search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 104052"

    பூண்டி நீர்தேக்கத்தை சுற்றியுள்ள நீர்வரத்து கால்வாய்கள் அமைந்துள்ள கிராமப்புற பகுதிகளில் ஓடை உள்வரத்து கால்வாய்கள் சீரமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.
    திருவள்ளூர்:

    சென்னை மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றுவதில் பூண்டி ஏரி முக்கிய பங்கு வகிக்கிறது. சுமார் 2 ஆயிரத்து 544 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த ஏரியில் 3231 மில்லியன் கன அடி தண்ணீர் சேமிக்க முடியும்.

    கோடை காலத்தில் சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக இங்கிருந்து பேபி கால்வாய் வழியாக தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம்.

    தற்போது பருவமழை பொய்த்து போனதாலும், நீர்வரத்து குறைந்து போனதாலும் பூண்டியில் நீர் இருப்பு மிகவும் குறைந்து போனது.

    ஆந்திர அரசு கிருஷ்ணா நதிநீர் திட்டத்தின் மூலமாக பூண்டி ஏரிக்கு வழங்கும் தண்ணீரை கொண்டே சென்னை மக்களின் குடிநீர் தேவை நிறைவேற்றப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் குடிநீர் ஆதாரத்தை பெருக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு அரசு உத்தரவிட்டது.

    அதன்படி பூண்டி நீர்தேக்கத்தை சுற்றியுள்ள நீர்வரத்து கால்வாய்கள் அமைந்துள்ள காரணி கைவண்டூர், சென்றான் பாளையம், எல்லப்பன் நாயுடு கண்டிகை,‌ பாண்டூர், ராமஞ்சேரி உள்ளிட்ட கிராமப்புற பகுதிகளில் ஓடை உள்வரத்து கால்வாய்கள் சீரமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

    பெரும்பாலான நீர் வரத்து கால்வாய்கள் ஆக்கிரமிப்பில் இருப்பதால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்பாளர்களிடம் பேசி உரியமுறையில் கால்வாய்கள் அமைத்து வருகின்றனர்.

    மேலும் ஒரு சில ஆக்கிரமிப்பாளர்கள் சீரமைப்பு பணிக்கு ஒத்துழைக்க மறுப்பதால் அவர்கள் மீது திருவள்ளூர் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

    இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறும்போது,

    கால்வாய் சீரமைப்பு பணி சுமார் ஒரு கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் இன்னும் ஒரு மாதத்தில் நிறைவடையும்.

    பூண்டி நீர்தேக்கத்தை சுற்றியுள்ள 30 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஓடை உள்வரத்து கால்வாய்களை சீரமைக்கும் பட்சத்தில் மழை காலத்தில் நீர் வீணாகாமல் இந்த ஓடை வழியாக பூண்டி நீர்தேக்கத்தை வந்தடைய வாய்ப்பு இருக்கிறது.

    இதனால் சென்னை மக்களின் குடிநீர் தேவையை எளிதில் பூர்த்தி செய்ய முடியும் என்றார்.

    விருத்தாசலத்தில் தனியார் மருத்துவமனையின் பின்புறம் கழிவுநீர் கால்வாயில் கிடந்த பச்சிளம் குழந்தை மீட்கப்பட்டது.
    விருத்தாசலம்:

    விருத்தாசலம் ஜங்ஷன் சாலையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையின் பின்புறம் கழிவுநீர் கால்வாய் உள்ளது. இந்த கழிவுநீர் கால்வாயில் நேற்று காலையில் பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளம் பெண் குழந்தை ஒன்று கிடந்தது. இதை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். பின்னர் இதுபற்றி விருத்தாசலம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இருப்பினும் அந்த குழந்தை யாருடையது என்பது தெரியவில்லை. இதையடுத்து அந்த குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அந்த குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    அந்த குழந்தையை கால்வாயில் விட்டுச்சென்றவர் யார்? கள்ளத்தொடர்பில் பிறந்ததால் குழந்தையை விட்டு சென்றார்களா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதற்கிடையே இதுபற்றி அறிந்த கடலூர் மாவட்ட குழந்தைகள் மைய ஆலோசகர் பார்த்திபராஜ், விருத்தாசலம் சமூக நல விரிவாக்க அலுவலர் ஜெயபிரபா, ஊர்நல அலுவலர் பானுமதி ஆகியோர் மருத்துவமனைக்கு வந்து குழந்தையை மீட்டு தொட்டில் குழந்தை திட்டத்தில் சேர்த்தனர்.
    வைகை அணையில் இருந்து 58 கிராம புதிய கால்வாயில் பாசன நிலங்களுக்கு தண்ணீரினை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று திறந்து வைத்தார். #VaigaiDam
    தேனி:

    தேனி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் தலைமையில் நடந்த இந்நிகழ்ச்சியில் தண்ணீரினை திறந்து வைத்து ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-

    தென்மேற்கு பருவ மழையையொட்டி முல்லைப் பெரியாறு அணை நீர் பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால் பெரியாறு அணையில் இருந்து 18-ம் கால்வாய் மூலம் உத்தமபாளையம் வட்டத்துக்கு உட்பட்ட பண்ணைப்புரம், கோம்பை, க.புதுப்பட்டி, அனுமந்தன் பட்டி, சிந்தலைச்சேரி, தேவாரம், கிருஷ்ணம்பட்டி, வெம்பக்கோட்டை, திம்மிநாயக்கன்பட்டி, பொட்டிப்புரம் ஆகிய கிராமங்களில் உள்ள 29 கண்மாய்கள் மூலம் 2,045.35 ஏக்கர் நிலங்களும், போடிநாயக்கனூர் வட்டத்துக்குட்பட்ட டொம்புசேரி, மீனாட்சிபுரம், கோடாங்கி பட்டி ஆகிய கிராமங்களில் உள்ள 15 கண்மாய்கள் மூலம் 2,568.90 ஏக்கர் நிலங்களும் என மொத்தம் 44 கண்மாய்கள் மூலம் 4,614.25 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

    கடந்த 2014-ம் ஆண்டு மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் விதி எண் 110-ன் கீழ் அறிவிக்கப்பட்டு 27.2.2016 அன்று காணொளி காட்சி மூலம் இப்பணிகள் தொடங்கி வைக்கப்பட்டது. 18-ம் கால்வாயினை சுத்தகங்கை ஓடையில் இருந்து கூவலிங்க ஆறு வரை நீட்டித்து கொட்டக்குடி ஆற்றுடன் இணைக்கும் திட்டப்பணிகள் கடந்த மார்ச் மாதம் நிறைவு பெற்றதையடுத்து சோதனை அடிப்படையில் வினாடிக்கு 200 கனஅடி வீதம் 7 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.

    அதனைத் தொடர்ந்து பி.டி.ஆர். மற்றும் தந்தை பெரியார் வாய்க்கால்கள் மூலம் உத்தமபாளையம் வட்டத்துக்குட்பட்ட சின்னமனூர், சீப்பாலக்கோட்டை, வேப்பம்பட்டி ஆகிய கிராமங்களில் உள்ள 830 ஏக்கர் நிலங்களும், தேனி வட்டத்துக்கு உட்பட்ட சீலையம்பட்டி, பூமலைக் குண்டு தர்மாபுரி, தாடிச்சேரி, வெங்கடாசலபுரம், கொடுவிலார்பட்டி, ஜங்கால்பட்டி, கோவிந்த நகரம், பால கிருஷ்ணாபுரம் ஆகிய கிராமங்களில் உள்ள 4,316 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

    மொத்தம் 5,146 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்பொருட்டு 100 கன அடி வீதம் 120 நாட்களுக்கு பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.


    வைகை அணையின் வலதுபுற கரையில் இருந்து மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டம், திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை வட்டம் ஆகிய பகுதிகளில் உள்ள கண்மாய் பகுதிகளுக்கு செல்லும் 58 புதிய கால்வாய் பணி முடிவுற்றதையடுத்து சோதனை ஓட்டத்துக்காக இன்று முதல் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

    தென்மேற்கு பருவமழையால் 69 அடியை எட்டிய வைகை அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருவதால் இதனை சிறப்பு நிகழ்வாக கருதி சோதனை அடிப்படையில் 58 புதிய கால்வாய் பகுதியில் தண்ணீர் திறக்கபடுகிறது. இதன் மூலம் உசிலம்பட்டி மற்றும் நிலக்கோட்டை வட்டத்தில் உள்ள 228.86 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

    விவசாயிகள் நீரினை சிக்கனமாக பயன்படுத்த நீர்மேலாண்மை மேற்கொண்டு அதிக மகசூல் பெற வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ, உதயகுமார், பார்த்திபன் எம்.பி., ஜக்கையன் எம்.எல்.ஏ., மதுரை மாவட்ட கலெக்டர் வீரராகவராவ், தேனி போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், முன்னாள் எம்.பி. சையதுகான், முன்னாள் எம்.எல்.ஏ. கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். #Vaigaidam
    இந்த ஆண்டு மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பாக, வரத்துக் கால்வாய் புனரமைப்பு பணிகள் ஆகியவற்றை விரைந்து முடிக்க வேண்டும் என்று அன்வர்ராஜா எம்.பி. வலியுறுத்தி உள்ளார்.
    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் மூலம் 2015-2016-ம் நிதியாண்டு முதல் 2018- 2019 நிதியாண்டு வரை மேற்கொள்ளப்பட்டுள்ள பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்த மாவட்ட ஆளுமை மற்றும் செயற்குழு கூட்டம், குழுவின் தலைவர், அன்வர்ராஜா எம்.பி. தலைமையில் நடந்தது.

    குழுவின் செயலாளரும், கலெக்டருமான நடராஜன் முன்னிலை வகித்தார். 2015-2016-ம் நிதியாண்டு முதல் 2018-2019 (தற்போதைய நிதியாண்டில் இது நாள் வரை) மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம், முதலமைச்சரின் சூரிய ஒளியுடன் கூடிய பசுமை வீடுகள் வழங்கும் திட்டம், இந்திரா நினைவு குடியிருப்புத் திட்டம், தாய் திட்டம், தமிழ்நாடு மாநில ஊரக சாலைகள் மேம்பாட்டு திட்டம், தனிநபர் இல்லக் கழிப்பறைகள் கட்டும் திட்டம், பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதி திட்டம் ஆகிய திட்டங்களின் கீழ் பல்வேறு திட்டப் பணிகளுக்கு மேற்கொள்ளப்பட்டுள்ள செலவினங்கள், நிறைவேற்றப்பட்டுள்ள திட்டப் பணிகள், நிலுவையில் உள்ள திட்டப்பணிகள் ஆகியவை குறித்து குழுவின் தலைவர் அன்வர்ராஜா எம்.பி. ஆய்வு செய்தார்.

    இந்த ஆண்டு மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பாக, மாவட்டத்தில் முன்னேற்றத்தில் உள்ள தடுப்பணை கட்டும் பணிகள், நீர்நிலை சீரமைப்பு பணிகள், வரத்துக் கால்வாய் புனரமைப்பு பணிகள் ஆகியவற்றை விரைந்து முடிக்க வேண்டும் என்றும், காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகம் மற்றும் ஊரக பகுதிகளுக்கான மின்சார விநியோகம் ஆகியவற்றில் பொதுமக்கள் சிரமப்படாதவாறு கூடுதல் கவனம் செலுத்தி அதிகாரிகள் சிரத்தையோடு பணியாற்ற வேண்டும் என்றும் அறிவுரை வழங்கினார்.

    கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஹென்சி லீமா அமாலினி, ஊரக வளர்ச்சி முகமையின் செயற்பொறியாளர் சிவராணி, ஊராட்சிகளின் உதவி இயக்குநர் செல்லத்துரை, கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் (வேளாண்மை) ராஜா, (நிலம்) அமிர்தலிங்கம், (வளர்ச்சி பிரிவு) உமா மகேஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    தண்ணீர் திறப்பு எதிரொலியால் கால்வாய் பக்கம் குழந்தைகளை அழைத்து செல்ல வேண்டாம் என்று கலெக்டர் பிரபாகர் கூறியுள்ளார். #collector

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட கலெக்டர் பிரபாகர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    காவேரி ஆற்றில் மேட்டூர் அணைக்கு அதிக அளவில் வெள்ள நீர் வருகிறது. இதனால் அணை வேகமாக நிரம்பி வருகிறது. அணைக்கு வரும் வெள்ள நீர் முழுவதும் காவேரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் காவேரியாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது.

    எனவே பொதுமக்கள் மற்றும் காவேரி ஆற்றின் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாகவும், பாதுகாப்பாகவும் இருக்கு வேண்டும். அவர்கள் உடனடியாக மேடான பகுதிகளுக்கு செல்ல வேண்டும். காவேரி ஆற்றில் இறங்கவோ, ஆற்றினை கடக்கவோ முயற்ச்சிக்க வேண்டாம் என பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    மேலும் தடப்பள்ளி அரக்கன்கோட்டை பாசனக் கால்வாய்களிலும் மேட்டூர் வாய்க்காலிலும் அதன் முழுக் கொள்ளளவிற்கு பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

    இதனால் பொதுமக்கள் தங்களது குழந்தைகளை கால்வாய்களின் அருகில் செல்லாமல் பாதுகாப்பாக இருக்கு வேண்டும். கால் வாயில் குளிப்பதற்கும், துணி துவைப்பதற்கும் செல்லும் போது பொதுமக்கள் கவனமுடனும் மிகுந்த எச்சரிக்கையாகயுடனும் இருக்க வேண்டும்.

    இவ்வாறு கலெக்டர் அதில் கூறியுள்ளார்.

    கிருஷ்ணகிரி அருகே கால்வாயில் மூழ்கி அண்ணன் - தங்கை பரிதாபமாக இறந்தனர்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணை அருகே உள்ள சின்ன பேயனப்பள்ளியை சேர்ந்தவர் நரசிம்மன் (வயது 45). விவசாயி. இவரது மனைவி கவிதா (40). இவர்களுக்கு தமிழ்ச்செல்வன் (8) என்ற மகனும், நந்தினி (3) என்ற மகளும் இருந்தனர். தமிழ்ச்செல்வன் அருகில் உள்ள அரசு பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தான்.

    இந்த நிலையில் நேற்று நரசிம்மன் அந்த பகுதியில் உள்ள தோட்டத்தில் பூப்பறிப்பதற்காக சென்றார். மேலும் ஆட்டையும் மேய்ச்சலுக்காக ஓட்டி சென்றார். அப்போது சிறுவன் தமிழ்ச்செல்வனும், சிறுமி நந்தினியும் உடன் சென்றனர். அந்த நேரம் நரசிம்மன் மேய்ச்சலுக்காக கொண்டு சென்ற ஆடு வேறு பக்கம் சென்றது.

    இதைப் பார்த்த நரசிம்மன் அந்த ஆட்டை பிடித்து வருமாறு தமிழ்ச்செல்வனிடம் கூறினார். இதனால் தமிழ்ச்செல்வனும், நந்தினியும் ஆட்டை பிடிப்பதற்காக ஓடிச் சென்றனர். அப்போது அவர்கள் அந்த பகுதியில் உள்ள கே.ஆர்.பி. அணை தண்ணீர் செல்லும் கால்வாயில் இறங்கினர். அந்த நேரம் இருவரும் சேற்றில் சிக்கினார்கள்.

    பின்னர் சிறிது நேரத்தில் அவர்கள் 2 பேரும் தண்ணீரில் தத்தளித்தனர். அவர்களின் அலறல் சத்தம் கேட்டு நரசிம்மன் அங்கு ஓடி சென்றார். ஆனால் அதற்குள் தமிழ்ச்செல்வனும், நந்தினியும் கால்வாயில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர். குழந்தைகளின் உடலை நரசிம்மன் மற்றும் அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு மேலே கொண்டு வந்தனர். அப்போது 2 பேரின் உடல்களை பார்த்து நரசிம்மன் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.

    இது குறித்து தகவல் அறிந்த கிருஷ்ணகிரி அணை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றார்கள். அவர்கள் பலியான சிறுவன் தமிழ்ச்செல்வன், சிறுமி நந்தினி ஆகிய 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக கிருஷ்ணகிரி அணை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.கால்வாயில் மூழ்கி அண்ணன் - தங்கை பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 
    ×