்டும் என்பதாகும்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி அரசு சார்பில் சுதந்திரத் தினத்தை முன்னிட்டு விடுதலைப் போராட்ட தியாகிகளுக்கு தேநீர் விருந்து அளிக்கும் விழா கம்பன் கலையரங்கத்தில் நடந்தது.

    விழாவில் முதலமைச்சர் ரங்கசாமி தியாகிகளுக்கு சால்வை அணிவித்து, பரிசுப் பொருட்களை வழங்கினார். விழாவையொட்டி நடந்த கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற ஜவகர் சிறுவர் இல்ல மாணவ-மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

    விழாவில் முதலமைச்சர் ரங்கசாமி பேசியதாவது:-

    புதுச்சேரி சுதந்திரம் அடைந்தாலும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் யூனியன் பிரதேசமாக உள்ளது. இதனால் எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் பொதுமக்கள் விரும்புவது புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து முழு அதிகாரம் வேண்டும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு அதிகாரம் வேண்டும் என்பதாகும். இதன் மூலம் புதுச்சேரிக்கு மேலும் வளர்ச்சியை கொண்டுவர முடியும்.

    அதற்காக தான் மாநில அந்தஸ்து, முழு அதிகாரம் வேண்டும் என்று சட்டசபையில் ஆண்டு தோறும் தீர்மானம் கொண்டு வந்து, மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கிறோம். பிரதமர் மற்றும் உள்துறை மந்திரியை சந்தித்து வலியுறுத்தி வருகிறோம்.

    இப்போது புதுச்சேரியில் முழு அதிகாரம் கவர்னருக்கு தான் உள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு முழு அதிகாரம் தேவை. மாநில அந்தஸ்து பெறுவதற்கான அனைத்து தகுதிகளும் தற்போது புதுச்சேரிக்கு உள்ளது. மாநில அந்தஸ்து கிடைத்தால் புதுச்சேரிக்கு கூடுதல் வளர்ச்சியை கொண்டு வர முடியும்.

    புதுச்சேரியில் தியாகிகளுக்கான பென்ஷன் தொகை ரூ.12 ஆயிரத்தில் இருந்து ரூ.15 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும். மேலும் தியாகிகளுக்கு மனை பட்டா வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • உடலை கைபற்றி பிரேதபரி சோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவகல்லூரிக்கு அனுப்பி வைத்தனர்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி வீராம்பட்டினத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஆடிப்பெருவிழா மிக சிறப்பாக நடைபெறும். 11 நாட்கள் நடைபெறும் இந்த விழாவை காண புதுச்சேரி பகுதிமட்டுமின்றி கடலூர்-விழுப்புரம் மாவட்டங்களில் இருந்தும் ஏராளமானோர் குடும்பத்துடன் வீராம்பட்டினத்தில் தங்கி விழாவை கண்டுகளிப்பது வழக்கம்.

    அதுபோல் கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே புவனகிரியை அடுத்த கீரப்பாளையம் நரிக்குறவர் காலனியை சேர்ந்த வள்ளிமலை (வயது 60) என்பவர் வீராம்பட்டினம் திருவிழாவில் சாமி வேடம் அணிந்து பக்தர்களிடம் யாசகம் பெறுவார்.

    அதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பே வள்ளி மலை வீராம்பட்டினத்திற்கு வந்திருந்தார். அவர் சாமி வேடம் அணிந்து விழாவை காணவரும் பக்தர்களிடம் யாசகம் பெற்று வந்தார். நேற்று இரவு கோவில் எதிரே ஆடல்பாடல் நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்த வேளையில் வீராம்பட்டினம் கடற்கரைக்கு செல்லும் ரோட்டில் வள்ளிமலை சாமியாடி பக்தர்களிடம் யாசகம் பெற்றுக்

    கொண்டிருந்தார்.

    அப்போது வள்ளிமலை திடீரென அவ்வழியே சென்ற ஒரு போதை வாலிபர் மீது மோதியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர் விழா பந்தலில் கரும்பு ஜூஸ் வியாபாரத்திற்காக குவித்து வைத்திருந்த கரும்பை எடுத்து வள்ளி

    மலையை தலை மற்றும் உடலில் பல இடங்களில் சரமாரியாக தாக்கினார்.

    இதில் ரத்த வெள்ளத்தில் வள்ளிமலை கீழே சரிந்தார். இதனை பார்த்ததும் அந்த வாலிபர் அங்கிருந்து சென்று விட்டார்.

    அந்த வழியாக சென்றவர்கள் இதனை பார்த்து அருகில் விழாவுக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த அரியாங்குப்பம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து பார்த்தனர். அப்போது முதியவர் அடித்து கொலை செய்யப்பட்டு பிணமாக கிடப்பதை கண்டனர்.

    இதையடுத்து உடலை கைபற்றி பிரேதபரி சோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவகல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் முதியவர் வள்ளிமலையை அடித்து கொலை செய்தது வீராம்பட்டினம் பகுதியை சேர்ந்த அஜித் குமார் என்ற வாலிபர் என்பது தெரிய வந்தது. அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவில் விழாவில் முதியவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியிலும் விழாவைகாண வந்த பக்தர்கள் மத்தியிலும் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • கவர்னர் தேநீர் விருந்தை தொடர்ந்து நாங்கள் புறக்கணிக்கவில்லை.
    • என்.ஆர்.காங்கிரஸ் கட்சியை வைத்துக்கொண்டு அவரால் மாநில அந்தஸ்து கண்டிப்பாக பெற முடியாது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி கவர்னர் கைலாஷ்நாதன் அளித்த தேநீர் விருந்தில் பங்கேற்ற முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    கவர்னர் தேநீர் விருந்தை தொடர்ந்து நாங்கள் புறக்கணிக்கவில்லை. முன்பு இருந்த கவர்னர்கள் கிரண்பேடி, தமிழிசை ஆகியோர் அரசியல் செய்தனர். அதற்குத்தான் நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தோம். அதிகாரியாக இருந்த கைலாஷ்நாதன், பா.ஜனதா முதலமைச்சர்களிடம் வேலை செய்திருந்தாலும், தற்போது அவர் கவர்னர்.

    அவர் நடுநிலையோடு செயல்படுவார் என நம்புகிறோம். அப்படி செயல்பட்டால் அவருடன் சேர்ந்து செயல்படுவோம். காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆளும் மாநிலங்களில் கவர்னர்கள் அரசியல் செய்து அந்த மாநிலங்களின் வளர்ச்சிக்கு குந்தகம் விளைவிக்கின்றனர்.

    புதுவை கவர்னர் அரசியல் செய்தால் அதையும் எதிர்ப்போம்.

    புதுவைக்கு ரூ.10 ஆயிரம் கோடி வருமானம் வருகிறது. மத்திய அரசிடம் வாங்குவது ரூ.2 ஆயிரத்து 300 கோடிதான். புதுவைக்கு ரூ.5 ஆயிரம் கோடி வரை கிடைக்க வேண்டும்.

    எனவே மாநில அந்தஸ்து பெற வேண்டியது அவசியம். புதுவைக்கு மாநில அந்தஸ்து கொடுத்தால் டெல்லிக்கும் கொடுக்க வேண்டும். அரவிந்த் கெஜ்ரிவால் இதை கேட்பார் என்பதால் மத்திய அரசு புதுவையை புறக்கணித்து வருகிறது.

    முதலமைச்சராக ரங்கசாமி இருக்கும் வரை அவரால் மாநில அந்தஸ்து வாங்க முடியாது. அவர் புதுவை எல்லையை தாண்டி டெல்லி செல்லாதவர். நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்காதவர். முதலமைச்சர் மாநாட்டில் பங்கேற்காதவர். அவர் பா.ஜனதாவில் சேர்ந்தால் மட்டுமே புதுவைக்கு மாநில அந்தஸ்து கிடைக்கும்.

    என்.ஆர்.காங்கிரஸ் கட்சியை வைத்துக்கொண்டு அவரால் மாநில அந்தஸ்து கண்டிப்பாக பெற முடியாது. பா.ஜனதா தனியாக ஆட்சி அமைக்கும் சூழல் வந்தால் அப்போது வழங்குவார்கள். மத்திய மோடி அரசு புதுவையில் அரசியல் விளையாட்டு செய்கிறது. ரங்கசாமியை ஏமாற்றுகின்றனர். மாநில அந்தஸ்து பெற பா.ஜனதாவுடன் கூட்டணி வைத்த ரங்கசாமி, ஏன் எந்த கூட்டணியை விட்டு வெளியேறவில்லை?

    அவருக்கு முதலமைச்சர் நாற்காலி வேண்டும். அதற்காக அவர் கட்சியை, எம்.எல்.ஏ.க்களை தியாகம் செய்வார். மாநில அந்தஸ்து பெற ராகுல்காந்தி, எதிர்கட்சி எம்.பிக்கள், பாராளுமன்றத்தில் குரல் கொடுப்பார்கள்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • கூட்டுறவு சர்க்கரை ஆலையைத் திறந்து எத்தனால் தயாரிக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
    • கூட்டுறவு நூற்பாலையையும் தனியார் பங்களிப்புடன் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி சட்டசபையில் மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் எம்.எல்.ஏ.க்கள் பேசினர்.

    அப்போது வளர்ச்சி திட்டங்களில் உள்ள குறைபாடுகள், தொகுதிக்கு தேவையான திட்டங்கள், அரசின் செயல்பாடுகள் ஆகியவற்றை சுட்டிகாட்டியும் கோரியும் பேசினர்.

    இதனை தொடர்ந்து முதலமைச்சர் ரங்கசாமி மற்றும் அமைச்சர்கள் பதில் அளித்து பேசினர்.

    இதையடுத்து முதலமைச்சர் ரங்கசாமி மற்றும் அமைச்சர்கள் தங்கள் துறைகளில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டனர். அதில் பிரதான அம்சங்கள் வருமாறு:-

    குடிசை மாற்று வாரியத்தின் மூலம் காமராஜர் கல்வீடு கட்டும் திட்டத்தை மீண்டும் செயல்படுத்தி இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதி ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும். பிரதமர் கல்வீடு கட்டும் திட்டத்திலும் மத்திய அரசு உயர்த்தி அளித்துள்ள, ரூ.2¼ லட்சத்துடன், சேர்த்து ரூ.5 லட்சம் வழங்கப்படும்.

    சட்டமன்றத்திற்கான அடிக்கல் நாட்டி கட்டிடம் கட்டும் பணி தொடங்கப்படும். கூட்டுறவு சர்க்கரை ஆலையைத் திறந்து எத்தனால் தயாரிக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதேபோல் கூட்டுறவு நூற்பாலையையும் தனியார் பங்களிப்புடன் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    நெல்லுக்கான ஊக்கதொகை கிலோவுக்கு ரூ.2 அதிகரிக்கப்படும். கால்நடை விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்தில் மாட்டு தீவனம் ஆண்டு முழுவதும் வழங்கப்படும்.

    மாணவர்களின் ஊட்டச்சத்து அதிகரிக்க வாரம் 5 நாட்களும் சிறுதானிய பிஸ்கட், சிறுதானியம், வேர்க்கடலை, எள், பொட்டு கடலை மிட்டாய் ஆகியவை மாலை சிற்றுண்டியாக வழங்கப்படும்.

    பல் மருத்துவம், கால்நடை மருத்துவம், கலை, அறிவியல், வேளாண், சட்டம் போன்ற பிற பிரிவுகளில் சென்டாக் மூலம் சேரும் மாணவர்களுக்கு காமராஜர் நிதியுதவி திட்டம் விரிவுபடுத்தப்படும்.

    அரசு மற்றும் தனியார் சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் 10 சதவீத அரசு பள்ளி இடஒதுக்கீட்டின் கீழ் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., பி.ஏ.எம்.எஸ். படிப்புகளில் சேரும் மாணவர்களுக்கு முழு கல்வி கட்டண விலக்கு அளிக்கப்படும்.

    • ஜிப்மர் வெளிப்புற நோயாளிகள் பிரிவு எதிரே நடைபெற்ற இந்த போராட்டத்தில் டாக்டர்கள் பங்கேற்றனர்.
    • வெளிப்புற நோயாளிகள் பிரிவும் தடையின்றி இயங்கியது.

    புதுச்சேரி:

    கொல்கத்தாவில் பெண் டாக்டர் பலாத்காரம் படுகொலை செய்யப்பட்டார்.

    பெண் டாக்டர் படுகொலையை கண்டித்து நாடு முழுவதும் டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதுபோல் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவ மனையில் டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    காலை 6 மணி முதல் 8 மணி வரை 2 மணி நேரம் பணியை புறக்கணித்து டாக்டர்கள் போராட்டம் நடைபெற்றது.

    ஜிப்மர் வெளிப்புற நோயாளிகள் பிரிவு எதிரே நடைபெற்ற இந்த போராட்டத்தில் 100-க்கணக்கான டாக்டர்கள் பங்கேற்றனர். டாக்டர்களுக்கான பாதுகாப்பு சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்த வேண்டும், பெண் படுகொலைக்கு வெளிப்படையான விசாரணை நடத்த வேண்டும்,

    தவறுக்கு பொறுப்பானவர்கள் உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும், அனைத்து மருத்துவ அவசர சிகிச்சை பிரிவுகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும், பணி செய்யும் இடத்தில் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடந்தது.

    2 மணி நேரம் நடந்த போராட்டத்தை தொடர்ந்து டாக்டர்கள் பணிக்கு திரும்பினர்.

    போராட்டத்தால் நோயாளிகள் பாதிக்கப்படாமல் இருக்க மாற்று ஏற்பாடுகளை டாக்டர்கள் செய்திருந்தனர். வெளிப்புற நோயாளிகள் பிரிவும் தடையின்றி இயங்கியது. சீனியர் டாக்டர்கள்பணியில் இருந்தனர்.

    தொடர்ந்து இன்று மாலை கடற்கரை சாலையில் புதுச்சேரியில் உள்ள அனைத்து மருத்துவ கல்லூரி மாணவர்கள் மற்றும் டாக்டர்கள் பங்கேற்கும் அமைதிப் பேரணி காந்தி சிலை நோக்கி நடைபெற உள்ளது.

    • சிறப்பு வகுப்புகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
    • வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்ட அய்யப்பனை தேடும் பணி நடந்தது.

    புதுச்சேரி:

    தென்மேற்கு பருவமழை கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் தீவிரம் அடைந்துள்ளது.

    தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இதனிடையே மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக புதுவையில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது.

    நேற்று முன்தினம் மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை இடியுடன் கூடிய கனமழை பெய்தது. சுமார் 2 மேணி நேரத்துக்கு மேலாக மழை பெய்தது. 11 செ.மீ. மழை பதிவானது. இதனால் நகர பகுதியில் சாலைகள் வெள்ளகாடானது.

    அதேநேரத்தில் நேற்று பகல் முழுவதும் கடும் வெயில் கொளுத்தியது. மாலையில் குளிர்ந்த காற்று வீசியது. இரவு 9.30 மணிக்கு இடி மின்னலுடன் மழை பெய்ய தொடங்கியது. தொடர்ந்து இரவு 11 மணி வரை மழை பெய்த வண்ணம் இருந்தது.

    இதனால் சாலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழை நீர் வீடுகளுக்குள் புகுந்தது. இதன் காரணமாக அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் பெரும் அவதி அடைந்தனர்.மழை நின்றாலும் ஒரு மணி நேரத்துக்கு பிறகு தான் நீர் வடிந்தது.


    மொத்தமாக கடந்த 24 மணி நேரத்தில் 15.5 செ.மீட்டர் மழை அளவு புதுச்சேரியில் பதிவானது.

    இதனிடையே லாஸ்பேட்டை மேட்டுப்பகுதியில் இருந்து மழை வெள்ளம் தாழ்வான பகுதியான ஜீவானந்தபுரம் ஓடை வழியாக கொக்கு பார்க்கு பாலத்தை கடந்து சென்றது.

    அப்போது ஒடையையொட்டி நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிளை எடுக்கச் சென்ற அந்த பகுதியை சேர்ந்த அய்யப்பன் என்பவர் வெள்ள நீரில் இழுத்து செல்லப்பட்டார். அவரை காப்பாற்ற சென்ற 2 பேரும் ஓடைவெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர்.

    அந்த பகுதியை சேர்ந்தவர்கள் விரைந்து செயல்பட்டு இருவரை மீட்டனர். அய்யப்பனை மீட்க முடியவில்லை. அவரை தேடும் பணியில் தீயணைப்பு துறையினர் ஈடுட்டனர்.


    நள்ளிரவையும் கடந்து தட்டாஞ்சாவடி மற்றும் கொக்கு பார்க் பகுதியில் வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்ட அய்யப்பனை தேடும் பணி நடந்தது. தகவல் அறிந்து தொகுதி எம்.எல்.ஏ.வான வைத்தியநாதன் அங்கு வந்து தேடும் பணியை முடுக்கி விட்டார்.

    இருப்பினும் அய்யப்பன் இன்னும் கிடைக்கவில்லை. தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் புதுச்சேரியில் கோடையின் போது வெயிலின் தாக்கத்தால் கூடுதல் விடுமுறை விடப்பட்டதை ஈடுகட்டும் வகையில் சனிக்கிழமைகளில் வேலை நாளாக அரசு அறிவித்து இருந்தது.

    அதன்படி இன்று (சனிக்கிழமை) பள்ளிகள் செயல்படுவதாக இருந்தது. ஆனால் பலத்த மழை பெய்ததையொட்டி அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக கல்வி துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சிறப்பு வகுப்புகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    • சந்திரசேகர் என்பவர் கடந்த 7-ந்தேதி குடும்பத்துடன் புதுச்சேரிக்கு சுற்றுலா சென்றுள்ளார்.
    • இன்று விடுதி அறையில் விசம் குடித்து உயிரை மாய்த்துள்ளனர்.

    திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த சந்திரசேகர் என்பவர் தனது மனைவி, மகள், மகன் ஆகியோருடன் கடந்த 7-ம் தேதி அன்று புதுச்சேரிக்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு பிரபல விடுதியில் தங்கியுள்ளனர்.

    சுற்றுலாவை முடித்துக்கொண்டு இன்று விடுதியில் இருந்து வெளியேற இருந்த நிலையில் அவர்கள் 4 பேரும் அறையிலேயே விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டனர்.

    இதுகுறித்து பெரியகடை காவல்துறைக்கு விடுதில் உள்ளவர்கள் தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் 4 பேரின் சடலத்தை கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகின்றன.

    இவர்கள் தற்கொலை செய்து கொண்டதற்கு காரணம் கடன் பிரச்சனையா? இல்ல வேறு எது பிரச்சனையா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக தமிழிசை சவுந்தரராஜன் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
    • சுமார் 3½ ஆண்டுக்கும் மேலாக புதுவைக்கு தனி கவர்னர் இல்லாமல் பொறுப்பு கவர்னர்கள் நிர்வகித்து வந்தனர்.

    புதுச்சேரி:

    யூனியன் பிரதேசமான புதுவையில் கவர்னர்தான் அரசு என்றும், நிர்வாகி என்றும் அழைக்கப்படுகிறார்.

    கவர்னரின் அனுமதி பெற்றே அரசின் அனைத்து செயல்பாடுகளும் நடக்கிறது. அதேநேரத்தில் 2021-ம் ஆண்டு முதல் புதுவைக்கு தனி கவர்னர் நியமிக்கப்படவில்லை. தனி கவர்னராக இருந்த கிரண்பேடி நீக்கத்துக்கு பிறகு தெலுங்கானா மாநில கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் புதுவையின் பொறுப்பு கவர்னராக செயல்பட்டார். அவர் சுமார் 3 ஆண்டுகள் பதவி வகித்தார். .

    பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக தமிழிசை சவுந்தரராஜன் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து மீண்டும் ஜார்க்கண்ட் மாநில கவர்னராக இருந்த சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு, புதுவை பொறுப்பு கவர்னர் பதவி கூடுதலாக அளிக்கப்பட்டது. இதனால் சுமார் 3½ ஆண்டுக்கும் மேலாக புதுவைக்கு தனி கவர்னர் இல்லாமல் பொறுப்பு கவர்னர்கள் நிர்வகித்து வந்தனர்.

    இந்த நிலையில் புதுவையின் பொறுப்பு கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன், மகாராஷ்டிரா மாநிலத்துக்கு மாற்றப்பட்டார். புதுவையின் புதிய கவர்னராக கேரளா மாநிலத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி கைலாஷ்நாதனை ஜனாதிபதி திரவுபதி முர்மு நியமித்தார். புதிய கவர்னர் கைலாஷ்நாதன் நேற்று மதியம் 12 மணியளவில் புதுவைக்கு வந்தார்.

    அவரை முதலமைச்சர் ரங்கசாமி, அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், அதிகாரிகள் வரவேற்றனர்.

    இன்று கவர்னர் மாளிகையில் புதிய கவர்னர் பதவியேற்பு விழா நடந்தது.இதற்காக கவர்னர் மாளிகை வளாகத்தில் மேடையும், பந்தலும், விருந்தினர் அமர இருக்கையும் அமைக்கப்பட்டிருந்தது.

    சரியாக காலை 11.15 மணிக்கு மாளிகையிலிருந்து கைலாஷ்நாதன் மேடைக்கு வந்தார். இதனையடுத்து பதவியேற்பு விழா, தேசிய கீதத்துடன் தொடங்கியது. தொடர்ந்து புதுவை தலைமை செயலாளர் சரத்சவுகான், புதிய கவர்னராக கைலாஷ்நாதன் நியமிக்கப்பட்டதற்கான ஜனாதிபதியின் உத்தரவை வாசித்தார்.

    இதையடுத்து சென்னை ஐகோர்ட்டு பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார், புதிய கவர்னர் கைலாஷ்நாதனுக்கு பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். மீண்டும் தேசிய கீதம் இசைக்கப்பட்டு விழா நிறைவடைந்தது.

    புதுவை கவர்னர் கைலாஷ்நாதனுக்கு ஐகோர்ட்டு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார், முதலமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் ஏம்பலம் செல்வம் மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

    • புதுச்சேரி பா.ஜ.க.வினர் டெல்லியில் முகாமிட்டு புகார் கொடுத்த வண்ணம் இருந்தனர்.
    • தெலங்கானா கவர்னராக இருந்த தமிழிசை கூடுதலாக புதுவையின் கவர்னராக 16-ந் தேதி பொறுப்பேற்றார்.

    2016-ம் ஆண்டு மே 29-ந் தேதி புதுச்சேரி மாநில கவர்னராக முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரியாக கிரண்பேடி நியமிக்கப்பட்டார். ஹெல்மெட் கட்டாயம், 2 சக்கர வானங்களில் 2 பேர் தான் செல்ல வேண்டும். சிறுவர்களை ஏற்றி சென்றாலும் இறக்கி விட வேண்டும். மக்கள் நல திட்டங்கள் முடக்கம் என்பது உள்பட பல்வேறு புகார்கள் மத்திய அரசுக்கு சென்றது.

    குறிப்பாக புதுச்சேரி பா.ஜ.க.வினர் டெல்லியில் முகாமிட்டு புகார் கொடுத்த வண்ணம் இருந்தனர். இதனால் இவரை மத்திய அரசு, கடந்த 2021-ம் ஆண்டு பிப்ரவரி 14-ந் தேதி நீக்கியது. தொடர்ந்து தெலங்கானா கவர்னராக இருந்த தமிழிசை கூடுதலாக புதுவையின் கவர்னராக 16-ந் தேதி பொறுப்பேற்றார்.

    கடந்த பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு வசதியாக கவர்னர் பதவியை கடந்த மார்ச் 18-ந் தேதி தமிழிசை சவுந்தரராஜன் ராஜினாமா செய்தார். மார்ச் 23-ந் தேதி புதுச்சேரி மாநிலத்தின் கவர்னராக சி.பி.ராதாகிருஷ்ணன் பொறுப்பேற்றார். கிரண்பேடிக்கு பிறகு கிட்டத்திட்ட 3 ஆண்டுகள் 5 மாதத்துக்கு பிறகு தற்போது 'தான் முழுநேர கவர்னர் புதுச்சேரிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

    • திட்டங்களை விரைவாக செயல்படுத்த மாநில அந்தஸ்து தேவை.
    • எம்.பி.க்கள் புதுச்சேரிக்காக கேள்வி எழுப்பி மாநில அந்தஸ்து தர வலியுறுத்த வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி சட்டசபையில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துக்கு பதிலளித்து முதல்-அமைச்சர் ரங்கசாமி பேசியதாவது:-

    சபையில் பேசிய அனைத்து எம்.எல்.ஏ.க்களும் புதுவைக்கு தனி மாநில அந்தஸ்து பெறுவது குறித்து பேசினர். மக்களின் எண்ணமும் அதுவாக தான் உள்ளது. புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கேட்டு மத்திய அரசை வலியுறுத்தி கொண்டே உள்ளோம்.

    பல முறை தீர்மானம் நிறைவேற்றி அனுப்பியுள்ளோம். கடந்த முறை தீர்மானம் நிறைவேற்றி அனுப்பியபோது மத்திய அரசு மாநில அந்தஸ்து தர வாய்ப்பில்லை என்று அறிவித்துவிட்டது.

    எம்.எல்.ஏ.க்கள் தெரிவிக்கும் குறைகளை சரி செய்யவும், கேட்கும் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றவும் மாநில அந்தஸ்து தேவை.

    மத்திய அரசை கேட்டு வலியுறுத்தி வருகிறோம். அரசு என்றால் சட்டசபை என இல்லாமல் கவர்னர் ஒப்புதலும் மிக அவசியம். மறைவாக இருந்த இதை உச்சநீதிமன்றம் வரை சென்று கவர்னருக்கு தான் அதிகாரம் என வெளிப்படையாக தெரிவிக்க செய்து விட்டனர். அதன் காரணமாக அனைத்தும் காலதாமதம் ஆகிறது.

    கோப்புகளை பார்க்கும் எல்.டி.சி., முதல் தலைமைச் செயலர் வரை அவர்கள் என்ன நினைக்கின்றார்களோ அதுதான் நிறைவேற வேண்டும் என நினைக்கின்றனர்.

    அதனால் கோப்பு தேங்கி கிடக்கிறது. இப்படி இருந்தால் மக்கள் எண்ணங்கள் எப்படி நிறைவேறும்? இதனை சுட்டி காட்டி மத்திய அரசிடம் மாநில அந்தஸ்து கேட்டு வலியுறுத்துகிறோம்.

    திட்டங்களை விரைவாக செயல்படுத்த மாநில அந்தஸ்து தேவை. எம்.பி.க்கள் புதுச்சேரிக்காக கேள்வி எழுப்பி மாநில அந்தஸ்து தர வலியுறுத்த வேண்டும்.

    இதன் மூலம் வருவாய் மற்றும் மத்திய அரசின் உதவி அதிகம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. அதனால் மாநில அந்தஸ்து பெற தயக்கம் இல்லை.

    மாநில அந்தஸ்து பெற்றால் சிரமமின்றி புதுச்சேரிக்கான திட்டங்களை நிறைவேற்ற முடியும். அரசு பொறுப்பேற்ற போது, காலியாக உள்ள அனைத்து பணியிடங்களையும் 3 மாதத்தில் நிரப்பலாம் என நினைத்தால், 3 ஆண்டு முடிந்தும் நிரப்ப முடியாத நிலை உள்ளது.

    மாநில அந்தஸ்து தான் மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது. எனவே நமது எம்.பி.க்கள் பாராளுமன்றத்தில் மாநில அந்தஸ்து வழங்க வலியுறுத்த வேண்டும். இந்தியா கூட்டணிக்கும் அதிக எம்.பி.,க்கள் கிடைத்துள்ளனர். அவர்களும் பாராளுமன்றத்தில் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கொடுக்க வலியுறுத்த வேண்டும்.

    நாமும் டெல்லி சென்று பிரதமர் உள்ளிட்டோரை சந்தித்து பேசலாம். புதுச்சேரி மாநிலம் பெரிய அளவில் வளர்ச்சி காண மாநில அந்தஸ்து வேண்டும்.

    கடந்த காலத்தில் கருத்து வேறுபாடுகளை கோப்புகளில் கவர்னர் வெளிப்படுத்த தொடங்கினர். அதுவும் வளர்ச்சிக்கு தடையானது.

    இவ்வாறு முதல்-அமைச்சர் ரங்கசாமி பேசினார்.

    ×