search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 104469"

    சண்முகாபுரத்தில் வாலிபரை ஓட, ஓட விரட்டி வெட்டிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

    புதுச்சேரி:

    புதுவை சண்முகாபுரம் வடக்கு பாரதிபுரம் முருகன் கோவில் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மகன் சதீஷ்குமார் (வயது19). இவர் அதே பகுதியில் கஞ்சா வியாபாரம் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பை சேர்ந்த கனகராஜ்(29) என்பவர் சதீஷ்குமாரிடம் கஞ்சா வாங்கி உள்ளார். ஆனால் அதற்குண்டான பணத்தை கனகராஜ் கொடுக்கவில்லை. இதனால் அன்று மாலை இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த சதீஷ்குமார் கனகராஜை தாக்கி உள்ளார்.

    இதனால் சதீஷ்குமாரை பழிதீர்க்க கனகராஜ் எண்ணினார். தனது கூட்டாளிகளான சண்முகாபுரத்தை சேர்ந்த பன்னீர்செல்வம் (19), பூபதி (19) மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 3 பேருடன் சதீஷ்குமாரை கொலை செய்ய திட்டம் தீட்டினர்.

    இதையடுத்து சதீஷ்குமார் அந்த பகுதியில் நின்றிருந்த போது கனகராஜ் உள்ளிட்ட 4 பேரும் சேர்ந்து சதீஷ்குமாரை சரமாரியாக தாக்கினர். மேலும் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து சதீஷ்குமாரை வெட்ட பாய்ந்தனர். இதனால் உயிருக்கு பயந்து சதீஷ்குமார் அங்கிருந்து தப்பி ஓடினார். ஆனால் அந்த கும்பல் சதீஷ்குமாரை ஓட,ஓட விரட்டி வெட்டியது. கத்தியால் கழுத்தை அறுத்தது. இதில் ரத்த வெள்ளத்தில் சதீஷ்குமார் மயங்கி விழுந்ததும் அந்த கும்பல் அங்கிருந்து சென்று விட்டது.

    ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்த சதீஷ்குமாரை மேட்டுப்பாளையம் போலீசார் மீட்டு கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக சதீஷ்குமார் ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    இதுதொடர்பாக வடக்கு பகுதி மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குபதிவு செய்து கனகராஜ், பன்னீர்செல்வம், பூபதி, மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 வீச்சறிவாள், 2 மோட்டார் சைக்கிள்கள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.

    திருச்சி மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதியிடம் இருந்து 200 கிராம் கஞ்சா, 2 சிம்கார்டுகள் ஆகியவற்றை சிறை வார்டன்கள் பறிமுதல் செய்தனர்.
    திருச்சி:

    சென்னை சிந்தாமணி அண்ணாநகரை சேர்ந்தவர் சங்கர்(வயது 32). ஆயுள்தண்டனை கைதியான இவர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை சங்கரை புழல் சிறையில் இருந்து திருச்சி மத்திய சிறைக்கு மாற்றினார்கள். சென்னை ஆயுதப்படை போலீசார் அவரை பலத்த பாதுகாப்புடன் திருச்சிக்கு அழைத்து வந்தனர். திருச்சி மத்திய சிறையில் அடைப்பதற்காக கொண்டு செல்லப்பட்டபோது, சிறையின் நுழைவு வாயிலில் சங்கரிடம் சிறை வார்டன்கள் சோதனை நடத்தினார்கள்.

    அப்போது அவர் தனது உடைக்குள் 200 கிராம் கஞ்சா, 2 சிம்கார்டுகள் ஆகியவற்றை மறைத்து வைத்து இருந்தது தெரியவந்தது. உடனே அவற்றை சிறை வார்டன்கள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தனர். பின்னர் சிறை வார்டன் ரமேஷ் கே.கே.நகர் போலீஸ் நிலையத்தில் கைதியிடம் கஞ்சா மற்றும் சிம்கார்டுகள் பறிமுதல் செய்தது குறித்து புகார் அளித்தார். அதன்பேரில் கே.கே.நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 
    ஆந்திராவில் இருந்து சூட்கேசில் கஞ்சா கடத்தி வந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. #ChennaiAirport
    பூந்தமல்லி:

    சென்னையை அடுத்த போரூர் சிக்னல், ஆற்காடு சாலையில் ஆட்டோவில் வந்து இறங்கிய பெண் ஒருவர் கையில் சூட்கேசுடன் அங்குள்ள விடுதியில் அறை எடுத்து தங்குவதற்காக சென்றார்.

    அப்போது அங்கு மோட்டார்சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் அந்த பெண்ணிடம் சூட்கேசை கேட்டு தகராறில் ஈடுபட்டனர். இதை தட்டி கேட்க பொதுமக்கள் கூடியதால் ஆத்திரம் அடைந்த மர்ம நபர்கள் கையில் மாட்டியிருந்த இரும்பு வளையத்தை எடுத்து அந்த பெண்ணின் முகத்தில் கிழித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.

    இதையடுத்து, பொதுமக்கள் அந்த பெண்ணை மீட்டு போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது பற்றி தகவல் தெரியவந்ததும் வளசரவாக்கம் உதவி கமிஷனர் சம்பத், இன்ஸ்பெக்டர் முத்துராஜா ஆகியோர் தலைமையில் போலீசார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டனர்.

    இதில் அந்த பெண் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த ரேணுகா (வயது 23) என்பதும், அவர் வைத்திருந்த சூட்கேசில் கஞ்சா பொட்டலங்கள் இருந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து அந்த பெண்ணிடம் விசாரித்தபோது தனக்கும் அந்த சூட்கேசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் தான் ஒரு பட்டதாரி என்றும் தெரிவித்தார்.

    இருப்பினும் போலீசாருக்கு அந்த பெண்ணின் மீதான சந்தேகம் விலகாததால் அவரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தினர். அதில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்தன. இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-

    ஆந்திர மாநிலத்தை சேர்ந்த ரேணுகா ஏற்கனவே ஆந்திரா போலீசாரால் 2 முறை கைது செய்யப்பட்டவர்.

    ரேணுகா அடைக்கப்பட்டிருந்த அதே சிறையில் சென்னை செம்மஞ்சேரி பகுதியை சேர்ந்த கஞ்சா வியாபாரியான முத்துலட்சுமி (65) என்பவரும் அடைக்கப்பட்டிருந்தார். இவர் ஆந்திராவில் கஞ்சா வாங்க சென்றபோது ஆந்திர போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர்.

    சிறையில் இருந்தபோது ரேணுகாவிற்கும், முத்துலட்சுமிக்கும் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இருவரும் ஜாமீனில் வெளியே வந்தனர். ரேணுகா வழக்கில் சிறைக்கு சென்றதால் அவருடைய பெற்றோர் அவரை வீட்டில் சேர்த்துக்கொள்ளவில்லை. இதனால் முத்துலட்சுமி, ரேணுகாவை சென்னைக்கு அழைத்து வந்து பெரும்பாக்கத்தில் உள்ள தன்னுடைய வீட்டில் தங்கவைத்தார்.

    அப்போது அதே பகுதியை சேர்ந்த பிரபல கஞ்சா வியாபாரியான தேவசகாயத்துக்கும், ரேணுகாவுக்கும் காதல் மலர்ந்தது. இதையடுத்து அவர்கள் இருவருக்கும் முத்துலட்சுமி திருமணம் செய்துவைத்தார். அவர்களுக்கு திருமணம் ஆகி சில வருடங்கள் ஆகியும் இதுவரை குழந்தை இல்லை.

    ரேணுகாவிற்கு சொந்த ஊர் ஆந்திர மாநிலம் என்பதால் அங்கிருந்து சென்னைக்கு கஞ்சாவை கடத்தி வர தேவசகாயத்துக்கு அவர் உதவியாக இருந்து வந்துள்ளார். அதன் பின்னர் தேவசகாயம் மூலம் பழக்கமான நிர்மல்குமார் என்பவருக்கும் ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வந்து கொடுத்துள்ளார்.

    கஞ்சா வியாபாரத்தை காரணம் காட்டி நிர்மல்குமார் உள்பட பல ஆண்களுடன் ரேணுகா பழகி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த தேவசகாயம், ரேணுகாவுடன் சண்டை போட்டு அவரை வீட்டில் இருந்து வெளியேற்றினார். இதையடுத்து ரேணுகா நிர்மலுடன் கைகோர்த்துக்கொண்டு ஆந்திராவில் இருந்து கஞ்சாவை சென்னைக்கு கடத்தி வந்துள்ளார். இதில் ரேணுகாவிற்கு அதிகளவில் பணம் கிடைத்தது.

    இதையடுத்து கடந்த 4-ந்தேதி ஆந்திராவில் இருந்து கஞ்சாவை கடத்தி சூட்கேசில் வைத்துக்கொண்டு தனியார் சொகுசு பஸ்சில் வந்த ரேணுகா நேற்று முன்தினம் காலை சோழிங்கநல்லூரில் வந்து இறங்கினார். கஞ்சாவை வாங்குவதற்காக நிர்மல்குமார் அங்கு வர தாமதம் ஆனதால் ரேணுகா அங்கு காத்துக்கொண்டிருந்தார்.

    அப்போது கார் மற்றும் மோட்டார்சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் ரேணுகாவை காரில் ஏறும்படி கூறி உள்ளனர். இதில் பதறிப்போன ரேணுகா கூச்சல் போட்டதால் அங்கு பொதுமக்கள் கூட ஆரம்பித்ததையடுத்து அந்த மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

    இதுகுறித்து ரேணுகா செம்மஞ்சேரி போலீசில், மர்ம நபர்கள் தன்னை கடத்த முயன்றதாக புகார் அளித்ததார். ஆனால் அப்போது போலீசார் அவரிடம் இருந்த சூட்கேசை சோதனை செய்யவில்லை.

    பின்னர் ரேணுகா செம்மஞ்சேரி போலீஸ் நிலையத்தில் இருந்து ஆட்டோ மூலம் போரூருக்கு வந்தார். அப்போது அவரை பின் தொடர்ந்து வந்த அதே மர்ம கும்பல் ரேணுகாவிடம் கஞ்சா சூட்கேசை பறிக்க முயன்றனர். அப்போது பொதுமக்கள் கூடியதால் ஆத்திரம் அடைந்த அவர்கள் ரேணுகாவை தாக்கிவிட்டு தப்பி சென்றுவிட்டனர்.

    இவ்வாறு போலீசார் கூறினர்.

    ரேணுகா தன்னிடம் இருந்து பிரிந்து சென்று தனக்கு போட்டியாக கஞ்சா தொழில் செய்வதால் அவரது கணவர் தேவசகாயமே ஆள் வைத்து ரேணுகாவை கடத்தி கஞ்சாவை பறிக்க முயற்சி செய்தாரா? அல்லது தொழில் போட்டியில் வேறு யாராவது ரேணுகாவை கடத்த முயற்சி செய்தார்களா என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது. தேவசகாயம் மற்றும் நிர்மல்குமாரை கைது செய்ய போலீஸ் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

    ரேணுகாவிடம் இருந்து 30 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ள போலீசார் அவரை போதை தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்க உள்ளனர். அதனை தொடர்ந்து இந்த கஞ்சா கடத்தலில் தொடர்பு உள்ளவர்கள் யார்? யார்? என்பது முழுமையாக தெரியவரும் என கூறப் படுகிறது. #ChennaiAirport
    ஆந்திர மாநிலம் எனிகேபடு என்ற இடத்தில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட 2 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர். #AndhraPradesh #CannabisCaptured
    ஐதராபாத்:

    ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் அமைந்துள்ள பகுதி எனிகேபடு. இந்த பகுதியில் அதிக அளவிலான கஞ்சா கடத்தப்படுவதாக வருவாய்த்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த ரகசிய தகவலின் அடிப்படையில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது சந்தேகத்துக்கு இடமான 2 நபர்களை கண்ட போலீசார் அவர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். வருவாய்த்துறை மற்றும் போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த இடம் குறித்து அந்த இருவரும் தகவல் அளித்தனர்.

    இதையடுத்து அந்த இடத்துக்கு விரைந்து சென்ற காவல்துறையினர் கடத்துவதற்கு தயார் நிலையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 842.72 கிலோ எடை கொண்ட கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இந்த கஞ்சாவின் மதிப்பு 1 கோடியே 26 லட்சத்து 40 ஆயிரத்து 800 ரூபாய் என வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இதைத்தொடர்ந்து மேலும், கஞ்சா கடத்தலில் தொடர்புடையவர்களை கைது செய்யும்பொருட்டு, போலீசார் மற்றும் வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். #AndhraPradesh #CannabisCaptured
    ரகசிய தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில், சுமார் 535 கிலோ எடை கொண்ட கஞ்சாவை கடத்திய இருவரை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர். #Delhi #CannabisCaptured
    புதுடெல்லி:

    டெல்லி உள்ளிட்ட பெரு நகரங்களில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களின் உபயோகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு  வருகின்றனர்.

    இந்நிலையில், அதிக அளவிலான கஞ்சா கடத்தப்பட இருப்பதாக டெல்லி சிறப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில்,  அதிரடி சோதனையில் ஈடுபட்ட போலீசார் லாரியில் கடத்தி வரப்பட்ட சுமார் 535 கிலோ எடை கொண்ட கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.



    இதன் மதிப்பு சுமார் 50 லட்ச ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கஞ்சாவை கடத்தி வந்த 2 நபர்களை  கைது செய்த காவல்துறையினர் அவர்களின் பின்னணி குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். #Delhi #CannabisCaptured
    திருவள்ளூர் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு இருந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபிசக்கரவர்த்தி உத்தரவின்பேரில் நேற்று முன்தினம் திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் திலீப்குமார், சுரேஷ், சதாசிவம், ஆறுமுகம் ஆகியோர் கடம்பத்தூர் பஜார், கசவநல்லாத்தூர் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

    அப்போது அந்த வழியாக 2 மோட்டார் சைக்கிள்களில் 3 பேர் வேகமாக வந்தனர். அவர்கள் மீது சந்தேகம் அடைந்த போலீசார், அவர்களை நிறுத்துமாறு சைகை காட்டினர். ஆனால் அவர்கள் மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல் வேகமாக சென்றனர்.

    இதனால் மேலும் சந்தேகமடைந்த போலீசார், அந்த மோட்டார் சைக்கிள்களை விரட்டிச்சென்று மடக்கி பிடித்தனர்.

    விசாரணையில் அவர்கள், கடம்பத்தூர் வைசாலி நகரைச் சேர்ந்த மணியரசன்(வயது 19), ஆருன்பாஷா(23) மற்றும் 17 வயது சிறுவன் என்பதும், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரிந்தது. அவர்களிடம் இருந்து 15 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இதையடுத்து 3 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து 2 மோட்டார் சைக்கிள்களையும் கைப்பற்றினர். 
    சத்தீஸ்கர் மாநிலத்தில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது தேங்காய் லாரிக்குள் மறைத்து கடத்தி வரப்பட்ட 6500 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. #Chhattisgarh #CannabisCaptured
    ராய்ப்பூர்:

    சத்தீஸ்கர் மாநிலத்தின் தலைநகர் ராய்ப்பூர். இங்கு முக்கிய சாலை வழியாக அதிக அளவிலான கஞ்சா கடத்தப்படுவதாக வருவாய் புலனாய்வுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில், இன்று வருவாய் புலனாய்வு அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து, அந்த வழியாக வந்த தேங்காய் லாரியை மடக்கி அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது தேங்காய்களுக்குள் மறைத்து மூட்டை மூட்டையாக கடத்தி வரப்பட்ட கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    கைப்பற்றபட்ட கஞ்சா சுமார் 6545 கிலோ எடை கொண்டதாகும். இதுதொடர்பாக கஞ்சாவை கடத்தி வந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், இந்த கஞ்சா கடத்தலில் தொடர்பு உடையவர்கள் குறித்து கைதானவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. #Chhattisgarh #CannabisCaptured
    ரெயிலில் கடத்தி கொண்டு வரப்பட்ட 15 கிலோ ‘கஞ்சா’வை மாறுவேடத்தில் இருந்த போலீசார் பறிமுதல் செய்தனர். அதனை கடத்தி கொண்டு வந்த ஆசாமி குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ஈரோடு:

    மத்திய பிரதேச மாநிலம் தான்பாத்திலிருந்து கேரள மாநிலம் ஆலப்புலாவுக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் வந்து கொண்டிருந்தது.

    அந்த ரெயிலில் கஞ்சா கடத்தி கொண்டு வரப்படுவதாக போதை பொருள் தடுப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதனால் உஷார் அடைந்த போலீசார் மாறுவேடத்தில் கண்காணித்தனர். சேலம் மாவட்டம் வீரபாண்டியில் இருந்தே மாறுவேடத்தில் கண்காணித்தபடி இருந்தனர்.

    ஈரோடு ரெயில் நிலையத்தில் ரெயில் வந்து நின்றது. போதை பொருள் தடுப்பு போலீசார் கஞ்சா கடத்தி கொண்டு வருவதாக கூறப்பட்ட பொது பெட்டியில் ஏறி சோதனை நடத்தினர்.

    அங்கு ஒரு ‘மர்ம’ பை கிடந்தது. அதை போலீசார் பிரித்து பார்க்கும் போது அதில் 15 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    ஆனால் அதனை கடத்தி கொண்டு வந்த ஆசாமி யார் என தெரியவில்லை. இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    செந்துறை அருகே வீட்டில் கஞ்சா செடி வளர்த்த கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டார்.
    செந்துறை:

    அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள சிறுகளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் பூமாலை. இவரது மகன் வசந்தகுமார் வயது 19. இவர் உடையார் பாளையம் அருகே உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் 2-ம் ஆண்டு மெக்கானிக் என்ஜினீயரிங் படித்து வருகிறார். 

    இவரது வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்தில் கஞ்சா செடி வளர்ப்பதாக செந்துறை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதனை தொடர்ந்து செந்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன் அதிகாலையில் வசந்தகுமார் வீட்டை ஆய்வு செய்தார். அப்போது வீட்டின் பின்புறம் இரண்டு கஞ்சா செடிகள் இருப்பதை கண்டு பிடித்தார். 

    அதனை தொடர்ந்து இன்ஸ்பெக்டர் மோகன் கஞ்சா செடி வளர்த்த கல்லூரி மாணவர் வசந்தகுமாரை கைது செய்து அரியலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்.
    கோவை சரவணம்பட்டி அருகே கஞ்சா விற்ற 2 வாலிபர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    கோவை:

    கோவை சரவணம்பட்டி விசுவாசபுரம் பஸ் நிறுத்தம் அருகே 2 வாலிபர்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சரவணம்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகேந்திரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். 

    அங்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 வாலிபர்களை பிடித்து அவர்களிடம் இருந்து அரை கிலோ கஞ்சா மற்றும் பணத்தை பறிமுதல் செய்தனர். விசாரணையில் அவர்கள் தேனி மாவட்டத்தை சேர்ந்த சித்து (வயது 25), கரூரை சேர்ந்த ராஜ்குமார் (23) ஆகியோர் என்பதும் அவர்கள் தனியார் கம்பெனியில் வேலை செய்த நேரம் போக மற்ற நேரத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. 

    இதனையடுத்து போலீசார் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    ×