search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Modi Meditation"

    • நேற்றுமுன்தினம் மாலை விவேகானந்தர் மண்டபம் சென்றார் பிரதமர் மோடி.
    • நேற்று முழுவதும் தியானம் செய்த நிலையில், இன்று மதியம் தியானத்தை முடித்துக் கொண்டார்.

    பிரதமர் மோடி மக்களவை தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் சூறாவளி தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். கடைசி கட்ட தேர்தலுக்கான பிரசாரம் முடிவடைந்த நிலையில் மூன்று நாட்கள் பயணமாக தமிழகத்தில் உள்ள கன்னியாகுமரிக்கு நேற்று முன்தினம் (வியாழக்கிழமை மாலை) வந்தடைந்தார்.

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்த பின், விவேகானந்தனர் மண்டபத்தில் 45 மணி நேரம் தியானம் செய்ய தொடங்கினார்.

    நேற்று சூரிய வழிபாடு செய்தார். பின்னர் தொடர்ந்து தியானம் செய்ய தொடங்கினார். இன்று மதியம் 2.45 மணி அளவில் 45 மணி நேர தியானத்தை முடித்துக் கொண்டு விவேகானந்தர் மண்டபத்தில் இருந்து வெளியே வந்தார்.

    பின்னர் படகு மூலம் திருவள்ளுவர் சிலைக்கு சென்றார். திருவள்ளூர் காலை தொட்டு வணங்கி மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து திருவனந்தபுரம் சென்று அங்கிருந்து டெல்லி செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • தியானத்தின்பொழுது இருக்க வேண்டிய சூழல் அமைதி. அது தமிழகத்தில் எப்பொழுதும் இருக்கும்.
    • நல்லவனுக்குப் பரிசாகவும் தீயவனுக்குத் தண்டனையாகவும் விளங்கும் ஆற்றல் நூல்களுக்கு உண்டு.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் விதிமுறைகள் அமலில் இருக்கும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி கன்னியாகுமரி விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் தியானத்தில் ஈடுபடுவது தேர்தல் விதிமீறல் எனவும், இது தேர்தல் பரப்புரை என்பதால் பிரதமர் மோடி கன்னியாகுமரியில் தியானம் மேற்கொள்ள அனுமதி வழங்கக்கூடாது, பிரதமர் மோடி வருவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் கூறி வந்தனர்.

    இதுகுறித்து, குமரி மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான ஸ்ரீதர், தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடவோ, வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாலோ, கட்சி கூட்டம் நடத்தினாலோ தான் சம்பந்தப்பட்ட கட்சியினர் அனுமதி கோருவர். ஆனால் பிரதமரின் வருகையும், தியானமும் தனிப்பட்ட நிகழ்வு என்பதால் யாரும் அனுமதி கோரவில்லை. நாங்களும் அனுமதி கொடுக்கவில்லை. அவரது வருகை தேர்தல் விதிமீறலுக்கு உட்பட்டது அல்ல என்றார்.

    இதையடுத்து பிரதமர் நரேந்திர மோடி நேற்று முதல் விவேகானந்தர் நினைவு மண்டப தியான மண்டபத்தில் தியானத்தில் ஈடுபட்டு வருகிறார்.

    இந்நிலையில், மதுரை பாராளுமன்ற தொகுதி மார்க்சிஸ்ட் வேட்பாளரும், தற்போதைய எம்.பி.யுமான சு.வெங்கடேசன், எக்ஸ் தள பக்கத்தில், திருடர்களின் நிலத்தில் தியானம் எதற்கு? என்ற தலைப்பில் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:-

    பிரதமர் மோடி தியானம் செய்வதற்காகக் குமரி முனையில் உள்ள விவேகானந்தர் பாறைக்கு வந்துள்ளார். அவரது தனிப்பட்ட ஈடுபாட்டை கேள்விக்கு உட்படுத்துவது எமது நோக்கமன்று. விவேகானந்தர் பாறை உள்ள மண்டபத்தை அரசதிகாரத்தைச் சார்ந்த ஒருவர் பயன்படுத்துவது தேர்தல் நடத்தை விதிப்படி தவறென்பது அனைவருக்கும் தெரியும், தேர்தல் ஆணையத்தைத் தவிர.

    தியானம் என்ற செயல் நேர்மை என்ற பண்பின் ஈடுபாட்டோடு தொடர்புடையது என்பதை சம்பந்தப்பட்டவர்களே நம்பாதபோது தேர்தல் ஆணையம் ஏன் நம்பவேண்டும்?

    தேர்தல் ஆணையத்தை நேர்மைப்படுத்துவதோ, நேர்மையாளர்களை மட்டுமே தியானம் செய்ய வைப்பதோ நம்முடைய வேலையல்ல. நாம் எழுப்ப நினைப்பது ஒரேயொரு கேள்வியை மட்டுந்தான்.

    தமிழகத்திற்கு தியானம் செய்ய வருவதற்கு முன்பு ஒடிசாவில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் புகழ்பெற்ற ஜெகந்நாதர் ஆலயத்தின் பொக்கிஷ அறையின் சாவி தமிழ்நாட்டில் இருப்பதாக கூறினார் மோடி. ஆலயத்தின் பொக்கிஷத்தைக் களவாடும் திருடர்கள் என்ற பழியை தமிழ்நாட்டு மக்கள் மீது சுமத்தினார். இப்பொழுது திருடர்களின் நிலத்தில் தியானம் செய்ய வந்துள்ளார்.

    தியானத்தின்பொழுது இருக்க வேண்டிய சூழல் அமைதி. அது தமிழகத்தில் எப்பொழுதும் இருக்கும். உத்தரபிரதேசத்தில் போய் எங்களை இழித்துப் பேசியதையும், ஒடிசாவில் போய் பழித்துப் பேசியதையும் ஒவ்வொரு தமிழரும் அறிவோம். எங்கோ நின்று பொல்லாங்கு பேசுதலுக்குத் தமிழ் இலக்கியம் சூட்டியுள்ள பெயர் "புறம் பேசுதல்".

    நீங்கள் அங்கு பேசியதை இங்கு பேசி உங்கள் நேர்மையை நிரூபியுங்கள் என்று கூட நாங்கள் கேட்கமாட்டோம். எந்த ஒரு மனிதரிடமும் அவரிடம் இல்லாத ஒன்றை கேட்பது நாகரீகம் அன்று என்பது எங்களுக்குத் தெரியும்.

    திருடர்களின் நிலத்திற்கு வந்துள்ள உங்களுக்கு உரிய எழுத்தாளர் சுரேந்திர மஹாந்தி எழுதிய " நீலமலை" என்கிற நூலைப் பரிசளிக்க விழைகிறோம். விவேகானந்தர் பாறையின் அமைதியான, தனித்த சூழலில் அந்நூலினைப் படிக்க முயலுங்கள்.

    சாகித்ய அகாதமி விருது பெற்று பாராளுமன்ற உறுப்பினரான சுரேந்திர மஹாந்தி எழுதிய நூலினை சாகித்ய அகாதமி விருதுபெற்று பாராளுமன்ற உறுப்பினரான சு. வெங்கடேசனாகிய நான் இதைப் பரிந்துரைப்பதாகக் கூட எடுத்துக் கொள்ளாதீர்கள்.

    நீங்கள் யாரைத் திருடர்கள் என்று கூறினீர்களோ அந்தக் கூட்டத்தின் சார்பாக, திருடு போனதாக நீங்கள் சொன்ன பொருள் பற்றிய பூர்வீக ஆவணம் ஒன்றை உங்களிடம் ஒப்படைக்கிறோம். ஆம், இந்த நூல் ஜெகந்நாதர் கோவிலையும் அதனுடைய பொக்கிஷத்தையும் பற்றியது.

    நல்லவனுக்குப் பரிசாகவும் தீயவனுக்குத் தண்டனையாகவும் விளங்கும் ஆற்றல் நூல்களுக்கு உண்டு. விவேகானந்தருக்கும் எங்களுக்கும் உடன்பாடுள்ள இந்தக் கருத்தில் உங்களுக்கும் உடன்பாடு இருக்குமாயின் இதனைப் படித்து பாருங்கள்.

    ஒடிசாவின் ஒவ்வொரு உயிரிலும் ஜெகந்நாதரின் ஈடுபாட்டுக்கென ஓர் இடம் உண்டு என்பதை முழுமுற்றாக நம்பும் ஒடிசாவின் மைந்தனான சுரேந்திர மஹாந்தியின் எழுத்தை வாசியுங்கள்.

    கங்கை முதல் கோதாவரி வரை பரந்து விரிந்த உத்கல சாம்ராஜ்யத்தின் நிரந்தர அதிபதியாக ஒடிசா மக்களால் காலமெல்லாம் போற்றப்படும் ஜெகந்நாதரின் பொக்கிஷ அறையின் சாவியை மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், கூத்தப்பன்பட்டி கிராமத்தைச் சார்ந்த ஒருவரால் திருடப்பட்டதாகக் கூறுவது ஆன்மீகமா? அரசியலா? அல்லது அருவருப்பா?

    இதற்கும்மேல் பகவான் ஜெகந்நாதர் உங்களின் பக்தர் என்கிறார்கள் உங்கள் கட்சிக்காரர்கள்.

    இரண்டு மாதங்கள் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் தமிழர்கள் திருடர்களாக்கப்பட்டார்கள். தெய்வங்கள் உங்களின் பக்தர்களாக்கப்பட்டார்கள். இப்பொழுது விவேகானந்தர் பாறைக்கு வந்திருக்கிறீர்கள். உங்களின் 45 மணி நேர தியானத்திற்கு பின் உங்கள் விசுவாசிகள் விவேகானந்தரை என்ன சொல்லப் போகிறார்களோ என்ற பதட்டம் தேசத்துக்கு ஏற்பட்டுள்ளது. பகவானே உங்களின் பக்தராக்கப்பட்ட பின் பரமஹம்சரின் எளிய சீடனுக்கு எந்த இடம் மிச்சமிருக்கப் போகிறது?

    இந்து பெண்களின் தாலியில் இருக்கும் தங்கத்தை எடுத்து இஸ்லாம் பெண்களுக்கு எதிர்கட்சிகள் கொடுத்துவிடுவார்கள் என்றும் இஸ்லாமியர்கள் அதிகப் பிள்ளைகளைப் பெற்றுக்கொள்பவர்கள், ஊடுருவல்காரர்கள் என்றெல்லாம் பேசிவிட்டுத்தான் தியான மேடைக்கு வந்திருக்கிறீர்கள். இங்கு வந்த உங்களிடம் சுரேந்திர மஹாந்தியின் நூலினை பரிந்துரைப்பதற்கு காரணம் உண்டு.

    ஜெகந்நாதரின் மரியாதையைக் காக்கும் பொருட்டு சொல்லவொண்ணாத் துயரத்தைச் சந்திக்கும் ஹாபிஸ் காதர் என்கிற இஸ்லாமிய அரசனின் போராட்டமே இந்நூல்.

    நீங்கள் எவ்வளவு வெறுப்பை விதைத்தாலும் இந்தியா மீளும் என்பதற்கு எங்களின் வேர்களே சான்று. நீங்கள் விஷத்தை தெளித்தாலும் விழுங்கி எழும் ஆற்றல் எம்மண்ணுக்கு உண்டு.

    எல்லா மார்க்கத்திலும் மனதை ஒருமுகப்படுத்தும் செயல்முறை உண்டு. மனதை ஒருமுகப்படுத்தலே தியானம். ஆனால் எதில் என்ற கேள்வியில்தான் ஆன்மீகமும் அரசியலும் அடங்கியுள்ளது. நீங்கள் செய்துமுடித்து வந்துள்ள தேர்தல் பிரசாரங்களின் வழியே உங்கள் மனமும் சிந்தனையும் என்னவாக உள்ளது என்பதை நாடறிந்துள்ளது.

    நீங்கள் பேசிய எல்லாவற்றிலிருந்தும் தேசத்தைத் திசை திருப்ப தியானம் பயன்படலாம் என்று நீங்கள் கருதுவீர்களானால் அதில் தோல்வியே அடைவீர்கள். தியாகமும் தியானமும் விளம்பரத்தின் பொருட்டு அமையுமேயானால் அச்செயலுக்கு விவேகானந்தர் சூட்டும் பட்டத்தை நான் இங்கு குறிப்பிட விரும்பவில்லை.

    "இதுவரை இருந்த பிரதமர்களிலே அப்பதவிக்கான தகுதியை மிகவும் தாழ்த்தியவர்" நீங்கள் என மன்மோகன்சிங் சொன்னதை மேலும் தாழ்த்த விவேகானந்தரைச் சான்றாக்க விரும்பவில்லை என கூறியுள்ளார்.


    • பிரபஞ்சத்தில் உருவாக்கப்படும் எல்லாப் பொருள்களுக்கும் உரிய தேவர்கள் உண்டு.
    • ‘ஓம்’ என்பது படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழிலையும் தம்மகத்தே கொண்டதால் முத்தொழிலுக்குரிய கடவுள்களும் அதில் அடங்குவர்.

    பிரதமர் மோடி தியானம் செய்யும் போது பின்னணியில் ஒலித்த ஓம் பிரணவ மந்திரத்தின் சிறப்புகள் என்ன? என்பதை பார்க்கலாம்.

    மந்திரங்களுக்கு எல்லாம் மூலாதாரமாக, முதன்மையானதாக, உயிராக இருப்பது 'ஓம் எனும் மந்திரமாகும். இந்த மந்திரத்துக்கு 'பிரணவ மந்திரம்' என்ற பெயரும் உண்டு. ஓம் எனும் மந்திரம் பிரபஞ்ச மந்திரமாகவும் திகழ்கிறது.

    ஓம் என்பது அ, உ, ம் என்ற மூன்று எழுத்துக்களை உள்ளடக்கியது. பிரபஞ்சத்தின்(அண்டம்) சிறிய பகுதி உடல்(பிண்டம்). பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் உடலில் இருப்பதால் பிரபஞ்ச ஓங்கார ஓசையை உடலினுள் சொல்வதால் பிரபஞ்ச பயனை அடையலாம்.

    உடம்பின் உள்ளே தோன்றும் தச வாயுக்களாலும் உடலில் உள்ள அக்னியின் மேல் செல்லும் போக்காலும் இந்த பிரணவ 'ஓம்' உடம்பின் கீழிருந்து மேல் நோக்கி உச்சித் தலைக்கும் அதற்கு மேலும் தடையின்றி போகும்.

    அப்படிப் போகும்போது பெயர், எல்லை, ஒளி, நிறம், தெய்வம், அளவு, வடிவம், சூனியம் ஆகிய பகுதிகளை வரையறை செய்து உணர்ந்தால் ஓங்காரம் பிரபஞ்சத்துடன் ஒன்றி உடலில் பரவுவதை அனுபவிக்கலாம். இப்போது இந்த ஞான ஒளி உள் ஒளியாகி குண்டலி சக்தியாக வெளிப்படும். எனவே ஓம், பிரணவம், குண்டலியாவும் ஒன்றை ஒன்று சார்ந்தது என்பது புரியும்.


    பிரபஞ்சத்தில் உருவாக்கப்படும் எல்லாப் பொருள்களுக்கும் உரிய தேவர்கள் உண்டு. ஓம் எனும் பிரணவத்தில் 'அ' என்பது முதலில் தோன்றுவதால் 'அ'காரமாவது உலக உற்பத்தியை குறிக்கும், அதற்குரிய தேவர் படைப்புக் கடவுள் என்றும், 'உ' என்பது வளர்வதற்குத் துணை செய்வதால் 'உ' காரம் வியாபித்தல் என்பதைக் குறிக்கும், அதற்குரிய தேவர் காவல் கடவுள் என்றும், 'ம்' என்பது முடித்து வைப்பதால் 'ம'காரமாவது அழித்தலைக் குறிக்கும், அதற்குரிய தேவர் சம்ஹாரக் கடவுள் என்றும் உணர்த்தப்படும்.

    எனவே 'ஓம்' என்பது படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழிலையும் தம்மகத்தே கொண்டதால் முத்தொழிலுக்குரிய கடவுள்களும் அதில் அடங்குவர்.

    அதாவது உயிரில் இருந்து பிராணனில் இருந்து ஓம் மந்திரம் உருவாகி வெளியில் வருகிறது. இதனால்தான் ஓம் மந்திரத்துக்கு பிரணவ மந்திரம் என்ற பெயர் உண்டானது. பிரணவம் என்றால் சுவாசம் என்று பொருள். மனிதன் உயிர் வாழ சுவாசம் அவசியம். இந்த பிரபஞ்சம் உயிர் வாழ ஓம் எனும் மந்திரம் அவசியம். அதனால்தான் ஓம் எனும் பிரணவ மந்திரம் என்கிறோம்.

    • சுமார் 10 நிமிடங்கள் வரையில் விவேகானந்தர் மண்டபத்தை சுற்றிவந்த பிரதமர் மோடி கடல் அழகையும் ரசித்து பார்த்தார்.
    • நாளை பிற்பகலில் தியானத்தை முடிக்கும் பிரதமர் மோடி திருவள்ளுவர் சிலையை சென்று பார்வையிடுகிறார்.

    கன்னியாகுமரி:

    பிரதமர் மோடி கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் மண்டபத்தில் தியானம் செய்வதற்காக நேற்று மாலை குமரிமுனைக்கு வந்தார். அங்குள்ள பகவதி அம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து விட்டு படகில் கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்துக்கு சென்றார்.

    பின்னர் மண்டபத்தின் ஒரு பகுதியில் உள்ள பகவதி அம்மனின் பாதம் பதித்த மண்டபத்துக்கு சென்று தரிசனம் செய்த பிரதமர் மோடி விவேகானந்தரின் முழு உருவ சிலைக்கு மலர் தூவி வணங்கி மரியாதை செய்தார். ராமகிருஷ்ணா பரமஹம்சர், அன்னை சாரதா தேவி ஆகியோரின் படங்களையும் வணங்கினார்.

    பின்னர் பிரதமர் மோடி தியான மண்டபத்துக்கு சென்று விட்டு திரும்பினார். நேற்று இரவு தனக்காக தயார் செய்து வைக்கப்பட்டிருந்த தனது தனி அறையில் ஓய்வு எடுத்தார்.

    இன்று அதிகாலை 4 மணி அளவில் எழுந்த பிரதமர் மோடி குளித்து முடித்துவிட்டு காவி உடைகளை உடுத்தினார். தனது 3 விரல்களால் விபூதியை தொட்டு நெற்றியில் பெரிய பட்டையை போட்டுக் கொண்டு அதன் நடுவில் குங்குமத்தையும் வைத்துக் கொண்டார்.

    பின்னர் காலை 5 மணி அளவில் தனது அறையை விட்டு வெளியே வந்த அவர் காவி சட்டை, வேட்டி, காவி துண்டு ஆகியவற்றை அணிந்து கொண்டு முற்றும் துறந்த துறவி போலவே காட்சி அளித்தார்.


    கையில் ருத்ராட்ச மாலை ஒன்றையும் வைத்திருந்த அவர் அதனை விரல்களால் உருட்டிக் கொண்டே விவேகானந்தர் மண்டபத்தை சுற்றி வந்தார். மண்டபத்தின் கிழக்கு பகுதிக்கு சென்று காலை 5.55 மணி அளவில் சூரிய நமஸ்காரம் செய்து வழிபாடு நடத்தினார். அப்போது தனது 2 கைகளையும் மேலே தூக்கி சூரிய பகவானை மனமுருக வணங்கி வழிபட்டார். பின்னர் சிறிய சொம்பை எடுத்து அதில் இருந்த தீர்த்தத்தை கடலில் ஊற்றினார். இது கங்கை நதியில் இருந்து எடுத்து வந்த புனித தீர்த்தம் என்று சொல்லப்படுகிறது.


    சுமார் 10 நிமிடங்கள் வரையில் விவேகானந்தர் மண்டபத்தை சுற்றிவந்த பிரதமர் மோடி கடல் அழகையும் ரசித்து பார்த்தார்.

    பின்னர் விவேகானந்தரின் முழு உருவ சிலையுடன் கூடிய மண்டபத்துக்கு சென்ற மோடி சிலை எதிரே சம்மணமிட்டு தரையில் அமர்ந்து தியானம் செய்தார். விவேகானந்தரின் சிலையை பார்த்து முதலில் வணங்கிய அவர் பின்னர் கண்களை மூடி ஆழ்ந்த தியானத்தில் ஈடுபட்டார். அப்போதும் ருத்ராட்ச மாலையை விரல்களால் வருடியபடியே மந்திரங்களையும் அவர் சொன்னார். இதன்பிறகு தியான மண்டபத்துக்கு சென்ற பிரதமர் மோடி அங்கேயும் துறவி கோலத்தில் அமர்ந்து நீண்ட நேரம் தியானம் செய்தார்.


    அப்போது தியான மண்டபத்தில் மனதுக்கு இதமான... மனதை சாந்தப்படுத்தும் ஓம்-பிரணவ மந்திரம் ஒலித்துக்கொண்டே இருந்தது. இப்படி பிரதமர் மோடி சூரிய வழிபாடு நடத்தியது, கண்களை மூடி ஆழ்ந்த தியானத்தில் ஈடுபட்டது ஆகியவை வீடி யோவாக இன்று வெளியிடப்பட்டது.

    இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. பாரதிய ஜனதா கட்சியினரும் சமூக வலைதளங்களில் வீடியோவை பரப்பி வருகிறார்கள்.

    நாளை கடைசி கட்ட தேர்தல் நடைபெறும் நிலையில் பிரதமர் மோடியின் தியானம் சத்தமில்லாத தேர்தல் பிரசாரமாகவே அமையும். அது கடைசி கட்ட தேர்தலில் எதிரொலிக்கும் என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. இதுபோன்ற சூழலில்தான் பிரதமரின் தியான வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வரவேற்பை பெற்று வருகிறது.

    பிரதமர் மோடியின் தியானம் நாளையும் தொடர்கிறது. நாளை பிற்பகல் 3.30 மணிக்கே பிரதமர் மோடி கன்னியாகுமரியில் இருந்து புறப்படுகிறார். இதன் மூலம் நாளையும் காலையிலேயே பிரதமர் மோடி தியானம் மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    நாளை பிற்பகலில் தியானத்தை முடிக்கும் பிரதமர் மோடி திருவள்ளுவர் சிலையை சென்று பார்வையிடுகிறார். இதன்பிறகு ஹெலிகாப்டரில் திருவனந்தபுரம் சென்று அங்கிருந்து விமானத்தில் டெல்லி செல்கிறார்.

    பிரதமர் மோடி வருகையையொட்டி குமரி மாவட்டம் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    காந்தி மண்டபம், விவேகானந்தர் மண்டபம் உட்பட அனைத்து பகுதிகளிலும் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், மத்திய பாதுகாப்பு படையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் கடல் பகுதியில் கப்பற்படை கப்பலும் நிறுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.

    கடலோர காவல்படையினர் ரோந்து கப்பல்களில் விவேகானந்தர் பாறையை சுற்றியுள்ள பகுதிகள் மட்டுமின்றி, குமரி கடல் பகுதி முழுவதும் நவீன படகுகளில் ரோந்து சுற்றி வந்து கண்காணித்து வருகின்றனர். கடலோர காவல் படை போலீசார் கன்னியாகுமரி கடலோர பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    • கன்னியாகுமரி கடற்கரையில் அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்தில் தியானம் மேற்கொள்கிறார்.
    • படப்பிடிப்புக்காகவே மோடி கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் பாறைக்கு செல்கிறார்.

    மக்களவை தேர்தலுக்கான கடைசி கட்ட வாக்குப்பதிவு ஜூலை 1-ந்தேதி நடைபெற இருக்கிறது. இதற்கான தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்வடைகிறது. இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி கன்னியாகுமரி செல்கிறார்.

    கன்னியாகுமரி கடற்கரையில் அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்தில் தியானம் மேற்கொள்கிறார். ஜூலை 1-ந்தேதி மாலை 3.30 மணிக்குதான் விவேகானந்தர் மண்டபத்தில் இருந்து வெளியே வருகிறார்.

    தேர்தல் வாக்கப்பதிவு நடைபெறுவதற்கு முன்னதாக மோடி இவ்வாறு செய்வது தேர்தல் நடத்தை விதியை மீறுவதாகும் என திமுக காங்கிரஸ் கட்சி தேர்தல் ஆணையத்திடம் புகார் மனு அளித்துள்ளது.

    இந்நிலையில், பிரதமரின் தியான நிகழ்ச்சி குறித்து பேசிய பீகார் எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ், "படப்பிடிப்புக்காகவே மோடி கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் பாறைக்கு செல்கிறார். தியானம் செய்ய அல்ல. கேமரா இன்றி மோடி தியானம் செய்ய வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

    இதற்கு முன்னதாக, "பிரதமர் மோடி தியானம் செய்வது டிவி-யில் ஒளிபரப்பப்பட்டால் நாங்கள் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிப்போம்" என்று மேற்கு வங்காள முதல்வர் மம்தா பேனர்ஜி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பிரதமர் மோடி நாளை மாலை கன்னியாகுமரி வருகிறார்.
    • தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுவதற்கு முன்னதாக தியானத்தில் ஈடுபட இருப்பதால் எதிர்க்கட்சிகள் கேள்வி.

    மக்களவை தேர்தலுக்கான கடைசி கட்ட வாக்குப்பதிவு ஜூலை 1-ந்தேதி நடைபெற இருக்கிறது. இதற்கான தேர்தல் பிரசாரம் நாளை மாலையுடன் ஓய்வடைகிறது. இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி நாளை மாலை கன்னியாகுமரி செல்கிறார்.

    கன்னியாகுமரி கடற்கரையில் அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்தில் தியானம் மேற்கொள்கிறார். ஜூலை 1-ந்தேதி மாலை 3.30 மணிக்குதான் விவேகானந்தர் மண்டபத்தில் இருந்து வெளியே வருகிறார்.

    தேர்தல் வாக்கப்பதிவு நடைபெறுவதற்கு முன்னதாக மோடி இவ்வாறு செய்வது தேர்தல் நடத்தை விதியை மீறுவதாகும் என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை விமர்சித்துள்ளார்.

    இந்த நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர் மம்தா பானர்ஜி கூறியதாவது:-

    பிதரமர் மோடி தியானம் செய்வது டிவி-யில் ஒளிபரப்பப்பட்டால் நாங்கள் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிப்போம். அவரால் தியானம் செய்ய முடியும். ஆனால், அது டிவில் ஒளிபரப்ப முடியாது. ஒளிபரப்பப்பட்டால் அது தேர்தல் விதியை மீறுவாகும். தியானம் செய்யும் யாருக்கும் கேமரா தேவையா?. வாக்குப்பதிவு நடைபெறுவதற்கு முன்னதாக 48 மணி நேர அமைதியான காலத்தில் வாக்கு சேகரிப்பதற்கான வழியாகும்.

    இந்த முறை பாஜக அதிகாரத்திற்க வந்தால் எந்த அரசியல் கட்சியோ, தேர்தலோ, சுதந்திரமோ, மதமோ, மனிதாபிமானமோ அல்லது கலாசாரமோ இருக்காது.

    மேற்கு வங்காளத்தில் சிறந்த முடிவை எட்டுவோம் என பிரதமர் மோடி கூறுகிறார். இதன் அர்த்தம் அவர்கள் தோல்வியடைவார்கள் என்பதுதான். மேற்கு வங்காளத்தில் அவர்கள் ஜீரோதான் பெறுவார்கள்.

    நான் காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியே வந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை உருவாக்காமல் இருந்திருந்தால், இன்று கூட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை தோற்கடித்திருக்க முடியாது.

    இவ்வாறு மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

    ×