search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குப்பை"

    ஆவடி நகராட்சி பகுதிகளில் குப்பைகள் குவிந்து சுகாதார கேடு ஏற்பட்டு உள்ளது.

    ஆவடி:

    ஆவடி நகராட்சியில் ஆவடி, பருத்திப்பட்டு, விளிஞ்யம்பாக்கம், திருமுல்லைவாயல், தண்டுரை, சேக்காடு, அண்ணனூர், பட்டாபிராம், கோவில்பாதாகை, மிட்டின மல்லி, முத்தாபுதுப்பேட்டை ஆகிய பகுதிகள் உள்ளன.

    இங்கு சுமார் 4 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். தினமும் நகராட்சி பகுதிகளில் சுமார் 140 டன் குப்பைகள் சேர்கின்றன.

    இவ்வாறு நகராட்சி முழுவதும் 4200டன் குப்பைகள் மாதந்தோறும் சேருகின்றன. குப்பைகளை 170 நகராட்சி ஊழியர்கள் மற்றும் 700 ஒப்பந்த ஊழியர்கள் அள்ளி வருகின்றனர். மேலும், அந்த குப்பைகளை ஊழியர்கள் சேக்காட்டில் உள்ள குப்பை கிடங்கில் கொட்டி வருகின்றனர்.

    இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக நகராட்சி பகுதிகளில் குப்பைகள் சரி வர அள்ளப்படுவதில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

    இதுகுறித்து அவர்கள் கூறும்போது, “முக்கிய சாலைகள், தெருக்களில் குப்பைகள் ஆங்காங்கே குவிந்து கிடக்கிறது. பல இடங்களில் சாலைகளில் வைக்கப்பட்ட குப்பை தொட்டிகளில் குப்பைகள் நிறைந்து வழிகிறது.

    அந்த குப்பைகள் காற்றில் பறந்து சாலைகளில் சிதறி கிடக்கின்றன. அச்சாலைகளில் வேகமாக வாகனங்கள் செல்லும் போது குப்பைகள் காற்றில் பறந்து கடைகள், வீடுகளுக்குள் விழுகிறது.

    சாலை, தெருக்களில் குவிந்து கிடக்கும் குப்பைகளால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. தெருக்களில் தேங்கி கிடக்கும் குப்பைகளில் கொசுக்கள் உற்பத்தி ஆகிவருகிறது.

    தனியார் ஒப்பந்த நிறுவனத்தின் அலட்சிய போக்கால் ஆவடி நகராட்சி பகுதிகளில் குப்பைகள் குவிந்து சுகாதார கேடு ஏற்பட்டு உள்ளது. இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரிகளும் மெத்தனமாகவே உள்ளனர். இது தொடர்பாக பொது நலச்சங்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பல முறை புகார் கூறியும் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பது இல்லை.

    எனவே, நகராட்சி உயர் அதிகாரிகள் குப்பைகளை உடனுக்குடன் அள்ளவும், சுகாதார சீர்கேட்டை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    எஸ்.பட்டினம் ஊராட்சியில் தெருக்களில் தேங்கிக்கிடக்கும் குப்பையால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
    தொண்டி:

    திருவாடானை யூனியன் எஸ்.பி.பட்டினம் ஊராட்சியில் 9 வார்டுகளும், 25-க்கும் மேற்பட்ட தெருக்களும் உள்ளன. இங்கு 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த ஊராட்சியில் அடிப்படை சுகாதாரம் பாதுகாக்கப்படாத நிலையில் தொற்று நோய்களின் பிறப்பிடமாக இருந்து வருகிறது.

    இதனால் அடிக்கடி டெங்கு போன்ற காய்ச்சல் பாதிப்புகளுக்கு பொதுமக்கள் ஆளாகி வருகின்றனர். இதுகுறித்து முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் முகமது முக்தார் கூறியதாவது:- திருவாடானை யூனியனில் எஸ்.பி.பட்டினம் ஊராட்சி அதிக மக்கள் தொகை கொண்ட பகுதியாகும். இதனால் இங்கு அதிகஅளவில் குப்பைகள் சேருவது வழக்கம். இந்த குப்பைகளை சேகரிக்க தினமும் துப்புரவு பணியாளர்கள் வீதி வீதியாக சென்றால் பொதுமக்கள் தெருவில் கொட்டாமல் பணியாளர்களிடம் கொடுப்பார்கள்.

    ஆனால் இந்த ஊராட்சியில் போதிய துப்புரவு பணியாளர்கள் இல்லாததுடன் குப்பைகளை சேகரிக்க வாகனங்களும் இல்லாமல் உள்ளது. இதனால் தூய்மை காவலர்கள் இங்குள்ள குப்பைகளை சேகரிக்க வாரம் ஒரு முறைதான் ஒரு வீதிக்கு வருகின்றனர். இதன் காரணமாக வீடுகளில் சேரும் குப்பைகளை ஆங்காங்கே கொட்டி விடுகின்றனர். குப்பையை உடனுக்குடன் அப்புறப்படுத்த வேண்டிய ஊராட்சி நிர்வாகம் அதனை சரியாக செய்வதில்லை.

    இனிமேல் அதிகாரிகளை நம்பி பயனில்லை என்பதால் எஸ்.பி.பட்டினத்தில் பொதுமக்களுக்கு சேவை செய்துவரும் பொது நல சங்கங்கள் மூலம் குப்பைகளை சேகரித்து அப்புற படுத்தவும், பொதுசுகாதாரத்தை பாதுகாக்கவும் ஏற்பாடு செய்து வருகிறோம். மாவட்ட கலெக்டர் எஸ்.பி.பட்டினத்திற்கு நேரில் வந்து இங்குள்ள அடிப்படை சுகாதாரத்தை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.
    கோயம்பேடு மார்க்கெட்டில் மலைபோல் குவிந்த குப்பை கழிவுநீர் துர்நாற்றத்தால் வியாபாரிகள் மற்றும் பொது மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.

    சென்னை:

    சென்னை கோயம்பேடு மொத்த விற்பனை மார்க்கெட்டில் காய்கறி, பழங்கள், பூக்கள் விற்பனை தினமும் மும்முரமாக நடந்து வருகிறது. சென்னை, புறநகர் பகுதிகளை சேர்ந்த பல ஆயிரக்கணக்கான சிறு வியாபாரிகள் தினமும் மார்க் கெட்டுக்கு வந்து காய்கறி, பழங்கள், பூக்களை வாங்கி சென்று வருகிறார்கள்.

    இங்கு வருகை தரும் வியாபாரிகளின் வாகனங்களை நிறுத்துவதற்காக மார்க்கெட் வளாகத்தில் உள்ள காலி இடத்தில் ‘பார்க்கிங்’ வசதி செய்யப்பட்டுள்ளது. தற்போது இந்த ‘பார்க்கிங்’ இடத்தில் சரிவர பராமரிப்பு பணி இல்லாததால் மழைநீர் தேங்கி சுகாதாரக்கேடு ஏற்பட்டு வருகிறது. மேலும் ஆங்காங்கே மலை போல் குப்பைகள் குவிந்துள்ளன.

    இதனால் அங்கு கொசுக்கள் உற்பத்தியாகி வருகின்றன. மேலும் பூ மார்க் கெட்டில் உள்ள கழிவுகள் அங்கு கொட்டப்படுவதால் துர்நாற்றம் வீசுகிறது.

    பூ மார்க்கெட்டில் மொத்தம் 470 சிறிய, பெரிய பூக்கடைகள் உள்ளன. இங்குள்ள கழிவு பூக்கள் திறந்த வெளி ‘பார்க்கிங்’ இடத்தில் கொட்டப்பட்டு வருவதால் அங்கு வரும் வியாபாரிகள், பொதுமக்கள் துர்நாற்றம் மற்றும் கொசுத் தொல்லையால் அவதிப்பட்டு வருகிறார்கள்.

    இதனால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தில் குப்பைகள், மழைநீர், கழிவுநீர் தேக்கம் ஆகியவற்றை உடனடியாக அகற்ற மார்க்கெட் மேலாண்மை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    அங்கு வடிகால் வசதி அமைக்க வேண்டும் என்று வியாபாரிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    தினமும் கால்வாயில் குப்பை கொட்டும் 100 பேருக்கு அதிக அளவில் அபராதம் விதிக்குமாறு கவர்னர் கிரண்பேடி உத்தரவிட்டுள்ளார். #PondicherryGovernor #Kiranbedi

    புதுச்சேரி:

    வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள புதுவை கவர்னர் கிரண்பேடி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளார்.

    புதுவையின் கிராமப்புற பகுதிகளில் 23 வாய்க்கால்களை சுமார் 84 கி.மீ. தூரம் தூர்வாரப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து நகர பகுதியில் மழை நீர் தேங்காமல் இருக்க கழிவு நீர் வாய்க்கால்கள், கால்வாய்களை தூர்வாரும் பணி நடந்து வருகிறது.

    இந்த பணிகளை கவர்னர் கிரண்பேடி நேரடியாக ஆய்வு செய்து வருகிறார். பெரும் பாலும் வாய்க்காலில் பிளாஸ்டிக் குப்பைகள் அடைக்கப்பட்டு தண்ணீர் வெளியேற முடியாமல் அடைக்கப்பட்டு இருந்தது.

    ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன்பு கவர்னர் கிரண்பேடி வாய்க்கால்களை ஆய்வு செய்த போதும் பிளாஸ்டிக் கழிவுகள் அதிக அளவில் அடைத்து இருந்தது. இதனால், வாய்க்கால்களில் குப்பை கொட்டினால் அபராதம் விதிக்கும்படி கவர்னர் கிரண்பேடி உத்தரவிட்டார்.

     


    ஆனால், இந்த அபராதம் விதிப்பு அமல் படுத்தப்படவில்லை. இதே நிலை தற்போதும் நீடிப்பது கவர்னர் கிரண்பேடியை கோபம் அடைய செய்துள்ளது. இதனால் தினமும் வாய்க்காலில் குப்பை கொட்டும் 100 பேருக்கு அதிக அளவில் அபராதம் விதிக்குமாறு கவர்னர் கிரண்பேடி உத்தரவிட்டுள்ளார்.

    புதுவை கவர்னர் மாளிகையில் பொதுப்பணித்துறை பல்நோக்கு ஊழியர்கள், நகராட்சி ஊழியர்கள் ஆகியோரை அழைத்து கவர்னர் கிரண்பேடி மழைக் கால பணிகள் குறித்து கலந்துரையாடினார். அப்போது ஊழியர்களுக்கு சில ஆலோசனைகளையும் வழங்கினார்.

    இதனையடுத்து எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பாக கவர்னர் கிரண்பேடி வாட்ஸ்அப்பில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:-

    தூர்வாரப்பட்ட கழிவுநீர் கால்வாயில் தண்ணீர் செல்கிறது. கால்வாயில் குப்பை கொட்டினால் திங்கள் முதல் அபராதம் விதிக்கலாம். நகராட்சி ஆய்வாளர்கள் இதை நடைமுறைப்படுத்தலாம். நாள்தோறும் 100 பேர் வரை இம்முறையில் அபராதம் விதிக்கலாம். குப்பை கொட்டுவோர் மீது அதிகளவு அபராதம் விதியுங்கள். இது இறுதி எச்சரிக்கை.

    இவ்வாறு கிரண்பேடி அந்த பதிவில் கூறியுள்ளார். #PondicherryGovernor #Kiranbedi

    தொட்டகாஜனூரில் ரோட்டோரம் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
    தாளவாடி:

    தாளவாடி அருகே உள்ள தொட்டகாஜனூர் பகுதியில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இந்தப்பகுதிக்கு மெட்டல்வாடி ரோட்டோரத்தில் உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டியில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது அந்த குடிநீர் தொட்டியின் கீழ் குப்பைகள் மலைபோல் குவிந்து கிடக்கிறது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது.

    இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், தொட்டகாஜனூர் பகுதியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இங்கு குடிநீர் வழங்குவதற்காக மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டப்பட்டது. தற்போது அந்த குடிநீர் தொட்டி புதர்மண்டி காணப்படுகிறது. மேலும் குப்பைகளும் குவிந்து கிடக்கிறது. இதனால் சுற்றுச் சூழல் மாசு அடைவதோடு, சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது. மேலும் விஷப்பூச்சிகளின் நடமாட்டமும் உள்ளது. இதேபோல் தொட்டகாஜனூர் பகுதியில் உள்ள சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கி நிற்கிறது.

    இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு, மலேரியா உள்பட பல்வேறு நோய்கள் பரவுகிறது. இதேபோல் அந்த குடிநீர் தொட்டியின் அருகில்தான் அங்கன்வாடி மையம், மக்கள் நலவாழ்வு மையமும் உள்ளது. இதனால் அங்கன்வாடி மையம் செல்லும் குழந்தைகளுக்கு சுவாச கோளாறுகள் ஏற்படுகிறது.

    அதனால் மெட்டல்வாடி ரோட்டில் உள்ள குடிநீர் தொட்டியின் அருகே வைக்கப்பட்டுள்ள குப்பைத்தொட்டியை வேறு இடத்தில் வைக்க வேண்டும். மேலும் ரோட்டோரம் குவிந்து கிடக்கும் குப்பைகளை உடனடியாக அகற்றுவதோடு, கழிவுநீர் தங்கு தடையின்றி செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். 
    தமிழக வனப்பகுதியில் குப்பைக்கழிவுகளை கொட்டிய கேரள கும்பலை போலீசார் கைது செய்தனர்.

    கூடலூர்:

    தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் குமுளி மலைச்சாலையில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது கம்பம் மேற்கு வனச்சரகத்துக்கு உட்பட்ட வனப்பகுதியில் அதிக அளவு குப்பைக் கழிவுகள் இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து பொதுமக்களிடம் விசாரித்த போது கேரள பகுதியான குமுளியில் ஏராளமான ஓட்டல், லாட்ஜ்கள் உள்ளன. இங்கிருந்தும் குடியிருப்பு பகுதியில் இருந்தும் அதிக அளவு குப்பைகளை தமிழக வனப்பகுதியில் கொட்டிச் செல்வதாக ஆதங்கம் தெரிவித்தனர். எனவே போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட எஸ்.பி. உத்தரவிட்டார்.

    அதன்படி தனிப்படை போலீசார் தீவிரரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அரசு போக்குவரத்து கழக பணிமனை பின்புறம் வனப்பகுதியில் 2 பேர் குப்பைகளை கொட்டியுள்ளனர்.

    அவர்களை மடக்கி பிடித்த போலீசார் விசாரித்ததில் அந்த நபர்கள் குமுளியைச் சேர்ந்த வர்க்கீஸ் (வயது 53), ரபீக் (20) என தெரிய வந்தது. அவர்களை கைது செய்த போலீசார் அவர்கள் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.

    இது குறித்து போலீஸ் அதிகாரிகள் தெரிவிக்கையில், வனப்பகுதியில் குப்பைகள் கொட்டுவதை கண்காணிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் வனத்துறையினருடன் இணைந்து கண்காணித்து வருகின்றனர்.

    குப்பைகளை கொட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர்.

    பெங்களூருவில் பொது இடங்களில் குப்பை வீசினால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று துணை முதல்-மந்திரி பரமேஸ்வரா எச்சரிக்கை விடுத்துள்ளார். #Parameshwara
    பெங்களூரு :

    பெங்களூரு மாநகராட்சி அதிகாரிகளுடன் துணை முதல்-மந்திரி பரமேஸ்வரா நேற்று பெங்களூருவில் ஆலோசனை நடத்தினார். இதில் மேயர் கங்காம்பிகே, மாநகராட்சி கமிஷனர் மஞ்சுநாத் பிரசாத் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் குப்பை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண்பது குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த கூட்டத்திற்கு பிறகு பரமேஸ்வரா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    நகரில் சிலர் கண்ட இடங்களில் குப்பைகளை வீசுகிறார்கள். இதனால் குப்பை குவிக்கப்படும் பகுதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதை தடுக்கும் பொருட்டு, பொது இடங்களில் குப்பைகளை வீசினால், அபராதமாக ரூ.500 விதிக்க மாநகராட்சி அனுமதி கேட்டுள்ளது. இதற்கு மாநில அரசு விரைவில் அனுமதி வழங்கும். பொது இடங்களில் குப்பை வீசினால் ரூ.500 அபராதம் விதிப்பதுடன் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    கண்ட இடங்களில் குப்பைகளை வீசுபவர்களை பிடிக்க ஒவ்வொரு வார்டுக்கும் ஒரு ஓய்வுபெற்ற ராணுவ வீரரை நியமிக்க முடிவு செய்துள்ளோம். குப்பைகளை அகற்றும்படி மாநகராட்சிக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதை நான் வரவேற்கிறேன். குப்பைகளை அகற்றும் பணி தற்போது நல்ல முறையில் நடந்து வருகிறது. தேங்கிய குப்பைகள் அகற்றப்பட்டுள்ளது.

    பெங்களூருவில் 1.30 கோடி மக்கள் வசிக்கிறார்கள். 29 லட்சம் வீடுகளும், 5 லட்சம் வணிக நிறுவன கட்டிடங்களும் உள்ளன. நகரில் தினமும் மொத்தம் 5,700 டன் குப்பைகள் சேருகின்றன. இதில் வீடுகளில் இருந்து 4,200 டன் குப்பைகள் சேகரமாகிறது. குப்பைகளை அகற்ற 4,213 ஆட்டோ டிப்பர்கள் வீடு, வீடாக சென்று குப்பைகளை சேகரிக்கின்றன. 566 குப்பை சேகரிக்கும் லாரிகள், 8 தானியங்கி தூய்மை எந்திரங்கள் செயல்பாட்டில் உள்ளன.

    நகரில் 18 ஆயிரத்து 500 துப்புரவு தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். 11 இடங்களில் உயிரி எரிவாயு தயாரிக்கும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. குப்பையை சேகரிக்கும் லாரிகளுக்கு ஜி.பி..எஸ். கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. ஆட்டோக்களுக்கு அத்தகைய தொழில்நுட்பத்தை பொருத்துவது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது.

    புதிய குப்பை லாரிகள் மற்றும் ஆட்டோக்களை வாங்கும்போது, அவற்றை பராமரிக்கும் பொறுப்பை ஒப்பந்ததாரர்களே நிர்வகிக்கும் அம்சம் சேர்க்கப்படும். புதிதாக தூய்மைபடுத்தும் எந்திரங்களை வாங்க டெண்டர் விடப்படும். இப்போது பெல்லஹள்ளியில் உள்ள குப்பை கிடங்கு மூடப்படும். அதற்கு பதிலாக தொட்டபள்ளாபுராவில் குப்பை கிடங்கு நவீனபடுத்தப்படும்.

    குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் 6 மாதத்திற்குள் அமல்படுத்தப்படும். பிடதியில் அமைக்கப்பட்டு வரும் மின் உற்பத்தி நிலையம் இன்னும் சில நாட்களில் திறக்கப்படும். குப்பையை பிரச்சினையை கவனிக்க ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஒரு செயற்பொறியாளர் நியமிக்கப்படுவார்.

    இவ்வாறு பரமேஸ்வரா கூறினார். #Parameshwara
    கடற்கரையில் குப்பைகளை வீசினாலோ, பொது இடத்தில் சிறுநீர் கழித்தாலோ அபராதம் விதிக்க நேரிடும் என்று கவர்னர் கிரண்பேடி எச்சரிக்கை விடுத்துள்ளார். #PondicherryGovernor #Kiranbedi

    புதுச்சேரி:

    புதுவை கடற்கரைக்கு வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் தாங்கள் கொண்டு வரும் பிளாஸ்டிக் கழிவுகளை வீசி விட்டு செல்கின்றனர். அவ்வாறு வீசப்படும் பிளாஸ்டிக் கழிவுகள் பாறை குவியல்களுக்குள் சிக்கி கொள்கின்றன.

    மேலும் இந்த பிளாஸ்டிக் கழிவுகள் (கேரி பேக்குகள்) காற்றில் அடித்து செல்லப்பட்டு கடலில் கலக்கிறது.

    அதோடு கடற்கரை பகுதி முழுவதும் பிளாஸ்டிக் கலந்து அலங்கோலமாக காட்சி அளிப்பது அன்றாட நிகழ்வுகளாகி விட்டன. இதனால் பிளாஸ்டிக் கேரி பேக்குகளை முழுவதுமாக தடை செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    இந்த நிலையில் கவர்னர் கிரண்பேடி நேற்று அதிகாலை கடற்கரை சாலையில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது கடற்கரை சாலை முழுவதும் பிளாஸ்டிக் குப்பைகள் குவிந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    உடனடியாக துப்புரவு தொழிலாளர்கள், நகராட்சி ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்களை வரவழைத்து துப்புரவு பணியில் ஈடுபட்டார்.

    தொடர்ந்து 3 மணி நேரம் கவர்னர் கிரண்பேடி துப்புரவு தொழிலாளர்களுடன் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டார்.

    இதுகுறித்து கவர்னர் கிரண்பேடி சமூக வலைதளத்தில் தனது கருத்தை பதிவு செய்துள்ளார். அதன் விவரம் வருமாறு:-

    புதுவையில் தூய்மை, பாதுகாப்பு, பராமரிப்புக்காக கடற்கரையில் இனி கூடுதலாக போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள். மேலும் கடற்கரையில் கூடுதலாக ஸ்வட்ச் பாரத் துப்புரவு தொழிலாளர்கள் துப்புரவு பணியில் ஈடுபடுவார்கள்.

    கடற்கரையில் குப்பைகளை வீசாமல் இருக்க, ரோந்து செல்லும் போலீசார் பொதுமக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை செய்வார்கள். அதனையும் மீறி குப்பைகளை வீசினாலோ, பொது இடத்தில் சிறுநீர் கழித்தாலோ அபராதம் விதிக்க நேரிடும்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார். #PondicherryGovernor #Kiranbedi
    குன்னூர் உழவர்சந்தை அருகே குப்பை கிடங்கு அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    குன்னூர்:

    குன்னூர் நகர பகுதியான 8-வது வார்டில் உழவர் சந்தை இயங்கி வருகிறது. இதன் அருகே நகராட்சி டவுன் சோலா மைதானம் உள்ளது. இங்கு கடந்த காலத்தில் பூங்கா அமைக்கப்பட்டிருந்தது. அது காலப்போக்கில் முட்புதர்கள் வளர்ந்து காடுகளாக மாறியது.

    விளையாட்டு மைதானத்தில் சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் பல்வேறு விளையாட்டுகளை விளையாடி வருகின்றனர். இந்த மைதானத்தில் ஒரு பகுதியில் குடிநீர் கிணறு உள்ளது.

    இந்த குடிநீர் கிணற்றில் இருந்து அருகில் உள்ள காமராஜபுரம், ராக்பி, ரேலி காம்பவுண்ட், எல்.ஐ.சி. காலனி, முனிசிபால் லைன், பழைய ஆஸ்பத்திரி லைன், ராஜாஜி நகர் மற்றும் ஹேர்வுட் பகுதிகளுக்கு விணியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    இப்பகுதிகளில் சுமார் 5000-க்கு மேற்ப்பட்ட குடியிருப்புகளும் தோட்ட தொழிலாளர்களின் தலைமை அலுவலக வங்கியும் செயல்பட்டு வருகிறது.

    தனியார் தங்கும் விடுதி, உழவர் சந்தை, பொது மக்களின் கூட்டுறவு மண்எண்ணை பங்க், மேலும் பள்ளி கூடங்கள், தனியார் மருத்துவமணை, கோவில்கள், சர்ச்சுகள், குறிப்பாக நீலகிரி பாராளுமன்ற உறுப்பினரின் அலுவலகமும் உள்ளது.

    இதனை கண்டு கொள்ளாத குன்னூர் நகராட்சி அதிகாரிகள் உழவர் சந்தை அருகில் உள்ள விளையாட்டு மைதானத்தில் குப்பை கிடங்கு அமைக்க பணிகள் நடைபெற்று வருவதால் அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளில் பொதுமக்களுக்கும், குழந்தைகளுக்கும் தொற்று நோய் பரவும் சூழ்நிலையும், சிறிய வகை பூச்சிகளும், புழுக்களும், ஈ, கொசுகளும் உண்டாகி பொதுமக்களை அச்சுறுத்தி நோய்களை ஏற்படுத்தும் என்றும் இதனை நகராட்சி நிறுத்தி வேறு இடத்திற்கு மாற்ற கோரி அப்பகுதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொது மக்கள் ரேலி காம்பவுண்ட்டில் உள்ள கேரள சமாஜம் கலை அரங்கில் கூட்டத்தை நடத்தினர்.

    இதில் இந்த குப்பை கிடங்கை நகராட்சி உடனே நிறுத்தி வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்றும் அனைத்து மக்களும் குன்னூர் ஆணையர் மற்றும் மாவட்ட கலெக்டரிடம் மனுவை கொடுத்து அந்த பணிகளை வேறு இடத்திற்கு மாற்ற கோரிக்கை வைப்பதென்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இதில் ஏராளமான பெண்களும் சமூக ஆர்வலர்களும் மருத்துவர்களும் வக்கீல்களும் கலந்து கொண்டனர்.

    இந்த குப்பை கிடங்கை மாற்றும் வரை மக்கள் பல்வேறு விதத்தில் கண்டனம் தெரிவித்து போராட்டங்களை நடத்த முடிவு செய்துள்ளனர்.

    போடியில் பரபரப்பு துர்நாற்றம் வீசும் குப்பைகளால் மாணவர்களுக்கு ஆபத்து

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி அருகே போடியில் ஜ.க.நி ஆரம்ப பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை சுமார் 1,000மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றன. இந்தபள்ளியின் அருகே தினசரி காய்கறி மார்க்கெட் உள்ளது.

    அதன் அன்றாட குப்பைகளை இந்த பள்ளியின் சுற்றுச்சுவர் பகுதிகளில் குப்பைகளை நகராட்சி சேகரிக்கின்றன. குப்பைகளால் மிகுந்த துர்நாற்றம் வீசுகின்றது. துர்நாற்றம் வீசுவதால் தொற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.

    பள்ளியில் பயிலும் சிறு வயது குழந்தைகள் என்பதால் குப்பைகளின் துர்நாற்றத்தினால் அடிக்கடி குழந்தைகளுக்கு வயிற்றுப் போக்கு, வாந்தி, மூச்சுத் திணறல், காய்ச்சல் ஏற்படுகின்றது.

    கல்வி கற்கும் குழந்தைகள் நோய்களால் பாதிக்கப்படுவதால் கல்வி தரம் பாதிக்கப்படுகிறது.

    எனவே நகராட்சியும், பள்ளி நிர்வாகவும் சேர்ந்து குப்பைகள் சேகரிக்கும் இடத்தை வேறொரு இடத்திற்கு மாற்றி அந்த இடங்களில் மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க வேண்டும் என பொதுமக்களும், குழந்தைகளின் பெற்றோர்களும், சமூக ஆர்வலர்களும் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.

    கடைகள், வணிக நிறுவனத்தினர் குப்பைகளை சாலையில் தூக்கி வீசினால் அபராதம் விதிக்கப்படும் என்று ஜெயங்கொண்டம் நகராட்சி ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் நகராட்சி எல்லைக்குட்பட்ட கடை மற்றும் வணிக நிறுவனங்கள், மளிகை, பெட்டிகடைகள், ஓட்டல்கள், கடைவீதியில் உள்ள அனைத்து வியாபாரிகளும் தங்கள் கடை மற்றும் நிறுவனங்களில் சேரும் குப்பைகளை சாலையில் தூக்கி வீசாமல் நகராட்சி வாகனம் வரும்போதோ அல்லது துப்புரவு பணியாளர் களிடமோ குப்பைகளை சேகரித்து வைத்து கொடுத்து நகரின் தூய்மை காக்க உதவ வேண்டும்.

    மேலும் உரிமையாளர்கள் தாங்கள் கடை மற்றும் நிறு வனங்களின் முன்பு குப்பைகள் போடுவதற்கான ஒரு பேரல் அல்லது பக்கெட்டுகளை வைத்து அதில் அன்றாட சேரும் குப்பைகளை சேகரிக்க வேண்டும். பின்னர் அதனை நகராட்சி வாகனம் வரும் நேரத்தில் கொடுத்து உதவ வேண்டும். அவ்வாறு இல்லாமல் நீங்கள் சாலையில் தூக்கி வீசப்படும் காகிதம், பாலித்தீன் பைகள், அட்டைகள் உள்ளிட்ட குப்பைகள் காற்றில் சென்று அது மற்றவர் வீடு மற்றும் கடைகளில் உள்ளே சென்று சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் மட்டுமல்லாமல் சாக்கடை வாய்க்காலில் விழுந்து தேக்கத்தை ஏற்படுத்தி துர்நாற்றம் வீசி நோய் பரவும் அபாயம் ஏற்படும். எனவே நகரை தூய்மை காக்க அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

    மேலும் ரோட்டில் குப்பைகளை போட கூடாது என்பதற்காக அனைத்து கடை மற்றும் வணிக நிறுவனங்களுக்கு முறையாக நோட்டீஸ் வழங்கப்பட்டு பின்னர் கண்காணிக்கபடும். அதனை மீறி குப்பைகளை சாலையில் தூக்கி வீசும் பட்சத்தில் அந்த கடை மற்றும் வணிக நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு அதன் உரிமையாளர்களிடம் இருந்து அபராத தொகை வசூலிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார். 
    நகரின் பொது இடங்களில் குப்பைகளை கொட்டினால் ரூ.25 ஆயிரம் வரை அபராத தொகை விதிக்கப்படும் என பெருநகர சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
    சென்னை:

    உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கடந்த ஆண்டு சட்டசபையில் பேசும்போது, சுத்தத்தை பேணி பாதுகாக்கும் வகையில் பொது இடத்தில் குப்பைகள் மற்றும் கழிவுநீர் கொட்டி அசுத்தப்படுத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்திருந்தார்.

    இதையடுத்து பொது சுகாதார சட்டத்தின் கீழ், பொது இடங்களில் குப்பை மற்றும் கழிவுகளை வீசுபவர்களுக்கு விதிக்கப்பட்டு வந்த அபராத தொகை உயர்த்தப்பட்டது.

    இதற்கான கொள்கை குறிப்புகளும் உருவாக்கப்பட்டன. இந்த நிலையில் பொது இடங்களில் குப்பைகள் மற்றும் கழிவுகளை வீசுபவர்களுக்கு கண்டிப்புடன் அபராதம் விதிக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது. அதன்படி, தெருக்களில் குடியிருப்புவாசிகள், வியாபாரிகள் குப்பை கொட்டினால் ரூ.1,000, வணிக வளாக உரிமையாளர் குப்பை வீசினால் ரூ.2 ஆயிரம் அபராதமாக வசூலிக்கப்பட உள்ளது.

    இதேபோல பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்துபவர்கள் குப்பைகளை வீசினால் ரூ.25 ஆயிரம், சாலையோர வியாபாரிகள் குப்பை போட்டால் ரூ.100, சாலையோரங்களில் சிறுநீர் கழித்தால் ரூ.100 என அபராத தொகை விதிக்கப்படும் என பெருநகர சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

    நகரின் தூய்மையை கருத்தில் கொண்டு இதனை தீவிரமாக செயல்படுத்த முடிவு செய்துள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். #tamilnews
    ×