search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உயிரிழப்பு"

    • மாநில அரசின் சிபிசிஐடி விசாரணை அறிவிப்பு வெறும் கண்துடைப்பு தான்.
    • கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து இதுவரை 50 பேர் உயிரிழந்துள்ளனர்.

    கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து 50 பேர் பலியான சம்பவம் தமிழகம் முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் 120 போ் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவர்களில் 30 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

    இந்நிலையில் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    கள்ளக்குறிச்சி விவகாரம் தமிழகத்திற்கு மிகப்பெரிய இழப்பு. குறிப்பாக தமிழக அரசுக்கு இது மிகப்பெரிய அவமானம். இந்த பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்வது அனைவரும் அறிந்ததே ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அந்த அதிகாரிகளுக்கு என்ன தண்டனை? இந்த கள்ளச்சாராயத்தை தடுக்க தவறியது யார்?"

    என்னைப் பொறுத்தவரை மாநில அரசின் சிபிசிஐடி விசாரணை அறிவிப்பு வெறும் கண்துடைப்பு தான். இதற்கு முதல்வர் பொறுப்பேற்க வேண்டும். அமைச்சர்கள் எ.வ.வேலு, எஸ்.முத்துசாமியை பதவி நீக்கம் செய்ய வேண்டும்.

    இந்த பகுதியில் உள்ள இரண்டு எம்.எல்.ஏ.க்களை உடனடியாக கைது செய்ய வேண்டும். சட்டவிரோத மதுபான விற்பனையில் சங்கராபுரம் எம்.எல்.ஏ. உதயசூரியன் இருப்பதால் அவர் இந்த சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபடும் நபர்களை பாதுகாத்து வருகிறார்.

    கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து இதுவரை 50 பேர் உயிரிழந்துள்ளனர். மருத்துவராக பலி எண்ணிக்கை 60 ஆக உயரும் என்று நினைக்கிறேன். நோயாளிகளை காப்பாற்ற மாற்று மருந்து இல்லை. எஸ்பி மற்றும் கலெக்டர் மீது எப்ஐஆர் பதிவு செய்ய வேண்டும். கள்ளச்சாராய விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று கூறினார்.

    • தமிழகத்தில் சிறுவர்கள் கைகளில் கஞ்சா, நடுத்தர வயதுடையவர்களிடம் டாஸ்மாக்.
    • விசாரணை கமிஷன் அமைத்தாலும், அதிகாரிகளை மாற்றினால் இழந்த உயிர்கள் இழந்ததுதான்.

    சென்னை:

    உலகம் முழுவதும் சர்வதேச யோகா தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. அந்த வகையில் 10-வது சர்வதேச யோகா தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் மயிலாப்பூரில் பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    மயிலாப்பூர் நாகேஸ்வரராவ் பார்க்கில் யோகா பயிற்சியை இப்பகுதி மக்களுடன் சேர்ந்து செய்வதற்காக பாஜக சார்பில் ஏற்பாடு செய்து இருந்தோம்.

    கட்சி நிர்வாகி அனுமதி கேட்டு கடிதம் கொடுத்துள்ளனர். நேற்று இரவு யோகா பயிற்சிக்கு அனுமதி இல்லை என்று சொல்லிவிட்டனர். இன்று காலை வழக்கமாக நாகேஸ்வரராவ் பார்க்கில் பயிற்சி செய்பவர்களையும் வர விடாமல் பார்க்கை மூடி விட்டனர். மிகவும் சிறுபிள்ளைத்தனமான அரசாங்கத்தின் நடவடிக்கையாக இதை பார்க்கிறோம்.

    சர்வதேச யோகா தினத்தில் மக்களோடு இணைந்து கட்சி நிர்வாகிகளும் ஆதரவாளர்களும் மக்களுடன் சேர்ந்து யோகா செய்வதில் என்னவாகி விடப்போகிறது.

    தமிழக அரசு எதற்கெல்லாம் கவனம் கொடுக்க வேண்டுமோ அதற்கு எல்லாம் கவனம் கொடுக்கவில்லை.

    கள்ளக்குறிச்சியில் நடந்திருக்கக்கூடிய சம்பவம் அத்தனை பேரின் மனதையும் உலுக்கிக்கொண்டிருக்கிறது. கள்ளச்சாராய சாவை தடுக்க முடியவில்லை. கள்ளச்சாராயம் விற்கும் கட்சியினரை கட்டுப்படுத்த முடியவில்லை. ஆனால் யோகா செய்யும் கட்சி நிர்வாகிகளை, சாதாரணமாக வரும் பொதுமக்களையும் பார்க்கை பூட்டி வைத்து தடை செய்யக்கூடியதுதான் இந்த அரசாங்கம் நிலைமை.

    உங்கள் தவறுகளை பேசும் எதிர்க்கட்சிகளை முடக்க நினைத்து பார்க்கில் செய்யும் யோகா நிகழ்ச்சிகளை தடை செய்கிறீர்கள்.

    பா.ஜக. சார்பில் இன்று தமிழகம் முழுவதும் யோகா பயிற்சி செய்பவர்களுடன் இணைந்து கட்சி நிர்வாகிகள் பயிற்சியை மேற்கொண்டு வருகிறார்கள். சர்வதேச யோகா தினத்தில் ஒவ்வொரு பகுதிகளிலும் எத்தனையோ முயற்சி எடுத்து யோகா செய்யும் தன்னார்வலர்களுக்கு என்னுடைய பாராட்டுகள். யோகா பயிற்சியை மேற்கொள்ளும் மக்களுக்கும் என்னுடைய வாழ்த்துகள்.

    தமிழகத்தில் பெண்களும் மதுப்பழக்கத்திற்கு ஆளாகிக்கொண்டிருக்கிறார்கள் என்பதை பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

    இது எங்கு நடக்கிறது என்று பார்த்தால் குறிப்பாக, உடல் உழைப்பை சார்ந்து உள்ள சமுதாயத்தில் உடல் வலியை மறக்க, மறைப்பதற்காக என்று நினைத்துக்கொண்டு இந்த மது பழக்கத்திற்கு ஆளாகி கொண்டிருக்கிறார்கள்.

    இன்று தமிழகத்தில் சிறுவர்கள் கைகளில் கஞ்சா, நடுத்தர வயதுடையவர்களிடம் டாஸ்மாக், வறுமை இருக்கக்கூடிய மக்கள் இருக்கும் பகுதிகளில் ஆளும்கட்சிக்காரர்களின் துணையுடன் விலை குறைவாக இருக்கும் கள்ளச்சாராயம் ஆறாக போய்க்கொண்டிருக்கிறது.

    இது முதல் தடவை இல்லை. ஒரு வருடத்திற்குள் இப்படி ஒரு சம்பவம் நடக்கிறது என்றால் மாநிலத்தின் முதல்வருக்கு தம்முடைய துறையின் மீது கட்டுப்பாடு இல்லை என்று அர்த்தம். ஆளுங்கட்சி பிரமுகர்களின் ஆதரவால்தான் இதுபோன்ற சம்பவம் நடந்து கொண்டிருக்கிறது.

    விசாரணை கமிஷன் அமைத்தாலும், அதிகாரிகளை மாற்றினால் இழந்த உயிர்கள் இழந்ததுதான்.

    ஒவ்வொரு தெருவுக்கும் மதுக்கடைகளை திறந்துவைத்தும் கூட இன்று கள்ளச்சாராயம் இந்த நிலைக்கு வந்திருக்கிறது என்றால் மாநில அரசு யாருடைய பாக்கெட்டை நிரப்ப ஏழைகள், அப்பாவிகளின் உயிரை பழிவாங்கிக்கொண்டிருக்கிறார்கள் என்று பதில் சொல்ல வேண்டும் என்று கூறினார்.

    • மோப்பநாய் ராஜாவுக்கு 30 குண்டுகள் முழங்க இறுதி மரியாதை செலுத்தப்பட்டது.
    • முதுமலையில் ஜனாதிபதி கலந்து கொண்ட நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டது.

    சூலூர்:

    கோவை மாவட்ட ஆயுதப்படை பிரிவில் 7 மோப்ப நாய்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த நாய்கள் கொலை, கொள்ளை, வெடிகுண்டு கண்டுபிடிப்பு ஆகிய சம்பவங்களுக்கு பயன்படுத்தப்பட்டு வந்தது.

    வெடிகுண்டு கண்டுபிடிக்கும் பிரிவில் கடந்த 3 ஆண்டுகளாக லேப்ரடார் வகையை சேர்ந்த ராஜா என்ற மோப்பநாய் பயன்படுத்தப்பட்டு வந்தது.

    இந்த மோப்ப நாய் கடந்த ஒருவார காலமாக உடல் சரியில்லாமல் இருந்து வந்தது. சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் உயிரிழந்தது. உயிரிழந்த மோப்ப நாய்க்கு கோவை மாவட்ட ஆயுதப்படை டி.எஸ்.பி. தென்னரசு தலைமையில் இறுதி சடங்கு நடந்தது.

    அப்போது மோப்பநாய் ராஜாவுக்கு 30 குண்டுகள் முழங்க இறுதி மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் சூலூர் போலீஸ் நிலையத்தில் உள்ள துப்பறியும் மோப்ப நாய் பிரிவு வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

    உயிரிழந்த மோப்ப நாய் ராஜா சென்னையில் நடந்த சுதந்திர தின விழா, நீலகிரி மாவட்டம் முதுமலையில் ஜனாதிபதி கலந்து கொண்ட நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டது.

    அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் ஓட்டு போட்டு விட்டு திரும்பிய 2 பேர் திடீரென இறந்தனர்.
    கரூர்:

    கரூர் மாவட்டம் தென்னிலை பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 49). தி.மு.க. கிளை செயலாளர். அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தென்னிலை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடியில் நேற்று காலை வாக்களித்து விட்டு சக்திவேல் வெளியே வந்தார்.

    அப்போது திடீரென அவர் நெஞ்சை பிடித்து கொண்டு மயங்கி கீழே விழுந்தார். இதை கண்ட அங்கிருந்தவர்கள் உடனடியாக சக்திவேலை ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இருப்பினும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

    ஓட்டப்பிடாரம் அருகே உள்ள பாஞ்சாலங்குறிச்சியை சேர்ந்தவர் மாடசாமி (வயது 60), கூலி தொழிலாளி. இவர் நேற்று மதியம் சிலோன் காலனி பகுதியில் அமைக்கப்பட்டு இருந்த வாக்குச்சாவடிக்கு ஓட்டு போட சென்றார்.

    அவர் ஓட்டுப்போட்டு விட்டு வெளியே வந்தார். வாக்குச்சாவடியில் இருந்து 100 மீட்டர் தூரம் சென்றபோது, திடீரென மாடசாமி மயங்கி விழுந்தார். உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை வீட்டுக்கு அழைத்து சென்றனர். ஆனால் அதற்குள் மாடசாமி பரிதாபமாக இறந்து விட்டார்.
    சேலம் அருகே வாக்குச்சாவடி பயிற்சி முகாமில் ஆசிரியை மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் குறித்து காரிப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் தேவனூர் அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தவர் வடிவேலு மனைவி நித்யா (வயது 34). இவர் சேலம் அருகே மின்னாம்பள்ளியில் ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் நேற்று நடந்த வாக்குச்சாவடி முகவர்களுக்கான பயிற்சி முகாமில் கலந்து கொண்டார். அப்போது அவர் மயங்கி விழுந்தார்.

    இதை பார்த்ததும் அருகில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் அழைத்து வந்தனர். ஆனால் வரும் வழியில் நித்யா பரிதாபமாக இறந்தார். இதுபற்றி காரிப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தேனி அருகே வேன் மீது பஸ் மோதிய விபத்தில் வளைகாப்பு நிகழ்ச்சிக்கு சென்று திரும்பிய 6 பேர் பலியானார்கள்.

    தேனி:

    தேனியை சேர்ந்தவர் வெற்றியரசன் (வயது 50). இவருடைய மகள் பவித்ரா (28). இவருக்கு திருமணமாகி 3 வயதில் யாசிகா என்ற பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் மீண்டும் கர்ப்பமான பவித்ராவுக்கு நேற்று போடியில் வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது. இதற்காக வெற்றியரசன் தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் ஒரு வேனில் போடிக்கு சென்றார். வேனை செல்வக்குமார் (23) ஓட்டினார்.

    வளைகாப்பு நிகழ்ச்சி முடிந்தவுடன், பவித்ராவை அழைத்துக்கொண்டு வெற்றியரசனின் குடும்பத்தினரும், உறவினர்களும் வேனில் தேனிக்கு திரும்பி வந்து கொண்டு இருந்தனர். போடி-தேனி சாலையில், கோடாங்கிபட்டி அருகே கண்ணிமைக்கும் நேரத்தில் ஒரு தனியார் பஸ், வெற்றியரசன் குடும்பத்தினர் வந்த வேன் மீது மோதியது.

    இந்த கோர விபத்தில் வேனில் பயணம் செய்த வெற்றியரசன், அவருடைய அண்ணன் சிற்றரசன் (55), உறவினர்கள் சரஸ்வதி (65), பேச்சியம்மாள் (65) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். வேனில் பயணம் செய்த கர்ப்பிணி பவித்ரா, அவருடைய மகள் யாசிகா, லீட்டா (10), சுருளியம்மாள் உள்பட 15 பேர் பலத்த காயம் அடைந்தனர். விபத்து நடந்த இடத்தில் வளைகாப்பு நிகழ்ச்சியில் இருந்து கொண்டு வந்த உணவுகள், வளையல் உள்ளிட்ட பொருட்கள் சாலையில் சிதறிக்கிடந்தன.

    இதுகுறித்த தகவல் அறிந்ததும் போலீசாரும், தீயணைப்பு மற்றும் மீட்பு படை வீரர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில், லீட்டா, சுருளியம்மாள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால், பலி எண்ணிக்கை 6 ஆக அதிகரித்தது.

    விபத்தை ஏற்படுத்திய தனியார் பஸ் டிரைவர் கண்ணன் (35) தப்பி ஓடிவிட்டார். பின்னர், அவர் போலீசில் சரண் அடைந்தார். அவரை போலீசார் கைது செய்தனர். விபத்து நடந்ததை அறிந்ததும் அருகில் உள்ள கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் அங்கு திரண்டு வந்து விபத்தை ஏற்படுத்திய பஸ் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர். அங்கு வந்த போலீசார், பஸ் கண்ணாடியை உடைத்ததாக வாலிபர் ஒருவரை பிடித்து போலீஸ் வேனில் ஏற்ற முயன்றனர். உடனே பொதுமக்கள் வாக்குவாதம் செய்ததால் அவரை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.

    விபத்தில் பலியான சிற்றரசன், வெற்றியரசன் இருவரும் தி.மு.க.வை சேர்ந்தவர்கள். விபத்து நடந்தபோது, போடியில் இருந்து தேனி நோக்கி துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஜெயபிரதீப் தனது காரில் வந்து கொண்டு இருந்தார். விபத்தில் படுகாயங்களுடன் கிடந்தவர்களை பார்த்ததும், தனது காரை நிறுத்தி அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். பின்னர் அவரும், அவருடன் வந்தவர்களும் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

    புளியந்தோப்பில் வீடு இடிந்து தாய்-மகள் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி விசாரணை நடத்தி வருகிறார்.
    பெரம்பூர்:

    புளியந்தோப்பு கன்னிகாபுரம் நியூ காலனியில் காசியப்பன் என்பவருக்கு சொந்தமான வீட்டில் வாடகைக்கு இருப்பவர் வெங்கடேசன் (வயது 32). இவர் ஒரு தனியார் செல்போன் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

    நேற்று இரவு இவர் தனது மனைவி சஞ்சிதா (28), மகள் யுவஸ்ரீ (7), மகன் கிருஷ்ணகுமார் (3) ஆகியோருடன் வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்தார். அப்போது திடீரென்று வீட்டின் மேல்பகுதி இடிந்து விழுந்தது. இதில் சஞ்சிதா, யுவஸ்ரீ ஆகியோர் அதே இடத்தில் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

    படுகாயம் அடைந்த வெங்கடேசன், கிருஷ்ணகுமார் ஆகியோர் அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    விபத்து குறித்து புளியந்தோப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி விசாரணை நடத்தி வருகிறார்.

    திருவோணம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருவோணம்:

    தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள சில்லத்தூர் சிவபுரம் கிராமத்தை சேர்ந்தவர் பால்சாமி (வயது40). விவசாயி. இவர் இரவு மூவர் சாலையில் இருந்து திருவோணம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    திருவோணம் ஆஸ்பத்திரி பிரிவு சாலை அருகே சென்று கொண்டிருந்தபோது அதே சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த காட்டாத்தி கிராமத்தை சேர்ந்த ரெங்கன் (65) என்பவர் மீது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மோதியது.

    இதில் ரெங்கன், பால்சாமி ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர். அவர்களை அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதில் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே ரெங்கன் இறந்தார். பால்சாமி படுகாயத்துடன் தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்து வமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    அங்கு சிகிச்சை பெற்று வந்த பால்சாமியும் நேற்று காலை பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து திருவோணம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மேகநாதன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஜம்மு-காஷ்மீர் மாநிலம், கத்துவா மாவட்டத்தில் உள்ள ராணுவ முகாமில் இன்று கியாஸ் சிலிண்டர் வெடித்த விபத்தில் ஒரு வீரர் உயிரிழந்தார். #Soldierkilled #cylinderblast #Kathuacamp
    ஜம்மு:

    ஜம்மு-காஷ்மீர் மாநிலம், கத்துவா மாவட்டத்தில் உள்ள ஜங்லோட் ராணுவ முகாமில் இன்று சமையலுக்காக கியாஸ் சிலிண்டர்களை கொண்டு சென்றபோது ஒரு சிலிண்டர் திடீரென்று வெடித்த விபத்தில் டார்ஜீலிங் பகுதியை சேர்ந்த நாயக் தீபக் டுவாங்(36) என்ற வீரர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இந்த விபத்து தொடர்பாக துறைரீதியான விசாரணை முடிந்து, தீபக் டுவாங்கின் உடல் அவர் சார்ந்திருந்த படைப்பிரிவு (பட்டாலியன்) உயரதிகாரிகளிடம் இன்றிரவு ஒப்படைக்கப்பட்டது. இதே விபத்தில் காயமடைந்த மற்றொரு வீரர் சிகிச்சை பெற்று வருகிறார். #Soldierkilled #cylinderblast #Kathuacamp 
    மேற்கு ஆப்பிரிக்கா நாடுகளில் ஒன்றான கானாவின் தென்பகுதியில் இன்று இரு பேருந்துகள் நேருக்குநேராக மோதிய விபத்தில் 60 பேர் உயிரிழந்தனர். #60killed #Ghanabuscollision #buscollision
    அக்ரா:

    கானா நாட்டின் தெற்கு பகுதியில் சமீபத்தில் கிழக்கு போனோ என்னும் தனி மாகாணம் உருவாக்கப்பட்டது.

    இந்த மாகாணத்தின் வழியாக சென்ற இரு பேருந்துகள் நேருக்குநேராக மோதிய விபத்தில் 60 பேர் உயிரிழந்ததாக கிழக்கு போனோ போலீஸ் உயரதிகாரி ஜோசப் அன்ட்வி கியாவு தெரிவித்துள்ளார். 

    அம்போமா நகரின் அருகே நடந்த இவ்விபத்தில் காயமடைந்த சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். #60killed #Ghanabuscollision #buscollision
    சீனாவின் கிழக்கு பகுதியில் உள்ள பிரபல தொழிற்பேட்டையில் ரசாயன தொழிற்சாலையில் இன்று ஏற்பட்ட வெடி விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். #Chinahemicalplant #chemicalplantblast
    பீஜிங்:

    கிழக்கு சீனாவில் உள்ள ஜியாங்சு மாகாணத்துக்குட்பட்ட யான்செங் நகரில் மிகப்பெரிய தொழிற்பேட்டை ஒன்று அமைந்துள்ளது. இங்கு பலவிதமான தொழிற்சாலைகள் நூற்றுக்கணக்கில் இயங்கி வருகின்றன.

    இந்நிலையில், (உள்ளூர் நேரப்படி) இன்று பிற்பகல் சுமார் 3 மணியளவில் இந்த தொழிற்பேட்டையில் உள்ள ஒரு ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தால் அந்த கட்டிடம் பயங்கரமாக தீபிடித்து எரிந்தது.

    பயிர்களுக்கான பூச்சிக்கொல்லி மருந்து தயாரிக்கும் அந்த தொழிற்சாலையில் இருந்து வேகமாக பரவிய தீயால் அருகாமையில் உள்ள தொழிற்சாலைகளும் பலத்த சேதமடைந்தன. தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் தொழிற்சாலைகளுக்குள் சிக்கித் தவித்த பலரை மீட்டனர்.

    இந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். மிகவும் தீவிரமான தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட சுமார் 30 பேர் அருகாமையில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். #Chinahemicalplant #chemicalplantblast 
    கர்நாடகா மாநிலத்தின் தார்வாட் பகுதியில் 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை இன்று 10 ஆக அதிகரித்துள்ளது. #DharwadBulidingCollapse
    பெங்களூரு:

    கர்நாடகம் மாநிலம் தார்வாட் மாவட்டத்தில் உள்ள குமரேஷ்வர் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கட்டுமான பணிகள் நடைபெற்று வந்தன.

    கட்டுமான பணிகள் நடைபெற்று வந்த 4 மாடி கட்டிடம் கடந்த 19-ம் தேதி திடீரென இடிந்து விழுந்தது. கட்டிட இடிபாடுகளில் பலர் சிக்கிக் கொண்டனர்.
     
    தகவலறிந்து அங்கு போலீசாரும், தீயணைப்பு படையினரும் விரைந்து சென்று இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    இதற்கிடையே, கட்டிட விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர் என்றும், பலர் படுகாயம் அடைந்ததாகவும் அன்றிரவு முதல்கட்ட தகவல் வெளியானது.

    நேற்று நடைபெற்ற மீட்பு பணிகளின் போது 2 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்தார். இதையடுத்து, கட்டிட விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்தது.

    தொடர்ந்து நடைபெற்றுவரும் மீட்பு பணியில் மேலும் 5 பிரேதங்கள் கண்டெடுக்கப்பட்டதால் இந்த விபத்தில் பலி எண்ணிக்கை இன்று பத்தாக அதிகரித்துள்ளது. இடிபாடுகளுக்குள் 12 முதல் 15 பேர் இன்னும் சிக்கி இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதாக மீட்பு குழுவினர் தெரிவித்தனர். #DharwadBulidingCollapse
    ×