search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 102009"

    கோவிலுக்கு சென்றபோது நாங்குநேரி அருகே வேன் கவிழ்ந்த விபத்தில் செண்டை மேள கலைஞர்கள் 15 பேர் படுகாயம் அடைந்தனர்.
    களக்காடு:

    குமரி மாவட்டம் பாடசாலையை சேர்ந்த செண்டைமேளக் கலைஞர்களான ராஜன்(வயது 54), சுனிதா(29), ஜீனு (28), பூஜா (18), சைஷா(24) உள்ளிட்ட 15 பேர் ஸ்ரீவைகுண்டம் கோவிலில் நடைபெற்ற விழாவில் கலந்து கொள்ள ஒரு வேனில் இன்று அதிகாலை வந்து கொண்டிந்தனர்.

    வேன் நாங்குநேரி அருகே உள்ள கிருஷ்ணன்புதூர் நான்கு வழிச்சாலையில் வந்த போது திடீரென வேனின் பின்பக்க டயர் வெடித்தது. இதனால் நிலை தடுமாறிய வேன் சாலையோரம் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் வேனில் இருந்த 6 பெண்கள் உள்ளிட்ட 15 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

    இது குறித்து தகவலறிந்த நாங்குநேரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு நாங்குநேரி மற்றும் நெல்லை அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சூரமங்கலத்தில் ஸ்டவ் வெடித்து உடல் கருகிய 2 பேரும் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர்.

    சேலம்:

    சேலம் சூரமங்கலம் போடிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் சுப்ரமணி (வயது 42). இவரது மனைவி கவுரி (35).

    நேற்றிரவு கவுரி பால் காய்ப்பதற்காக மண்எண்ணை ஸ்டவ்வை பற்ற வைத்தார். அப்போது திடீரென ஸ்டவ் வெடித்து கவுரியின் உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்தது.

    இதனால் வலி தாங்க முடியாமல் அலறி துடித்த அவரது சத்தம் கேட்டு வீட்டில் இருந்த சுப்பிரமணி அங்கு ஓடி வந்தார்.

    பின்னர் கவுரியின் உடலில் எரிந்த தீயை அணைக்க முயன்றார். அப்போது சுப்பிரமணியின் உடலிலும் தீப்பிடித்தது.இதில் உடல் கருகிய 2 பேரும் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர்.

    அங்கு 2 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    ஓமலூர் அருகே தி.மு.க. மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 5 பேருக்கு காயம் ஏற்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஓமலூர்:

    ஓமலூர் அருகே உள்ள பல்பாக்கி கிராமம் தாசன்காட்டுவளவு பகுதியில் தி.மு.க. கொடிகம்பம் நடப்பட்டுள்ளது. இந்த கம்பத்தை ஒட்டியுள்ள பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடி கம்பம் நடப்பட்டதாகவும், இதை கேட்ட ஓமலூர் ஒன்றிய தி.மு.க. துணை செயலாளர் மணி என்பவரை கொலை மிரட்டல் விடுப்பதாக ஓமலூர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது.

    இதை தொடர்ந்து ஓமலூர் இன்ஸ்பெக்டர் சக்கரபாணி இருதரப்பையும் அழைத்து சமாதானம் பேசி அனுப்பி வைத்தார்.

    இந்த நிலையில் நேற்று இரவு இரண்டு தரப்பிற்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து இருதரப்பினரும் மாறிமாறி மோதிக்கொண்டதில் தி.மு.க. ஒன்றிய துணை செயலாளர் மணி, அவரது மகன் பிரகாஷ், விடுதலை சிறுத்தைகள் கட்சி தொண்டர்கள் பூங்கொடி, சின்னத்தம்பி, பழனிசாமி ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

    இதையடுத்து தி.மு.க. தரப்பை சேர்ந்த ஒன்றிய துணை செயலாளர் மணி மற்றும் அவரது மகன் ஆகியோரை உறவினர்கள் மீட்டு ஓமலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதே போன்று விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த 3 பேரையும் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மேலூரில் நடந்த விபத்தில் அனல் மின்நிலைய அதிகாரி உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர். இதுதொடர்பாக மேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மேலூர்:

    நாகர்கோவில் நேசமணி நகரைச் சேர்ந்தவர் மோசஸ் (வயது55). இவர் தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் (தெர்மல்) துணை பொது மேலாளராக பணியாற்றி வந்தார்.

    வேலை நிமித்தமாக நேற்று முன்தினம் நெய்வேலியில் நடந்த அதிகாரிகள் கூட்டத்திற்கு மோசஸ் தூத்துக்குடியில் இருந்து காரில் சென்றார்.

    அனல் மின்நிலையத்தில் வேலை பார்க்கும் டிரைவர் குமார் (49) காரை ஓட்டிச் சென்றார். இவர் தூத்துக்குடி தெர்மல் நகரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

    நேற்று மாலை நெய்வேலி கூட்டத்தில் கலந்து கொண்டு விட்டு தூத்துக்குடிக்கு புறப்பட்டனர். நள்ளிரவு மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள நரசிங்கம்பட்டி 4 வழிச்சாலையில் கார் வந்து கொண்டிருந்தது.

    அங்குள்ள மின்வாரிய அலுவலகம் அருகில் வந்தபோது திடீரென கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. அதே வேகத்தில்கார் சென்டர்மீடியன் மீது மோதி மறுபுறம் உள்ள ரோட்டில் பாய்ந்தது. அப்போது மதுரை நோக்கி வந்து கொண்டிருந்த லாரி மீது கார் பயங்கரமாக மோதியது.

    குமார்-மோசஸ்

    இதில் கார் முற்றிலும் சேதம் அடைந்தது. அதில் இருந்த மோசஸ், குமார் ஆகியோர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

    விபத்து குறித்து தகவல் அறிந்த மேலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பழனிசாமி, போலீஸ்காரர் விவேக், சுங்கச்சாவடி விபத்து மீட்பு வாகன அலுவலர் ராஜேந்திரன் ஆகியோர் சம்பவ இடம் விரைந்து சென்றனர். பின்னர் 2 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக மேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இதுதொடர்பாக மேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சேசு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    உடையார்பாளையம் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
    உடையார்பாளையம்:

    உடையார்பாளையம் அருகே வாணத்திரையான்பட்டினம் கிராமத்தை சேர்ந்தவர் குணசேகரன் (வயது 63). விவசாயி. இவரது உறவினர்கள் ரவி (45), கலியபெருமாள். இவர்கள் 3 பேரும் ஒரு மோட்டார் சைக் கிளில் தத்தனூரில் ஜாதகம் பார்த்து விட்டு வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். மூர்த்தியான் கிராமம் அருகே வந்த போது அந்த வழியாக வந்த லாரி எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் குணசேகரன் உள்பட 3 பேரும் படுகாயமடைந்தனர். இதைப்பார்த்த அருகில் இருந்தவர்கள் படுகாயமடைந்த 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து உடையார்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேனி மாவட்டம், கவுண்டன்பட்டி கிராமத்தை சேர்ந்த லாரி டிரைவர் பிரசாத் (25) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பென்னாகரம் அருகே பள்ளி வேன் மீது லாரி மோதிய விபத்தில் 6 குழந்தைகள் படுகாயம் அடைந்தனர்.
    பென்னாகரம்:

    தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகேயுள்ள ஏரியூர் தனியார் பள்ளி உள்ளது. இன்று காலை நாகமரையில் இருந்து பள்ளி குழந்தைகளை ஏற்றி கொண்டு வேன் ஏரியூருக்கு வந்து கொண்டிருந்தது.

    நெருப்பூர் பஸ் நிலையம் அருகே சாலையோரத்தில் நிறுத்தி விட்டு குழந்தைகளை ஏற்றி கொண்டிருந்தனர்.

    அப்போது பின்னால் வந்த லாரி எதிர்பாராதவிதமாக பள்ளி வேன் மீது லாரி மோதியது. வேனில் இருந்த 6 பள்ளி குழந்தைகளுக்கு பலத்த படுகாயம் ஏற்பட்டது. உடனே அவர்களை ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு ஏரியூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக பென்னாகரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது. அங்கு பள்ளி குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த விபத்து குறித்து ஏரியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் இடதுபுறமாக இருந்த பள்ளத்தில் பஸ் இறங்கி விபத்துக்குள்ளனாது. இதில் 40 பயணிகள் காயமின்றி உயிர் தப்பினார்கள்.
    சூளகிரி:

    கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து ஓசூர் வழியாக சேலம் நோக்கி அரசு பஸ் ஒன்று நேற்று காலை சென்று கொண்டிருந்தது. பஸ்சில் சுமார் 40 பயணிகள் பயணம் செய்து கொண்டிருந்தனர். அந்த பஸ் கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தது.

    அப்போது அந்த நேரம் பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் இடதுபுறமாக இருந்த பள்ளத்தில் இறங்கி விபத்துக்குள்ளானது. இதில் 40 பயணிகள் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினார்கள். இந்த விபத்து குறித்து சூளகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.  
    பாகூர் அருகே மதுக்கடையில் ஏற்பட்ட மோதலில் 3 பேர் காயம் அடைந்தனர். இதுதொடர்பாக 3 பேரை போலீசார் தேடிவருகிறார்கள்.

    பாகூர்:

    கடலூர் சம்மட்டிகுப்பத்தை சேர்ந்தவர் சிவமூர்த்தி, (வயது52). இவர் அந்த ஊர் பிரமுகராக இருந்து வருகிறார். நேற்று இவர் பாகூர் அருகே சோரியாங்குப்பத்தில் உள்ள ஒரு மதுபான கடையில் மதுகுடித்து கொண்டு இருந்தார். இவரது அருகே சோரியாங்குப்பம் நடுத்தெருவை சேர்ந்த சிவஞானம் (32), வைத்தி(30), முருகராஜ்(30) ஆகியோர் மதுகுடித்து கொண்டு இருந்தனர்.

    இந்த நிலையில் சிவமூர்த்தி தண்ணீர் பாக்கெட்டை பிரித்த போது எதிர்பாராதவிதமாக அருகே மதுகுடித்து கொண்டிருந்த சிவஞானம் உள்ளிட்ட 3 பேர் மீது தண்ணீர் கொட்டியது. இதற்காக சிவமூர்த்தி மன்னிப்பு கேட்டார். ஆனால் அவரிடம் சிவராமன் உள்பட 3 பேரும் தகராறு செய்து அவரை தடியால் தாக்கினர். மேலும் மதுபாட்டிலால் குத்தினர்.

    அப்போது கடலூர் பழைய நகரை சேர்ந்த ராஜசேகர் மற்றும் திருப்பாபுலியூரை சேர்ந்த சிலம்பரசன் ஆகியோர் தடுக்க முயன்ற போது அவர்களையும் சிவஞானம் தரப்பினர் தாக்கினர். இந்த தாக்குதலில் சிவமூர்த்தி, ராஜசேகர், சிலம்பரசன் ஆகிய 3 பேரும் காயம் அடைந்தனர். அவர்கள் பாகூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர்.

    இதுகுறித்து ராஜசேகர் பாகூர் போலீசில் புகார் செய்தார். போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர் அருள்மணி வழக்குபதிவு செய்து சிவஞானம் உள்ளிட்ட 3 பேரையும் தேடிவருகிறார்.

    விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் அருகே ரெயில் விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த சுகாதார ஆய்வாளர் பரிதாபமாக உயிரிழந்தார்.
    சின்னசேலம்:

    விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் அருகே நயினார்பாளையத்தை சேர்ந்தவர் வெற்றிவேல்(வயது 54). இவர் கடலூர் கோண்டூரில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இவரது மனைவி சித்ரா(40), இவர்களது மகன் மகேஸ்வரன்.

    வெற்றிவேல் கடலூர் மேல்பட்டாம்பாக்கத்தில் சுகாதார ஆய்வாளராக பணியாற்றி வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு வெற்றிவேல் மனைவி சித்ரா, மகன் மகேஸ்வரன், உறவினர் காவியா(22) ஆகியோருடன் ஒரு காரில் பெரியசிறுவத்தூரில் உள்ள குலதெய்வ கோவிலுக்கு சாமி கும்பிட சென்றனர். பின்பு அவர்கள் வீடு திரும்பினர்.

    அப்போது சின்ன சேலம்-சிறுவத்தூர் இடையே ஆளில்லா ரெயில்வேகேட்டை கார் கடந்து செல்ல முயன்றது. அப்போது அந்த வழியாக வந்த பயணிகள் ரெயில் கார் மீது மோதியது. இதில் சித்ரா, காவியா ஆகியோர் உடல்நசுங்கி பரிதாபமாக இறந்தனர்.

    இந்த விபத்தில் வெற்றி வேல், மகேஸ்வரன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் சென்னையில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இந்தநிலையில் நேற்று இரவு சிகிச்சை பலனளிக்காமல் வெற்றி வேல் இறந்தார். மகன் மகேஸ்வரனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து சேலம் ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 
    தஞ்சை அருகே சாலையோரத்தில் வாலிபர் பிணமாக கிடந்தார். அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை, குருங்குளம் அருகே உள்ள சமத்துவபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் (வயது 40). இவர் நேற்று நாகப்புடையான் பட்டி பகுதியில் சாலையோரத்தில் தலையில் காயத்துடன் இறந்து கிடந்தார். அவரது உடல் அருகே ஒரு மோட்டார் சைக்கிள் கிடந்தது.

    இதை பார்த்த அப்பகுதி மக்கள் குருங்குளம் கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் கொடுத்தனர்.

    இதையடுத்து கிராம நிர்வாக அலுவலர் வல்லம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சரவணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பின்னர் இதுகுறித்து வழக்குபதிவு செய்து அவர் விபத்தில் இறந்தாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கிருமாம்பாக்கம் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் 2 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கிருமாம்பாக்கம்:

    கடலூர் கூத்தப்பாக்கத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது45). இவர் கடலூர் மின்வாரிய அலுவலகத்தில் ஊழியராக வேலைபார்த்து வருகிறார். இவர் நேற்று மாலை மோட்டார் சைக்கிளில் கடலூரில் இருந்து புதுவைக்கு வந்து கொண்டு இருந்தார்.

    கிருமாம்பாக்கம் அருகே கன்னியகோவில் என்ற இடத்தில் வந்த போது பின்னால் வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. கார் அதிவேகமாக மோதியதால் கிருஷ்ணமூர்த்தி ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் எதிரே கடலூரை சேர்ந்த மாயவன் (40) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் கிருஷ்ணமூர்த்தி மற்றும் மாயவன் ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர். அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    இந்த விபத்து குறித்து கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் தனசேகரன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    விபத்து நடந்த இடமான கன்னியகோவில் பாகூர் 4 முனை சந்திப்பு ரோட்டில் அடிக்கடி இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுகின்றன. சாலை அகலமாக உள்ளதால் தாறுமாறாக அதிவேகமாக வரும் வாகனங்கள் விபத்தை ஏற்படுத்தி பலர் உயிர் பலியாகுகின்றனர். எனவே இந்த பகுதியில் இருவழிபாதையை மாற்றி போக்குவரத்து சிக்னல் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் விபத்துகளை தடுக்க அங்கு போக்குவரத்து போலீசாரை பணியில் அமர்த்தவேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்.
    நெல்லை டவுணில் தேனீக்களில் கொட்டி 30 மாணவ- மாணவிகள் காயமடைந்த சம்பவம் தொடர்பாக 2 பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
    நெல்லை:

    நெல்லை டவுண் தெற்கு மவுண்ட்ரோட்டில் கல்லணை பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இதன் எதிரே ஜவகர் நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இதன் அருகே ராட்சத மரத்தின் மீது 3 அடி உயரத்தில் பெரிய தேனீ கூடு இருந்தது.

    இந்நிலையில் இன்று வீசிய பலத்த காற்றில் அந்த தேனீ கூடு கீழே விழுந்தது. இதையடுத்து இதில் இருந்து ஏராளமான தேனீக்கள் வெளியேறி அருகில் உள்ள பள்ளிகளில் புகுந்தது. இதில் கல்லணை பள்ளியில் இருந்த சுமார் 25 மாணவிகளையும், ஆசிரியைகளையும் கொட்டியது. இதனால் அலறியடித்து கொண்டு மாணவிகள் வெளியேறினர்.

    இதையடுத்து அவ்வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தேனீக்கள் அருகில் உள்ள ஜவகர் பள்ளி மாணவர்கள் 5 பேரையும் தாக்கியது. மேலும் அவ்வழியாக வாகனத்தில் மற்றும் நடந்து சென்றவர்களையும் தாக்கியது. இதையறிந்த பெற்றோர்கள் ஏராளமானவர்கள் பள்ளிக்கு சென்று தங்கள் குழந்தைகளை பாதுகாப்பாக அழைத்து சென்றனர். சில மாணவர்களுக்கு காயம் ஏற்பட்டதால் அவர்களை பெற்றோர்கள் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

    இதையடுத்து கல்லணை மற்றும் ஜவகர் பள்ளிக்கு இன்று விடுமுறை விடப்பட்டது. இதனால் டவுண் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. #tamilnews
    ×