என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 100849"
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என ஆசிரியர்கள் 5-வது நாளாக இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தொடக்க பள்ளிகள் இதனால் பெரிதும் பாதிக்கபட்டுள்ளன.
ராணிப்பேட்டை அடுத்த அம்மூர் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி முன்பு மாணவர்கள் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வாலாஜா தாசில்தார் பூமா மற்றும் போலீசார் பள்ளிக்கு சென்றனர். வகுப்பறைகள் பூட்டு உடைக்கப்பட்டது. பின்பு தமிழ்த்தாய் வாழ்த்துபாடி மாணவர்களை வகுப்பறைக்கு அனுப்பினர்.
பேர்ணாம்பட்டு மேல்பட்டி அருகே உள்ள சங்கராபுரம் அரசு மேல்நிலைபள்ளிக்கு இன்று காலை மாணவர்கள் மற்றும் தற்காலிக ஆசிரியர்கள் வந்தனர். அப்போது அங்கிருந்த ஆசிரியர் ஒருவர், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை வெளியேற்றி விட்டு பள்ளிக்கு பூட்டு போட்டு சென்றுவிட்டார்.
இதனால் மாணவர்கள் பள்ளிக்கு வெளியே காத்திருந்தனர்.
இதையடுத்து அப்பகுதி பொதுமக்கள், மாணவர்கள் உமராபாத் செல்லும் சாலையில் மறியல் செய்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
மேல்மொணவூர் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் 2 ஆசிரியர்கள் மட்டுமே இன்று பணிக்கு வந்தனர். ஆசிரியர்கள் வராததை கண்டித்து பெற்றோர் 50-க்கும் மேற்பட்டோர் பள்ளியை முற்றுகையிட்டனர்.
மாணவர்கள் பாதிக்கப்படுவதை தடுக்க ஆசிரியர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
சிறிது நேரம் போராட்டத்துக்கு பிறகு அவர்கள் கலைந்து சென்றனர். #tamilnews
ராயபுரத்தில் உள்ள புனித பீட்டர்ஸ் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் சமூகநலத்துறை மூலம் ஏழை பெண்களுக்கு தாலிக்கு தங்கம் வழங்கும் விழா நடைபெற்றது.
இதில் அமைச்சர்கள் ஜெயக்குமார், சரோஜா ஆகியோர் கலந்துகொண்டு ஆயிரத்து 36 பயனாளிகளுக்கு தங்கம் அளித்தனர்.
பின்னர் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஸ்டாலின், தினகரன் ஆகியோர் இந்த ஆட்சியை ஒழிக்க வேண்டும் என்று பல்வேறு வகையில் முயற்சி செய்து வருகின்றனர். எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா போன்ற தலைவர்களின் ஆசி எங்களுக்கு உள்ளது. இதனால் எந்த கொம்பன் நினைத்தாலும் இந்த ஆட்சியை அழிக்க முடியாது.
அ.தி.மு.க. அரசு ஒவ்வொரு துறையிலும் முத்திரை பதிக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது. பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளை பிடிப்போம். 2021-ல் சட்டமன்ற தேர்தலிலும் மீண்டும் ஆட்சியை பிடிப்போம்.
அ.தி.மு.க. அரசுக்குதான் மக்களுக்கு தேவையான அனைத்தையும் செய்ய வேண்டும் என்கிற எண்ணம் உள்ளது.
ஜாக்டோ-ஜியோ அமைப்பினரிடம் ஏற்கனவே பலமுறை பேச்சுவார்த்தை நடத்தி அரசின் சிரமங்கள் எடுத்து சொல்லப்பட்டுள்ளது, 100 சதவீதம் வருவாயில் 71 சதவீதம் அரசு ஊழியர்களுக்கு சம்பளம், ஓய்வூதியம் என அனைத்தையும் கொடுக்கிறோம். மீதம் உள்ள 29 சதவீதத்தை நல திட்டங்களுக்கு செலவிட்டு வருகிறோம்.
ஜாக்டோ-ஜியோ அமைப்பினரின் போராட்ட பின்னணியில் சில அரசியல் கட்சிகள் உள்ளன.
போராட்டம் நடத்தி வரும் ஆசிரியர்கள் பிடிவாத போக்கை கடைபிடித்து வருகிறார்கள். எனவே வேறு வழி இல்லாமல் தான் நடவடிக்கை எடுக்க வேண்டிய சூழ்நிலை உருவாகி உள்ளது.
மாணவர்கள் நலன் கருதி அவர்கள் பள்ளிக்கு திரும்ப வேண்டும். யாரையும் நிர்பந்தம் செய்ய வேண்டும் என்கிற எண்ணம் எங்களுக்கு இல்லை. ஆசிரியர்களை அச்சுறுத்த நாங்கள் பயங்கரவாதிகள் அல்ல. நிதி இல்லை என்பதை விளக்கமாக பொதுமக்களுக்கு தெளிவுப்படுத்தி உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
அமைச்சர் சரோஜா கூறும்போது, “தமிழகத்தில் இதுவரை 10 லட்சத்து 53 பெண்களுக்கு தாலிக்கு தங்கம் வழங்கப்பட்டுள்ளது. இதில் 6 லட்சம் பட்டதாரி பெண்கள் பயன் பெற்றுள்ளனர்” என்றார். #ADMK #MinisterJayakumar #JactoGeo
சென்னை:
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். தொகுப்பூதிய முறையை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி அரசு ஊழியர்கள்- ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பினர் கடந்த 22-ந்தேதி முதல் வேலைக்கு செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதில் மறியலில் ஈடுபடும் ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளை போலீசார் கைது செய்து வருகின்றனர். 450 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
ஆசிரியர்கள் பள்ளிக்கு சென்று பணியாற்றாததால் மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மற்றும் செய்முறை தேர்வுக்கான ஏற்பாடுகள் முடங்கி உள்ளன. கிராமப்புறங்களில் தொடக்க பள்ளிகளுக்கு பூட்டு போடப்பட்டு உள்ளதால் மாணவர்கள் பள்ளிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் மாதம் ரூ.10 ஆயிரம் சம்பளத்தில் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்கும் பணியை மாவட்ட கலெக்டர்கள் முடுக்கிவிட்டுள்ளனர். ஒவ்வொரு மாவட்டத்திலும் ஏராளமான பட்டதாரிகள் விண்ணப்பம் அளித்து வருகின்றனர்.
அரசு ஊழியர்கள்- ஆசிரியர்கள் தனியாரைவிட பலமடங்கு அதிக சம்பளம் வாங்கி வருவதாகவும், செயல்படுத்த முடியாத கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட வேண்டாம் என்றும் அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.
எனவே மாணவர்களின் கல்விக்கும், மக்கள் பணிக்கும் இடையூறு ஏற்படுத்தும் போராட்டங்களை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என்றும் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஆனாலும் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டத்தை தீவிரப்படுத்த போவதாக அறிவித்துள்ளனர். அரசு அலுவலகங்களுக்கு செல்லாமல் பணியை புறக்கணித்து நாளை போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். தலைமை செயலக ஊழியர்களும் இதில் பங்கேற்க போவதாக அறிவித்துள்ளனர்.
எனவே அரசு பணிகள் முடங்காமல் இருக்க அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதன் ஒரு கட்டமாக, போராட்டத்தில் ஈடுபடுவோர் மீது இன்றியமையாத சேவைகள் பராமரிப்பு சட்டமான ‘எஸ்மா’ மற்றும் ‘டெஸ்மா’ ஆகியவற்றின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
இதன் முன்னேற்பாடாக உயர்நீதி மன்ற உத்தரவை மீறி பணிக்கு வராமல் போராட்டத்தில் ஈடுபடும் 1லட்சம் பேருக்கு தமிழக அரசின் பணியாளர் நடத்தை விதிகள்படி, விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டு வருகிறது.
திங்கட்கிழமை பணிக்கு வராவிட்டால் துறை ரீதியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
போராட்டத்தை ஒடுக்கும் பணியில் அரசு இறங்கி உள்ளதால் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கைது செய்து சிறையில் அடைத்து விட்டால் குடும்பத்தை யார் கவனிப்பது என்ற குழப்பமும் அரசு ஊழியர்கள் மத்தியில் எழுந்துள்ளது
இதற்கிடையே ஜாக்டோ ஜியோவின் போராட்டம் தொடர்பான வழக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளையில் நாளை விசாரணைக்கு வர உள்ளது. வழக்கில் நிலையை பொறுத்து போராட்டத்தை வாபஸ் பெறுவதா? இல்லையா? என்பதை முடிவு செய்ய உள்ளனர். #JactoGeo #TnGovernment
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுல்படுத்த வேண்டும் என்பது உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள்-ஆசிரியர் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ சார்பில் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடந்து வருகிறது.
போராட்டத்தில் ஈடுபட்ட 8 லட்சம் பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு வருகிறது. கடந்த 3 நாட்களாக மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள்-அரசு ஊழியர்கள் மாலையில் விடுவிக்கப்பட்டு வந்தனர். இந்த நிலையில் நேற்று இரவு முதல் ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் கைது செய்யப்பட்டு வருகிறார்கள்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு நிர்வாகிகளான வெங்கடேசன், மோகன்குமார், செந்தில்குமார், அருண், சாட்சாதிபதி, அருண்குமார் உள்பட 36 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
இவர்களை இன்று நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க உள்ளனர்.
தருமபுரி நகரில் நேற்று இரவு கூட்டமைப்பு நிர்வாகிகள் சுருளிநாதன், கவுரன், காவேரி, சேகர், பழனியம்மாள், குமார், பொன்ரத்தினம், யோகராசா ஆகிய 8 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது 143 (அனுமதியின்றி கூடுதல்), 506/1 (கலெக்டர் அலுவலக ஊழியர்களை அநாகரீக வார்த்தைகளால் திட்டுதல்), 7(1)சி.எல்.ஏ. (தடுப்பு காவல் சட்டம்) ஆகிய 3 பிரிவுகளில் தருமபுரி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் அவர்கள் நீதிபதி முன்பு ஆஜர் செய்யப்பட்டனர். அவர்களை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து பழனியம்மாள் தருமபுரி கிளை சிறையிலும் மற்ற 7 பேரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
தொப்பூரில் 5 பேரும், அதியமான்கோட்டையில் 4 பேரும் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
இது தவிர மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளை தேடி போலீசார் அவர்களது வீடுகளுக்கு சென்றனர். ஆனால் நிர்வாகிகள் யாரும் வீட்டில் இல்லை. தொடர்ந்து நிர்வாகிகளை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. #JactoGeo
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், சம்பள முரண்பாடுகளை களைய வேண்டும் என்பன உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்-அரசு ஊழியர்கள் கூட்டமைப்பினர் (ஜாக்டோ-ஜியோ) காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஆசிரியர்கள் 25-ந்தேதிக்குள் பணிக்கு திரும்ப வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு ஏற்கனவே உத்தரவிட்டது. இதேபோல் தமிழக அரசும் வேண்டுகோள் விடுத்தது.
அதன் பின்பும் போராட்டம் நீடிப்பதால் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தற்காலிக ஆசிரியர்களைக் கொண்டு மாணவர்களுக்கு பாடம் நடத்தப்படுகிறது.
அவர்கள் கைது செய்யப்பட்டு திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டனர். மாலையில் அவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நேற்று திடீரென்று தமிழ்நாடு முழுவதும் ஆங்காங்கே கைதான முக்கிய நிர்வாகிகள் சிறையில் அடைக்கப்பட்டனர்.
சென்னை எழிலகத்தில் தடையை மீறி மறியலில் ஈடுபட்ட ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் 500-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் சிந்தாதிரிப்பேட்டை மற்றும் புரசைவாக்கத்தில் உள்ள சமூக நலக்கூடங்களில் தங்க வைக்கப்பட்டனர்.
இவர்களில் 5 பெண்கள் உள்பட 41 பேர் மட்டும் எழும்பூர் மாஜிஸ்திரேட்டு முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை திங்கட்கிழமை கோர்ட்டில் ஆஜராகுமாறு கூறி மாஜிஸ்திரேட்டு ஜாமீனில் விடுதலை செய்தார்.
செங்கல்பட்டில் 20 நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களை செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
ஈரோட்டில் 30 பேர், சேலம் நாமக்கல்லில் 97பேர், வேலூர், திருவண்ணாமலையில் 13 பேர், கோவையில் 16 பேர், நாகர்கோவிலில் 6 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
நாகர்கோவிலில் கைதானவர்கள் மீது இந்திய தண்டனை சட்டம் 143, 188, 341, 353, 7(1)ஏ சி.எல்.ஏ. ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதேபோல் தமிழகத்தில் பல நகரங்களில் கைதானவர்களில் முக்கிய நிர்வாகிகள் மட்டும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதற்கிடையே பணிக்கு வராத ஆசிரியர்கள்-அரசு ஊழியர்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. முதல் கட்டமாக அவர்களுக்கு விளக்கம் கேட்டு முறைப்படி நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.
இதை வாங்க மறுத்ததால் அவர்களின் வீடுகளில் நோட்டீஸ் ஒட்டப்பட்டு வருகிறது. கடந்த 2 நாட்களாக இந்தப் பணிகள் நடைபெற்றன. இதன் மூலம் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் முழு விவரம் கொடுக்கப்பட்டு உள்ளது. அந்த பட்டியலின் அடிப்படையில் அவர்கள் மீது படிப்படியாக நடவடிக்கை பாய்கிறது.
முதல் கட்டமாக ‘நோ ஒர்க் நோ பே’ அடிப்படையில் சம்பள பிடித்தம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் வேலைக்கு வராத நாட்களுக்கு அவர்களுக்கு சம்பளம் கிடையாது.
அடுத்த கட்டமாக ஒழுங்கு நடவடிக்கையும், தொடர்ந்து சஸ்பெண்டு நடவடிக்கையும் பாய்கிறது. இது தொடர்பாக அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.
25-ந்தேதிக்குள் பணியில் சேர வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டதை ஆசிரியர்களுக்கு தெரியப்படுத்தி இருக்கிறோம்.
இதை பின்பற்றாத ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க களப்பணியாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. புதிய ஆசிரியர்களை பணியமர்த்துவது மிகப்பெரிய பணியாகும். நீங்கள் தனிக்கவனம் செலுத்தி அனைத்து பள்ளிகளும் எந்தத்தடையும் இல்லாமல் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பணிக்கு திரும்பாத ஆசிரியர்கள், ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதை உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு கூறியுள்ளார்.
இதுபோல் இன்று நடைபெறும் குடியரசு தின விழாவில் ஆசிரியர்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று கல்வித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இதை ஏற்காத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. #JactoGeo
பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்-ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ சார்பில் காலவரையற்ற வேலைநிறுத்தம் நடந்து வருகிறது.
கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கிய இந்த போராட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) 4-வது நாளாக நீடித்தது.
தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சுமார் 13 லட்சம் பேர் உள்ளனர். இவர்களில் 8 லட்சம் பேர் காலவரையற்ற போராட்டத்தில் குதித்துள்ளனர். இதனால் அரசு அலுவலகங்கள், பள்ளிகளில் வழக்கமான பணிகள் முடங்கியுள்ளன.
தமிழ்நாட்டின் பெரும்பாலான ஊர்களில் தொடக்கப்பள்ளிகள் கடந்த 4 நாட்களாக மூடப்பட்டுள்ளன. நேற்றும், நேற்று முன்தினமும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அனைத்து மாவட்டங்களிலும் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து ஆயிரக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டு திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டனர்.
போராட்டத்தை கைவிடுமாறு ஜாக்டோ-ஜியோவுக்கு அமைச்சர் செங்கோட்டையன் பல தடவை கோரிக்கை விடுத்தார். ஆனால் அது ஏற்கப்படவில்லை. இந்த நிலையில் போராட்டத்தில் பங்கேற்றுள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 25-ந்தேதிக்குள் பணிக்கு திரும்ப வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு நேற்று முன்தினம் உத்தரவிட்டது.
இதுபற்றி முடிவு எடுக்க ஜாக்டோ-ஜியோ உயர்மட்ட குழுவின் ஆலோசனை கூட்டம் நேற்று மாலை சென்னை திருவல்லிக்கேணியில் நடந்தது. கோர்ட்டு உத்தரவை ஏற்று வேலைக்கு திரும்புவதா? வேண்டாமா? என்று கூட்டத்தில் நீண்ட நேரம் விவாதிக்கப்பட்டது.
முடிவில் தமிழக அரசிடம் வலியுறுத்தியுள்ள 9 அம்ச கோரிக்கைகள் நிறைவேறும் வரை காலவரையற்ற போராட்டத்தைத் தொடர்வது என்று தீர்மானிக்கப்பட்டது. இதனால் தமிழ்நாடு முழுவதும் இன்றும் 4-வது நாளாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பணிகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைத் தொடர்ந்து காலவரையற்ற ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. ஜாக்டோ-ஜியோ போராட்டம் தொடங்கிய 22-ந்தேதி முதலே பணிக்கு வராதவர்கள் யார்-யார்? என்ற பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு சட்டப்பிரிவு 17-பி-ன் கீழ் நோட்டீஸ் அனுப்பப்பட்டு வருகிறது.
பள்ளிக்கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன் உத்தரவின் பேரில், மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள், பள்ளிகள் வாரியாக நோட்டீஸ் அனுப்பும் பணியில் ஈடுபட்டுள்ளனர். உரிய விளக்கம் அளிக்குமாறு அனுப்பப்படும் நோட்டீசுகளை சில இடங்களில் ஆசிரியர்கள் வாங்க மறுத்ததாக தெரியவந்தது. இதையடுத்து ஆசிரியர்களின் வீடுகளில் நோட்டீசை ஒட்ட உத்தரவிடப்பட்டுள்ளது.
குறிப்பாக ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு “நோ ஒர்க், நோபே” என்ற அடிப்படையில் சம்பளத்தை பிடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. எத்தனை நாட்களுக்கு வேலைக்கு வரவில்லையோ, அத்தனை நாட்களுக்கு சம்பளத்தை வழங்கக் கூடாது என்பதில் அரசு தீவிரமாக உள்ளது.
இதற்கிடையே போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்களுக்கு பதிலாக தற்காலிக ஆசிரியர்களை தேர்வு செய்து நியமனம் செய்ய பள்ளிக் கல்வித்துறைச் செயலாளர் பிரதீப் யாதவ் அரசாணை வெளியிட்டுள்ளார்.
இந்த அரசாணையைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் தற்காலிக ஆசிரியர்களை தேர்வு செய்யும் பணி இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கியது. 3 நாட்களுக்குள் தற்காலிக ஆசிரியர்கள் தேர்வு பணியை முடிக்கும்படி பெற்றோர்-ஆசிரியர் சங்கங்களிடம் கூறப்பட்டுள்ளது.
பெற்றோர், ஆசிரியர் சங்கம் இல்லாத பள்ளிகளில் அருகில் உள்ள பள்ளிகளில் இயங்கும் சங்கங்கள் மூலம் தற்காலிக ஆசிரியர்களை தேர்வு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இப்படி தேர்வு செய்யப்படும் தற்காலிக ஆசிரியர்கள் 28-ந்தேதி முதல் பள்ளிகளில் பணி அமர்த்தப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே 28-ந்தேதி (திங்கட்கிழமை) முதல் தற்காலிக ஆசிரியர்கள் உதவியுடன் தொடக்கப் பள்ளிகளைத் திறந்து பாடம் நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
இந்த நிலையில் மதுரை ஐகோர்ட்டில் ஜாக்டோ-ஜியோ தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது. அன்றைய தினம் மதுரை ஐகோர்ட்டு புதிய உத்தரவுகளை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஓரிரு நாட்களில் முடிவு எட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #JactoGeo #GovtStaff
சேலம்:
பழைய பென்சன் திட்டத்தை அமுல்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 22-ந் தேதி ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் தமிழகம் முழுவதும் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர்
4-வது நாளான இன்று சேலம் நாட்டாண்மை கட்டிடம் முன்பு மாவட்டம் முழுவதும் இருந்து வந்த ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திரண்டனர். அவர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
பின்னர் கலெக்டர் அலுவலகம் முன்பு சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அப்போது அரசின் மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம், கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்றனர்.
இந்த போராட்டத்தால் கலெக்டர் அலுவலகம் முன்பு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.
ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் இந்த போராட்டத்தால் பள்ளிகளில் கற்பித்தல் பணி, மற்றும் அரசு பணிகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் சில பள்ளிகளை சத்துணவு ஊழியர்களை வைத்து தற்போது நடத்தி வருகிறார்கள்.
சேலம் மாவட்டம் முழுவதும் போராட்டத்தில் பங்கேற்றுள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பும் நடவடிக்கையில் அதிகாரிகள் தீவிரமாக இறங்கி உள்ளனர்.
இதே போல நாமக்கல் மாவட்டத்தல் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த 1500-க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் 4-வது நாளாக இன்று நாமக்கல் பூங்கா சாலையில் திரண்டனர்.
பின்னர் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பியபடியே அந்த பகுதியில் அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது. இதையடுத்து அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் அவர்களை கைது செய்தனர்.
இதற்கிடையே ரூ.7 ஆயிரத்து 500 சம்பளத்தில் தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. பெற்றோர் ஆசிரியர் கழகங்கள் மூலம் புதிதாக ஆசிரியர்கள் நியமிக்கும் நடவடிக்கையில் மாவட்ட கல்வி அதிகாரிகள் தீவிரமாக இறங்கி உள்ளதால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
புதிய ஓய்வு ஊதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் இன்று 2-வது நாளாக மறியல் செய்தனர்.
திண்டுக்கல் யூனியன் அலுவலகம் முன்பு ஒன்று திரண்ட ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் அங்கிருந்து ஊர்வலமாக பஸ் நிலையம் நோக்கி வந்தனர். எம்.ஜி.ஆர். சிலை முன்பு தரையில் அமர்ந்து மறியல் செய்தனர். அப்போது கோரிக்கைகளை விளக்கி கோஷம் போட்டனர்.
இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து அவர்களை கைது செய்தனர். பெண்கள் உள்பட 4 ஆயிரம் பேரை வேனில் ஏற்றி தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.
இதே போல் தேனி நேரு சிலை முன்பு ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தி மறியலுக்கு முயன்றனர். சுமார் 2, 500 பேரை போலீசார் கைது செய்தனர். #tamilnews
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ சார்பில் காலவரையற்ற வேலைநிறுத்தம் நேற்று முன்தினம் தொடங்கி தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது.
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலை நிறுத்தம் நடக்கிறது.
நேற்று தாலுகா அளவில் மறியல் போராட்டம் நடந்தது. ஆயிரக்கணக்கானவர்கள் பங்கேற்று கைதானார்கள். பின்னர் அனைவரும் மாலையில் விடுதலை செய்யப்பட்டனர். இன்று 2-வது நாளாக மறியலில் ஈடுபட்டனர். மாவட்ட தலைநகரங்களில் அரசு ஊழியர்கள் ஒன்று திரண்டு கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி கோஷமிட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகங்கள் முன்பு திரண்டு சிறிது நேரம் போராட்டத்தின் அவசியம் குறித்து விளக்கி பேசினர். பின்னர் மறியலில் ஈடுபட்டு கைதானார்கள்.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் 3-வது நாள் வேலை நிறுத்தத்தால் அரசு பணிகள், பள்ளி மாணவர்களின் படிப்பு பாதிக்கப்பட்டு வருகிறது. பள்ளிகளை மூடிவிட்டு ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் மாணவர்கள் வீடுகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.
ஒருங்கிணைப்பாளர்கள் வின்சென்ட், சங்கர பெருமாள் ஆகியோர் அரசு ஊழியர்கள் மத்தியில் போராட்டம் குறித்து விளக்கி பேசினார்கள். தடை உத்தரவை மீறி போராட்டத்தை கொண்டு செல்ல வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.
இந்த போராட்டத்தில் 500 பெண்கள் உள்பட 1,000 பேர் கலந்துகொண்டனர். அவர்கள் அனைவரும் சாலை மறியலுக்கு முயன்றனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். ஆனாலும் 200-க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் அதையும் மீறி சாலையில் நின்று மறியல் செய்தனர். இதனால் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் அனைவரையும் போலீசார் வேனில் ஏற்றி அழைத்து சென்றனர். #JactoGeo
தர்மபுரி மாவட்டத்தில் 7 இடங்களில் ஆசிரியர்கள் - அரசு ஊழியர்கள் மறியலில் ஈடுபட்டனர். நல்லம்பள்ளி, அரூர், பாலக்கோடு, பென்னாகரம், பாப்பிரெட்டிப்பட்டி, காரிமங்கலம் மற்றும் தருமபுரி தாலுகா அலுவலகம் முன்பு மறியலில் ஈடுபட்டனர்.
தர்மபுரி தாலுகா அலுவலகம் முன்பு மறியலில் ஈடுபட்ட 500 பேரை போலீசார் கைது செய்து வேனில் அழைத்து சென்றனர். இதே போன்று நல்லம்பள்ளி தாலுகா அலுவலகம் முன்பு 250 பேரை போலீசார் கைது செய்தனர். இதே போல் மற்ற இடங்களிலும், மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களை போலீசார் கைது செய்தனர்.
தர்மபுரி மாவட்டத்தில் 7 இடங்களில் மறியலில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்களை போலீசார் கைது செய்தனர் என்று ஜாக்டோ, ஜியோ நிர்வாகி ஒருவர் தெரிவித்தார். #tamilnews
மார்த்தாண்டம்:
மார்த்தாண்டத்தை அடுத்த முண்டவிளை பகுதியை சேர்ந்தவர் ரமா (வயது 24). ரமாவுக்கும் கோட்டகம் பகுதியை சேர்ந்த மகேஷ் என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். மகேஷ் வெளிநாட்டில் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.
திருமணம் முடிந்த ஓராண்டுக்கு பிறகு கணவன்- மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
கணவருடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக ரமா, பெற்றோர் வீட்டிற்கு சென்றார். அதன்பிறகு உறவினர்கள் இருவருக்கும் இடையே சமரசம் பேசினர். இதில் உடன்பாடு ஏற்பட்டு இருவரும் மீண்டும் சேர்ந்து வாழ்ந்தனர்.
இந்த நிலையில் மீண்டும் அவர்களுக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டதை தொடர்ந்து ரமா, பெற்றோர் வீட்டிற்கு சென்றார். சமீபத்தில் மகேஷ் வெளிநாட்டில் இருந்து ஊர் திரும்பினார்.
ஊர் திரும்பிய மகேஷ், மனைவியை சந்திக்க வில்லை. எனவே கணவரை பார்க்க ரமா,நேற்று அவரது வீட்டுக்கு சென்றார். ஆனால் கணவரின் பெற்றோர் அவரை வீட்டுக்குள் அனுமதிக்க வில்லை.
மேலும் வீட்டில் இருந்த ரமாவின் பொருள்களை கொடுத்து அவரை அங்கிருந்து செல்லும்படி கூறினர். இதனால் அதிர்ச்சி அடைந்த ரமா, தனது குழந்தையுடன் கணவர் வீடு முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
இது பற்றி அக்கம் பக்கத்தினர் மார்த்தாண்டம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவம் பற்றி விசாரித்தனர்.
இன்று ரமா, இது பற்றி மார்த்தாண்டம் மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கேரள மாநிலம் கோட்டயம் பகுதியை சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர் அங்குள்ள கான்வென்டில் பணிபுரிந்து வருகிறார்.
அவர் தன்னை பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் பிஷப்பாக பணியாற்றி வரும் பிராங்கோ என்பவர் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாக போலீசில் பரபரப்பு புகார் அளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரிக்கு ஆதரவாக அதே கான்வென்டில் பணிபுரியும் 5 கன்னியாஸ்திரிகள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினார்கள். கன்னியாஸ்திரியை பாலியல் பலாத்காரம் செய்த பிஷப்பை கைது செய்ய வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததை தொடர்ந்து பிஷப் பிராங்கோ கைது செய்யப்பட்டார். தற்போது அவர் ஜாமீனில் வெளி வந்துள்ளார்.
இந்த நிலையில் உண்ணாவிரத போராட்டம் நடத்திய கன்னியாஸ்திரிகள் 5 பேரும் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டனர். ஆனால் அந்த கன்னியாஸ்திரிகள் இடமாற்றம் செய்யப்பட்டதை ஏற்க மறுத்துவிட்டனர். தங்களை பழிவாங்கவும், பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரிக்கு நெருக்கடி கொடுக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக அவர்கள் குற்றம்சாட்டினார்கள்.
இதனால் இந்த விவகாரத்தில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் கன்னியாஸ்திரிகளுக்கு ஜலந்தர் திருச்சபை தலைவர் ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில் போராட்டம் நடத்திய கன்னியாஸ்திரிகளில் ஒருவரான நீனா ரோஸ், திருச்சபைக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டதாகவும், திருச்சபை மரபை மீறி செயல்பட்டதாகவும் குற்றம்சாட்டி உள்ளார். வருகிற 26-ந் தேதிக்குள் ஜலந்தர் ரோமன் கத்தோலிக்க தலைவரை நேரில் சந்தித்து விளக்கம் அளிக்க வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதில் கூறி உள்ளார்.
இதற்கிடையே இடமாற்றம் செய்யப்பட்ட 5 கன்னியாஸ்திரிகளும் கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனுக்கு ஏற்கனவே பாதுகாப்பு கேட்டு கடிதம் எழுதியிருந்தனர். அதேபோல பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளான கன்னியாஸ்திரியும் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் போலீஸ் பாதுகாப்பு கேட்டு கடிதம் எழுதி உள்ளது குறிப்பிடத்தக்கது. #KeralaNuns #bishop
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்