search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    • இலங்கை அணிக்காக ஒருநாள் கிரிக்கெட்டில் சதம் அடித்த 2-வது வீராங்கனை என்ற பெருமையை விஷ்மி குணரத்ன பெற்றுள்ளார்.
    • இலங்கை மகளிர் அணிக்காக ஒருநாள் கிரிக்கெட்டில் சமாரி அத்தபத்து மட்டுமே சதம் அடித்திருந்தார்.

    பெல்பாஸ்ட்:

    இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடர் 1-1 என சமனில் முடிந்தது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது.

    இதில் முதலாவது ஒருநாள் போட்டி பெல்பாஸ்ட்டில் இன்று நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டத்திற்கான டாஸ் வென்ற அயர்லாந்து முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய இலங்கை 50 ஓவர்களில் 8 விக்கெட்டை இழந்து 260 ரன்கள் எடுத்தது.

    இலங்கை தரப்பில் அதிகபட்சமாக விஷ்மி குணரத்ன சதம் (101 ரன்) அடித்து அசத்தினார். அயர்லாந்து தரப்பில் ஓர்லா ப்ரெண்டர்காஸ்ட் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதையடுத்து 261 என்ற இலக்கை நோக்கி அயர்லாந்து ஆடி வருகிறது.

    இந்நிலையில் இந்த ஆட்டத்தில் சதம் அடித்ததன் மூலம் விஷ்மி குணரத்ன சாதனை பட்டியல் ஒன்றில் இடம் பிடித்துள்ளார். அதாவது இலங்கை அணிக்காக ஒருநாள் கிரிக்கெட்டில் சதம் அடித்த 2-வது வீராங்கனை என்ற பெருமையை விஷ்மி குணரத்ன பெற்றுள்ளார்.

    இதற்கு முன் இலங்கை மகளிர் அணிக்காக ஒருநாள் கிரிக்கெட்டில் சமாரி அத்தபத்து மட்டுமே (9 சதம்) சதம் அடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கடந்த ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல். தொடரில் மொத்தம் 74 போட்டிகள் நடத்தப்பட்டன.
    • அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐ.பி.எல். தொடரில் போட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

    புதுடெல்லி:

    கடந்த ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல். தொடரில் மொத்தம் 74 போட்டிகள் நடத்தப்பட்டன.

    இந்நிலையில், அடுத்த ஆண்டு நடைபெற்ற உள்ள ஐ.பி.எல். போட்டிகளின் எண்ணிக்கையை 84 ஆக உயர்த்துவது குறித்த விவாதம் நடந்து வருகிறது என பி.சி.சி.ஐ. செயலாளர் ஜெய் ஷா தெரிவித்தார்.

    இதுதொடர்பாக பி.சி.சி.ஐ. செயலாளர் ஜெய்ஷா கூறியதாவது:

    பி.சி.சி.ஐ.யின் ஒளிபரப்பு உரிமைகள் மற்றும் ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தங்களுக்கு இதுபோன்ற விரிவாக்கம் தேவைப்படுகிறது. ஆனாலும், வீரர்களின் பணிச்சுமையைக் கணக்கிட விரும்புகிறோம்.

    ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தங்கள் 2025-26ல் 84 போட்டிகளாகவும், அதைத் தொடர்ந்து 2027ல் 94 போட்டிகளாகவும் விரிவுபடுத்தப்பட உள்ளது.

    84 போட்டிகள் கொண்ட ஐ.பி.எல். போட்டிகளுக்கு குறைந்தபட்சம் ஒரு வாரமாவது நீடித்திருக்க வாய்ப்புள்ளது.

    பேச்சுவார்த்தை இன்னும் நடந்து கொண்டிருக்கிறது, விரைவில் முடிவு எட்டப்படலாம். இறுதி முடிவு பி.சி.சி.ஐ.யிடம் உள்ளது.

    ஆனால் வாரியம் பெரும்பான்மை மற்றும் சிறுபான்மை கருத்துக்கள் இரண்டையும் சமமாக பரிசீலிக்கும்.

    அடுத்த ஐ.பி.எல். தொடரில் 84 போட்டிகளை ஏற்பாடு செய்ய நாங்கள் அழைப்பு விடுக்கவில்லை. போட்டிகளின் அதிகரிப்பால் வீரர்களின் சுமையை நாங்கள் கணக்கில் கொள்ள வேண்டும். இது ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இருந்தாலும், பிசிசிஐ தான் 74 அல்லது 84 போட்டிகளை ஏற்பாடு செய்ய வேண்டுமா என்பதை முடிவு செய்யவேண்டும் என தெரிவித்தார்.

    • முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா 160 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    • முதல் நாள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் 97 ரன்கள் எடுத்துள்ளது.

    கயானா:

    தென் ஆப்பிரிக்கா அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

    டிரினிடாடில் நடந்த முதல் டெஸ்ட் டிராவில் முடிந்தது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி கயானாவில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 160 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. டேன் பிட் அதிகபட்சமாக 38 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார். பெடிங்காம் 28 ரன்னும், ஸ்டப்ஸ் 26 ரன்னும் எடுத்தனர்.

    வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ஷமாரி ஜோசப் 5 விக்கெட்டும், ஜேய்டன் சீலஸ் 3 விக்கெட்டும் வீழ்த்தினார்.

    இதையடுத்து, வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. தென் ஆப்பிரிக்கா துல்லியமாக பந்து வீசியதால் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்தன.

    முதல் நாள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் 7 விக்கெட் இழப்புக்கு 97 ரன்கள் எடுத்துள்ளது.

    தென் ஆப்பிரிக்கா சார்பில் முல்டர் 4 விக்கெட்டும், பர்கர் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    • டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்தவர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் டெண்டுல்கர்.
    • இந்தப் பட்டியலில் இங்கிலாந்து அணியின் ஜோ ரூட் தற்போது ஏழாவது இடத்தில் உள்ளார்.

    சிட்னி:

    டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்துள்ளவர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் சச்சின் டெண்டுல்கர். டெண்டுல்கர் 200 போட்டிகளில் விளையாடி 53.78 சராசரியுடன் 15,921 ரன்கள் எடுத்துள்ளார்.

    இந்தப் பட்டியலில் ஜோ ரூட் தற்போது ஏழாவது இடத்தில் உள்ளார். அவர் 143 போட்டிகளில் விளையாடி 12,027 ரன்கள் குவித்துள்ளார்.

    டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த இங்கிலாந்து வீரர்களில் ஜோ ரூட் இரண்டாவது இடத்தில் உள்ளார். 161 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 12,472 ரன்கள் குவித்துள்ள அலிஸ்டர் குக் அவருக்கு முன் உள்ளார்.

    இந்நிலையில், சச்சின் டெண்டுல்கரின் சாதனையை இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் நிச்சயம் முறியடிப்பார் என தெரிவித்தார்.

    இதுதொடர்பாக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கூறியதாவது:

    டெஸ்ட் போட்டிகளில் சச்சின் டெண்டுல்கர் எடுத்துள்ள ரன்களை ஜோ ரூட் கடந்து செல்லக்கூடும். ரூட் ஆண்டுக்கு 800 முதல் 1000 ரன்கள் எடுத்தால் டெண்டுல்கரின் சாதனையை அவரால் முறியடிக்க முடியும்.

    ஜோ ரூட்டுக்கு 33 வயது. சுமார் 3,000 ரன்கள் அவர் பின்தங்கியுள்ளார். அவர் எத்தனை டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறார் என்பதைப் பொறுத்து அமையும்.

    அவர் ஆண்டுக்கு 10 முதல் 14 டெஸ்ட் போட்டிகளில் விளையாடினால், ஆண்டுக்கு 800 முதல் 1,000 ரன்கள் எடுத்தால் ஜோ ரூட் அங்கு வருவதற்கு இன்னும் மூன்று அல்லது நான்கு ஆண்டுகள் மட்டுமே இருக்கும்.

    அதுவரை ஜோ ரூட் ரன்களை எடுப்பதற்கான பசியுடன் இருக்க வேண்டும். டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த சாதனையை இலக்காகக் கொண்டுள்ள அவருக்கு அதற்கான வயதும் உள்ளது என தெரிவித்தார்.

    • டி20 உலகக் கோப்பையில் 100 சதவீதம் வெற்றி பெற்ற முதல் கேப்டன் ரோகித் சர்மா.
    • அதிவேகமாக 3,500 ரன்களை கடந்த முதல் வீரர் விராட் கோலி.

    புதுடெல்லி:

    டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய கேப்டன் ரோகித் சர்மா மற்றும் நட்சத்திர வீரரான விராட் கோலி ஆகியோர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தனர். இருவரின் ஓய்வு அறிவிப்பு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

    டி20 கிரிக்கெட்டில் அதிக போட்டிகளில் விளையாடியுள்ள ரோகித் சர்மா, டி20 கிரிக்கெட்டில் 50 வெற்றிகளைப் பெற்ற ஒரே கேப்டன் என்ற சாதனையை படைத்தார்.

    டி20 கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் மேக்ஸ்வெலுடன் முதலிடத்தைப் பகிர்ந்துள்ள ரோகித் சர்மா, டி20 உலகக் கோப்பை தொடரின் அனைத்துப் போட்டிகளிலும் வெற்றிபெற்று கோப்பை வென்ற முதல் கேப்டன் என்ற பெருமையைப் பெற்றார். டி20 கிரிக்கெட்டில் 200 சிக்சர்களை விளாசிய முதல் வீரர் என்ற பெருமையையும் ரோகித் சர்மா பெற்றார்.

    இதேபோல், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக அரை சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் பாபர் அசாமுடன் முதலிடத்தை பகிர்ந்துள்ள விராட் கோலி டி20 போட்டிகளில் அதிக முறை ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருது பெற்றுள்ளார்.

    இந்நிலையில், ஓய்வை அறிவித்த நிலையிலும் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலியின் மவுசு இன்னும் குறையவில்லை.

    சமீபத்தில் ஐசிசி வெளியிட்ட டி20 தரவரிசைப் பட்டியலில் ரோகித் சர்மா 45வது இடத்திலும், விராட் கோலி 52வது இடத்திலும் நீடிக்கின்றனர்.

    ஓய்வு அறிவித்த வீரர்களின் பெயர் பட்டியலில் இருந்து நீக்கப்படும் நிலையில், இவர்களது சாதனைகளால் தரவரிசையில் இன்றும் இடம்பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • டி20 லீக் தொடர்களில் விளையாடுவதற்காக இந்த முடிவு எடுத்துள்ளார்.
    • நியூசிலாந்து டெஸ்ட் அணிக்காக விளையாடுவேன் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    நியூசிலாந்து அணியின் முன்னணி இடது கை பேட்ஸ்மேன் டேவன் கான்வே. இவர் நியூசிலாந்து அணியுடன் மத்திய ஒப்பந்தத்தில் கையெழுத்து இட மறுத்துள்ளார். உலகளவில் நடக்கும் பெரும்பாலான டி20 லீக் போட்டிகளில் விளையாடுவதற்காக இந்த முடிவை எடுத்து உள்ளார்.

    ஆனால் நியூசிலாந்து அணிக்காக டெஸ்ட் போட்டி மற்றும் அடுத்த வருடம் பாகிஸ்தானில் நடைபெற இருக்கும் சாம்பியன்ஸ் டிராபி ஆகியவற்றில் விளையாடுவேன் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    மத்திய ஒப்பந்தத்தில் இருந்து விலகியது எளிதாக எடுக்கப்பட்ட முடிவு அல்ல. இது எனக்கும் எனது குடும்பத்திற்கும் இந்த நேரத்தில் சிறந்தது என நான் நம்புகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

    ஏற்கனவே கேன் வில்லியம்சன், பெர்குசன் போன்ற முன்னணி வீரர்கள் இதே முடியை எடுத்துள்ளனர். இந்த பட்டியலில் தற்போது கான்வே இணைந்துள்ளார்.

    மற்றொரு பேட்ஸ்மேனான பின் ஆலன் இதே முடிவை எடுத்து உள்ளார். ஆனால் நியூசிலாந்து இது தொடர்பாக இன்னும் முடிவு எடுக்கவில்லை.

    நியூசிலாந்து கிரிக்கெட் போர்டின் மத்திய ஒப்பந்தத்தில் இடம் பெறவில்லை என்றால் நியூசிலாந்து அணிக்காக ஒரு வீரர் விளையாட வேண்டிய அவசியமில்லை. அவர்கள் வெளிநாட்டில் எந்த ஒரு லீக் போட்டிகளிலும் விளையாடலாம். லீக் போட்டியில் அதிக வருமானம் கிடைப்பதாலும், குடும்பத்தை விட்டு பிரிந்து செல்ல வெண்டியதில்லை என்பதாலும் பெரும்பாலான வீரர்கள் தற்போது இந்த முடிவை எடுத்து வருகிறார்கள்.

    டேவன் கான்வே ஐபிஎல் லீக்கில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.

    • டி20 உலகக் கோப்பைக்கு பிறகு இந்திய அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது.
    • வங்கதேசம் அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடுகிறது.

    புதுடெல்லி:

    டி20 உலகக் கோப்பை தொடருக்கு பின் இந்திய அணி ஜிம்பாப்வேவுக்கு எதிராக டி20 தொடர் மற்றும் இலங்கை அணிக்கு எதிராக டி20 மற்றும் ஒருநாள் தொடர் ஆகியவற்றில் விளையாடியது. இந்த இரு தொடர்களிலும் நட்சத்திர பந்து வீச்சாளர் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது.

    இதையடுத்து, பும்ரா தனது குடும்பத்தினருடன் நேரம் செலவிட்டார்.

    இதற்கிடையே, வங்கதேசம் அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடுகிறது. செப்டம்பர் 19-ம் தேதி முதல் டெஸ்டும், செப்டம்பர் 27-ம் தேதி 2வது டெஸ்ட்டும் நடைபெற உள்ளது.

    இந்நிலையில், வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் பும்ராவுக்கு ஓய்வை நீட்டிக்க பி.சி.சி.ஐ. முடிவுசெய்துள்ளதாக தகவல் வெளியாகியது.

    இந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் டிராபி தொடரில் இந்திய அணி விளையாடவுள்ளது. இந்த தொடருக்காகவே அவருக்கு ஓய்வு அளிக்கப்படுவதாக தகவல் வெளியாகியது.

    பும்ராவுக்கு பதிலாக இந்திய அணியில் இருந்து இடதுகை வேகப்பந்து வீச்சாளர் ஒருவரை தயார் செய்ய இந்திய அணி முடிவெடுத்துள்ளது.

    இதில் அர்ஷ்தீப் சிங், கலீல் அகமது மற்றும் யாஷ் தயாள் ஆகியோர் அந்தப் பட்டியலில் உள்ளனர். உள்ளூர் போட்டியான துலீப் டிராபியில் விளையாட இவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மகளிர் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் வங்கதேசத்தில் நடைபெறவுள்ளது.
    • வன்முறை சூழ்ந்த வங்கதேசத்தில் கள நிலவரத்தை ஐசிசி தொடர்ந்து கண்காணித்து வருகிறது.

    ஐசிசி நடத்தும் மகளிர் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் அடுத்த மாதம் நடைபெற இருக்கிறது. தற்போதைய திட்டப்படி இந்த தொடரை வங்கதேசம் நடத்த இருக்கிறது.

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கும் வங்கதேசம் நாட்டில் தற்போது உள்நாட்டு கலவரம் வெடித்துள்ளது. ராணுவம் ஆட்சியை கைப்பற்றி, அந்நாட்டு தேசிய அரசியலில் பரபரப்பான சூழல் ஏற்பட்டு உள்ளது. மேலும், நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் மற்றும் வன்முறை தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

    இதன் காரணமாக வருகிற அக்டோபர் மாதம் துவங்க இருக்கும் மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் திட்டமிட்டப்படி வங்கதேசத்தில் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும், வன்முறை சூழ்ந்த வங்கதேசத்தில் கள நிலவரத்தை ஐசிசி தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

    ஒருவேளை வங்காளதேசத்தில் மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறாத பட்சத்தில், இதனை இந்தியா நடத்துவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்பட்டது.

    இந்நிலையில், வங்கதேசத்தில் நிலவி வரும் உள்நாட்டு பிரச்னை காரணமாக அங்கு நடத்த திட்டமிடப்பட்டுள்ள மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரை இந்தியாவில் நடத்த முடியுமா என ஐசிசி பிசிசிஐயிடம் கேட்டுள்ளது.

    ஆனால், அக்டோபர் மாதம் மழைக்காலம் தொடங்கிவிடும் என்பதாலும், இந்தியாவில் அடுத்தாண்டு மகளிர் ODI உலக கோப்பை நடக்கவுள்ளதாலும் ஐசிசியின் கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டதாக பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா தெரிவித்துள்ளார்.

    ஆதலால் மகளிர் டி20 உலகக் கோப்பை நடைபெறும் இடம் குறித்து விரைவில் ஐசிசி முடிவெடுக்கும் என்ற எதிர்பார்க்கப்படுகிறது.

    • வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக ஒலிம்பிக் கமிட்டி அறிவித்தது.
    • தகுதி நீக்கத்திற்கு எதிரான வினேஷ் போகத்தின் முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டது.

    பாரீஸ் ஒலிம்பிக்கில் பெண்கள் 50 கிலோ எடைப்பிரிவுக்கான மல்யுத்த இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் அமெரிக்காவைச் சேர்ந்த சாரா ஹில்டெப்ரண்ட்-ஐ எதிர்கொள்ள இருந்தார்.

    ஆனால் வினேஷ் போகத் உடல் எடை சில கிராம்கள் வரை கூடி இருப்பதால் அவர் தகுதிநீக்கம் செய்யப்பட்டதாக ஒலிம்பிக் கமிட்டி அறிவித்தது.

    இதையடுத்து, தனது தகுதி நீக்கத்திற்கு எதிராக விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றத்தில் வினேஷ் போகத் முறையிட்டுள்ளார்.

    தனது தகுதிநீக்கத்தை ரத்துசெய்ய வேண்டும் எனக்கூறிய வினேஷ் போகத், இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்ற தமக்கு வெள்ளிப் பதக்கம் பகிர்ந்து அளிக்கவேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

    இந்த வழக்கு சமீபத்தில் விசாரணைக்கு வந்தது. வினேஷ் போகத் விவகாரத்தில் அனைத்து தரப்பினரிடமும் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், தீர்ப்பு தேதி 2 முறை ஒத்திவைக்கப்பட்டது.

    இந்நிலையில், பாரிஸ் ஒலிம்பிக்ஸில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிரான வினேஷ் போகத்தின் மேல்முறையீட்டு மனுவை சர்வதேச விளையாட்டு நடுவர் மன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இந்த முடிவால் வினேஷ் போகத்தின் வெள்ளி பதக்க கனவு பறிபோயுள்ளது.

    இந்நிலையில், வினேஷ் போகத்துக்கு ஆதரவாக முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் முனாப் பட்டேல் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    அவரது பதிவில், "வெள்ளி பதக்கம் தொடர்பாக நாங்கள் அனைவரும் கேட்க விரும்பிய செய்தி இது அல்ல. ஆனால் வினேஷ் போகத், நீங்கள் எப்போதும் எங்களுக்கு ஒரு சாம்பியன். உங்களின் முயற்சிகளை நினைத்து நாங்கள் பெருமைப்படுகிறோம்" என்று தெரிவித்துள்ளார்.

    • அடுத்த வருடம் பாகிஸ்தான் சாம்பியன்ஸ் டிராபி தொடரை நடத்துகிறது.
    • இதற்காக மைதானத்தை புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    வங்கதேச அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக பாகிஸ்தான் சென்றுள்ளது. 2-வது டெஸ்ட் போட்டி கராச்சி நேஷனல் பேங்க் மைதானத்தில் ஆகஸ்ட் 30-ந்தேதி தொடங்குகிறது.

    இந்த போட்டியை நேரில் பார்த்து ரசிப்பதற்கு ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்படமாட்டாது என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கை உடனடியாக அமலுக்கு வருகிறது எனவும் தெரிவித்துள்ளது. ஏற்கனவே டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டிருந்தால் ரசிகர்களுக்கு முழுத்தொகையும் திருப்பி வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.

    அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடைபெற இருக்கிறது. இதற்காக மைதானத்தை (கேலரி உள்ளிட்ட இடங்கள்) புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் ரசிகர்களுக்கு அனுமதி இல்லை எனத் தெரிவித்துள்ளது. ரசிகர்களின் பாதுகாப்புதான் எங்களுடைய முதன்மை நோக்கம் இதனால் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவித்துள்ளது.

    1996-ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் கராச்சி மைதானத்தில் நடைபெற்றன. அதன்பின் நடைபெற இருக்கும் ஐசிசி தொடர் (சாம்பியன்ஸ் டிராபி) இதுவாகும்.

    பாகிஸ்தான்- வங்கதேசம் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ராவல்பிண்டியில் ஆகஸ்ட் 21-ந்தேதி தொடங்குகிறது.

    • மோர்னே மோர்கல் பவுலிங் பயிற்சியாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
    • லக்னோ அணி வழிகாட்டியாக கம்பீர் இருந்தபோது மோர்கல் பவுலிங் பயிற்சியாளராக செயல்பட்டார்.

    புதுடெல்லி:

    இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் சமீபத்தில் நியமனம் செய்யப்பட்டார்.

    கவுதம் கம்பீர் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில் பந்துவீச்சு பயிற்சியாளர், பேட்டிங், பீல்டிங் பயிற்சியாளர் போன்றவர்களையும் தேர்வு செய்யாமல் இருந்தது.

    இதற்கிடையே, பவுலிங் பயிற்சியாளராக பாகிஸ்தான் அணியின் முன்னாள் பயிற்சியாளராக இருந்த தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த மோர்னே மோர்கலை நியமிக்குமாறு கம்பீர் கேட்டிருந்தார். அதற்கு பி.சி.சி.ஐ. எந்த பதிலும் கூறாமல் இருந்தது.

    இந்நிலையில், இந்திய அணியின் புதிய பவுலிங் பயிற்சியாளராக மோர்னே மோர்கல் செயல்படுவார் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதுகுறித்த தகவலை பி.சி.சி.ஐ. செயலாளர் ஜெய்ஷா உறுதிப்படுத்தியுள்ளார்.

    கவுதம் கம்பீர் மற்றும் மோர்னே மோர்கல் இருவரும் நீண்ட நாட்களாக நல்ல உறவில் இருந்து வருகின்றனர். கம்பீர் ஒரு வீரராக கொல்கத்தா அணிக்கு விளையாடிய போது மோர்கல் விளையாடியுள்ளார்.

    லக்னோ அணியின் வழிகாட்டியாக கம்பீர் இருந்தபோது மோர்கல் பந்துவீச்சு பயிற்சியாளராக செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஹர்திக் பாண்ட்யா பிரிட்டிஷ் பாடகியுடன் டேட்டிங்கில் இருப்பதாக தகவல் வெளியாகியது.
    • ஹர்திக் பாண்ட்யா தற்போது கிரீஸ் நாட்டில் விடுமுறையை கொண்டாடி வருகிறார்.

    இந்திய அணியின் ஆல் ரவுண்டராக விளங்கி வருபவர் ஹர்திக் பாண்ட்யா. இவர் தனது மனைவி நடாஷா ஸ்டான்கோவிக் உடனான திருமண உறவில் இருந்து விலகுவதாக ஜூலை 18-ம் தேதி அறிவித்தார்.

    இலங்கை அணியுடனான டி20 தொடருக்கு பின் ஹர்திக் பாண்டியா கிரீஸ் நாட்டில் விடுமுறையை கொண்டாடி வருகிறார். இதில் பாடகியும், நடிகையுமான ஜாஸ்மின் வாலியா மற்றும் ஹர்திக் பாண்ட்யா இருவரும் ஒரே இடத்தில் இருப்பது தெரிய வந்துள்ளது. பிரிட்டனைச் சேர்ந்த ஜாஸ்மின் வாலியாவின் பெற்றோர் இந்தியர்கள் தான்.

    இவர் பிரிட்டிஷ் ரியாலிட்டி தொலைக்காட்சி தொடரான, தி ஒன்லி வே இஸ் எஸ்ஸக்ஸ் என்ற தொடரின் மூலமாக பிரபலமடைந்தார். 2014-ம் ஆண்டு தனது பெயரில் யூ டியூப் சேனல் ஒன்றை தொடங்கி நடத்தியுள்ளார். தற்போது 6 லட்சத்திற்கும் அதிகமான பாலோயர்களை இன்ஸ்டாகிராமில் வைத்துள்ளளார்.

    இந்நிலையில், ஹர்திக் பாண்ட்யா பிரிட்டிஷ் பாடகியான ஜாஸ்மின் வாலியாவுடன் டேட்டிங்கில் இருப்பதாக தகவல் வெளியாகியது.

    இன்ஸ்டாகிராமில் இருவரும் பின்தொடர்ந்து வருவதுடன், புகைப்படங்களுக்கும் லைக் செய்து வருகின்றனர். ஜாஸ்மின் வாலியாவும் இந்திய வீரர்களில் ஹர்திக் பாண்ட்யாவை மட்டுமே பின்தொடர்ந்து வருகிறார். இதனால் இருவரும் உறவில் இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பான புகைப்படங்களும் வைரலாகி வருகின்றன.

    ×