search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாக்குச்சாவடி"

    மேற்கு வங்கத்தில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் நாளை மறு வாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
    கொல்கத்தா:

    பாராளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. கடைசி கட்ட தேர்தல் மே 19-ம் தேதி நடந்தது. இதில், மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா உத்தர் பாராளுமன்றத் தொகுதிக்குட்பட்ட 200ம் எண் வாக்குச்சாவடியில் நடந்த வாக்குப்பதிவு செல்லாது என தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது.



    மேலும் இந்த வாக்குச்சாவடியில் நாளை மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
    தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் 8 வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு நேற்று விறுவிறுப்பாக நடந்தது. 89.67 சதவீதம் ஓட்டுகள் பதிவானது.
    தர்மபுரி:

    தர்மபுரி பாராளுமன்ற தேர்தல் மற்றும் அரூர்(தனி), பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் மாதம் 18-ந்தேதி நடைபெற்றது. இதனிடையே தர்மபுரி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதியில் சில பகுதிகளில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவின்போது முறைகேடுகளும், அத்துமீறல்களும் நடைபெற்றதாக தி.மு.க. சார்பில் புகார் அளிக்கப்பட்டது.

    இதையடுத்து பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட டி.அய்யம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் எண் 181, 182, நத்தமேடு அரசு மேல்நிலைப்பள்ளியில் எண் 192, 193, 194, 195, ஜாலிப்புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் எண் 196, 197 என மொத்தம் 8 வாக்குச்சாவடிகளில் மறுஓட்டுப்பதிவு நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.

    அதன்படி இந்த வாக்குச்சாவடிகளில் நேற்று மறுவாக்குப்பதிவு நடைபெற்றது. இங்கு 3,074 ஆண் வாக்காளர்களும் 2,985 பெண் வாக்காளர்களும் என மொத்தம் 6059 வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் கொளுத்தும் வெளிலையும் பொருட்படுத்தாமல் நீண்ட வரிசையில் நின்று தங்களது வாக்கை பதிவு செய்தனர். இவர்கள் தர்மபுரி பாராளுமன்ற தேர்தலுக்கு ஒரு வாக்கும், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கு ஒரு வாக்கும் என 2 வாக்குகளை பதிவு செய்தனர்.

    இதையொட்டி 600-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பாராளுமன்ற தேர்தலின் போது இடது கையின் ஆள்காட்டி விரலில் மை வைக்கப்பட்டு இருந்தது. தற்போது மீண்டும் மறுவாக்குப்பதிவு நடைபெற்றதால் ஓட்டுப்போட்ட வாக்காளர்களுக்கு நடுவிரலில் மை வைக்கப்பட்டது. வாக்குச்சாவடிகளில் வெப்கேமராக்கள் பொருத்தப்பட்டு முழுமையாக வீடியோவில் பதிவு செய்யப்பட்டது. வாக்குச்சாவடி முகவர்கள் மற்றும் வாக்காளர்கள் மறு ஓட்டுப்பதிவின்போது செல்போனை பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டது.

    வாக்குச்சாவடிகளை பாராளுமன்ற பொதுத்தேர்தல் பார்வையாளர் தேபேந்திரகுமார் ஜெனா, கலெக்டர் மலர்விழி, போலீஸ் டி.ஐ.ஜி. செந்தில்குமார், போலீஸ் சூப்பிரண்டு ராஜன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்றது. 6,059 வாக்காளர்கள் கொண்ட இந்த 8 வாக்குச்சாவடியிலும் 5,433 பேர் ஓட்டு போட்டனர். இது 89.67 சதவீதம் ஆகும்.

    டி.அய்யம்பட்டி வாக்குச்சாவடியில் வாக்களிக்க காலதாமதம் ஏற்படுவதாக கூறி அலுவலர்களிடம் வாக்காளர்கள் வாக்குவாத்தில் ஈடு பட்டனர். அவர்களை போலீசார் சமரசம் செய்தனர். ஜாலிப்புதூர் பகுதியில் குறிப்பிட்ட ஒரு இடத்தில் அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் அதிக அளவில் திரண்டு இருந்தனர். தகவல் அறிந்த கூடுதல் சூப்பிரண்டு மணிகண்டன் அதிரடிப்படை போலீசாருடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றார். பின்னர் அங்கு திரண்டு இருந்த கட்சி நிர்வாகிகளை கலைந்து செல்லுமாறு அவர் அறிவுறுத்தினார். இதையடுத்து அவர்கள் அங்கிருந்தவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
    பாராளுமன்றத்துக்கு நாளை நடைபெறும் வாக்குப்பதிவுக்கு மக்களை ஈர்க்கும் வகையில் பீகார் தலைநகர் பாட்னாவில் தாய்ப்பால் புகட்டும் அறை, விளையாட்டு பொருட்கள், முதலுதவி வசதியுடன் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது.
    பாட்னா:

    7 கட்டங்களாக நடைபெற்று வரும் பாராளுமன்ற தேர்தலில் இதுவரை 6 கட்ட தேர்தல்கள் நிறைவடைந்து உள்ளன. இறுதியாக 7-ம் கட்ட தேர்தல் நாளை 19-ம் தேதி நடைபெற உள்ளது. 8 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளுக்கு நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.



    இந்நிலையில், பீகார் தலைநகர் பாட்னா தொகுதியில் அமைக்கப்பட்டுள்ள 37,38 மற்றும் 40-ம் எண் கொண்ட வாக்குச்சாவடிகளில் மக்களை வாக்குப்பதிவுக்கு ஈர்க்கும் வகையில் குழந்தைகளுக்கு தாய்ப்பால் புகட்டும் அறை, குழந்தைகள் காப்பகம் போல் விளையாட்டு பொருட்கள் மற்றும் முதலுதவி போன்ற சிறப்பு வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.
    சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே வாக்குச்சாவடி மையத்தில் பெண் போலீசிடம் தவறாக நடக்க முயன்ற தி.மு.க. பிரமுகரை போலீசார் கைது செய்தனர்.
    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அக்கிசெட்டிபாளையம் பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நேற்று பாராளுமன்ற தொகுதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று கொண்டு இருந்தது.

    இந்த வாக்குப்பதிவு மையத்தில் ஆத்தூர் போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் பெண் போலீஸ் சசிகலா என்பவர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

    அதே பகுதியைச் சேர்ந்த தி.மு.க. பிரமுகர் விஜய் (வயது 29) என்பவர் அங்கு வந்து பொதுமக்களிடம் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். இதை பார்த்த சசிகலா, வாக்குச்சாவடி அருகே நிற்கக்கூடாது, இங்கிருந்து செல்லுங்கள் என கூறினார்.

    அதற்கு விஜய், ஆபாசமாக பேசி தகராறு செய்தார். மேலும் மிரட்டல் விடுத்து தவறாக நடக்க முயன்றதாக தெரிகிறது. இதையறிந்ததும், சக போலீசார் அங்கு விரைந்து வந்தனர். உடனே விஜய் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

    இது குறித்து சசிகலா ஆத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் கேசவன் விசாரணை நடத்தி, பெண் போலீசை ஆபாசமான வாத்தையால் பேசியது, அரசு பணியை செய்யவிடாமல் தடுத்தது, கொலை மிரட்டல் விடுத்தது, அவமானப்படுத்தி வன்கொடுமை செயலில் ஈடுபட்டது என 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த விஜயை கைது செய்தார்.

    பின்னர் போலீசார், அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    தமிழகத்தில் இன்று பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், வாக்குச்சாவடியில் 2 முதியவர்கள் மயங்கி விழுந்து உயிரிழந்தனர். #TNElections2019 #ElderlyVoters
    ஈரோடு:

    பாராளுமன்ற இரண்டாம் கட்ட தேர்தல் இன்று நடைபெறுகிறது. தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 12 மாநிலங்களில் உள்ள 95 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் 38 பாராளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரி பாராளுமன்றத் தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.



    ஈரோடு மாவட்டம் சிவகிரியில் உள்ள வாக்குச்சாவடியில் முருகேசன் என்ற முதியவர், வாக்களித்துவிட்டு வெளியே வந்ததும் மயங்கி விழுந்து உயிரிழந்தார். இதேபோல் சேலம் மாவட்டம் வேடப்பட்டியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்த முதியவர் கிருஷ்ணனும் மயங்கி விழுந்து உயிரிழந்தார். இந்த சம்பவத்தால் வாக்குச்சாவடியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. #TNElections2019 #ElderlyVoters
    பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள வாக்குச்சாவடிளுக்கு தேவையான 38 வகையான பொருட்கள் தயார் நிலையில் உள்ளது.
    பெரம்பலூர்:

    தமிழகத்தில் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நாளை (வியாழக்கிழமை) நடைபெறவுள்ளது. பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பெரம்பலூர் (தனி) சட்டமன்ற தொகுதியில் உள்ள 332 வாக்குச்சாவடிகளுக்கு தேர்தல் நாளன்று அலுவலர்கள் பயன்படுத்த தேவையான வாக்காளர் பட்டியல், பூத் சிலீப், பேனா, பென்சில், வாக்குப்பதிவு எந்திரம், வாக்குப்பதிவினை உறுதி செய்யும் எந்திரத்தை மறைக்க பயன்படுத்தக்கூடிய அட்டைகள், அதனை சீல் வைக்க பயன்படுத்தப்படும் துணிகள், மெழுகுவர்த்திகள், ஓட்டு போடும் வாக்காளர்களுக்கு விரலில் வைக்கப்படும் அடையாள மை உள்ளிட்ட 38 வகையான பொருட்கள் தேர்தல் ஆணையத்தால் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. அதனை ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் பிரிக்கும் பணியில் அலுவலர்கள் ஈடுபட்டிருந்தனர். 
    தற்போது அந்த 38 வகையான பொருட்கள் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் தனித்தனி பையில் போடப்பட்டு, வாக்குச்சாவடிக்கு அனுப்புவதற்கு தயார் நிலையில் பெரம்பலூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வரிசையாக வைக்கப்பட்டுள்ளது. இன்று (புதன்கிழமை) மேற்கண்ட 38 வகையான பொருட்களும் அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு கொண்டு செல்லப்படுவதாக தேர்தல் அலுவலர்கள் தெரிவித்தனர்.

    பெரம்பலூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள 332 வாக்குச்சாவடிகளில் தேர்தல் அன்று பயன்படுத்தக்கூடிய மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் வேட்பாளர்களின் பெயர், புகைப்படம், சின்னம் அடங்கிய பேலட் பேப்பர் ஒட்டப்பட்டும், வாக்கினை உறுதி செய்யும் எந்திரங்கள் தனி அறையில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டு ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளது. அந்த அறைக்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 
    மாவோயிஸ்ட் அச்சுறுத்தலால் ஒடிசா மாநிலத்தின் மால்கன்கிரி மாவட்டத்தில் உள்ள 2 வாக்குச்சாவடிகளில் ஒரு வாக்கு கூட பதிவாகவில்லை என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர். #LokSabhaElections2019
    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு நாடு முழுவதிலும் உள்ள 91 தொகுதிகளில் தொடங்கி பலத்த பாதுகாப்புடன் நடைபெற்றது. 

    20 மாநிலங்களின் 91 தொகுதிகளில் முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்கியது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மக்கள் முன்னதாகவே வாக்குப்பதிவு மையங்களுக்கு ஆர்வமுடன் வந்து தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். 

    அத்துடன் ஆந்திரா, அருணாசல பிரதேசம், சிக்கிம், ஒடிசா ஆகிய மாநிலங்களின் அனைத்து தொகுதிகளுக்கும் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவும் இன்று நடைபெற்றது.

    இதற்கிடையே, ஒடிசாவில் பாராளுமன்ற தேர்தலில் வாக்காளர்கள் பங்கேற்கக் கூடாது என மாவோயிஸ்ட்கள் மிரட்டல் விடுத்திருந்தனர். இதனால், மாவோயிஸ்ட்கள் தாக்கம் அதிகமுள்ள பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

    இந்நிலையில், மாவோயிஸ்ட் அச்சுறுத்தலால் ஒடிசா மாநிலத்தின் மால்கன்கிரி மாவட்டத்தில் உள்ள 2 வாக்குச்சாவடிகளில் ஒரு வாக்கு கூட பதிவாகவில்லை என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதுதொடர்பாக, தேர்தல் அதிகாரிகள் கூறுகையில், ஒடிசா மாநிலத்தில் தேர்தலில் வாக்காளர்கள் பங்கேற்கக் கூடாது என மாவோயிஸ்ட்கள் மிரட்டல் விடுத்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டன. ஆனாலும், மால்கன்கிரி மாவட்டத்தில் உள்ள இரண்டு வாக்குச்சாவடிகளில் ஒரு வாக்கு கூட பதிவாகவில்லை என தெரிவித்தனர். #LokSabhaElections2019
    பாராளுமன்ற தேர்தலில் வாக்குப்பதிவின் போது வாக்குச்சாவடிக்குள் செல்போன் பயன்படுத்த தடை விதித்து தேர்தல் கமி‌ஷன் உத்தரவிட்டுள்ளது. #LSPolls
    திருச்சி:

    தமிழகத்தில் ஏப்ரல் 18-ந்தேதி நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவின் போது கடைபிடிக்க வேண்டிய பல்வேறு விதிமுறைகளை தேர்தல் கமி‌ஷன் அறிவித்துள்ளது. அதன்படி வாக்குச்சாவடிக்குள் செல்போன் பயன்படுத்த தடை விதித்து தேர்தல் கமி‌ஷன் உத்தரவிட்டுள்ளது.

    இது குறித்து தேர்தல் கமி‌ஷன் விதிமுறைகள் குறித்து திருச்சியை சேர்ந்த தேர்தல் அதிகாரி ஒருவர் கூறியதாவது :-

    பாராளுமன்ற தேர்தலின் போது அரசியல் கட்சி வேட்பாளர்கள் உட்பட எல்லா வேட்பாளர்களின் வாக்குச் சாவடி ஏஜெண்டுகள் வாக்குச்சாவடிக்குள் செல்போன் கொண்டு செல்லக்கூடாது. வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள் மட்டுமே தங்கள் செல்போன்களை பயன்படுத்தலாம்.

    அவர்கள் செல்போனை தேர்தல் அதிகாரிகள் எந்த நேரமும் தொடர்பு கொள்வார்கள். அதே சமயம் வாக்குச் சாவடி தலைமை அலுவலர் தங்கள் தேவைகளுக்கு உடனடியாக தொடர்புடைய அதிகாரிகளுடன் மட்டும் தொடர்பு கொள்ள வேண்டும். வெளிநபர்களோ அல்லது வெளிநபர்களுக்கோ இந்த செல்போனில் இருந்து தொடர்பு கொள்ளக்கூடாது. இந்த செல்போன் எப்போதும் ஆன் செய்து இருக்க வேண்டும். வேறு செல்போன்களுக்கு வாக்குச்சாவடியில் கட்டாயமாக அனுமதியில்லை.

    அதே சமயம் செல்போன் எஸ்.எம்.எஸ். மூலம் வாக்குப் பதிவை கண்காணிக்கும் திட்டத்தை தேர்தல் கமி‌ஷன் அறிவித்துள்ளது. அதன் படி வாக்குப்பதிவை கண்காணிக்கும் வகையில் எஸ்.எம்.எஸ். குறியீடுகள் கொண்ட அட்டை, வாக்குச் சாவடி தலைமை அலுவலருக்கு முன்பாகவே வழங்கப்படும்.

    இந்த திட்டம் மூலம் வாக்குச்சாவடியின் செயல்பாடு குறித்த ஒவ்வொரு விவரமும், அதாவது முதல் நாள் வாக்குப்பதிவு அலுவலர்கள், வாக்குச்சாவடியை சென்றடைதல், வாக்குப்பதிவு பொருட்கள் சென்றடைதல், மாதிரி வாக்குப்பதிவு நடத்துதல், ஒவ்வொரு நேரத்துக்கும் அல்லது குறிப்பிட்ட இடைவெளியில் வாக்குப் பதிவு விவரம் தெரிவித்தல், முக்கிய நிகழ்வுகள் மற்றும் அசம்பாவிதங்கள் மற்றும் வாக்குப்பதிவு நிறைவடைதல் ஆகியவற்றை குறிப்பிட்ட குறியீட்டின் மூலம் வாக்குப் பதிவு தலைமை அலுவலர்கள், மாவட்ட தேர்தல் அலுவலகம் மற்றும் மாநில தலைமை தேர்தல் அலுவலகத்திலுள்ள கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிக்க வேண்டும்.

    எஸ்.எம்.எஸ். முறையில் பயிற்சி பெற ஓட்டுச்சாவடி தலைமை அலுவலர் அந்தந்த வாக்குச்சாவடியில் உள்ள வெப் கேமிரா ஆபரேட்டர் இருந்தால் அவரது உதவியுடன் தகவல்களை தெரிவிக்கலாம். அதனால் வாக்குச் சாவடி அலுவலர்கள் எஸ்.எம்.எஸ். தகவல் முறையை நன்கு அறிந்து கொண்டு அதற்குரிய வகையில் செயல்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார். #LSPolls
    மதுரையில் தேர்தல் பறக்கும் படையினர் இன்று நடத்திய வாகன சோதனையில் 40 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. #Parliamentelection #LSPolls

    மதுரை:

    வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பொருட்கள் வழங்கப்படுவதை தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

    மதுரை மாவட்டத்தில் மேலூர் சுங்கச்சாவடியில் நேற்று வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட ரூ.3.64 கோடி மதிப்பிலான தங்கம், வைரம் பறிமுதல் செய்யப்பட்டது.


    இதேபோல் திருமங்கலம் பகுதியில் ஏ.டி.எம்.களுக்கு கொண்டு செல்லப்பட்ட ரூ.1¼ கோடி பறமுதல் செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று காலை வாடிப்பட்டியில் 40 கிலோ தங்க நகைகளுடன் வந்த வாகனத்தை தேர்தல் பறக்கும் படையினர் சமயநல்லூர் பகுதியில் கைப்பற்றினர். அவை எங்கிருந்து வருகிறது? யாருக்கு கொண்டு வரப்பட்டது என்பது குறித்து விசாரணை நடக்கிறது.  #Parliamentelection #LSPolls

    செஞ்சி அருகே வாக்குச்சாவடி அமைக்காததை கண்டித்து கிராம மக்கள் தங்களது வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    செஞ்சி:

    செஞ்சி அருகே காமகரம் கிராமம் உள்ளது. இங்கு 950-க்கு மேற்பட்ட வாக்களார்கள் உள்ளனர். ஆனால் இந்த கிராம மக்கள் பக்கத்து ஊரான சேபேட்டை கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடிக்கு சென்றுதான் வாக்களிக்க வேண்டும். எனவே தங்கள் ஊருக்கு தனிவாக்குசாவடி அமைக்க வேண்டும் அவ்வாறு அமைக்கவில்லை என்றால் தேர்தலை புறக்கணிப்போம் என்று அறிவித்தனர்.

    இதையொட்டி செஞ்சி தாசில்தார் தலைமையில் சமாதான கூட்டம் நடந்தது. அதில் முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் காமகரம் கிராம மக்கள் தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் நேற்று தங்கள் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றினர்.

    தகவல் அறிந்த செஞ்சி துணை போலீஸ் சூப்பிரண்டு நீதிராஜ், இன்ஸ்பெக்டர் கவிதா, சப்-இன்ஸ்பெக்டர் ஜெயராமன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று கிராம மக்களிடம் பேசினார்கள். கருப்பு கொடியை அகற்றுமாறு கேட்டுகொண்டனர்.

    அதன்படி கிராம மக்கள் தங்களது வீடுகளில் ஏற்றிய கருப்பு கொடிகளை அகற்றினர். தங்களது பிரச்சனைகுறித்து விழுப்புரம் மாவட்ட கலெக்டரை சந்தித்து மனு கொடுப்போம் அதன்பிறகும் தங்களது கிராமத்தில் தனி வாக்கு சாவடி அமைக்காவிட்டால் தேர்தலை புறக்கணிப்போம் என்று அவர்கள் தெரிவித்தனர். #tamilnews
    வருகிற நாடாளுமன்ற தேர்தலில் யாருக்கு வாக்களித்தோம் என்பதை சரிபார்க்கும் ஒப்புகைச் சீட்டு எந்திரங்கள் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பொருத்தப்படும் என்று ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. #ElectionCommission #HighCourt
    சென்னை:

    சென்னை அண்ணாநகரை சேர்ந்தவர் வக்கீல் பாக்யராஜ். இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:-

    மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்களில் மோசடி செய்ய முடியும் என்ற குற்றச்சாட்டு நாடு முழுவதும் பரவலாக எழுந்துள்ளது. அதனால், யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்ய, வாக்கு சரிபார்க்கும் ஒப்புகைச் சீட்டு எந்திரம் பொருத்த வேண்டும் என்று கடந்த 2013-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால், இந்த வசதிகளை வாக்குச்சாவடிகளில் ஏற்படுத்தப்படவில்லை.

    தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுதியில், ஒரு வாக்குச் சாவடியில் மட்டும் வாக்கு சரிபார்க்கும் எந்திரம் நிறுவப்படும் என்று தேர்தல் ஆணையம் கூறுவதை ஏற்க முடியாது. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் இந்த எந்திரத்தை பொருத்த வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையத்துக்கு மனு அனுப்பினேன். இதுவரை சரியான பதில் அளிக்கவில்லை.

    கோவா சட்டமன்ற தேர்தலில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் இந்த எந்திரத்தை பயன்படுத்திய நிலையில், வரும் பாராளுமன்ற தேர்தலில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் இந்த எந்திரத்தை பொருத்த உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

    இந்த வழக்கை நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் நேற்று விசாரித்தனர். அப்போது, தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வக்கீல், ‘ஒப்புகை சீட்டு எந்திரத்தை பொருத்தும் நடைமுறையை படிப்படியாக மேற்கொள்ளவே சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. கடந்த 2017-ம் ஆண்டு அனைத்துக்கட்சி கூட்டம் நடந்தது. அதில், விரைவில் வர இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் நூறு சதவீதம் இந்த எந்திரத்தை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது’ என்று கூறினார். இதை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.
    நாமக்கல் மாவட்டத்தில் நேற்று 661 வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாம் நடந்தது.
    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டத்தில் நேற்று 661 வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாம் நடந்தது. நாமக்கல்லில் நடந்த முகாமை சப்-கலெக்டர் கிராந்திகுமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    நாமக்கல் மாவட்டத்தில் 1.1.2019-ஐ தகுதி நாளாக கொண்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்த பணிகள் கடந்த 1-ந் தேதி முதல் நடைபெற்று வருகிறது.

    இந்த சிறப்பு சுருக்கமுறை திருத்தப்பணிகளின் போது 18 வயது பூர்த்தியடைந்த, அதாவது 31.12.2000-ம் அன்றோ அல்லது அதற்கு முன்னரோ பிறந்த அனைவரும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க படிவம்-6 விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, உரிய ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலகங்கள், உதவி வாக்காளர் பதிவு அலுவலகங்கள் மற்றும் அருகாமையில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் அளிக்கலாம். மேலும் வாக்காளர்களின் தேவைக்கேற்ப பெயர் நீக்கம் செய்வதற்கான படிவம்-7, திருத்தம் செய்வதற்கான படிவம்-8 மற்றும் ஒரே சட்டமன்ற தொகுதிக்குள் இடமாற்றம் செய்ய படிவம்-8 ஏ ஆகியவற்றினையும் அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

    வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தப்பணியை முன்னிட்டு 4 ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு முகாம்கள் நடத்தவும் இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு இருந்தது. அதன்படி நாமக்கல் மாவட்டம் முழுவதும் உள்ள 661 வாக்குச்சாவடி மையங்களில் நேற்று சிறப்பு முகாம் நடைபெற்றது.

    நாமக்கல் நகராட்சிக்கு உட்பட்ட கொண்டிசெட்டிபட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மற்றும் வகுரம்பட்டி அரசு நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த முகாமினை நாமக்கல் சப்-கலெக்டர் கிராந்திகுமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது அவர் முகாமில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம், முகவரி மாற்றத்திற்கான படிவங்கள் தேவையான அளவு உள்ளதா ? என்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் திருத்தப்பணிகள் மேற்கொள்வதற்காக வாக்குச்சாவடி மையத்திற்கு வந்திருந்த விண்ணப்பதாரர்களின் படிவங்களையும் பார்வையிட்டும் ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வின்போது நாமக்கல் தாசில்தார் செந்தில்குமார் உள்பட அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர். மேலும் நாமக்கல் கோட்டை நகரவை தொடக்கப் பள்ளியிலும் சிறப்பு முகாம் நடைபெற்றது.
    ×