என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "POCSO law"

    • சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
    • கைது செய்யப்பட்ட 2 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி தருமபுரி சிறையில் அடைக்கப்பட்டனர்.

    மாரண்டஅள்ளி:

    தருமபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி அருகே தேக்லான்கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தசாமி. இவரது மகன் தாமோதரன் (வயது 29). இவருக்கும், பென்னாகரம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் கடந்த 10-ந்தேதி பெற்றோர் கட்டாய திருமணம் செய்து வைத்துள்ளனர்.

    இதனால் மனமுடைந்த சிறுமி நேற்று முன்தினம் வீட்டில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து பாலக்கோடு அனைத்து மகளிர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்படடது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் வீரம்மாள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது கட்டாய திருமணம் செய்து வைத்ததால் மனமுடைந்த சிறுமி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

    இதையடுத்து சிறுமிக்கு திருமணம் செய்து வைத்த சிறுமியின் தாயார் மற்றும் புதுமாப்பிள்ளை தாமோதரன் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    தொடர்ந்து அவர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    கைது செய்யப்பட்ட 2 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி தருமபுரி சிறையில் அடைக்கப்பட்டனர்.

    • மாணவியின் பெற்றோர் விருகம்பாக்கம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர்.
    • பிரவீனை போலீசார் கைது செய்தனர். அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    போரூர்:

    திருவள்ளூர் மாவட்டம் புட்லூர் பகுதியை சேர்ந்த தம்பதிகளின் 17வயது மகள் தனியார் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார்.

    மாணவிக்கு திருநின்றவூர் பகுதியை சேர்ந்த ஏற்றுமதி நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் வாலிபர் பிரவீன் (வயது20) என்பவருடன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டது.

    இதையடுத்து இருவரும் நெருங்கி பழகி காதலித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. மகளின் காதல் விவகாரம் பற்றி தெரிந்து அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் மாணவியை மதுரவாயல் சீமாத்தம்மன் நகர் பகுதியில் உள்ள அவரது மாமா வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த நிலையில் தனது காதலி மதுரவாயலில் உள்ள உறவினர் வீட்டில் இருப்பது தெரிந்து நேற்று காலை அங்கு சென்ற பிரவீன் மாணவியை வலுக்கட்டாயமாக தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றி அழைத்து சென்று திருவேற்காடு கோவிலில் வைத்து தாலி கட்டி திருமணம் செய்து கொண்டார்.

    இதுகுறித்து மாணவியின் பெற்றோர் விருகம்பாக்கம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். இதையடுத்து பிரவீனை போலீசார் கைது செய்தனர். அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    • சிறுமி காணாமல் போனதை கண்ட அவருடன் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் சிறுமியின் வீட்டிற்கு சென்று பட்டாசு வெடிக்க சிறுமியை அழைத்தனர்.
    • சிறுமி வீட்டில் இல்லையே உங்களுடன் தானே விளையாடிக்கொண்டிருந்தார் என்று சிறுமியின் பெற்றோர் கூறினர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டம் மல்காபுரம் பகுதியில் கடந்த 24-ந் தேதி மற்ற பகுதிகளை போலவே தீபாவளி கொண்டாட்டம் களைக்கட்டியிருந்தது. குடியிருப்பு பகுதியில் வழக்கம்போல மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடி வந்தனர்.

    அந்த பகுதியை சேர்ந்த 5 வயது சிறுமி பட்டாசு வெடித்து விளையாடிக் கொண்டிருந்தார். அதே பகுதியை சேர்ந்த சாய் (வயது 27) சிறுமியை அவரது வீட்டிற்கு தூக்கி சென்றார். அங்கு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார்.

    சிறுமி காணாமல் போனதை கண்ட அவருடன் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் சிறுமியின் வீட்டிற்கு சென்று பட்டாசு வெடிக்க சிறுமியை அழைத்தனர். ஆனால் சிறுமி வீட்டில் இல்லையே உங்களுடன் தானே விளையாடிக்கொண்டிருந்தார் என்று சிறுமியின் பெற்றோர் கூறினர்.

    அப்போதுதான் குடும்பத்தினருக்கு சிறுமி காணவில்லை என்பது தெரியவந்தது. அவர்கள் அக்கம் பக்கத்தில் தேட தொடங்கினர்.

    சிறுமியை தேடிக்கொண்டிருந்த அவரது பெற்றோர் சாய் வீட்டருகில் வந்துள்ளனர். அப்போது சிறுமியின் அழுகுரல் கேட்டது.

    கதவை தட்டிய பெற்றோர் சாய் வீட்டில் இருந்து சிறுமியை மீட்டனர். சிறுமி அழுதுகொண்டே இருந்ததால் அவரிடம் விசாரித்தனர்.

    அப்போது சாய் தவறாக நடந்து கொள்ள முயற்சித்தது தொடர்பாக சிறுமி தெரிவித்தார். இதனையடுத்து சிறுமியின் உறவினர்கள் வாலிபரை சரமாரியாக தாக்கினர்.

    சிறுமியின் பெற்றோர் அங்குள்ள போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சாயை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

    • சிறுமிக்கு குழந்தை இறந்து பிறந்தது குறித்த புகாரின் பேரில் மேட்டூர் அனைத்து மகளிர் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் சாந்தி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
    • சிறுமியை திருமணம் செய்த பழனிசாமி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த கொளத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பாலமலை ஊராட்சி பாலி கிராமம் பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 28) கூலிதொழிலாளி. இவர் ராமன்பட்டி பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை திருமணம் செய்து கொண்டார். இந்த சிறுமிக்கு பழனிசாமி தாய்மாமா உறவாகும்.

    இந்த நிலையில் கர்ப்பமான சிறுமிக்கு கடந்த மாதம் ஈரோடு அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை இறந்த நிலையில் பிறந்தது.

    சிறுமிக்கு குழந்தை இறந்து பிறந்தது குறித்த புகாரின் பேரில் மேட்டூர் அனைத்து மகளிர் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் சாந்தி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதில், சிறுமியை திருமணம் செய்த பழனிசாமி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

    • சிறுமியின் பெற்றோர் வாலிபர் குறித்து செஞ்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.
    • புகாரின் பேரில் போலீசார் வாலிபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்தனர்.

    செஞ்சி:

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே அவலூர்பேட்டையை சேர்ந்தவர் ஞானசேகர் (வயது 27). இவர் அதே பகுதியை சேர்ந்த 10-ம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுமியை கடந்த 7 மாத காலமாக காதலித்து வந்தார்.

    பின்னர் சம்பவத்தன்று திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்று கட்டாயப்படுத்தி பலாத்காரம் செய்தார். அதனை வீடியோ பதிவு செய்து கொண்டார். பின்னர் இதனை வெளியில் யாரிடமும் சொன்னால் கொலை செய்து விடுவேன் என்று சிறுமியை மிரட்டி உள்ளார்.

    அதிர்ச்சி அடைந்த சிறுமி இதுகுறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்தார். உடனே பெற்றோர் செஞ்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.

    அதன் பேரில் போலீசார் ஞானசேகர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்தனர்.

    • மாணவனின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த ஆசிரியர்கள், அவனை அழைத்து கவுன்சிலிங் கொடுத்து விசாரித்தனர்.
    • மாணவன் சொன்ன தகவல் ஆசிரியர்களுக்கு அதிர்ச்சியை அளித்தது.

    திருவனந்தபுரம்:

    நல்ல பழக்கங்களை கற்று கொடுக்க வேண்டிய ஆசிரியை, வேலியே பயிரை மேய்ந்த கதையாக டியூசனுக்கு வந்த மாணவனுக்கு மது கொடுத்து பலாத்காரம் செய்துள்ள சம்பவம் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    கேரள மாநிலம் திருச்சூரில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. இது பற்றிய விவரம் வருமாறு:-

    திருச்சூர் அருகே உள்ள மண்ணுத்தியில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்த மாணவன், கடந்த சில நாட்களாக சோர்வாக காணப்பட்டுள்ளான். சமீபத்தில் நடத்தப்பட்டுள்ள தேர்வுகளிலும் அவன் குறைந்த மதிப்பெண்களே எடுத்துள்ளான்.

    சக மாணவர்களுடன் பழகாமல் ஒதுங்கியே இருந்த மாணவனின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த ஆசிரியர்கள், அவனை அழைத்து கவுன்சிலிங் கொடுத்து விசாரித்தனர்.

    அப்போது மாணவன் சொன்ன தகவல் அவர்களுக்கு அதிர்ச்சியை அளித்தது. கடந்த சில நாட்களாக மாணவன், ஒரு ஆசிரியையிடம் டியூசனுக்கு சென்றுள்ளான். அவனுக்கு பாடம் சொல்லிக் கொடுக்க வேண்டிய ஆசிரியை, அதனை மறந்து மது கொடுத்து பலாத்காரம் செய்துள்ளார்.

    மாணவன் கூறிய தகவலைத் தொடர்ந்து சம்பவம் குறித்து மண்ணுத்தி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் இது தொடர்பாக ஆசிரியையிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

    இதனை தொடர்ந்து போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து ஆசிரியையை கைது செய்தனர்.

    • விடுமுறை நாட்களில் ஒடுகத்தூரில் உள்ள துணிக்கடைக்கு வேலைக்கு செல்லும் மாணவி இரவு பணி முடிந்து கத்தாரி குப்பம் வரை பஸ்சில் வருவார்.
    • கத்தாரிக்குப்பம் பஸ் நிறுத்தத்தில் இருந்து அவரது தந்தை பைக்கில் அவரை வீட்டிற்கு அழைத்துச் செல்வது வழக்கம்.

    ஒடுகத்தூர்:

    வேலூர் மாவட்டம் ஒடுகத்தூரில் இருந்து மேல்அரசம்பட்டு செல்லும் சாலையில் உள்ள கத்தாரிகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் சரத்குமார் (வயது 27). ஊசூர் அடுத்துள்ள தார் வழியில் உள்ள ஒரு பேக்கரி கடையில் மாஸ்டராக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகி கடந்த வாரம்தான் பெண் குழந்தை பிறந்தது.

    இதே பகுதியை சேர்ந்த 17 வயது மாணவி மீது சரத்குமாருக்கு மோகம் ஏற்பட்டுள்ளது. மாணவி குடியாத்தம் பகுதியில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார். குடும்ப சூழ்நிலை காரணமாக சனி மற்றும் ஞாயிறு உள்ளிட்ட விடுமுறை நாட்களில் ஒடுகத்தூரில் உள்ள ஒரு துணிக்கடையில் மாணவி வேலை பார்த்து வந்தார். அதில் வரும் சம்பள பணத்தை படிப்பு செலவிற்கு பயன்படுத்திக் கொண்டார்.

    இந்த நிலையில் சரத்குமார் மாணவி தனியாக செல்லும் நேரத்தில் அவரிடம் ஆபாசமாக பேசி உள்ளார். தனது ஆசைக்கு இணங்குமாறு மாணவியை தொடர்ந்து துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. கடந்த ஒரு ஆண்டுகளாக சரத்குமார் மாணவியை பின் தொடர்ந்து சென்று தொல்லை கொடுத்தார்.

    தனக்கு ஏற்கனவே திருமணமாகி பெண் குழந்தை பிறந்த பொறுப்பு கூட இல்லாமல் மாணவியை அடைவதில் சரத்குமார் குறியாக இருந்தார்.

    விடுமுறை நாட்களில் ஒடுகத்தூரில் உள்ள துணிக்கடைக்கு வேலைக்கு செல்லும் மாணவி இரவு பணி முடிந்து கத்தாரி குப்பம் வரை பஸ்சில் வருவார். கத்தாரிக்குப்பம் பஸ் நிறுத்தத்தில் இருந்து அவரது தந்தை பைக்கில் அவரை வீட்டிற்கு அழைத்துச் செல்வது வழக்கம்.

    நேற்று முன்தினம் இரவு மாணவி துணிக்கடையில் வேலை முடிந்து இரவு 8.30 மணிக்கு ஒடுகத்தூர் பஸ் நிலையத்தில் இருந்து கத்தாரி குப்பத்திற்கு பஸ்சில் சென்று இறங்கினார்.

    ஆனால் அவரது தந்தை அங்கு அழைத்துச் செல்ல வரவில்லை. அந்த நேரத்தில் மாணவியின் வருகைக்காக சரத்குமார் முன்கூட்டியே அங்கு காத்திருந்தார்.

    ஆள் நடமாட்டம் இல்லாத சாலையில் நடந்து சென்ற மாணவியை சரத்குமார் தன்னுடன் வருமாறு கையை பிடித்து இழுத்து வற்புறுத்தினார்.

    இதனை சற்றும் எதிர்பாராத மாணவி கத்தி கூச்சலிட்டார். அப்போது சரத்குமார் மாணவியின் வாயில் துணியை கட்டி கொலை மிரட்டல் விடுத்தார். மாணவியை வேகமாக அருகில் உள்ள வாழைத்தோட்டத்திற்குள் இழுத்துச் சென்றார். கை, வாய் ஆகியவற்றை துணியால் கட்டி வலுக்கட்டாயமாக மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் கட்டாயப்படுத்தி மீண்டும் மீண்டும் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

    நடந்த சம்பவம் குறித்து யாரிடமாவது கூறினால் உன்னையும் உன் குடும்பத்தையும் கொன்று விடுவேன் என மிரட்டினார். இதையடுத்து இரவு 10 மணி அளவில் மாணவி வீட்டுக்குச் சென்றார்.

    தனக்கு நடந்த கொடூர சம்பவம் குறித்து தனது தாயிடம் அழுது கொண்டே கூறினார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இது குறித்து வேப்பங்குப்பம் போலீசில் புகார் கொடுத்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் உலகநாதன் போக்சோ சட்டத்தின் கீழ் சரத்குமாரை கைது செய்தார். அவர் இன்று வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டார். பிறந்து ஒரு வாரமே ஆன தனது மகளை கொஞ்ச வேண்டிய சரத்குமார் பொறுப்பில்லாத தன்னுடைய வக்கிர புத்தியால் சிறையில் கம்பி எண்ணுகிறார்.

    பாதிக்கப்பட்ட மாணவிக்கு இன்று வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனை நடந்தது. வீட்டிற்கு தனியாக சென்ற மாணவியை மிரட்டி வாலிபர் பலாத்காரம் செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ஒடுகத்தூர் மேல்அரசம்பட்டு சாலை இருபுறமும் விவசாயம் மற்றும் அடர்ந்த வனப்பகுதி நிறைந்து காணப்படுகிறது. இந்த சாலையில் இது போன்ற சம்பவம் நடந்துள்ளதால் அந்தப் பகுதி பொதுமக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.

    இதனை தடுக்க இரவு நேரங்களில் போலீசார் ரோந்து பணியை தீவிர படுத்த வேண்டும் என அந்த பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    • ஜாமீனில் வெளியே வந்த தீபக்குமார் சிறுமியை மீண்டும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
    • சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தீபக்குமாரை 2-வது முறையாக போக்சோ வழக்கில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு ரங்கம்பாளையத்தை சேர்ந்தவர் தீபக்குமார் (27). திருமண மேடை அலங்காரம் செய்யும் தொழில் செய்து வருகிறார்.

    கடந்த ஆண்டு தீபக்குமார் ஈரோட்டை சேர்ந்த 17 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அந்த சிறுமியிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டார்.

    இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் தீபக்குமாரை போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இந்நிலையில் ஜாமீனில் வெளியே வந்த தீபக்குமார் அந்த சிறுமியை மீண்டும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் அந்த சிறுமி கர்ப்பம் அடைந்தார். கடந்த மாதம் அந்த சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்தது.

    இதுகுறித்து சிறுமியிடம் ஈரோடு அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர். தீபக்குமார் தான் சிறுமியின் குழந்தைக்கு தந்தை என தெரிய வந்தது. இதனையடுத்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தீபக்குமாரை 2-வது முறையாக போக்சோ வழக்கில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த ஓராண்டுக்கு முன்பு மோகன்ராஜ், 17 வயது சிறுமியை திருமணம் செய்து கொண்டார்.
    • 17 வயது சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

    மேட்டுப்பாளையம்:

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த காரமடை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் மோகன்ராஜ் (26). எலக்ட்ரீசியன்.

    இவருக்கு அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியுடன் நட்பாக பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.

    இதற்கிடையே இவர்களது காதல் விவகாரம் அறிந்ததும், இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த ஓராண்டுக்கு முன்பு மோகன்ராஜ், 17 வயது சிறுமியை திருமணம் செய்து கொண்டார்.

    இந்நிலையில் 17 வயது சிறுமி 7 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இதனால் காரமடை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பரிசோதனைக்கு சென்றார்.

    அப்போது அங்கிருந்த டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். அப்போது சிறுமிக்கு 17 வயது பூர்த்தி ஆவதற்குள் திருமணம் ஆனது தெரியவந்தது.

    இதுகுறித்து குழந்தை நல அலுவலர் சரஸ்வதி காரமடை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் காரமடை இன்ஸ்பெக்டர் குமார், எலக்ட்ரீசியனான மோகன்ராஜ் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்தார். பின்னர் மோகன்ராஜை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • மாணவிகளிடம் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
    • சிறுமிகள் அளிக்கும் புகார்களுக்கு போலீசாரும் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கின்றனர்.

    இந்தியாவில் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க 2021-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட சட்டம் தான் போக்சோ சட்டமாகும். 18 வயதுக்கு குறைவான அனைத்து குழந்தைகளும் பாலின வித்தியாசமின்றி, இச்சட்டத்தின் வரையறைக்குள் வருவர்.

    குழந்தையின் சாட்சியம்

    ஆண் குழந்தைகள், சிறுவர்கள் பாதிக்கப்பட்டாலும் இச்சட்டம் பாயும். பாலியல் தாக்குதல், வன்முறை, பாலியல் துன்புறுத்தல், சீண்டல், ஆபாச படமெடுக்க குழந்தைகளை பயன்படுத்துதல் போன்றவற்றை குற்றங்களாக இச்சட்டம் முன்வைக்கிறது.

    இந்த சட்டத்தில் 30 நாட்களுக்குள் குழந்தையின் சாட்சியம் பதிவு செய்யப்பட வேண்டும். ஒரு வருடத்துக்குள் வழக்கை முடிக்க வேண்டும். இதில் குற்றம் புரிபவர்களுக்கு சாதாரண சிறை தண்டனையில் இருந்து கடுங்காவல், ஆயுள் தண்டனை வரை கொடுக்கலாம் என சட்டம் குறிப்பிடுகிறது.

    ஆனால் நமது நாட்டில் பெரும்பாலான பாலியல் குற்றங்கள் மீது யாரும் புகார் கொடுக்க முன்வருவது இல்லை என்று ஒரு ஆய்வு கூறுகிறது. இந்த சட்டம் தீவிரப்படுத்தப்பட்ட பிறகு, பள்ளி படித்து வரும் குழந்தைகள் மத்தியில் போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    பாலியல் சீண்டல்கள்

    இருப்பினும் குழந்தைகள் மீது நடத்தப்படும் பாலியல் துன்புறுத்தல் குறித்து பேசுவதற்கு குழந்தைகளுக்கும், பெற்றோருக்கும் இன்னமும் தயக்கம் உள்ளது. மேலும் குழந்தைகளை பாலியல் சீண்டல்கள் செய்தாலே இந்த சட்டத்தின் கீழ் வருவதால், பல இடங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது குறைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

    கடலூர் மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் உத்தரவின் பேரில் 7 உட்கோட்டங்களுக்குட்பட்ட போலீசாரும், தங்கள் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் மாவட்ட சமூக நலத்துறை, மாவட்ட சமூக பாதுகாப்புத்துறை, சைல்டு லைன் ஆகியோருடன் இணைந்து போக்சோ சட்டம் குறித்தும், எவை பாலியல் சீண்டல், எது நல்ல தொடுதல் (குட் டச்), தீய தொடுதல் (பேட் டச்) என்பது குறித்து மாணவிகளிடம் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

    விழிப்புணர்வு

    இதன் பலனாக தமிழகத்திலேயே வேறெந்த மாவட்டத்திலும் இல்லாத வகையில் கடலூர் மாவட்டத்தில் தான் அதிகளவில் போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. இதற்கு காரணம், போலீசார் மற்றும் பல்வேறு ஆசிரியர்கள், சமூக நலத்துறையினர் தினசரி ஏற்படுத்தி வரும் விழிப்புணர்வே ஆகும்.

    இதனால் பாலியல் சீண்டல்கள் செய்தால் என்ன செய்ய வேண்டும் என்ற விழிப்புணர்வு மாணவிகள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. இதனால் பாலியல் தொல்லையால் பாதிக்கப்படும் மாணவிகள், அது தொடர்பாக தங்களின் பெற்றோரிடமோ அல்லது ஆசிரியரிடமோ தெரிவிக்கின்றனர். இதன் மூலம் குற்றம் புரிபவர்களை, போலீசார் கைது செய்து வருகிறார்கள். இதுதொடர்பாக கடலூர் மாவட்டத்தை சேர்ந்த ஆசிரியர், மாணவிகள், பெற்றோர் தெரிவித்த கருத்துகள் விவரம் வருமாறு:-

    அச்சமில்லா மாணவிகள்

    ஆசிரியை ஈஸ்வரி:- மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலின் பேரில் சிதம்பரம் பகுதியில் போலீசார் மற்றும் சமூக நலத்துறையினர் கடந்த ஓராண்டுக்கும் மேலாக போக்சோ சட்டம் குறித்தும், பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்தும் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இதனால் வீட்டை விட்டு தனியாக வெளியே வர அச்சப்பட்ட மாணவிகள், தற்போது தனியாக சாலையில் அச்சமின்றி நடந்து செல்கின்றனர். மேலும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பவர்கள் மீதும், பள்ளி, கல்லூரி முடிந்து செல்லும் மாணவிகளை கேலி கிண்டல் செய்பவர்கள் மீதும் போலீசார் உடனுக்குடன் நடவடிக்கை எடுப்பதால், தற்போது மாணவிகளை கண்டாலே கேலி செய்ய அச்சப்படுகின்றனர். இதற்கெல்லாம் காரணம், மாணவிகளிடம் போலீசார் மற்றும் சமூக நலத்துறையினர் ஏற்படுத்திய விழிப்புணர்வே ஆகும்.

    கடும் தண்டனை

    திட்டக்குடி மாணவி கயல்விழி:- நான் முன்பு பள்ளிக்கு தனியாக செல்லவே அச்சப்பட்டு வந்தேன். ஆனால் போலீசார் மற்றும் அதிகாரிகள் எங்கள் பள்ளிக்கு வந்து ஏற்படுத்திய விழிப்புணர்வு காரணமாக தற்போது நான் துணிச்சலுடன் இருக்கிறேன். மேலும் பள்ளியில் நடக்கும் சம்பவம் குறித்து எப்போதும் எனது பெற்றோரிடம் கலந்துரையாடுகிறேன். அவர்களும் எனக்கு தைரியம் அளிக்கின்றனர். மேலும் மாணவிகளுக்கு எதிராக குற்றம் புரிபவர்கள் மீது போக்சோ சட்டத்தில் கடும் தண்டனை அளிக்கப்படுவதால், 18 வயதுக்கு கீழ் உள்ள மாணவிகளை பின்தொடரவே சமூக விரோதிகள் அச்சப்படுகின்றனர்.

    தயங்காமல் புகார்

    ஜெனோவியா:- 18 வயதுக்கு கீழ் உள்ள சிறுமிகளுக்கு போக்சோ சட்டம் குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் சிறுமிகள் அனைவரும் தற்போது தைரியமாக இருக்கிறார்கள். முன்பு பாலியல் தொல்லை உள்ளிட்ட பாதிப்புகள் நேர்ந்தால் யாரிடம் சொல்வது என்று தெரியாமல் இருந்தது. மேலும் பாலியல் சீண்டல் குறித்து வெளியே சொன்னால் தங்களை பெற்றோர் பள்ளிக்கு அனுப்பமாட்டர்கள் என்ற பயமும் இருந்தது. ஆனால் இப்போது மாணவிகளிடம் அந்த பயம் இல்லை. இதனால் பலர் தங்களுக்கு ஏதேனும் பாலியல் ரீதியாக துன்புறுத்தல் நேர்ந்தால் உடனடியாக பெற்றோரிடமோ அல்லது போலீசிலோ தயங்காமல் புகார் அளிக்கின்றனர்.

    முற்றுப்புள்ளி

    சந்திரா:- கடலூர் மாவட்டத்தை பொறுத்தவரை பண்ருட்டியில் தான் அதிகளவில் சிறுமிகளுக்கு எதிரான குற்ற சம்பவங்கள் நடக்கிறது. அதற்கு அடுத்தபடியாக கடலூர், விருத்தாசலத்தில் தான் ஏராளமான சிறுமிகள் பாலியல் சீண்டல்களால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தற்போது போலீசார் மற்றும் சமூக நலத்துறையினர், சைல்டு லைன் அமைப்பினர் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதால், சிறுமிகள் தங்களுக்கு நேர்ந்துள்ள கொடுமைகள் குறித்து தயங்காமல் புகார் அளிக்கின்றனர். இல்லையெனில் சிறுமிகள் பாதிக்கப்படுவது குறித்து வெளி உலகுக்கு தெரியாமலே போய்விடும். மேலும் குற்றவாளிகள் தாங்கள் என்ன செய்தாலும் தப்பி விடலாம் என்ற எண்ணத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

    வாழ்க்கையே வீண்

    கடலூர் மாணவன்:- 18 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தினால், அவர்கள் மீதும் போக்சோ சட்டம் பாயும். அதனால் போக்சோ சட்டம் குறித்து மாணவர்களிடமும் விழிப்புணர்வு ஏற்பட்டு உள்ளது. அதாவது 18 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளை தவறான நோக்கத்துடன் தொட்டால் நமது வாழ்க்கையே வீணாகி விடும் என இப்போதுள்ள இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட்டு உள்ளது. மேலும் இதுதொடர்பாக மாணவிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது போல் பள்ளி, கல்லூரி மாணவர்களிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

    சிறுவா்களுக்கும் சட்டம் பொருந்தும்

    வக்கீல் அஜிதா:- போக்சோ சட்டம் என்பது 18 வயதுக்கு கீழ் உள்ள சிறுமிகளுக்கு மட்டுமல்லாமல், பாலியல் ரீதியாக பாதிக்கப்படும் சிறுவர்களுக்கும் இச்சட்டம் பொருந்தும். போக்சோ சட்டம் குறித்து கடலூர் மாவட்டம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளில் நீதிபதிகள், போலீசார், வக்கீல்கள் மற்றும் சமூக நலத்துறையினர் மூலம் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் மாவட்ட சட்ட உதவி மையம் மூலமாகவும் விழிப்புணா்வு ஏற்படுத்தப்படுகிறது. இதனால் இன்றைய காலத்தில் சிறுமிகள் அனைவரும் துணிச்சலுடன் தனியாக செல்கின்றனர். சிறுமிகள் அளிக்கும் புகார்களுக்கு போலீசாரும் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கின்றனர்.

    மேலும் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி, புகார் அளிக்கும் சிறுமிகளின் பெயர், புகைப்படம், முகவரி உள்ளிட்ட தகவல்கள் வெளியிடப்படாது. அவர்களின் ரகசியம் பாதுகாக்கப்படும். இதனால் தற்போதுள்ள சிறுமிகள் மத்தியில் போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதால், பாலியல் சீண்டல்களால் பாதிக்கப்படும் சிறுமிகள், அச்சமின்றி புகார் அளித்து வருகின்றனர். மேலும் பாலியல் தொல்லையால் பாதிக்கப்படும் சிறுமிகளின் வாழ்வாதாரம், மறுவாழ்வு உள்ளிட்டவற்றுக்காக இழப்பீடும் வழங்கப்பட்டு வருகிறது.

    • 48 வயதுடைய பெண்ணுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த வாலிபர், அந்த பெண்ணின் பேத்தியை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் மதுரையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    • தாயின் கள்ளக்காதல் விவகாரத்தை அறியாத அந்த பெண்ணின் மகள், தன்னுடைய 12 வயது மகளை தாய் வீட்டுக்கு அனுப்பியுள்ளார். அவரும் தனது பேத்தியை பராமரித்து வளர்த்து வந்தார்.

    மதுரை:

    மதுரையை சேர்ந்தவர் வசந்த் (வயது 27). இவர் யாகப்பா நகர் பகுதியில் உள்ள கறிக்கடையில் வேலை பார்த்து வருகிறார். அந்த கறிக்கடையில் சில மாதங்களுக்கு முன்பு 48 வயதுடைய பெண் ஒருவர் வேலைக்கு சேர்ந்தார்.

    அப்போது வசந்திற்கும், அந்த பெண்ணிற்கும் பழக்கம் ஏற்பட்டது. அந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் அதே பகுதியில் தனி வீடு எடுத்து குடித்தனம் நடத்தி வந்ததாக தெரிகிறது. அந்த பெண்ணுக்கு கணவர், மகள், மருமகன் மற்றும் 12 வயது பேத்தி உள்ளனர்.

    தாயின் கள்ளக்காதல் விவகாரத்தை அறியாத அந்த பெண்ணின் மகள், தன்னுடைய 12 வயது மகளை தாய் வீட்டுக்கு அனுப்பியுள்ளார். அவரும் தனது பேத்தியை பராமரித்து வளர்த்து வந்தார். இந்த நிலையில் அந்த பெண்ணின் வீட்டிற்கு வசந்த் அடிக்கடி வந்து சென்றுள்ளார்.

    அப்போது கள்ளக்காதலியின் பேத்தியான 12 வயது சிறுமியை மிரட்டி தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். இதுகுறித்து வெளியே கூறினால் கொலை செய்து விடுவேன் என மிரட்டியதாகவும் தெரிகிறது.

    இந்த நிலையில் வசந்த்தின் பாலியல் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. இதனால் அந்த சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமையை பாட்டியிடம் தெரிவித்துள்ளார். அதிர்ச்சியடைந்த அவர், இதுகுறித்து தல்லாகுளம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார்.

    அதன் பேரில் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் திலகவதி விசாரணை நடத்தி சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த வசந்த் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிந்து கைது செய்தார்.

    48 வயதுடைய பெண்ணுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த வாலிபர், அந்த பெண்ணின் பேத்தியை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் மதுரையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • முக்கிய வழக்குகளின் குற்றப்பத்திரிகையை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும்.
    • கோப்பினை தீவிரமாக ஆய்வு செய்து உரிய அறிவுரைகள் வழங்க வேண்டும்.

    சென்னை :

    போக்சோ வழக்குகள் தொடர்பாக தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு நேற்று வெளியிட்ட சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சென்னை ஐகோர்ட்டின் சிறுவர் நீதிக்குழு மற்றும் 'போக்சோ' குழுவினர் 'போக்சோ' சட்டத்தை (குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை தடுப்பு சட்டம்) ஆய்வு செய்தனர். அதனடிப்படையில் அந்த குழுவினர் 'போக்சோ' வழக்குகளை புலனாய்வு செய்யும் அதிகாரிகளுக்கு அறிவுரைகள் வழங்கி உள்ளனர்.

    அதன் விவரம் வருமாறு:-

    * திருமண உறவு, காதல் உறவு போன்ற 'போக்சோ' வழக்குகளில் அவசரப்பட்டு கைது நடவடிக்கை எடுக்கக்கூடாது. அதற்கு பதிலாக சம்மன் அனுப்பி எதிரிகள், எதிர்மனுதாரரை விசாரணை செய்யலாம்.

    * குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்படாத விவரம் வழக்கு கோப்பில் பதிவு செய்தும், அதற்கான காரணத்தையும் பதிவு செய்ய வேண்டும்.

    * குற்றவாளியின் மீது கைது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றால் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிலை அதிகாரிகளின் அனுமதி கட்டாயம் பெற வேண்டும்.

    * முக்கிய வழக்குகளின் குற்றப்பத்திரிகையை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். குறிப்பாக, மேல் நடவடிக்கை கைவிடும் வழக்குகளில் கோப்பினை தீவிரமாக ஆய்வு செய்து உரிய அறிவுரைகள் வழங்க வேண்டும்.

    மேற்கண்ட அறிவுரைகள் வழங்கப்பட்டு உள்ளன.

    இந்த அறிவுரைகளை போலீஸ் கமிஷனர்கள், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.

    இவ்வாறு போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு கூறியுள்ளார்.

    ×