search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரசு பஸ் சிறைபிடிப்பு"

    • கூடுதல் பஸ்கள் இயக்க கோரிக்கை விடுத்து வந்தனர்.
    • பெற்றோர்கள் திடீரென பஸ்சை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் அம்பை அருகே தெற்கு பாப்பான்குளம், மணி முத்தாறு, அயன்சிங்கம்பட்டி, ஜமீன்சிங்கம்பட்டி, வைராவிகுளம் உள்ளிட்ட பல கிராமங்கள் உள்ளது.

    இந்த கிராமங்களில் இருந்து கல்லிடைக்குறிச்சி, அம்பை பகுதிகளுக்கு தினமும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் சுமார் 100-க்கும் மேற்பட்டவர்கள் சென்று வருகின்றனர்.

    இதுதவிர வேலை நிமித்தமாகவும், தொழில் சம்பந்தமாகவும் ஏராள மானவர்கள் அம்பைக்கு சென்று வருகின்றனர். இவ்வாறு செல்பவர்களுக்கு குறைவான எண்ணிக்கையில் பஸ்கள் இயக்கப்படுவதால், அரசு பஸ்சில் போதிய இடவசதி இல்லை என்று தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.

    மேலும் கூட்டம் அதிகமாக இருப்பதால், தெற்கு பாப்பாங்குளம் பகுதியை சேர்ந்த மாணவ-மாணவிகள் பஸ் படிக்கட்டுகளில் தொங்கியபடி தினமும் ஆபத்தான பயணம் செய்ய வேண்டியுள்ளது என்றும் மாணவர்களின் பெற்றோர்கள் குற்றச்சாட்டு தெரிவித்ததோடு, கூடுதல் பஸ்கள் இயக்க கோரிக்கை விடுத்து வந்தனர்.

    ஆனால் மாவட்ட நிர்வாகத்திடம் முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறி இன்று காலை தெற்கு பாப்பாங்குளம் பகுதியில் அரசு பஸ் வழக்கம்போல் வந்தபோது அப்பகுதியை சேர்ந்த மாணவர்கள், அவர்களது பெற்றோர்கள் திடீரென பஸ்சை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. உடனடியாக அங்கு விரைந்து வந்த அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததன் பேரில் அவர்கள் கலைந்து சென்றனர்.

    • போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் முசிறி அரசு போக்குவரத்து பணிமனை மேலாளர் தொலைபேசியில் தகவல் தெரிவிக்கப்பட்டது.
    • பேருந்து சாலப்பட்டி கிராமத்திற்குள் சென்று வர நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது.

    முசிறி:

    முசிறி அருகே வெள்ளூர் அடுத்த சாலப்பட்டி கிராமம் வழியாக முசிறியில் இருந்து மாங்கரைப்பேட்டை, வெள்ளூர், வேப்பந்துறை, மணப்பாறையில், தெற்கு சித்தாம்பூர் ஆகிய கிராமங்களுக்கு காலை மற்றும் மாலை இருவேளை அரசு பேருந்து சென்று வருகிறது.

    இவ்வாறு செல்லும் அரசு பேருந்து சாலப்பட்டி கிராமத்திற்குள் வந்து செல்ல வேண்டும். இதனால் பள்ளி மாணவர்கள் பெரிதும் பயனடைவர் என்று கூறி, அப்பகுதி மக்கள் முசிறி கோட்டாட்சியர் மற்றும் அரசு போக்குவரத்து கிளை மேலாளர் ஆகியோரிடம் மனு அறிவித்துள்ளனர். ஆனால் அந்த மனுக்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் அந்த கிராமத்தின் வழியாக சென்ற பேருந்தினை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் முசிறி அரசு போக்குவரத்து பணிமனை மேலாளர் தொலைபேசியில் தகவல் தெரிவிக்கப்பட்டது. அப்போது பேருந்து சாலப்பட்டி கிராமத்திற்குள் சென்று வர நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது.

    பரமத்தி வேலூர் அருகே அரசு பஸ்சை பொதுமக்கள் சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரிலிருந்து மோகனூர் மற்றும் காட்டுப்புத்தூர் செல்லும் அனைத்து அரசு நகர பஸ்களும் பரமத்தி வேலூர் அருகே உள்ள நன்செய் இடையாறு வழியாக சென்று வருவது வழக்கம். இந்த நிலையில் சில நகர பஸ்கள் கடந்த சில மாதங்களாக நன்செய் இடையாறு கிராமத்திற்குள் வராமல் பரமத்தி வேலூரிலிருந்து ஓலப்பாளையம் வழியாக சென்று வருவதாக கூறப்படுகிறது.

    இதனால் நன்செய் இடையாறில் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள், மாணவ, மாணவிகள் மற்றும் பல்வேறு பணிக்கு செல்வோர் என பலதரப்பட்ட மக்களும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று காட்டுப்புத்தூரிலிருந்து பரமத்தி வேலூர் நோக்கி வந்த அரசு பஸ்சை நன்செய் இடையாரில் பொதுமக்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த பரமத்தி வேலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

    பின்னர் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சமாதானம் அடைந்த பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. முறையான வழித்தடத்தில் பஸ்சை இயக்க உரிய அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
    பொன்னேரி அருகே உள்ள சுற்றுவட்டார கிராமங்களுக்கு சீராக குடிநீர் வழங்க கோரி அப்பகுதி மக்கள் 7 அரசு பஸ்களை சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    பொன்னேரி:

    பொன்னேரி அடுத்த திருப்பாலைவனத்தை சுற்றி காஞ்சிவாயல், ஆலப்பன்நகர், பிரளயம்பாக்கம் உள்ளிட்ட 8 கிராமங்கள் உள்ளன.

    இந்த கிராமங்களுக்கு வேப்பம்பட்டில் இருந்து திருப்பாலைவனத்திற்கு தண்ணீர் கொண்டு வந்து அங்கிருந்து குழாய் வழியாக வினியோகிக்கப்படுகிறது. கடந்த ஒரு மாதமாக குடிநீர் முறையாக வினியோகிக்கவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் பலமுறை முறையிட்டும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

    இந்த நிலையில் இன்று இன்று காலை அப்பகுதி பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் பொன்னேரி- பழவேற்காடு சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அப்போது வந்த 7 அரசு பஸ்களை சிறைப்பிடித்து தண்ணீர் வழங்கினால்தான் பஸ்களை விடுவோம் என்று போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து திருப்பாலைவனம் போலீசார் விரைந்து வந்தனர். மறியலில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதிகாரிகளுடன் பேசி குடிநீர் வழங்க ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்தனர். தற்காலிகமாக டிராக்டர் மூலம் குடிநீர் வழங்கவும் நடவடிக்கை எடுப்பதாக கூறினர். இதையடுத்து மறியலை கைவிட்டனர்.

    ஆனாலும் அந்த பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் கூறுகையில், “ஒரு மாதமாக தண்ணீர் வராததால் கூலி வேலைக்கு போக முடியவில்லை. வாரத்திற்கு ஒருநாள்தான் குளிக்க வேண்டிய நிலை உள்ளது. 5 கிலோ மீட்டர் தூரம் சென்று குடிநீர் பிடித்து வரும் நிலை உள்ளது. இதுபற்றி அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் சாலையில் உட்கார்ந்தோம்” என்றனர்.

    அடிக்கடி ஏற்பட்டு வந்த மின்வெட்டு காரணமாக குடிநீர் வினியோகிக்க முடியவில்லை. மோட்டார் மூலம் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. மின்சார தடையால் மோட்டார் தொடர்ந்து இயக்க முடியாததால் கிராமங்களுக்கு குடிநீர் வினியோகம் பாதித்தது என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.
    நாட்டறம்பள்ளிக்குள் வராமல் பைபாஸ் வழியாக சென்ற அரசு பஸ்சை பொதுமக்கள் சிறைபிடித்து போராட்டத்தல் ஈடுபட்டனர்.

    நாட்டறம்பள்ளி:

    நாட்டறம்பள்ளி தாலுகாவில் 2 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு விவசாயம், கால்நடை வளர்ப்பு, சிறு தொழில், கூலித்தொழில் செய்பவர்கள் அதிகமாக வசிக்கின்றனர். இப்பகு தியை சேர்ந்த 40 சதவீதம் இளைஞர்கள் வெளிநாட்டில் பணி புரிந்து வருகின்றனர்.

    வேலூரில் இருந்து கிருஷ்ணகிரி மற்றும் பெங்களூரு செல்லும் பஸ்களும் அங்கிருந்து வேலூர் நோக்கி வரும் பஸ்களும் நாட்டறம்பள்ளி வழியாக சென்று வந்தாலும், பஸ் நிலையத்துக்கு வராமல் பைபாஸ் வழியாக சென்று வருகிறது.

    நாட்டறம்பள்ளி மேம்பாலத்திலேயே பயணிகளை இறக்கிவிட்டு பஸ் நிலையத்துக்கு செல்வதை புறக்கணித்து வருகின்றனர்.

    இதனால் கடந்த சில ஆண்டுகளாக நாட்டறம் பள்ளியை சேர்ந்த பொதுமக்கள் மேம்பாலத்தில் இருந்து சர்வீஸ் சாலைக்கு செல்ல ஆபத்தான பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

    குறிப்பாக இரவு நேரங்களில் மேம்பாலத்தில் இருந்து கீழே இறங்கிச் செல்லும் வயதானவர்களும் குழந்தைகளும் தடுமாறி விழுந்து எழுந்து செல்லும் நிலை ஏற்படுவதால் பொதுமக்கள் சொல்ல முடியாத துயரத்துக்கு ஆளாகி வருகின்றனர்.

    இது குறித்து போக்குவரத்து மண்டல அலுவலகம், நாட்டறம்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலகம், திருப்பத்தூர் சப்-கலெக்டர் அலுவலகம் என பலரிடம் முறையிட்டும் பஸ் நிலையத்துக்கு பஸ்கள் வந்து செல்ல யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை.

    எனவே, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் முறையிட முடிவு செய்து, கடந்த திங்கட்கிழமை நடந்த மக்கள் குறை தீர்வு கூட்டத்தில் பொதுமக்கள் சார்பில் கோரிக்கைமனு அளிக்கப்பட்டது.

    அம்மனுவில் நாட்டறம் பள்ளி சர்வீஸ் சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும். அதே நேரத்தில் வேலூரில் இருந்து பெங்க ளூருக்கு இயக்கப்படும் பஸ்களும், பெங்களூர், கிருஷ்ணகிரி, சேலம் ஆகிய பகுதிகளில் இருந்து நாட்டறம்பள்ளி வழியாக வேலூர் சென்னை நோக்கிச் செல்லும் அனைத்து பஸ்களும், நாட்டறம்பள்ளி பஸ் நிலையத்துக்குள் செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும். என கூறப்பட்டிருந்தன.

    மனுவை பரிசிலனை செய்த கலெக்டர் ராமன் நாட்டறம்பள்ளி சர்வீஸ் சாலையை விரிவாக்கம் செய்ய ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்என போக்கு வரத்து துறையினருக்கு உத்தரவிட்டார்.

    இதைத் தொடர்ந்து வேலூர் மண்டல போக்குவரத்து துறை அதிகாரிகள் அரசு அலுவலர்கள் மற்றும் போலீசார் சாலை விரிவாக்கம் செய்ய நாட்டறம்பள்ளிக்கு நேற்று காலை சென்றனர்.

    இதையறிந்த பொதுமக்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டனர். அப்போது அனைத்து பஸ்களும் பஸ்நிலையத்துக்கு வந்து செல்ல உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தினர்.

    அவர்களுடன் அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினர். இதற்கிடையில், பெங்குளூருவில் இருந்து வேலூர் நோக்கி வந்த அரசு பஸ்சை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதைத் தொடர்ந்து சென்னை பெங்களூர் நாற்கர சாலை வழியாக செல்லும் ஒரு சில பஸ்களை நாட்டறம்பள்ளி பஸ் நிலையத்துக்குள் சென்றுவர ஒரிரு நாட்களில் ஏற்பாடு செய்யப்படும் என உறுதியளித்தார். இதையேற்று பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    திருவெண்ணைநல்லூர் அருகே அடிக்கடி தடம் எண் மாற்றி வருவதை கண்டித்து அரசு பஸ்சை சிறைபிடித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    திருவெண்ணைநல்லூர்:

    விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ளது மாரங்கியூர் கிராமம். இந்த கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    விழுப்புரத்தில் இருந்து சேத்தூர், பையூர், திருமதுரை உள்ளிட்ட 10 கிராமங்களின் வழியாக மாரங்கியூருக்கு தினமும் காலை 7.30 மணிக்கு அரசு டவுன்பஸ் வந்து பின்னர் 10 நிமிடங்கள் கழித்து விழுப்புரத்துக்கு செல்லும். இந்த பஸ்சில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்வோர் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் தினமும் பயணம் செய்து வருகின்றனர்.

    கடந்த சிலநாட்களாக இந்த அரசு பஸ் மாரங்கியூருக்கு காலை 7.30 மணிக்கு வராமல் ஒவ்வொரு நாளும் வேறு வேறு நேரங்களில் வந்து செல்கிறது. மேலும் அடிக்கடி தடம் எண்ணை மாற்றிக்கொண்டு வருகிறது. இதனால் இந்த பஸ்சை நம்பி இருக்கும் மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்வோர் மிகவும் சிரமமடைந்து வருகின்றனர்.

    இதுகுறித்து விழுப்புரம் போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் பலமுறை புகார் செய்தனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த மாரங்கியூர் மாணவ-மாணவிகள் இன்று காலை அங்குள்ள பஸ் நிறுத்தத்தில் திரண்டனர்.

    அப்போது விழுப்புரத்தில் இருந்து அரசு டவுன்பஸ் 6.30 மணிக்கு வந்தது. அந்த பஸ்சை செல்லவிடாமல் அதனை சிறைபிடித்து மாணவர்கள் போராட்டம் நடத்தினர். பஸ்சை தினமும் ஒரே நேரத்தில் இயக்க வேண்டும், தடம் எண்ணை மாற்றக்கூடாது என கோ‌ஷங்களை எழுப்பினர்.

    தகவல் அறிந்த போக்குவரத்து கழக அதிகாரிகள் அந்த மாணவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இதை ஏற்றுக்கொண்ட மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு பஸ்சை விடுவித்தனர். இதையடுத்து அந்த பஸ்சில் ஏறி மாணவர்கள் பள்ளிக்கு சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
    திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட 27 வார்டுகளிலும் சேரும் குப்பை கழிவுகளை பூங்கா திடல் அமைக்க ஒதுக்கப்பட்ட இடத்தில் கொட்ட நகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    திருவள்ளூர்:

    திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட 27 வார்டுகளிலும் சேரும் குப்பைக் கழிவுகள் எடப்பாளையம் கிராமத்தில் கொட்டப்பட்டு வருகிறது. அதனை சுத்திகரிப்பு செய்ய இடம் தேர்வு செய்யப்பட்டதால் அங்கு மலைபோல் குப்பைகள் குவிந்துள்ளன.

    இந்த நிலையில் 15-வது வார்டு எம்.ஜி.எம். நகரில் நகராட்சி நிர்வாகம் சார்பில் பூங்கா திடல் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டது. ஆனால் அந்த இடத்தில் பூங்கா திடல் அமைப்பதற்கான எந்த பணியும் நடைபெறவில்லை.

    இதற்கிடையே திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட 27 வார்டுகளிலும் சேரும் குப்பை கழிவுகளை பூங்கா திடல் அமைக்க ஒதுக்கப்பட்ட இடத்தில் கொட்ட நகராட்சி நிர்வாகம் திட்டமிட்டு அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

    இதனை அறிந்த அந்த பகுதி பெண்கள், குப்பை கொட்ட எதிர்ப்பு தெரிவித்து ஆவடி, திருவள்ளூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

    அப்போது அவ்வழியே வந்த அரசு பஸ்சை சிறை பிடித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    போலீசார் மற்றும் நகராட்சி அதிகாரிகள் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். குப்பை கொட்டப்படும் இடம் குறித்து உரிய நட வடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு பொது மக்கள் கலைந்து சென்றனர். #Tamilnews
    ×