என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சுற்றுலா பயணி"
கன்னியாகுமரி:
சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலா பயணிகள் வருகிறார்கள்.
கோடை விடுமுறை காலம் என்பதால் வெளிமாவட்ட சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் காரில் கன்னியாகுமரி வருகிறார்கள். அதிகாலையில் கன்னியாகுமரி வந்து சேரும் அவர்கள் பழைய பஸ் நிலையம் அருகே கார்களை நிறுத்தி விட்டு முக்கடல் சங்கம பகுதியில் சூரிய உதயம் பார்க்க செல்வது வழக்கம்.
புதுக்கோட்டை மாவட்டம் சின்னையா நகரைச் சேர்ந்த சரவணன்(வயது36) என்பவரும் நேற்று அதிகாலை குடும்பத்துடன் காரில் கன்னியாகுமரி வந்தார்.
சரவணன், அவரது காரை கன்னியாகுமரி பழைய பஸ் நிலைய பகுதியில் உள்ள கார் பார்க்கிங் பகுதியில் நிறுத்தினார். பின்னர் கார் கதவுகளை பூட்டி விட்டு சூரிய உதயம் பார்க்க கடற்கரைக்கு சென்றார்.
திரும்பி வந்த போது காரின் முன்பக்க கண்ணாடி உடைக்கப்பட்டிருந்தது. மேலும் காரின் சீட்டில் வைக்கப்பட்டிருந்த பேக்கும் மாயமாகி இருந்தது. அந்த பேக்கில் 4¼ பவுன் தங்க நகைகளும், ரூ.4500 ரொக்க பணமும் இருந்தது.
காரின் கண்ணாடியை உடைத்து நகை, பணம் திருடப்பட்டது பற்றி சரவணன் கன்னியாகுமரி போலீசில் புகார் செய்தார். அவர் காரை நிறுத்தி விட்டு செல்வதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் தான் கார் கண்ணாடியை உடைத்து நகை, பணத்தை திருடி இருக்க வேண்டும் என்று சரவணன் கூறினார்.
இது தொடர்பாக கன்னியாகுமரி போலீசார் வழக்கு பதிவு செய்து சுற்றுலா பயணியிடம் நகை, பணம் திருடிய மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் கோடை சீசனையொட்டி சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. ஒரு வாரத்துக்கு பின்னர் ஊட்டி மற்றும் குன்னூர் பகுதிகளில் நேற்று பிற்பகலில் மழை பெய்யத்தொடங்கியது. சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
வெயில் வாட்டி வதைத்த நிலையில் இந்த திடீர் மழை அந்த பகுதி மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளை மகிழ்ச்சியடைய செய்தது. மலைக்காய்கறிகளுக்கு ஏற்றதாக இந்த மழை உள்ளது என்று விவசாயிகள் கூறினர்.
இது தவிர அரசு மற்றும் தனியார் பூங்காக்களில் மலர்ச்செடிகளுக்கு இந்த மழை மிக அவசியம் என்று பூங்கா பராமரிப்பாளர்கள் தெரிவித்தனர். கனமழையால் ஊட்டி படகு சவாரி நிறுத்தப்பட்டது. சுமார் 3 மணி நேரம் பெய்த மழையால் மாவட்டத்தில் நிலவிய வெப்பம் தணிந்தது.
சமவெளிப்பகுதியில் நிலவும் கடும் வெப்பத்தில் இருந்து தப்பிக்க கடந்த ஞாயிற்றுக்கிழமை மட்டும் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவுக்கு 25 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர்.
நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் தொடங்கி உள்ளது. இதனால் வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்து செல்கின்றனர். குறிப்பாக முதுமலை புலிகள் காப்பகத்தை சுற்றி பார்க்க தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இங்கு குடும்பத்துடன் வரும் சுற்றுலா பயணிகள் வாகன சவாரி மற்றும் யானை சவாரி செய்து, இயற்கை எழில் காட்சிகள் மற்றும் வனவிலங்குகளை கண்டு ரசிக்கின்றனர்.
முதுமலையில் கும்கி யானைகள் மூலம் காலை மற்றும் மாலை நேரங்களில் சவாரி நடத்தப்படுகிறது. தற்போது யானை சவாரி செய்ய சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். முதுமலையில் ஆரம்பத்தில் 2 கும்கி யானைகள் மூலம் யானை சவாரி நடத்தப்பட்டு வந்தது. இதனால் யானை சவாரி செய்ய வரும் பெரும்பாலான சுற்றுலா பயணிகள் கால தாமதத்தால் சவாரி செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல்லும் நிலை ஏற்பட்டது. ஆனால் இந்த ஆண்டு சுற்றுலா பயணிகளுக்காக முதல் முறையாக 6 கும்கி யானைகள் மூலம் சவாரி நடத்த புலிகள் காப்பக நிர்வாகம் நடவடிக்கை எடுத்து உள்ளது. இதற்காக சங்கர், உதயன், விஜய், இந்தர், சுமங்கலா, பொம்மன் ஆகிய யானைகளுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கபட்டது.
பயிற்சி முடிந்ததை அடுத்து கடந்த ஒரு வார காலமாக யானை சவாரி தொடங்கப்பட்டு உள்ளது. இதனால் நாள் ஒன்றுக்கு 24 முறை யானை சவாரி நடத்தப்படுகிறது. கூடுதல் யானைகளை கொண்டு சவாரி நடத்தப்படுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். இதுகுறித்து தெப்பக்காடு முன்பதிவு மைய வனச்சரகர் விஜய் கூறும்போது, முதுமலையில் இதுவரை 2 யானைகள் மூலம் காலை 2 முறை மாலை 2 முறை என 4 முறை சவாரி நடத்தப்பட்டு வந்தது. இதனால் யானை சவாரி செல்ல விரும்பும் சுற்றுலா பயணிகள் கால தாமதம் காரணமாக ஏமாற்றம் அடையும் நிலை இருந்தது.
ஆனால் தற்போது 6 யானைகள் மூலம் சவாரி அனுப்புகிறோம். இதற்கு சுற்றுலா பயணிகளிடம் நல்ல வரவேற்பு கிடைத்து உள்ளது. இதற்காக ரூ.1,120 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது என்றார்.
தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில், கடந்த 1982-ம் ஆண்டு மலைப்பகுதி மேம்பாட்டு திட்ட நிதியின் கீழ் ஊட்டி மத்திய பஸ் நிலையம் அருகே மரவியல் பூங்கா தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் குளிர்பிரதேசங்களில் வளரக்கூடிய சுமார் 60 வகை மரங்கள் பூங்காவில் நடப்பட்டு, அவை வளர்க்கப்பட்டும், பராமரிக்கப்பட்டும் வந்தது. இதற்கிடையே பூங்காவை சுற்றி தடுப்பு வேலிகள் அமைக்கப்படாததாலும், போதிய பராமரிப்பு இல்லாததாலும் பொலிவிழந்து காணப்பட்டது. இதையடுத்து பூங்காவை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
கடந்த 2006-2007-ம் ஆண்டு மலைப்பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.14 லட்சம் செலவில் பூங்கா புனரமைக்கப்பட்டு, சுற்றிலும் தடுப்புச்சுவர்கள் கட்டப்பட்டது. மேலும் கூடுதலாக மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன. பூங்காவின் மொத்த பரப்பளவு 1.58 ஹெக்டேர் ஆகும். பூங்காவில் நடைபாதையின் இருபுறங்களிலும் பல்வேறு வகையான மலர் செடிகள் காணப்படுகிறது. மரங்களை சுற்றிலும் அலங்கார செடிகள் நடவு செய்யப்பட்டு உள்ளது. உயர்ந்த மரங்களுக்கு நடுவே பசுமையான புல்வெளிகள் இருக்கிறது. இது சுற்றுலா பயணிகளை கவருகிறது.
மரவியல் பூங்காவில் அமருவதற்காக மரத்தினால் ஆன இருக்கைகள் போடப்பட்டு உள்ளது. பூங்காவை ரசிக்கும் வகையில் அழகான நிழற்குடைகள் அமைக்கப்பட்டு உள்ளன. பூங்காவையொட்டி ஊட்டி மலை ரெயில் செல்லும் போது, சத்தம் கேட்பதால் சுற்றுலா பயணிகள் மற்றும் அவர்களது குழந்தைகள் மகிழ்ச்சி அடைகின்றனர். மேலும் அங்குள்ள மரங்களில் அரிய வகை பறவைகள் காணப்படுகிறது. இந்த பூங்காவை சுற்றுலா பயணிகள் நுழைவுக் கட்டணம் இன்றி ரசித்து வந்தனர். அப்பகுதி பொதுமக்கள் காலை மற்றும் மாலை நேரங்களில் நடைபயிற்சி செய்து வந்தார்கள்.
இந்த நிலையில் தோட்டக்கலைத்துறை திடீரென மரவியல் பூங்காவுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல நுழைவுக்கட்டணம் நிர்ணயம் செய்து உள்ளது. அதன்படி, பெரியவர்களுக்கு-ரூ.10, சிறியவர்களுக்கு-ரூ.5 நுழைவுக்கட்டணம், கேமரா-ரூ.10, வீடியோ கேமரா-ரூ.50 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. இதற்கான அறிவிப்பு குறித்த பேனர் வைக்கப்பட்டு உள்ளது. இந்த நடைமுறை நேற்று முன்தினம் முதல் அமலுக்கு வந்தது. அங்கு வரும் சுற்றுலா பயணிகளிடம் நுழைவுக்கட்டணம் வசூலிப்பதற்காக டிக்கெட் கவுன்ட்டர் அமைக்கப்பட்டு உள்ளது. அதில் 2 பேர் பணியில் இருக்கின்றனர். காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பூங்கா செயல்படும்.
இதுகுறித்து உள்ளூர் மக்கள் கூறியதாவது:-
இதுவரை இலவசமாக பொதுமக்கள் மட்டுமின்றி, சுற்றுலா பயணிகளும் பூங்காவை கண்டு ரசித்து வந்தனர். தற்போது கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளதால், அவர்கள் அவதி அடைந்து உள்ளனர். கட்டணம் நிர்ணயம் செய்யப்படாமல் இருந்த போது, பூங்காவுக்கு சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களின் வருகை குறைவாகவே காணப்பட்டது. இதனால் நுழைவுக்கட்டணம் நிர்ணயிப்பால் சுற்றுலா பயணிகள் வருகை மேலும் குறையும். தற்போது ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளதால், வாடகை வாகனங்களில் சுற்றுலா பயணிகளை அழைத்து வந்து குறைந்த கட்டணம் உள்ள கர்நாடகா ஸ்ரீ தோட்டக்கலை பூங்காவுக்கு அழைத்து செல்கின்றனர். இதே நிலைமை நீடித்தால் அந்த பூங்காவுக்கு செல்லும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் காட்டு யானைகள், புலிகள், சிறுத்தை புலிகள் என வன விலங்குகளின் புகலிடமாக உள்ளது. வனவிலங்குகளை கண்டு ரசிப்பதற்காக வனத்துறையினர் தங்களது வாகனங்களில் சுற்றுலா பயணிகளை வனத்துக்குள் காலை மற்றும் மாலை வேளைகளில் அழைத்து செல்கின்றனர். இதுதவிர கூடலூரில் இருந்து முதுமலை புலிகள் காப்பகம் வழியாக மைசூரூ, பெங்களூருவுக்கு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது.
முதுமலை தெப்பக்காட்டில் இருந்து மசினகுடி வழியாக ஊட்டிக்கு செங்குத்தான மலைப்பாதை செல்கிறது.
இந்த நிலையில் நேற்று காலை 6 மணிக்கு வழக்கம்போல் சுற்றுலா பயணிகள் வாகனங்களில் மசினகுடி மற்றும் கூடலூர் வழியாக ஊட்டிக்கு வந்து கொண்டிருந்தனர். இதேபோல் கூடலூரில் இருந்து மைசூருக்கு ஏராளமான வாகனங்கள் சென்று கொண்டிருந்தன. அப்போது கூடலூர் தொரப்பள்ளிக்கும் முதுமலை கார்குடிக்கும் இடையே சாலையோரம் 2 காட்டு யானைகள் வந்தன. திடீரென அவைகள் ஆக்ரோஷமாக ஒன்றுக்கொன்று முட்டி மோதியவாறு சண்டையிட்டன. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதைக்கண்ட வாகன ஓட்டிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் பீதி அடைந்தனர்.
காட்டு யானைகளுக்கு இடையே சண்டை தொடர்ந்து நீடித்ததால் ஆங்காங்கே வாகனங்கள் நிறுத்தப்பட்டன. ஏனெனில் எந்த நேரத்திலும் காட்டு யானைகள் சாலைக்கு வந்து விடும் என்ற அச்சத்தால் அந்த வழியாக சாலையை கடக்க டிரைவர்கள் முன்வர வில்லை. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சுமார் 15 நிமிடங்களுக்கு மேலாக 2 யானைகளும் ஆக்ரோஷமாக மோதிக்கொண்டன. பின்னர் ஒரு யானை பின்வாங்கியது.அதை மற்றொரு யானை பின்புறத்தில் முட்டியபடி தள்ளிக்கொண்டே வந்தது. இதனால் வெற்றி பெற்றதாக கருதிக்கொண்ட அந்த யானை, பின்னர் கோபம் தணிந்த நிலையில் வனத்துக்குள் சென்றது. பின்னர் சாலையில் வந்து நின்ற யானையும் சிறிது நேரத்தில் வனத்துக்குள் சென்றது. அதன் பின்னரே அந்த பகுதியில் வாகன போக்குவரத்து சீரடைந்தது. #tamilnews
கேரளாவை சேர்ந்தவர் பைசல்ரகுமான். இவர் கடந்த 2016-ம் ஆண்டு குடும்பத்துடன் கொடைக்கானல் வந்தார். அப்போது பல்வேறு இடங்களை சுற்றிபார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் தனது குடும்பத்துடன் சென்றார்.
அப்போது போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அவரை வழிமறித்தார். மோட்டார் வாகனத்திற்குரிய ஆவணங்களை பைசல் ரகுமானிடம் கொடுத்தார். உடனே அவரும் உரிய ஆவணங்களை கொடுத்தார்.
ஆனால் சப்-இன்ஸ்பெக்டர் போஸ் உங்களது வாகனத்தில் மாசுக்கட்டுப்பாட்டு சான்றிதழ் காலாவதியாகிவிட்டது. எனவே ரூ.2000 வழங்கவேண்டும் என்று தெரிவித்தார். அப்போது பொதுமக்கள் ஏராளமானோர் திரண்டதால் சப்-இன்ஸ்பெக்டர் அவரை விடுவித்தார்.
இதுகுறித்து பைசல்ரகுமான் சென்னையில் உள்ள மாநிலமனித உரிமை ஆணையத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த மனுவில் சப்-இன்ஸ்பெக்டர் போஸ் என்னை வழிமறித்து லஞ்சம் கேட்டு அவமதித்தார். இதனால் எனக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அதனைதொடர்ந்து தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்றேன்.
தேவையில்லாமல் எனக்கு ரூ.2லட்சம் வரை செலவாகிவிட்டது. எனவே சம்பந்தப்பட்ட போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் போஸ் மீது ஒழுங்கு நடவடிக்கையும், ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிடவேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனுவை விசாரித்த நீதிபதி துரைஜெயசந்திரன் சாட்சியம் மற்றும் ஆவணங்களை வைத்து பார்க்கும்போது சப்-இன்ஸ்பெக்டர் போஸ் மனிதஉரிமை மீறலில் ஈடுபட்டிருப்பது நிரூபணமானது. இதற்காக சப்-இன்ஸ்பெக்டருக்கு ரூ.50ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது.
இந்த தொகையை மனுதாரருக்கு தமிழக அரசு ஒரு மாதத்திற்குள் வழங்கிவிட்டு சப்-இன்ஸ்பெக்டரின் சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்துகொள்ளலாம் என உத்தரவிட்டார். #tamilnews
ஆயுத பூஜை மற்றும் விஜயதசமியையொட்டி பள்ளி, கல்லூரி மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு 4 நாட்கள் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. இந்த விடுமுறையை குளு, குளு காலநிலை நிலவும் ஊட்டியில் அனுபவிப்பதற்காக சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் இருக்கின்றனர். ஊட்டி நகரில் முக்கிய சாலைகளில் எங்கு பார்த்தாலும் சுற்றுலா பயணிகள் கூட்டமாகவே காணப்படுகிறது. இதனால் கோடை சீசனுக்கு பின்னர் மலைகளின் அரசியான ஊட்டி 2-வது சீசனில் களை கட்டி உள்ளது.
நூற்றாண்டு பழமை வாய்ந்த ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் நேற்று சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. அங்கு 2-வது சீசனை முன்னிட்டு 10 ஆயிரம் பூந்தொட்டிகள் மலர் மாடத்தில் பார்வைக்காக அடுக்கி வைக்கப்பட்டு உள்ளது. பல்வேறு வண்ணங்களில் மலர்கள் பூத்து குலுங்கியதை, சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து சென்றனர். மேலும் பெரணி இல்லம் அருகே புல்வெளியில் மலர் மற்றும் அலங்கார பூந்தொட்டிகளை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டது சுற்றுலா பயணிகளை கவர்ந்து உள்ளது.
தொடர் விடுமுறை காரணமாக ஊட்டி தாவரவியல் பூங்காவின் நுழைவு வாயில் பகுதியில் நுழைவுச்சீட்டு பெறுவதற்கு சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் நின்றனர். பெரணி இல்லம், ஜப்பான் பூங்கா, பெரிய புல்வெளி மைதானம், இலை பூங்கா, இத்தாலியன் பூங்காவை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். மேலும் அங்குள்ள செல்பி ஸ்பாட்டில், அவர்கள் தங்களது குடும்பத்தினருடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். இத்தாலியன் பூங்கா மேல்பகுதியில் உள்ள கண்ணாடி மாளிகை சீரமைக்கப்பட்டு மலர் பூந்தொட்டிகள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டு உள்ளன. தொடர் விடுமுறையையொட்டி அந்த மாளிகை சுற்றுலா பயணிகள் பார்வைக்கு திறந்து விடப்பட்டு உள்ளது. அங்கிருந்த மலர்களை செல்போனில் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
ஊட்டி தொட்டபெட்டா மலைசிகரத்தில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து இருந்தது. அங்குள்ள காட்சி முனையில் இருந்து மேட்டுப்பாளையம், குன்னூர், ஊட்டி நகரம், கர்நாடகா மாநில எல்லை, அணைகள் போன்றவற்றை தொலைநோக்கி மூலம் சுற்றுலா பயணிகள் பார்த்து மகிழ்ந்தனர். இதேபோல் ஊட்டி படகு இல்லம், ரோஜா பூங்கா, பைக்காரா படகு இல்லம், பைக்காரா நீர்வீழ்ச்சி, சூட்டிங்மட்டம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.
தொடர் விடுமுறை எதிரொலியாக தமிழகத்தில் உள்ள சமவெளி பகுதிகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து திரளான சுற்றுலா பயணிகள் சொந்த வாகனங்கள் மற்றும் வாடகை வாகனங்களில் ஊட்டிக்கு வருகை தந்து கொண்டே இருப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் தாங்கள் திட்டமிட்ட படி சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்க முடியாமல் அவதி அடைந்து உள்ளனர். ஊட்டி-கோத்தகிரி சாலை, ஊட்டி-குன்னூர் சாலை, ஊட்டி-கூடலூர் சாலையில் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணி வகுத்து நின்றதை காண முடிந்தது. ஊட்டியில் முக்கிய சந்திப்பான சேரிங்கிராஸ் பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக பகல் நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு உள்ளது. இதனை சரிசெய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவை மாவட்டம் கவுண்டனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னசாமி. இவரது மகன் கருப்புசாமி(வயது 35). மெக்கானிக். இவர் நேற்று காலை தனது மனைவி ராமலதா (32) மற்றும் மகள்கள் தாரிகா (14), சுருதிகா (13) ஆகியோருடன் நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தலங்களை கண்டுகளிப்பதற்காக தனது காரில் கோத்தகிரிக்கு வந்துள்ளார். காரை அவரே ஓட்டி வந்துள்ளார்.
கார் நேற்று காலை 11.30 மணியளவில் மேட்டுப்பாளையத்திலிருந்து கோத்தகிரி நோக்கி வந்துக் கொண்டிருக்கும் போது கீழ்த்தட்டப்பள்ளம் அருகே காரில் பெட்ரோல் கசிவு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் கருப்பு சாமி காரை சாலையோரம் நிறுத்தி விட்டு இறங்கினார்.பின்னர் பெட்ரோல் கசிவு ஏற்பட்டுள்ள இடத்தை அவர் பார்வையிட்டார்.
அப்போது திடீரென்று காரின் முன்பக்கம் தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த கருப்புசாமி காரில் இருந்த தனது மனைவி, மகள்களை உடனடியாக வெளியே அழைத்து வந்ததால் 4 பேரும் உயிர் தப்பினர். தீ மள,மள வென்று எரிய தொடங்கியதால் சாலையின் இருபுறமும் வாகனங்கள் நிறுத்தப்பட்டன. இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. இது குறித்து தகவல் அறிந்த கோத்தகிரி தீயணைப்பு துறை வீரர்கள் விரைந்து வந்து காரில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சிறிது நேரம் கழித்து தீ முற்றிலும் அணைக்கப்பட்டது. இந்த தீ விபத்தில் கார் முழுவதும் எரிந்து எலும்பு கூடு போல் காட்சி அளித்தது. இந்த தீ விபத்து குறித்து கோத்தகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக துணை இயக்குனர் மற்றும் வன உயிரின காப்பாளர் பார்கவ தேஜா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்துக்குள் வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் பிற துறையினர் தங்கள் வாகனத்தில் இருந்த படியே குடிநீர் பாட்டில்கள், பாலித்தீன் பைகள் மற்றும் கழிவு பொருட்களை ஆங்காங்கே வீசாமல் அதற்கென வைக்கப்பட்டுள்ள குப்பை தொட்டிகளில் போட வேண்டும்.
மேலும் அகஸ்தியர் அருவி, மணிமுத்தாறு அருவி, சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு வருபவர்கள் சோப்பு, ஷாம்பு, எண்ணெய் பாக்கெட்டுகள் போன்ற நீர் மாசுபடும் வகையான பொருட்களை உபயோகிக்க கூடாது. தங்களது ஆடைகளை தண்ணீரில் விடக்கூடாது. புலிகள் காப்பக பகுதியை சுத்தப்படுத்தவும், சுத்தமாக வைத்திருக்கவும் மற்றும் அருவி மற்றும் நதியை சுத்தமாக வைப்பதும் நம் அனைவரின் கடமையாகும்.
எனவே நாளை (புதன் கிழமை) முதல் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக பகுதிக்குள் வரும் அனைத்து சுற்றுலா பயணிகளுக்கும் நுழைவு கட்டணம் உயர்த்தப்படுகிறது. அதாவது ஏற்கனவே வசூலிக்கப்படும் நுழைவுக் கட்டணம் ரூ.30 தவிர சூழல் பாதுகாப்பு கட்டணம் ரூ.10 மற்றும் உபரி கட்டணம் ரூ.10 சேர்த்து மொத்தமாக 50 ரூபாயாக நபர் ஒன்றுக்கு வசூலிக்கப்படும்.
மேலும் அகஸ்தியர் மலையின் பெருமைகளை கொண்ட பாரம்பரிய வனப் பூங்கா அமைக்கப்பட உள்ளது. சுற்றுலா பயணிகளுக்காக நன்னீர் மீன்கள் அருங்காட்சியகம், இயற்கையின் அழகை ரசிக்க பார்வை கோபுரங்கள் ஆகியன ஏற்பாடுகள் செய்யப்பட்டு மக்களின் பார்வைக்கு அனுமதிக்கப்பட உள்ளது.
பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அனைவரும் சட்டத்துக்கு உட்பட்டு அகஸ்தியர் மலையை பாதுகாக்கவும், சுத்தமாக பராமரிக்கவும் தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இதுபோல் மணிமுத்தாறு மற்றும் சிவசைலம் அத்திரி மலைக்கு வரும் சுற்றுலா பயணிகள், பொதுமக்களிடமும் சூழல் பாதுகாப்பு கட்டணம் வசூலிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #tamilnews
மலைகளின் அரசி என அழைக்கப்படும் நீலகிரி சர்வதேச அளவில் புகழ் பெற்றது. ஊட்டியில் ரோஜா பூங்கா, தாவரவியல் பூங்கா, அரசு அருங்காட்சியகம், தொட்டபெட்டா மலைசிகரம், தேயிலை பூங்கா, மூலிகை பண்ணை, ரெயில் நிலையம், படகு இல்லம், கேர்ன்ஹில் வனப்பகுதி உள்ளது.
ஊட்டி வெளிவட்டாரங்களில் பைன் பாரஸ்ட், சூட்டிங்மட்டம், பைக்காரா படகு இல்லம், பைக்காரா நீர்வீழ்ச்சி உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் காணப்படுகின்றன. சீசன் காலங்கள், தொடர் மற்றும் கோடை விடுமுறை காலங்களில் குளு, குளு காலநிலையை அனுபவிக்கவும், இயற்கை அழகை ரசிக்கவும் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வருகை தருகிறார்கள்.
இதனால் விடுமுறை காலங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும். மேலும் சீசன் இல்லாத காலங்களிலும் சுற்றுலா பயணிகளின் வருகை கணிசமான அளவில் இருக்கும். தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் கடந்த சில வாரங்களாக ஊட்டி, கூடலூர் பகுதியில் தொடர் மழை பெய்தது.
இதனால் பல இடங்களில் மரங்கள் சரிந்து விழுந்தது. மின்கம்பிகள் அறுந்து விழுந்ததால் அடிக்கடி மின்சார வினியோகம் பாதிக்கப்பட்டது. மேலும் கடுங்குளிர் நிலவியது.
இதனால் விடுமுறை காலங்களில் ஊட்டிக்கு சுற்றுலா வரக்கூடிய பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. தாவரவியல் பூங்கா, ரோஜா மலர் பூங்கா, படகு இல்லம் உள்பட பல முக்கிய சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை குறைவாக உள்ளது. மேலும் கமர்சியல், எட்டின்ஸ், சேரிங்கிராஸ் உள்ளிட்ட சாலைகளில் உள்ளூர் வாகனங்கள் மட்டுமே இயக்கப் படுகிறது.
சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் பெருமளவு இல்லாததால் சாலைகளில் போக்குவரத்து நெருக்கடி இல்லை. தாவரவியல் பூங்காவில் மட்டும் கணிசமான அளவில் சுற்றுலா பயணிகள் வந்து இருந்தனர்.
ஆனால் ரோஜா பூங்காவில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அடியோடு குறைந்து இருந்தது. இந்த நிலையில் சுற்றுலா பயணிகளின் வருகை தொடர்ந்து குறைந்து காணப்படுவதால் தாவரவியல் பூங்கா, படகு இல்லம் உள்ளிட்ட இடங்களில் போதிய வியாபாரம் இல்லாமல் வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த வாரம் தாவரவியல் பூங்காவுக்கு வெள்ளிக்கிழமை தொடங்கி ஞாயிற்றுக்கிழமை வரை சராசரியாக 2 ஆயிரத்து 700 சுற்றுலா பயணிகள் மட்டுமே வந்துள்ளனர். கடந்த 3 நாட்களில் இதே எண்ணிக்கையிலான சுற்றுலா பயணிகள் மட்டுமே வருகை தந்துள்ளனர். இதனால் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை.
இதனிடையே ஊட்டியில் நேற்று மதியம் 2 மணிக்கு சாரல் மழை பெய்தது. இதனால் ஊட்டி சேரிங்கிராஸ், கமர்சியல் சாலை, நகராட்சி மார்க்கெட், மத்திய பஸ் நிலையம், ஏ.டி.சி., லோயர் பஜார், மெயின் பஜார் உள்ளிட்ட பகுதிகளில் குடைகளை பிடித்தபடி பொதுமக்கள் நடந்து சென்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகையில் தமிழகம் முதலிடம் வகிப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
உலகின் பழமையான கலாசாரம், வரலாற்றுச் சிறப்புமிக்க நினைவுச் சின்னங்கள், பிரமிக்கத்தக்க கோவில் கட்டிடக்கலை, சிற்பக்கலை, மனதை வசீகரிக்கும் இயற்கைத் தோற்றங்கள், வனப்பகுதிகள் மற்றும் யுனெஸ்கோ அறிவித்துள்ள உலக பாரம்பரியச் சின்னங்கள் ஆகியவை தமிழ்நாட்டில் உள்ளன.
எனவே உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை அதிகளவில் கவர்வதில் தமிழ்நாடு தொடர்ந்து தனிச்சிறப்புடன் திகழ்ந்து வருகிறது. இதுபோன்ற சுற்றுலாச் சிறப்புகளைக் கொண்ட தமிழ்நாடு, கடந்த 2017-ம் ஆண்டில், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகையில் இந்தியாவிலேயே முதலிடத்தை பெற்றது.
இதை மத்திய அரசின் சுற்றுலாத்துறை அறிவித்துள்ளது. உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகையில் 2013-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரை, தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாகவும்; வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகையில் 2014-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரை, தொடர்ந்து நான்கு ஆண்டுகளாகவும் தமிழ்நாடு, இந்தியாவிலேயே முதலிடத்தை பெற்று வந்துள்ளது.
2017-ம் ஆண்டில் 34 கோடியே 50 லட்சம் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளும், 48 லட்சத்து 60 ஆயிரம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் தமிழ்நாட்டிற்கு வந்து சென்றுள்ளனர்.
2017-ம் ஆண்டில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகையில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடம் பெற்றதை அறிவித்து, மத்திய சுற்றுலாத்துறை கடிதம் வழங்கியுள்ளது. இந்தக் கடிதத்தை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமியிடம், சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் காண்பித்து வாழ்த்து பெற்றார்.
இந்த நிகழ்வின்போது, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அபூர்வ வர்மா, சுற்றுலா ஆணையர் பழனிக்குமார் உடனிருந்தனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #Domestic #ForeignVist #Tourist #tamilnews
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்