search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கஜா புயல்"

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட சமூக சேவகர் கணேசனுக்கு நடிகர் ராகவா லாரன்ஸ் ரூ.10 லட்சம் மதிப்பில் புதிதாக வீடு ஒன்றை கட்டிக் கொடுத்து இருக்கிறார்.
    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியை சேர்ந்தவர் கணேசன் (வயது 70). சமூக சேவகரான இவர் 108 ஆம்புலன்ஸ் சேவை போல இலவச கார் சேவை செய்து வருகிறார். பிரசவம், அவசர சிகிச்சையோ என்றால் கணேசனுக்கு போன் செய்தால் போதும் உடனே சம்பவ இடத்திற்கு தனது காரில் சென்று விடுவார். எந்தவித கட்டணமும் இல்லாமல் தமிழகத்தின் எந்த பகுதிக்கும் அழைத்து செல்வார்.

    இதன் மூலம் இதுவரை 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கர்ப்பிணிகளுக்கும், விபத்தில் சிக்கிய 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு உதவி செய்துள்ளார். இது மட்டுமின்றி ஆதரவற்று மரணமடைபவர்களின் உடல்களை மீட்டு அவரே அடக்கம் செய்து வருகிறார்.

    இதுவரை 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அனாதை பிணங்களை மீட்டு அடக்கம் செய்துள்ளார். அவரின் சமூக சேவையை பாராட்டி பல்வேறு அமைப்புகள் விருதுகள் வழங்கியுள்ளன.



    இந்தநிலையில் ஆலங்குடியில் மிகச்சிறிய வீட்டில் வசித்து வந்த கணேசனின் வீடு, கடந்த ஆண்டு தமிழகத்தில் வீசிய கஜா புயலில் பலத்த சேதமடைந்தது. வீட்டை இழந்த அவர் தங்குவதற்கு இடமின்றி தவித்து வந்தார். இதனிடையே புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்வதற்காக ஆலங்குடிக்கு சென்றிருந்த நடிகர் ராகவா லாரன்ஸ், சமூக சேவகர் கணேசனின் சேவையை அறிந்தும், அவர் வீடின்றி தவிப்பதையும் அறிந்து உடனே அவருக்கு உதவி செய்ய முன்வந்தார்.

    அதன்படி ரூ.10 லட்சம் மதிப்பில் புதிதாக வீடு ஒன்று கட்டி கொடுக்க முடிவு செய்து அதற்கான பணிகளையும் தொடங்கினார். கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த வீடு கட்டும் பணி முடிவடைந்து இன்று திறப்பு விழா நடைபெற்றது. இதில் நடிகர் ராகவா லாரன்ஸ் கலந்து கொண்டு வீட்டை திறந்து வைத்து, அதனை கணேசனிடம் ஒப்படைத்தார். தனக்கு வீடு கட்டி கொடுத்து உதவிய ராகவா லாரன்சுக்கு கணேசன் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார். மேலும் பொதுமக்களும் பாராட்டு தெரிவித்தனர். 
    வேதாரண்யம் பகுதியில் கஜா புயலில் பனை மரங்கள் விழுந்ததால் நுங்கு விலை அதிகரித்துள்ளது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுக்கா நாலுவேதபதி, கோவில்பத்து வெள்ளம்பள்ளம், வேட்டைக்காரனிருப்பு, மணக்குடி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் பனை மற்றும் தென்னை மரங்கள் லட்சக்கணக்கில் இருந்தன. இவை அணைத்தும் கஜா புயலில் விழுந்து விட்டது.

    இதனால் கோடையின் வெப்பத்தை தணிக்க பனைநுங்குகளையும் இளநீரையும் மக்கள் அதிகம் பயன்படுத்தும் வேளையில் அதற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் கூடுதல் விலைகொடுத்து பனை நுங்கையும், இளநீரும் வாங்கி சாப்பிடுகின்றனர்.

    கஜா புயலின் கோரதாண்டவத்தால் பனை, தென்னை போன்ற மரங்கள் முற்றிலும் பாதிக்கப்பட்டது. இந்த கோடை வெப்பத்திலிருந்து தங்களை பாதுகாத்து கொள்ள அதிக அளவில் இயற்கையாக இப்பகுதியில் கிடைக்கும் பனைநுங்கு மற்றும் இளநீரை விரும்பி சாப்பிடுகின்றனர். தற்போது பனைநுங்கு மற்றும் இளநீர் போதிய அளவு கிடைக்கவில்லை. இதனால் வெளியூரிலிருந்து வியாபாரிகள் இளநீர் மற்றும் பனைநுங்கை கொண்டு வந்து இளநீர் ரூ.40க்கும், பனைநுங்கு ரூ.10-க்கு மூன்றும் என விற்பனை செய்கிறார்கள்.

    இயற்கையாக இப்பகுதியில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இலவசமாக சாப்பிட்ட பனைநுங்கை தற்போது காசு கொடுத்து வாங்கி சாப்பிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். காசு கொடுத்தாலும் அதிக அளவில் இளநீர் மற்றும் நுங்கு கிடைக்காமல் ஏமாற்றம் அடைகின்றனர்.

    கஜா புயல் நிவாரணம் கோரி நாகையில் மறியலில் ஈடுபட்ட 140 பேர் மீதான வழக்குக்கு சென்னை ஐகோர்ட் இன்று தடை விதித்துள்ளது. #CycloneGaja #HC
    சென்னை:

    கஜா புயலின் போது நிவாரணம் கேட்டு நாகையில் மறியலில் ஈடுபட்ட 140 பேர் மீதான வழக்கு வேதாரண்யம் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், வேதாரண்யம் நீதிமன்றத்தில் உள்ள வழக்கு விசாரணைக்கு சென்னை ஐகோர்ட் இன்று இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டு உள்ளது. #CycloneGaja #HC
    வேலூர் தொகுதியுடன் குடியாத்தம், ஆம்பூர் சட்டமன்ற இடைத்தேர்தலையும் நிறுத்த சதி செய்கின்றனர் என்று கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார். #kbalakrishna

    சென்னை:

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் ‘மாலை மலர்’ நிருபரிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் மத சார்பற்ற கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. நான் பிரசாரம் செய்யும் இடங்களில் மக்கள் எழுச்சியை காண முடிந்தது. தெருமுனை கூட்டம் போட்டால் கூட 2 ஆயிரம் பேர் கூடுகின்றனர்.

    இதற்கு மத்திய-மாநில அரசு மீதான வெறுப்பு தான் முக்கிய காரணமாகும்.

    பிரதமர் மோடி தமிழகத்துக்காக எந்தவித நன்மையும் செய்யவில்லை. ஒக்கி புயல், கஜா புயல், வர்தா புயல் எதற்கும் போதிய நிவாரண நிதியை ஒதுக்கவில்லை. புயல் சேதத்தையும் வந்து பார்வையிட வில்லை. விலைவாசி உயர்வால் பெண்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர்.


     


    மத்திய அரசை தட்டிக் கேட்கும் நிலையில் மாநில அரசு இல்லை. பிரதமர் மோடி சொல்வதை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அப்படியே கேட்கிறார்.

    இதனால் தான் தமிழக மக்களுக்கு மோடி மீது வெறுப்பு ஏற்பட்டுவிட்டது. தேர்தலுக்காக அவர் பிரசாரத்துக்கு வந்தாலும் மோடிக்கு ஆதரவான எண்ணம் வரவில்லை. அவர் அடிக்கடி பிரசாரத்துக்கு வருவது எங்களுக்கு நல்லது தான்.

    வேலூர் தொகுதியில் பணம் பிடிபட்டது தொடர்பாக பல்வேறு தகவல்கள் வருகிறது. எங்களுக்கு வரும் செய்தி என்னவென்றால், வேலூர் தொகுதியுடன் குடியாத்தம், ஆம்பூர் சட்டமன்ற இடைத்தேர்தலையும் நிறுத்த சதி நடப்பதாக அறிகிறோம். எங்களது வேண்டுகோள் தேர்தலை நிறுத்தக்கூடாது என்பது தான்.

    இவ்வாறு அவர் கூறினார். #kbalakrishna

    கஜா புயலில் பாதித்த மக்களுக்கு பிரதமர் மோடி ஆறுதல் கூட கூறவில்லை என்று வைகோ தேர்தல் பிரசாரம் பேசியுள்ளார். #vaiko #gajacyclone

    திருவோணம்:

    தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு பஸ் நிலையத்தில் தஞ்சை பாராளுமன்ற தி.மு.க. வேட்பாளர் எஸ்.எஸ்.பழனி மாணிக்கத்தை ஆதரித்து ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ பிரசாரம் செய்தார்.

    கல்லணை கால்வாய் சீரமைப்பு திட்டத்தை இப்பகுதிக்கு சுமார் ரூ.450 கோடி செலவில் பழனிமாணிக்கம் நிறைவேற்றியுள்ளார்.

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட இந்த மாவட்டத்தை மோடி பார்வையிடவில்லை. ஆறுதல் கூட தெரிவிக்க வில்லை. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய எந்த நிவாரண உதவியும் முறையாக வழங்கப்படவில்லை.

    தமிழகத்தில் தொழிற்சாலைகளை தொடங்க எடப்பாடி அரசு லஞ்சம் கேட்டதால் வேறு மாநிலங்களுக்கு அவை சென்றுவிட்டன. பல பணக்காரர்கள் வங்கிகளில் பணத்தை கொள்ளையடித்து மோசடி செய்துவிட்டு பிரதமர் மோடியின் தயவால் வெளிநாடுகளுக்கு தப்பி சென்று விட்டனர்.

    எனவே மக்களுக்கு விரோதமான மத்தியிலும், மாநிலத்திலும் உள்ள ஆட்சியை அகற்ற நமது தஞ்சை பாராளுமன்ற தி.மு.க. வேட்பாளர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கத்தை உதய சூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெற செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. மாவட்ட செயலாளர் துரை.சந்திர சேகரன், திருவோணம் ஒன்றிய செயலாளர் மகேஷ் கிருஷ்ணசாமி, ஒன்றிய செயலாளர்கள் காந்தி, செல்வராஜ், நகர செயலாளர் கிருஷ்ணகுமார் உள்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர். #vaiko #pmmodi  

    பாராளுமன்ற தேர்தலில் குக்கர் சின்னத்தில் போட்டியிடுவோம் என்று கடலூரில் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. பேசினார். #dinakaran #parliamentelection

    கடலூர்:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கடலூர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்து மக்கள் சந்திப்பு பயணத்தை நடத்தி வருகிறார். நேற்று மாலை அவர் கடலூர் உழவர் சந்தை, ரெட்டிச்சாவடி, குள்ளஞ்சாவடி, குறிஞ்சிப்பாடி போன்ற பகுதிகளில் சுற்றுப்பயணம் செய்தார்.

    பொதுமக்கள் மத்தியில் திறந்த ஜீப்பில் நின்றபடி டி.டி.வி. தினகரன் பேசினார்.

    வருகிற ஏப்ரல் மாதம் இறுதியில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தல் முடிந்தவுடன் தமிழகத்தில் உள்ள 21 சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் வருகிறது. பாராளுமன்ற தேர்தல் வர இருக்கும் சமயத்தில் இன்று கூட்டணி என்ற நாடகம் கடந்த ஒரு வாரமாக நடப்பதை நீங்கள் பார்க்கிறீர்கள்.

    தமிழ்நாட்டு மக்கள் மீது அக்கறை செலுத்துவதை விட எப்படியாவது தேர்தலில் வெற்றி பெற்று மத்தியில் அமைச்சர் பொறுப்பை வாங்கி தங்கள் நிலையை பாதுகாத்து கொள்ள தங்களை பலப்படுத்திக் கொள்ள ஒரு கூட்டணியை அ.தி.மு.க. அமைத்து உள்ளது.

    தமிழகத்தை வஞ்சிக்கிற மத்திய பாரதீய ஜனதா கட்சியும், தமிழக மக்களால் வெறுக்கப்பட்டு உள்ள ஆளுங்கட்சியும், முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஒரு குற்றவாளி என்றும் தற்போது உயிரோடு இருந்திருந்தால் அவர் சிறைச்சாலையில் இருந்து இருப்பார் என்றும் தவறாக பேசியவர்களும் கூட்டணி வைத்துள்ளார்கள்.

    காவிரி டெல்டா பகுதியில் விவசாயிகளை பாதிக்கும் வகையில் மக்களை அச்சுறுத்தும் திட்டமான மீத்தேன் திட்டம், ஹைட்ரோ கார்பன் திட்டம் ஆகியவைகளுக்கு அனுமதி தந்தது காங்கிரஸ் ஆட்சி. இதனை அனுமதித்தது தி.மு.க. ஆட்சி. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தான் இந்த திட்டத்துக்கு அனுமதி அளித்து தொடங்கி வைத்தார். ஆனால் ஜெயலலிதா இந்த திட்டத்தை வராமல் மக்கள் நலன் கருதி தடுத்தார்.

    ஆனால் ஜெயலலிதா பெயரை சொல்லி ஆட்சி நடத்துபவர்கள் மத்திய அரசுக்கு பணிந்து விட்டனர். தமிழகத்தில் பா.ஜ.க.வின் கிளை கட்சியாக அ.தி.மு.க. செயல்பட்டு வருகிறது.

    தற்போது தமிழ்நாட்டுக்கு பிரதமர் மோடி 2 முறை வந்து விட்டார். ஆனால் கஜா புயல் தாக்கியபோது மக்கள் பாதிக்கப்பட்டபோது வராதவர்கள் தற்போது வாக்குகளுக்காக வருகிறார்கள். அவர்களை நீங்கள் முறியடிக்க வேண்டும்.

    ஜெயலலிதா இருக்கும்போது கடலூர் பாராளுமன்ற தொகுதி உள்பட 37 தொகுதியில் வேட்பாளர்களை வெற்றி பெற செய்தீர்கள். அதுபோல 95 சதவீதம் தொண்டர்களை வைத்திருக்கும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளர்களை வெற்றி பெறச்செய்ய வேண்டும்.

    வரும் பாராளுமன்ற தேர்தலில் அ.ம.மு.க. குக்கர் சின்னத்தில்தான் போட்டியிடும். எத்தனை சதி நடந்தாலும் உச்சநீதிமன்றம் சென்று இந்த சின்னத்தை பெறுவோம். இளைஞர்களும், மக்களும் எங்களுடன் இருப்பதால் வேறு கூட்டணி தேவையில்லை.

    வரும் தேர்தலில் பிரதமரை நிர்ணயம் செய்பவர்கள் தமிழக மக்களாகத் தான் இருப்பார்கள். அப்படியொரு வாய்ப்பினை அ.ம.மு.க.வினருக்கு பொதுமக்கள் வழங்க வேண்டும்

    இவ்வாறு அவர் பேசினார். #dinakaran #parliamentelection

    60 லட்சம் ஏழை குடும்பங்களுக்கு ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்டத்தை சென்னையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 4-ந்தேதி தொடங்கி வைக்கிறார். #EdappadiPalaniswami
    சென்னை:

    ‘கஜா’ புயலின் தாக்கத்தினாலும், பருவ மழை பொய்த்ததன் காரணமாகவும் தற்போது ஏற்பட்டுள்ள வறட்சியினாலும் ஏழை மக்கள் பாதிக்கப்பட்டு இருப்பதை கருத்தில் கொண்டு, தமிழ் நாடு முழுவதும் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் தலா ரூ. 2 ஆயிரம் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் கடந்த 11-ந்தேதி அறிவித்தார்.

    விவசாயத் தொழிலாளர்கள், நகர்ப்புற ஏழைகள், பட்டாசுத் தொழிலாளர்கள், மீன்பிடி தொழிலாளர்கள், விசைத்தறி தொழிலாளர்கள், கைத்தறி தொழிலாளர்கள், கட்டுமானத்தொழிலாளர்கள், சலவைத் தொழிலாளர்கள், மரம் ஏறும் தொழிலாளர்கள், உப்பளத் தொழிலாளர்கள், காலணி மற்றும் தோல் பொருட்கள் தயாரிக்கும் தொழிலாளர்கள், துப்புரவுத் தொழிலாளர்கள், மண்பாண்டத் தொழிலாளர்கள், கைவினைஞர்கள் மற்றும் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்ற ஏழைத் தொழிலாளர் குடும்பங்களுக்கு இந்த ஆண்டு தமிழ்நாடு அரசின் சிறப்பு நிதியுதவியாக தலா 2,000 ரூபாய் வழங்கப்படும் என்றார்.

    இதற்காக ரு.120 கோடி நிதி ஒதுக்கப்பட்டு துணை பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

    ரூ.2 ஆயிரம் வழங்கும் இந்த திட்டத்தை சென்னையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 4-ந்தேதி தொடங்கி வைக்கிறார்.

    இந்த திட்டத்தின் கீழ் கிராமப்புறத்தில் வாழும் சுமார் 35 லட்சம் ஏழைக் குடும்பங்களும், நகர்ப்புறத்தில் வாழும் சுமார் 25 லட்சம் ஏழைக் குடும்பங்களும், ஆக மொத்தம் வறுமைக் கோட்டிற்குக்கீழ் வாழும் சுமார் 60 லட்சம் ஏழைக் குடும்பங்கள் தலா 2,000 ரூபாய் சிறப்பு நிதி உதவியைப்பெறுவார்கள்.

    இந்த திட்டத்தில் பட்டியல் எடுக்கும் போது விடுபட்ட பயனாளிகள் இருந்தால் அவர்களுக்கும் ரூ. 2 ஆயிரம் கிடைக்க வழி வகை செய்ய வேண்டும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். #EdappadiPalaniswami

    பாராளுமன்ற தேர்தலில் திருச்சி தொகுதியில் போட்டியிடுவேனா என்பது குறித்து உயர் நிலை குழு கூட்டம் முடிவு செய்யும் என்று வைகோ கூறியுள்ளார். #Vaiko #parliamentelection

    பீளமேடு:

    ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ இன்று கோவை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது-

    சமூக ஆர்வலர் முகிலன் உயிருக்கு ஆபத்து உள்ளது. அரசு இந்த பிரச்சினையை மெத்தனமாக கையாளுவது கவலைக்குரியதாக இருக்கிறது.

    அவர் குறித்த எந்த தகவல்களும் இதுவரை இல்லை என்பதால் எனக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.முகிலன் மகன் கார்வேந்தன் கோவை பீளமேட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். தந்தை காணாமல் போன விவகாரம் பற்றி புகார் மனு அளித்துள்ளார். இருந்தபோதும் அரசு மற்றும் காவல் துறை விசாரணை சரி வர இல்லை. அவர் உயிர் பற்றிய அச்சம் ஏற்பட்டுள்ளது.

    கன்னியாகுமரி வரும் மோடிக்கு கருப்பு கொடி காட்டப்படும். திருப்பூர் வந்த போது அவருக்கு கருப்பு கொடி காட்டிய போது என் மீது ஒரு பெண்ணை ஏவி செருப்பு வீச செய்தனர். இருந்த போதும் அவரை பத்திரமாக அனுப்பி வைத்தோம்.

    வன்முறையில் எங்களுக்கு உடன்பாடில்லை என்பதற்கு இது ஒரு உதாரணம்.தொடர்ந்து மத்திய அரசு தமிழகத்தை வஞ்சித்து வருகிறது. மேகதாது அணை, நியூட்ரினோ திட்டம், முல்லை பெரியார் அணை, ஸ்டெர்லைட் உட்பட அனைத்து வி‌ஷயங்களிலும் தொடர்ந்து தமிழகத்திற்கு துரோகம் செய்து வருகிறது.

    வேளாண் மண்டலத்தைக் அழிக்க பல்வேறு திட்டங்களைக் கொண்டு வருவது. உயர் மின் கோபுரம் திட்டங்கள் ,நியூட்ரினோ உள்ளிட்ட பல்வேறு திட்டங்களைக் தமிழகத்தில் திணிக்க முயலும் மோடி அரசுக்கு தொடர்ந்து எதிர்ப்பு காட்டப்படும். எத்தியோப்பியா போல தமிழக டெல்டா மாவட்டங்களை உருவாக்க மத்திய அரசு செயல்பட்டு வருகிறது.


    தி.மு.க.வுடன் நடத்தும் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை திருப்தி கரமாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது. நான் திருச்சியில் போட்டியிடுவேனா என்பது குறித்து உயர் நிலை குழு கூட்டம் முடிவு செய்யும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Vaiko #parliamentelection

    மக்கள் நீதிமய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசன் டெல்லியில் எங்கள் கட்சியின் தேசிய தலைவர்களை சந்தித்து தேர்தல் கூட்டணி குறித்து பேசினார் என்று கே பாலகிருஷ்ணன் கூறியுள்ளார். #kbalakrishnan #kamal #marxistcommunist

    சிதம்பரம்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தி.மு.க.கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. 2 தினங்களில் பேச்சு வார்த்தை சுமுகமாக முடியும். தமிழக பிரச்சனைக்காக பாராளுமன்றத்தில் அ.தி.மு.க. எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டு இடைநீக்கம் செய்யப்பட்டனர். ஆனால் தற்போது அதே பா.ஜ.கவுடன் அ.தி.மு.க. கூட்டணி வைத்துள்ளது.

    பிரதமர் நரேந்திரமோடி குஜராத்தில் ரூ.3 ஆயிரம் கோடியில் படேல் சிலையை திறந்து வைத்தார். ஆனால் தமிழகத்தில் கஜா புயல் பாதிப்புக்கு ரூ.300 கோடி மட்டுமே நிதி வழங்கியுள்ளார். தமிழக நலனுக்கு எதிராக செயல்படும் பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணி வைத்துள்ளது.

    இந்த கூட்டணி பாராளுமன்ற தேர்தலில் படுதோல்வி அடையும். ஜெயலலிதா தற்போது உயிருடன் இருந்திருந்தால் பா.ஜ.க., பா.ம.க.வுடன் கூட்டணி வைத்திருக்கமாட்டார்.


    மக்கள் நீதிமய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசன் டெல்லியில் எங்கள் கட்சியின் தேசிய தலைவர்களை சந்தித்து தேர்தல் கூட்டணி குறித்து பேசியுள்ளார். அதற்கு தமிழகத்தில் தி.மு.க.வுடன் இணைந்து வலுவான கூட்டணி அமைப்பது என முடிவு செய்துள்ளதால், தங்களுடன் கூட்டணி குறித்து பேச வாய்ப்பில்லை. நட்புடன் இருப்போம் என்று எங்களது கட்சித்தலைவர்கள் அவருக்கு பதில் அளித்துள்ளனர்.

    பாராளுமன்ற தேர்தலுடன் 21 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் இடைத் தேர்தலை நடத்த வேண்டும். அப்படி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டால் தி.மு.க. கூட்டணியில் போட்டியிட தொகுதிப் பங்கீடு கோரப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #kbalakrishnan #kamal #marxistcommunist

    முத்துப்பேட்டை அருகே குடிநீர் வழங்ககோரி பொதுமக்கள் நூதன போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

    முத்துப்பேட்டை:

    திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த உப்பூர் கிராமத்தில் புயலால் சேதமடைந்த சாலைகளை சீரமைக்காத அரசை கண்டித்தும், அதனை உடனே சீரமைக்க கோரியும், கஜா புயலுக்குப் பிறகு குடிநீர் விநியோகம் செய்யாத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்தும், குடிநீர் வழங்கிட வேண்டியும், புயலால் பழுதடைந்த தெருவிளக்குகளை உடனே சரி செய்யக்கோரியும், ஊராட்சியில் உள்ள உட்புற சாலைகளை சீர் செய்ய கோரியும் உப்பூர் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு கிழக்கு கடற்கரை சாலையில் சடங்கு நடத்தி மக்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    போராட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஒன்றியக்குழு உறுப்பினர் உப்பூர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். கிராம கமிட்டி தலைவர் ராஜேந்திரன், சமூக ஆர்வலர் செல்வரெத்தினம், நாம் தமிழர் கட்சி நிர்வாகி பாரதிராமன் மற்றும் கிராம கமிட்டியை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் முன்னிலை வகித்தனர்.

    முன்னதாக கிராம மக்கள் காலி குடங்களுடன் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தென்னை மட்டையை சாலையில் வைத்து அதில் குடங்களை அடுக்கி வைத்து சடங்கு செய்து தங்களது கோரிக்கைகள் குறித்து கோ‌ஷங்கள் எழுப்பினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    இதுபற்றி தகவல் கிடைத்ததும் முத்துப்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் கலைராஜன், இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் ஊரக வளர்ச்சி துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். விரைவில் கோரிக்கை நிறைவேற்றித்தரப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தனர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கலைந்து சென்றனர்.

    மக்கள் பிரச்சினைகளை கவனிக்காமல் ரஜினிகாந்த் முதல்வர் பதவிக்கு மட்டும் ஆசைப்படுவது ஏன் என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். #seeman #rajinikanth #parliamentelection

    சென்னை:

    சீமான், ஆர்.கே.சுரேஷ் இருவரும் இணைந்து அமீரா என்ற படத்தில் நடிக்கிறார்கள். மலையாள நடிகை அனு சித்தாரா கதாநாயகியாக நடிக்கிறார். படத்தின் பூஜை ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள முனீஸ்வரன் கோவிலில் நடைபெற்றது.

    இந்த நிகழ்வில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும், இயக்குநரும் நடிகருமான சீமான், ஆர்.கே.சுரேஷ், அனு சித்தாரா, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    விழாவில் சீமான் பேசியதாவது:-

    “இது தமிழ் தலைப்பு அல்ல தான். ஆனால் இஸ்லாமிய பெண் ஒருவரைச் சுற்றி நடக்கும் பிரச்சனைகளைப் பற்றிய கதை. அதனால் அமீரா என பெயர் வைத்துள்ளோம். படங்கள் இயக்கினாலும் அரசியல்வாதியாக இருந்தாலும் ஒரு நடிகனாகத் தான் நம்மை சட்டென அடையாளம் கண்டு கொள்கிறார்கள்.

    திரையுலகத்தை நாங்கள் ஒரு வலிமைமிக்க கருவியாக பார்க்கிறோம். அது வெறும் பொழுதுபோக்கு சாதனம் அல்ல. நடிகர்கள் நாடாளக்கூடாது என்று சொல்லும் சீமான் திரைத் துறையில் இருந்துதானே வந்திருக்கிறார் என பலரும் கேட்கிறார்கள்.

    நான் எனது ரசிகர்களை சந்தித்து அவர்களை தொண்டர்களாக மாற்றி கட்சியைத் துவங்கவில்லை. என்னுடைய பிறப்பு, வளர்ப்பு, பாதை, பயணம் எல்லாமே வேறு. கமல் ரஜினி இவர்களெல்லாம் திரைப்படத்துறையில் இருந்து வருகிறார்கள்.

    தி.மு.க., அ.தி.மு.க. ஊழல் கட்சி என்பது இப்போதுதான் இவர்களுக்கு தெரிந்ததா? இவ்வளவு நாள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? ரஜினிகாந்திடம் கஜா புயலில் பாதிக்கப்பட்டவர்களை ஏன் சென்று சந்திக்கவில்லை எனக் கேட்டால் நான் இன்னும் முழு நேர அரசியலுக்கு வரவில்லை என்கிறார்.

    அப்படியானால் தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்டவர்களை பார்ப்பதற்கு எதற்காக சென்றார்? எந்த நிகழ்வுகளிலும் பங்கெடுத்துக் கொள்ளமாட்டேன் ஆனால் சட்டமன்ற தேர்தலில் நின்று நேராக முதல்-அமைச்சர் நாற்காலியில் தான் போய் உட்காருவேன் என்று சொன்னால் அதை எப்படி ஏற்றுக்கொள்வது?

    தண்ணீர் பிரச்சினையை தீர்ப்பதற்கு ஓட்டு போடுங்கள் என்றுசொல்லும் ரஜினிகாந்த் அதை யார் தீர்ப்பார் என தன் பின்னால் இருப்பவர்களுக்கு சுட்டிக்காட்ட வேண்டும் அல்லவா? அப்படி செய்தால் தான் அவருக்கு பெயர் வழிகாட்டி. அவருக்கு பெயர்தான் தலைவன்.


    உங்களுக்கு எது சரி என்று படுகிறதோ அதைச் செய்துவிட்டுப் போங்கள் என்று சொல்வதற்கு ஒரு தலைவன் தேவை இல்லை. நடுநிலை வகிக்கிறேன் என இப்படிக் கூறுவது ஒரு மேம்போக்கான அறிவிப்பு.

    அதைத்தான் நாம் விமர்சிக்கிறோம். அடுத்ததாக நான் சிலம்பரசனை வைத்து எடுக்கப்போகிற படம் எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தப்போகிறது என்பதையும் நீங்கள் பார்க்கத்தான் போகிறீர்கள். அதனால்தான் நான் சினிமாவை ஒரு துப்பாக்கி போல, ஒரு கோடாரி போல, ஒரு அரிவாள் போல பயன் படுத்துகிறேன்.

    நாங்களும் பேசாமல் இருந்து விடுகிறோம். தேர்தலில் தனியாக நிற்கிறீர்களே என்கிறார்கள். நான் தனியாக நிற்பதால் யாருக்கு நட்டம்? மற்ற கூட்டணிகளுக்கு நட்டம் என்றால் அதை பற்றி நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள்? இப்போது அவர்கள் அமைப்பது கூட்டணியா? இல்லை. வெறும் நோட்டணி.. சீட்டணி.. என்னையாவது விடுங்கள்.. அப்படி என்றால் மக்களுக்கு நம்பிக்கையானவர்கள் யார் தான் என சொல்லுங்கள்.. தனியாக நின்று விட்டுப் போகிறேன்’.

    இவ்வாறு அவர் பேசினார். #seeman #rajinikanth #parliamentelection

    கந்தர்வகோட்டை அருகே கிராம நிர்வாக உதவியாளரை தாக்கிய விவசாயியை விசாரணைக்காக போலீஸ் நிலையம் அழைத்து வந்த போது தப்பி ஓடினார்.
    கந்தர்வகோட்டை:

    கந்தர்வகோட்டையை அடுத்துள்ள மட்டங்கால் கிராமத்தை சேர்ந்தவர் நடராஜன் (வயது 40). விவசாயி. இவர் கடந்த நவம்பர் மாதம் வீசிய கஜா புயலினால் தனது வீடு பாதிக்கப்பட்டதாகவும், இதற்காக அரசின் நிவாரண உதவி கேட்டும் விண்ணப்பித்திருந்தார். ஆனால் பல நாட்கள் ஆகியும் நிவாரணம் கொடுக்கப்படவில்லை. 

    இந்நிலையில் இது சம்பந்தமாக விசாரிக்க நடராஜன் நேற்று மாலை 5 மணி அளவில் கந்தர்வகோட்டை தாலுகா அலுவலகம் சென்றார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த கிராம நிர்வாக உதவியாளர் துரையிடம் தாசில்தாரை நேரில் பார்க்க வேண்டும் என்றும், தனக்கு ஏன் நிவாரணம் வழங்காமல் காலதாமதம் செய்கிறீர்கள் என்றும் நடராஜன் கேட்டுள்ளார். அப்போது கிராம நிர்வாக உதவியாளர் துரை அலுவலகத்தில் அதிகாரிகளுக்கான கூட்டம் நடைபெறுகின்றது சிறிது நேரம் கழித்து வாருங்கள் பார்க்கலாம் என்று கூறி உள்ளார்.

    இந்நிலையில் இதுதொடர்பாக இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர். இதுகுறித்து கிராம நிர்வாக உதவியாளர் துரை கந்தர்வகோட்டை போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் நடராஜனை போலீசார் கைது செய்து போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தனர். அப்போது நடராஜன் டீ குடித்து வருவதாக கூறிவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து தப்பி ஓடிய நடராஜனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    ×