என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "டெல்லி"
- அரசைக் கலைக்கக் கோரி பாஜக எம்.எல்.ஏக்கள் எழுதிய கடித்தத்தை ஜனாதிபதி திரௌபதி முர்மு மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பியுள்ளார்.
- நாளையே கூட தேர்தல் அறிவித்தாலும் நாங்கள் அதை எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறோம் என்று ஆம் ஆத்மி தெரிவித்துள்ளது
டெல்லியில் ஆட்சியில் உள்ள ஆம் ஆத்மி அரசைக் கலைக்கக் கோரி பாஜக எம்.எல்.ஏக்கள் எழுதிய கடித்தத்தை ஜனாதிபதி திரௌபதி முர்மு மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பியுள்ளார். டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மதுபான கொள்கை முறைகேடு வழக்கிலும் கலால் கொள்கை வழக்கிலும் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் ஜாமீன் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இதனால் டெல்லி அரசின் நிர்வாக பணிகளில் தாமதம் ஏற்படுவதாகவும் சட்டம் சார்ந்த பிரச்சனைகள் உள்ளதாகவும் கூறி டெல்லி அரசை கலைக்க பாஜக எம்.எல்.ஏக்கள் ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியிருந்தனர். இந்நிலையில் பாஜகவின் ஒரே குறிக்கோள் அரசை கவிழ்ப்பதுதான் என்று ஆம் ஆத்மி அமைச்சர் அதிஷி விமர்சித்துள்ளார்.
'டெல்லியில் அடுத்த வருடம் சட்டமன்றத் தேர்தல் வர உள்ள நிலையில் பாஜக ஏற்கனவே தனது தோல்வியை ஒப்புக்கொண்டுவிட்டது. எனவே தேர்தலில் வெல்ல காவி கட்சி செய்யும் சதிதான் இது. தேர்தலில் ஒரு சீட் கூட கிடைக்கப்போவதில்லை என்று தெரிந்த உடனே இந்த சதி வலையை பாஜக பின்னியுள்ளது. அரசை கவிழ்த்து அடுத்த தேர்தல் வரை ஜானதிபதி ஆட்சியை அமல்படுத்தச் செய்வதே அவர்களின் திட்டம்' என்று அதஷி விமர்சித்துள்ளார்.
மேலும் இதுகுறித்து பேசிய ஆம் ஆத்மி மூத்த தலைவர் சஞ்சய் சிங், நாங்கள் தேர்தலுக்குத் தயாராக இருக்கிறோம், பாஜக சீக்கிரமே தோற்க வேண்டும் என்று நினைகிறது போலும், எனவே நாளையே கூட தேர்தல் அறிவித்தாலும் நாங்கள் அதை எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.
- எதிரே மெட்ரோ ரெயில் வந்துகொண்டுருக்கும்போது அதை நோக்கி ரெயில்வே டிராக்கில் இளம்பெண் ஒருவர் ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
- துகாப்பு அதிகாரிகள் மீட்டு துண்டுகட்டாக தூக்கிக்கொண்டு பிளாட்பார்முக்கு வந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
டெல்லியில் எதிர் திசையில் மெட்ரோ ரெயில் வந்துகொண்டுருக்கும்போது அதை நோக்கி ரெயில்வே டிராக்கில் இளம்பெண் ஒருவர் ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த புதன்கிழமை மதியம் ராஜேந்திர நகர் மெட்ரோ ஸ்டேஷன் அருகே நடந்த இந்த சம்பவத்தில் ரெயில் தடத்தின் அருகே ஓடிக்கொண்டிருத்த பெண்ணை பாதுகாப்பு அதிகாரிகள் மீட்டு துண்டுகட்டாக தூக்கிக்கொண்டு பிளாட்பார்முக்கு வந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதன்பின் அந்த பெண் மெட்ரோ போலீசிடம் ஒப்படைக்கப்பட்டார். பெண்ணுக்கு கவுன்சிலிங் வழங்கிய மெட்ரோ போலீஸ் பெற்றோரிடம் அவரை ஒப்படைத்துள்ளது. தற்கொலை செய்து கொள்வதற்காக அந்த பெண் முயற்சி செய்தாரா என்பது தெளிவுபடுத்தப்படவில்லை.
- என்.ஜி.ஓ தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலம் வடமேற்கு டெல்லியில் உள்ள சுல்தான்புரியில் அமைத்துள்ள பள்ளி ஒன்றில் பயிற்சியாளராக வந்துள்ளார்.
- மாணவியின் உறவினர்கள் மற்றும் அண்டை வீட்டார் போலீஸ் நிலையம் முன் திரண்டு பயிற்சியாளருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.
டெல்லியில் பள்ளி மாணவிகளுக்குத் தற்காப்பு சொல்லித்தருவதற்காக வந்தபயிற்சியாளர் 11 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த சம்பவம் அரங்கேறியுள்ளது. மாணவிகளுக்கு தங்களை ஆபத்துகளிலிருந்து தற்காத்துக் கொள்ளும் வகையில் பயிற்சி அளிப்பதற்காக ஒப்பந்த அடிப்படையில் சதீஸ் என்ற நிபுணர் ஒருவர் என்.ஜி.ஓ தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலம் வடமேற்கு டெல்லியில் உள்ள சுல்தான்புரியில் அமைத்துள்ள பள்ளி ஒன்றில் பயிற்சியாளராகச் சேர்ந்துள்ளார்.
இந்நிலையில் பள்ளியில் படித்து வந்த 11 வயது மாணவிக்கு தற்காப்பு சொல்லித்தருவதாகக் கூறி தனியாக அழைத்துத் தகாத இடங்களில் தொட்டு பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதை அந்த மாணவி தனது பெற்றோர்களிடம் கூறிய நிலையில் மாணவியின் உறவினர்கள் மற்றும் அண்டை வீட்டார் போலீஸ் நிலையம் முன் திரண்டு பயிற்சியாளருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.இதனைத்தொடர்ந்து இந்த புகார் குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று டெல்லி அரசு தெரிவித்துள்ளது.
- அரை மணி நேரமாகியும் ஆர்டர் வராததால் பொறுமையிழந்த ஹர்னீத் ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்துள்ளார்.
- தனது மகனுடன் அங்கு வந்த கடை உரிமையாளர் ஊழியர்களுடன் சேர்ந்து ஹர்னீத்தை சரமாரியாகத் தாக்கியுள்ளார்.
டெல்லியில் உள்ள உணவகம் ஒன்றில் ஆர்டர் செய்த உணவு ஏன் வரவில்லை என்று கேட்ட வாடிக்கையாளரை உணவக முதலாளி கபாப் செய்யும் கம்பியால் குத்திக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் நேற்று முன்தினம் காலையில் தெருவோர தாபாவில் 29 வயதான ஹர்னீத் சிங் என்பவர் உணவு ஆர்டர் செய்துள்ளார்.
அரை மணி நேரமாகியும் ஆர்டர் வராததால் பொறுமையிழந்த ஹர்னீத் ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்துள்ளார். தகவலறிந்து தனது மகனுடன் அங்கு வந்த கடை உரிமையாளர் ஊழியர்களுடன் சேர்ந்து ஹர்னீத்தை சரமாரியாகத் தாக்கியுள்ளார்.
மேலும் கடையில் கபாப் செய்ய வைத்திருந்த கம்பியை எடுத்து கடை உரிமையாளர் ஹர்னீத்தை குத்தியுள்ளார். இதனால் படுகாயமடைந்த ஹர்னீத் மருத்துவமனை அழைத்துச் செல்லப்படும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் தொடர்புடைய கடை உரிமையாளர் மற்றும் ஊழியர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
- மக்களிடம் எதிர்மறையான மற்றும் தவறான கதைகள் பரப்பப்படுகிறது.
- முக்கியப் பிரச்சனைகள் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
புதுடெல்லி:
பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு 3-வது முறையாக ஆட்சி பொறுப்பேற்ற நிலையில் தனது அமைச்சரவையில் முதல் முறையாக சேர்க்கப்பட்ட மந்திரிகளை சந்தித்து பேசினார்.
டெல்லியில் உள்ள சுஷ்மா ஸ்வராஜ் பவனில் நடந்த இந்த சந்திப்பு 5 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது. அப்போது மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி சில அறிவுரைகளை வழங்கி உள்ளார்.
மோடி பேசுகையில், `அனைத்து நிலைகளிலும் முடிவெடுப்பதை விரைவுப்படுத்த வேண்டும். அரசுக்கு எதிராக கூறப்படும் தவறான தகவல்களை முறியடிக்கும் வகையில், அரசாங்கம் எடுக்கும் முடிவுகள் குறித்து அனைத்து மந்திரிகள் மற்றும் உயர் அதிகாரிகளும் பொதுமக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.
சாமானியர்கள் மற்றும் அனைத்து தரப்பு மக்களின் வாழ்க்கையை மாற்றுவதற்கு அரசாங்கம் பல முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது.
ஆனால் மக்களிடம் எதிர்மறையான மற்றும் தவறான கதைகள் பரப்பப்படுகிறது. இதை முறியடிக்க பொது மக்களுக்கு சரியான தகவல்களை அளிப்பதில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.
மக்களுக்காக ஓய்வின்றி உழைக்க மந்திரிகள் தங்களை விரைவில் தயார் படுத்திக்கொள்ள வேண்டும். செயல், சீர்திருத்தம், மாற்றம், தகவல் என்ற 4 புதிய மந்திரங்களை மக்கள் சேவையின் போது அமைச்சரவை சகாக்கள் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும் என்று கூறினார்.
அரசின் செயல்பாடுகள், சாதனைகள், பிரசாரம் மற்றும் முக்கியப் பிரச்சனைகள் குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
மத்திய அரசு பொறுப்புடன் செயல்படுகிறது என்ற செய்தியை சமூக ஊடகங்கள் மூலம் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்.
சமூக ஊடகங்களின் மக்களின் பங்களிப்பை அதிகரிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தி உள்ளார்.
மேலும் 3-வது முறையாக பதவியேற்று 100 நாட்களை நிறைவு செய்யும் போது அந்தந்த அமைச்சகங்களின் 10 முக்கிய முடிவுகள் குறித்த தகவல்களை பொதுமக்களுக்கு வழங்க வேண்டும். அவற்றை மக்களிடம் கொண்டு செல்லும் வகையில் பிரசாரங்கள் மேற்கொள்ள வேண்டும் என்று மந்திரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளார்.
அரசின் திட்டங்களை தடையின்றி செயல்படுத்த அதிகாரிகளை ஈடுபடுத்த வேண்டும் என அறிவுறுத்தி உள்ளார்.
நாட்டில் சுகாதாரம், கல்வி மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாடு தொடர்பான விளக்க காட்சிகள் இந்த கூட்டத்தில் இடம்பெற்றன.
ஒவ்வொரு துறையிலும், அமைச்சகத்திலும் மனித வளத்தை மறுசீரமைப்பதற்கான மதிப்பீட்டை மேற்கொள்வதற்கும், அனைத்து ஊழியர்களின் திறன் மேம்பாட்டில் கவனம் செலுத்துமாறும் உயர் அதிகாரிகளை பிரதமர் மோடி கேட்டு கொண்டார்.
- பெங்களூருவை முதன்முறையாக பின்னுக்குத்தள்ளி பணக்காரர்களின் எண்ணிக்கையில் ஐதராபாத் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.
- பெங்களூரு 100 பணக்காரர்களுடன் நான்காவது இடத்தில் உள்ளது.
ஆசியாவிலேயே அதிக கோடீஸ்வரர்களைக் கொண்ட நகரம் என்ற பெருமையை மும்பை பெற்றுள்ளது. இதன் மூலம் சீனாவின் தலைநகரான பெய்ஜிங் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது.
ஹுருன் இந்தியா ரிச் லிஸ்ட் 2024 (Hurun India Rich Listers 2024) அறிக்கையின்படி, இந்தியாவின் வர்த்தக தலைநகரான மும்பை 'ஆசியாவின் பில்லியனர் தலைநகரம்' ஆக மாறியுள்ளது. சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கைப் பின்னுக்குத் தள்ளி இந்தப் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.
மும்பையில் 58 கோடீஸ்வரர்கள் அதிகரித்து, பட்டியலில் அதன் மொத்த எண்ணிக்கை 386 ஆக உள்ளது.
முதல் நகரங்களில் மும்பைக்கு அடுத்தபடியாக டெல்லி உள்ளது. இது 18 புதிய கோடீஸ்வரர்களை சேர்த்துள்ளது. அதன் பணக்கார பட்டியல் எண்ணிக்கை 217 ஆகக் கொண்டுள்ளது.
இதற்கிடையில் ஐதராபாத் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்து பெங்களூருவை முதன்முறையாக பின்னுக்குத்தள்ளி பணக்காரர்களின் எண்ணிக்கையில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.
17 புதிய கோடீஸ்வரர்களின் வளர்ச்சியால் ஐதராபாத்தில் மொத்த எண்ணிக்கையை 104 ஆகக் கொண்டுள்ளது. பெங்களூரு 100 பணக்காரர்களுடன் நான்காவது இடத்தில் உள்ளது.
முதல் 10 இடங்களில் உள்ள மற்ற நகரங்களில் சென்னை (82), கொல்கத்தா (69), அகமதாபாத் (67), புனே (53), சூரத் (28), குருகிராம் (23) ஆகியவை அடங்கும்.
- ராகுல்காந்தி இன்று டெல்லி சரோஜினி நகர் பேருந்து பணிமனைக்கு சென்றார்.
- இது தொடர்பான புகைப்படங்களை காங்கிரஸ் கட்சி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.
மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல்காந்தி, டெல்லி சரோஜினி நகர் பேருந்து பணிமனையில் ஓட்டுநர்கள், நடத்துனர்கள், மார்ஷல்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தார.
இது தொடர்பான புகைப்படங்களை காங்கிரஸ் கட்சி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.
அந்த பதிவில், "நமது ஜனநாயக சமூகத்தில் நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றும் ஒவ்வொரு பிரிவினரையும் ராகுல் காந்தி சந்தித்து அவர்களுக்காக குரல் எழுப்பி வருகிறார்" என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
नेता विपक्ष श्री @RahulGandhi ने DTC बस में यात्रा की और ड्राइवर, कंडक्टर व मार्शल से मुलाकात कर उनकी समस्याएं सुनीं।
— Congress (@INCIndia) August 28, 2024
जननायक हर उस वर्ग से मिलकर उनकी आवाज बुलंद कर रहे हैं, जिनका देश के विकास में महत्वपूर्ण योगदान है।
? सरोजिनी नगर बस डिपो, नई दिल्ली pic.twitter.com/ZvjJmarUSP
- திரவுபதி முர்மு தலைமையில் நடைபெற்ற ரக்ஷாபந்தன் விழா.
- தமிழகத்தில் இருந்து 4 மாணவிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே அய்யம்பட்டி கிராமத்தை சேர்ந்த மாரிமுத்து- ஆனந்தி தம்பதியின் மகள் சந்தியா (வயது 14). இவர் ஆதனக்கோட்டை அரசு உயர்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு தலைமையில் டெல்லியில் நடைபெற்ற ரக்சாபந்தன் விழாவில் பங்கேற்க நாடு முழுவதும் பள்ளியில் படிக்கும் மாணவ- மாணவிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
அதன்படி, தமிழகத்தில் இருந்து 4 மாணவிகள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் கல்வித்திறன் மற்றும் தனித்திறன் போட்டிகளில் சிறந்து விளங்கிய மாணவி சந்தியாவும் தேர்வு செய்யப்பட்டார்.
இதையடுத்து அவர் டெல்லி சென்று ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்து ரக்சாபந்தன் வாழ்த்து தெரிவித்துவிட்டு வந்தார்.
இதையடுத்து பள்ளிக்கு வந்த மாணவி சந்தியாவுக்கு தலைமையாசிரியர் தர்மராஜ் தலைமையில் பாராட்டு விழா நடைபெற்றது.
- கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று காலையில் திடீரென டெல்லி சென்றார்.
- வி.ஐ.பி.க்கள் யாரையும் கவர்னர் சந்திக்க வில்லை.
சென்னை:
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று காலையில் திடீரென டெல்லி சென்றார். அமித்ஷாவை சந்தித்து பேசுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அவர் யாரையும் சந்தித்து பேசவில்லை. இதுபற்றி கவர்னர் மாளிகை அதிகாரிகள் கூறுகையில், தனிப்பட்ட விஷயமாக கவர்னர் டெல்லி சென்று உள்ளார். வி.ஐ.பி.க்கள் யாரையும் அவர் சந்திக்க வில்லை.
கவர்னர் இன்று இரவு 8.20 மணிக்கு டெல்லியில் இருந்து சென்னை திரும்புகிறார்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
- தங்களது பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டதாக வீராங்கனைகளும் டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் மனு அளித்தனர்.
- இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளித்து டெல்லி துணை ஆணையர் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்
இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் (WFI) முன்னாள் தலைவரும் 6 முறை பாஜக எம்.பியாகவும் இருந்த பிரிஜ் பூஷண் சரண் சிங் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால் அவர் மீது எந்த விசாரணையும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாத நிலையில் பஜ்ரங் புனியா , சாக்ஷி மாலிக், வினேஷ் போகத், சங்கீதா போகத் உள்ளிட்ட பல்வேறு மல்யுத்த வீரர் வீராங்கனைகள் கடந்த வருடத்தின் தொடக்கம் முதல் பல மாதங்களாக டெல்லியில் போராட்டம் நடத்தி வந்தனர்.
குறிப்பாக பஜ்ரங் புனியா தனது பத்ம ஸ்ரீ விருதை மோடியின் இல்லத்தின் முன் இருந்த சாலையில் வைத்துவிட்டுச் சென்றது பரபரப்பைக் கிளப்பியது. போராட்டத்தை ஒடுக்க அரசு கடுமையான முறைகளைப் பிரயோகித்தது. ஆனாலும் வீராங்கனைகள் விடாப்பிடியாக போராட்டத்தைத் தொடர்ந்த நிலையில் உச்சநீதிமன்றத்தின் தலையீட்டைத் தொடர்ந்து பிரிஜ் பூஷன் மீது எப்.ஐ.ஆர் பதியப்பட்டது.
பாலியல் துன்புறுத்தல், மிரட்டல் மற்றும் பெண்களை அவமானப்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளில் பிரிஜ் பூஷன் மீது பதியப்பட்ட கிரிமினல் வழக்கில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் வழக்கு தொடர்ந்து நடந்து வரும் நிலையில், பிரிஜ் பூஷனுக்கு எதிராக நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளிக்க இருந்த பெண் மல்யுத்த வீராங்கனைகளுக்கான பாதுகாப்பை டெல்லி போலீஸ் வாபஸ் பெற்றுள்ளதாக வினேஷ் போகத் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் தங்களது பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டதாக வீராங்கனைகளும் டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் மனு அளித்தனர். இதைத்தொடர்ந்து இருந்து வாபஸ் பெற்ற பாதுகாப்பை உடனடியாக மீண்டும் வீராங்கனைகளுக்கு அளிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளித்து டெல்லி துணை ஆணையர் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. ஆனால் பாதுகாப்பை வாபஸ் பெறவில்லை என்று டெல்லி போலீஸ் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- நர்சிங் மாணவி தங்கும் விடுதியில் உயிரிழந்து கிடந்தார்.
- இது தற்கொலையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
டெல்லியின் நியூ அசோக் நகர் பகுதியில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் 22 வயது நர்சிங் மாணவி மயங்கி கிடப்பதாக போலீசாருக்கு அழைப்பு வந்தது.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அறையின் உள்ளே பூட்டப்பட்டிருப்பதை கண்டு கதவை உடைத்து உள்ளே நுழைந்தனர்.
அப்போது நர்சிங் மாணவி படுக்கையில் உயிரிழந்து கிடந்தார். அப்போது பக்கத்திலிருந்து சீலிங் பேனில் 2 ட்ரிப்ஸ் பாக்கெட் தொங்கவிடப்பட்டு அவளது கையில் ஊசி சொருகி ட்ரிப்ஸ் ஏற்றப்பட்டு இருந்துள்ளது.
இதனையடுத்து அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இது தற்கொலையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. ஆனால், சம்பவ இடத்தில் தற்கொலைக் கடிதம் எதுவும் கிடைக்கவில்லை.
தங்கும் விடுதியில் நர்சிங் மாணவி மர்மமான முறையில் உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- இந்த விபத்து ஆகஸ்ட் 17 ஆம் தேதி மாலை 7 மணியளவில் நடந்துள்ளது.
- இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியின் கரோல் பாக் பகுதியில், மூன்றாவது மாடியில் இருந்து ஏர் கண்டிஷனர் விழுந்ததில் 19 வயது இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விபத்து ஆகஸ்ட் 17 ஆம் தேதி மாலை 7 மணியளவில் நடந்துள்ளது. இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வீடியோவில், தனது பைக்கில் அமர்ந்தவாறு ஒரு இளைஞர் தனது நண்பருடன் பேசி வருகிறார். அப்போது ஏர் கண்டிஷனர் ஒன்று திடீரென்று பைக்கில் அமர்ந்திருந்த இளைஞரின் தலைமேல் விழுந்தது. இதனால் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.
இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிந்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்