search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 100907"

    காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவுப்படி காவிரி நீரை திறக்க வேண்டும் என்று ஜி.கே. வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கர்நாடக அரசு காவிரி நதிநீரில் தமிழகத்துக்கு ஜூன் மாதத்திற்குரிய 9.19 டிஎம்சி தண்ணீரை திறந்துவிட வேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இது வரவேற்கத்தக்கது.

    காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் தமிழக அரசின் சார்பில் வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்றுக்கொண்ட ஆணையம் இரு மாநில மக்களின் நலன் கருதி நடுநிலையோடு, நியாயமான உத்தரவை பிறப்பித்துள்ளது.

    தமிழக அரசின் நியாயமான கோரிக்கைகளுக்கு மேலாண்மை ஆணையம் செவி சாய்த்திருப்பது தமிழகத்துக்கு கிடைத்த வெற்றியாகும். தற்போது காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டபடி கர்நாடக அரசு செயல்பட வேண்டும் என்பதில் காவிரி மேலாண்மை ஆணையம் உறுதியாக இருந்து தமிழகத்திற்கு உரிய காவிரி நதிநீர் காலத்தே கிடைக்க தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ரூ.60 ஆயிரம் கோடியில் காவிரி-கோதாவரி நதிநீர் இணைப்பு திட்டம் விரைவில் அமல் படுத்தப்படும் என மத்திய நீர்வளத்துறை மந்திரி நிதின் கட்காரி தெரிவித்துள்ளார். #NitinGadkari #Godavari #Cauvery
    அமராவதி:

    ஆந்திராவின் அமராவதியில் நடந்த பா.ஜனதா தொண்டர்கள் கூட்டத்தில் உரையாற்றும் போது மத்திய நீர்வளத்துறை மந்திரி நிதின் கட்காரி கூறியதாவது:-

    கோதாவரி-கிருஷ்ணா-பெண்ணார்-காவிரி நதிகளை இணைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாராக உள்ளது. இது விரைவில் மத்திய மந்திரிசபையின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்படும். அதைத் தொடர்ந்து இந்த திட்டத்துக்காக ஆசிய வளர்ச்சி வங்கி அல்லது உலக வங்கியில் இருந்து நிதியுதவி கோரப்படும்.

    இந்த திட்டத்துக்கு ரூ.50 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் கோடி வரை செலவாகும் என மதிப்பிடப்பட்டு உள்ளது. இந்த திட்டம் விரைவில் அமல்படுத்தப்படும்.

    இந்த திட்டத்தில் கால்வாய்களை உருவாக்காமல், சிறப்பு தொழில்நுட்பத்துடன் மெல்லிய தடிமன் கொண்ட இரும்பு குழாய்கள் மூலம் தண்ணீர் கொண்டு செல்லப்படும்.

    இவ்வாறு நிதின் கட்காரி கூறினார்.  #NitinGadkari #Godavari #Cauvery
    கர்நாடக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து மேகதாது அணை நோக்கி 1-ந்தேதி விவசாயிகள் பேரணி நடைபெறும் என பிஆர் பாண்டியன்
    திருச்சி:

    தமிழக விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவின் மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர். பாண்டியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கர்நாடக அரசு மேகதாதுவில் காவிரியின் குறுக்கே அணை கட்டுவதற்கு வரைவு திட்டம் மற்றும் ஆய்வு திட்ட அறிக்கை தயார் செய்வதற்கு மத்திய அரசு கொடுத்த அனுமதியை திரும்ப பெற வேண்டும். கர்நாடகா முதல்வர் சட்டத்துக்கு புறம்பாக மேகதாது அணை கட்டி தமிழகத்திற்குதான் தண்ணீர் தரப்போகிறோம் என்றும், அதற்கு தமிழக அரசு ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் கூறுவது மிக மோசடியானது. தமிழகத்தை அழிக்கும் நோக்கம் கொண்டது.

    எனவே உள்நோக்கத்துடன் மேகதாது அணை கட்டுவதை கர்நாடகா அரசு கைவிட வேண்டும். தமிழக விவசாயிகள் நலனில் அக்கறை இருந்தால் கர்நாடகா முதல்வர் ராசி மணலில் அணை கட்டி, கடலில் கலக்கும் தண்ணீரை தமிழகம் பயன்படுத்த அவர் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். மத்திய அரசு ராசி மணலில் அணை கட்டுவதற்கு அனுமதி வழங்க வேண்டும்.

    மேகதாதுவில் அணை கட்ட அனுமதிக்கமாட்டோம். அதே நேரம் வரைவு திட்ட அறிக்கை தயாரிக்க கொடுத்துள்ள அனுமதியை தடை செய்யமாட்டோம் என்ற சுப்ரீம் கோர்ட்டின் கூற்று முன்னுக்குப்பின் முரணாக உள்ளது. இதனால் கோர்ட்டு தீர்ப்பு மீது தமிழக விவசாயிகளுக்கு சந்தேகம் இருக்கிறது. இது இந்தியாவின் ஒற்றுமைக்கு பேராபத்தை ஏற்படுத்தும்.

    காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடகாவில் லாப நோக்கத்துடனும் தமிழகத்தை அழிக்கும் நோக்கத்துடனும் மத்திய அரசு செயல்படுவது ஏற்கக்கூடியது இல்லை. பிரதமர் மோடி கர்நாடகாவில் ஓட்டு வாங்குவதற்காக மறைமுக சூழ்ச்சியில் ஈடுபடுகிறார். அரசியல் அமைப்பு சட்டத்தையே பிரதமர் மீறுகிறார்.

    எனவே ஜனவரி1-ந்தேதி கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இருந்து மேகதாது நோக்கி, பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் பேரணியாக செல்ல உள்ளோம். மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் ஜனவரி 1-ந்தேதியை துக்க நாளாக அறிவித்து தமிழகத்தில் விவசாயிகள், மாணவர்கள், இளைஞர்கள், அரசு அதிகாரிகள் புத்தாண்டு கொண்டாட்டங்களை தவிர்க்க வேண்டும்.

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட பல கிராமங்களில் இன்னும் மின் இணைப்பு வழங்கப்படாமல் உள்ளது. பாசன கிணறுகளுக்கு மின் இணைப்பு கொடுக்கப்படவில்லை. வருகிற 18-ந்தேதி கர்நாடகா முதல்வர் குமார சாமி ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வருகிறார். அவரை அனுமதிக்க மாட்டோம், திருப்பி அனுப்புவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    மேகதாது மட்டுமல்ல காவிரியின் குறுக்கே கர்நாடகா எங்கு அணை கட்டினாலும் அனுமதிக்க மாட்டோம் என்று தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார். #MinisterKadamburRaju
    கோவில்பட்டி:

    தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கோவில்பட்டியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    எம்.ஜி.ஆர். காலத்தில் இருந்தே அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் கட்சிக்கு திரும்புவது நடந்து வருகிறது. 18 சட்டமன்ற உறுப்பினர்களின் பதவி செல்லாது என்று உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் அவர்கள் மீண்டும் வந்தால் கட்சியில் இணைத்துக் கொள்வோம் என ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் ஏற்கனவே அறிவித்து உள்ளனர். அதை ஏற்று அவர்கள் வந்தால் இணைத்துக் கொள்ள தயாராக உள்ளோம். தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் மக்களை சந்திக்க பயந்து கூட்டணி அமைப்பதில் கவனம் செலுத்தி வருகின்றனர். ஆனால் அ.தி.மு.க. தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறோம்.

    2014 பாராளுமன்ற தேர்தலிலும், 2016-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலிலும் அ.தி.மு.க. தனித்துப் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளது. தேர்தல் நேரத்தில் கூட்டணிக்கு யாராவது வந்தால் அது குறித்து தலைமை முடிவு செய்யும். மேகதாது அணை பிரச்சினையைப் பொறுத்தவரை தமிழக அரசு சிறப்பு சட்டமன்ற கூட்டத்தை கூட்டி, அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றி அதனை மத்திய அரசுக்கு அனுப்பி உள்ளோம்.

    தொடர்ந்து புதுச்சேரி மாநில முதல்வர் நாராயணசாமியும் மேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் சரத்துகளின் அடிப்படையில் ஏதாவது ஒரு மாநிலத்தில் அணை கட்ட வேண்டும் என்றால் மற்ற 4 மாநிலங்களிடமிருந்து கருத்து கேட்க வேண்டும்.

    மேகதாது மட்டுமல்ல மற்ற எந்த இடத்தில் அணை கட்டினாலும் தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிப்பதோடு, அந்தப் பணியை தடுத்து நிறுத்தும். காவிரி மேலாண்மை வாரியம் தமிழகத்துக்கு ஒதுக்கி உள்ள டிஎம்சி தண்ணீரில் ஒரு டிஎம்சி கூட குறையக் கூடாது என்பதில் உறுதியாக உள்ளோம். முதல்வர் தமிழக அரசின் நிலைப்பாட்டை தெளிவாக தெரிவிப்பார்.

    இவ்வாறு அவர் கூறினார். #MinisterKadamburRaju

    தமிழகத்துக்கு வரும் காவிரி நீரில் கழிவுகள் கலப்பதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணை ஒரு வாரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது. #CauveryWater #Waste #SupremeCourt
    புதுடெல்லி:

    கர்நாடகாவில் காவிரி கரையோரம் உள்ள தொழிற்சாலைகள் மற்றும் பெங்களூரு போன்ற பகுதிகளில் உற்பத்தியாகும் கழிவுகள் சுத்திகரிக்கப்படாமல் காவிரி ஆற்றில் கலக்கின்றன. இதனால் ஆண்டுக்கு சுமார் 5 லட்சத்து 40 ஆயிரத்து 200 மில்லியன் லிட்டர் கழிவுகள் கர்நாடகாவில் இருந்து காவிரி மூலம் தமிழகத்துக்கு வருகிறது.

    இதனால் காவிரி நீரில் விளையும் பயிர்களில் துத்தநாகம், ஈயம், காட்மியம், செம்பு போன்ற வேதிப்பொருள்களின் தன்மை அதிகம் இருப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டது. மேலும் காவிரி கரையோரம் வாழும் தமிழக மக்களும், கால்நடைகளும் பலவித நோய்களுக்கும் ஆளாகிறார்கள்.

    எனவே காவிரியில் கலக்கும் இத்தகைய கழிவு நீரை சுத்திகரித்து ஆற்றில் விடும் வகையில் நடவடிக்கை எடுக்க கர்நாடகாவுக்கு உத்தரவிட வேண்டும் என்றும், கழிவுகள் கலப்பதற்கு நிரந்தர தடை விதிக்க வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த வழக்கில் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஜூலை 16-ந் தேதி அறிக்கை தாக்கல் செய்தது. இதில், கர்நாடகாவில் காவிரி உற்பத்தியாகும் இடம் மற்றும் அங்கு பாயும் பகுதிகளில் எங்கும் கழிவு நீர் கலக்கப்படவில்லை எனவும், தென்பெண்ணையாறு, அர்க்காவதி ஆகிய கிளை நதிகள்தான் மாசடைந்த நிலையில் தமிழ்நாட்டுக்குள் பிரவேசிக்கின்றன என்றும் கூறப்பட்டது.

    இந்த அறிக்கை மீது ஏற்கனவே தமிழக அரசும், கர்நாடக அரசும் பதில் மனுக்களை தாக்கல் செய்துள்ளன.

    இந்த வழக்கின் விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இதில் விசாரணை தொடங்கியதும், இந்த வழக்கை ஒத்திவைக்குமாறு தமிழ்நாடு, கர்நாடகா தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் விசாரணையை ஒரு வாரத்துக்கு ஒத்திவைத்து உத்தரவு பிறப்பித்தனர். 
    கர்நாடகாவில் உள்ள மண்டியா மாவட்டத்தில் காவிரி தாய்க்கு 125 அடி உயரத்தில் சிலை அமைக்க அம்மாநில அரசு இன்று தீர்மானித்துள்ளது. #Karnatakagovernment #Cauvery
    பெங்களூரு:

    கர்நாடக மாநில நீர்வளத்துறை மந்திரி சிவக்குமார் மற்றும் சுற்றுலாத்துறை மந்திரி சாரா ரமேஷ் ஆகியோர் தலைமையில் இரு துறைகளை சேர்ந்த உயரதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் பெங்களூருவில் உள்ள விதான சவுதாவில் இன்று நடைபெற்றது.



    மண்டியா மாவட்டத்தில் கிருஷ்ணராஜ சாகர் அணையை ஒட்டியுள்ள பகுதியில் ஒரு அருங்காட்சியகம் கட்டப்படும். அந்த அருங்காட்சியகத்தின் உச்சியில் காவிரி தாய்க்கு  125 அடி உயரத்தில் சிலை அமைக்க இந்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. அப்பகுதியில் புதிய ஏரி உருவாக்கப்பட்டு இந்த சிலையும், அருகாமையில் 360 அடியில் கண்ணாடியால் ஆன இரு கண்காணிப்பு கோபுரங்களும் அமைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தனியார் பங்களிப்புடன் சுமார் 1200 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான இந்த திட்டத்துக்கு தேவையான நிலம் மட்டும் அரசு ஒதுக்கீடு செய்யும் என மந்திரி சிவக்குமார் நிருபர்களிடம் தெரிவித்தார். #Karnatakagovernment #Cauvery 
    தண்ணீரின் வேகம் மற்றும் மழையால் திருச்சி முக்கொம்பு அணை சீரமைப்பு பணியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
    திருச்சி:

    திருச்சி முக்கொம்பு மேலணையில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணையில் கடந்த 22-ந்தேதி இரவு 9 மதகுகள் உடைந்தன. அதனை தற்காலிகமாக சீரமைக்கும் பணிகள் வேகமாக நடந்து வருகிறது. உடைந்த பகுதி மட்டுமல்லாமல் அதோடு கூடுதலாக 220 மீட்டர் தூரம் சீரமைப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது.

    அணையில் தென்கரை பகுதியில் முதலாவது மதகில் இருந்து 5-வது மதகு வரை தற்போது மணல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து மணல் மூட்டைகளை வரிசையாக அடுக்கி வைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். 600-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மூலம் 1 லட்சம் மணல் மூட்டைகளை கொண்டு மதகுகளில் அடைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் திருச்சி மாநகரில் கடந்த சில நாட்களாக மாலை நேரங்களில் மழை பெய்து வருகிறது. நேற்று மாலையும் பலத்த சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. இதனால் சீரமைப்பு பணியில் ஈடுபட்டி ருந்த தொழிலாளர்கள் அனைவரும் கரைக்கு திரும்பினர். தொடர்ந்து மழை தூறியபடி இருந்ததால் பணி மேற்கொள்ளப்படவில்லை. இதையடுத்து தொழிலாளர்கள் அனைவரும் தங்களது உடைமைகளுடன் வீட்டிற்கு புறப்பட்டு சென்றனர்.


    இன்று காலை முதல் சீரமைப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது . அணையில் கட்டுமான பொருட்களை கொண்டு செல்வதற்காக நாட்டு படகு ஒன்று புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடியில் இருந்து கொண்டுவரப்பட்டது. அதன் மூலம் ஆற்றின் நடுவே நடைபெற்று வரும் பணிகளுக்கு கட்டுமான பொருட்கள் கொண்டு செல்லப்பட்டது. பணிகளை விரைந்து முடிக்க வேண்டியுள்ளதால் மேலும் ஒரு படகும் கொண்டு வரப்பட உள்ளது.

    இதனிடையே புதிய அணை கட்டுவதற்கான பணிகளில் நிபுணர் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். கொள்ளிடம் அணைப்பகுதிக்கு வரக்கூடிய தண்ணீரை காவிரி ஆற்றில் திருப்பிவிடும் பணி மிதவை பொக்லைன் எந்திரம் மூலம் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தண்ணீரின் வேகம் அதிகமாக உள்ளதால் அதனை கட்டுப்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

    முக்கொம்பு அணையில் உடைந்த பகுதியை பார்வையிட்ட முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 4 நாட்களுக்குள் தற்காலிக சீரமைப்பு பணிகள் முடிக்கப்படும் என்று தெரிவித்தார். ஆனால் தண்ணீரின் வேகம் மற்றும் மழை ஆகியவற்றால் முக்கொம்பு அணையில் சேதமடைந்த மதகுகளை சீரமைக்கும் பணி இரு வாரங்களுக்கு மேல் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இன்று காலை நிலவரப்படி முக்கொம்பு அணைக்கு 29,000 கனஅடி தண்ணீர் வந்தது. இதில் காவிரி ஆற்றில் 13,000 கன அடியும், கொள்ளிடம் ஆற்றில் 16,000 கனஅடியும் திறக்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்டம் மாயனூர் கதவணைக்கு 26,000 கனஅடி தண்ணீர் வந்தது. அங்கிருந்து 24,000 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது.
    அணைக்கரையில் உள்ள கீழணையின் தூண்களில் விரிசல்கள் வெள்ளத்தால் அதிகரித்திருப்பதால் அணைக்கரை பாலத்தில் போக்குவரத்தை நிறுத்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். #MukkombuDam #Ramadoss

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    திருச்சி மாவட்டம் முக்கொம்பு பகுதியில் கொள்ளிடத்தின் குறுக்கே கட்டப்பட்டுள்ள மேலணையின் 9 மதகுகள் உடைந்ததால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், தஞ்சை மாவட்டம் அணைக்கரையில் உள்ள கீழணையின் தூண்களில் ஏற்கனவே ஏற்பட்ட விரிசல்கள் வெள்ளத்தால் அதிகரித்திருப்பதாக தெரிய வந்துள்ளது. ஆனால், கீழணையை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படாதது கண்டிக்கத்தக்கது.

    கொள்ளிடம் தொடங்கும் இடத்தில் 1836-ம் ஆண்டு மேலணையை கட்டிய அதே ஆர்தர் காட்டன் என்ற அதிகாரி தான் அடுத்த 4 ஆண்டுகள் கழித்து 1940-ம் ஆண்டில் அணைக்கரையில் கீழணையைக் கட்டினார்.

    தஞ்சாவூர், நாகை, கடலூர் மாவட்டங்களில் 1.32 லட்சம் ஏக்கர் நிலங்களுக்கு பாசன ஆதாரமாக திகழும் இந்த அணையும் முறையான பராமரிப்பு இல்லாமல் கடந்த 2002-ம் ஆண்டு வலு விழந்தது. அதன்பின் 16 ஆண்டுகளாகியும் அதனால் ஏற்படும் பாதிப்புகளை நிரந்தரமாகத் தடுக்க தமிழக ஆட்சியாளர்கள் உறுதியான நடவடிக்கைகள் எதையும் எடுக்கவில்லை என்பது தான் வேதனை.

    கீழணை வலுவிழந்ததற்கான காரணங்களை கடந்த 2002-ம் ஆண்டில் காவிரி தொழில்நுட்பக் குழுவின் தலைவராக இருந்த பேராசிரியர் மோகன கிருஷ்ணன் ஆய்வு செய்தார். கீழணை அமைந்துள்ள பாலம் போக்குவரத்துக்கு ஏற்றதல்ல என்பதைக் கண்டறிந்த அவர், அப்பாலத்தில் கனரக ஊர்திகள் செல்ல தடை விதிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு பரிந்துரைத்தார்.

    ஆனால், அப்பரிந்துரையை அப்போதைய ஜெயலலிதா அரசு ஏற்றுக் கொள்ள வில்லை. தொடர்ந்து கனரக ஊர்திகள் போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட்டதால் 2009-ம் ஆண்டில் பாலத்தின் 13-வது மதகில் விரிசல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அந்த ஆண்டு ஏப்ரல் 15-ந்தேதி பாலத்தை மீண்டும் ஆய்வு செய்த மோகனகிருஷ்ணன் கீழணை அமைந்துள்ள அணைக்கரை பாலத்தில் போக்குவரத்தை முற்றிலுமாக நிறுத்த பரிந்துரைத்தார்.

    அதன்படி அணைக்கரை பாலத்தில் சில ஆண்டுகளுக்கு பேருந்துகள் உள்ளிட்ட கனரக ஊர்திகள் செல்ல தடை விதிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி ரூ.7.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பராமரிப்புப் பணிகள் மேற் கொள்ளப்பட்டன. ஆனாலும், சில மாதங்களில் அணைக்கரைப் பாலத்தில் மீண்டும் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டதால் அணை மீண்டும் பாதிக்கப்பட்டது.

    கீழணையில் 5 முதல் 18 வரையிலான 14 நீர்வழி மதகுகள் சேதமடைந்துள்ளன. காவிரிப் பாசன மாவட்டங்களில் கடந்த இரு நாட்களாக பயணம் மேற்கொண்டுள்ள நான், அங்குள்ள விவசாயிகள் மற்றும் விவசாய சங்க நிர்வாகிகளிடம் இது குறித்து விசாரித்தேன்.

    அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தால் கீழணை தூண்களிலும், மதகுகளிலும் ஏற்பட்ட விரிசல்கள் அதிகரித்திருப்பதாகவும், மேலணை இடிந்த பிறகு கீழணைக்கு எந்த நேரத்தில் எத்தகைய ஆபத்து ஏற்படுமோ என்ற அச்சத்தில் தாங்கள் வாழ்வதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர்.

    கீழணையில் தொடர்ந்து போக்குவரத்து அனுமதிக்கப்பட்டால் அதற்கு எந்த நேரமும் ஆபத்து நேரலாம் என்பது தான் அப்பகுதியில் உள்ள உழவர்களின் கருத்தாக உள்ளது. மேலணை உடைந்து 4 நாட்கள் ஆகிவிட்ட நிலையில் கீழணையின் வலிமை மற்றும் பாதுகாப்பு குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் இதுவரை எந்த ஆய்வுகளையும் மேற் கொள்ளவில்லை. கீழணை உள்ளிட்ட தமிழ்நாட்டு அணைகளின் பாதுகாப்பு குறித்த வி‌ஷயத்தில் அரசின் அக்கறை என்ன என்பதை இதிலிருந்தே அறியலாம்.

    கீழணையில் கனரக ஊர்திகள் போக்குவரத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று 16 ஆண்டுகளுக்கு முன்பும், அனைத்து வாகனப் போக்குவரத்துக்கும் தடை விதிக்க வேண்டும் என்று 9 ஆண்டுகளுக்கு முன்பும் பரிந்துரைக்கப்பட்ட நிலையில், அப்பரிந்துரைகளை செயல்படுத்தாததன் மூலம் கீழணையின் பாதுகாப்புக்கு திராவிடக் கட்சிகளின் அரசுகள் பெரும் துரோகம் செய்துள்ளன.

    அணைக்கரையிலிருந்து கும்பகோணம் செல்லும் ஊர்திகளை மதனத்தூர் நீலத்தநல்லூர் கொள்ளிடம் பாலம் வழியாக இயக்குவதன் மூலம் கீழணையில் ஊர்திப் போக்குவரத்தை தவிர்க்க முடியும். கடந்த காலங்களில் இவ்வாறு செய்யப்பட்டுள்ளது.

    விக்கிரவாண்டியிலிருந்து கும்பகோணம் வழியாக தஞ்சாவூர் செல்லும் இருவழிச் சாலையை நான்கு வழிச் சாலையாக மாற்றும் திட்டத்தை விரைந்து செயல் படுத்துவதன் மூலம் இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண முடியும்.

    ஆனால், இந்தத் திட்டம் தயாரிக்கப்பட்டு 9 ஆண்டுகள் ஆன நிலையில், இப்போது தான் முதற்கட்ட பணிகள் தொடங்கியுள்ளன. இந்தப் பணிகளை விரைந்து நிறைவேற்றி முடிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதவிர கீழணைக்கு மாற்றாக அதே பகுதியில் வலிமையான புதிய அணை கட்டுவதற்கான வாய்ப்புகளையும் அரசு ஆராய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ஒகேனக்கல்லுக்கு நேற்று காலை 17 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று சற்று உயர்ந்து 22 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. #Hogenakkal #Cauvery
    ஒகேனக்கல்:

    கர்நாடக மாநிலத்தில் கனமழை காரணமாக அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகள் நிரம்பின. அதில் இருந்து உபரிநீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது. தற்போது அணைகளில் இருந்து குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால் கர்நாடக-தமிழக எல்லை பகுதியான பிலிக்குண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து சரிந்தது நேற்று 17 ஆயிரம் கனஅடியாக குறைந்து வந்தது.

    நேற்று மதியம் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்ததால் கர்நாடக அணைகளில் இருந்து நீர் திறப்பு சற்று அதிகரித்தது. நேற்று காலை ஒகேனக்கல்லுக்கு 17 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று சற்று உயர்ந்து 22 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது.

    இன்று விடுமுறை நாள் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். நேற்று முதல் ஒகேனக்கல்லில் கோத்திக்கல்பாறை என்ற இடத்தில் பரிசல் இயக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளதால் சுற்றுலா பயணிகள் பரிசலில் சென்று மகிழ்ந்தனர். ஒகேனக்கல்லில் தொடர்ந்து 48-வது நாளாக மெயினருவில் குளிக்க தடைவிதிக்கப்பட்டு உள்ளது.  #Hogenakkal #Cauvery
    கடந்த 15 நாட்களுக்கு மேலாக மேட்டூர் 16 கண் மதகு வழியாக வெளியேற்றப்பட்டு வந்த நீர்திறப்பு நிறுத்தப்பட்டு விட்டது. #MetturDam

    மேட்டூர்:

    கேரள மற்றும் கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிர மடைந்ததால், கர்நாடகாவில் உள்ள கபினி, கே.ஆர்.எஸ். அணைகளில் இருந்து கடந்த ஒரு மாதமாக காவிரியில் உபரிநீர் அதிக அளவில் திறந்து விடப்பட்டது. இதனால், கடந்த ஒரு மாதமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு ஒரு லட்சம் கன அடிக்கு மேல் இருந்தது.

    இதனை தொடர்ந்து மேட்டூர் அணையில் இருந்து உபரிநீர் அதிக அளவில் திறக்கப்பட்டதால், கடந்த ஒரு மாதமாக காவிரியில் வெள்ள கரைபுரண்டு ஓடியது.

    தற்போது கேரள மற்றும் கர்நாடக மாநிலங்களில் மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு படிப்படியாக குறைந்து வருகிறது. நேற்று முன்தினம் நீர்வரத்து விநாடிக்கு 65 ஆயிரம் கன அடியாகவும், நீர் திறப்பு 60 ஆயிரம் கன அடியாகவும் சரிந்தது.

    பின்னர், நேற்று காலை நீர்வரத்து விநாடிக்கு 16 ஆயிரம் கன அடியாகவும், நீர் வெளியேற்றம் 35 ஆயிரம் கன அடியாகவும் குறைந்தது. நேற்று மதியத்துக்கு மேல் நீர்திறப்பு விநாடிக்கு 20 ஆயிரத்து 800 கன அடியாக குறைக்கப்பட்டது.

    இன்று காலை நீர்வரத்து மேலும் குறைந்துள்ளது. மேட்டூர் அணைக்கு விநாடிக்கு 15 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையின் சுரங்க மின் நிலையம் வழியாக 20 ஆயிரம் கன அடி தண்ணீரும், கிழக்கு, மேற்கு பாசன கால்வாய் வழியாக 800 கன அடி வீதம் தண்ணீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணை நீர்மட்டம் 120.02 அடியாக உள்ளது.

    இதனிடையே கடந்த 15 நாட்களுக்கு மேலாக 16 கண் மதகு வழியாக வெளியேற்றப்பட்டு வந்த நீர்திறப்பு நிறுத்தப்பட்டு விட்டது. மேட்டூர் அணையில் இருந்து ஒரு மாதத்துக்கு பின்னர் நீர்திறப்பு குறைக்கப்பட்டுள்ளதால், காவிரியில் நிலவி வந்த வெள்ள அபாயம் தற்போது நீங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. #MetturDam

    மேட்டூர் அணையின் மொத்த கொள்ளளவு 93.47 டி.எம்.சி. அதைவிட அதிமான தண்ணீர் கடலுக்கு சென்றுள்ளது. இப்போது மட்டும் அல்ல இதேபோல பல தடவை அதிக அளவில் தண்ணீர் வீணாக கடலில் கலந்துள்ளது. #Cauvery #Metturdam
    சென்னை:

    கர்நாடகாவில் உற்பத்தியாகி வரும் காவிரி ஆறு திருச்சி முக்கொம்பில் காவிரி என்றும், கொள்ளிடம் என்றும் 2 ஆறுகளாக பிரிகிறது.

    அதில் காவிரி ஆறு நாகப்பட்டினம் மாவட்டம் பூம்பூகாரிலும், கொள்ளிடம் ஆறு சிதம்பரம்-சீர்காழி இடையேயும் கடலில் கலக்கின்றன.

    காவிரி ஆற்றில் தமிழ்நாட்டில் மேட்டூர் அணை மட்டுமே தண்ணீர் தேக்கி வைக்கும் அணையாக உள்ளது. அதன்பிறகு திருச்சி அருகே முக்கொம்பில் தண்ணீரை பிரித்து அனுப்பும் ஒரு அணையும், அதைத் தொடர்ந்து கல்லணையும் உள்ளன.

    காவிரியில் அதிக வெள்ளம் வரும்போது, முக்கொம்பில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்படும். மேலும் கல்லணையில் இருந்தும் உபரி நீர் கொள்ளிடம் ஆற்றுக்கு தனியாக திறந்து விடப்படும்.

    இவ்வாறு திறந்துவிடப்படும் தண்ணீர் தஞ்சாவூர் மாவட்டம் அணைக்கரை வந்து சேரும். அங்கு ஒரு அணை உள்ளது. அதில் இருந்து கால்வாய்களுக்கு தண்ணீர் பிரித்து அனுப்பப்படும்.

    ஆனால் அதிக அளவில் தண்ணீர் வந்தால் அவை முழுவதையும் கால்வாயில் அனுப்பும் அளவிற்கு போதிய கால்வாய்கள் இல்லை. எனவே அங்கிருந்து வெளியேறும் தண்ணீர் முழுவதுமாக கடலுக்கு செல்வது வாடிக்கை.

    தற்போது காவிரியில் தொடர்ந்து அதிக தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் அந்த தண்ணீரில் பெரும் பகுதி கடலுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.

    கடந்த மாதம் 26-ந்தேதியில் இருந்து உபரி நீர் கொள்ளிடம் வழியாக கடலில் கலந்து வருகிறது. அதேபோல காவிரி ஆற்றில் பூம்புகார் செல்லும் தண்ணீரும் கடலில் கலக்கிறது. இவ்வாறு கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 100 டி.எம்.சி. தண்ணீர் கடலில் கலந்துள்ளது. தொடர்ந்து தண்ணீர் வீணாக கடலுக்கு செல்கிறது.

    மேட்டூர் அணையின் மொத்த கொள்ளளவு 93.47 டி.எம்.சி. அதைவிட அதிமான தண்ணீர் கடலுக்கு சென்றுள்ளது. இப்போது மட்டும் அல்ல இதேபோல பல தடவை அதிக அளவில் தண்ணீர் வீணாக கடலில் கலந்துள்ளது.

    இதுசம்பந்தமாக அமைச்சர் ஜெயக்குமார் கூறும்போது, 2000-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியில் இருந்தபோது 385 டி.எம்.சி. தண்ணீர் கடலில் கலந்ததாகவும், 2014-ல் 115 டி.எம்.சி. தண்ணீர் கடலில் கலந்ததாகவும் கூறினார்.

    பெரியார் மணியம்மை பல்கலைக்கழக பருவநிலை மாற்ற மைய முன்னாள் இயக்குனர் நடராஜன் கூறும்போது, 1991-ல் இருந்து 2005 வரை மட்டுமே 1039 டி.எம்.சி. தண்ணீர் கொள்ளிடம் வழியாக கடலில் கலந்துள்ளது.



    காவிரி டெல்டா பகுதியில் தண்ணீரை தேக்கி வைப்பதற்கு போதிய வசதிகள் செய்யாததால் 2005-ம் ஆண்டு 300 டி.எம்.சி. தண்ணீர் கடலில் கலந்தது. 1991-2005 வரை கடலில் கலந்துள்ள தண்ணீரை கொண்டு சுமார் ரூ.51 ஆயிரம் கோடி அளவிற்கு நெல் உற்பத்தி செய்திருக்கலாம் என்று கூறினார்.

    கொள்ளிடத்தில் தேவையான அளவுக்கு சிறு அணைகளையும், தடுப்பு அணைகளையும் கட்டினாலே தண்ணீர் வீணாவதை கட்டுப்படுத்த முடியும் என்று விவசாயிகள் கூறுகின்றனர்.

    காவிரியில் 177.25 டி.எம்.சி. தண்ணீர் தமிழகத்திற்கு திறந்துவிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது. ஆனால் ஜூன் 1-க்கு பிறகு இதுவரை 270 டி.எம்.சி. தண்ணீர் வந்துவிட்டது. அதாவது 93 டி.எம்.சி. தண்ணீர் அதிகமாக வந்துள்ளது. ஆகஸ்டு மாதத்தில் மட்டுமே 132 டி.எம்.சி. தண்ணீர் வந்துள்ளது. #Cauvery #Metturdam
    மேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்றிரவு மீண்டும் 120 அடியை தாண்டி நடப்பாண்டில் 3-வது முறையாக அணை நிரம்பியது.
    மேட்டூர்:

    கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்பட்ட உபரி நீரால் மேட்டூர் அணைக்கு கடந்த 45 நாட்களுக்கும் மேலாக தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    இதனால் கடந்த மாதம் 23-ந் தேதி மேட்டூர் அணை முழு கொள்ளளவான 120 அடியை தாண்டியது. பின்னர் காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டதால் மேட்டூர் அணை நீர்மட்டம் 120 அடிக்கு கீழ் சரிந்தது.

    கர்நாடகா மற்றும் கேரளாவில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் பெய்த மழையால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததால் கடந்த 11-ந் தேதி மேட்டூர் அணை 2-வது முறையாக நிரம்பியது.

    தொடர்ந்து மேட்டூர் அணைக்கு 2 லட்சம் கன அடிக்கும் அதிகமாக தண்ணீர் வந்ததால் அணை பாதுகாப்பு கருதி கூடுதல் தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்று 119.25 அடியாக சரிந்தது.

    இதற்கிடையே கர்நாடகா மற்றும் கேரள மாநிலங்களில் மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு நேற்று 80 ஆயிரம் கன அடியாக சரிந்தது. இதனால் மேட்டூர் அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் அளவு 50 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டது.

    இதனால் நேற்று காலை 11.25 கன அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்றிரவு மீண்டும் 120 அடியை தாண்டி நடப்பாண்டில் 3-வது முறையாக அணை நிரம்பியது.

    கடந்த 2005-ம் ஆண்டு மேட்டூர் அணை 5 முறை நிரம்பியது. அதன் பிறகு நடப்பாண்டில் நேற்றிரவு 3-வது முறையாக நிரம்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 120.21 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து 75 ஆயிரம் கன அடியாக இருந்த நிலையில் அணையில் இருந்து 75 ஆயிரத்து 800 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.

    கபினி மற்றும் கிருஷ்ண ராஜசாகர் அணையில் இருந்து நேற்று 98 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் இன்று காலை கிருஷ்ண ராஜசாகர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு முற்றிலும் நிறுத்தப்பட்டது.

    கபினி அணையில் இருந்து மட்டும் 20 ஆயிரம் கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் இனி வரும் நாட்களில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் குறையும்.

    ஒகேனக்கலில் நேற்று காலை 1 லட்சம் கன அடி தண்ணீர் வந்த நிலையில் இன்று தண்ணீர் வரத்து 75 ஆயிரம் கன அடியாக குறைந்தது. ஒகேனக்கலில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் இன்றும் தடை விதிக்கப்பட்டிருந்தது.



    ×