search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 102009"

    கோவில் திருவிழாவில் பெண்களை கிண்டல் செய்தனர். இது தொடர்பாக ஏற்பட்ட மோதலில் 4 பேர் காயம் அடைந்தனர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூரை அடுத்த செஞ்சி பனம்பாக்கம் கிராமத்தில் உள்ள கோவிலில் கடந்த வாரம் ஜாத்திரை திருவிழா நடந்தது.

    அப்போது கோவிலுக்கு வந்த பெண்களை செஞ்சி பனம்பாக்கம் காலனி பகுதியை சேர்ந்த பாலகுமார், நாகராஜ், அப்பாஸ், கார்த்திக் ஆகியோர் கிண்டல் செய்தனர்.

    இது தொடர்பாக செஞ்சி பனம்பாக்கத்தை சேர்ந்த குணசேகரன் கடம்பத்தூர் போலீசில் புகார் செய்தார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த செஞ்சி பனம்பாக்கம் காலனியை சேர்ந்த சிலர் நேற்று செஞ்சி பனம்பாக்கம் கிராமத்துக்குள் புகுந்து மோதலில் ஈடுபட்டனர்.

    திடீரென்று அவர்கள் அங்கிருந்த 4 வீடுகளை அடித்து நொறுக்கினார்கள். அப்போது செந்தில், சரவணன், அம்சம்மா, மாரி ஆகியோர் தடுக்க முயன்றனர்.

    அப்போது அவர்கள் தாக்கப்பட்டார்கள். படுகாயம் அடைந்த 4 பேரும் திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் கள்.

    இது தொடர்பாக கடம்பத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பு.புளியம்பட்டி அருகே அரசு பஸ்-கார் நேருக்கு நேர் மோதலில் 5 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பு.புளியம்பட்டி:

    கோவையில் இருந்து சத்தியமங்கலத்துக்கு ஒரு அரசு பஸ் வந்து கொண்டிருந்தது. அந்த பஸ் புளியம்பட்டி அருகே உள்ள புங்கம்பள்ளி குளம் அருகே வந்து கொண்டிருந்தது.

    அப்போது அந்த வழியாக கார்நாடகா மாநிலத்தில் இருந்து கேரளாவுக்கு செல்வதற்காக ஒரு கார் புங்கம்பள்ளி அருகே வந்தது. அப்போது புங்கம்பள்ளி குளம் அருகே வந்த போது அரசு பஸ் மற்றும் கார் எதிர் பாராத விதமாக நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. அப்போது பஸ்சில் வந்த பயணிகள் அலறினர்.

    இதில் கார் அப்பளம் போல் நொருங்கியது. பஸ்சின் முன் பகுதி பலத்த சேதம் அடைந்தது. இதில் பஸ்சில் பயணம் செய்த 3 பேர் மற்றும் காரில் பயணம் செய்த 2 பேர் என மொத்தம் 5 பேர் படுகாயம் அடைந் தனர்.

    அவர்கள் 108 ஆம்புலன்சு மற்றும் தனியார் ஆம்புலன்சுகள் மூலம் உடனடியாக மீட்கப்பட்டு சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து புளியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பாக்கமுடையான்பட்டில் ஏலச்சீட்டு தகராறில் கணவன்- மனைவி உள்பட 3 பேரை தாக்கிய 5 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
    புதுச்சேரி:

    புதுவை பாக்கமுடையான்பட்டு வினோபா நகரை அடுத்த புதுநகரை சேர்ந்தவர் அருண் (வயது 58). இவர் தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார்.

    இவர் அந்த பகுதியில் ஏலச்சீட்டு நடத்தி வரும் பிரமிளாவிடம் தனது உறவினரை அறிமுகப்படுத்தி ஏலச்சீட்டில் சேர்த்து விட்டார்.

    ஆனால், ஏலச்சீட்டு காலம் முடிந்தும் அதற்கான பணத்தை பிரமிளா கொடுக்கவில்லை. இதனை அருணிடம் அவரது உறவினர் முறையிட்டார்.

    இதையடுத்து அருண் நேற்று பிரமிளாவின் வீட்டுக்கு சென்று அவரிடம் ஏலச்சீட்டு பணத்தை தரும்படி கேட்டார். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது.

    இதனால் ஆத்திரம் அடைந்த பிரமிளா, அவரது கணவர் ராமதாஸ் மற்றும் உறவினர்களான நவீன், சூசை, வின்சென்ட் ஆகிய 5 பேரும் சேர்ந்து அருணை தாக்கினர். இதனை அறிந்த அருணின் மனைவி ஆதிலட்சுமி மற்றும் மகன் வீரசேகரன் ஆகியோர் பிரமிளா தரப்பினரிடம் தட்டிக்கேட்டனர். அவர்களையும் பிரமிளா தரப்பினர் தடி மற்றும் கல்லால் தாக்கினர்.

    இந்த தாக்குதலில் அருண், ஆதிலட்சுமி, வீரசேகரன் ஆகிய 3 பேரும் காயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். இதில் அருண், வீரசேகரன் ஆகியோர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். ஆதிலட்சுமி தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதுகுறித்து அருண் கோரிமேடு போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர் கலையரசன், உதவி சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து பிரமிளா உள்பட 5 பேரையும் தேடி வருகிறார்கள்.
    விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் அருகே இன்று அதிகாலை லாரி மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் சம்பவ இடததிலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
    கள்ளக்குறிச்சி:

    கேரளா மாநிலத்தை சேர்ந்தவர்கள் தாஸ்(வயது 37), சதீஷ்(25), சுனில்(31). இவர்கள் 3 பேரும் திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்கள்.

    அதே கம்பெனியில் சேலத்தை சேர்ந்த மகாலிங்கம்(32), அருண்குமார்(35), மன்னார்குடியை சேர்ந்த கண்ணதாசன்(37) ஆகியோரும் வேலை பார்த்து வந்தனர்.

    இவர்கள் சென்னையில் நடைபெற்ற ஐ.பி.எல்.கிரிக்கெட் போட்டியை பார்க்க முடிவு செய்தனர். அதன்படி அவர்கள் நேற்று மாலை ஒரு காரில் திருப்பூரில் இருந்து சென்னைக்கு சென்றனர்.

    காரை சேலத்தை சேர்ந்த டிரைவர் பாலமுருகன்(40) ஓட்டிசென்றார். சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று இரவு மும்பை- சென்னை அணிகள் மோதின. இந்த கிரிக்கெட் போட்டியை பார்த்து விட்டு அங்கிருந்து இன்று அதிகாலை 3 மணிக்கு காரில் புறப்பட்டனர்.

    காலை 5 மணியளவில் அவர்கள் வந்த கார் விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது அங்குள்ள பெட்ரோல் பங்கில் பெட்ரோல் நிரப்பி விட்டு லாரி ஒன்று வளைவில் திரும்பியது. அந்த லாரியின் பின்புறத்தில் கார் பயங்கரமாக மோதியது.

    இதில் காரின் முன்பகுதி அப்பளம்போல் நொறுங்கியது. காரின் உள்ளே இருந்தவர்கள் கூச்சல்போட்டு அலறினர். இந்த விபத்தில் காரில் இருந்த அருண்குமார், சதீஷ், கார் டிரைவர் பாலமுருகன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர்.

    இந்தவிபத்து குறித்து தகவல் அறிந்ததும் சின்ன சேலம் இன்ஸ்பெக்டர் சுதாகர், சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

    விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த தாஸ், மகாலிங்கம், கண்ணதாசன், சுனில் ஆகிய 4 பேரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    மேலும் விபத்தில் இறந்த அருண்குமார், சதீஷ், பாலமுருகன் ஆகியோர் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த விபத்தால் அந்த பகுதியில் சுமார் ½ மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    இங்கிலாந்தில் உள்ள டாடா இரும்பு உருக்காலை தீவிபத்தில் 2 தொழிலாளர்கள் லேசான காயம் அடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். #Explosion #TataSteel #UnitedKingdom
    லண்டன் :

    இங்கிலாந்தின் வேல்ஸ் பிராந்தியத்தில் உள்ள தால்போட் என்ற துறைமுக நகரில் டாடா நிறுவனத்தின், இரும்பு உருக்காலை செயல்பட்டு வருகிறது. இங்கு, நேற்று அதிகாலை 3.35 மணிக்கு குண்டு வெடித்தது போல பயங்கர சத்தத்துடன் விபத்து நேரிட்டது.

    இதனால் ஆலையில் பெரிய அளவில் தீ பிடித்தது. இதனால் அங்கு பணியாற்றும் தொழிலாளர்கள் மத்தியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் தீயணைப்பு வீரர்கள் மற்றும் அவசரகால மீட்பு படையினர் அங்கு விரைந்து சென்று, தீயை அணைத்தனர்.

    எனினும் இந்த விபத்தில் 2 தொழிலாளர்கள் லேசான காயம் அடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்தை உறுதி செய்திருக்கும் டாடா நிறுவனம், விபத்தை தொடர்ந்து ஏற்பட்ட தீ, கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகவும், பெரிய அளவில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்றும் கூறியது. #Explosion #TataSteel #UnitedKingdom
    கூத்தாநல்லூர் அருகே தனியார் பஸ்சும், சரக்கு வேனும் மோதியதில் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
    கூத்தாநல்லூர்:

    திருவாரூரில் இருந்து மன்னார்குடி நோக்கி நேற்று ஒரு தனியார் பஸ் சென்று கொண்டிருந்தது. கூத்தாநல்லூர் அருகே உள்ள கோரையாறு என்ற இடத்தில் சென்றபோது எதிரே மன்னார்குடியில் இருந்து கூத்தாநல்லூர் நோக்கி வந்த சரக்கு வேனும், தனியார் பஸ்சும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

    இதில் சரக்கு வேன் தலைகுப்புற கவிழ்ந்தது. அதன் டிரைவர் பூதமங்கலம் கீழகண்ணுச்சாங்குடியை சேர்ந்த தினேஷ் (வயது24), முருகையன் (40), சிவகுமார்(40) ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்கள் கவிழ்ந்த சரக்கு வேனில் சிக்கிக்கொண்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறை மாவட்ட அதிகாரி முருகேசன், கூத்தாநல்லூர் தீயணைப்பு நிலைய அதிகாரி பிவேந்திரன், நிலைய போக்குவரத்து அலுவலர் பன்னீர்செல்வம், தீயணைப்பு படை வீரர்கள் சம்பத்குமார், செல்வராஜுலு ஆகியோர் அடங்கிய குழுவினர் சம்பவம் இடத்துக்கு விரைந்து சென்று சரக்கு வேனில் சிக்கிய தினேஷ், முருகையன், சிவகுமார் ஆகிய 3 பேரையும் மீட்டனர்.

    இதையடுத்து 3 பேரும் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதேபோல அதே பகுதியில் வெண்ணாற்றின் கரையோரத்தில் கார் ஒன்று தலைக்குப்புற கவிழ்ந்தது. அதில் காருக்குள் சிக்கிய 8 பேரையும் தீயணைப்பு வீரர்கள் காயமின்றி மீட்டனர். 
    கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் சுற்றுலா வேன் கவிழ்ந்து 2 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோடை சீசனை முன்னிட்டு மேட்டுப்பாளையம்-குன்னூர்-ஊட்டி சாலை ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்டு உள்ளது. இதையொட்டி ஊட்டிக்கு வரும் அனைத்து வாகனங்களும் கோத்தகிரி வழியாக சமவெளி பகுதிகளுக்கு செல்ல அனுமதிக்கப்படுகிறது. இதன் காரணமாக கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது.

    இந்த நிலையில் டெல்லியை சேர்ந்த பெண்கள் உள்பட 11 பேர் கோவையில் இருந்து சுற்றுலா வேன் மூலம் ஊட்டிக்கு வந்தனர். பின்னர் நேற்று ஊட்டியில் இருந்து கோத்தகிரி வழியாக கோவைக்கு புறப்பட்டனர். சுற்றுலா வேனை தேனி மாவட்டம் போடிநாயக்கனூரை சேர்ந்த கருப்பையா மகன் சந்தோஷ்(வயது 24) ஓட்டினார். மாலை 4 மணியளவில் மேல்தட்டப்பள்ளம் பகுதியில் சுற்றுலா வேன்சென்றபோது திடீரென பிரேக் பிடிக்காமல் போனது.

    இருப்பினும் டிரைவர் சாமர்த்தியமாக செயல்பட்டு, வேனை சாலையோரம் உள்ள மண் திட்டின் மீது மோதி நிறுத்த முயன்றார். ஆனால் மண் திட்டின் மீது மோதிய வேன் எதிர்பாராதவிதமாக சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வேனுக்குள் இருந்த 2 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் படுகாயம் அடைந்த 2 பேரையும் மீட்டு கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதற்கிடையில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த கோத்தகிரி போலீசார், சாலையில் கவிழ்ந்த சுற்றுலா வேனை அங்கிருந்து சாலையோரத்துக்கு அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர். மேலும் இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வானூர் அருகே நாட்டு வெடிகுண்டு வீசி வாலிபர் படுகாயம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #bombrange

    வானூர்:

    விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா பூத்துறைகாசிப் பாளையத்தை சேர்ந்தவர் உதயகுமார்(வயது 38). இவர் அதேபகுதியில் செங்கல்சூளை நடத்தி வருகிறார்.

    இவர் தொழில் சம்பந்தமாக பணம் வசூல் செய்ய புதுவை சென்றிருந்தார். பின்னர் நேற்று இரவு உதயகுமார் புதுவையில் இருந்து காசிப்பாளையத்துக்கு ரூ.50 ஆயிரம் பணத்துடன் மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். அவர் நள்ளிரவு 12 மணிக்கு காசிப்பாளையம் சாலையில் வந்து கொண்டிருந்தார். அப்போது உதயகுமாரை மர்மகும்பல் திடீரென்று வழிமறித்தனர்.

    அவர்களை பார்த்ததும் உதயகுமார் அதிர்ச்சி அடைந்தார். உடனே மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு அருகில் உள்ள முந்திரிதோப்புக்குள் ஓடினார். அங்கிருந்து உதயகுமார் தனது உறவினர் மற்றும் நண்பர்களுக்கு செல்போன் மூலம் மர்மகும்பல் வழிமறித்த தகவலை தெரிவித்தார்.

    உடனே அவரது உறவினர் மணிபாலன்(28) உள்பட 4 பேர் சம்பவ இடத்துக்கு வந்தனர். மர்மகும்பலை பிடிக்க முயன்றனர். இதைபார்த்த மர்மகும்பல் அவர்கள் மீது சரமாரியாக வெடிகுண்டு வீசினர். இதில் உதயகுமாரின் உறவினர் மணிபாலன்(28) என்பவர் படுகாயம் அடைந்தார். அவரை புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு அவரது உறவினர்கள் கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து உதயகுமார் வானூர் போலீஸ்நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வெடிகுண்டு வீசிய மர்மகும்பலை வலைவீசி தேடி வருகின்றனர்.

    தொழில் போட்டி காரணமாக வெடிகுண்டு வீச்சு சம்பவம் நடந்ததா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்று போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். #bombrange

    கும்பகோணம் அருகே லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் விபத்தில் பெண் உள்பட 2 பேர் படுகாயமடைந்தனர்.
    கும்பகோணம்:

    நாச்சியார்கோவிலில் இருந்து கும்பகோணத்திற்கு நேற்று நள்ளிரவு 1.30 மணியளவில் அரவிந்தன் என்பவர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அதே மோட்டார் சைக்கிளில் பின்னால் ஆகாஷ், கவுசல்யா ஆகியோர் அமர்ந்து சென்றனர்.

    கிருஷ்ணாபுரம் அருகே சென்றபோது முன்னால் சென்ற லாரியை முந்தி செல்ல அரவிந்தன் முயன்றார்.

    அப்போது எதிரே வந்த லாரி இவர்கள் மீது மோதியது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே அரவிந்தன் படுகாயமடைந்து பலியானார்.

    ஆகாஷ், கவுசல்யா ஆகிய இருவரும் படுகாயமடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு உடனடியாக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுபற்றி தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நாச்சியார் கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தில் பலியானவர் எந்த ஊர்? உடன் வந்தவர்கள் யார்? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

    ஆலங்குப்பத்தில் வீடு கட்டும் பிரச்சினையில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் 5 பேர் காயம் அடைந்தனர்.

    புதுச்சேரி:

    கோரிமேடு அருகே ஆலங்குப்பத்தை சேர்ந்தவர் குலசேகரன் (வயது52). இவர் ஆரோவில்லில் பூங்கா காப்பாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் அதே பகுதியில் புதிதாக வீடு கட்டும் பணியை தொடங்கினார். இதற்கு பக்கத்து வீட்டை சேர்ந்த ராஜா என்பவர் எதிர்ப்பு தெரிவித்தார். தனக்கு சொந்தமான இடத்தில் குலசேகரன் வீடு கட்டுவதாக ராஜா தகராறு செய்து வந்தார்.

    நேற்று இதுதொடர்பாக இருதரப்பினருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது ராஜா அவரது மனைவி மனோன்மணி மற்றும் உறவினர்கள் சேர்ந்து குலசேகரன் மற்றும் அவரது குடும்பத்தினரை இரும்பு பைப் உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கினர்.

    இதில் குலசேகரன், அவரது மனைவி மற்றும் மகன் திவான், அண்ணன் மகள் செல்வி உள்ளிட்ட 5 பேர் காயம் அடைந்தனர். இதுகுறித்து குலசேகரன் கோரிமேடு போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கலையரசன், உதவி சப்-இன்ஸ்பெக்டர் கணபதி ஆகியோர் விசாரணை நடத்தி ராஜா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வழக்குபதிவு செய்து உள்ளனர்.

    ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் இன்று ரோந்து பணியின் போது கண்ணி வெடியில் சிக்கி ராணுவ வீரர் படுகாயம் அடைந்தார். #JammuKashmir #LandmineBlast
    ஜம்மு:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள மெண்டார் செக்டாரில் ராணுவ வீரர்கள் இன்று ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது, பாலாகோட்டில் உள்ள தர்கண்டி கிராமத்தில் மறைத்து வைத்திருந்த கண்ணி வெடி திடீரென வெடித்ததில் ராணுவ வீரர் ஒருவர் படுகாயம் அடைந்தார். இதையடுத்து, சக வீரர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். #JammuKashmir #LandmineBlast
    ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் அருகே இன்று காலை அரசு பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 15 மாணவர்கள் காயம் அடைந்தனர்.
    ஆப்பக்கூடல்:

    ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் அருகே உள்ள அத்தாணியிலிருந்து சத்தியமங்கலத்துக்கு இன்று காலை அரசு டவுன்பஸ் புறப்பட்டது. இந்த பஸ்சில் பயணிகள், மாணவர்கள் என சுமார் 30-க்கும் மேற்பட்டவர்கள் இருந்தனர்.

    இந்த பஸ் இன்று காலை 9.15 மணியளவில் ஆப்பக்கூடல் அருகே கருப்பகவுண்டன்புதூர் பகுதியில் உள்ள ஒருவளைவில் சென்று கொண்டிருந்தது.

    அப்போது எதிரே ஒரு மொபட்வந்தது. அதே சமயம் ஒரு நாய் குறுக்கே செல்ல மொபட்டில் சென்றவர் மொபட்டை திருப்பி ஓட்டினார்.

    இதைகண்ட பஸ் டிரைவர் மொபட் மீது மோதாமல் இருக்க திருப்பி வளைத்து ஓட்டினார். இதில் மண்பாதையில் சறுக்கிய பஸ் ரோட்டோரபள்ளத்தில் கவிழ்ந்தது.

    பஸ் கவிழ்ந்ததும் உள்ளே இருந்த பள்ளி மாணவ- மாணவிகள் பயணிகள் கூக்குரலிட்டனர். இந்த விபத்தில் பெரும் பாதிப்பு ஏற்படவில்லை. இதில் 15 மாணவர்கள் மற்றும் ஒரு பெண் பயணியும் லேசான காயம் அடைந்தனர். உடனடியாக அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஓடி சென்று இடிபாட்டுக்குள் சிக்கிய மணவர்கள்மற்றும் பயணிகளை மீட்டு சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இந்த விபத்து குறித்து ஆப்பக்கூடல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×