search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பன்னீர்செல்வம்"

    பாரதிய ஜனதாவில் இணைவேனா? என தங்க தமிழ்ச்செல்வனுக்கு ஓ.பன்னீர்செல்வம் பதில் அளித்துள்ளார். #ThangaTamilselvan #Panneerselvam
    மதுரை:

    மதுரை திருப்பரங்குன்றத்தில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் ஒரு நிருபர் பாரதிய ஜனதாவில் நீங்கள் சேரபோவதாக கூறப்படுகிறதே? என்று கேட்டார்.

    இந்த கேள்வியை சற்றும் எதிர்பாராத ஓ.பன்னீர்செல்வம் நான் பாரதிய ஜனதாவில் சேரப்போவது என்பது அடிமுட்டாள் தனமான கருத்து என்று கோபத்துடன் பதில் அளித்தார். தொடர்ந்து இந்த கேள்வியை எழுப்பியபோது ஏற்கனவே பதில் சொல்லி விட்டேன். திரும்ப... திரும்ப... இதுபற்றி கேட்கிறீர்களே? யார் உங்களை தூண்டி விட்டு இப்படி கேட்க சொல்கிறார்கள்? என்று கூறினார்.

    அப்போது அருகில் இருந்த முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகளும் திடீர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்தவுடன் ஓ.பன்னீர்செல்வம் குடும்பத்துடன் பாரதிய ஜனதாவில் இணைவார் என அ.ம.மு.க.வின் கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. #ThangaTamilselvan #Panneerselvam
    தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்தவுடன் ஓ.பன்னீர்செல்வம் குடும்பத்துடன் பாரதிய ஜனதாவில் இணைவார் என தங்க தமிழ்ச்செல்வன் கூறினார். #ThangaTamilselvan #Panneerselvam

    மதுரை:

    மதுரையில் அ.ம.மு.க. வின் கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தல் மற்றும் 22 சட்டமன்ற இடைத்தேர்தல்களில் அ.ம.மு.க. அமோக வெற்றி பெறும். எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அ.தி.மு.க. எந்த தொகுதியிலும் வெற்றி பெறாது. அவர்கள் அமைத்துள்ள கூட்டணி மெகா கூட்டணி அல்ல. மக்கள் வெறுக்கும் அணி.

    எனவே பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.- பா.ஜனதா கூட்டணி படுதோல்வி அடையும். அமைச்சர்களுக்கும் எம்.எல்.ஏ.க்களுக்கும் தோல்வி பயம் வந்து விட்டது. இதனால் அவர்கள் கோபத்துடன் பேசி வருகிறார்கள்.

    மதுரையில் பேட்டி அளித்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களிடம் கோபமாக பேசி இருக்கிறார். இது ஏற்புடையதல்ல. ஓ.பி.எஸ். மற்றும் அமைச்சர்கள் பதவிக்காக எதை வேண்டுமானாலும் செய்வார்கள்.


    பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகிறபோது அ.தி.மு.க. கூட்டணி தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் படுதோல்வியை தழுவும்.

    இதனால் அ.தி.மு.க.வில் குழப்பம் ஏற்படும். இந்த சூழ்நிலையை பயன்படுத்தி ஓ.பன்னீர்செல்வம் தனது குடும்பத்துடன் பாரதிய ஜனதாவில் இணைவார்.

    தற்போது தேர்தல் விதிமுறை அமலில் உள்ளன. ஆனால் தோல்வி பயம் காரணமாக தேர்தல் விதிமுறைகளையும் மீறி விட்டு அமைச்சர்களும், அரசு கொறடாவும் சபா நாயகரை சந்தித்து பேசி உள்ளனர். இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்க உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #ThangaTamilselvan #Panneerselvam

    பாராளுமன்ற தேர்தலோடு தி.மு.க. காணாமல் போகும் என்று சேலத்தில் அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்தபோது துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார். #LokSabhaElections2019

    சேலம்:

    சேலம் பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கே.ஆர்.எஸ்.சரவணனை ஆதரித்து நேற்று இரவு அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் சேலம் தாதகாப்பட்டி, பட்டைக்கோவில், வின்சென்ட் பகுதியில் திறந்த வேனில் நின்று தேர்தல் பிரசாரம் செய்தார்.

    பாராளுமன்ற தேர்தலில் நல்லவர்களாக நாம் இணைந்து தர்மத்தை நிலை நாட்டக்கூடிய கட்சிகள் ஒரு அணியாகவும், அதர்மம் கொண்ட தி.மு.க. தலைமையில் மற்றொரு அணியும் தேர்தலை சந்திக்க உள்ளன. மத்தியில் 10 ஆண்டுகள் நடந்த காங்கிரஸ் ஆட்சியில் தி.மு.க. அங்கம் வகித்தபோது, 9 பேர் மந்திரிகளாக இருந்தார்கள். அவர்கள் உருப்படியாக தமிழகத்திற்கு தேவையான எந்தஒரு தொலை நோக்கு திட்டத்தையும் கொண்டுவரவில்லை. தமிழக விவசாயிகளின் ஜீவாதாரமாக விளங்கக்கூடிய காவிரி பிரச்சினையும் தீர்க்கவில்லை.

    அதாவது 17 ஆண்டுகளுக்கு பிறகு தி.மு.க.-காங்கிரஸ் ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோது, காவிரி நடுவர் மன்ற இடைக்கால தீர்ப்பு வெளியானது. அப்போது, எதிர்க்கட்சி தலைவியாக இருந்த ஜெயலலிதா, காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை மத்திய அரசின் அரசிதழிலில் வெளியிட நடவடிக்கை எடுக்குமாறு முதல்-அமைச்சர் கருணாநிதியை வலியுறுத்தினார்.


    ஆனால் அவர்கள் எதையும் செய்யவில்லை. அதன்பிறகு 2011-ல் நடந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க.வை தோற்கடித்து ஜெயலலிதா முதல்-அமைச்சராக பொறுப்பேற்றார். அவர் எடுத்த சட்டப்போராட்டத்தின் விளைவாக தற்போது அ.தி.மு.க. ஆட்சியில் தான் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் யார் ஆட்சிக்கு வந்தால் மக்களுக்கு நல்லது செய்வார்கள்? என்று மக்களுக்கு நன்றாக தெரியும்.

    இந்த தேர்தலோடு அ.தி.மு.க. காணாமல் போகும் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கூறி வருகிறார். அப்படி என்றால் இவர்கள் ஆட்சி செய்வார்களா?. பிரியாணி, பரோட்டா கடையில் சாப்பிட்டுவிட்டு காசு கொடுக்காமல் வன்முறையில் தி.மு.க.வினர் ஈடுபட்டு வருகிறார்கள். இதற்கு முன்பெல்லாம் ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு பணம் கொடுத்து வந்தோம். ஆனால் இப்போது அப்படி இல்லை. முதலில் காசு கொடுத்துவிட்டு அதன்பிறகு சாப்பிடுங்கள் என்று கூறும் நிலைமை வந்துவிட்டது.

    இவர்கள் கையில் ஆட்சி இருந்தால் எப்படி இருக்கும் என்று நீங்கள் சிந்தித்து பாருங்கள். அ.தி.மு.க.வை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது. ஏன்? சுனாமி, புயல், பூகம்பம் வந்தாலும் யாராலும் ஒன்றும் செய்யமுடியாது. இந்த பாராளுமன்ற தேர்தலோடு தி.மு.க. காணாமல் போய்விடும். ஜெயலலிதா வழியில் நடக்கும் அ.தி.மு.க. ஆட்சியில் மக்களுக்கு தேவையான பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    பொங்கல் பண்டிகைக்கு ரூ.1,000 வழங்கியதால் ஏழை, எளிய மக்கள் மட்டுமின்றி அனைவரும் பொங்கலை மகிழ்ச்சியோடு கொண்டாடினார்கள். அதேசமயம் தமிழகம் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதால் அதனை கருத்தில் கொண்டு வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள 60 லட்சம் ஏழை குடும்பங்களுக்கு ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

    ஆனால் தேர்தல் ஆணையத்திடம் தி.மு.க.வினர் புகார் செய்ததால் தற்போது அது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும், தேர்தல் முடிந்தவுடன் நிச்சயம் 60 லட்சம் குடும்பங்களுக்கு ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் என தெரிவித்துக்கொள்கிறேன்.

    நாடும், நாட்டு மக்களும் நல்லா இருக்க வேண்டும் என்பதற்காக அ.தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமைத்துள்ளோம்.

    இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.  #LokSabhaElections2019

    எம்.ஜி.ஆர். பிறந்த நாளில் சபதம் ஏற்று வருகிற பாராளுமன்ற தேர்தலில் வெற்றி வாகை சூடுவோம் என்று ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தெரிவித்துள்ளனர். #EdappadiPalaniswami #OPanneerselvam

    சென்னை:

    அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    டாக்டர் எம்.ஜி.ஆரின் 102-வது பிறந்த நாள் எங்கள் தங்கத்தின் பிறந்த நாள். சிவப்புச் சிங்கத்தின் பிறந்த நாள். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எனும் மாபெரும் மக்கள் பேரியக்கத்தை உருவாக்கிய மக்கள் திலகத்தின் பிறந்த நாள்.

    உலகெங்கும் வாழும் தமிழர்களின் உள்ளங்களில் உவகை தரும் விழாவாக, எல்லோர் இதயங்களிலும், இல்லங்களிலும் எழுச்சி தரும் விழாவாகக் கொண்டாடிக் கொண்டிருக்கும் கழக உடன் பிறப்புகள் அனைவருக்கும் எங்கள் இதயம் நிறைந்த நல்வாழ்த்துகளையும், நன்றியினையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

    அ.தி.மு.க. என்னும் இந்த மாபெரும் பேரியக்கத்திற்கு வரலாற்றுச் சிறப்புகளைச் சேர்த்திடும் வகையில், கருவறையிலிருந்து கல்லறை வரைக்கும் சாதனைத் திட்டங்கள் பலவற்றைப் படைத்தவர் நம் அம்மா.

    அம்மாவின் நம்பிக்கையை, கழக உடன் பிறப்புகளின் பூரண நல்லாசியோடு நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம். எதிரிகளின் சூழ்ச்சிகளையும், துரோகிகளின் சதிகளையும் உடைத்தெறிந்து, அம்மாவின் நல்லாட்சியைத் தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறோம். அதேபோல், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எவராலும் அசைக்க முடியாத எஃகுக் கோட்டை என்பதையும் நிரூபித்துக் காட்டியிருக்கிறோம்.

    அம்மா செயல்படுத்தி வந்த நலத் திட்டங்களோடு, புதிய புதிய திட்டங்களையும் செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம். புரட்சித் தலைவரைப் போல, அம்மாவைப் போல, விசுவாசத் தொண்டர்களாகிய நாமும் தமிழக மக்களுக்காக நம்மை அர்ப்பணித்து பணியாற்றிக் கொண்டிருக்கிறோம். அந்த உணர்வோடுதான் இந்தப் பொங்கல் எல்லோருக்கும் இனிய பொங்கலாக அமைய வேண்டும் என்ற உன்னத நோக்கத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 1,000/ ரூபாய் பொங்கல் பரிசாக அம்மாவின் அரசு வழங்கியது.

    புரட்சித் தலைவர் வாரி வாரிக் கொடுத்தவர். அம்மா அள்ளி அள்ளிக் கொடுத்தவர். நாம் கொடுத்து மகிழ்ந்த வள்ளல்களின் வழி வந்தவர்கள். அதனால் தான் நாமும் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். எடுத்துப் பழக்கப்பட்டவர்களுக்கும், கெடுத்துப் பழக்கப்பட்டவர்களுக்கும் அது பேரதிர்ச்சியாக இருக்கிறது. யார் தடை போட்டாலும் அதையெல்லாம் தகர்த் தெறிந்து தமிழக மக்களின் உயர்வுக்காகவும், மகிழ்ச்சிக்காகவும் நாம் பாடுபடுவோம்.

    எதிரிகளும், துரோகிகளும் நமது ஒற்றுமையைப் பார்த்து மிரண்டு போயிருக்கிறார்கள். நமக்கு அவப்பெயர் உண்டாக்க வேண்டும் என்ற தீய எண்ணத் தோடு அவதூறுச் செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள்; உண்மைக்குப் புறம்பாக உளறிக் கொண்டிருக்கிறார்கள்.

    எம்.ஜி.ஆர்., அம்மா ஆகிய நம் இருபெரும் தலைவர்கள் மறைந்தாலும், நம்மை வெல்ல எவராலும் இயலாது என்பதை இந்த உலகிற்கு உணர்த்திக் காட்ட வேண்டும். தமிழ் நாட்டில் தொடர்ந்து கழக ஆட்சிதான் என்பதை உண்மையாக்கிக் காட்ட வேண்டும்.

    தமிழக மக்களுக்காகப் பாடுபடும் ஒரே இயக்கம், புரட்சித் தலைவர் உருவாக்கிய அ.தி.மு.க. மட்டும் தான் என்பதை நிரூபித்துக் காட்ட வேண்டும். நம் கண் முன்னே பாராளுமன்றப் பொதுத் தேர்தல் என்ற களம் தெரிகிறது.

    புரட்சித் தலைவரின் புனிதப் பாதையில், அம்மா வகுத்துத் தந்த வெற்றிப் பாதையில் எந்தத் தேர்தல் எப்பொழுது வந்தாலும், தேர்தல் களத்திலே விசுவாசத் தொண்டர்களாகிய நாம் வெற்றி வாகை சூடுவோம்.

    அதற்காக அனைவரும் அயராது உழைப்போம்; ஒற்றுமையோடு ஓயாது உழைப்போம். வெற்றிக்கனி பறித்து புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகியோரின் விசுவாசத் தொண்டர்கள் என்றுமே வெற்றி வீரர்கள் தான் என்பதை நிரூபித்துக் காட்டுவோம். இதையே புரட்சித் தலைவரின் பிறந்த நாள் சபதமாக எடுப்போம்; நினைத்ததை முடிப்போம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #EdappadiPalaniswami #OPanneerselvam

    துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பதவி வெறியில் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் பேசுகிறார் என்று தினகரன் குற்றம் சாட்டியுள்ளார். #dinakaran #OPanneerselvam

    தஞ்சாவூர்:

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் அ.தி.மு.க. சார்பில் பொதுக்கூட்டம் நேற்று நடந்தது. இதில் துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசும்போது, ‘‘ முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதா உயிருடன் இருந்த போதே தினகரன் முதல்வராக சதி செய்தார். என்று கூறினார்.

    தினகரனின் சொந்த ஊரில் நடந்த பொதுக் கூட்டத்தில் ஓ.பன்னீர் செல்வம் இவ்வாறு பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில் தஞ்சையில் இன்று நடந்த ஒரு திருமண விழாவில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கலந்து கொண்டார்.

    அப்போது அவர் ஓ.பன்னீர்செல்வம் பேச்சுக்கு பதிலளிக்கும் விதமாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் பேசுகிறார். அவர் பேசுவது எல்லாம் உண்மையல்ல என்பது தமிழக மக்களுக்கு நன்றாகவே தெரியும். பதவி வெறியில் இவ்வாறு பேசுகிறார்.

    தி,மு.க.வுடன் கைக் கோர்த்து கொண்டே இந்த ஆட்சிக்கு எதிராக வாக்களித்தார். பின்னர் டெல்லியில் இருந்து உத்தரவு வந்தவுடன் இந்த ஊழல் ஆட்சியுடன் சேர்ந்து கொண்டு ‘துணை முதல்வர்’ பதவியை வகிக்கிறார். அவரது நம்பகத்தன்மை கேள்விக்குறியாக உள்ளது. என்னை சதி செய்தார் என்று கூறுகிறார். இதை யாரும் நம்ப மாட்டார்கள். அவரது மனைவி கூட நம்ப மாட்டார். ஓ.பி.எஸ். குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் என்னை தெரியும். விரக்தியில் உள்ள ஓ.பி.எஸ். மனநிலை பாதித்தவர் போல் பேசி வருகிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர் நிருபர்கள் குறுக்கிட்டு, ‘தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் திருச்சி முக்கொம்பு அணையை பார்வையிடும் நேரத்தில் நீங்களும் சுற்றுப்பயணம் செல்கிறீர்களே? என்றனர்.

    இதற்கு தினகரன் பதிலளித்து பேசும் போது, ஸ்டாலின் சுற்றுப்பயணம் பற்றி எனக்கு தெரியாது. கடைமடை பகுதிவரை தண்ணீர் இல்லாததால் ஆகஸ்ட் 19-ந் தேதி நீடாமங்கலத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்து விட்டோம். அதன்படி இன்று மாலை நீடாமங்கலத்தில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

    கடைமடைக்கு தண்ணீர் இல்லாததால் விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளனர். தூர்வாரும் பணியில் சுமார் ரூ.400 கோடி வரை முறைகேடு நடந்துள்ளது. அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு பொதுமக்கள் மத்தியில் அமோக ஆதரவு உள்ளது. இதனால் 234 தொகுதிகளிலும் நாங்கள் வெற்றி பெறுவோம்.

    காவிரி வெற்றி விழா பொதுக்கூட்டம் என்று கூத்து நடத்தி வருகிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    பேட்டியின் போது மாநில பொருளாளர் ரெங்கசாமி மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர். #dinakaran #OPanneerselvam

    கட்சியை காப்பாற்ற ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். ஆட்சி செய்யவில்லை. பணம் சம்பாதிப்பதில் தான் அவர்கள் குறியாக உள்ளனர் என்று தினகரன் அணி நிர்வாகி புகழேந்தி குற்றம் சாட்டினார். #Pugazhenthi #opanneerselvam #edappadipalanisamy

    மதுரை:

    டி.டி.வி. தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக கர்நாடக மாநில நிர்வாகி புகழேந்தி இன்று விமானம் மூலம் மதுரை வந்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    திருமங்கலம் கூட்டுறவு சங்க தேர்தலில் ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். அணியினர் மோதலில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் கட்சியை காப்பாற்ற ஆட்சி செய்யவில்லை. பணம் சம்பாதிப்பதில்தான் குறியாக உள்ளனர்.

    தற்போது ஆட்சியில் இருப்பவர்கள் யாரும் அமைச்சர்கள் இல்லை. அனைவரும் ஜோக்கர்கள்தான். திருப்பரங்குன்றம் இடைத் தேர்தலில் அ.தி.மு.க. டெபாசிட் வாங்கினால் நான் அரசியலை விட்டு விலகி விடுவேன்.


    ஓ.பி.எஸ். மற்றும் இ.பி.எஸ். தேர்தல் பிரசாரம் செய்தாலே நாங்கள் ஜெயித்து விடுவோம். இவர்களை யாரும் அமைச்சர்களாக பார்ப்பதில்லை. பொம்மைகளாகத்தான் பார்க் கின்றனர்.

    கரூர், மதுரை உள்ளிட்ட பகுதிகளில் மணல் அள்ளப்படும் விவகாரத்தில் அமைச்சர்கள் மற்றும் சில போலீஸ் அதிகாரிகளுக்கும் பங்கு உள்ளது. நேர்மையான அதிகாரிகள் இதனை தட்டிக் கேட்டால் கத்தியை காட்டி மிரட்டப்படுகின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #Pugazhenthi #opanneerselvam #edappadipalanisamy

    மாரடைப்பால் மரணம் அடைந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ. போஸ் உடலுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். #ADMK #MLABose #EPS #OPS
    மதுரை:

    திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே. போஸ். உடல்நலக் குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலில் ஆபரேசன் செய்து கொண்டார். கடந்த வாரம் மதுரை திரும்பிய ஏ.கே.போஸ் ஜீவாநகரில் உள்ள வீட்டில் சிகிச்சை பெற்று வந்தார்.

    நேற்று நள்ளிரவு 1 மணி அளவில் ஏ.கே.போசுக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டது. அவரை மதுரை தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் தீவிர மாரடைப்பு காரணமாக ஏ.கே.போஸ் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். அவருக்கு வயது 70.

    ஏ.கே.போஸ் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இன்று பிற்பகல் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

    அப்போது முதல்வர் பழனிசாமி கூறுகையில், அதிமுகவில் விசுவாசமிக்க தொண்டனாக பணியாற்றியவர் ஏ.கே.போஸ்; கட்சி பணியில் சிறப்பாக செயல்பட்டவர்; தன்னுடைய உழைப்பால் கட்சியில் படிப்படியாக முன்னேறியவர் என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.



    அவருடன் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், எம்.எல்.ஏ.க்கள் ராஜன்செல்லப்பா, பெரியபுள்ளான், மாணிக்கம், சரவணன், நீதிபதி, கலெக்டர் வீரராகவராவ், போலீஸ் கமி‌ஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம், மாநகராட்சி கமி‌ஷனர் அனீஷ்சேகர் மற்றும் முக்கிய பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர்.

    பொதுமக்கள் அஞ்சலிக்கு பின்னர் ஏ.கே.போஸ் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு மதுரை கீரைத்துறையில் உள்ள மயானத்தில் இன்று மாலை தகனம் செய்யப்படுகிறது.

    ஜெயலலிதாவால் பாராட்டப்பட்ட ஏ.கே.போஸ் கடந்த 2006 முதல் 2011 வரை திருப்பரங்குன்றம் தொகுதி சட்டசபை உறுப்பினராக தேர்ந் தெடுக் கப்பட்டார்.

    இவருக்கு பாக்கியலட்சுமி என்ற மனைவியும், சிவசுப்பிரமணியன், சங்கர் என்ற 2 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர். #ADMK #MLABose #EPS #OPS
    ஓ.பி.எஸ். மீதான வழக்கை சி.பி.ஐ. விசாரித்து உண்மை நிலையை கண்டறிய வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் நிரூபர்களிடம் அளித்த பேட்டியில் கூறியுள்ளார். #Dhinakaran #Panneerselvam

    ராமேசுவரம்:

    முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் 3-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி ராமேசுவரத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணைப்பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் ராமேசுவரம் வந்தார்.

    அப்துல்கலாம் அண்ணன் வீட்டுக்குச் சென்று நலம் விசாரித்த தினகரன் அங்கு நிரூபர்களிடம் கூறியதாவது:-

    அப்துல்கலாம் நினைவு நாளையொட்டி ஆண்டுதோறும் அஞ்சலி செலுத்த வருவேன். அவரது நினைவு நாளை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும்.

    அப்துல்கலாம் நினைவிடத்தில் தேசிய அறிவியல் அருங்காட்சியகம் அமைக்க வேண்டும். அவரது நினைவு நாளில் மாணவர்கள் இந்தியாவை வல்லரசாக்குவோம் என உறுதியேற்க வேண்டும்.

    18 எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்டு செய்யப்பட்ட வழக்கில் விரைவில் நியாயமான தீர்ப்பு வரும். அப்போது தமிழக அரசு கவிழும். அது விரைவில் நடக்கும். அம்மாவின் ஆட்சி தமிழகத்தில் மீண்டும் மலரும்.

    ஓ.பி.எஸ். மீதான வழக்கை சி.பி.ஐ. விசாரித்து உண்மை நிலையை கண்டறிய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Dhinakaran #Panneerselvam

    ராயப்பேட்டையில் அ.தி.மு.க. தலைமை கழகத்தில் அ.தி.மு.க. உயர்நிலை குழு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் வழிகாட்டு குழுவை அமைக்க ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தினார்.#Edappadipalanisamy #opanneerselvam

    சென்னை:

    அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் செயல்பட்டு வந்த அணியினரும், ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் செயல்பட்டு வந்த அணியினரும் கடந்த ஆண்டு ஒன்றாக இணைந்தனர். இதையடுத்து ஓ.பன்னீர் செல்வத்துக்கு துணை முதல்-அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.

    அ.தி.மு.க.வை வழி நடத்த ஓ.பன்னீர்செல்வம் ஒருங்கிணைப்பாளராகவும், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இணை ஒருங்கிணைப்பாளராகவும் பொறுப்பேற்றனர். அவர்களுக்கு உதவி செய்ய துணை ஒருங்கிணைப்பாளர்களும் நியமிக்கப்பட்டனர்.

    மேலும் அ.தி.மு.க. கட்சி விவகாரங்களை கவனிக்க 11 பேர் கொண்ட வழிகாட்டு குழு அமைக்க வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. ஆனால் இதுவரை அத்தகைய குழு எதுவும் நியமிக்கப்படவில்லை. அதற்கான அறிகுறிகளும் தென்படவில்லை.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் ராயப்பேட்டையில் அ.தி.மு.க. தலைமை கழகத்தில் அ.தி.மு.க. உயர்நிலை குழு கூட்டம் நடந்தது. பாராளுமன்றம் கூட உள்ள நிலையில் அ.தி.மு.க. எம்.பி.க்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று அந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியானது.

    ஆனால் உண்மையில் வேறு பல வி‌ஷயங்களும் விவாதிக்கப்பட்டதாக தற்போது தெரியவந்துள்ளது. குறிப்பாக அ.தி.மு.க. ஆட்சிக்கு நெருக்கடி ஏற்படும் வகையில் வருமான வரித்துறை நடத்தும் சோதனைகள் பற்றி பேசப்பட்டது.

    குறிப்பாக சத்துணவு கூடங்களுக்கு முட்டை விநியோக்கும் கிறிஸ்டி நிறுவனத்தில் நடந்த வருமான வரி சோதனை மற்றும் நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரர் செய்யாத்துரை வீடு, அலுவலகங்களில் நடந்த வருமான வரி சோதனை பற்றி காரசாரமாக விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.

    இதையடுத்து அ.தி.மு.க. வுக்கு ஏற்பட்டுள்ள அவப்பெயரை துடைக்க வேண்டுமானால் கட்சி நிர்வாகத்தை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்று கூட்டத்தில் பேசப்பட்டது. அப்போது துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், “ஏற்கனவே பேசப்பட்ட படி கட்சியை வழி நடத்த வழிகாட்டுக் குழுவை உடனே ஏற்படுத்த வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

    அதற்கு கூட்டத்தில் பங்கேற்ற அனைவரும் ஒப்புதல் தெரிவித்தனர். எனவே அ.தி.மு.க.வை வழிநடத்தும் வழிகாட்டு குழு விரைவில் அமைக்கப்படும் என்று தெரிகிறது. இதற்கான அறிவிப்பு ஓரிரு நாட்களில் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.

    அ.தி.மு.க. கட்சி நிர்வாகங்களை மேற்கொள்ள இருக்கும் இந்த வழிகாட்டு குழு மொத்தம் 11 உறுப்பினர்களை கொண்டதாக இருக்கும் அதில் 6 பேர் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்களாக இருப்பார்கள்.

    5 பேர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களாக இருப்பார்கள். எனவே வழிகாட்டு குழுவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் கை ஓங்கி இருப்பதாக தெரிகிறது.

    இந்த வழிகாட்டு குழு மூலம் அ.தி.மு.க. கட்சியை புத்துணர்ச்சி பெற செய்வதற்கு புதிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்படுவார்கள் என்று கூறப்படுகிறது. #Edappadipalanisamy #opanneerselvam

    அ.தி.மு.க. எக்கு கோட்டை. எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது என்று எடப்பாடி பழனிசாமி- ஓ.பன்னீர்செல்வம் பேசினர். #edappadipalanisamy #opanneerselvam

    மதுரை:

    மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. அலுவலகம் கட்ட பரவையில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அங்கு பூமிபூஜை இன்று நடைபெற்றது. மாநகர் மாவட்ட செயலாளரும், அமைச்சருமான செல்லூர் ராஜூ தலைமை தாங்கினார்.

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அடிக்கல் நாட்டினர்.

    1½ கோடி தொண்டர்கள் நிறைந்த மாபெரும் இயக்கம் அ.தி.மு.க. இந்த இயக்கத்தை வலுவோடும், பொலிவோடும் நடத்தி இந்தியாவிலேயே 3-வது பெரிய கட்சியாக மாற்றி காட்டியவர் புரட்சித்தலைவி அம்மா.

    ஒவ்வொரு மாவட்டத்திலும் கட்சி அலுவலகம் கட்ட அம்மா உத்தரவிட்டார். அதன்படி பல்வேறு மாவட்டங்களில் கட்சி அலுவலகம் கட்ட முடிவு செய்யப்பட்டது. இந்த நேரத்தில்தான் அம்மாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

    தற்போது அம்மாவின் லட்சிய கனவை நிறைவேற்றும் வகையில் பல்வேறு மாவட்டங்களில் கட்சி அலுவலகம் கட்டப்பட்டு வருகிறது. அ.தி.மு.க.வினர் மட்டுமின்றி பொதுமக்களும் இங்கு தங்கள் கோரிக்கை மனுக்களை கொடுக்கலாம். அவர்கள் தெரிவிக்கும் கோரிக்கைகள் உடனுக்குடன் நிறைவேற்றி தரப்படும். இந்த இயக்கம் ஏழை எளிய மக்களுக்காக உருவாக்கப்பட்ட இயக்கம். இதை யாராலும் அசைக்க முடியாது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-

    தமிழ் சமுதாயத்திற்காக உழைத்தவர் தந்தை பெரியார். தமிழர்களுக்காக வாழ்ந்தவர் அறிஞர் அண்ணா. ஏழைகளுக்கு பாடு பட்டவர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். இவர்களின் கொள்கைகளை, லட்சியங்களை செயல்வடிவம் ஆக்கியவர் புரட்சித்தலைவி அம்மா.

    அ.தி.மு.க. தொடங்கும் போது 16 லட்சம் உறுப்பினர்கள் இருந்தனர். ஆனால் 1½ கோடி தொண்டர்கள் கொண்ட இயக்கமாக மாற்றி காட்டியவர் அம்மா. எனவே அவரது பாதையில் தமிழக மக்களுக்கு நல்லாட்சி நடத்தி வருகிறோம். இந்த இயக்கத்தை தொண்டர்கள் ஆலமரம்போல காத்து வருகிறார்கள்.

    எனவே எக்கு கோட்டையான அ.தி.மு.க.வை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ., நிர்வாகிகள் துரைப்பாண்டியன், தங்கம், வில்லாபுரம் ராஜா, எம்.எஸ்.பாண்டியன், பரவை ராஜா, திரவியம், கிரம்மர் சுரேஷ், வக்கீல் ரமேஷ், நிலையூர் முருகன், வில்லாபுரம் ரமேஷ், அன்புச்செழியன், சோலைராஜா, கருப்பசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ×