search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    • நாமக்கல்ல் செலம்பகவுண்டர் பூங்காவில் முன்னாள் முதல்வர் கருணாநிதி முழு உருவச்சிலை அமைக்கப்பட்டுள்ளது.
    • இந்தச் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

    நாமக்கல்:

    அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, புதிய பஸ் நிலையம் திறப்பு, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுதல், புதிய திட்டப் பணிகளை தொடங்கி வைத்தல் ஆகிய நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை சென்னையில் இருந்து விமானத்தில் புறப்பட்டு சேலம் காமலாபுரம் விமான நிலையம் சென்றார். இதையடுத்து அங்கிருந்து காரில் நாமக்கல்லுக்கு சென்றார்.

    நாமக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட செலம்பகவுண்டர் பூங்காவில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் முழு உருவச்சிலை நிறுவப்பட்டுள்ளது.

    இந்நிலையில், நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் அமைக்கப்பட்டுள்ள அந்தச் சிலையை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

    • தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் அக்டோபர் 31-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது.
    • இதற்காக 4 நாட்கள் விடுமுறையும் அறிவிக்கப்பட்டது.

    சென்னை:

    தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் அக்டோபர் 31-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதற்காக 4 நாட்கள் விடுமுறையும் அறிவிக்கப்பட்டது.

    இதற்கிடையே, தமிழக அரசின் கீழ் இயங்கும் நிறுவனங்களின் ஊழியர்களுக்கு போனஸ் அறிவிக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், ரேஷன் கடை ஊழியர்களுக்கு 20 சதவீதம் போனஸ் வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

    டாஸ்மாக் நிறுவனத்தில் பணிபுரியும் சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு 20 சதவீத போனஸ் வழங்கப்பட உள்ளது என தமிழக அரசு நேற்று அறிவித்துள்ளது.

    • காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் மழை, புயல், வெள்ளம் ஏற்படவும் வாய்ப்புண்டு.
    • மக்களைப் பாதுகாக்க ஆக்கப்பூர்வமான, துரிதமான, முறையான, சரியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தற்போதைய வானிலை ஆய்வு மைய அறிவிப்புப்படி வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டு மாநிலத்தில் ஆங்காங்கே சில மாவட்டங்களில் மழையும், பல மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பிருக்கிறது. அதே போல காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் மழை, புயல், வெள்ளம் ஏற்படவும் வாய்ப்புண்டு.

    இந்நிலையில் தமிழக அரசு கடந்த ஆண்டுகளில் வடகிழக்குப் பருவமழைக் காலங்களில் பெய்த மழை, கனமழை, புயல், வெள்ளம் ஆகியவற்றையும் அதனால் மக்கள், கால்நடைகள், விளைநிலங்கள் அடைந்த பாதிப்புகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

    கடந்த கால மழைக் கால அனுபவங்களை, சிரமங்களை, பாதிப்புகளை மனதில் வைத்து தமிழக அரசு சென்னை உட்பட மாநிலத்தில்மழை வெள்ளப் புயலால் பாதிக்கும் மாவட்ட மக்களைப் பாதுகாக்க ஆக்கப்பூர்வமான, துரிதமான, முறையான, சரியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • மருத்துகள் கையிருப்பில் உள்ளது குறித்தும் ஆய்வினை மேற்கொண்டார்.
    • அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.

    சென்னை:

    தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வெ.கணேசன் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 7 மணியளவில் சென்னை, பல்லாவரம் இ.எஸ்.ஐ மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் திடீர் ஆய்வு செய்தார்.

    இந்த மருத்துவமனையில் சுமார் 68,000 காப்பாளர்கள் உள்ளனர். அப்போது மருத்துவமனைக்கு வந்திருந்த வெளிநோயாளிகளிடம் அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.

    மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் உரிய நேரத்தில் வருகிறார்களா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

    மேலும், மருந்தகத்தில் போதுமான அளவில் மருத்துகள் கையிருப்பில் உள்ளது குறித்தும் ஆய்வினை மேற்கொண்டார்.

    இந்த ஆய்வின் போது இ.எஸ்.ஐ மருத்துவமனைகளின் இயக்குனர் டாக்டர் இளங்கோ மகேஸ்வரன், டாக்டர்கள் மற்றும் பணியாளர்கள் உடன் இருந்தனர்.

    • ரெயில் விபத்துக்கு காரணம் தொழில் நுட்ப கோளாறா? அல்லது நாசவேலையா? மனித தவறா? என பல்வேறு கோணங்களில் புலன் விசாரணை நடந்தது.
    • தண்டவாளத்தில் உள்ள உதிரி பாகங்கள் கழன்று கிடந்ததால் மனிதர்கள் தான் இந்த செயலில் ஈடுபட்டு இருக்கக்கூடும் என்று கருதப்படுகிறது.

    சென்னை:

    சென்னையை அடுத்த கவரப்பேட்டை ரெயில் நிலையத்தில் கடந்த 11-ந்தேதி சரக்கு ரெயில் மீது மைசூரு ரெயில் மோதியதில் 12 பெட்டிகள் தடம் புரண்டன. இந்த விபத்தில் உயிர் இழப்பு எதுவும் இல்லாமல் பயணிகள் அதிஷ்டவசமாக உயிர் தப்பினார்கள்.

    ரெயில் விபத்து நடந்த இடத்தில் ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் மற்றும் உயர் அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

    விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது. கொருக்குப்பேட்டை ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடந்து வருகிறது.

    ரெயில் விபத்துக்கு காரணம் தொழில் நுட்ப கோளாறா? அல்லது நாசவேலையா? மனித தவறா? என பல்வேறு கோணங்களில் புலன் விசாரணை நடந்தது. நிலைய மேலாளர், நிலைய அதிகாரி உள்ளிட்ட 21 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டு விசாரணைக்கு அழைக்கப்பட்டனர்.

    கடந்த ஒரு வாரமாக சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் விசாரித்தனர். இன்று கவரப்பேட்டை நிலைய மேலாளர், கொடி அசைப்பவர், கேட் கீப்பர், நிலைய கண்காணிப்பாளர் ஆகிய 4 பேரிடம் விசாரணை நடந்தது.

    மெக்கானிக்கல், சிவில், ஒர்க்ஸ், சிக்னல், போக்குவரத்து இயக்கம், வணிகம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் பணிபுரியும் ஊழியர்கள், அதிகாரிகளிடம் விசாரணை நடந்து வருகிறது.

    ரெயில் பாதை கண்காணிப்பாளர், ரெயில் டிரைவர், சிக்னல் பிரிவு ஊழியர்களிடம் விசாரணை நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. நேரடியாகவும் ரகசியமாகவும் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. சி.சி.டி.வி. கேமரா, போன் அழைப்பு போன்றவற்றை ஆய்வு செய்து வருகின்றனர்.

    சென்னை சென்ட்ரல், எழும்பூர், சேலம் ரெயில்வே போலீஸ் துணை சூப்பிரண்டுகள் தனித்தனியாக ஊழியர்களிடமும், துறை சார்ந்த விசாரணை நடத்தி வருகிறார்கள். சம்பவம் நடந்த இடத்தின் சுற்றுச்சூழல், நேரடியாக பாார்த்தவர்கள், அறிவியல் சார்ந்த சாட்சி, எக்ஸ்பேர்ட்ஸ் சாட்சி என பல்வேறு கட்டங்களாக விசாரணை நடந்து வருகிறது.

    ரெயில் விபத்து நடந்ததை தொடர்ந்து ரெயில் நிலையங்களை ஒட்டிய பகுதியில் உள்ள உள்ளூர் போலீசார் ரெயில் பாதையை கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். ரெயில்வே பாதுகாப்பு படையும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறது.

    இது தவிர அரசு ரெயில்வே போலீசாரும் ரெயில் நிலையம் மற்றும் பாதைகளை கண்காணித்து விபத்து தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    ரெயில் விபத்தை ஏற்படுத்தி நாசவேலையில் ஈடுபட்டது யார்? தண்டவாளத்தில் உள்ள உதிரி பாகங்கள் கழன்று கிடந்ததால் மனிதர்கள் தான் இந்த செயலில் ஈடுபட்டு இருக்கக்கூடும் என்று கருதப்படுகிறது. அதன் அடிப்படையில் விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.

    • தமிழகம் போதைப் பொருட்கள் கடத்தலின் கேந்திரமாக விளங்குவது வருத்தமளிக்கிறது.
    • போதைப்பொருள் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்று தமிழக மக்களை ஸ்டாலின் ஏமாற்றி வருகிறார்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    சென்னையில் கடந்த 19-ந்தேதி அன்று நடைபெற்ற தென் மாநிலங்களுக்கு இடை யேயான சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பு, நீர் மேலாண்மை குறித்த மாநாட்டில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், தமிழகத்தில் கஞ்சா பயிரிடுவது தடுக்கப்பட்டுள்ளது என்று பெருமை பேசி உள்ளார்.

    ஆனால், அக்கூட்டத்தில் கலந்துகொண்ட தென் மாநிலங்களின் டி.ஜி.பி.க்களிடம், அவர்களது மாநிலங்களின் வழியாக தமிழகத்திற்கு கடத்தப்படும் கஞ்சா மற்றும் போதைப் பொருட்களை தடுப்பதற்குத் தக்க நடவடிக்கைகளை எடுங்கள் என்ற வேண்டுகோளைக்கூட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தவில்லை.

    தமிழகம் முழுவதும் ஆண்டுதோறும் எத்தனை ஆயிரம் ஏக்கரில் கஞ்சா செடி பயிரிடப்பட்டு வந்தது? இதில் எந்த அளவு குறைக்கப்பட்டது அல்லது எப்படி முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்ற முழு விவரங்களையும் ஸ்டாலின் தெரிவிக்கத் தயாரா?

    மக்களை ஏமாற்றுவதற்கும் ஒரு அளவு உண்டு! வெளி மாநிலங்களில் இருந்து தங்கு தடையின்றி கஞ்சா தமிழகத்திற்கு கடத்தி வரப்படுகிறது. இதுபற்றி பத்திரிகைகள் மற்றும் ஊடகங்களில் செய்திகள் வராத நாளே இல்லை. பள்ளி, கல்லூரிகளுக்கு அருகில் மாணவர்கள் மற்றும் இளைஞர்களை குறிவைத்து கஞ்சா, மெத்தபெட்டமைன் போன்ற பல்வேறு போதைப் பொருட்கள் விற்பனையும், குறிப்பாக அரசின் வீட்டு வசதி வாரியக் குடியிருப்புகளில் கனஜோராக கஞ்சா விற்பனையும் நடைபெற்று வருவதாகச் செய்திகள் வருகின்றன.

    கோகைன், மெத்தபெட்டமைன், போதை மாத்திரைகள் உட்பட பலவகைப்பட்ட போதைப் பொருட்கள் தமிழகம் வாயிலாக வெளி நாடுகளுக்கு கடத்தப்படுவதாகச் செய்திகள் வந்த வண்ணம் உள்ளது. தமிழகம் போதைப் பொருட்கள் கடத்தலின் கேந்திரமாக விளங்குவது வருத்தமளிக்கிறது.

    இதுபோன்ற சட்டவிரோதச் செயல்களை இந்த திராவக மாடல் அரசு கைகட்டி வேடிக்கை பார்க்கிறது. மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் போதைப்பொருட்கள் கடத்தலைத் தடுத்து, பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான போதை மருந்துகளை பறிமுதல் செய்வதாகச் செய்திகள் வருகின்றன. இதுபோன்ற கடத்தல்களில், தி.மு.க.வின் அயலக அணி நிர்வாகியாக இருந்து கைதான ஜாபர் சாதிக்கின் கூட்டாளிகள் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகவும் செய்திகள் வருகின்றன.

    சமீபத்தில் காவல்துறை டி.ஜி.பி., தமிழகத்தில் போதைப்பொருள் பிடிபட்ட விவரங்களை வெளியிட்டிருக்கிறார். அதில் 2021-ம் ஆண்டு முதல் ஆகஸ்ட் 2024 வரை ஆண்டு வாரியாக போதைப்பொருள் பிடிபட்ட விவரங்களை வெளியிட்டு உள்ளார்.

    அதன்படி, பல கோடி ரூபாய் மதிப்புள்ள மெத்தபெட்டமைன் 2021-ம் ஆண்டு 4 கிலோ பிடிபட்ட நிலையில், 2023-ஆம் ஆண்டு 26 கிலோவிற்கு மேல் பிடிபட்டுள்ளதாகவும், இதுவரை கேள்விப்படாத மெத்தகுவலான் என்ற போதைப் பொருள் 2023-ம் ஆண்டு 8 கிலோ பிடிபட்டுள்ளதாகவும், ஹசீஸ் என்ற போதைப் பொருள் 2024-ம் ஆண்டு ஆகஸ்ட் வரை 77 கிலோ பிடிபட்டுள்ளதாகவும், போதை மாத்திரைகள் சுமார் 36,500 பிடிபட்டு உள்ளதாகவும் டி.ஜி.பி. தெரிவித்துள்ளார்.

    தி.மு.க. அரசு ஆட்சிப் பொறுப்பேற்றது முதல், தமிழ் நாட்டில் போதைப்பொருள் நடமாட்டம் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவதை காவல்துறை தலைமை இயக்குநரே, தனது அறிக்கையில் ஒத்துக்கொண்டுள்ளார்.

    இதனை மறந்த நிர்வாகத் திறமையற்ற ஸ்டாலின் எந்தவித குற்ற உணர்வும் இன்றி, தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்ற பொய் மூட்டைகளை கட்டவிழ்த்துவிட்டு, தமிழக மக்களை ஏமாற்றி வருகிறார்.

    கனவு கலைந்து நிஜ உலகிற்கு வரும்போது, இந்த ஆட்சியில் பாதிக்கப்பட்ட மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள். இனியாவது தமிழக காவல் துறைக்கு முழு சுதந்திரம் வழங்கி போதையில்லா தமிழகத்தை உருவாக்க ஸ்டாலினின் தி.மு.க. அரசை வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • நிறைய இடங்களில் பந்தல் அமைக்கப்பட்டு பொதுமக்கள் தெரிவிக்கும் புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
    • சென்னை நகரில் மெட்ரோ உள்ளிட்ட வளர்ச்சிப் பணிகள் நடப்பதால் போக்குவரத்து நெரிசல் உள்ளது.

    சென்னை:

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புத்தாடை உள்ளிட்ட பொருட்களை வாங்க மக்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். குறிப்பாக தி.நகர், புரசைவாக்கம் ஆகிய இடங்களில் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது.

    இந்த நிலையில் தி.நகரில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை சென்னை போலீஸ் கமிஷனர் அருண் இன்று ஆய்வு செய்தார். அங்கு அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் கண்காணிப்பு கோபுரங்களை பார்வையிட்டார். மேலும் தி.நகரில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டது. பின்னர் சென்னை போலீஸ் கமிஷனர் அருண் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கிறது. மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. தி.நகரில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டு உள்ளது.

    ரெங்கநாதன் தெருவை சுற்றிலும் 64 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. 7 கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் தொலைந்து போவதை தடுக்க அவர்களின் கைகளில் டேக் (அடையாள அட்டை) கட்டப்படுகிறது. இதன் மூலம் குழந்தைகளை சீக்கிரமாக கண்டுபிடிக்க முடியும்.

    நிறைய இடங்களில் பந்தல் அமைக்கப்பட்டு பொதுமக்கள் தெரிவிக்கும் புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தீபாவளி பண்டிகையை மக்கள் சிறப்பாக கொண்டாடுவதற்கு காவல்துறை சார்பில் என்னென்ன நடவடிக்கைகள் எடுக்க முடியுமோ அவை அனைத்தையும் எடுத்துள்ளோம்.

    தி.நகரில் பொருத்தப்பட்டுள்ள 64 கண்காணிப்பு கேமராக்களில் முகம் கண்டறியும் வசதி இணைக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் கூட்டத்தில் குற்றவாளி இருந்தால் அவர்களை கண்டுபிடிக்க முடியும்.

    பழைய குற்றவாளிகளின் புகைப்படம் உள்ளிட்ட விவரங்கள் எங்களிடம் இருக்கிறது. அதனுடன் ஒப்பிட்டு தி.நகரில் கூட்டத்தில் குற்றவாளிகள் இருப்பதை கண்டு பிடித்து உடனே எச்சரிக்கை தகவல் அனுப்பப்படும்.

    தாம்பரம் மற்றும் கிளாம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் பஸ் நிலையங்கள் உள்ளதால் கோயம்பேட்டில் போக்குவரத்து நெரிசல் குறைந்துள்ளது. சென்னை நகரில் மெட்ரோ உள்ளிட்ட வளர்ச்சிப் பணிகள் நடப்பதால் போக்குவரத்து நெரிசல் உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • முதலாவது மாநில மாநாடு நடத்தும் தமிழக வெற்றிக்கழகத்தின் மாநாடு வெற்றி பெற என்னுடைய வாழ்த்துகள்.
    • யார் போராட்டம் நடத்தினாலும் முறையாக நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் கொங்கணாபுரத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கேள்வி: தி.மு.க. அமைச்சர் மீது 400 கோடி ரூபாய் ஊழல் புகார் வெளியாகி இருப்பது குறித்து?

    பதில்: முழுமையாக இந்த விபரம் பற்றி தெரியவில்லை. எந்த அமைச்சர்? எந்த துறை? என்ன மாதிரி ஊழல் என தெரிந்தால் தான் அது பற்றி சொல்ல முடியும்.

    தி.மு.க. ஆட்சியில் ஒரு துறையில் மட்டுமல்ல பெருபான்மையான துறைகளில் அமைச்சர்கள் மிகப்பெரிய ஊழல் செய்கின்றனர். 2026-ல் அ.தி.மு.க. ஆட்சி அமைந்த பிறகு எந்த எந்த துறைகளில் எல்லாம் ஊழல் நடந்திருக்கிறது என கண்டுபிடித்து வெளிச்சத்துக்கு கொண்டுவரப்படும்.

    கே: சென்னையில் வெள்ளம் நிவாரணம் குறித்த வெள்ளை அறிக்கை கேட்டு இருப்பது பற்றி?

    ப: ஏற்கனவே இது பற்றி நான் சொல்லிவிட்டேன். வெள்ள நிவாரணம் குறித்து நாட்டு மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அ.தி.மு.க. ஆட்சியில் என்ன என்ன நடவடிக்கை எடுத்தோம் என்பது குறித்து தெளிவாக அறிக்கை வெளியிட்டோம். சென்னையில் வெள்ள நீர் வேகமாக வடிந்தது. வேகமாக வெளியேற்றப்பட்டது. ஆனால் தி.மு.க. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசாங்கம் கொஞ்சம் மழைக்கே தாக்குபிடிக்கவில்லை.

    கே: தி.மு.க. கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரை முதலமைச்சராக்க வேண்டும் என எழுந்துள்ள கோரிக்கை குறித்து?

    ப: தி.மு.க. கூட்டணி இன்றைக்கு வலிமையாக இருக்கிறது என்று சொல்கிறார்கள். இப்போது கம்யூனிஸ்ட்டு கட்சி என்னவாயிற்று? கூட்டணியில் புகைச்சல் ஆரம்பித்து விட்டது. அதுபோல் காங்கிரசில் இருக்கிற திருச்சி வேலுசாமி, தி.மு.க.வினர் போற்றுதலுக்குரிய பெருந்தலைவர் காமராஜர் பற்றி பேசும்போது இப்படியே தொடர்ந்தால் நாங்களும் பேசுவோம் என எச்சரிக்கை மணி அடித்திருக்கிறார். இதேபோல விடுதலை சிறுத்தைகள் கட்சியும் தி.மு.க.விடம் கோரிக்கை வைத்து எச்சரிக்கை மணி அடித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த கூட்டணி இருக்குமா? இல்லையா? என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

    சட்டமன்றத் தேர்தலுக்காக சிறப்பான கூட்டணி அ.தி.மு.க. அமைக்கும். பெரும்பான்மை இடத்தில் வெற்றி பெறுவோம். நடிகர் விஜய் திரை உலகில் முன்னணி நடிகராக விளங்கி வருகிறார். மக்களுக்கு விஜய்யும் பொதுசேவை செய்ய வேண்டும் என்று விரும்புகிறார் அதன் விருப்பத்தில் கட்சி தொடங்கியுள்ளார். முதலாவது மாநில மாநாடு நடத்தும் தமிழக வெற்றிக்கழகத்தின் மாநாடு வெற்றி பெற என்னுடைய வாழ்த்துகள்.

    அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் 36ஆயிரம் போராட்டங்கள் நடைபெற்றது. யார் போராட்டம் நடத்தினாலும் முறையாக நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டது. எதிர்க்கட்சி மட்டுமில்லாமல் மற்ற கட்சிகளுக்கும் அனுமதி கொடுப்பதில்லை.

    ஒவ்வொரு அரசியல் கட்சியும் கனவு கண்டு கொண்டிருக்கிறது எல்லா அரசியல் கட்சிகளும் ஆட்சிக்கு வர வேண்டும் என்று தான் அனைவரின் விருப்பம். யார் ஆட்சிக்கு வர வேண்டும் என்பது மக்களுடைய கையில் தான் உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வேளச்சேரி பகுதியில் உள்ள மக்கள் தங்களது கார்களை பாதுகாப்பாக மேம்பாலத்தில் நிறுத்தி இருந்தனர்.
    • புதிதாக இடம் வாங்குபவர்கள் அந்தந்த பகுதிகளுக்கு சென்று இங்கு தண்ணீர் தேங்குமா? என்று அடுத்தவர்களிடம் கேட்பது வழக்கம்.

    சென்னை:

    சென்னையில் ஒவ்வொரு பருவமழையின் போதும் பல பகுதிகள் வெள்ளத்தில் மிதப்பது வாடிக்கையாக உள்ளது. சென்னை மாநகரம் மட்டுமின்றி புறநகர் பகுதிகளிலும் வெள்ளம் தேங்குவதும் அதை மக்கள் எதிர்கொள்வதும் தொடர்கதையாகவே உள்ளது.

    கடந்த வாரம் மழை வந்தபோது சென்னையில் 20 செ.மீ. அளவுக்கு மழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்ததால், வேளச்சேரி பகுதியில் உள்ள மக்கள் தங்களது கார்களை பாதுகாப்பாக மேம்பாலத்தில் நிறுத்தி இருந்தனர்.

    ஏனென்றால் அவர்கள் வசிக்கும் வீடுகளில் முட்டளவுக்கு மேல் தண்ணீர் தேங்கும் என்பதால் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொண்டனர்.

    இதேபோல் பல பகுதிகளிலும் மக்கள் தங்களது உடைமைகளை பாதுகாப்பாக வைக்க தொடங்கினார்கள்.

    இதை கருத்தில் கொண்டு மழை காலங்களில் எந்தெந்த பகுதிகளில் எவ்வளவு மழைநீர் தேங்கும் என்பதை மக்கள் தெரிந்து கொள்ள சென்னை சி.எம்.டி.ஏ. இப்போது புதிதாக வரைபடம் தயாரித்துள்ளது. இதற்கு அரசு அனுமதி அளித்ததும் மாநகராட்சிக்கு வரைபடம் வழங்கப்படும்.

    சென்னை சி.எம்.டி.ஏ.வின் பழைய எல்லைக்குட்பட்ட அதாவது, சென்னை, ஆவடி, தாம்பரம் மாநகராட்சி பகுதிகளை உள்ளடக்கிய 1189 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுக்கான பகுதிகளில் (வண்டலூர் வரை) புதிதாக யாரேனும் வீடு கட்ட மாநகராட்சியில் விண்ணப்பிக்கும்போது அவர்களுக்கு இந்த வரைபடம் காண்பிக்கப்படும். அந்த பகுதியில் எவ்வளவு தண்ணீர் தேங்கும் என்ற விவரங்களை தெரிவித்து அதிகாரிகள் ஆலோசனை வழங்குவார்கள்.

    2 அடி தண்ணீர் தேங்குமா? அல்லது 5 அடி தண்ணீர் தேங்குமா? 10 அடிக்கு தண்ணீர் நிற்குமா? போன்ற விவரங்களின் அடிப்படையில் அதற்கேற்ப கட்டுமானங்களை மேற்கொள்ள தேவையான தகவலை கொடுப்பார்கள்.

    இதன் மூலம் பொதுமக்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் வீடு கட்ட முடியும். புதிதாக இடம் வாங்குபவர்கள் அந்தந்த பகுதிகளுக்கு சென்று இங்கு தண்ணீர் தேங்குமா? என்று அடுத்தவர்களிடம் கேட்பது வழக்கம்.

    ஆனால் இப்போது சி.எம்.டி.ஏ. வரைபடம் (மேப்) தயாரித்துள்ளதால் அதனை பார்த்து தண்ணீர் தேங்கும் பகுதிகளை மக்கள் தெரிந்து கொண்டு அதற்கேற்ப முடிவெடுக்க வாய்ப்பு உருவாக்கப்பட்டு உள்ளது. விரைவில் இது நடைமுறைக்கு வரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • சென்னையில் 2 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
    • வெடிகுண்டு மோப்ப நாய் மற்றும் நிபுணர்களுடன் ஓட்டலில் சோதனை நடத்தப்பட்டது.

    சென்னை:

    சென்னையில் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் சம்பவம் நடப்பது வழக்கம். ஆனால் இப்போது நட்சத்திர ஓட்டல் ஒன்றுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள மசூதிக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது.

    சென்னையில் 2 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. தி.நகரில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலுக்கு இ-மெயில் மூலம் மிரட்டல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து ஓட்டல் நிர்வாகத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    வெடிகுண்டு மோப்ப நாய் மற்றும் நிபுணர்களுடன் ஓட்டலில் சோதனை நடத்தப்பட்டது.

    இதேபோல் ஆயிரம் விளக்கில் உள்ள 'சியா' மசூதிக்கு இன்று 4-வது முறையாக மிரட்டல் வந்தது. இதைத் தொடர்ந்து மசூதி நிர்வாகிகள் போலீசாருக்கு கொடுத்த தகவலை அடுத்து அங்கு வெடிகுண்டு சோதனை நடந்தது. சோதனை முடிவில் அவை புரளி என தெரிய வந்தது. ஆனாலும் மின்னஞ்சல் வந்த முகவரியின் அடிப்படையில் விசாரணை நடக்கிறது.

    • சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்கு இன்றைய கட்டணம் ரூ.585 முதல் ரூ.1,200 வரைதான்.
    • அனைத்து நகரங்களுக்கும் வழக்கத்தைவிட 3 மடங்கு மேல் கட்டணத்தை உயர்த்தி இருக்கிறார்கள்.

    சென்னை:

    தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒருவாரமே உள்ளது. பண்டிகையை கொண்டாட சென்னையில் இருந்து 10 லட்சம் பேர் வரை சொந்த ஊர்களுக்கு செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    அவ்வாறு வெளியூர் செல்லும் பொதுமக்கள் சிரமமில்லாமல் சென்று திரும்ப போக்குவரத்துக்காக விரிவான ஏற்பாடுகளை அரசு செய்து வருகிறது.

    வருகிற 28-ந்தேதி (திங்கள்) முதல் 30-ந்தேதி (புதன்) வரை சென்னையில் இருந்து தமிழகத்தின் பல்வேறு ஊர்களுக்கும் 11 ஆயிரத்து 200 அரசு விரைவு போக்குவரத்துக் கழக பஸ்கள் இயக்கப்படுகிறது. இந்த பஸ்களுக்கான முன்பதிவு தொடங்கி உள்ளது.

    28 சிறப்பு ரெயில்களையும் தென்னக ரெயில்வே அறிவித்துள்ளது. இந்த ரெயில்கள் அனைத்திலும் முன்பதிவு டிக்கெட் விற்று தீர்ந்துவிட்டது. அரசு பஸ்கள் மட்டுமின்றி தனியார் ஆம்னி பஸ்களும் அதிக அளவில் இயக்கப்படுகிறது. பண்டிகை காலத்தை பயன்படுத்தி ஆம்னி பஸ்களில் மூன்று மடங்குக்கு மேல் கட்டணம் வசூலிப்பது வழக்கம்.

    அவ்வாறு கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பஸ்கள் பறிமுதல் செய்யப்படும். உரிமம் ரத்து செய்யப்படும் என்று அரசும் எச்சரிக்கும். ஆனாலும் இந்த கட்டண உயர்வு பண்டிகை காலங்களில் தடுக்க முடியாததாகவே இருக்கிறது.

    வழக்கம் போல் இந்த ஆண்டும் ஆம்னி பஸ்களில் கட்டணம் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. ஆம்னி பஸ்களுக்கு டிக்கெட் முன்பதிவு செய்பவர்கள் 'ரெட் பஸ்' என்ற இணைய தளம் வழியாகத்தான் பெரும்பாலும் முன்பதிவு செய்கிறார்கள்.

    சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்கு இன்றைய கட்டணம் ரூ.585 முதல் ரூ.1,200 வரைதான். ஆனால் 29-ந்தேதி ரூ.2,110 முதல் ரூ.4,350 வரை. இதேபோல் கோவைக்கு ரூ.800 முதல் ரூ.1,040தான். ஆனால் 29-ந்தேதி ரூ.1,800 முதல் ரூ.3,470 வரை நிர்ணயித்துள்ளார்கள். இதே போல் தான் மதுரை, திருச்சி, ஈரோடு, சேலம், திண்டுக்கல் உள்பட அனைத்து நகரங்களுக்கும் வழக்கத்தைவிட 3 மடங்கு மேல் கட்டணத்தை உயர்த்தி இருக்கிறார்கள்.

    இந்த கட்டண உயர்வை ஏன் கட்டுப்படுத்த முடியவில்லை என்பது பற்றி புக்கிங் ஏஜெண்ட் ஒருவர் கூறியதாவது:-

    அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் சொன்னாலும் பஸ் உரிமையாளர் தரப்பில் இணையதள நிறுவனத்துக்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்று கூறி நழுவி விடுவார்கள். ஆனால், உண்மையில் இணைய தள நிறுவனத்துக்கு பஸ் உரிமையாளர்கள் கொடுப்பது 10 சதவீத கமிஷன் மட்டும்தான். எனவே ஆதாரத்துடன் கட்டண உயர்வை நிரூபித்து நடவடிக்கை எடுப்பது சிரமம் தான் என்றனர்.

    டிக்கெட்டுக்கு அலைமோதுவது, கிடைத்தாலும் அதிக கட்டணம் கொடுக்க வேண்டியிருப்பது போன்ற சிரமங்களால் பொதுமக்களும் தங்கள் பயணத் திட்டங்கள் பற்றி மாற்றி யோசிக்க தொடங்கி இருக்கிறார்கள்.

    நண்பர்கள் சேர்ந்து வாடகைக்கு கார்களை அமர்த்தி ஊர்களுக்கு செல்வது ஒவ்வொரு வருடமும் அதிகரித்து வருகிறது. இதுபற்றி டெம்போ வேன்கள் இயக்கும் ஒருவர் கூறியதாவது:-

    இங்கிருந்து நாகர்கோவில் வரை செல்ல ரூ.30 ஆயிரம் தான் வாடகை. 14 பேர் பயணிக்கலாம். இவர்கள் ஆம்னி பஸ்களில் சென்றால் 40 ஆயிரம் வரை கொடுக்க வேண்டியிருக்கும்.

    மேலும் ஊருக்கு சென்ற பிறகும் ஒரு நாள் வாடகை ரூ.2,400 கொடுத்தால் வேனை தங்கள் வசம் வைத்து கொண்டு அங்குள்ள இடங்களையும் சுற்றிப் பார்க்க முடியும். பின்னர் பண்டிகை முடிந்து ஊர் திரும்பலாம். இந்த ஆண்டு ஏராளமான வேன்கள் முன்பதிவு செய்யப்படுகிறது என்றார்.

    அதிலும் இப்போது 'ரெண்டல் கார்' வசதி பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. அதாவது சாதாரண கார்கள் முதல் சொகுசு கார்கள் வரை கிடைக்கிறது. பயணம் செய்பவர்கள் எண்ணிக்கையை பொறுத்து எந்த ரக கார் வேண்டுமோ அதை எடுத்துக் கொள்ள முடியும்.

    ஒரு நாள் வாடகை ரூ.1,800 முதல் ரூ.5 ஆயிரம் வரை கார்களை பொறுத்து வசூலிக்கிறார்கள். டிரைவிங் லைசென்ஸ், பாஸ்போர்ட், பணி செய்யும் நிறுவனத்தின் அடையாள அட்டை போன்ற மூன்று முக்கிய ஆவணங்களின் ஒரிஜினலை கொடுத்துவிட்டு காரை எடுத்து ஓட்டி செல்லலாம். இது நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

    கார் ஓட்ட தெரிந்தவர்கள் சொகுசான, வசதியான பயணத்துக்காக இந்த மாதிரி கார்களை முன்பதிவு செய்கிறார்கள். தீபாவளி பண்டிகைக்கு மட்டும் 500-க்கும் மேற்பட்ட கார்கள் முன்பதிவு செய்யப்பட்டு இருப்பதாக இதை நடத்தும் தனியார் நிறுவனத்தினர் கூறினார்கள்.

    • கொடைக்கானலில் இருந்து காரில் புறப்பட்டு மதுரை சென்று அங்கிருந்து விமானம் மூலம் சென்னை செல்கிறார்.
    • கவர்னர் வருகையை முன்னிட்டு 400க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    கொடைக்கானல்:

    மதுரை காமராஜர் பல்கலைக்கழக 56-வது பட்டமளிப்பு விழா இன்று மதியம் நடக்கிறது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக கவர்னர் ஆர்.என்.ரவி விமானம் மூலம் சென்னையில் இருந்து மதுரை வந்தார். பின்னர் கார் மூலம் காமராஜர் பல்கலைக்கழகம் சென்ற அவர் மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்குகிறார். நிகழ்ச்சி முடிந்ததும் கார் மூலம் இன்று மாலை கொடைக்கானலுக்கு வருகை தருகிறார்.

    இன்று இரவு கொடைக்கானலில் உள்ள தனியார் விடுதியில் தங்கி ஓய்வெடுக்கும் ஆர்.என்.ரவி நாளை காலை சங்கரா பள்ளியில் மாணவ-மாணவிகளுடன் கலந்துரையாடுகிறார். அதன் பின் நாளை காலை 11 மணிக்கு கொடைக்கானல் அட்டுவம்பட்டியில் உள்ள அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் 31-வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு மாணவிகளுக்கு பட்டங்களை வழங்குகிறார்.

    அதன் பின் பிற்பகல் 3 மணிக்கு கொடைக்கானலில் இருந்து காரில் புறப்பட்டு மதுரை சென்று அங்கிருந்து விமானம் மூலம் சென்னை செல்கிறார். பட்டமளிப்பு விழாவில் உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன், டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக துணைவேந்தர் சாந்தி ஸ்ரீ துளிப்புடி பண்டிட் ஆகியோர் பங்கேற்கின்றனர்.

    கவர்னர் வருகையை முன்னிட்டு கொடைக்கானலில் 66 நக்சல் தடுப்பு பிரிவு படையினர் உள்பட 400க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    ×