search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அடிப்படை வசதி"

    மாதவரம் அடுக்குமாடி பஸ் நிலையத்தில் உள்ள கடைகளை திறந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தேவையான பொருட்கள் கிடைக்க ஏற்பாடு செய்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
    மாதவரம்:

    மாதவரம் ரவுண்டானா அருகே நவீன அடுக்குமாடி பஸ் நிலையம் கடந்த 2 மாதத்துக்கு முன்பு திறக்கப்பட்டது.

    இங்கிருந்து ஆந்திர மாநிலம் திருப்பதி, நெல்லூர், விஜயவாடா, தெலுங்கானா போன்ற இடங்களுக்கும் மற்றும் புறநகர் பகுதிக்கு செல்லும் பஸ்களும் இயக்கப்படுகின்றன

    இங்கு தினமும் ஏராளமான பயணிகள் குடும்பத்துடன் வந்து செல்கின்றனர். ஆனால் பயணிகளுக்கு அடிப்படை வசதிகள் இல்லை என்று கூறப்படுகிறது.

    பஸ்நிலையம் உள்ளே அமைக்கப்பட்டிருக்கின்ற கடைகள் இன்னும் திறக்கப்படவில்லை. இதனால் பயணிகள் அவசர தேவைக்கான குழந்தைகளுக்கு பிஸ்கட், பால் மற்றும் மருத்துவ வசதிகளுக்கான அடிப்படை வசதிகள் இல்லை.

    பால், மருந்து, மாத்திரை வாங்க வேண்டும் என்றாலும் கூட ரோட்டை கடந்து செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. குறிப்பாக ஏ.டி.எம். வசதி இல்லை.

    இதனால் பெரும்பாலும் மக்கள் பணம் எடுக்கவும் அவசர தேவைக்கு பொருட்களை வாங்கவும் ரோட்டை கடந்து செல்கிறார்கள்.

    எனவே பஸ் நிலையத்தில் உள்ள கடைகளை திறந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தேவையான பொருட்கள் கிடைக்க ஏற்பாடு செய்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
    கறம்பக்குடியில் அடிப்படை வசதிகள் கேட்டு மாணவர்கள் வகுப்புகளை புறகணித்து பள்ளியின் வளாகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
    கறம்பக்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளி உள்ளது. அங்கு படிக்கும் மாணவர்கள் அடிப்படை வசதிகள் கேட்டு வகுப்புகளை புறகணித்து பள்ளியின் வளாகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

    மாணவர்களுக்கு வழங்க வேண்டிய இலவச லேப்டாப், மிதிவண்டி, குடி தண்ணீர் மற்றும் பஸ் பாஸ், பள்ளிக்கு ஆசிரியர் பற்றாக்குறை, சிறு சிறு அடிப்படை வசதிகள் இவைகள் வழங்காததை கண்டித்து நூற்றுக்கும்மேற்பட்ட மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து கோஷமிட்டனர். பின்னர் பள்ளியின் முன் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் காவல் ஆய்வாளர் கார்த்திக்சாமி சப் இன்ஸ்பெக்டர் பெரிய சாமி, மற்றும் பள்ளி தலைமையாசிரியர் ராஜேந்திரன் ஆகியோர் மாணவர்களிடம் சமரச பேச்சு வார்த்தையில் நடத்தினர்.

    பேச்சு வார்த்தையில் 15 தினங்களுக்குள் கோரிக்கையை நிறைவேற்றி வழங்குவதாக உறுதி அளித்தனர். இதைத் தொடர்ந்து மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தை விட்டு வகுப்பிற்கு சென்றனர். இந்த திடீர் ஆர்ப்பாட்டத்தால் அப்பகுதியில் பெரும் பரப்பு ஏற்பட்டது.
    தரடாப்பட்டு காலனியில் அடிப்படை வசதியின்றி பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    தண்டராம்பட்டு:

    தண்டராம்பட்டு ஒன்றியம் தரடாப்பட்டு கிராம காலனியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இந்த காலனியில் கடந்த 1983-ம் ஆண்டு ஆதிதிராவிடர் குடியிருப்பு கட்டப்பட்டது. அதன் பின்பு இங்கு வாழும் பொதுமக்களுக்கு பெரிய அளவில் எந்தவித அடிப்படை வசதிகளும் செய்து தரப்படாமல் புறக்கணிக்கப்பட்டுள்ளன.

    கடந்த 1996-ம் ஆண்டு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டு அப்பகுதி மக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டது.

    குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கதொட்டி முறையான பராமரிப்பு இல்லாமல் தற்போது இடிந்து விழும் நிலையில் காணப்படுகிறது. இனி இந்த குடிநீர் தொட்டியை பயன்படுத்தவே முடியாது என்ற நிலைக்கு வந்துவிட்டதால் குடிநீர் சப்ளை நிறுத்தப்பட்டது. ஆனால் மாற்று ஏற்பாடு செய்யப்படாததால் குடிநீருக்காக பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு அடிப்படை வசதிகளான கழிப்பிட வசதி, கால்வாய் வசதி போன்றவை ஏதும் செய்யப்படவில்லை.

    தரடாப்பட்டு காலனிக்கு செல்லும் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. தரடாப்பட்டை சுற்றியுள்ள கண்ணகந்தல், நெடுங்காவாடி, கீழ்வணக்கம்பாடி, கரிப்பூர், கொழுந்தம்பட்டு ஆகிய கிராமத்தில் உள்ள மக்கள் பயன்பாட்டிற்காக தரடாப்பட்டில் கால்நடை மருத்துவமனை உள்ளது. ஆனால் மருத்துவமனை சரிவர செயல்படுவதில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அடிப்படை வசதிகள் செய்துதர வேண்டும் மற்றும் கால்நடை மருத்துவமனை சரிவர இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    மதுரை அவனியாபுரத்தில் அடிப்படை வசதிகளை கேட்டு பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    அவனியாபுரம்:

    மதுரை அவனியாபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் சில ஆண்டுகளுக்கு முன்பு மாநகராட்சி பகுதியாக அறிவிக்கப்பட்டது.

    ஆனால் தற்போது வரை அவனியாபுரம் பகுதியில் மாநகராட்சி சார்பில் எந்த அடிப்படை வசதிகளும் செய்யப்படாமல் நிராகரிக்கப்பட்டு வருவதாக அந்தப்பகுதி மக்கள் புகார் கூறி வருகின்றனர்.

    அவனியாபுரம் அருகில் 60-வது வார்டுக்கு உட்பட்ட அயன்பாப்பாகுடி, அய்யனார் கோவில் பகுதிகளில் அடிப்படை வசதிகளும் சரிவர இல்லை.

    குடிநீர், சாக்கடை, தெரு விளக்கு, மின்சாரம் உள்ளிட்ட வசதிகளை கேட்டு அந்தப்பகுதி மக்கள் பலமுறை அதிகாரிகளை சந்தித்து மனு கொடுத்தனர். ஆனால் இதுவரை எந்த பலனும் இல்லை.

    சாக்கடை வசதி செய்யப்படாததால் அடிக்கடி கழிவுநீர் ரோடு, தெருக்களில் தேங்கி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருகிறது.இதனால் அந்தப்பகுதியில் நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

    அடிப்படை வசதிகளை உடனே நிறைவேற்றித் தரக்கோரி இன்று அந்தப் பகுதியைச் சேர்ந்த பெண்கள் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் அவனியாபுரம் பைபாஸ் ரோட்டில் திரண்டனர். அவர்கள் திடீரென்று சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால்அந்தப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இது குறித்து தகவல் அறிந்த அவனியாபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் செல்வகுமார், ஆண்டவர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதன் பின் மறியல் கைவிடப்பட்டது. #tamilnews
    தர்மபுரி புதிய கோர்ட்டு வளாகத்தில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வக்கீல்கள் தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    தர்மபுரி:

    தர்மபுரி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த புதிய கோர்ட்டு வளாகம் தடங்கத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கோர்ட்டு வளாகம் கடந்த சில மாதங்களாக செயல்பட தொடங்கி உள்ளது. இந்த கோர்ட்டு வளாகத்தில் வக்கீல்கள், பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்று வக்கீல்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

    இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு வக்கீல்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு வக்கீல் சங்க தலைவர் ராஜாங்கம் தலைமை தாங்கினார். செயலாளர் எழில்சுந்தரம், பொருளாளர் சந்தோஷ்குமார் மற்றும் நிர்வாகிகள் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள். புதிய கோர்ட்டு வளாகத்தில் வக்கீல்களுக்கான சேம்பர் அமைக்க வேண்டும். அந்த வளாக பகுதியில் செல்போன்கள் தங்குதடையின்றி செயல்பட வசதியாக புதிய செல்போன் கோபுரத்தை அமைக்க வேண்டும்.

    கோர்ட்டு வளாகத்திற்கு சுற்றுச்சுவர் மற்றும் தார்சாலை வசதியை ஏற்படுத்த வேண்டும். காலியாக உள்ள நீதிபதி பணியிடங்களையும், நீதித்துறை பணியாளர் காலி பணியிடங்களையும் நிரப்ப வேண்டும். 2 புதிய கோர்ட்டுகளை உடனடியாக திறக்க வேண்டும்.

    கோர்ட்டுக்கு செல்லும் சாலையை பென்னாகரம் சாலையுடன் இணைக்க வேண்டும்.

    வக்கீல் சங்கத்தினர் கேன்டீன் அமைக்க கோர்ட்டு வளாகத்தில் இலவசமாக இடம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பட்டன. இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. 
    பொதுமக்களுக்கு விரைவில் அனைத்து அடிப்படை வசதிகள் செய்து தர நடவடிக்கை எடுக்கப்படும் என சந்திரபிரபா எம்.எல்.ஏ. உறுதி அளித்துள்ளார்.
    ஸ்ரீவில்லிபுத்தூர்:

    ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார்வளாகம் தன்யா நகர் குடியிருப்போர் நலச் சங்கத்தின் சார்பில் ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் சந்திரபிரபா முத்தையா மற்றும் நகராட்சி ஆணையாளர் மாணிக்க அரசி ஆகியோருக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுத்ததற்காக பாராட்டு விழா நடைபெற்றது. சாந்தி செந்தில் வரவேற்றார்.

    விழாவிற்கு தலைவர் ராதாகிருஷ்ணராஜா தலைமை தாங்கினார். ஹரிகோவிந்த பரசுராம், முன்னிலை வகித்தார். நிர்வாகிகள் நமச்சிவாயம், பாலகிருஷ்ணன் ஆகியோர் பாராட்டி பேசிய பின்பு கூடுதல் அடிப்படை தேவைகளை செய்து தருமாறு வலியுறுத்தினர்.

    நகராட்சி ஆணையாளர் மாணிக்க அரசி பேசும்போது, தன்யா நகர் மற்றும் உள்பகுதிகளான லட்சுமி நகர் உட்பட அனைத்து பகுதிகளிலும் அடிப்படை வசதிகள் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

    அதற்குள் அனைத்து வீட்டு மனைகளையும் முறைப்படுத்த மக்கள் ஒத்துழைக்க வேண்டும். அதற்குரிய விண்ணப்பங்களில் விண்ணப்பிக்க வேண்டும். பிளாஸ்டிக் பொருட்களை உபயோகத்தை தடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

    சட்டமன்ற உறுப்பினர் சந்திரபிரபா முத்தையா பேசும்போது, தன்யா நகர் முழுவதும் அடிப்படை வசதிகள் செய்துதர நடவடிக்கை எடுக்கப்படும்.

    குடிநீர், தெருவிளக்கு, சாலை வசதி, வாறுகால் வசதிகள் செய்து தரப்பட்ட பகுதிகள் போக மற்ற பகுதிகளிலும் விரைவில் அனைத்து அடிப்படை வசதிகள் செய்து தர நடவடிக்கை எடுக்கப்படும். ஆணையாளர் கேட்டுக் கொண்டது போல் பிளாஸ்டிக் உபயோகத்தை தவிர்க்க வேண்டும்.

    அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து பிளாஸ்டிக் இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

    முன்னதாக புதிதாக போடப்பட்ட சின்டெக்ஸ் டேங்க், பேவர் பிளாக் சாலை ஆகியவற்றை சட்டமன்ற உறுப்பினர் சந்திரபிரபிரபா முத்தையா திறந்து வைத்தார்.

    முடிவில் தன்யா நகர் குடியிருப்போர் நலச்சங்கத்தின் முன்னாள் தலைவர் ஐசக் மதுரம் நன்றி கூறினார். #tamilnews
    திருவாரூர் மாவட்டத்தில் அடிப்படை வசதிகள் குறித்து கலெக்டர் நிர்மல்ராஜ் ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் குடவாசல் வட்டம் புதுக்குடி, சேங்காலிபுரம்,வடவேர் ஊராட்சிகளில் அடிப்படை வசதிகள் குறித்து கலெக்டர் நிர்மல்ராஜ் ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

    குடவாசல் வட்டம் புதுக்குடி கிராமத்திற்குட்பட்ட நரசிங்கம்பேட்டை பகுதிகளில் தெருவிளக்குகள், குடிநீர் உள்ளிட்டவைகள் பொதுமக்களுக்கு முறையாக கிடைக்கிறதா என்பது குறித்து மேற்கொண்டார்.

    அப்போது பொதுமக்களிடம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம், தினசரி குடிநீர் விநியோகம், குப்பை அகற்றுவது குறித்து கேட்டறிந்து வட்டார வளர்ச்சி அலுவலரிடம் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினார்.

    தொடர்ந்து சேங்காலிபுரம் ஊராட்சி அக்ரகாரம் பகுதியில் பொதுமக்களிடம் தேவையான அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்து தெருவிளக்குகள், தினசரி குடிநீர் விநியோகம் தடையின்றி வழங்கிட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து அரசு உயர்நிலைப்பள்ளியில் மதிய உணவினை கலெக்டர் ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சந்தன கோபால கிருஷ்ணன், பொற்செல்வி, மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    மானாமதுரையில் உள்ள வாரச்சந்தையில் அடிப்படை வசதிகள் இல்லாததால் வியாபாரிகள், பொருட்கள் வாங்க வரும் பொதுமக்கள் என பலரும் அவதியடைந்து வருகின்றனர்.
    மானாமதுரை:

    மானாமதுரையில் வியாழக்கிழமை தோறும் வாரச்சந்தை நடைபெறுவது வழக்கம். மானாமதுரை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஏராளமான விவசாயிகளும், வியாபாரிகளும் பொருட்களை விற்பனை செய்ய கடை அமைப்பார்கள். இதுதவிர மதுரையில் இருந்து 200-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் வாரச்சந்தையில் கடை அமைத்து வியாபாரம் செய்வார்கள். காய்கறிகள் மட்டுமின்றி பழங்கள், பலசரக்கு பொருட்கள், பிளாஸ்டிக் பொருட்கள், பூ உள்ளிட்ட அனைத்து பொருட்களும் கிடைப்பதால் மானாமதுரை நகரில் உள்ள 18 வார்டுகளைச் சேர்ந்த பொதுமக்கள் பலரும் வாரச்சந்தையில் பொருட்கள் வாங்க வருவார்கள்.

    இந்தநிலையில் மானாமதுரை வாரச்சந்தையில் குடிநீர், கழிப்பறை, போதிய கட்டிடங்கள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. இதனால் வாரச்சந்தையில் கடை அமைத்துள்ள விவசாயிகள் பலரும் நெருக்கடிக்கு இடையே கடை அமைத்துள்ளனர். 300 முதல் 500 கடைகள் வரை வாரச்சந்தையில் உள்ளன. இவற்றிற்கு கட்டிட வசதி கிடையாது. வாருகால் வசதி இல்லாததால் மழை காலங்களில் வாரச்சந்தை சேறும் சகதியுமாக மாறி விடுகிறது. குறிப்பாக சந்தை ஆரமித்த ஆண்டில் இருந்து ஒப்பந்த தொகை மட்டும் கூடிக்கொண்டே போகிறது. ஆனால் வாரச்சந்தை மட்டும் அடிப்படை வசதிகள் இல்லாமல் பல ஆண்டுகளாக காணப்படுகிறது.

    கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு வாரச்சந்தை ரூ.1 கோடி வரைக்கும் ஏலம் விடப்பட்டுள்ளது. அந்த அளவிற்கு வருமானம் பேரூராட்சிக்கு கிடைத்தும், வாரச்சந்தையில் அடிப்படை வசதிகள் செய்யாமல் இருப்பது ஏன் என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் வாகனங்களில் வரும் பொதுமக்கள் வாகனங்களை நிறுத்த போதிய இடவசதி இல்லை. சாலையிலேயே நிறுத்துவதால் போக்குவரத்துக்கு இடையூறும் ஏற்படுகிறது. எனவே பேரூராட்சி நிர்வாகம் வாரச்சந்தையில் அடிப்படை வசதிகள் செய்துதருவதுடன், வாகனங்களை நிறுத்த போதிய இடவசதியும் செய்துதர வேண்டும் என்று வியாபாரிகளும், பொதுமக்களும் வலியுறுத்தியுள்ளனர். 
    திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டத்திற்குட்பட்ட விசலூர், பனங்குடி ஆகிய பகுதிகளில் குடிநீர், தெருவிளக்கு, சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து கலெக்டர் நிர்மல்ராஜ் ஆய்வு மேற்கொண்டார்.
    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டத்திற்குட்பட்ட விசலூர், பனங்குடி ஆகிய பகுதிகளில் குடிநீர், தெருவிளக்கு, சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து கலெக்டர் நிர்மல்ராஜ் ஆய்வு மேற்கொண்டார்.

    தொடர்ந்து அப்பகுதி மக்களிடம் தினசரி குடிநீர் முறையாக கிடைக்கிறதா என கேட்டறிந்தார். பின்னர் நீர்முள்ளிநெடுஞ்சேரி உட்கிராமத்தில் தெருவிளக்குகள் சரியாக எரிகிறதா எனவும், குடியிருப்பு வீடுகளில் தனிநபர் கழிவறைகள் பயன்படுத்தப்பட்டு வருகிறதா எனவும் கேட்டறிந்தார்.

    தொடர்ந்து பனங்குடி ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் முறையாக வேலை வழங்கப்படுகிறதா என கேட்டறிந்தார். மக்களின் அடிப்படை வசதிகள் குறித்த கோரிக்கைகளுக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தேவையான இடங்களில் குடிநீர் குழாய்கள் அமைத்து தங்குதடையின்றி மக்களுக்கு குடிநீர் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.

    இந்த ஆய்வில் நன்னிலம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆறுமுகம், திருநாவுக்கரசு, தாசில்தார் பரஞ்ஜோதி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். #tamilnews
    திருப்பூர் மாநகராட்சியில் அடிப்படை வசதிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று புதிய கமி‌ஷனர் சிவகுமார் தெரிவித்துள்ளார்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகராட்சியில் கமி‌ஷனராக இருந்த அசோகன் பதவி உயர்வு பெற்று சென்னைக்கு மாறுதலாகி சென்றார். இதனையடுத்து திருப்பூர் மாநகராட்சியின் புதிய கமி‌ஷனராக சிவகுமார் நியமிக்கப்பட்டார். அவர் மாநகராட்சி அலுவலகத்திற்கு வந்து கமி‌ஷனராக பொறுப்பேற்றுக் கொண்டார் பின்னர் அவர் கூறியதாவது:-

    திருப்பூர் மாநகராட்சியில் தேவைகளை கண்டறிந்து, வளர்ச்சித்திட்டப் பணிகள் குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்து அதன் அடிப்படையில் பொதுமக்களின் தேவைக்கேற்ப அத்தியாவசிய அவசரத்தேவைக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

    அடிப்படை வசதிகளான சாக்கடை வசதி, குடிநீர் வசதி, கல்வி வசதி, சுகாதாரம், கழிப்பிட வசதி போன்ற பல்வேறு அடிப்படை வசதிகளுக்கு முன்னுரிமை அளித்து திருப்பூர் மாநகராட்சியின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார்.

    புதிதாக பதவியேற்று கொண்ட கமி‌ஷனருக்கு மாநகர பொறியாளர் ரவி, செயற்பொறியாளர் திருமுருகன், உதவி கமி‌ஷனர்கள் நாராயணன், வாசுகுமார், செல்வநாயகம், முகமது சபியுல்லா, கண்ணன், வருவாய் ஆய்வாளர் தங்கவேல் ராஜன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

    அடிப்படை வசதிகளை செய்து தர கோரி திருமங்கலம் 4 வழிச்சாலையில் அரசு கல்லூரி மாணவ- மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    பேரையூர்:

    மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் 4 வழிச்சாலையோரத்தில் ரூ. 11.36 கோடி மதிப்பீட்டில் அரசு கலைக் கல்லூரியை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார்.

    இந்த கல்லூரியில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் இன்று காலை கல்லூரிக்கு வந்த மாணவ-மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து திடீரென கல்லூரி முன்புள்ள 4 வழிச்சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    அப்போது கல்லூரியில் குடிநீர், கழிப்பறை, உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும். கல்லூரி சரியான நேரத்தில் இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷமிட்டனர்.

    இதுதொடர்பாக மறியலில் ஈடுபட்ட மாணவிகள் கூறுகையில் கல்லூரி திறக்கப்பட்டு 10 மாதங்கள் ஆகியும் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதியும் இல்லை. கழிப்பறை இருந்தும் அதை பராமரிக்காததால் பயனற்று உள்ளது. இதனால் நாங்கள் மிகவும் சிரமப்படுகிறோம்.

    மேலும் கல்லூரி தாமதமாக திறக்கப்படுகிறது. பேராசிரியர்கள் தாமதமாக வருகின்றனர். இதனால் எங்கள் கல்வி பாதிக்கப்படுகிறது.

    எனவே இதற்கு உடனே தீர்வு காணவேண்டும் என்று வலியுறுத்தினர். மறியல் குறித்து தகவலறிந்த திருமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் காந்தி சம்பவ இடத்திற்கு வந்து பேச்சு வார்த்தை நடத்தினார். இதனை தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது மறியலால் போக்குவரத்து ஒரு மணி நேரம் கடுமையாக பாதிக்கப் பட்டது.

    இளையான்குடி, ரசூலா சமுத்திரத்தில் குடிநீர், சாலை உள்ளிட்ட அடிப்படை செய்துதர கோரி பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    இளையான்குடி:

    இளையான்குடியை அடுத்த ரசூலா சமுத்திரத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இளையான்குடி பேரூராட்சிக்கு உட்பட்ட இங்கு அடிப்படை வசதிகள் என்பது சரிவர செய்துதரவில்லை என்று பலமுறை இப்பகுதி பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.

    ரசூலா சமுத்திரத்தில் சீராக குடிநீர் வழங்காததால் விலை கொடுத்து தண்ணீர் வாங்கி வருகின்றனர். மேலும் அப்பகுதியில் தெருக்களின் சாலை சேதமடைந்தும், மின்விளக்குகள் சரிவர எரியாமலும் உள்ளது. ஆனால் இதுதொடர்பாக அதிகாரிகள் யாரும் கண்டுகொள்ளவில்லை.

    இந்தநிலையில் ரசூலா சமுத்திரத்தில் ரூ.13 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட சுகாதார வளாகத்தில் ஏற்பட்டுள்ள சுகாதார சீர்கேட்டை தடுக்க வேண்டும், குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், தெருக்களில் உள்ள மின்விளக்குகளை சரிசெய்து தரவேண்டும், இறந்தவர்களை அடக்கம் செய்ய மயானம் அமைக்க இடம் ஒதுக்கீடு செய்து தரவேண்டும், அப்பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்தில் டாக்டர்கள் பணிக்கு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று அப்பகுதி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த இளையான்குடி போலீசார் பொதுமக்களை தடுத்து நிறுத்தி, தங்களது கோரிக்கைகளை பேரூராட்சி அலுவலகத்தில் முறையிடுமாறு கூறிவிட்டனர். அதன்பின்பு அவர்கள் பேரூராட்சி அலுவலகத்தின் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனையடுத்து போலீசாரும், பேரூராட்சி செயல் அலுவலர் ராஜாராமும் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதனையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். 
    ×