search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்"

    • புதுக்கோட்டையைச் சேர்ந்த 13 பேர் கைது செய்யப்பட்டிருப்பது தமிழக மீனவர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
    • அடுத்தடுத்து நடைபெறும் கைது சம்பவங்கள் மீன்பிடித் தொழிலை மட்டுமே நம்பியிருக்கும் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது.

    சென்னை:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    புதுக்கோட்டை மாவட்டம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களில் 13 பேரை எல்லை தாண்டியதாக கூறி கைது செய்திருப்பதோடு, அவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்திருக்கும் இலங்கை கடற்படையினரின் அத்துமீறல் சம்பவம் கடும் கண்டனத்திற்குரியது.

    கடந்த இரு வாரங்களில் மட்டும் 40க்கும் அதிகமான தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில், தற்போது புதுக்கோட்டையைச் சேர்ந்த 13 பேர் கைது செய்யப்பட்டிருப்பது தமிழக மீனவர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களையும், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளையும் விடுவிக்க வலியுறுத்தி தமிழக மீனவர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வரும் நிலையில், அடுத்தடுத்து நடைபெறும் கைது சம்பவங்கள் மீன்பிடித் தொழிலை மட்டுமே நம்பியிருக்கும் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது.

    எனவே, ஒவ்வொருமுறை மீனவர்கள் கைதின் போதும் மத்திய அரசுக்கு கடிதம் எழுதும் நாடகத்தை இனியும் தொடராமல், மத்திய அரசுக்கு உரிய அழுத்தம் கொடுத்து இலங்கை கடற்படையினரின் அத்துமீறலுக்கு முற்றுப்புள்ளி வைக்கத் தேவையான முயற்சிகளை மேற்கொள்ளுமாறு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வலியுறுத்துகிறேன்.

    • ஜெயலலிதாவின் தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம்.
    • மற்ற அரசியல் கட்சி தலைவர்கள் கோவிலுக்கு செல்வதை பற்றி நான் கருத்து சொல்வது நன்றாக இருக்காது.

    திருச்சி:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் திருச்சியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மத்தியில் 3-வது முறையாக பா.ஜ.க. ஆட்சி அமைந்து மோடி பிரதமர் ஆவது உறுதி என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மை. இந்த கருத்து கணிப்புகள் முடிவுகளும் அதையே சொல்கிறது. 4-ந் தேதிக்கு பிறகு தமிழகத்தின் உண்மை நிலவரம் தெரியவரும்.

    தேர்தல் முடிவுக்கு பின்னர் அ.தி.மு.க.வின் தலைமையில் ஏதேனும் மாற்றம் வருமா? என்பது தொடர்பாக கருத்து சொல்வது நல்லதில்லை. தேர்தல் முடிவுக்கு பின்னர் அதைப்பற்றி பேசலாம்.

    ஜெயலலிதாவின் தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம். அதற்காக தொடர்ந்து பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.

    நான் கோவிலுக்கு செல்வது வழக்கமான ஒன்று. இந்த ஒன்றரை மாதம் அதிக வாய்ப்புகள் கிடைத்தது. அதனால் அதிகமாக கோவிலுக்கு சென்றேன். மற்ற அரசியல் கட்சி தலைவர்கள் கோவிலுக்கு செல்வதை பற்றி நான் கருத்து சொல்வது நன்றாக இருக்காது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்ந்து ஓ.பி.எஸ். அணியில் நிர்வாகிகள் மத்தியில் கருத்து வேறுபாடு உள்ளதா என்பது பற்றிய கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், அனைத்தும் 4-ந்தேதிக்கு பிறகு சரியாகிவிடும் என்றார்.

    • ஆட்சிக்கு வந்த இரண்டரை ஆண்டுகளில் மழைநீர் பாதிப்பிலிருந்து பொதுமக்களை பாதுகாக்க எவ்வித நடவடிக்கைகளையும் திமுக அரசு மேற்கொள்ளவில்லை.
    • தோண்டப்பட்ட பள்ளங்கள் முறையாக மூடப்படாமல் இருப்பதன் மூலம் விபத்து ஏற்படும் அபாயமும் இருப்பதாக சென்னையைச் சேர்ந்த பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

    சென்னை :

    அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இடைவிடாமல் பெய்துவரும் கனமழை காரணமாக சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் மழைநீரால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு வீடுகளுக்குள்ளேயே முடங்கியிருக்கும் சூழல் உருவாகியுள்ளது.

    ஆட்சிக்கு வந்த இரண்டரை ஆண்டுகளில் மழைநீர் பாதிப்பிலிருந்து பொதுமக்களை பாதுகாக்க எவ்வித நடவடிக்கைகளையும் திமுக அரசு மேற்கொள்ளவில்லை என்பதற்கு முதலமைச்சர் அவர்களின் தொகுதியான கொளத்தூரில் குளம்போல தேங்கியிருக்கும் மழைநீரே சிறந்த உதாரணம் .

    சாலைகள் மற்றும் குடியிருப்புகளை சூழந்திருக்கும் மழைநீரால் சுகாதார சீர்கேடு நிலவுவதோடு, மழைநீர் வடிகால் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் முறையாக மூடப்படாமல் இருப்பதன் மூலம் விபத்து ஏற்படும் அபாயமும் இருப்பதாக சென்னையைச் சேர்ந்த பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

    எனவே, சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் தேங்கியிருக்கும் மழைநீரை வெளியேற்ற போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுப்பதோடு, மழைநீர் பாதிப்பிலிருந்து பொதுமக்களை பாதுகாக்க நிரந்தர வெள்ளத் தடுப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார்.

    • எப்போது தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சிக்கு வருகிறதோ அப்போது எல்லாம் பயங்கரவாதம் தலைதூக்க தொடங்குகிறது.
    • வாக்கு வங்கி அரசியலை மனதில் கொள்ளாமல் தமிழ்நாட்டின் மக்களின் உயிருக்கும், உடமைக்கும் பொறுப்பேற்று அரசாங்கம் சிறப்பாக செயல்பட வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சையில் இன்று அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    கோவையில் நடந்த கார் வெடிப்பில் நல்ல வேளையாக யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லாமல் அதை கொண்டு வந்தவரே பலியாகி இருக்கிறார். ஆனால் இந்த சம்பவம் குறித்து தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இதுவரை வாய் திறக்கவில்லை.

    காவல்துறைக்கு தலைவராக இருப்பவரே இப்படி மவுனம் காப்பது தமிழக மக்களுக்கு வேதனையும், வருத்தமும் அளிக்கிறது. இனியாவது தமிழக அரசு பயங்கரவாதிகள் விஷயத்தில் கடுமையான போக்கை கடைப்பிடிக்க வேண்டும்.

    எப்போது தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சிக்கு வருகிறதோ அப்போது எல்லாம் பயங்கரவாதம் தலைதூக்க தொடங்குகிறது. அதனால் வாக்கு வங்கி அரசியலை மனதில் கொள்ளாமல் தமிழ்நாட்டின் மக்களின் உயிருக்கும், உடமைக்கும் பொறுப்பேற்று அரசாங்கம் சிறப்பாக செயல்பட வேண்டும். கோவை சிலிண்டர் குண்டு வெடிப்பு சம்பவம் அனைவரையும் அச்சத்தில் ஆழ்த்துகிற விஷயம்.

    தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர் கெட்டுள்ளது. போதை கலாச்சாரம் பெருகி கொண்டு இருக்கிறது. தமிழ்நாட்டில் தமிழ்தான் தாய்மொழி, எந்த மாநிலத்திலும் தாய்மொழிக்குதான் முக்கியத்துவம் அளிக்கப்படும்.

    எந்த காலத்திலும் தமிழக மக்கள் இந்தி திணிப்பை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். தமிழ்நாட்டில் 1965-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சி இந்தி திணிப்பை கொண்டு வந்ததால்தான் இதுவரை ஆட்சி பிடிக்க முடியாமல் போனது. அது போன்ற விபரீத முயற்சியில் பா.ஜ.க ஈடுபடாது என நினைக்கிறேன்.

    செய்தியாளர்கள் மடக்கி தான் கேள்வி கேட்பார்கள் . அதற்கு பக்குவமாகதான் பதில் சொல்ல வேண்டும் .அண்ணாமலை அரசியலுக்கு வந்து சில ஆண்டுகள் தான் ஆகிறது. அடிப்பட்டு திருந்துவார். அப்போது நிதானம் ஆகிவிடுவார். தேசிய கட்சியின் தமிழ்நாட்டு தலைவர் இதுபோன்ற போக்கை கட்சி தலைமை உன்னிப்பாக கவனித்து வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத தி.மு.க. அரசை கண்டித்து நடந்தது
    • ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்ப ப்பட்டது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடந்தது. மின் கட்டண உயர்வை கண்டித்தும், தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத தி.மு.க. அரசை கண்டித்தும் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர்கள் ராகவன், ஸ்டீபன் ஆகியோர் தலைமை தாங்கினார்கள்.

    அமைப்புச் செயலாளர் ஜெங்கின்ஸ், வழக்கறிஞர் அணி துணைத் தலைவர் சவுந்தர்ராஜன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். மாவட்ட அவை தலைவர் ஜூலியஸ்,பொருளாளர் கமலேஷ்,இணைச் செயலாளர் சவுமியா,துணைச் செயலாளர் இமாம் பாதுஷா,பொதுக்குழு உறுப்பினர் சகாயடெல்வர், ஒன்றிய செயலாளர்கள் ஜெகன் ஆனந்த், துரை சிங்கம், ஆறுமுகம், மாநகர பகுதி செய லாளர் முத்துக்குமார், அறிவழகன்,இலக்கிய அணி இணைச் செயலாளர் சுப்பிரமணிய பிள்ளை, மேற்கு மாவட்ட இணைச் செயலாளர் நிர்மலா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்ப ப்பட்டது. ஆர்ப்பாட்டத்தின் பொது மழை பெய்தது. அதை பொருட்படுத்தாமல் நிர்வாகிகள் கொட்டும் மழையில் நனைந்தவாறு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

    • சென்னை மாநகராட்சியில் பெண் கவுன்சிலர்கள் வேலை பார்ப்பதில்லை.
    • தி.மு.க.வை வீழ்த்த கூட்டணிக்கு தயாராக உள்ளோம்.

    ராயபுரம்:

    தமிழகத்தில் மின் கட்டணம் உயர்வு, சொத்து வரி உயர்வு மற்றும் தேர்தல் நேரத்தில் வெளியிட்ட அறிவிப்புகளை தி.மு.க. நிறைவேற்றாததை கண்டித்து இன்று தமிழகம் முழுவதும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

    தமிழக மக்களுக்கு பொய்யான வாக்குறுதிகள் அளித்து சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று தி.மு.க. ஆட்சிக்கு வந்தது. தற்போது மதம், ஜாதியை வைத்து அரசியல் செய்கிறது.

    இது வந்தாரை வாழ வைக்கும் தமிழகம். மதத்தின் பெயரால், ஜாதியின் பெயரால் மக்கள் வாக்களிப்பதில்லை.

    சமூக நீதி பேசி வரும் தி.மு.க.வினர் மற்றும் அமைச்சர்கள் மக்களை பார்த்து ஓ.சி. பஸ் என்றும் பட்டியலினத்தவரை பார்த்து ஜாதி குறித்தும் பேசுகிறார்கள். மக்கள்தான் எஜமானார்கள். அவர்களை மக்கள் தூக்கி எறிவார்கள்.

    தி.மு.க.வினர் திருந்தி இருப்பார்கள் என்று மக்கள் மீண்டு வாய்ப்பு கொடுத்தனர். ஆனால் திருந்தவில்லை. கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் சட்டசபை கூட்டத் தொடரில் நிதி நிலை அறிக்கையின் போது தி.மு.க.வினர் வெளிநடப்பு செய்து விட்டு அமைச்சர்கள் மீது கவர்னரிடம் முறைகேடு புகார் அளித்தனர்.

    நிறைவேற்ற முடியாது என்று தெரிந்தும் பொய்யான வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்த உடன் தற்போது நிதி நிலையை காரணம் காட்டி வாக்குறுதிகளை நிறைவேற்ற மறுக்கிறார்கள்.

    அ.தி.மு.க.வில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்றவர்கள் சுயம்பாக தோன்றிய தலைவர்கள். ஆனால் தி.மு.க.வில் தலைவர்கள் திணிக்கப்படுகிறார்கள்.

    தற்போது உள்ள அமைச்சர்களின் நடவடிக்கையால் தூக்கம் இல்லாமல் இருப்பதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறுகிறார். ஆனால் ஜெயலலிதா ஆட்சியில் அமைச்சர்கள் தூங்க மாட்டார்கள்.

    தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது. நான் ஏற்கனவே கூறியது போல் 2024-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் வரும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதில் துணை பொதுச்செயலாளர் ஜி.செந்தமிழன், செய்தி தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி, அமைப்பு செயாளர் தட்சிணாமூர்த்தி, அமைப்பு சாரா ஓட்டுனர் அணி செயலாளர் குட்வில் குமார், திருவள்ளூர் மத்திய மாவட்ட கழக செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ. அம்பத்தூர் எஸ்.வேதாசலம், பொறியாளர் அணி செயலாளர்கள் மா.கரிகாலன், அமைப்புச் செயலாளர் நேதாஜி கணேசன், மாவட்ட செயலாளர்கள் சி.பி.ராமஜெயம், ஏ.ஆர்.பழனி, பி.ஆனந்தன், எல்.ராஜேந்தி ரன், ஹஜ் கே.முகமது சித்திக், வி.சுகுமார் பாபு, கே.விதுபாலன், எஸ்.வேதாச்சலம், இ.லக்கிமுருகன், பரணி குருக்கள், அய்யப்பா வெங்கடேசன், முகவை ஜெயராமன், சூளைமேடு கங்கன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதைத் தொடர்ந்து டி.டி.வி. தினகரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    சென்னை மாநகராட்சியில் பெண் கவுன்சிலர்கள் வேலை பார்ப்பதில்லை. அவர்களது கணவர்கள் பணி செய்கிறார்கள். அவர்கள் பொதுமக்களை மிரட்டுகிறார்கள். முதல்-அமைச்சர் மீது யாருக்கும் பயம் இல்லை.

    முதல்-அமைச்சரால் அமைச்சர்களை மட்டுமல்ல கவுன்சிலர்களை கூட கட்டுப்படுத்த முடியாது. ஜெயலலிதாவால் அமைச்சர்கள் தூக்கம் இல்லாமல் இருந்தனர். தற்போது முதல்-அமைச்சருக்கோ அமைச்சர்களால் தூக்கம் இல்லை.

    எங்களை வெளியேற்றியதால் அம்மாவின் உண்மையான தொண்டர்கள் தனி இயக்கம் கண்டுள்ளோம். இனிமேல் நாங்கள் ஒன்றாக இணைவது எங்களுக்கும் நல்லது அல்ல. அவர்களுக்கும் நல்லது அல்ல என்று நான் நினைக்கிறேன். தி.மு.க.வை வீழ்த்த கூட்டணிக்கு தயாராக உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நாட்டின் விடுதலைக்காக சொத்து, சுகங்களை இழந்து, ஒப்பிட முடியாத வீரப்பெருமகனாக திகழ்ந்த வ.உ.சிதம்பரனாரை வணங்கி போற்றுவோம் என டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார்.
    சென்னை:

    அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

    கப்பலோட்டிய தமிழர், செக்கிழுத்த செம்மல், தியாக சீலர் வ.உ.சிதம்பரனார் நினைவு தினம் இன்று.

    ஆங்கிலேயரின் அடக்கு முறைகளை எல்லாம் நெஞ்சுரத்தோடு எதிர்கொண்டு, நாட்டின் விடுதலைக்காக சொத்து, சுகங்களை இழந்து, ஒப்பிட முடியாத வீரப் பெருமகனாக திகழ்ந்த வ.உ. சிதம்பரனாரை வணங்கி போற்றுவோம்.

    இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
    உள்ளாட்சி தேர்தல் வரும்போது எங்களின் வாக்கு சதவீதம் என்ன என்பது தெரிய வரும் என்று டி.டி.வி.தினகரன் தெரிவித்தார்.
    சென்னை:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் பெங்களூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    ஏற்கனவே நாங்கள் சரியான முறையில் தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். மேற்கொண்டு எவ்வளவு சிறப்பாக செயல்பட முடியுமோ அதுபோன்று செயல்படுவோம்.

    வருகிற ஜூன் 1-ந்தேதி கூட மாவட்ட செயலாளர்கள், தலைமை நிர்வாகிகள், வேட்பாளர்கள் ஆகியோருடன் முதல் கட்டமாக ஆலோசனை நடத்துகிறேன்.

    அதன் பிறகு அடுத்த கட்ட நிர்வாகிகளை சந்தித்து அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்காக நாங்கள் தயாராவோம்.

    நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தல் வரலாம் என்று நினைக்கிறேன். அதுபோல வேலூர் எம்.பி. தொகுதியில் தேர்தல் நடைபெற வேண்டி இருக்கிறது. உள்ளாட்சித் தேர்தல் வரும் அதற்கும் தயாராவோம். இதெல்லாம் வழக்கமான நடவடிக்கை தானே.

    பாராளுமன்ற தேர்தலின்போது நான் அளித்த வாக்குகள் என்னவானது என்று பல கிராமங்களில், நகரங்களில் மக்கள் கேட்கிறார்கள். நாங்கள் வாக்களித்த பூத்தில் அ.ம.மு.க.விற்கு 14 வாக்குகள்தான் பதிவாகியுள்ளது. நாங்கள் அ.ம.மு.க.விற்குதான் வாக்களித்தோம்.

    ஆனால் நமது பூத்தில் அ.ம.மு.க.விற்கு 14 வாக்குகள் பதிவாகியுள்ளதே என்று நான் நடைபயிற்சி சென்றபோது எங்கள் பகுதி மக்களே என்னிடம் கேட்கிறார்கள். இதுபோன்றுதான் தமிழகம் முழுவதும் மக்கள் கேட்கிறார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும்.

    எங்களுக்கு பதிவாக வேண்டிய சதவீதம் என்ன? ஆனால் பதிவான சதவீதம் எவ்வளவு என்றுதான் நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அதனால் உள்ளாட்சி தேர்தல் வரும்போது எங்களின் வாக்கு சதவீதம் என்ன என்பது உங்களுக்கு தெரியப்போகிறது.

    இவ்வாறு தினகரன் கூறினார்.
    அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சின்னம், பிரசாரம் மக்களிடம் எடுபடவில்லை என்று அதன் கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.
    சென்னை:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் மீண்டும் அ.தி.மு.க.வில் இணைய போவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.

    இது குறித்து தங்க தமிழ்ச்செல்வனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சின்னம், பிரசாரம் மக்களிடம் எடுபடவில்லை. இதை முதலில் ஒத்துக்கொள்ள வேண்டும். வருங்காலத்தில் தோல்வி ஏற்படாதவாறு கட்சி கூட்டத்தில் விவாதிக்கப்பட வேண்டும்.

    இதற்காக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் ஆலோசனை கூட்டம் 1-ந்தேதி நடைபெறுகிறது. இதில் தேர்தல் தோல்விக்கான காரணங்கள் குறித்து விவாதிப்போம்.



    எங்களின் பிரசாரங்களை மக்கள் ரசிக்கவில்லை என்பது இந்த தேர்தலில் தெரிகிறது. என்னை பார்க்கும் பொதுமக்கள் ‘உங்களுக்குத்தான் இரட்டை இலைக்கு ஓட்டு போட்டேன் என்று கூறுகிறார்கள். கிராமங்களில் என்னை மக்கள் அ.தி.மு.க. கட்சிக்காரராகவே பார்க்கிறார்கள். இரட்டை சிலை சின்னம் மக்கள் மனதில் பதிந்துவிட்ட சின்னமாகவே உள்ளது. இதை யாராலும் மறுக்க முடியாது.

    அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தோல்வியை வைத்து எதிர்காலத்தை முடிவு செய்து விட முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    உங்களை அ.தி.மு.க.வுக்கு இழுக்க முயற்சி நடப்பதாக தகவல்கள் வருகிறதே? என்று கேட்டதற்கு தங்க தமிழ்ச்செல்வனுக்கு கிராக்கி இல்லாமல் இருக்குமா? என்று எதிர்கேள்வி எழுப்பினார்.

    அரசியல் பாதை என்பது நிதானமாக இருக்க வேண்டும். என்ன நடக்கிறது என்று பார்ப்போம் என்றும் அவர் கூறினார்.

    அ.தி.மு.க.வில் பதவி கிடைத்தால் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை உடைக்க நீங்கள் தயாராக இருப்பதாக செய்திகள் வருவது குறித்து கேட்டதற்கு அது உண்மையல்ல. எனது அரசியல் பாதை தெளிவாக உள்ளது. அதன்படி செயல்படுவேன் என்றும் தெரிவித்தார்.
    8 வழிச்சாலை திட்டத்தை நிறைவேற்றுவதன் மூலம் எடப்பாடி பழனிசாமி அரசு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழிக்க துடிக்கிறது என்று டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    சேலம் - சென்னை இடையே 8 வழிச்சாலை திட்டத்தை நிறைவேற்ற அரசு திட்டமிட்டுள்ளது.

    இதற்கு அ.ம.மு.க. துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-

    8 வழிச்சாலை பற்றி தேர்தல் முடியும் வரை வாய் திறக்காமல் இருந்துவிட்டு இப்போது மக்களுக்கு உயிர் முக்கியம். அதைப் பற்றி அவர்கள் சிந்திக்க வேண்டும் என்று திடீரென மிரட்டும் தொனியில் வசனம் பேசியிருக்கிறார் பழனிசாமி. இதுதான் இந்த மக்கள் விரோத ஆட்சியாளர்களின் உண்மை முகம்.

    சோறு போடுகின்ற விவசாய நிலங்களையும், ஆயிரக்கணக்கானோரின் வாழ்வாதாரத்தையும் அழித்து, கார்ப்பரேட் முதலாளிகளின் நலனுக்காக 8 வழிச்சாலை போட துடிக்கின்ற பழனிசாமியின் நயவஞ்சகம் நிச்சயம் நிறைவேறப்போவதில்லை.

    இவர்களுக்கு மக்கள் எழுதியுள்ள முடிவுரை மே 23-ந்தேதி தெரிந்து விடும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    மதுரை அரசு ஆஸ்பத்திரியில் உயிரிழந்த 5 நோயாளிகளின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று தினகரன் வலியுறுத்தியுள்ளார். #AMMK #TTVDhinakaran #MaduraiGovernmenthospital
    சென்னை:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    மதுரை அரசு மருத்துவமனையில் சுகாதாரத்துறையின் அலட்சியத்தால் நோயாளிகள் 5 பேர் பலியாகி இருக்கும் சம்பவம் அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. மதுரை அரசு மருத்துவமனையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது. அங்கு விபத்துகளில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த பூஞ்சுத்தி கிராமத்தைச் சேர்ந்த மல்லிகா, ஸ்ரீவில்லிபுத்தூர் ரவிச்சந்திரன், ஒட்டன்சத்திரம் பழனியம்மாள், உடுமலைப்பேட்டை ஆறுமுகம், செல்லத்தாய் ஆகிய 5 பேரும் மின்தடையால் செயற்கை சுவாச கருவி(வென்டிலேட்டர்) இயங்காமல் உயிரிழந்திருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

    சுகாதாரத் துறையின் அலட்சியமான செயல்பாட்டால் அப்பாவி நோயாளிகள் 5 பேரின் உயிர் பறிபோய் இருப்பது கண்டனத்திற்குரியது. பழனிசாமி அரசின் நிர்வாகம் எந்த லட்சணத்தில் இருக்கிறது என்பதற்கு இச்சம்பவம் சான்றாக அமைந்துள்ளது. இந்த மக்கள் விரோதிகளின் மோசமான அரசாட்சியில் நோயாளிகளுக்குக் கூட பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டிருக்கிறது.

    இச்சம்பவத்தை வழக்கம் போல மூடி மறைக்க முயலாமல், முறையான விசாரணை நடத்தி, தமிழகத்தில் இது போன்ற நிகழ்வுகள் இனி எங்கும் நடக்காமல் இருப்பதற்கு உரிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். நோயாளிகள் பலியாவதற்கு காரணமானவர்கள் மீது சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும். அதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #AMMK #TTVDhinakaran #MaduraiGovernmenthospital
    வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகு அ.ம.மு.க. ஆட்சி டி.டி.வி.தினகரன் தலைமையில் அமைக்கப்படும் என்று தங்க தமிழ்ச்செல்வன் கூறியுள்ளார். #AMMK #Thangatamilselvan
    திருப்பரங்குன்றம்:

    அ.ம.மு.க.வின் கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் திருப்பரங்குன்றத்தில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    வாரணாசியில் பிரதமர் மோடியை ஓ.பன்னீர் செல்வம் சந்தித்தபோது வாக்கு எந்திரம் மாற்றப்பட வாய்ப்பு உள்ளதோ என்று சந்தேகித்து கேள்வி எழுப்பினோம்.

    தற்போது தேனியில் 50 வாக்குப்பதிவு எந்திரங்கள் வந்திருப்பது குறித்து கலெக்டர், இது இயல்பான நிகழ்வு மட்டுமே என்று கூறியதன் அடிப்படையில் விளக்கம் கேட்டு வருகிறோம்.

    எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பின்னர் அமைந்த ஜானகி அம்மாளின் ஆட்சியை கலைத்தனர்.

    தற்போது எடப்பாடி ஆட்சியை கலைப்பதற்கு அனைத்து கட்சியினரும் கரம் நீட்டுவது இயல்பானது.

    இதனை கூட்டணி சேர்ந்து இருப்பது என்று கூறுவது தவறு. கலகத்தில் பிறப்பதுதான் நீதி. கலங்காதே... மயங்காதே... என்று எம்.ஜி.ஆரே கூறியுள்ளார்.

    சாமானியர்கள் முதற்கொண்டு இதுவரையில் எங்களிடம் ஆர்வமாக 22 தொகுதிகளிலும் அ.ம.மு.க. வெற்றி பெற்றால் ஆட்சி கலைக்கப்படுமாயின் நிச்சயமாக பரிசுப்பெட்டகம் சின்னத்திற்கு வாக்களித்து இருப்போம் என்று உற்சாகமாக தெரிவித்து வருகின்றனர்.

    வாக்கு எண்ணிக்கைக்கு பிறகு ஆட்சி கலைக்கப்படும். அதற்கான அடுத்த கட்ட நடவடிக்கையாக அ.ம.மு.க. ஆட்சி டி.டி.வி.தினகரன் தலைமையில் அமைக்கப்படும்.

    எடப்பாடி பழனிசாமி அரசு 22 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் தோல்வி அடைந்ததும் நிச்சயமாக மெஜாரிட்டியை காட்ட வேண்டிய நிர்ப்பந்தத்தில் தள்ளப்படும். அப்போது ஆட்சியை கலைப்பதற்கு அனைத்து எதிர்க்கட்சிகளும், உதிரிக் கட்சிகளும் இயல்பாகவே கை கொடுப்பது தான் நிதர்சனமான உண்மை. அதற்கு கூட்டணி என்ற பெயர் இல்லை.

    ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு அ.தி.மு.க. மிக மோசமான நிர்வாகம் மற்றும் பா.ஜ.க.வின் அடிமையாகவே செயல்பட்டு வருகின்றன. வருகிற 23-ந் தேதிக்குப் பிறகு தமிழக அரசியலில் மாற்றம் ஏற்படும்.

    23-ந் தேதி வாக்கு எண்ணிக்கைக்கு பிறகு 22 தொகுதிகளிலும் எடப்பாடி தலைமையிலான ஆட்சி தோற்ற பின் நம்பிக்கை தீர்மானம் ஆளுநரிடம் கூற வேண்டும். யாராக இருப்பினும் எங்களது நிலைப்பாடு, எடப்பாடி தலைமைக்கு எதிரானதாக இருக்கும்.

    அ.தி.மு.க. 22 தொகுதிகளிலும் வெற்றி பெற்றால் ஆட்சியை தொடரட்டும். ஆனால் எப்படி 22 தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பு உள்ளது?

    அ.தி.மு.க.வின் சகாப்தம் முடிவடைந்து விட்டது. இந்த நிலையில் தமிழகத்தில் காலூன்ற வாய்ப்பே இல்லை.

    அண்ணா பாதையில் மறப்போம் மன்னிப்போம் என்ற நிலை இருந்தால் மக்கள் ஒரு நாள், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தையும் மறக்க வாய்ப்பு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #AMMK #Thangatamilselvan
    ×