search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மீட்பு"

    • 16 வருடங்களாக சிறைபிடிக்கப்பட்ட ராணு மெலிந்துள்ளார்.
    • எலும்புகளில் தோல் ஒட்டிக்கொண்டது.

    போபால்:

    மத்திய பிரதேசத்தின் தலைநகர் போபாலில் 16 ஆண்டுகளாக மாமியாரால் சிறைவைக்கபப்ட்ட பெண் மீட்கப்பட்டார். மத்திய பிரதேச மாநிலம் நரசிங்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த கிஷன் லால் சாஹு. இவரது மகள் ராணு சாஹூ. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்தவருக்கும் 2006-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

    திருமணத்துக்கு பின்னர் அவர்கள் கூட்டுக்குடும்பமாக வசித்து வந்தனர். இந்த நிலையில்தான் 2008-ம் ஆண்டுக்கு பின்னர் ராணு சாஹூவை அவரது மாமியார் கொடுமைப்படுத்த தொடங்கினார். மகனை விட்டு அவரை பிரித்த மாமியார் கிட்டத்தட்ட 16 ஆண்டுகளாக ராணு சாஹூவை அறையில் அடைத்து வைத்து கைதி போல நடத்தியுள்ளார்.

    கிஷன் லால் சாஹு மற்றும் அவரது உறவினர்களையும் பார்க்க அனுமதிக்கவில்லை.

    இதனால் ராணு சாஹூவின் உடல் நிலை மோசமானது. அவர் எலும்பும் தோலுமாக மாறி சாகும் நிலைக்கு தள்ளப்பட்டார். இதை அறிந்த கிஷன் லால் சாஹூ மகள் ராணுவை மீட்டு சிகிச்சை அளித்து கணவன், மாமியார் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு புகார் மனு அனுப்பினார்.

    இதையடுத்து போலீசார் அதிரடியாக அங்கு சென்று ராணுவை மீட்டனர். போலீசார் ராணுவை பார்த்ததும் அவளின் நிலையை கண்டு திகைத்தனர். 16 வருடங்களாக சிறைபிடிக்கப்பட்ட ராணு மெலிந்துள்ளார். எலும்புகளில் தோல் ஒட்டிக்கொண்டது. ராணு பேசும் நிலையில் இல்லை, அவள் நிலை மிகவும் மோசமாக இருந்தது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். இதுபற்றி தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

    • சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்து, விசாரணை நடத்தினர்.
    • 2019-ம் ஆண்டு கிருஷ்ணகிரியில் வைத்து அவரது தாய் வைரத்தை கொலை செய்தார்.

    சேலம்:

    சேலம் நெத்திமேடு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் அருகே, சுமார் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் தலையில் காயத்துடன் நேற்றிரவு மயங்கி கிடந்தார்.

    அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அன்னதானப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் அங்கு சென்று, அந்த வாலிபரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்து, விசாரணை நடத்தினர்.

    இதில், மயங்கி கிடந்த வாலிபர் மணியனூர் கந்தாயம்மாள் தெருவை சேர்ந்த வெங்கடேசன் மகன் கார்த்தி (வயது 33) என்பது தெரியவந்தது. கார்த்தி 2019-ம் ஆண்டு கிருஷ்ணகிரியில் வைத்து அவரது தாய் வைரத்தை கொலை செய்தார்.

    இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட அவர், ஜாமீனில் வெளியே வந்து சுற்றிதிரிந்து வந்துள்ளார். இந்த நிலையில், கார்த்தி தவறி விழுந்து காயம டைந்தாரா? அல்லது வேறு யாராவது தாக்கினார்களா? என்பது குறித்து போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.

    மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான காங்கோ நாட்டில் ஏரியில் படகு கவிழ்ந்து 30 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தனர். மேலும் 200-க்கும் மேற்பட்டோர் மாயமாகி உள்ளனர்.
    கின்ஷாசா:

    மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான காங்கோ நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள மாய் நேடம்போ மாகாணத்தின் தலைநகர் இனான்கோவில் மிகப்பெரிய ஏரி ஒன்று உள்ளது. இனான்கோவில் சாலை வசதிகள் சரிவர இல்லாததால் பெரும்பாலான மக்கள் படகு போக்குவரத்தையே பிரதானமாக கொண்டுள்ளனர்.

    இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை இரவு இந்த ஏரியில் 300-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் படகு ஒன்று சென்றுகொண்டிருந்தது. இந்த படகில் 183 பேர் மட்டுமே அமர்ந்துசெல்ல அனுமதி உள்ள நிலையில், அளவுக்கு அதிகமான பயணிகளோடு, சரக்குகளையும் ஏற்றி சென்றுள்ளனர்.

    இதனால் பாரம் தாங்காமல் படகு திடீரென ஏரியில் கவிழ்ந்தது. இதில் படகில் இருந்த அனைவரும் நீரில் மூழ்கினர். இந்த கோர விபத்தில் 12 பெண்கள், 11 குழந்தைகள் உள்பட 30 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தனர். மேலும் 200-க்கும் மேற்பட்டோர் மாயமாகி உள்ளனர். அவர்களின் கதி என்ன? என்பது தெரியவில்லை.

    இது குறித்து இனான்கோ நகர மேயர் சைமன் எம்பிவோ வெம்பா கூறுகையில், “படகு விபத்தில் பலியானதாக கூறப்படும் எண்ணிக்கை தற்காலிகமானதுதான். இது மேலும் அதிகரிக்கக்கூடும். பயணிகளின் சரியான எண்ணிக்கையையும் தெரிந்துகொள்வது தற்போது கடினமாக உள்ளது. எனினும் மாயமானவர்களை மீட்கும் முயற்சிகள் தொடர்ந்து நடக்கிறது” என கூறினார்.
    அமெரிக்காவில் வனப்பகுதியில் மாயமான அமண்டா எல்லரை 17 நாட்களுக்கு பிறகு மீட்பு குழுவினர் மீட்டனர். வழிதெரியாமல் காட்டில் சிக்கி கொண்ட அவர் இலை, தழைகளை சாப்பிட்டு உயிர் பிழைத்திருந்ததாக கூறி உள்ளார்.
    ஹெனாலுலு:

    அமெரிக்காவின் ஹவாய் மாகாணத்தை சேர்ந்தவர் அமண்டா எல்லர் (வயது 35). யோகா பயிற்சியாளரான இவர் கடந்த 8-ந் தேதி மக்கோவா நகரில் உள்ள வனப்பகுதிக்கு தனது காரில் சென்றார். பின்னர் அவர் அங்கு ஒரு இடத்தில் காரை நிறுத்திவிட்டு வனப்பகுதிக்குள் நடந்து சென்றார். அதன் பின்னர் அவர் திரும்பவில்லை. இதையடுத்து அமண்டா எல்லர் குடும்பத்தினர் அவரை செல்போனில் தொடர்பு கொள்ள முயன்றனர்.

    ஆனால் அவர் செல்போன், பணப்பையை காரிலேயே விட்டு சென்றது தெரியவந்தது. இதையடுத்து அவர் மாயமானதாக கருதி அவரது குடும்பத்தினர் மற்றும் அதிகாரிகள் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். சுமார் 2 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான அடர்ந்த காடு என்பதால், அமண்டா எல்லரை உடனடியாக கண்டுபிடிக்க முடியவில்லை. 1000-க்கும் மேற்பட்டோர் தேடும் பணியில் ஈடுபட்டும் இந்த பலனும் இல்லை.

    இதையடுத்து, அமண்டா எல்லரை கண்டுபிடித்து தருபவருக்கு 50 ஆயிரம் டாலர் பரிசாக வழங்கப்படும் என அவரது குடும்பத்தினர் அறிவித்தனர். அவர்கள் அதோடு நிறுத்திவிடாமல் ஹெலிகாப்டர் ஒன்றை வாடகைக்கு எடுத்து அவர்களும் தேடுதல் வேட்டையில் இறங்கினர்.

    இந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை மாலை, அமண்டா எல்லர் கண்டுபிடிக்கப்பட்டார். கார் நின்ற இடத்திலிருந்து சுமார் 7 கி.மீ. தொலைவில் வனப்பகுதியில் உள்ள நீர்வீழ்ச்சிக்கு அருகே அமண்டா எல்லர் இருப்பதை மீட்பு குழுவினர் கண்டனர்.

    2 கால்களும் பலத்த காயம் அடைந்த நிலையில் நகரமுடியாதபடி அமண்டா எல்லர் அமர்ந்திருந்தார். மேலும் அவர் மிகவும் மெலிந்தும், சோர்வாகவும் காணப்பட்டார். இதையடுத்து, மீட்பு குழுவினர் அவரை பத்திரமாக மீட்க, ஹெலிகாப்டரில் ஏற்றி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவருடைய காயங்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது அவர் நலமாக உள்ளார். வழிதெரியாமல் காட்டில் சிக்கி கொண்ட அமண்டா எல்லர் இலை, தழைகளை சாப்பிட்டு உயிர் பிழைத்திருந்ததாக கூறினார்.

    திருமலையில் கடத்தப்பட்ட ஆண் குழந்தையை, திருப்பதி போலீசார் 24 மணிநேரத்தில் மீட்டு, பெற்றோரிடம் ஒப்படைத்தனர். #Tirupati #BabyRescued
    திருப்பதி:

    திருமலையில் நேற்று முன்தினம் அதிகாலை 4 மணியளவில் தூங்கி கொண்டிருந்த பெற்றோரிடம் இருந்து, 3 மாத ஆண் குழந்தையான வீராவை அடையாளம் தெரியாத பெண் ஒருவர் கடத்தி சென்றார். குழந்தையை காணாதது கண்டு, பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி அவர்கள், திருமலை போலீசில் புகார் செய்தனர்.

    திருமலை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, தீவிர விசாரணை நடத்தினர். அங்கு பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து, குழந்தையை கடத்தி சென்ற பெண்ணின் அடையாளத்தை கண்டறிந்தனர்.

    இதுபற்றி திருமலை போலீசார், திருப்பதி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். குழந்தை கடத்தலில் ஈடுபட்ட பெண், திருமலையில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் வேலை பார்த்து வந்த துளசி என்பது தெரியவந்தது. அவருடைய சொந்த ஊர், சித்தூர் மாவட்டம் கார்வேட்டி நகரம் ஆகும். அவரின் செல்போன் எண்ணை வைத்து ஆய்வு செய்தபோது, அது திருப்பதி மங்களம் குடியிருப்பு பகுதியை காண்பித்தது.

    திருப்பதி மங்களம் குடியிருப்பு பகுதிக்குச்சென்ற திருப்பதி போலீசார், அங்கு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு விசாரித்தனர். அங்கு, கைக்குழந்தையோடு ஒரு பெண் தங்கியிருப்பது தெரியவந்தது. அந்த பெண்ணை போலீசார் பிடித்தனர். அவரிடம் இருந்த ஆண் குழந்தையை மீட்டு போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்தனர்.

    பிடிப்பட்ட துளசியிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

    துளசி, போலீசாரிடம் கூறியதாவது:-

    எனக்கும் கார்வேட்டிநகரத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் திருமணம் ஆனது. எங்களுக்கு தலைப்பிரசவத்தில் ஒரு குழந்தை பிறந்தது. அந்த குழந்தை திடீரென இறந்து விட்டது. 2-வதாக நான் கர்ப்பம் ஆனேன். அந்த குழந்தையும் இறந்து விட்டது. இதனால் என்னை விட்டு, கணவர் பிரிந்தார்.

    எனக்கு பெற்றோர் இல்லாததால், திருவள்ளூரை அடுத்த பள்ளிப்பட்டு பகுதியில் உள்ள என்னுடைய பாட்டி வீட்டில் தங்கி வசித்தேன். அங்கு, எனக்கு தனிமை வாட்டவே, வேலைத்தேடி திருமலைக்கு வந்தேன். அங்குள்ள ஒரு தனியார் ஓட்டலில் வேலை பார்த்தபடி, இரவில் சென்று ஏதேனும் ஒரு குழந்தையை கடத்த திட்டமிட்டேன்.

    அதன்படி சம்பவத்தன்று அதிகாலை 4 மணியளவில் திருமலையில் உள்ள எஸ்.வி.ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் அருகில் படுத்துத்தூங்கி கொண்டிருந்த ஒரு தம்பதியரிடம் இருந்து ஆண் குழந்தையை கடத்தினேன். என் செல்போன் அழைப்பு மூலமாக 24 மணிநேரத்தில் திருப்பதி போலீசார் என்னை கண்டுபிடித்து விட்டனர்.

    மேற்கண்டவாறு போலீசாரிடம் துளசி கூறினார்.

    இதையடுத்து துளசியை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து குழந்தையை மீட்டு, அக்குழந்தையின் பெற்றோரான மாவீரன், கவுசல்யாவிடம் ஒப்படைத்தார்.

    அதற்கு அவர்கள் கண்ணீர் மல்க போலீசாருக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.  #Tirupati #BabyRescued

    சென்னை ஆலோசனை கூட்டத்திற்கு பங்கேற்க சென்ற ரெயில்வே அதிகாரி திருச்சி தண்டவாளத்தில் பிணமாக மீட்க்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    திருச்சி:

    மதுரை அருகே உள்ள தத்தனேரி கன்னியப்பபுரத்தை சேர்ந்தவர் சவுந்திரபாண்டியன் (வயது 34). இவர் திருச்சி தென்னக ரெயில்வே மதுரை ஜங்சன் அலுவலகத்தில் கூடுதல் பொறியாளராக பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணமாகி பத்ம பிரியா என்ற மனைவியும், 4 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.

    இந்தநிலையில் நேற்று 22-ந் தேதி சென்னையில் ரெயில்வே அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்க மதுரையில் இருந்து நேற்று முன்தினம் 21-ந் தேதி இரவு 9 மணிக்கு எக்ஸ்பிரஸ் ரெயிலில் சவுந்திரபாண்டியன் புறப்பட்டு சென்றார்.

    ஆனால் நேற்று சென்னைக்கு அவர் சென்று சேரவில்லை. அவரது செல்போனுக்கு நேற்று காலை குடும்பத்தினர் தொடர்புகொண்ட போது, ரிங் போய்க்கொண்டே இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் திருச்சி ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    சப்-இன்ஸ்பெக்டர் சேகர் மற்றும் போலீசார் செல்போன் டவர் உதவியுடன் சவுந்திரபாண்டியன் இருக்கும் இடத்தை தேடினர். அப்போது திருச்சியில் இருந்து 10 கி.மீட்டர் தூரத்தில் குளத்தூருக்கும், பூங்குடி என்ற கிராமத்திற்கும் இடையில் தண்டவாளத்தில் படுகாயத்துடன் சவுந்திரபாண்டியன் பிணமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    அவரது செல்போனும் பிணத்தின் அருகிலேயே கிடந்தது. சவுந்திரபாண்டியன் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்கு திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இன்று பிரேத பரிசோதனை செய்த பின் அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது.

    இதற்கிடையே ரெயிலில் படுக்கை வசதி பெட்டியில் பயணம் செய்த சவுந்திரபாண்டியன், தண்டவாளத்தில் பிணமாக மீட்கப்பட்டது. ரெயில்வே ஊழியர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    அவர் ரெயிலில் பயணம் செய்தபோது வாசலில் நின்ற போது தவறி விழுந்து இறந்தாரா? அல்லது தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது மர்ம நபர்கள் அவரை கொலை செய்து வீசினார்களா? என்பது மர்மமாக உள்ளது. பிரேத பரிசோதனையின் போது சவுந்திரபாண்டியன் சாவில் உள்ள மர்மம் விலகும் என கூறப்படுகிறது.

    மலேசியாவில் இருந்து சென்னைக்கு அழைத்து வரப்பட்ட 49 தமிழக தொழிலாளர்களை அமைச்சர்கள் டி. ஜெயக்குமார், வளர்மதி, ராஜலட்சுமி ஆகியோர் வரவேற்று ஆறுதல் கூறினர்.

    சென்னை:

    கடந்த ஆண்டு ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் திருநெல்வேலி சங்கரன் கோயில் தாலுக்காவை சேர்ந்த 49 பேர் வெள்ளைத்துரை என்பவரின் தலைமையில் மலேசியாவில், மலேசியத் தமிழர் ஒருவர் நடத்தும் ஏஜெஎம் எனர்ஜி என்ற நிறுனத்தில் தொழிலாளர்களாக கேபிள் பதிக்கும் பணிக்கு சென்றனர்.

    அவர்கள் அங்கு சென்ற பிறகுதான் பணிபுரிய வேண்டிய இடம் காட்டுப்பகுதி என்று தெரிந்தது. அங்கு சரியான தங்குமிடம் இல்லை. உணவில்லை, பூச்சித் தொல்லை என பல இன்னல்களுக்கு ஆளாகி உள்ளனர். இந்த இன்னல்களை, நிறுவனத்தின் அதிபருக்கு தெரிவித்த போது, இவர்களை கேவலமாக திட்டியும், மிரட்டியும் உள்ளார்.

    இதனால் இந்த 49 பேரும் அங்கிருந்து தப்பி பட்டுகேவ் பகுதிக்கு சென்றனர். இதை அறிந்த மலேசிய அரசு அவர்களை மலாக்காவில் உள்ள அரசு இல்லத்தில் தங்க வைத்தது.

    49 தொழிலாளர்களின் நிலை அறிந்த தமிழக அரசு மலேசியாவில் உள்ள இந்திய தூதரகத்தின் மூலம் அவர்களை தமிழகம் அழைத்து வர உரிய நடவடிக்கை எடுத்தது.

    தமிழக அரசின் தொடர் நடவடிக்கை காரணமாக மலேசிய நிறுவனத்தின் மீது மலேசிய அரசால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்பட்டது. பின்னர் 49 தொழிலாளர்களும் புக்கிட் ஜெலின் இமிகிரேசன் டிடென்சன் முகாமுக்கு மாற்றப்பட்டார்கள். அங்கு 3 மாதங்கள் இருந்த பின் தமிழக அரசு எடுத்த தொடர் நடவடிக்கைகள் காரணமாக விடுவிக்கப்பட்டு விமானம் மூலம் சென்னை வந்தனர்.

    சென்னை விமான நிலையத்தில் மலேசியாவில் இருந்து அழைத்து வரப்பட்ட 49 பேரையும் அமைச்சர்கள் டி. ஜெயக்குமார், வளர்மதி, ராஜலட்சுமி ஆகியோர் வரவேற்று ஆறுதல் கூறினர்.

    பின்னர் அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டு ஊருக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். அவர்களை ஊருக்கு அழைத்து செல்வதற்கான வாகன வசதிக்கு தமிழக அரசு ஏற்பாடு செய்திருந்தது.

    தொண்டியில் மாயமான 3 பள்ளி மாணவிகள் திருச்சியில் மீட்கப்பட்டனர்.
    தொண்டி:

    ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி வேலம்மாள் தெருவைச் சேர்ந்தவர் ஆனந்த். இவரது மகள் ஆர்த்தி (வயது 15). அதே தெருவில் வசிப்பவர்கள் குமார் மகள் அஸ்வினி (15), முருகானந்தம் மகள் கனிகா (14).

    இவர்கள் 3 பேரும் தொண்டியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்கள். நேற்று மாலையில் வீட்டில் இருந்த ஆர்த்தி, அஸ்வினி, கனிகா ஆகியோர் திடீரென மாயமானார்கள்.

    இதனால் பதற்றம் அடைந்த அவரது பெற்றோர்கள் மகள்களை பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தனர். ஆனால் எந்த பலனும் இல்லை.

    இதுகுறித்து ஆர்த்தியின் தாய் சித்ரா, தொண்டி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பிரபு வழக்குப்பதிவு செய்து மாயமான 3 மாணவிகளை தேடி வந்தார்.

    இதனிடையே 3 பேரும் நேற்று இரவு திருச்சியில் உள்ள ரெயில் நிலையத்திற்கு சென்றுள்ளனர். அங்கு சந்தேகப்படும்படியாக நின்றிருந்த 3 பேரையும் ரெயில்வே போலீசார் விசாரித்தபோது, வீட்டில் இருந்து வெளியேறியது தெரியவந்தது.

    இதையடுத்து மாணவிகளை மீட்ட போலீசார் தொண்டி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் மாணவிகளை அழைத்து வர திருச்சிக்கு சென்றனர்.

    மேகாலயாவில் கடந்த மாதம் வெள்ள நீர் சூழ்ந்ததால் நிலக்கரி சுரங்கத்தினுள் சிக்கிய 15 தொழிலாளர்களில் ஒருவரது உடலை, கடற்படையின் நீர்மூழ்கி வீரர்கள் மீட்டுள்ளனர். #MeghalayaCoalMine #NavyDivers
    புதுடெல்லி:

    மேகாலயாவில், கிழக்கு ஜைன்டியா மாவட்டம் லும்தாரி கிராமத்தில் சட்டவிரோதமாக நிலக்கரி சுரங்கம் இயங்கி வந்தது. கடந்த டிசம்பர் மாதம் 13-ம் தேதி தொழிலாளர்கள் வேலை செய்துகொண்டிருந்தபோது, சுரங்கத்தின் அருகில் உள்ள லிட்டின் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பின்னர் வெள்ள நீர் சுரங்கத்தினுள் புகுந்தது. இதனால் சுமார் 15 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். அவர்களை மீட்க தேசிய பேரிடர் மீட்பு படையினரும், மாநில பேரிடர் மீட்பு படையினரும், போலீசாரும் களத்தில் இறங்கினர்.

    தொடர்ந்து மழை பெய்ததால் வெள்ள நீரை வெளியேற்ற முடியாத நிலை ஏற்பட்டது. தேசிய பேரிடர் மீட்புப்படையினர் குறிப்பிட்ட தூரம் வரை மட்டுமே நீருக்குள் இறங்க முடியும் என்பதால் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டது. பின்னர் நீச்சல் வீரர்கள் அடங்கிய வல்லுநர் குழுவை இந்திய கடற்படை அனுப்பி வைத்தது. அவர்கள் அங்கு சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். சுரங்கம் முழுவதும் தண்ணீர் நிரம்பியதால், தொழிலாளர்கள் உயிர்பிழைக்க வாய்ப்பு இல்லை.



    இந்நிலையில், சுரங்கத்தினுள் சிக்கிய தொழிலாளர்களில் ஒருவரின் உடலை கடற்படையின் நீர்மூழ்கி வீரர்கள் இன்று மீட்டுள்ளனர். ரிமோட் மூலம் இயங்கக்கூடிய ஆர்ஓவி எனும் நீர்மூழ்கி உபகரணம் மூலம் தொழிலாளியின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. சுமார் 200 அடி ஆழத்தில் இருந்து மீட்கப்பட்ட அவரது உடல், எலிப்பொந்து என்று அழைக்கப்படும் சுரங்கத்தின் முகப்பு பகுதிக்கு கொண்டு வரப்பட்டது. மற்ற தொழிலாளர்கள் என்ன ஆனார்கள் என தெரியாத நிலையில், மீட்பு பணி தொடர்ந்து நடைபெறுகிறது.  #MeghalayaCoalMine #NavyDivers
    கச்சத்தீவு அருகே கடலில் மூழ்கி பலியான தந்தையின் உடலை மீட்டுத்தரக்கோரி அவரது மகள் மற்றும் குடும்பத்தினர் மீன்வளத்துறை அலுவலகத்துக்கு வந்து மனு அளித்தனர். #Fishermendeath

    ராமேசுவரம்:

    ராமேசுவரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று முன்தினம் கடலுக்கு சென்றனர்.

    ராமநாதபுரம் மாவட்டம் சித்தார்கோட்டை அருகே உள்ள இலந்தைகூட்டம் கிராமத்தைச் சேர்ந்த முனியசாமி (வயது50) என்பவரும், கருப்பையா என்பவருக்கு சொந்தமான படகில் கடலுக்கு சென்றிருந்தார்.

    நேற்று இரவு கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்கள் எல்லை தாண்டிவந்ததாக கூறி 28 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்து சென்றது. மீனவர்களும் விரட்டியடிக்கப்பட்டனர்.

    அப்போது கருப்பையா படகில் இருந்த முனியசாமி எதிர்பாராதவிதமாக கடலில் தவறி விழுந்தார். உடனே சக மீனவர்கள் அவரை காப்பாற்ற கடலில் குதித்தனர். ஆனால் பலனில்லை.

    இதற்கிடையில் முனியசாமியின் உடல் யாழ்பாணம் அருகே கரை ஒதுங்கியது. இந்த தகவலை இலங்கை அரசு இந்திய அரசிடம் தெரிவித்துள்ளது.

    இந்திய அதிகாரிகள் ராமேசுவரம் உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்டு தெரிவித்தனர். மேலும் இலந்தை கூட்டத்தைச் சேர்ந்த முனியசாமியின் மகள் சண்முகப்பிரியாவுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால் அவர் அதிர்ச்சி அடைந்து கதறி அழுதார்.

    இன்று காலை சண்முகப்பிரியா, அவரது கணவர் சண்முகநாதன் மற்றும் உறவினர்கள ராமேசுவரம் மீன்வளத்துறை அலுவலகத்துக்கு வந்தனர். அங்கு உதவி இயக்குநர் யுவராஜிடம், இலங்கையில் கரை ஒதுங்கிய தனது தந்தையின் உடலை மீட்டுத்தர வேண்டும் என கண்ணீர் மல்க மனு அளித்தனர். #Fishermendeath

    பிரான்சில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது ராட்டினத்தில் சிக்கிய 8 பேரும் ஹெலிகாப்டர் மூலம் பத்திரமாக மீட்கப்பட்டனர். #Helicopter #Newyear #Rescued #CarnivalRide
    பாரீஸ்:

    பிரான்ஸ் நாட்டின் வடமேற்கு பகுதியில் உள்ள பிரித்தானியா பிராந்தியத்தின் தலைநகர் ரென்னஸ். இங்கு நேற்று முன்தினம் இரவு புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி ராட்சத ராட்டினங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

    அதிக உயரத்தில் இருந்து வேகமாக கீழே இறங்கும் ஒரு ராட்டினத்தில் சிறுவர்கள் உள்பட 8 பேர் ஏறி அமர்ந்தனர். கீழே இருந்து புறப்பட்டு 170 அடி உயரத்துக்கு சென்ற அந்த ராட்டினம் திடீர் எந்திர கோளாறு ஏற்பட்டு, மேல் பகுதியிலேயே நின்றுவிட்டது.

    இதனால் ராட்டினத்தில் இருந்த அனைவரும் பயத்தில் அலறி துடித்தனர். அதனை தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து ராட்டினத்தில் சிக்கியவர்களை பத்திரமாக கீழே இறக்க முயற்சிகள் மேற்கொண்டனர். ஆனால் அவர்களின் அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன. இதையடுத்து 10 மணி நேர போராட்டத்துக்கு பிறகு, ராட்டினத்தில் சிக்கிய 8 பேரும் ஹெலிகாப்டர் மூலம் பத்திரமாக மீட்கப்பட்டனர். #Helicopter #Newyear #Rescued #CarnivalRide
    கோவை அருகே கோவிலில் கொள்ளையடிக்கப்பட்ட 2 ஐம்பொன் சாமி சிலைகள் மீட்கப்பட்டது.

    சூலூர்:

    கோவை கருமத்தம்பட்டி பகுதியில் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் 2 ஐம்பொன் சாமி சிலைகள் கிடந்தன. இதைப் பார்த்த பொது மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற கருமத்தம்பட்டி போலீசார் 2 சிலைகளையும் மீட்டு போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.

    விசாரணையில் இந்த சிலைகள் திருப்பூர் மாவட்டம் சாமளாபுரத்தை அடுத்த கள்ளப்பாளையத்தில் கடந்த மாதம் வேணு கோபால சாமி கோவிலில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட வேணுகோபாலசாமி- சத்யபாமா ஆகிய ஐம்பொன் சிலைகள் என்பது தெரிய வந்தது.

    ஐம்பொன் சிலைகள் திருட்டு தொடர்பாக திருப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் இந்த சிலைகளை கருமத்தம்பட்டி அருகே சாலையில் வீசிச் சென்றவர்கள் யார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதற்காக அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளை சேகரித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×