search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    • பேரிடர் மற்றும் மழைக்காலங்களில் பொதுமக்களுக்கு தடையின்றி பால் விநியோகம் செய்ய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார்.
    • அனைத்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு தேவையான தீபாவளி இனிப்புகளை வழங்கவும் முன்கூட்டியே திட்டமிட வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார்.

    சென்னை:

    சென்னை, நந்தனத்தில் உள்ள ஆவின் இல்லத்தில் அனைத்து மாவட்ட ஆவின் பொது மேலாளா்கள் மற்றும் துணைப் பதிவாளா்களுடனான ஆய்வுக் கூட்டம் பால் வளத்துறை மற்றும் கதர்த்துறை அமைச்சா் ஆா்.எஸ்.ராஜ கண்ணப்பன் தலைமையில் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் இல்லாத கிராமங்களில் புதிய சங்கங்களை உருவாக்குவது, சங்க உறுப்பினா்களுக்கு கறவை மாடுகள் வாங்குவதற்கான கடன் வழங்குவது போன்ற பல்வேறு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் கலந்தாலோசனை மேற்கொண்டார்.

    மேலும், பேரிடர் மற்றும் மழைக்காலங்களில் பொதுமக்களுக்கு தடையின்றி பால் விநியோகம் செய்ய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார்.

    தீபாவளியை முன்னிட்டு ஆவின் சார்பில் காஜு பிஸ்தா ரோல், காஜு கட்லி, நெய் பாதுஷா, முந்திரி அல்வா, மிக்சர், முறுக்கு உள்ளிட்ட 6 சிறப்பு பல காரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

    பண்டிகை காலங்களில் பொதுமக்களுக்கு தேவைக்கேற்ப இனிப்பு மற்றும் கார வகைகளை தயாரிக்க வேண்டும் என்றும், கடந்த ஆண்டை விட நிகழாண்டில் தீபாவளி விற்பனையை 20 சதவீதம் அதிகரிக்கவும், அனைத்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு தேவையான தீபாவளி இனிப்புகளை வழங்கவும் முன்கூட்டியே திட்டமிட வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார்.

    இக்கூட்டத்தில் கால்நடை பராமரிப்பு, பால்வளத்துறை முதன்மைச் செயலர் சத்யபிரத சாகு, பால்வளத்துறை இயக்குநா் மற்றும் ஆவின் மேலாண்மை இயக்குநா் சு. வினீத் உள்ளிட்டோர் கலந்துகொண்டனா்.

    • கடந்தாண்டு மட்டும் இணையவழி குற்றங்கள் தொடர்பாக 1390 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
    • சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகளை தடுக்க ஒருங்கிணைந்து செயல்பட்டு மக்களின் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

    சென்னை கிண்டியில் தென்பிராந்திய காவல் துறை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தை தொடங்கி வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    * கடந்தாண்டு மட்டும் இணையவழி குற்றங்கள் தொடர்பாக 1390 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    * போதைப்பொருள் கடத்தல், சைபர் கிரைம், வலைதளங்களில் வதந்திகளை தடுக்க பிற மாநில போலீசாருடன் இணைந்து பணியாற்ற வேண்டும்.

    * இணையவழி குற்றவாளிகள் பெரும்பாலும் பிற மாநிலங்கள், பிற நாடுகளை சேர்ந்தவர்கள் என்பதால் இணைந்து செயல்படுவது அவசியம்.

    * சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகளை தடுக்க ஒருங்கிணைந்து செயல்பட்டு மக்களின் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

    * சட்டம், ஒழுங்கை நிலைநாட்ட இணையத்தில் பரவும் வதந்திகளை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

    • தமிழ்நாட்டில் பல ஆண்டு காலமாக இரு மொழி திட்டத்தை எந்த அரசு வந்தாலும் கடைப்பிடித்து வருகிறது.
    • தமிழகத்தில் தனியார் மற்றும் சி.பி.எஸ்.சி. பள்ளிகளிலும் இந்தி கற்றுக் கொடுக்கிறார்கள்.

    காரைக்குடி:

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பத்திரிகையாளர்களை சந்தித்த முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பேசியதாவது:-

    தமிழகத்தில் இரு மொழி திட்டம் தான் என்பதை கவர்னர் புரிந்து கொள்ள வேண்டும். தமிழ்நாடு மக்கள் என்ன சிந்திக்கிறார்களோ, அதற்கு நேர் மாறாக கவர்னர் கருத்து தெரிவிக்கிறார்.

    மற்ற மாநிலங்களிலே 3 மொழி கொள்கை இருக்கிறது என்பது தவறு. பல இந்தி பேசும் மாநிலங்களில் மாணவர்கள், இளைஞர்களுக்கு ஒரு மொழி மட்டுமே தெரியும். அங்கு ஆங்கிலம் கற்றுத் தருவது இல்லை. ஆங்கில ஆசிரியர்களும் கிடையாது.

    தமிழ்நாட்டில் பல ஆண்டு காலமாக இரு மொழி திட்டத்தை எந்த அரசு வந்தாலும் கடைப்பிடித்து வருகிறது. அதற்காக விரும்பியவர்கள் இந்தி படிக்கக்கூடாது என கூறவில்லை.

    தமிழகத்தில் தனியார் மற்றும் சி.பி.எஸ்.சி. பள்ளிகளிலும் இந்தி கற்றுக் கொடுக்கிறார்கள். கேந்திர வித்யாலயாவிலும் இந்தியை கற்றுத்தருகிறார்கள். விரும்பி படிக்கக்கூடிய மாணவர்களுக்கு எந்த தடையும் கிடையாது. தமிழகத்தில் அரசினுடைய கொள்கை மக்களுடைய எண்ணத்தை பிரதிபலிக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழ்நாடு அரசும், தமிழ்நாடு காவல்துறையும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது.
    • பயங்கரவாதத்தை கையாளுதல் உள்ளிட்ட உள்நாட்டுப் பாதுகாப்பின் முக்கியக்கூறுகள் குறித்து விவாதிக்க, இந்த மன்றம் வழிவகுக்கிறது.

    சென்னை:

    சென்னையில் இன்று தென் மாநில காவல் துறை இயக்குனர்கள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசியதாவது:-

    சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு, நீர் மேலாண்மை போன்ற பல்வேறு அடிப்ப டையில் தென்மாநிலங்கள் அனைவரும் ஒருங்கிணைந்து நாம் செயல்பட்டு வருகிறோம். அந்தவகையில் மிகமுக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகளான போதை பொருட்கள், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள், மாநிலங்களுக்கிடையேயான குற்றச் செயல்கள், இணையவழி குற்றங்கள் போன்ற தீவிர குற்றச்சம்பவங்களில் இருந்து, நம்மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்ற பொதுவான குறிக்கோளை அடைவதற்கு இங்கு நாம் கூடியிருக்கிறோம். இத்தகைய குற்றங்களை எதிர்கொள்வதில் தமிழ்நாடு காவல்துறை பல்வேறு முன்னற்றங்களை அடைந்திருக்கிறது.

    தமிழ்நாடு அரசும், தமிழ்நாடு காவல்துறையும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. போதைப்பொருள் விநியோகம் மற்றும் விற்பனை ஆகியவற்றை தடுப்பதற்கு நாங்கள் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.

    தமிழ்நாடு காவல்துறையின் தொடர் முயற்சிகளின் பலனாக, மாநிலத்தில் கஞ்சா பயிரிடப்படுவது தடுக்கப்பட்டிருக்கிறது. இரண்டு வியூகங்களை நாங்கள் கையாண்டு வருகிறோம்.

    ஒன்று, கைது செய்வதோடு மட்டுமின்றி சொத்து பறிமுதல், வங்கிகணக்கு முடக்கம், கடைகளுக்கு சீல், கடுமையான அபராதம், கடும் சிறைத்தண்டனை பெற்றுத்தருவது உள்ளிட்ட தீவிர சட்ட அமலாக்கம் மூலமாக போதைப்பொருட்களை ஒழிப்பது.

    இரண்டாவது, போதைப் பொருட்களின் தீமைகளை மாணவர்கள் மத்தியில் பிரச்சாரம் செய்வது, கல்வி நிலையங்கள் அருகில் போதைப் பொருள் விற்பனையைத் தடுப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள்! இவை மிக நல்ல பலன்களை கொடுத்திருக்கிறது.

    உயர் அதிகாரிகளுடன் நடத்தப்படும் தொடர் ஆய்வுக் கூட்டங்கள் மூலம் தமிழ்நாட்டை போதைப்பொருட்கள் இல்லாத மாநிலமாக உருவாக்கும் சரியான பாதையில் செல்வது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

    போதைப்பொருள் குற்றவாளிகளின் மீது பொருளாதார நடவடிக்கைகள் எடுப்பதில் தமிழ்நாடு காவல்துறை முன்னோடியாக திகழ்ந்து வருகிறது. இதன் மூலம் குற்றவாளிகளின் பொருளாதார பலம் தகர்க்கப்பட்டிருக்கிறது. ஆனாலும், போதைப்பொருள் குற்றவாளிகளின் தொடர்பு மற்றும் அவர்களது சொத்துகள் பல மாநிலங்களில் பரவிகிடக்கிறது.

    போதைப்பொருட்களை ஒழிக்க, ஒன்றிணைந்த முயற்சிகள் தேவைப்படுகிறது என்பதால்தான், நாம் எல்லாம் இன்றைக்கு ஒன்று கூடியிருக்கிறோம். குற்றவாளிகளை கைது செய்வதற்கும், விசாரணை மேற்கொள்ளவும் உங்கள் மாநிலத்திற்கு வருகை தரும் தமிழ்நாடு காவல்துறையினருக்கு உங்கள் ஒத்துழைப்பு மிகவும் தேவை. அதை வழங்குமாறு நான் கேட்டுக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.

    குறிப்பாக, தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் தமிழ்நாட்டிற்குள் வருவதை தடுக்க, தமிழ்நாடு காவல்துறையினரும், அண்டை மாநில காவல்துறையினரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.

    சமீபத்தில், கேரள காவல்துறையினர் கொடுத்த தகவலை வைத்து, நாமக்கல் மாவட்டத்தில், ஏ.டி.எம். பணத்தை கொள்ளையடிக்கும் கொடுங்கும்பலை தமிழ்நாடு காவல்துறையினர் வெற்றிகரமாக கைது செய்தார்கள். இந்தக் குற்றவாளிகள் கேரளாவில் வெவ்வேறு இடங்களில் ஏ.டி.எம் கொள்ளைச் சம்பவத்தை நடத்திக்கொண்டு, திருச்சூரில் இருந்து தப்பித்திருக்கிறார்கள். இந்த கும்பல் பல்வேறு மாநிலங்களிலும் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது. தமிழ்நாடு காவல்துறை உடனடியாக சம்பந்தப்பட்ட மாநிலங்களை உஷார்படுத்தியது.

    இந்த பாராட்டுக்குரிய பணியை இணைந்து நிறைவேற்றிய தமிழ்நாடு மற்றும் கேரள காவல்துறையினரை நான் இந்த நேரத்தில் வாழ்த்துகிறேன். இது போன்ற ஒருங்கிணைப்புகளை நாம் அனைவருக்குள்ளும் முன்னெடுப்பதுதான் இதுபோன்ற கூட்டங்களின் நோக்கம்!

    அண்மையில், பிற மாநிலங்களில் இருந்து கடத்தி வரப்படும் எரிசாராயத்தை வைத்து, சட்டவிரோதமாக போலி மதுபானம் தயாரிக்கும் ஆலையை தமிழ்நாடு காவல்துறையினர் கண்டு பிடித்தார்கள். இந்தச் சட்டவிரோத எரிசாராய கும்பல்கள் பெரும் அச்சுறுத்தல்களை ஏற்படுத்துகிறது. இத்தகைய தீங்கு விளைவிக்கும் பொருட்கள் மாநிலத்துக்குள்ளே நுழைவதை தடுக்க, மாநில எல்லைகளில் கடுமையான சோதனைகளை மேற்கொள்ள வேண்டியது அவசரத் தேவையாக இருக்கிறது.

    ஏ.என்.பி.ஆர். (தானியங்கி வாகன எண் கண்டறியும்) கேமராக்கள், அதிநவீன ஸ்கேனர்கள் போன்ற நவீன தொழில்நுட்பங்களை எல்லையில் உள்ள சோதனைச் சாவடிகளில் பயன்படுத்துவது மூலம், தடைசெய்யப்பட்ட பொருட்கள், ஏற்கெனவே, குற்றச்சம்பவங்களில் ஈடுபட்ட வாகனங்கள் மற்றும் குற்றவாளிகளை கண்டறியும் திறனை நாம் மேம்படுத்த இயலும். இணையவழி குற்றம் என்பது எந்தவித எல்லையும் இல்லாமல், சட்டத்தில் உள்ள ஓட்டைகளை பயன்படுத்தி, பெருகி வரக்கூடிய மிகவும் சிக்கலான ஒரு பிரச்சனை. புகார்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுப்பதில் நாட்டிலேயே தமிழ்நாடு இன்றைக்கு சிறப்பான வகையில் முதன்மை மாநிலமாக விளங்கிக் கொண்டிருக்கிறது.

    பெரும்பாலும், இணைய வழி குற்றவாளிகளை பிடிக்க ஒரு மாநிலத்தின் காவல்துறை மற்றொரு மாநிலத்துக்குச் செல்ல வேண்டிய நிலையில், அவர்கள் பல தடைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. ஆகவே, இணைய வழிக் குற்றங்களை தடுப்பதிலும் நாம் இணைந்து செயல்பட வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறோம்.

    2023-ம் ஆண்டில் மட்டும், 1,390 வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகள் பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்பதும், பலர் தமிழ்நாட்டுக்கு வெளியில் கைது செய்யப்பட்டிருப்பதும் நமக்குள்ளே ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறது. படித்து முடித்துவிட்டு, வெளிநாட்டில் வேலை தேடும் இளைஞர்களை குறிவைத்து, அவர்களை அடிமைகளாக, கணினிசார் குற்றங்களில் ஈடுபடுத்தும் பிரச்சனை தற்போது பெரிய அளவில் உருவெடுத்திருக்கிறது.

    சில தென்கிழக்கு நாடுகளை அடிப்படையாக வைத்து செயல்படும் குற்றவாளிகளின் பிடியில் சிக்கி, நம்முடைய இளைஞர்கள் பலர் மனரீதியாகவும், உடல் ரீதியாவும் துன்பத்திற்கு ஆளாகியிருக்கிறார்கள். இதுபோன்று வளர்ந்துவரும் அச்சுறுத்தல்களை போக்குவதற்கு நமக்குள்ளே இருக்கின்ற ஒருங்கிணைப்பை பலப்படுத்தவேண்டும்.

    பயங்கரவாதத்தை கையாளுதல் உள்ளிட்ட உள்நாட்டுப் பாதுகாப்பின் முக்கியக்கூறுகள் குறித்து விவாதிக்க, இந்த மன்றம் வழிவகுக்கிறது. எந்தவித பயங்கரவாதமாக இருந்தாலும், அவற்றைக் கட்டுப்படுத்தி தடுக்க, முழு ஒத்துழைப்பை யும், ஒருங்கிணைப்பையும் பலப்படுத்துமாறு இங்கே கூடியிருக்கின்ற மூத்த காவல்துறை அதிகாரிகளை நான் வலியுறுத்துகிறேன்.

    இன்றைக்கு சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு சமூகவலைதளங்களில் பரப்பப்படும் வதந்திகள் பெரும் பிரச்சனையாக இருந்து கொண்டிருக்கிறது. அவற்றின் மூலம் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் செயல்களை நாம் பார்க்க முடிகிறது. ஏன், தமிழ்நாட்டிலேயே அப்படியொரு முயற்சியை மேற்கொண்டு பொது அமைதியை சீர்குலைக்க முயன்றதை முளையிலேயே கிள்ளி எறியும் வகையில் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

    பல மாநிலங்களில் இருந்து வதந்தி பரப்பியவர்களை தேடிக் கண்டுபிடித்து, அவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்வது உள்ளிட்ட கடும் நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு எடுத்தது என்பதை நீங்கள் அனைவரும் கேள்விப்பட்டிருப்பீர்கள்.

    உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியே, "தமிழ்நாடு அமைதியான மாநிலம். அங்கே அமைதியின்மையை உருவாக்க ஏதாவது பரப்புவீர்களா" என்று யூடியூபர் ஒருவரது வழக்கில் சமூக வலைதளங்களின் பாதிப்பு பற்றி கடுமையாக சாடியதை இந்தநேரத்தில் நான் குறிப்பிட விரும்புகிறேன். ஆகவே, சமூக வலைதளங்களில் வரும் வதந்திகள் பற்றியும் நாம் மிகுந்த கண்காணிப்புடன் இருந்து ஒருங்கிணைந்து செயல்பட்டு நம் மாநில மக்களின் பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும். அதற்கான ஆலோசனைகளையும் இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.

    இந்த மாநாட்டை முன்னின்று நடத்தும் தமிழ் நாடு காவல்துறையானது, அனைத்து தளங்களிலும் சட்ட அமலாக்கத்திற்கு, குறிப்பாக போதைப் பொருட்கள், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள், மாநிலங்களுக்கிடையே செயல்படும் குற்றவாளி கும்பல்கள் மற்றும் கணினிசார் குற்றங்கள், சமூக வலைதள வதந்திகள் ஆகியவற்றின் மீதான தீவிர சட்ட நடவடிக்கைக்கு மாநிலங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பை உறுதிபடுத்துகின்ற வகையில், மற்ற மாநிலங்களுடன் ஒருங்கிணைந்து செயல்படும் பொறுப்பை ஏற்றிருக்கிறது.

    அத்தகைய பலமான ஒருங்கிணைப்பு மற்றும் தகவல் பரிமாற்றம் மூலம் எத்தகைய சட்டம் ஒழுங்கு, பொது அமைதி, உள்நாட்டு பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்தையும் சமாளித்து, நம் குடிமக்கள் அனைவரின் பாதுகாப்பையும் உறுதி செய்ய நாம் கடமையாற்றுவோம்! ஒருங்கிணைந்து செயலாற்றுவோம்!! போதைப்பொருட்களாக இருந்தாலும், குற்றங்களாக இருந்தாலும், இணையவழி குற்றங்களாக இருந்தாலும், அதை தடுக்க நம்முடன் ஒருங்கிணைந்த முயற்சிதான் தேவைப்படுகிறது. இவ்வாறு நாம் சேர்ந்து பணியாற்றுவதன் மூலம், நம்முடைய குடிமக்களின் பாதுகாப்பு மற்றும் நலன்களை காப்பதோடு, அனைவருக்கும் ஒரு பாதுகாப்பான எதிர்காலத்தையும், நம் மாநிலங்களின் முன்னேற்றத்தையும் உறுதி செய்யலாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

    • முதல்கட்டமாக தீபாவளி பண்டிகைக்கு முந்தைய நாள்களில் 7 சிறப்பு ரெயில்களை இயக்க தெற்கு ரெயில்வே ஒப்புதல் அளித்துள்ளது.
    • சென்னை எழும்பூரில் இருந்து வருகிற 30, நவம்பர் 2 ஆகிய தேதிகளில் செங்கோட்டைக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படும்.

    சென்னை:

    தீபாவளி பண்டிகை வருகிற 31-ந்தேதி கொண்டாடப்படவுள்ள நிலையில், தென் மாவட்டங்கள், கேரளா, வெளிமாநிலங்களுக்குச் செல்லும் அனைத்து விரைவு ரெயில்களிலும் முன்பதிவு நிறைவடைந்துள்ளது. குறிப்பாக முக்கிய வழித்தடத்தில் இயக்கப்படும் ரெயில்களில் அதிக அளவில் காத்திருப்போர் பட்டியல் காணப்படும் நிலையில் அங்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும்.

    இந்நிலையில், சென்னை சென்ட்ரல் மற்றும் எழும்பூரில் இருந்து வருகிற 29, 30 ஆகிய தேதிகளில் புறப்படும் அனைத்து ரெயில்களிலும் முன்பதிவு நிறைவடைந்துள்ளது. இந்த ரெயில்களில் மொத்தமாக 7000 வரை காத்திருப்போர் பட்டியல் உள்ளது. பயணிகள் வசதிக்காக வருகிற 25-ந்தேதி முதல் நவம்பர் 5-ந்தேதி வரையிலான காலகட்டத்தில் 40-க்கும் மேற்பட்ட சிறப்பு ரெயில்களை இயக்க தெற்கு ரெயில்வே திட்டமிட்டுள்ளது. இதற்கான பரிந்துரையும் அனுப்பப்பட்டுள்ளது.

    இதேபோன்று, சாத் பண்டிகையை முன்னிட்டு வருகிற 23-ந்தேதி முதல் தமிழகம் மற்றும் கேரளாவில் இருந்து புதுடெல்லி, அகமதாபாத்துக்கு வாரம் இருமுறை சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளன. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தெற்கு ரெயில்வேக்கு உட்பட வழித்தடங்களில் சிறப்பு ரெயில்களை இயக்க ரெயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

    அதன்படி, சென்னை சென்ட்ரல், எழும்பூரில் இருந்து திருநெல்வேலி, நாகா்கோவில், கோவை, திருவனந்தபுரம், மங்களூர், பெங்களூரு, மைசூா் உள்ளிட்ட நகரங்களுக்கு வருகிற 25-ந்தேதி முதல் சிறப்பு ரெயில்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    முதல்கட்டமாக தீபாவளி பண்டிகைக்கு முந்தைய நாள்களில் 7 சிறப்பு ரெயில்களை இயக்க தெற்கு ரெயில்வே ஒப்புதல் அளித்துள்ளது. இதில், சென்னை சென்ட்ரலில் இருந்து வருகிற 29, நவம்பர் 5-ந் தேதிகளில் நாகர்கோவிலுக்கும், வருகிற 29, நவம்பர் 2 ஆகிய தேதிகளில் கோவைக்கும், வருகிற 30, நவம்பர் 6 ஆகிய தேதிகளில் திருநெல்வேலிக்கும் சிறப்பு ரெயில் இயக்கப்படும்.

    சென்னை எழும்பூரில் இருந்து வருகிற 30, நவம்பர் 2 ஆகிய தேதிகளில் செங்கோட்டைக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படும். சென்னை சென்ட்ரலில் இருந்து மங்களூருக்கு நவம்பர் 2-ந் தேதி சிறப்பு ரெயில் இயக்கப்படும். கொச்சுவேலி-பெங்களூரு இடையே நவம்பர் 4-ந் தேதியும், நாகா்கோவில்-மைசூா் இடையே நவம்பர் 2-ந் தேதியும் சிறப்பு ரெயில் இயக்கப்படும்.

    இதேபோன்று, சென்னை, எா்ணாகுளத்தில் இருந்து புதுடெல்லி மற்றும் அகமதாபாத்துக்கு நவம்பர் 15-ந்தேதி வரை சிறப்பு ரெயில்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரபூா்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என ரெயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன.

    • துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு செய்கிறார்.
    • கள்ளக்குறிச்சி துருகம் சாலை, கச்சிராயப்பாளையம் சாலை உள்ளிட்ட இடங்களில் துப்புரவு பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சியில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்தும், நலத்திட்டங்கள் குறித்தும் ஆய்வு செய்வதற்காக தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று கள்ளக்குறிச்சிக்கு வருகிறார்.

    தொடர்ந்து மாலை 4 மணியளவில் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் அனைத்து துறை அதிகாரிகளுடனான ஆய்வு கூட்டம் நடைபெறுகிறது. இதில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு செய்கிறார்.

    இந்த நிலையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகையையொட்டி கலெக்டர் அலுவலகம் மட்டுமின்றி கள்ளக்குறிச்சி நகரம் முழுவதும் முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதாவது கலெக்டர் வளாகத்தை சுத்தம் செய்தல், நுழைவு வாயில் கதவுகளுக்கு வர்ணம் தீட்டுதல், சாலையை சீரமைத்தல், சாலை தடுப்பு கட்டைகளில் வர்ணம் தீட்டும் பணி உள்ளிட்ட பல்வேறு முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் கள்ளக்குறிச்சி துருகம் சாலை, கச்சிராயப்பாளையம் சாலை உள்ளிட்ட இடங்களில் துப்புரவு பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    துணை முதலமைச்சரான பின் கள்ளக்குறிச்சிக்கு முதல் முறையாக உதயநிதி ஸ்டாலின் வருவதால் அவருக்கு தி.மு.க. நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளிக்க உள்ளனர்.

    • பேச்சிப்பாறை அணையில் இருந்து திறக்கப்பட்ட உபரி நீர் 250 கனஅடியில் இருந்து 150 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.
    • 77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையில் 64.12 அடி நீர்மட்டம் உள்ளது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வந்தது. இந்த நிலையில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக குமரி கடல் பகுதியில் சீற்றம் ஏற்பட்டது. ராட்சத அலைகள் எழும்பி குடியிருப்புகளுக்குள் புகுந்தது.

    வானிலை மாற்றம் காரணமாக மாவட்டத்தில் பரவலாக மழை பெய்த நிலையில், மலையோர கிராமங்களில் கனமழை நீடித்தது. இதன் காரணமாக குமரி மாவட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனை தொடர்ந்து அணையில் இருந்து மதகுகள் வழியாக தண்ணீர் திறந்து விடப்பட் டது.

    இந்த நிலையில் மாவட்டத்தில் மழை நீடிக்கும் என்று கூறப்பட்டதால், அணையின் நீர்மட்டத்தை கருத்தில் கொண்டு அணைகளில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டது. பேச்சிப்பாறை அணையில் இருந்து 250 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டது. இதன் காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரை புரண்டோடியது.

    திற்பரப்பு அருவியிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் மாவட்டத்தில் எதிர்பார்த்தபடி மழை பெய்யவில்லை. மாம்பழத்துறையாறு பகுதியில் 10 மி.மீட்டர், ஆணைக்கிடங்கு பகுதியில் 9.6, முள்ளங்கினாவிளை 7.2, அடையாமடை 6.8 என மிதமான அளவிலேயே மழை பெய்துள்ளது. இதனால் அணைகளுக்கு வரும் நீரின் வரத்து குறைந்துள்ளது.

    இதனை தொடர்ந்து பேச்சிப்பாறை அணையில் இருந்து திறக்கப்பட்ட உபரி நீர் 250 கனஅடியில் இருந்து 150 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. மதகுகள் வழியாக 556 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. 48 அடி கொள்ளளவு கொண்ட அணையில் தற்போது நீர்மட்டம் 42.74 அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 278 கனஅடி தண்ணீர் வரத்து உள்ளது.

    77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையில் 64.12 அடி நீர்மட்டம் உள்ளது. அணைக்கு விநாடிக்கு 91 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. மதகுகள் வழியாக 160 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. 54.12 அடி கொள்ளளவு கொண்ட மாம்பழத்துறையாறு அணையின் நீர்மட்டம் 50.11 அடியாக உள்ளது. 18 அடி கொள்ளளவு கொண்ட சிற்றாறு1 மற்றும் 2 அணைகளில் 14.46 மற்றும் 14.56 அடி நீர்மட்டம் உள்ளது. 25 அடி கொண்ட முக்கடல் அணையில் 16.4 அடியாக நீர்மட்டம் உள் ளது.

    பேச்சிப்பாறை அணையில் இருந்து உபரிநீர் திறப்பு குறைக்கப்பட்டாலும் திற்பரப்பு அருவியில் தண்ணீர் அதிக அளவே கொட்டுகிறது. இதனால் இன்றும் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் விடுமுறை தினமான இன்று திற்பரப்பு வந்த பலரும் ஏமாற்றமடைந்தனர்.

    • வெள்ளி விலையும் அதிரடியாக உயர்ந்துள்ளது.
    • பார் வெள்ளி ஒரு லட்சத்து ஏழாயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது.

    சென்னை:

    சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் அவ்வப்போது மாற்றம் ஏற்பட்டு விற்பனையாகி வருகிறது. இந்த நிலையில், தங்கம் விலை இதுவரை இல்லாத அளவுக்கு தொடர்ந்து உயர்ந்துகொண்டே செல்கிறது.

    இந்த நிலையில், தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.640 அதிகரித்து விற்பனையான நிலையில் இன்றும் தங்கம் சவரனுக்கு ரூ.320 உயர்ந்துள்ளது. கிராமுக்கு 40 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.7,280-க்கும் சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ஒரு சவரன் ரூ.58,240-க்கு விற்பனையாகிறது.

    வெள்ளி விலையும் அதிரடியாக உயர்ந்துள்ளது. கிராமுக்கு 2 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ. 107-க்கும் கிலோவுக்கு இரண்டாயிரம் ரூபாய் உயர்ந்து பார் வெள்ளி ஒரு லட்சத்து ஏழாயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    18-10-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 57,920

    17-10-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 57,280

    16-10-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 57,120

    15-10-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 56,760

    14-10-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 56,960

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    18-10-2024- ஒரு கிராம் ரூ. 105

    17-10-2024- ஒரு கிராம் ரூ. 103

    16-10-2024- ஒரு கிராம் ரூ. 103

    15-10-2024- ஒரு பவுன் ரூ. 103

    14-10-2024- ஒரு கிராம் ரூ. 103

    • அரசு பள்ளிகளுக்கு வார விடுமுறை விடுக்கப்பட்ட நிலையில் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
    • கனமழை பெய்து வருவதை அடுத்து புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    விழுப்புரம்:

    மத்திய கிழக்கு அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து 2 நாளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடையும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இதையடுத்து தமிழகத்தில் சென்னை உள்பட பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.

    இந்நிலையில் கனமழை காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    அரசு பள்ளிகளுக்கு வார விடுமுறை விடுக்கப்பட்ட நிலையில் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    கனமழை பெய்து வருவதை அடுத்து புதுச்சேரியிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    • வங்கக்கடலில் 22-ந்தேதி உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி 24-ந்தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும்.
    • கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் இன்றும் நாளையும் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல தடை.

    இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

    மத்திய கிழக்கு அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து 2 நாளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடையும்.

    வங்கக்கடலில் 22-ந்தேதி உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி 24-ந்தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும்.

    இதனால் தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இன்று, நாளை, நாளை மறுநாள் மற்றும் அக்டோபர் 24-ந்தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

    கடல் சீற்றம் காரணமாக கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் இன்றும் நாளையும் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதால் ஆயிரக்கணக்கான பைபர் படகுகள் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    • கோவில் கும்பாபிஷேகத்தின்போது பழைய கலசமும், தங்க ஆபரணங்களும் பக்தர்களின் பார்வைக்காக வைக்கப்படவில்லை.
    • கோவிலின் பாதுகாப்பு அறையில் இருக்கும் நகைகளையும், கோர்ட்டில் சமர்ப்பித்த நகை பட்டியலையும் ஒப்பிட்டு சரிபார்க்க வேண்டும்.

    மதுரை:

    கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் பகுதியைச் சேர்ந்த தங்கப்பன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

    திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலுக்கு சொந்தமான சொத்துகளை பாதுகாக்க கோரி ஏராளமான வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு, பல்வேறு உத்தரவுகள் பெறப்பட்டு உள்ளன. இந்த கோவிலின் கலசத்தை பாதுகாக்கவும் ஐகோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால் கோவில் கும்பாபிஷேகத்தின்போது பழைய கலசமும், தங்க ஆபரணங்களும் பக்தர்களின் பார்வைக்காக வைக்கப்படவில்லை. அவை எங்கு இருக்கின்றன என்று தெரியவில்லை. இது தொடர்பாக கேள்வி எழுப்பியபோதும் முறையான பதிலை கோவில் நிர்வாகம் தெரிவிக்கவில்லை.

    எனவே திருவட்டார் ஆதிகேசவப் பெருமாள் கோவிலில் தங்க சிவலிங்கம், பஞ்சலோக சிலைகள், பழைய கலசம் மற்றும் தங்க நகைகள் உள்ளிட்டவைகளை ஏற்கனவே இருந்த இடத்தில் மீண்டும் வைத்து பாதுகாக்க உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

    இந்த மனு நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கவுரி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது கோவிலின் செயல் அலுவலர் ரத்தினவேல் நேரில் ஆஜரானார். கோவில் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

    அப்போது நீதிபதிகள், கோவிலின் நகைகள் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யுமாறு கடந்த ஆண்டு உத்தரவிடப்பட்டது. ஏன் தாமதம்? என கேள்வி எழுப்பினர்.

    பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

    இந்த கோர்ட்டு பலமுறை உத்தரவிட்டும் கோவில் நகைகள் விவரங்களுடன் கூடிய பட்டியலை அறநிலையத்துறை அதிகாரிகள் சமர்ப்பிக்கவில்லை. இதனால் கோவிலின் செயல் அலுவலர் நேரில் ஆஜராகும்படி உத்தரவிடப்பட்டது. அதன்பின்னர் அவசர அவசரமாக ஒரு குழு அமைத்து, நகைகளை சரிபார்த்ததாக பட்டியல் தயாரிக்கப்பட்டு இப்போது சமர்ப்பிக்கப்பட்டு இருக்கிறது.

    எனவே கோர்ட்டு உத்தரவை முறையாக நிறைவேற்றாத கோவில் செயல் அலுவலர் ரத்தினவேல் பாண்டியன் மீது துறை ரீதியான நடவடிக்கையை அறநிலையத் துறை கமிஷனர் எடுக்க வேண்டும்.

    மேலும், இந்த வழக்கில் அறநிலையத்துறை அதிகாரிகளின் நடவடிக்கை திருப்தி அளிக்கும் வகையில் இல்லை. எனவே கோவில் நகைகளை சரிபார்க்கவும், மாயமானதாக கூறப்படும் தங்க சிவலிங்கம் குறித்து விசாரணை நடத்தவும் ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி நியமிக்கப்படுகிறார்.

    அவர், கோவிலின் பாதுகாப்பு அறையில் இருக்கும் நகைகளையும், கோர்ட்டில் சமர்ப்பித்த நகை பட்டியலையும் ஒப்பிட்டு சரிபார்க்க வேண்டும். பத்மநாபபுரம் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வைக்கப்பட்டு இருக்கும் நகைகள் குறித்தும் விசாரித்து 3 மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். ஓய்வு பெற்ற நீதிபதிக்கு அறநிலையத்துறை அதிகாரிகள் அனைத்து உதவிகளையும், ஒத்துழைப்பையும் வழங்க வேண்டும்.

    இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    • 112 என்ற கட்டுப்பட்டு அறைக்கு செல்போனில் தொடர்பு கொண்டு உதவி கேட்டார்.
    • பவுன்ராஜ் அவரது செல்போனில் இருந்து இருப்பிட லொக்கேஷன் அனுப்பினார்.

    ஆலந்தூர்:

    சென்னையை அடுத்த சோழிங்கநல்லூர் பகுதியை சேர்ந்தவர் பவுன்ராஜ் (வயது 25). இவர் தனியார் நிறுவனத்தில் உணவு டெலிவரி செய்யும் வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு சுமார் 11.20 மணியளவில் துரைப்பாக்கம் வி.ஜி.பி. அவென்யூவில் உள்ள ஒரு வீட்டுக்கு உணவு டெலிவரி செய்வதற்காக மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார்.

    உணவு டெலிவரி செய்யும் இடத்திற்கு செல்ல செல்போனில் "கூகுல் மேப்" பார்த்தபடி சென்றார். இருள் சூழ்ந்திருந்த பகுதியை மேப் காட்டியதால் கண்மூடித்தனமாக சென்ற பவுன்ராஜ் அங்குள்ள சதுப்பு நில சேற்றில் மோட்டார் சைக்கிளுடன் சிக்கி கொண்டார்.

    சேற்றில் சிக்கிய பவுன்ராஜ் அதிலிருந்து மீள முடியாததால் கூச்சலிட்டார். அக்கம்பக்கத்தில் யாரும் இல்லாததால் பரிதவித்த அவர் 112 என்ற கட்டுப்பட்டு அறைக்கு செல்போனில் தொடர்பு கொண்டு உதவி கேட்டார். பின்னர் பவுன்ராஜ் செல்போன் எண்ணிற்கு அருகில் உள்ள துரைப்பாக்கம் தீயணைப்பு வீரர்கள் தொடர்பு கொண்டு எந்த பகுதியில் உள்ளீர்கள் என்று கேட்டனர்.

    பவுன்ராஜ் அவரது செல்போனில் இருந்து இருப்பிட லொக்கேஷன் அனுப்பினார். உடனே துரைப்பாக்கம் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று சேற்றில் சிக்கிக் கொண்டிருந்த வாலிபரையும் மோட்டார் சைக்கிளையும் மீட்டனர்.

    காப்பாற்ற யாரும் வராத நிலையில் மிகவும் அச்சத்தில் இருந்த நேரத்தில் விரைந்து வந்து மீட்ட தீயணைப்பு வீரர்களுக்கு கண்ணீர் மல்க பவுன்ராஜ் நன்றியை தெரிவித்தார். பின்னர் வாலிபருக்கு தண்ணீர் கொடுத்து சிறிது நேரம் இளைப்பாற வைத்து வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

    ×