என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Case Field"

    • கடை முழுவதும் தீ பரவியதால் கடையில் பழுது பார்க்க வைத்திருந்த 5-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள் தீயில் கருகி சாம்பலானது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    திருவள்ளூர்:

    பொன்னேரி நகராட்சி பகுதியில் திருவொற்றியூர் நெடுஞ்சாலை அருகே பெண்கள் அரசினர் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியின் அருகே தனியாருக்கு சொந்தமான கட்டிடத்தில் திருவேங்கடாபுரம் கிராமத்தைச் சேர்ந்த கந்தன் (வயது 44) என்பவர் மோட்டார் சைக்கிள் பழுது பார்க்கும் கடையும், அதே பகுதியில் கோகுல தெருவை சேர்ந்த இதயகுமார் (62) என்பவர் பேன்சி ஸ்டோர் மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த நேதாஜி நகரில் வசிக்கும் ராமதாஸ் (60) டீக்கடையும் நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று மோட்டார் சைக்கிள் பழுது பார்க்கும் கடையில் ஊழியர்கள் பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டபோது, திடீரென மோட்டார் சைக்கிள் தீப்பிடித்து எரிந்தது. பின்னர் கடை முழுவதும் தீ பரவியதால் கடையில் பழுது பார்க்க வைத்திருந்த 5-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள் தீயில் கருகி சாம்பலானது.

    இதனை தொடர்ந்து அருகில் உள்ள பேன்சி கடைக்கும் தீ பரவியதால் கடையில் இருந்த ஜெராக்ஸ் எந்திரம், கம்ப்யூட்டர் மற்றும் பல்வேறு வகையான பேன்சி பொருட்கள் சாம்பலானது. இதனை அடுத்து டீக்கடைக்கு தீ பரவிய நிலையில் சேதமானது. இதுகுறித்து அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொன்னேரி தீயணைப்பு மீட்புத்துறை அலுவலர் சம்பத் தலைமையில் தீயணைப்பு படை வீரர்கள் 1 மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர்.

    இது குறித்து பொன்னேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். பட்டப்பகலில் மோட்டார் சைக்கிள் பழுது பார்த்துக் கொண்டிருக்கும்போது ஏற்பட்ட தீ விபத்தில் 2 கடைகள் எரிந்து சாம்பலான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • கடையின் வெளியே நின்ற 3 சிறுவர்களும் அங்கிருந்து ஓடிவிட்டனர்.
    • 2 சிறுவர்களை சந்தோசத்தின் குடும்பத்தினர் அங்கிருந்த கல் தூணில் கட்டி வைத்து தாக்கி உள்ளனர்.

    திருமங்கலம்:

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள ஆலம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சந்தோசம். இவர் அந்த பகுதியில் பெட்டிக் கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இவர் உடல்நலம் சரியில்லாமல் இருந்துள்ளார்.

    இதனால் கடையை பாதி அளவுக்கு பூட்டி விட்டு கடைக்குள்ளேேய படுத்து ஓய்வெடுத்துள்ளார். அப்போது அந்த பகுதியை சேர்ந்த பள்ளியில் படிக்கும் 5 சிறுவர்கள் அங்கு வந்துள்ளனர். அவர்களில் 2 பேர் சந்தோசத்தின் பெட்டிக் கடைக்குள் சென்று கடையில் இருந்த மிட்டாய்களை திருடி உள்ளனர்.

    மற்ற 3 பேரும் கடைக்கு வெளியே நின்று யாரும் வருகிறார்களா? என நோட்டமிட்டபடி இருந்துள்ளனர். அப்போது திடீரென சந்தோசத்தின் பெட்டிக் கடைக்கு அவரது மகள் வந்தார். அவரை பார்த்ததும் கடையின் வெளியே நின்ற 3 சிறுவர்களும் அங்கிருந்து ஓடி விட்டனர்.

    கடைக்குள் மிட்டாய் மற்றும் பொருட்களை திருடிக்கொண்டிருந்த 2 சிறுவர்கள் சிக்கிக் கொண்டனர். கையும், களவுமாக சிக்கிய அவர் களை, சந்தோசத்தின் குடும்பத்தினர் அங்கிருந்த கல் தூணில் கட்டி வைத்து தாக்கி உள்ளனர்.

    2 சிறுவர்களையும் கல்தூணில் தாக்கி மிரட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. சிறுவர்களை தாக்கும் வீடியோ சமூக வலை தளங்களில் பரவியதால் திருமங்கலம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    இந்த சம்பவம் குறித்து ஆலம்பட்டி கிராம நிர்வாக அலுவலர் பாண்டியராஜன் திருமங்கலம் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் விசா ரணை நடத்தினர்.

    சிறுவர்களை கட்டி வைத்து தாக்கி மிரட்டியதாக பெட்டிக்கடையின் உரிமை யாளர் சந்தோசம் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

    • மோதல் சம்பவம் முகநூலில் நேரடியாகவும், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும் வைரலாக பரவியது.
    • இரு தரப்பினரை சேர்ந்த 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

    திருப்பூர்:

    திருப்பூரில் உள்ள சினிமா தியேட்டரில் பத்துதல சினிமா திரையிடப்பட்டுள்ளது. நேற்று படம் பார்ப்பதற்காக கோவை மாவட்டத்தை சேர்ந்த அழகர்சாமி, அருண்பாண்டி, முத்துக்குமார், விவேக், நாகபாண்டியன் ஆகிய 5 பேரும் ஆன்லைனில் முன்பதிவு செய்தனர். இதையடுத்து அவர்கள் 5 பேரும் தியேட்டருக்கு வந்தனர். அப்போது 5 பேரும் மது அருந்தியுள்ளதாக கூறி தியேட்டர் ஊழியர்கள் உள்ளே அனுமதிக்க மறுத்துள்ளனர்.

    இதையடுத்து அவர்கள் எங்களது டிக்கெட் பணத்தை திரும்ப கொடுங்கள் என்று கேட்டுள்ளனர். இதில் அந்த ரசிகர்களுக்கும், தியேட்டர் ஊழியர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அங்கு சென்ற அந்த வாலிபர்களின் நண்பரான பல்லடத்தை சேர்ந்த குமார் என்பவரும் அவர்களுக்கு ஆதரவாக பேசி உள்ளார்.

    இதனால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழல் உருவானது. இதை அங்கு நின்று பார்த்துக் கொண்டிருந்த நாச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்த செல்வம் என்பவர் தியேட்டர் ஊழியர்களிடம் சென்று, அந்த வாலிபர்கள் கூறுவது போல டிக்கெட் பணத்தை திரும்ப கொடுக்க வேண்டியது தானே என்று கேட்டுள்ளார்.

    இதனால் தியேட்டர் ஊழியர்களின் கோபம் செல்வம் மீது திரும்பியது. இதையடுத்து செல்வத்திற்கும், தியேட்டர் ஊழியர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த தியேட்டர் ஊழியர்களான 2 பவுன்சர்கள் செல்வத்தை இழுத்துச் சென்று ஒரு அறைக்குள் வைத்து தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் அவர் காயமடைந்தார்.

    இந்த சம்பவம் தொடர்பாக தகவலறிந்த திருப்பூர் வடக்கு போலீசார் அங்கு விரைந்து சென்று 5 பேரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். மேலும் பவுன்சர்கள் இருவரையும் விசாரணைக்கு அழைத்து சென்றனர்.

    இந்நிலையில் தியேட்டர் வளாகத்தில் நடந்த மோதல் சம்பவம் முகநூலில் நேரடியாகவும், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும் வைரலாக பரவியது. இதையடுத்து போலீசார் இரு தரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் இரு தரப்பினரை சேர்ந்த 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

    சென்னையில் உள்ள தியேட்டரில் நரிக்குறவர் சமூக மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், திருப்பூரில் தியேட்டருக்கு வந்த ரசிகர்களை தியேட்டர் பணியாளர்கள் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • மர்ம நபர்கள் நள்ளிரவு நேரத்தில் கோவில் கேட் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவிலில் கொள்ளையடித்த நபர்களை தேடி வருகின்றனர்.

    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே உள்ள வடமலாபுரம் தாயில்பட்டி ரோட்டில் சாமுண்டீஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இப்பகுதியில் பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் விசேஷ நாட்களில் பக்த ர்கள் அதிகளவில் திரண்டு சாமி தரிசனம் செய்வார்கள்.

    கோவிலில் அதே பகுதியை சேர்ந்த பால்பாண்டியன் என்பவர் பூசாரியாக உள்ளார். இவர் இரவு பூஜைகளை முடித்து விட்டு வழக்கம்போல் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

    இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நள்ளிரவு நேரத்தில் கோவில் கேட் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் கோவில் கருவறையில் இருந்த 4 குத்து விளக்குகள், ஆம்பிளி பயர், யூபிஎஸ் பேட்டரி, தண்ணீர் மோட்டார், ஸ்பீக்கர் பாக்ஸ் உள்ளிட்டவைகளை திருடிச் சென்றனர்.

    மறுநாள் காலையில் கோவிலை திறக்க வந்த பூசாரி கதவு உடைக்கப்பட்டு பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்து சாத்தூர் டவுன் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவிலில் கொள்ளையடித்த நபர்களை தேடி வருகின்றனர்.

    • போலீசார் வழக்கு பதிவு செய்து கொலை செய்து விட்டு தப்பியோடிய விஸ்வலிங்த்தை தேடி வருகிறார்கள்.
    • சொத்து தகராறில் அண்ணன் மகன் சித்தப்பாவை அரிவாளால் வெட்டி கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    மெலட்டூர்:

    தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே ராராமுத்திரக்கோட்டை கள்ளிமேடு வையாபுரி தோப்புபகுதியை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 45) விவசாயி. இவரது மனைவி ராதிகா.

    இவருக்கும் அதே பகுதியில் வசித்து வரும் அவரது அண்ணன் வீரையன் குடும்பத்தினருக்கும் இடையே சொத்து தகராறு காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது.

    இந்நிலையில் நேற்று இரவு வீரையன் மகன் விஸ்வலிங்கம் (வயது 30) என்பவர் மது போதையில் சக்திவேல் வீட்டிற்கு சென்று தகராறில் ஈடுப்பட்டார்.

    பின்னர் ஆத்திரமடைந்து விஸ்வலிங்கம் அரிவாளால் சக்திவேலை சராமாரியாக வெட்டினார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார். சக்திவேலின் அலறல் சத்தம் கேட்டு ராதிகா வெளியே வந்தார்.

    அவரையும் விஸ்வலிங்கம் அரிவாளால் வெட்டி விட்டு தப்பியோடி விட்டார். இது குறித்து தகவல் அறிந்ததும் அம்மாபேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் கரிகாழசோழன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற சக்திவேல் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாபநாசம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து அம்மாபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து கொலை செய்து விட்டு தப்பியோடிய விஸ்வலிங்த்தை தேடி வருகிறார்கள்.

    சொத்து தகராறில் அண்ணன் மகன் சித்தப்பாவை அரிவாளால் வெட்டி கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • இஸ்லாமியர்களுக்கு எதிராக வாட்ஸ் அப் மட்டும் முகநூலில் பல்வேறு கருத்துக்களை பதிவிட்டதாக புகார் எழுந்தது.
    • செந்தில்குமார் மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருச்சி:

    திருச்சி மாவட்டம் துவாக்குடி வடக்குமலை சொசைட்டி தெரு பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 40). இவர் அ.தி.மு.க.வில் தகவல் தொழில்நுட்ப பிரிவு துவாக்குடி நகர செயலாளராக இருந்து வருகிறார்.

    இந்நிலையில் அவர் இஸ்லாமியர்களுக்கு எதிராக வாட்ஸ் அப் மட்டும் முகநூலில் பல்வேறு கருத்துக்களை பதிவிட்டதாக புகார் எழுந்தது. அதைத் தொடர்ந்து மேற்கண்ட துவாக்குடி வடக்குமலை அக்பர் சாலை பகுதியைச் சேர்ந்த தி.மு.க. மாவட்ட பிரதிநிதி ஜெய்னுதீன், அ.தி.மு.க. பிரமுகர் செந்தில்குமார் மீது துவாக்குடி போலீசில் புகார் செய்தார்.

    அதில், நான் துவாக்குடி பள்ளிவாசல் ஜமாத் கமிட்டி செயலாளராகவும், திருவெறும்பூர் வட்டார ஜமாத் உலமா கௌரவ தலைவராகவும் இருந்து வருகிறேன். இந்நிலையில் அ.தி.மு.க. தகவல் தொழில் நுட்ப பிரிவு செயலாளர் செந்தில்குமார், வாட்ஸ்அப்பில் என்னை இஸ்லாமிய துரோகி என்று இழிவான வார்த்தைகளை பயன்படுத்தி, துவாக்குடி நகராட்சித் தலைவர் காயம்பின் பினாமியாக இருப்பதாகவும் பதிவிட்டுள்ளார்.

    மேலும் இந்து முஸ்லிம் மதக் கலவரத்தினை ஏற்படுத்தும் வகையில் தி.மு.க. கட்சியில் உள்ள இந்து முஸ்லிம்களுக்கு இடையே ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் சமூக வலைத்தளத்தில் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

    ஆகவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தார். அதன் பேரில் துவாக்குடி போலீசார் செந்தில்குமார் மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 5 மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் சுவாதியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அடிக்கடி தகராறு செய்துவந்தார்.
    • பரிசோதனை செய்த டாக்டர்கள் கரு கலைந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    பெரியகுளம்:

    தேனி மாவட்டம் அருகே எ.புதுக்கோட்டையை சேர்ந்தவர் சுந்தர்(31). அதேபகுதியை சேர்ந்த சுவாதி என்பவர் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு சுந்தரை 2-வது திருமணம் செய்து கொண்டார். 5 மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் சுவாதியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அடிக்கடி தகராறு செய்துவந்தார்.

    மேலும் மதுகுடித்துவந்து சுவாதி மற்றும் அவரது குடும்பத்தினரை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கினார். சம்பவத்தன்றும் இதேபோல் அவர் சுவாதியை தாக்கியதால் படுகாயமடைந்தார். இந்நிலையில் திடீரென வயிற்றுவலி அதிகமாகவே சுவாதியை பெரியகுளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் கரு கலைந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    மேலும் சுவாதிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து பெரியகுளம் போலீசில் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து சுந்தரை கைது செய்தனர்.

    • முதல் கட்ட விசாரணையில் முன்விரோதம் காரணமாக கார் எரிக்கப்பட்டது தெரிய வந்தது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து காரை தீ வைத்து எரித்தவர்களை தேடி வருகின்றனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை அடுத்த நாகூர் பட்டினச்சேரியை சேர்ந்தவர் செல்வமணி. இவர் வடகுடி வி.ஏ.ஓ.வாக பணியாற்றி வருகிறார்.

    இந்நிலையில் நேற்று தனக்கு சொந்தமான காரை பட்டினச்சேரி புயல் பாதுகாப்பு மையம் அருகே நிறுத்தி வைத்து விட்டு வீட்டுக்கு சென்றார்.

    அப்போது நள்ளிரவு 1 மணியளவில் அங்கு வந்த மர்ம நபர்கள் காருக்கு தீ வைத்துவிட்டு தப்பியோடினர். கார் பற்றி எரிந்த சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர், தண்ணீர் ஊற்றி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். எனினும் காரின் முன்பகுதி முற்றிலுமாக எரிந்து நாசமானது.

    இது குறித்து செல்வமணிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் அவர் நாகூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தர். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் சிவராமன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். முதல் கட்ட விசாரணையில் முன்விரோதம் காரணமாக கார் எரிக்கப்பட்டது தெரிய வந்தது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து காரை தீ வைத்து எரித்தவர்களை தேடி வருகின்றனர்.

    இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • இருவரும் நெருக்கமாக உள்ள புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டல் விடுத்தார்.
    • வளசரவாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கள்ளக்காதலனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போரூர்:

    போரூர் அடுத்த காரம்பாக்கம் பகுதியை சேர்ந்த திருமணமான 30 வயது இளம்பெண்ணுக்கு வேறு ஒரு வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது.

    இளம்பெண்ணின் கணவர் அடிக்கடி வேலை தொடர்பாக வெளியூர் சென்றதால் இளம்பெண் வாலிபர் இடையேயான நட்பு கள்ளக்காதலாக மாறியது.

    இதையடுத்து நெருங்கி பழகிய இருவரும் அடிக்கடி தனிமையில் இருந்து வந்ததாகவும் கூறப்ப டுகிறது. இந்த சந்தர்ப்பத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திய கள்ளக்கதாலன் இளம்பெண்ணிடம் இருந்து சிறுக சிறுக இதுவரை ரூ.6.லட்சம் வரை பணத்தை சுருட்டினார். மேலும் பணம் கேட்டு இளம்பெண்ணுக்கு தொல்லை கொடுத்து வந்தார்.

    இந்நிலையில் நேற்று நள்ளிரவு இளம்பெண்ணை செல்போனில் தொடர்பு கொண்ட கள்ளக்காதலன் உடனடியாக பணம் அனுப்ப வேண்டும் இல்லையென்றால் "இருவரும் நெருக்கமாக உள்ள புகைப்படங்களை" சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டல் விடுத்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண் திடீரென வீட்டின் சமையலறைக்குள் சென்று கத்தியால் இடது கையை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றார்.

    இதில் மயங்கி விழுந்த அவரை மீட்டு போரூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக வளசரவாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கள்ளக்காதலனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பூங்கா ஊழியர்கள் சிறுவனை ரூயா அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து பேட்டரி வாகன டிரைவரை கைது செய்தனர்.

    திருப்பதி:

    திருப்பதி அலிப்பிரி வன உயிரியல் பூங்காவில் மான்கள் உள்ளிட்ட விலங்குகள் பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளன.

    திருப்பதி ராயல் நகரை சேர்ந்தவர் சுப்ப ரத்ன சுஷ்மா. இவர் தனது 3 மகன்கள் மற்றும் அவரது சகோதரர் மகனையும் உடன் அழைத்துக் கொண்டு உயிரில் பூங்காவிற்கு சென்றார்.

    உயிரில் பூங்காவில் விலங்குகளை சிறுவர்கள் ரசித்தனர். அங்கும் இங்குமாக சந்தோஷமாக ஓடியாடி விளையாடினர். சுப்ப ரத்ன சுஷ்மா அருகில் இருந்து சிறுவர்கள் விளையாடுவதை பார்த்து ரசித்துக்கொண்டு இருந்தார்.

    சிறுவர்கள் விளையாடி முடிந்ததும் வீட்டிற்கு புறப்பட்டனர். அங்குள்ள உணவகத்தின் வழியாக நடந்து சென்றனர்.

    அப்போது சுற்றுலாப் பயணிகளை ஏற்றிக் கொண்டு வந்த பேட்டரி கார் திடீரென சுப்ப ரத்னா சுஷ்மாவின் மகன் பிரணவ் (வயது 3) என்பவர் மீது மோதியது.

    இதில் படுகாயம் அடைந்த சிறுவன் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதனைக் கண்ட அவரது தாய் கதறி அழுதார். பூங்கா ஊழியர்கள் சிறுவனை ரூயா அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.

    அங்கு சிறுவனை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து சிறுவனின் தாய் எம்.ஆர்.பள்ளி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து பேட்டரி வாகன டிரைவரை கைது செய்தனர்.

    சிறுவனின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும்.

    இனி உயிரியல் பூங்காவில் உள்ள பேட்டரி வாகனங்கள் 10 கிலோ மீட்டருக்கு பதிலாக 5 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும்படி வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்தப்படும் என ஆந்திர அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • தற்போது உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர்சிங் மீது 4-வது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
    • சி.பி.சி.ஐ.டி. இன்ஸ்பெக்டர் உலகராணி வழக்குப்பதிவு செய்துள்ளார்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் அம்பை போலீஸ் உட்கோட்டத்திற்கு உட்பட்ட போலீஸ் நிலையங்களில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டவர்களின் பற்களை பிடுங்கியதாக எழுந்த புகாரில் உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர்சிங் மீது ஏற்கனவே சி.பி.சி.ஐ.டி. போலீசார் 3 வழக்குகள் பதிவு செய்துள்ளனர்.

    இந்த வழக்குகளில் வி.கே.புரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன், தனிப்பிரிவு காவலர் போகன் குமார் மற்றும் 2 போலீசார் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது 4-வது வழக்கு ஒன்றை சி.பி.சி.ஐ.டி. போலீசார் பதிவு செய்துள்ளனர்.

    கல்லிடைக்குறிச்சி அருகே ஜமீன் சிங்கம்பட்டியை சேர்ந்த சூர்யா என்பவர் கொடுத்த புகாரின் பேரில் தற்போது உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர்சிங் மீது 4-வது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    மேலும் இந்த வழக்கில் சம்பவம் நடந்த காலகட்டத்தில் கல்லிடைக்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்த ராஜகுமாரி, அங்கு பணியாற்றும் காவலர்கள் ராமலிங்கம், ஜோசப் ஆகியோர் மீது 5 பிரிவுகளில் சி.பி.சி.ஐ.டி. இன்ஸ்பெக்டர் உலகராணி வழக்குப்பதிவு செய்துள்ளார்.

    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
    • கொலைக்கான காரணம் என்ன? கூட்டாளிகள் யார்? யார்? என்று விசாரணை நடந்து வருகிறது.

    பொன்னேரி:

    சோழவரம் அருகே உள்ள நெடுவரம்பாக்கம் பெரிய காலணியை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது 32). இவரது தம்பி இளங்கோவன். தி.மு.க.வை சேர்ந்த இவர் ஊராட்சி துணைத்தலைவராக உள்ளார்.

    நேற்று முன்தினம் அப்பகுதியில் தேவாலயத்தில் நடந்த விழாவில் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது.

    இது தொடர்பாக சகோதரர்கள் லட்சுமணன், இளங்கோவன் ஆகியோர் சோழவரம் போலீசில் புகார் அளித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் திரும்பி வந்தனர்.

    நெடுவரம்பாக்கம் காலனி அருகே வந்தபோது மர்மகும்பல் அவர்களை வழிமறித்து சரமாரியாக வெட்டினர். இதில் சம்பவ இடத்திலேயே லட்சுமணன் இறந்தார். அவரது தம்பி இளங்கோவனுக்கு பலத்த வெட்டுக்காயம் ஏற்பட்டது. அவருக்கு சென்னையில் உள்ள ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து சோழவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இந்நிலையில் இந்த கொலை தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த 3 பேரை போலீசார் பிடித்து உள்ளனர். அவர்களிடம் கொலைக்கான காரணம் என்ன? கூட்டாளிகள் யார்? யார்? என்று விசாரணை நடந்து வருகிறது. கொலை தொடர்பாக மேலும் சிலரை தேடி வருகிறார்கள்.

    ×