search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 106327"

    விடுமுறை தினமான நேற்று மலைக்கோவிலில் பக்தர்கள் குவிந்தனர். இதன் காரணமாக படிப்பாதை, யானைப்பாதை, மின் இழுவை நிலையம் ஆகிய இடங்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடாக பழனி விளங்குகிறது. இங்கு தைப்பூசம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட திருவிழாக்கள் மட்டுமின்றி ஆண்டு முழுவதும் மலைக்கோவிலுக்கு பக்தர்கள் வருகை தருவர். இதேபோல் விடுமுறை தினங்களிலும் பக்தர்களின் வருகை வழக்கத்தை விட அதிகமாக இருக்கும்.

    அந்த வகையில், விடுமுறை தினமான நேற்று மலைக்கோவிலில் பக்தர்கள் குவிந்தனர். இதன் காரணமாக படிப்பாதை, யானைப்பாதை, மின் இழுவை நிலையம் ஆகிய இடங்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. மலைக்கோவில் வெளிப்பிரகாரம், பொது, கட்டணம், சிறப்பு தரிசன வழிகளிலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். ஒரு மணி நேரம் காத்திருந்த பின்னரே பக்தர்களால் சாமி தரிசனம் செய்ய முடிந்தது.

    வழக்கமாக விடுமுறை தினங்களில் கேரள மாநிலத்தவர்கள் பழனி மலைக்கோவிலுக்கு அதிக அளவில் வருகை தருவார்கள். ஆனால் கேரள மாநிலத்தின் பல பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதால் பழனிக்கு கேரள பக்தர்கள் வருகை குறைவாகவே இருந்தது. 
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மகா கும்பாபிஷேக விழாவிற்காக கடந்த 8 நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அனைத்து வகையான தரிசனங்களும் இன்று காலை முதல் மீண்டும் தொடங்கியது. #Tirupati
    திருமலை:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு ஆகம விதிகளின்படி, அஷ்டபந்தன பாலாலய மகா சம்ப் ரோக்‌ஷணம் எனப்படும் மகா கும்பாபிஷேக விழா நேற்று வெகு விமரிசையாக நடந்தது.

    இதனை தொடர்ந்து, மாலை 5 மணிக்கு, கருட பஞ்சமியையொட்டி, உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேதமாய் மலையப்பசாமி கருட வாகனத்தில் 4 மாட வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதனை தொடர்ந்து, இரவு 9 மணியளவில், பெரிய சே‌ஷ வாகனத்தில், மீண்டும் உற்சவ மூர்த்திகள் 4 மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இத்துடன் கும்பாபிஷேக விழா நிறைவு பெற்றது.

    கும்பாபிஷேகத்தையொட்டி கடந்த 9-ந் தேதி முதல் நடைபாதை தரிசனம், சிறப்பு தரிசனம், ரூ.300 கட்டண தரிசனம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

    இலவச தரிசனத்தில் மட்டும் குறைந்த அளவிலான பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். கடந்த 8 நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அனைத்து வகையான தரிசனங்களும் இன்று காலை முதல் மீண்டும் தொடங்கியது.


    நள்ளிரவு 12 மணி முதல் நடைபாதை, இலவச தரிசனம் நேரம் குறித்த அட்டை ஆகியவை வழங்கப்பட்டது. கோவிலில் நடைபெறும் அனைத்து ஆர்ஜித சேவைகளும் வழக்கம்போல் நடைபெற்றது.

    இது தொடர்பாக தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி அனில்குமார் சிங்கால் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஆகம ஆலோசனைக் குழு அளித்த ஆலோசனைகள் மற்றும் பெரிய ஜீயர், சின்ன ஜீயர் சுவாமிகள் அறிவுறுத்தலின்படி மகா கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடந்தது.

    எங்களது வேண்டுகோளுக்கு இணங்க ஆந்திரா, தெலுங்கானா, தமிழகம், கர்நாடகா மற்றும் இதர மாநில பக்தர்கள் மிகுந்த ஒத்துழைப்பு அளித்தமைக்கு நன்றி. 44 வேத வல்லூநர்கள், 100 வேத பண்டிதர்கள் பங்கேற்று இதனை சிறப்பாக நடத்திக் கொடுத்துள்ளனர். கடந்த 11-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை 1.34 லட்சம் பக்தர்கள் ஏழுமலையானை தரிசித்துள்ளனர். இன்று காலை முதல் பக்தர்கள் வழக்கம்போல் ஏழுமலையானை தரிசிக்கலாம்.

    இவ்வாறு அவர் கூறினார். #Tirupati #TirupatiTemple
    நெல்லையப்பர் கோவிலில் உடைந்த சாமி சிலையை வைத்து வழிபாடு நடத்தியதால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
    நெல்லை:

    நெல்லையப்பர் கோவிலில் கொடிமரத்தின் வலப்புறமாக நவக்கிரக சன்னதி உள்ளது. இங்குள்ள சந்திரன் சிலையின் கை பகுதி சேதமடைந்து காணப்படுகிறது. கடந்த ஏப்ரல் 27-ந்தேதி கும்பாபிசேகத்தின்போது இந்த சிலை சேதமாகியிருக்கலாம் என தெரிகிறது.

    சிலை சேதமடைந்த நிலையில் இருப்பதை அதிகாரிகள் யாரும் கண்டு கொள்ளவில்லை. இதனால் கோவில் அர்ச்சகர்கள் சேதமான கை பகுதி வெளியில் தெரியாத வகையில் பூ வைத்து அலங்காரம் செய்கின்றனர்.

    உடைந்த சிலையை கும்பாபிஷேகத்திற்கு முன்பாக சீரமைத்திருக்க வேண்டும், சேதமடைந்த சிலையுடன் வழிபாடு தொடர்வது முறையானது அல்ல என பக்தர்கள் தெரிவித்துள்ளனர்.

    இந்த சந்திரன் சிலை 2004-ம் ஆண்டுக்கு முன்பே உடைந்துவிட்டதாகவும், கும்பாபிசேகத்தின்போது மற்ற பணிகள் இருந்ததால் கவனிக்கவில்லை எனவும் கோவில் பணியாளர்கள் கூறுகின்றனர். எனினும் சேதமடைந்த சிலையுடன் வழிபாடு செய்வது தெய்வகுற்றம் என பக்தர்கள் குறை கூறியுள்ளனர்.

    எனவே புதிய சிலையை வரவழைத்து அதற்கு உரிய பூஜைகள் நடத்தி வழிபாட்டுக்கு வைக்கவேண்டும் என்கின்றனர் பொதுமக்கள்.
    ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேரோட்டம் இன்று நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
    ஸ்ரீவில்லிபுத்தூர்:

    ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் கொண்டாடப்படும் விழாக்களில் ‘ஆடிப்பூரம்‘ மிகவும் முக்கியமானதாகும். இந்த ஆண்டுக்கான ஆடிப்பூர விழா கடந்த 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா தொடர்ந்து நடைபெற்று வருகிறது. விழாவின் ஒவ்வொரு நாளும் ஆண்டாள்-ரங்க மன்னார் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

    8-ம் திருநாளான நேற்று ஆண்டாள் சூடிக் கொள்வதற்கான மங்கலப் பொருட்கள் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் இருந்து வந்தடைந்தன.

    ஸ்ரீரங்கம் ரங்கநாதருக்கு ரேவதி நட்சத்திரத்தின் போதும், மதுரை கள்ளழகருக்கு சித்ரா பவுர்ணமியின் போதும் ஆண்டாள் சூடிக் கொடுத்த மங்கலப் பொருட்கள் அனுப்பப்பட்டு அவை சாமிகளுக்கு சாத்தப்படும். மதுரை கள்ளழகர் கோவிலில் இருந்து வந்த மங்கலப் பொருட்கள் உற்சவருக்கு சாத்தப்பட்டு விசே‌ஷ பூஜைகள் நடைபெற்றன.

    9-ந் திருநாளான இன்று காலை ஆடிப்பூரத் தேரோட்டம் நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர். பக்தர்கள் வெள்ளத்தில் தேர் ஆசைந்தாடி வந்தது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. வருகிற 16-ந் தேதி ஆண்டாள்-ரங்கமன்னார் திவ்ய தம்பதிக்கு புஷ்ப யாகத்துடன் விழா நிறைவடைகிறது.

    ஆண்டாள் கோவில் தேரோட்ட திருவிழாவையொட்டி 1,000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டிருந்தது. விருதுநகர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறையும் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆடிப்பூர விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் நாகராஜன், தக்கார் ரவிச்சந்திரன் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.
    கன்னியகோவிலில் நடந்த தீ மிதி திருவிழாவில் இரு கிராமத்தை சேர்ந்த வாலிபர்கள் மோதலில் ஈடுபட்டனர்.

    பாகூர்:

    கிருமாம்பாக்கம் அருகே கன்னியகோவிலில் பிரசித்தி பெற்ற பச்சைவாழியம்மன் கோவில் தீமிதி திருவிழா நேற்று மாலை நடைபெற்றது.

    விழாவில் சுற்றுப்புற கிராமங்கள் மட்டுமின்றி கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு தீ மிதித்து நேர்த்திக் கடனை செலுத்தினர்.

    இந்த நிலையில் தீமிதி விழா நடைபெற்று கொண்டிருந்த போது ஏற்கனவே முன் விரோதத்தை வைத்து கொண்டு வார்க்கால் ஓடை புதுநகரை சேர்ந்த இளைஞர்களும், மணப்பட்டு கிராமத்தை சேர்ந்த இளைஞர்களும் மோதலில் ஈடுபட்டனர். ஒருவரையொருவர் கையாலும், தடியாலும் தாக்கிக்கொண்டனர்.

    இதனால் அங்கு பெரும் பதட்டம் ஏற்பட்டது. விழாவை காண வந்த பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இதையடுத்து மோதலில் ஈடுபட்ட 2 கிராமத்தை சேர்ந்த வாலிபர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.

    மேலும் மோதலில் ஈடுபட்ட வார்க்கால் ஓடை புதுநகரை சேர்ந்த வசந்தகுமார் (19), ராயப்பன் (24), கலைச்செல்வன் (27) மற்றும் மணப்பட்டு கிராமத்தை சேர்ந்த விஜய மூர்த்தி (24), அருண்ராஜ் (19) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த மோதல் தொடர்பாக 2 கிராமத்தை சேர்ந்த 20 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    தூத்துக்குடியில் இருந்து சதுரகிரிக்கு செல்லும் பக்தர்கள் சாலை விதிகளை மதித்து பாதுகாப்பாக செல்ல வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா தெரிவித்து உள்ளார்.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் இருந்து சதுரகிரிக்கு செல்லும் பக்தர்கள் சாலை விதிகளை மதித்து பாதுகாப்பாக செல்ல வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா தெரிவித்து உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    ஆடி அமாவாசை திருவிழாவையொட்டி விருதுநகர் மாவட்டம் தானிப்பாறையில் உள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமி கோவில் திருவிழாவுக்கு தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் சென்று வருகின்றனர்.

    கடந்த காலங்களில் நடந்த விழாவின்போது, மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் மொத்தம் 21 ஆண்கள், 28 பெண்கள் அடித்து செல்லப்பட்டு உள்ளனர். எனவே பக்தர்கள் பாதுகாப்பு கருதி கோவிலுக்கு நாளை மறுநாள்(ஞாயிற்றுக்கிழமை) வரை காலை 4 மணி முதல் மாலை 4 மணி வரை மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

    ஆகையால் தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து சதுரகிரி கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்ட நேரத்தில் சென்றும், சாலை விதிகளை கடைபிடித்தும் பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.
    சோலைமலை முருகன் கோவிலுக்கு 108 மயில் காவடிகளுடன் பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து சாமி தரிசனம் செய்தனர்.
    புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் இருந்து திருமுருகன் வாரவழிபாடு சபையின் சார்பாக 108 முருகபக்தர்கள் மயில்காவடிகளுடன் பாதயாத்திரையாக புறப்பட்டு கொன்னையூர், சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி, மதுரை மாவட்டம் மேலூர், கிடாரிபட்டி வழியாக உச்சியில் உள்ள முருகப்பெருமானின் ஆறாவதுபடை வீடான சோலைமலை முருகன் கோவி லுக்கு பாதயாத்திரையாக வந்து சேர்ந்தனர். அங்கு கோவிலின் 4 பிரகாரங்களிலும் மேள தாளம் முழங்க பக்தர்கள் காவடியுடன் ஆடிப்பாடி மூலவர் சன்னதியை அடைந்து சாமிதரிசனம் செய்தனர்.

    சாமிக்கு திருஆபரணங்கள் சாத்தப்பட்டு விசேஷ பூஜைகள் நடந்தன. தொடர்ந்து சஷ்டிமண்டபத்தில் உற்சவர் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சாமிக்கு பால், பழம், பன்னீர், தேன், புஷ்பம், இளநீர், விபூதி, சந்தனம் உள்ளிட்ட 36 வகையான அபிஷேகங்கள் நடந்தன.பின்னர் சர்வ அலங்காரத்தில் சாமி எழுந்தருளினார். ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமிதரிசனம் செய்தனர். அவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    பின்னர் தங்கத்தேர் பக்தர்களால் இழுக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை வழிபாடு சபையின் தலைவர் பொன்.முத்துவிநாயகம், பொருளாளர் டி.ஏ.சேகரன் மற்றும் குழுவினர் செய்திருந்தனர். முன்னதாக பாதயாத்திரையாக கோவிலுக்கு வந்த முருக பக்தர்களை தக்கார் வெங்கடாசலம் ஆலோசனையின் பேரில் நிர்வாக அதிகாரி மாரிமுத்து மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் வரவேற்றனர்.

    ஆடி வெள்ளிக்கிழமையான இன்று திருச்சி சமயபுரம் கோவிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.
    மண்ணச்சநல்லூர்:

    ஆடி மாதத்தில் திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழி பாடுகள் நடத்தப்படும். தற்போது ஆடி மாதம் தொடங்கியதில் இருந்து சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக  ஆடி வெள்ளிக்கிழமையன்று ஏராளமான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். 

    அதன்படி ஆடி வெள்ளிக்கிழமையான இன்று  திருச்சி சமயபுரம் மாரியம்மன்  கோவிலுக்கு  இன்று  காலையில்  இருந்தே ஆயிரக்கணக்கான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்ய குவிந்தனர். பக்தர்கள் பலர் பல்வேறு ஊர்களிலிருந்து பால்குடம் எடுத்து கொண்டு பாத யாத்திரையாகவும் கோவிலுக்கு  வந்தனர். இன்னும் சில பக்தர்கள் அலகுகுத்தி , காவடி எடுத்தும் வந்து அம்மனை வணங்கி வழிபட்டனர்.  

    மேலும்  கோவில் பிரகாரத்தில் அங்கப்பிரதட்சணம் செய்தும் வேண்டுதலை நிறைவேற்றினர். நீண்ட வரிசையில் நின்றும் அம்மனை தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு தேவையான வசதிகள் கோவில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டிருந்தது. மேலும் ஆடிபெருக்கையொட்டி காவிரி ஆற்றில் புனிதநீராட  பல்வேறு இடங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் திருச்சிக்கு வந்தனர். அவர்களும் சமயபுரம் கோவிலுக்கு சென்று வழிபட்டனர். இதனால் எப்போதும் இல்லாத அளவுக்கு இன்று சமயபுரம் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
    இந்த ஆண்டு அமர்நாத் யாத்திரை காலத்தில் பனி லிங்கத்தை தரிசித்தவர்கள் எண்ணிக்கை 2.5 லட்சத்தை கடந்தது. #Amarnathyatra
    ஜம்மு:

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் ஜம்மு மாவட்டத்தில் கடல்மட்டத்தில் இருந்து சுமார் 3880 மீட்டர் உயரத்தில் உள்ள அமர்நாத் குகைக் கோயிலில் ஆண்டுதோறும் தோன்றும் பனி லிங்கத்தை தரிசனம் செய்ய ஜூன் 28-ம் தேதி முதல் யாத்ரிகர்கள் குழு புறப்பட்டு சென்றது.

    மழையினால் சில நாட்கள் தடைபட்ட யாத்திரை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் இந்த ஆண்டு யாத்திரை காலத்தின் 30 நாளான இன்று 2,776 யாத்ரீகர்கள் பனி லிங்கத்தை தரிசினம் செய்தனர்.

    இவர்களுடன் சேர்த்து 2 லட்சத்து 51 ஆயிரத்து 996 பக்தர்கள் இதுவரை பனி லிங்கத்தை தரிசித்துள்ளதாக  அமர்நாத் ஆலய நிர்வாகம் தெரிவித்துள்ளது. #Amarnathyatra
    முத்தாரம்மன் கோவில் கொடை விழா வருகிற 30-ந் தேதி இரவு 9 மணிக்கு மாக்காப்பு, தீபாராதனையுடன் தொடங்குகிறது.

    உடன்குடி:

    குலசேகரன் பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவிற்கு பெயர் பெற்ற திருத்தலமாகும். இங்கு வருடம் தோறும் ஆடிக் கொடை விழா நடைபெறும். இந்த வருட கொடைவிழா வருகிற 30-ந் தேதி இரவு 9 மணிக்கு மாக்காப்பு, தீபாராதனையுடன் தொடங்குகிறது. இரவு 10 மணிக்கு வில்லிசை நடக்கிறது.

    31-ந் தேதி காலை 7 மணி, 8.30 மணிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை, பகல் 11 மணி, இரவு 11 மணி ஆகிய நேரங்களில் சிறப்பு பூஜையுடன் கும்பம் தெரு வீதி உலா செல்லுதல், காலை 10 மணி, இரவு 10 மணிக்கு வில்லிசை மற்றும் மகுட இசை, பகல் 1 மணிக்கு அன்னதானம் நடக்கிறது.

    1-ந் தேதி காலை 9 மணிக்கு மகுட இசை, 10 மணிக்கு வில்லிசை, காலை 11 மணிக்கு சிறப்பு பூஜையுடன் கும்பம் தெரு வீதி செல்லுதல், பகல் 1 மணிக்கு அன்னதானம், மாலை 5 மணிக்கு சுவாமிகள் மஞ்சள் நீராடுதல், இரவு 8 மணிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகளுடன் கொடை விழா நிறைவு பெறுகிறது.

    கொடை விழாவிற்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி அறநிலையத்துறை உதவி ஆணையரும் கோவில் தக்காருமான ரோஜாலி சுமதா, செயல் அலுவலர் ராமசுப்பிரமணியன், ஆய்வாளர் பகவதி மற்றும் ஆலய ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

    ஆடி மாதத்தில் அம்மன் கோவில்களில் விஷேச பூஜை மற்றும் சிறப்பு அலங்காரம் செய்து அம்மனை பக்தர்கள் வழி படுவார்கள். #temple

    ஈரோடு:

    ஆடி மாதம் என்றலே அம்மனுக்கு உகந்த மாதமாக கருதப்படும். ஆடி மாதத்தில் அம்மன் கோவில்களில் விஷேச பூஜை மற்றும் சிறப்பு அலங்காரம் செய்து அம்மனை பக்தர்கள் வழி படுவார்கள்.

    வழக்கமாக வெள்ளிக் கிழமை மற்றும் செவ்வாய்க் கிழமைகளில் பெண் பக்தர்கள் அம்மன் கோவில்களுக்கு அதிகமாக வருவார்கள். இன்று ஆடி மாதம் 2-வது வெள்ளிக்கிழமை ஈரோடு மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக காணப்பட்டது.

    இதையொட்டி ஈரோடு பெரிய மாரியம்மன் கோவிலில் இன்று அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. இதனால் அதிகாலை முதலே பக்தர்கள் குறிப்பாக பெண் பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் அம்மனை தரிசனம் செய்தனர்.

    மேலும் அன்னதானம், கூழ் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதனால் கோவில் வளாகம் முழுவதும் திருவிழா போல காட்சி அளித்தது. மேலும் கோவிலில் விளக்கு பூஜையும் நடந்தது. இதில் பெண்கள் பலர் கலந்து கொண்டு விளக்கு பூஜை செய்தனர்.

    இதே போல பண்ணாரியம்மன் கோவில், கோபி அடுத்த பாரியூர் அம்மன், ஈரோடு சின்ன மாரியம்மன், நடு மாரியம்மன், சூரம்பட்டி மாரியம்மன், வீரப்பன் சத்திரம் மாரியம்மன், கருங்கல்பாளையம் பெரிய மாரியம்மன், சின்ன மாரியம்மன், ஓங்காளியம்மன், பார்க் ரோடு எல்லை மாரியம்மன், ராஜாஜி புரம் மாகாளியம்மன், கள்ளுக்கடை மேடு பத்ரகாளியம்மன் கோவில் உள்பட ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து அம்மன் கோவில்களிலும் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    இதில் ஏரானமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். #temple

    ஆடி அமாவாசை திருவிழாவினை முன்னிட்டு சதுரகிரி கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் சிவஞானம் தெரிவித்துள்ளார்.

    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டம், தாணிப்பாறையில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் ஆடி அமாவாசை திருவிழாவினை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகளை சந்திரபிரபா எம்.எல்.ஏ. முன்னிலையில் கலெக்டர் நடராஜன் நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    வருகின்ற ஆடி 26-ந் தேதி (11.8.18) அன்று சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் ஆடி அமாவாசை திருவிழாவிற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து பங்கேற்பார்கள்.

    விழாவில் பங்கேற்கும் பொதுமக்களுக்கும், பக்தர்களுக்கும் போதிய பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ளவும், கூட்ட நெரிசலை ஒழுங்குபடுத்தவும் காவல்துறையினர் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    தரிசனம் செய்ய வருகின்ற பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு தேவையான குடிநீர் வசதி மற்றும் சுகாதார வசதிகள் மேற்கொள்ளப்படும் வனத்துறையின் மூலம் சுற்றுச்சூழலை மாசு படுத்தாமல் முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்படும்.

    எந்த நேரத்திலும் முதலுதவி சிகிச்சை அளித்திடும் வகையில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களுடன் கூடிய மருத்துவக் குழு அமைக்கப்பட உள்ளது. மேலும் ஆம்புலன்ஸ் வசதிகளும் ஏற்படுத்தப்பட உள்ளது.

    சதுரகிரிக்கு செல்லும் பக்தர்கள் பிளாஸ்டிக் பொருட்கள், போதை வஸ்து போன்ற பொருட்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    பிளாஸ்டிக் பொருட்களினால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களிடையே எடுத்துக்கூறி சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத துணிப் பைகளை பொதுமக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    சதுரகிரிக்கு செல்லும் பக்தர்களின் வசதிக்கேற்ப மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்க தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×