search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேனீக்கள்"

    • தேனீக்கள் கூட்டம் படையெடுத்து, அங்கு நின்ற சுற்றுலா பயணிகளை விரட்டி விரட்டி கொட்ட தொடங்கியது.
    • தேனீக்கள் கொட்டியதில் படுகாயம் அடைந்த 11 பேர் 108 ஆம்புலன்ஸ் மூலம் ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

    ஊட்டி:

    கேரள மாநிலம் திருச்சூரில் இருந்து பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு சுற்றுலா வந்தனர்.

    ஊட்டியில் பல்வேறு சுற்றுலா தலங்களை பார்வையிட்ட அவர்கள் அரசு தாவரவியல் பூங்காவுக்கு வந்தனர்.

    அங்கு இத்தாலியன் பூங்கா பகுதியில் பூத்து குலுங்கிய மலர்களை பள்ளி மாணவ, மாணவிகள் கண்டு ரசித்து கொண்டிருந்தனர்.

    அப்போது அங்கிருந்த தேன்கூடு களைக்கப்பட்டதாக தெரிகிறது.

    இதையடுத்து தேனீக்கள் கூட்டம் படையெடுத்து, அங்கு நின்ற சுற்றுலா பயணிகளை விரட்டி விரட்டி கொட்ட தொடங்கியது. கேரளாவில் இருந்து வந்த மாணவ-மாணவிகள், ஆசிரியர்களை தேனீக்கள் கொட்டியது. இதனால் அவர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

    மேலும் அவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு ஓடி சென்று ஒளிந்து கொண்டனர்.

    அப்போது சிலர் என்ன செய்வது என்று தெரியாமல் தேனீக்களிடம் இருந்து தப்பிக்க இத்தாலியன் பூங்கா பகுதியில் இருந்த குட்டையில் குதித்தனர். அங்கு தண்ணீரின் குளிர் தாங்க முடியாமல் சுற்றுலா பயணிகள் சத்தம் போட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    பின்னர் தேனீக்கள் கூட்டம் அங்கிருந்து சென்றது. இதையடுத்து தேனீக்கள் கொட்டியதில் படுகாயம் அடைந்த 11 பேர் 108 ஆம்புலன்ஸ் மூலம் ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

    அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. ஒருவர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் சிகிச்சை முடிந்து 11 பேரும் சொந்த ஊருக்கு திரும்பினர். இதற்கிடையே தேனீக்கள் இருந்த கூட்டை கலைத்தது யார் என்று தாவரவியல் பூங்கா நிர்வாகத்தினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஊத்துக்கோட்டை அருகே மலைப்பகுதியில் தேனீக்கள் கொட்டியதில் 10 பேர் படுகாயமடைந்து மயக்கம் அடைந்தனர்.
    ஊத்துக்கோட்டை:

    திருவள்ளூரை சேர்ந்தவர்கள் வேலாயுதம், சண்முகம். இவர்கள் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் என்ற அமைப்பை நடத்தி வருகிறார்கள்.

    இவர்கள் திருவள்ளூர் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த சுமார் 40 பேருடன் பூண்டியை அடுத்த கூடியம் பகுதியில் உள்ள அடர்ந்த காட்டு பகுதியில் இருக்கும் சுமார் 50 ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் கற்கால மனிதர்கள் வாழ்ந்ததாக கூறப்படுகின்ற குகைக்கு சுற்றுலா சென்றனர்.

    அப்போது குகை அருகே இருந்த தேன் கூட்டின் மீது யாரோ கல் எறிந்ததால் தேனீக்கள் கலைந்தன. அவை படை எடுத்து சரமாரியாக சுற்றுலா வந்தவர்களை விரட்டி, விரட்டி கொட்டின.

    இதில் வேலாயுதம், சண்முகம், திருவள்ளூரை சேர்ந்த வக்கீல் எழில் அரசன், தீபக், செழியன், கல்யாணி, இவரது மகள் பவதாரணி, சிறுவானூரை சேர்ந்த ஹரிணி உள்பட 10 பேர் படுகாயம் அடைந்து மயக்கம் அடைந்தனர். மற்றவர்கள் அங்கிருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் வரை ஓட்டம் பிடித்ததால் தப்பினர்.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் ஊத்துக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரதாசன், இன்ஸ்பெக்டர் அனுமந்து ஆகியோர் தலைமையில் போலீசார் மற்றும் கட்சூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்கள், செவிலியர்கள் கூடியம் குகைக்கு விரைந்து சென்றனர். தேனீக்கள் கொட்டி வலியால் துடித்து கொண்டிருந்த வேலாயுதம் உட்பட 10 பேரையும் மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக பென்னாலூர்பேட்டை போலீசார் சுற்றுலா அழைத்து சென்ற வேலாயுதம் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


    போச்சம்பள்ளி அருகே தேனீக்கள் கொட்டி மூதாட்டி பலியான சம்பவம் குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    போச்சம்பள்ளி:

    கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்துள்ள புளியம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மனைவி லட்சுமி (வயது70).

    இவர் நேற்று வீட்டின் அருகேயுள்ள தென்னந்தோப்பில் தென்னை ஓலையை பின்னி கொண்டிருந்தார்.

    அப்போது அங்கிருந்த தேனீக்கள் எதிர்பாராத விதமாக லட்சுமியை சூழ்ந்து கொட்டியது. இதில் வலி தாங்க முடியாமல் அவர் அலறினார்.

    இதை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

    நள்ளிரவு 1 மணி அளவில் சிகிச்சை பலனின்றி லட்சுமி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இந்த சம்பவம் குறித்து போச்சம்பள்ளி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே தேனீக்கள் கொட்டியதில் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
    சென்னிமலை:

    ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே உள்ள மொரட்டுப்பாளையம் காவேரி நகரை சேர்ந்தவர் கருப்புசாமி (வயது 58).

    வீட்டில் கண் திருஷ்டிக்காக வைக்கப்படும் ஆகாச கிழங்குகளை இவர் சேகரித்து திருப்பூர், ஈரோடு பகுதிகளில் விற்பனை செய்து வந்தார்.

    இவரும் மேலும் 2 பேரும் சேர்ந்து துலுக்கம்பாளையம் பகுதியில் சுப்பிரமணி என்பவரது தோட்டத்தில் உள்ள தென்னை மரத்தில் தேனீக்கள் தேன் கூடு கட்டி இருந்ததை கண்டனர்.

    இந்த கூட்டை அழித்து தேன் எடுக்க சுப்பிரமணியத்திடம் அனுமதி கேட்டு தேன் கூட்டை அழித்து தேன் சேகரித்து கொண்டிருந்தனர்.

    தேனீக்களை விரட்டியடிக்கும் ஒருவித பொடியை தூவி தேன் எடுத்த போது கருப்புசாமியை தேனீக்கள் சூழ்ந்து சரமாரியாக கொட்டியது.

    இதில் மயங்கி விழுந்த கருப்புசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இவருக்கு குஞ்சாள் (55) என்ற மனைவியும், சுரேஷ் என்ற ஒரு மகனும், பூங்கொடி என்ற ஒரு மகளும் உள்ளனர்.

    கருப்புசாமியின் உடல் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது.
    தென் ஆப்பிரிக்காவின் கடற்கரை நகரான டர்பன் விமான நிலையத்தில் விமான என்ஜினில் கூடுகட்டிய தேனீக்களை நிபுணர்கள் பத்திரமாக வெளியேற்றினர். #Bees #SouthAfricanPlanes
    டர்பன்:

    தென் ஆப்பிரிக்காவின் கடற்கரை நகரான டர்பன் விமான நிலையத்தில் மேங்கோ ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான ஒரு பயணிகள் விமானம் புறப்பட தயாராக இருந்தது. அப்போது என்ஜினில் இருந்து தேனீக்கள் வெளியே வந்து பறந்தன.

    அதை பார்த்த விமானி ஒருவர் விமான என்ஜினில் சோதனை செய்தார். அங்கு தேனீ கூடு கட்டி இருந்தது தெரிய வந்தது. உடனே தேனீ நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அவை அங்கிருந்து அகற்றப்பட்டன. மொத்தம் 20 ஆயிரம் தேனீக்கள் அப்புறப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

    இதனால் அங்கிருந்து புறப்பட வேண்டிய 3 பயணிகள் விமானம் தாமதமாக புறப்பட்டு சென்றன. விமான என்ஜினில் தேனீக்கள் கூடு கட்டுவது இல்லை. இது மிகவும் அபூர்வமானது என நிபுணர்கள் தெரிவித்தனர். #Bees #SouthAfricanPlanes
    கோவை கிணத்துக்கடவு அருகே கோவிலில் குடும்பத்துடன் பொங்கல் வைத்தபோது தேனீக்கள் கொட்டியதில் 30 பேர் காயமடைந்தனர்.
    கிணத்துக்கடவு:

    கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள காளியண்ணன்புதூரை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 55). விவசாயி.

    இவர் அதே பகுதியில் உள்ள ஆற்றுகாளியம்மன் கோவிலில் பொங்கல் வைத்து கிடா விருந்து வைக்க திட்டமிட்டார். இதற்காக நேற்று உறவினர்கள் மற்றும் குடும்பத்தினருடன் கோவிலுக்கு சென்றார். அங்குள்ள ஆலமரத்துக்கு அடியில் பெண்கள் பொங்கல் வைத்து கொண்டு இருந்தனர்.

    அப்போது மரத்தில் இருந்த தேனீக்கள் வெளியேறியது. ஆக்ரோசமாக காணப்பட்ட தேனீக்கள் கூட்டம் பொங்கல் வைத்து கொண்டு இருந்தவர்கள், அங்கு அமர்ந்து இருந்தவர்களை விரட்டி விரட்டி கொட்டியது. இதில் அனைவரும் சிதறியடைத்து ஓடினர்.

    இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தேனீக்கள் கொட்டியதில் ரவிச்சந்திரன், அவரது மனைவி கலாமணி, மகன் லோகமுருகன், உறவினர்கள் சந்திரகுமார், தவமணி உள்பட 30 பேர் காயமடைந்தனர்.

    இவர்கள் கோவை, பொள்ளாச்சி மற்றும் பல்லடம் அரசு ஆஸ்பத்திரிகளுக்கு சென்று சேர்ந்தனர். அங்கு இவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
    ×