search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புயல்"

    எதிர்ப்புகள் அதிகமாகி வருவதால் புயலால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்கவே அ.தி.மு.க. அமைச்சர்கள் பயப்படுகின்றனர் என்று கறம்பக்குடியில் டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார். #TTVDhinakaran #GajaCyclone
    புதுக்கோட்டை :

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஒன்றியத்தில் உள்ள மருதன்கோன்விடுதி நால்ரோடு, அம்மானிப்பட்டு, கறம்பக்குடி, புதுப்பட்டி, சூரக்காடு, வெட்டன்விடுதி ஆகிய பகுதிகளில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.

    கறம்பக்குடி சீனிகடை முக்கம் பகுதியில் திறந்த வேனில் டி.டி.வி. தினகரன் நின்றபடி பேசியதாவது:-

    கஜா புயல் குறித்து முன்னெச்சரிக்கை அறிவிப்புகளை அரசு சார்பில் அறிவிக்கப்பட்டபோது தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் நிவாரண நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாகவே அனைவரும் நம்பினோம். ஆனால், புயல் பாதிப்பிற்குள்ளாகி 10 நாட்களுக்கு மேல் ஆகியும் மின்சாரம், குடிநீர் உள்பட அத்தியாவசிய தேவைகளுக்காக மக்கள் துன்பப்பட்டு வருகின்றனர்.

    நிவாரண முகாம்களில் உள்ள டெல்டா பகுதி மக்களுக்கு அடிப்படை வசதிகள் கூட செய்து கொடுக்கப்படாததால் துன்பப்பட்டு வருகின்றனர். தார்ப்பாய் வழங்க வேண்டும் என விவசாயிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்தும் இதுவரை வழங்கப்படவில்லை. விளம்பர பதாகைகளை கட்டி குடியிருக்க வேண்டிய நிலைக்கு ஏழை மக்கள் தள்ளப்பட்டு உள்ளனர்.

    புயலை வைத்து நான் அரசியல் செய்வதாக அமைச்சர்கள் குற்றம் சாட்டுகின்றனர். அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஒரு தொண்டு நிறுவனம்போல் செயல்பட்டு நிவாரண நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. எதிர்ப்புகள் அதிகமாகி வருவதால் மக்களை சந்திக்கவே அ.தி.மு.க. அமைச்சர்கள் பயன்படுகின்றனர். அ.தி.மு.க. எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்களை மக்கள் விரட்டி அடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தானே புயலின்போது மறைந்த ஜெயலலிதா அரசு செயல்பட்டதைபோல, தற்போதைய புயலின்போது அரசு செயல்படவில்லை. இதனால் மக்கள் வெறுப்புக்கு உள்ளாகி உள்ளனர்.

    இவ்வாறு அவர் பேசினார். #TTVDhinakaran #GajaCyclone
    நெடுவாசலில் கஜா புயலால் தென்னை மரங்கள் முற்றிலும் முறிந்து சேதமடைந்ததால் மனமுடைந்த விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். #gajacyclone

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் பகுதியை சேர்ந்தவர் திருச்செல்வம் (வயது 40). இவர் அப்பகுதியில் 10 ஏக்கரில் தென்னை விவசாயம் செய்து வந்தார். இந்தநிலையில் கஜா புயலால் அவரது தென்னை மரங்கள் முற்றிலும் முறிந்து சேதமடைந்தன.

    இதனால் மனவேதனையில் இருந்து வந்த திருச்செல்வம் நேற்றிரவு திடீரென வி‌ஷம் குடித்து விட்டார். உயிருக்கு போராடிய அவரை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை திருச்செல்வம் இறந்தார்.

    இதேபோல் புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக் குடி அருகே உள்ள முள்ளங்குறிச்சி கருப்பக்கோன் தெருவை சேர்ந்தவர் முனியாண்டி (வயது 64). இவர் அப்பகுதியில் தென்னை, வாழை உள்ளிட்டவற்றை வளர்த்து வந்தார். இந்த நிலையில் கஜா புயலால் அவை அனைத்தும் சேதமடைந்து விட்டன. இதனால் மனவேதனையில் இருந்து வந்தார்.


    இந்த நிலையில் நேற்றிரவு திடீரென அவருக்கு நெடுஞ்சுவலி ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார்.  #gajacyclone

    புயலை பற்றி யாரும் எங்களுக்கு பாடம் எடுக்க தேவையில்லை என்று புதுக்கோட்டையில் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களிடம் அளித்த பேட்டியில் கூறியுள்ளார். #MinisterJayakumar #GajaCyclone

    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் கடலோர பகுதிகளில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களையும், புயலால் பாதிக்கப்பட்ட படகுகளையும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    கோட்டைப்பட்டினம் விசைப் படகு மீனவர் சங்கத்தினரை சந்தித்து அவர்களின் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டதுடன், கட்டுமாவடி, பிள்ளையார்திடல், வடக்கு புதுக்குடி உள்ளிட்ட இடங்களில் நிவாரண உதவிகளை வழங்கிய பின்னர் ஜெகதாப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தையும் பார்வையிட்டார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது :-

    கடலோர பகுதிகளில் புயலுக்கு முன்னரே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதால் நிவாரண பணிகளில் எந்த தயக்கமும் ஏற்படவில்லை. புயல் பாதித்த பகுதிகளில் தொடர்மீட்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களின் படகுகள் குறித்த பல்வேறு சேத விபரங்கள் கணக்கெடுக்கப்பட்டு வருவதுடன் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உரிய நிவாரணம் வழங்கப்படும்.

    புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை மத்திய குழு ஆய்வு மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் 7ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமங்கள் புயலால் பாதிக்கப்பட்டுள்ளன. அனைத்து கிராமங்களுக்கும் மத்திய குழு ஆய்வுக்கு செல்ல முடியாது. அதிகமாக பாதிக்கப்பட்ட இடங்களை ஆய்வு செய்து விரைவில் அதற்கான அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பித்தால்தான் நிதியும் விரைவாக கிடைக்கும்.


    தமிழக அரசு கோரியப்படி ரூ.15ஆயிரம் கோடியை மத்திய அரசு வழங்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இதற்கு முன்பு இயற்கை பேரிடர் காலங்களில் நிவாரணம் வழங்கியதில் பின்பற்றியதை இம்முறை மத்திய அரசு பின்பற்றாது என நம்புகிறோம்.

    விவசாய கடன் தள்ளுபடி என்பது அரசின் கொள்கை முடிவு.அதை தமிழக முதல்வர் முடிவு செய்வார். தமிழக அமைச்சர்கள் மக்களோடு மக்களாக உள்ளனர். மக்களை அமைச்சர்கள் சந்திக்கவில்லை என்று விமர்சிப்பவர்கள் வானத்தில் இருந்து குதித்தவர்கள் போன்று பேசக்கூடாது. எதிர்க்கட்சிகள் இதில் அரசியல் செய்யக்கூடாது. புயலில் இருந்து மீனவவ்களை காப்பாற்றி உள்ளோம். பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு விரைவில் நிவாரண தொகை வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது அப்போது அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தானே. வர்தா. ஒக்கி என‌ பல புயல்களில் பயிற்சி எடுத்தவர்கள் நாங்கள். யாரும் எங்களுக்கு பாடம் சொல்லிக்கொடுக்க வேண்டாம். ஜெயலலிதா இருந்த போதிலிருந்தே பல விமர்சனங்களை சந்தித்தவர்கள் நாங்கள். இது அரசியல் ஆக்குவதற்கான களம் அல்ல. கஜா‌ புயல் மீட்புக்குறித்து எதிர்க்கட்சிகள் ஆலோசனைகள் வழங்கலாம். மக்களை தூண்டி விட்டு அரசியல் செய்யக் கூடாது.

    கஜா புயல் மீட்புக்கு அனைத்து கட்சி கூட்டம் கூட்ட‌ அவசியம் இல்லை. மக்களுக்கு உதவி செய்ய ஸ்டாலினை யாரும் தடுக்கவில்லை. 2 லாரிகளில் நிவாரணப் பொருட்களை அனுப்பி வைத்து விட்டு ஓடி ஒளியும் ஆட்கள் இல்லை. பாதிக்கப்பட்ட மக்களுக்கு முழுமையாக நிவாரண பொருட்களை வழங்கி வருகின்றோம், மக்களோடு மக்களாக இருக்கின்றோம். யாரும் எங்களுக்கு அறிவுரை சொல்ல தேவையில்லை. அவரவர்கள் வேலையை பார்த்தாலே போதும். நாங்கள் எங்கள் வேலையை பார்த்து வருகிறோம். மக்கள் அமைச்சர்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள் என்று கூறுவது திட்டமிட்ட சதி. இந்த சதியை ஒரு குழுவாக இருந்து செயல்படுத்துகிறார்கள். இதற்கெல்லாம் அஞ்சுபவர்கள் நாங்கள் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார். #MinisterJayakumar #GajaCyclone

    நாகை மாவட்டத்தில் கஜா புயல் பாதித்த பகுதிகளை மத்தியக்குழுவினர் இன்று ஆய்வு செய்தனர். #GajaCyclone #CentralCommittee

    நாகப்பட்டினம்:

    புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களில் பாதிப்புகள் குறித்து அறிவதற்காக மத்தியக் குழுவினர் மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணை செயலாளர் (நீதி) டேனியல் ரிச்சர்டு தலைமையில் வந்துள்ளனர்.

    இந்தக்குழுவில் மத்திய நிதித்துறை(செலவினங்கள்) அமைச்சகத்தின் ஆலோசகர் ஆர்.பி.கவுல், வேளாண்மை, கூட்டுறவு மற்றும் விவசாயிகள் நலத்துறையின்(ஐதராபாத்) இயக்குனர்(பொறுப்பு) பி.கே.ஸ்ரீவத் சவா, மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சக துணை செயலாளர் மாணிக்சந்திர பண்டிட், மத்திய எரிசக்தித்துறை தலைமை பொறியாளர் வந்தனா சிங்கால், மத்திய நீர் ஆதாரத்துறை இயக்குனர் ஜெ.ஹர்ஷா, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சக கண்காணிப்பு பொறியாளர் ஆர்.இளங்கோவன் ஆகியோர் உள்ளனர்.

    இந்த குழுவினர் நேற்று முன்தினம் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு சென்று அங்கு புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்தனர். பின்னர் அங்கிருந்து காரில் புறப்பட்டு தஞ்சை வந்தனர்.

    தஞ்சை மாவட்டத்தில் ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை உளூர், நெய்மேலி, புலவன் காடு, மல்லிப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் சென்று புயல் பாதிப்புகளை பார்வையிட்டார். பின்னர் அங்கிருந்து திருவாரூர் மாவட்டத்திற்கு சென்று அங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ள மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தனர்.

    இதைத் தொடர்ந்து நேற்று இரவு திருவாரூரில் இருந்து புறப்பட்ட மத்தியக் குழுவினர் நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள தனியார் ஓட்டலுக்கு சென்று தங்கினர். பின்னர் இன்று காலை ஓட்டலில் அதிகாரிகளுடன் மத்தியக் குழுவினர் ஆலோசனை நடத்தினர்.

    பின்னர் 8.45 மணிக்கு ஓட்டலில் இருந்து காரில் புறப்பட்டு வேட்டைகாரனிருப்பு பகுதிக்கு சென்றனர். அவர்களுடன் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், ஓ.எஸ்.மணியன், தங்கமணி, சரோஜா, சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன், வருவாய் நிர்வாக ஆணையர் சத்தியகோபால், நாகை கலெக்டர் சுரேஷ்குமார் மற்றும் அதிகாரிகள் சென்றனர்.

    முதலாவதாக வேட்டைகாரனிருப்பு பகுதிக்கு சென்று மத்தியக்குழுவினர் பார்வையிட்டனர். அங்கு புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்த்தனர். பின்னர் அங்கு இந்திராணி என்பவர் குடிசை வீட்டின் மீது தென்னை மரம் விழுந்து சேதமாகி உள்ளது அதனை பார்வையிட்டு அவர்களிடம் பாதிப்பு குறித்து கேட்டனர்.


    பின்னர் புயலால் பாதிக்கப்பட்ட தென்னை மரங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அதைத் தொடர்ந்து சீரமைக்கப்பட்டு வரும் துணைமின் நிலையத்தை பார்வையிட்டனர்.

    அப்போது அங்கே கூடி நின்றவர்கள் மத்தியக் குழுவினரிடம் புயல் பாதிப்பில் இருந்து விரைவில் மீளமுடியாத நிலைமைக்கு நாங்கள் உள்ளோம். எங்கள் தொழில் அனைத்தும் முடங்கி உள்ளது. பல வருடங்களாக பார்த்து பார்த்து வளர்த்த தென்னை மரங்கள் அடியோடு சாய்ந்து விட்டது. எங்களுக்கு என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கிறோம். அரசு தான் இதை கவனத்தில் கொண்டு எங்களுக்கு கூடுதல் நிவாரணம் உடனே கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.

    அவர்களுக்கு ஆறுதல் கூறி அங்கிருந்து சென்ற குழுவினர் வேட்டைகாரனிருப்பு பகுதியில் புயலால் பாதிக்கப்பட்டு சேவை மையங்களில் தங்க வைக்கப்பட்டிருந்த மக்களை சந்தித்து பாதிப்புகள் குறித்து கேட்டனர். அவர்களிடம் உணவு சரியாக வழங்கப்படுகிறதா? சாப்பாடு தரமாக உள்ளதா? என்று கேட்டனர்.இதையடுத்து முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கு வழங்கப்படும் உணவுகளை மத்தியக் குழுவினர் சாப்பிட்டு ருசி பார்த்தனர்.

    பின்னர் அங்கிருந்து புறப்பட்டு மரங்கள் சாய்ந்து கிடக்கும் பகுதிக்கு சென்று பார்வையிட்டனர். அப்போது பெண்கள் சிலர் அவர்களை சூழ்ந்து கொண்டு எங்கள் வாழ்வாதாரம் அழிந்து விட்டது என்று கண்ணீர் மல்க கூறினர்.

    அதைத் தொடர்ந்து கோவில்பத்து கிராமத்திற்கு சென்று அங்கு சேதமாகி உள்ள செல்போன் கோபுரங்கள், தமிழ்நாடு நுகர்பொருள் கழக சேமிப்பு கிடங்கு ஆகியவை பார்வையிட்டனர். அந்த பகுதியில் சேதங்கள் குறித்து அப்பகுதி மக்களிடம் கேட்டுக் கொண்டனர்.

    அங்கிருந்த புறப்பட்ட குழுவினர் கோடியக்கரை பகுதிக்கு சென்று பாதிக்கப்பட்டுள்ள மீனவர்கள் வீடுகளை பார்வையிட்டனர். அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள முகாம்களை பார்வையிட்டும் அவர்களுக்கு ஆறுதல் கூறினர். அப்போது மீனவர்கள் எங்களுக்கு கூடுதல் நிவாரணம் ஒதுக்க வேண்டும். அதிகாரிகள் இந்த பகுதியை வந்துபார்வையிட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அதைத் தொடர்ந்து பெரிய குத்தகை, புஷ்பவனம், நாலுவேதபதி உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று புயல் பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தனர்.

    பின்னர் அங்கிருந்து விழுந்த மாவடி சென்ற குழுவினர் அங்கு சேதமடைந்த படகுகள், வலைகளை பார்வையிட்டனர். அப்போது கூடுதல் நிவாரணம் இருந்தால் மட்டுமே எங்கள் வாழ்க்கை தொடர முடியும். மேலும் புதிய படகுகள் அரசு வழங்க வேண்டும் என்று கூறினர். #GajaCyclone #CentralCommittee

    பட்டுக்கோட்டை அருகே புயலால் விழுந்து கிடந்த மின்கம்பி அறுந்து விவசாயி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #Gajastorm

    பட்டுக்கோட்டை:

    தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகில் உள்ள வாட்டாக்குடி தெற்கு கிராமத்தைச் சேர்ந்தவர் திருநாவுக்கரசு (வயது 60). விவசாயி. இவரது மனைவி தங்கம். 2 மகள்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி விட்டனர்.

    இந்த நிலையில் நேற்று வாட்டாக்குடி தெற்கு மெயின் ரோட்டில் திருநாவுக்கரசு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அந்த பகுதியில் கஜா புயலால் சேதமாகி சாய்ந்து கிடந்த மின்கம்பத்தில் இருந்து தாழ்வாக மின்கம்பி தொங்கி கொண்டிருந்தது.

    இதை கவனிக்காமல் திருநாவுக்கரசு மோட்டார் சைக்கிளில் வந்த போது, மின்கம்பி அவரது கழுத்தை அறுத்தது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து மதுக்கூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து திருநாவுக்கரசு உடலை மீட்டு பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பட்டுக்கோட்டை பகுதியில் புயலால் சேதமான மின்கம்பங்கள் பல இடங்களில் அப்படியே கிடக்கிறது. இந்த நிலையில் மின்கம்பி அறுத்து விவசாயி பலியான சம்பவம் பட்டுக்கோட்டை பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #Gajastorm

    வேலூர் பெண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள ராஜீவ்காந்தி கொலை கைதி நளினி கஜா புயல் நிவாரண பணிக்கு ரூ.1000 வழங்கியுள்ளார். #Nalini #Gajastorm

    வேலூர்:

    கஜா புயல் காரணமாக காவிரி டெல்டா மாவட்டங்களில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் வீடுகளை இழந்தும், மின்சாரம், குடிநீர் இல்லாமல் தவிக்கின்றனர்.

    பல ஆயிரம் ஏக்கர் வாழை, தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன. பல்வேறு தரப்பில் இருந்து புயலால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு பொருட்கள், உணவு ஆகியவற்றை நிவாரணமாக வழங்கி வருகின்றனர். மேலும் நிவாரண நிதியும் வழங்கி வருகின்றனர்.

    வேலூர் பெண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள ராஜீவ்காந்தி கொலை கைதி நளினி கஜா புயல் நிவாரண பணிக்கு ரூ.1000 வழங்கியுள்ளார். நளினி ஜெயிலில் டெய்லரிங் வேலை செய்து வருகிறார். கைதிகளுக்கான துணிகளை தினமும் தைத்து கொடுக்கிறார்.

    இதன் மூலம் கடந்த மாதம் ரூ.1000 கூலி வாங்கினார். அந்த பணத்தை ஜெயில் சூப்பிரண்டு ஆண்டாளிடம் நிவாரணத்துக்கு அளிக்கும்படி வழங்கினார். அதனை சிறைத்துறை மூலம் அனுப்பி வைத்தனர்.

    ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டுமென பல்வேறு தப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.

    சட்டரீதியாக அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நளினியின் வக்கீல் புகழேந்தி தெரிவித்துள்ளார். இந்த நிலையில் நளினி கஜா புயல் நிவாரண பணிக்கு உதவி செய்துள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. #Nalini #Gajastorm

    கஜா புயல் பாதிப்பில் மீட்புக்களத்தில் அரசுடன் பொதுமக்களும் கைகோர்க்க வேண்டும் என்று நடிகர் விவேக் கூறியுள்ளார். #Gajastorm #ActorVivek

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடிகர் விவேக், கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள பொது மக்களுக்கு வழங்குவதற்காக ரூ.3 லட்சம் மதிப்புள்ள நிவாரண பொருட்களை ஒரு லாரியில் நேற்று கொண்டு வந்தார். அவற்றை கலெக்டர் சுரேஷ்குமாரிடம் ஒப்படைத்தார்.

    பின்னர் இது குறித்து நடிகர் விவேக் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பேரிடர்களால் பாதிக்கப்படும் பொதுமக்களை அரசுதான் முழு நிவாரணம் வழங்கி மீட்க முடியும். அதற்காக நிவாரண உதவி செய்ய முன்வரும் சமூக ஆர்வலர்களை உதாசீனப்படுத்த கூடாது. அவர்களை கண்ணியமாக நடத்த வேண்டும்.

     


    இயற்கை பேரிடர் என்பதால் அரசை யாரும் குறை சொல்ல கூடாது. மீட்புக்களத்தில் அரசுடன் பொதுமக்களும் கைகோர்க்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ விரும்புபவர்கள் சமைத்த உணவை வழங்குவதை விட குழந்தைகளுக்காக மருந்து, பால் பவுடர், போர்வை, பெட்ஷீட், பாய், கொசுவலை ஆகியவற்றை கொடுத்து உதவ வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Gajastorm #ActorVivek

    புயல் பாதித்த பகுதிகளில் தன்னார்வ அமைப்பு போல் அ.ம.மு.க. செயலாற்றுகிறது என்று டி.டி.வி. தினகரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். #Gajastorm #TTVDhinakaran

    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ளிக்கோட்டை, மகாதேவபட்டினம், கூப்பாச்சிக்கோட்டை, துளசேந்திரபுரம், பைங்காநாடு உள்ளிட்ட கிராம பகுதிகளில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் ஆறுதல் கூறி நிவாரண பொருட்களை வழங்கினார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    கஜா புயலால் பாதித்த மாவட்டங்களை பேரிடர் மாவட்டமாக அறிவிக்க வேண்டும். கஜா புயலுக்கு இடைக்கால நிவாரணமாக மத்திய அரசு உடனடியாக ரூ.5 ஆயிரம் கோடி வழங்க வேண்டும். அரசு அதிகாரிகள், அமைச்சர்கள் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு செல்லாமல் இருப்பதால் பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் போராட்ட களமாக மாறும் என்ற அச்சம் நிலவுகிறது.

    தென்னை மரங்கள் அதிக அளவு பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும்.


    ஒரு தாயைப்போல அரசாங்கம் இந்த மக்களை கவனித்தால் தான் இதுபோன்ற பேரழிவுகளில் இருந்து மக்களை மீட்டு இயல்பு வாழ்க்கைக்கு கொண்டு வர முடியும். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தஞ்சையில் முகாமிட்டு நிவாரண பணிகளை கவனிக்க வேண்டும். அப்படி செய்தால்தான் நிவாரண பணிகள் முழுவீச்சில் நடைபெற்று, மக்கள் பாதிப்பில் இருந்து விடுபட வழி வகுக்கும்.

    அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் அரசியல் கட்சியை போன்று செயல்படாமல் ஒரு தன்னார்வ அமைப்பு போன்றுதான் புயல் பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் செயல்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது திருவாரூர் மாவட்ட செயலாளர் எஸ்.காமராஜ், மாநில அமைப்பு செயலாளர் சிவா.ராஜமாணிக்கம், மாநில வக்கீல் பிரிவு செயலாளர் சீனிவாசன் ஆகியோர் உடன் இருந்தனர். #Gajastorm #TTVDhinakaran

    ஊருக்குள் சென்று புயல் சேதத்தை பார்வையிட வேண்டும் என்பதற்காக மக்கள் மறிக்கிறார்கள் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார். #Gajastorm #MinisterRajendraBalaji

    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தங்கியிருந்து நிவாரண பணிகளை பார்வையிட்டு துரிதப்படுத்தி வருகிறார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    நான் சென்ற டெல்டா மாவட்ட பகுதிகளில் கஜா புயலால் கடும்சேதம் ஏற்பட்டிருக்கிறது, தென்னை தேக்கு மா, பலா, வாழையென, விவசாயிகள், எல்லாவற்றையும், இழந்து வீடு-வாசல்களை, இழந்து பரிதவிக்கிறார்கள், உலகத்திற்கே, உணவளித்தவர்கள், உணவுக்காக, ஏங்க வைத்திருக்கிற, இந்த பேரிடரை, எதிர்கொள்ள எல்லா உதவிகளையும், இந்த அரசு செய்து வருகிறது, ஆங்காங்கே மக்கள், மறிக்கிறார்கள் என்றால், எங்களை எதிர்த்து அல்ல.


     

    நாங்கள் ஊருக்குள் சென்று சேத பகுதிகளை பார்க்கவேண்டும், ஆறுதல் சொல்ல வேண்டும் என்றுதான் அழைக்கிறார்கள், வெளி மாவட்டங்களில் இருந்து, பணியாளர்களும், அதிக அளவில் பணியில், ஈடுபட்டு, தற்போது மின் வினியோகம், குடிநீர் வினியோகம், சீராகி வருகிறது, நான் என் வாழ்நாளில், பார்த்த பெரும் புயல் இது தான். நாகையிலே தொடங்கி, தேனி கம்பம், கொடைக்கானல் மலைவரை, கடுமையாக தாக்கி பேரழிவை தந்திருக்கிறது.

    கஜா புயல் நிவாரண பணிகள் மந்தகதியில் நடைபெறுவதாக, தினகரன் குற்றச்சாட்டு வருவது சரியானதல்ல. இதில் அரசியல் செய்வது தேவையற்றது, மிகப்பெரிய இழப்பை சந்தித்திருக்கும் டெல்டா மக்களுக்கு, எல்லோரும் சேர்ந்து உதவுதே இப்போதுள்ள பணி. மத்தியகுழுவினர், இன்று திருவாரூர் பகுதியை பார்வையிடுகிறார்கள், மத்திய அரசும், மக்களின் துயரை போக்க அதிக நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Gajastorm #MinisterRajendraBalaji

    கஜா புயல் தாக்கிய பகுதிகளில் மத்திய குழுவினர் நேற்று மாலை ஆய்வு செய்தனர். முன்னதாக அவர்கள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி யுடன் ஆலோசனை மேற்கொண்டனர். #gajacyclone #CentralCommittee #cycloneeffected
    சென்னை:

    தமிழகத்தில் கடந்த 16-ந் தேதி டெல்டா பகுதியில் உள்ள 12 மாவட்டங்களில் ‘கஜா’ புயல் கோரத்தாண்டவமாடியது. இதில் புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய 4 மாவட்டங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி மக்களின் வாழ்வாதாரத்தையே புரட்டி போட்டது.

    புயலின் தாக்குதலால் பல லட்சம் தென்னை மரங்கள், பலா மரங்கள் மற்றும் பழமையான மரங்கள் வேரோடு சாய்ந்தன. வாழை, கரும்பு, நெல் உள்ளிட்ட பயிர்களும் நாசமானது. ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சாய்ந்தன. மேலும் மின்மாற்றிகள், துணை மின் நிலையங்களிலும் பெரும் சேதம் ஏற்பட்டது. ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடு மற்றும் உடைமைகளை இழந்து முகாம்களில் பரிதவித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் சமீபத்தில் டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்த முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி புயல் நிவாரண நிதியாக ரூ.15 ஆயிரம் கோடி கேட்டார். அதைத் தொடர்ந்து மத்திய குழு சேதப்பகுதிகளை பார்வையிட்டு அறிக்கை கொடுக்க மத்திய அரசு உத்தரவிட்டது.

    அதன்படி, மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணை செயலாளர் (நீதி) டேனியல் ரிச்சர்டு தலைமையிலான 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவினர் நேற்று முன்தினமே சென்னை வந்தனர். நட்சத்திர ஓட்டல் ஒன்றில் தங்கியிருந்தனர்.

    இந்த நிலையில், முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்திப்பதற்காக சென்னை தலைமைச் செயலகத்துக்கு மத்திய குழுவினர் நேற்று காலை 10.30 மணிக்கு வந்தனர். இதையடுத்து காலை 10.50 மணிக்கு முதல்-அமைச்சர் அறையில் ஆலோசனை கூட்டம் தொடங்கியது. 45 நிமிடங்கள் இந்த கூட்டம் நடந்தது.

    இதில் மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார், சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சண்முகம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா, வருவாய் நிர்வாக ஆணையர் சத்தியகோபால், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை முதன்மைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா உள்பட அனைத்து துறை உயர் அதிகாரிகளும் பங்கேற்றனர்.

    அதைத் தொடர்ந்து மத்திய குழுவினர் 7 பேரும் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனை சந்தித்து பேசினர். காலை 11.40 மணிக்கு தொடங்கிய இந்த கூட்டம் 12.20 மணிக்கு முடிந்தது.

    பின்னர் வருவாய் நிர்வாக ஆணையர் சத்தியகோபால் நிருபர்களிடம் கூறியதாவது:-

    முதல்-அமைச்சர் தலைமையில் நடந்த கூட்டத்தில் மாவட்ட வாரியாக ஏற்பட்டுள்ள சேதம் குறித்து விரிவாக பட்டியலிடப்பட்டது. ஒவ்வொரு துறை வாரியாகவும் ஏற்பட்ட சேதம் குறித்து மத்திய குழுவினருக்கு முதல்- அமைச்சர் தெளிவாக விளக்கினார். மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள், குறிப்பாக விவசாயம் எந்த அளவிற்கு பாதிக்கப்பட்டிருக்கிறது, எந்த அளவிற்கு சேதம் ஏற்பட்டுள்ளது என்பது குறித்தும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் என்ன உதவிகள் தேவை என்பது பற்றியும் விளக்கி கூறினார்.

    ‘பவர் பாய்ண்ட்’ மூலமாக துறைவாரியான விவரங்களையும் காட்சிகளோடு பட்டியலிட்டு அதிகாரிகளுக்கு விளக்கி கூறினோம். இதிலிருந்து எந்த அளவு பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்பதை மத்திய குழுவினர் புரிந்து கொண்டிருப்பார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நேற்று பிற்பகல் 2.30 மணிக்கு மத்திய குழுவினர் சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு திருச்சி விமான நிலையத்திற்கு மாலை 3.40 மணிக்கு சென்றனர்.

    அங்கு அவர்களை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், மாவட்ட கலெக்டர்கள் கணேஷ் (புதுக்கோட்டை), ராஜாமணி (திருச்சி) மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர்.

    பின்னர் திருச்சி விமான நிலையத்தில் இருந்து மாலை 4.15 மணிக்கு புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட மத்திய குழுவினர் காரில் புறப்பட்டு சென்றனர்.

    புதுக்கோட்டை மாவட்டத்தில் முதல் இடமாக குளத்தூர் அருந்ததியர் காலனிக்கு அக்குழுவினர் சென்றனர். அங்கு புயல் தாக்கியதில் 15-க்கும் மேற்பட்ட குடிசைகள் இடிந்து கிடப்பதை ஆய்வு செய்தனர்.

    அவர்களிடம் அமைச்சர் விஜயபாஸ்கர், நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, கலெக்டர் கணேஷ் ஆகியோர் புயல் பாதிப்பை விளக்கி கூறினர்.

    அப்போது மத்திய குழுவினரை கண்டதும், அங்கு வீடுகளை இழந்த பெண்கள் காலில் விழுந்து கதறி அழத்தொடங்கினர்.

    “அய்யா...புயலால் எங்கள் வாழ்க்கையே போச்சு. இனி என்ன செய்யப்போகிறோம் என்றே தெரியவில்லை. குடிசைகளை இழந்து தவிக்கும் எங்களுக்கு நீங்கள்தான் வழி சொல்லவேண்டும். கடந்த 9 நாட்களாக மின்சாரம், குடிநீர் இன்றி தவித்து வருகிறோம்” என கண்ணீர் விட்டனர்.

    அவர்களுக்கு ஆறுதல் கூறி தோளில் தட்டிவிட்டு தேற்றிய மத்திய குழுவினர், “உங்களுக்கு ஏற்பட்ட இழப்புகளையும், பாதிப்புகளையும் நேரில் கண்டறிவதற்காகத்தான் வந்திருக்கிறோம். யாரும் கவலைப்பட வேண்டாம். உங்களுக்கு நியாயமாக செய்ய வேண்டியதை நிச்சயமாக செய்வோம்” என உறுதி அளித்தனர்.

    அப்போது, உடன் வந்த அமைச்சர், கலெக்டர் ஆகியோரும் ஆறுதல் கூறினர்.

    தொடர்ந்து வடகாடு பரம்மன்நகர், மாங்காடு, கந்தர்வகோட்டை பகுதியில் முதுகுளம் புதுநகர் உள்ளிட்ட இடங்களில் சேதப்பகுதிகளை பார்வையிட்டனர்.

    இறுதியாக கந்தர்வகோட்டை புதுப்பட்டிக்கு சென்று அங்குள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் அதிகாரிகளுடன் மத்திய குழுவினர் ஆய்வு நடத்தி, மாவட்ட முழுவதும் உள்ள சேத விவரங்களையும், என்னென்ன பாதிக்கப்பட்டுள்ளது என்ற விவரத்தையும் அறிக்கையாக தயார் செய்தனர்.

    இரவு தஞ்சாவூர் புறப்பட்டு சென்ற குழுவினர் அங்குள்ள சங்கம் ஓட்டலில் ஓய்வெடுத்தனர்.

    இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணிக்கு மத்திய குழுவினர் தஞ்சாவூர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு விட்டு மதியம் 1 மணிக்கு மீண்டும் தஞ்சாவூர் திரும்புகிறார்கள். பிற்பகல் 2 மணிக்கு திருவாரூர் செல்கின்றனர்.

    அங்கு மாலை 3.30 மணி முதல் புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிடுகிறார்கள். அன்று இரவு நாகப்பட்டினம் சென்று, ஓய்வெடுக்கின்றனர்.

    நாளை (26-ந் தேதி) காலை 7.30 மணிக்கு நாகப்பட்டினம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்கிறார்கள். மதியம் 1 மணிக்கு நாகப்பட்டினத்தில் சிறிது ஓய்வு எடுக்கிறார்கள். பின்னர், பிற்பகல் 2.30 மணிக்கு புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் ஆய்வு செய்து விட்டு, இரவு புதுச்சேரி செல்கின்றனர். #gajacyclone #CentralCommittee #cycloneeffected
    புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணம் கேட்டு போராடியவர்கள் மீதான வழக்கை வாபஸ் பெற வேண்டும் என்று திருநாவுக்கரசர் கூறினார். #thirunavukkarasar #gajacyclone #gajarelief
    ஆலந்தூர்:

    சென்னை விமான நிலையத்தில் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் 3 நாள் பார்வையிட உள்ளேன். சேகரிக்கப்பட்ட நிவாரண பொருட்கள் அனுப்பப்பட்டு வருகிறது. 8-ந் தேதி நடைபெற உள்ள காங்கிரஸ் அறக்கட்டளை கூட்டத்தில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்த வகையில் நிவாரணம் வழங்குவது என முடிவு செய்து அறிவிக்கப்படும்.

    ஒரு வாரம் கழித்து மத்திய குழு வந்துள்ளது. இந்த குழு ஆய்வு செய்து அறிக்கை தந்தபிறகு தான் நிதி தரவேண்டும். பாதிக்கப்பட்ட இடங்களை பிரதமர் பார்த்து இருக்கலாம். அல்லது உள்துறை மந்திரி, ஏதாவது ஒரு மத்திய மந்திரியாவது வந்து பார்த்து இருக்கலாம். யாரும் வராதது மத்திய அரசு தொடர்ந்து தமிழகத்தை புறக்கணிப்பதையே காட்டுகிறது.

    தேசிய பேரிடர் நிதியில் இருந்து ரூ.5 ஆயிரம் கோடியை தமிழகத்திற்கு மத்திய அரசு ஒதுக்க வேண்டும். பல இடங்களில் மின் இணைப்பு சீராகவில்லை, உணவு பொருட்கள் போய்ச்சேரவில்லை. நிவாரண தொகையை உயர்த்தித்தர வேண்டும். தமிழக அரசு ஒதுக்கிய தொகை போதுமானதல்ல. இதனால் மத்திய அரசு நிதியை ஒதுக்க வேண்டும். மத்திய அரசு முன்கூட்டியே முதற்கட்ட நிதியை ஒதுக்க வேண்டும்.

    நிவாரணம் கேட்டு போராடியவர்கள் மீதான வழக்கை வாபஸ் பெற வேண்டும். கைது செய்யப்பட்டவர்களை உடனே விடுவிக்க வேண்டும். எந்த காரணத்திற்காகவும் போராடுபவர்கள் அரசு சொத்துகளை சேதப்படுத்தக் கூடாது. போராடுபவர்களை வழக்கு போட்டு சிறையில் அடைப்பது சரியல்ல.

    புயலுக்கு முன்னால் நடவடிக்கை சரியாக இருந்தது. புயலுக்கு பின் நடவடிக்கைகள் சரியில்லை. அமைச்சர்கள் மாவட்டங்களில் தங்கியிருந்து பணியாற்றினாலும் உரிய நிவாரண பொருட்கள் வழங்கப்படவில்லை. பணிகள் முழுவீச்சில் நடக்கவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார். #thirunavukkarasar #gajacyclone #gajarelief 
    புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு லாரிகளில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டது.
    சிங்கம்புணரி:

    சிங்கம்புணரி வட்டம் எஸ்.புதூர் ஒன்றியத்திற்குப்பட்ட பகுதிகளில் கஜா புயலால் அதிக அளவு பாதிப்பு ஏற்பட்டது. மேட்டாம்பட்டி, விஜயபுரம் போன்ற பகுதிகள் கடும் சேதமடைந்தன. அப்பகுதி மக்கள் குடிநீர் கிடைக்காமல் பெரும் அவதியடைந்தனர்.

    சிங்கம்புணரி ரஜினி மக்கள் மன்றத்தின் சார்பில் மாவட்ட தலைவர் ரமேஸ்வரன் ஏற்பாட்டில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட எஸ்.புதூர் ஒன்றியத்தில் போர்க்கால அடிப்படையில் நிவாரணப்பணி மேற்கொள்ளப்பட்டது.

    மேலும் பொதுமக்களுக்கு தேவையான பொருட்கள் உடனுக்குடன் வழங்கப்பட்டன. இந்தநிலையில் அப்பகுதி மக்கள் தொடர்ந்து குடிநீர், மின்சாரம் இன்றி சிரமமடைந்தனர். மின்சாரம் இல்லாதததால் அடிப்படை தேவைகளுக்கு கூட தண்ணீர் இல்லாமல் போனது. எனவே அதன் முதற்கட்டமாக மின்வாரிய ஊழியர்கள் மூலமாக மின்சாரம் வினியோகம் செய்யும் பணி துரிதமாக நடைபெற்றது.

    அதைத்தொடர்ந்து குடிநீர் தட்டுப்பாடு நிலவி வந்த வேலையில் விஜயபுரம் மற்றும் மேட்டாம்பட்டி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்களுக்கு லாரிகளில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டது. அதை பொதுமக்கள் தாங்கள் கொண்டு வந்த பாத்திரங்களில் பிடித்து சென்றனர்.

    மேலும் எஸ்.புதூர் ஒன்றியத்திற்குட்பட்ட அனைத்து கிராம மக்களுக்கும் மெழுகுவர்த்திகள் வினியோகம் செய்யப்பட்டன. பின்பு சிங்கம்புணரி நேதாஜி நகர் ஜெய்ஹிந்த் பாலா, கிழத்தெரு விஜய், சுதாகர் உள்ளிட்ட இளைஞர்கள் சார்பில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
    ×