search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "யானைகள்"

    தென்காசி அருகே விளைநிலங்களுக்குள் புகுந்த காட்டு யானைகள் விரட்டப்பட்டதால் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    தென்காசி:

    தென்காசி அருகே மேற்கு தொடர்ச்சி மலையடி வாரத்தில் இருந்து சற்று தொலைவில் உள்ள கிராமம் மத்தளம்பாறை. இந்த பகுதியில் ஏராளமான விவசாய நிலங்கள் உள்ளன. இப்பகுதியில் கடந்த வாரம் காட்டு யானைகள் புகுந்தன. அவை அங்கு பயிரிட்டிருந்த தென்னை, நெற்பயிர்களை சேதப்படுத்தின.

    இந்நிலையில் நேற்று முன்தினமும் இரவு அதே பகுதியில் காட்டு யானைகள் கூட்டமாக புகுந்தன. அவை மத்தளம்பாறையை சேர்ந்த அருணாச்சலம், சேதுராமன், பொன்னையா, இசக்கி, வேலாயுதம் ஆகியோருக்கு சொந்தமான வயல்களில் பயிரிடப்பட்டிருந்த நெற் பயிர்களையும், தென்னை, வாழை மரங்களையும் சேதப்படுத்திவிட்டு காட்டுக்குள் சென்று விட்டன.

    இதில் 132 தென்னை மரங்களும், 8 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்கள், 3 ஏக்கரில் பயிரிட்டிருந்த நெற்பயிர்கள் சேத மடைந்தன. இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த குற்றாலம் வனவர் பாண்டியராஜ், வனக்காவலர் வனராஜ், வேட்டை தடுப்பு காவலர்கள் மாடசாமி, ராஜு, சிவா ஆகியோர் சேத மடைந்த பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    பின்னர் வனத்துறை ஊழியர்கள் இரவில் பொதுமக்கள் உதவியோடு யானைகளை காட்டுக்குள் விரட்டினர். இது தொடர்பாக குற்றாலம் வனத்துறை ரேஞ்சர் ஆரோக்கியசாமி கூறியதாவது:-

    மத்தளம்பாறை பகுதிக்குள் புகுந்த காட்டு யானைகள் விரட்டப்பட்டு விட்டன. இந்த யானைகள் களக்காடு பகுதியில் இருந்து வந்துள்ளன. தொடர்ந்து யானைகள் ஊருக்குள் வராமல் தடுக்க நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டு வருகிறது. தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மேட்டுப்பாளையம் நலவாழ்வு முகாமில் கலந்துகொண்ட யானைகளின் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கண்டறிவதற்காக ரத்த பரிசோதனை நடைபெற்றது. #RejuvenationCamp #Elephants
    மேட்டுப்பாளையம்:

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனபத்ர காளியம்மன் கோவில் அருகே தேக்கம்பட்டி பவானி ஆற்றுப்படுகையில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம் கடந்த மாதம் 14-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றது. முகாமில் 28 யானைகள் கலந்து கொண்டு புத்துணர்வு பெற்று வருகின்றன.

    முகாமில் தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத்துறையினர் யானைகளை தினசரி காலை மாலை 2 வேளையும் மருத்துவ பரிசோதனை செய்து அவைகளுக்கு தேவையான மருத்துவ சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் முகாமில் கலந்துகொண்ட யானைகளின் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கண்டறிவதற்காக ரத்த பரிசோதனை நடைபெற்றது. தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் சுப்பிரமணியம் தலைமையில் உதவி மருத்துவர்கள் பரமேஸ்வரன், பிரபு மற்றும் மருத்துவக்குழுவினர் முகாமில் உள்ள 28 யானைகளின் ரத்தத்தை சேகரித்தனர்.

    சேகரித்த ரத்த மாதிரிகள் கோவை அரசு கால்நடை நோய் புலனாய்வுப் பிரிவு ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன் அறிக்கை கிடைத்த பின்னர் யானைகளுக்கு தேவையான மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும்.

    முகாமில் கலந்து கொண்ட யானைகளில் திருவையாறு தருமபுர ஆதீனம் பஞ்சநதீஸ்வரசுவாமி கோவில் யானை தர்மாம்பாள்,புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவில் யானை லட்சுமி, திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவில் யானை லட்சுமி ஆகிய யானைகள் கால்களில் வெடிப்பு, சிறுபுண் மற்றும் அரிப்பு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் நடைபயிற்சியின்போது இந்த யானைகள் மிகவும் அவதிப்பட்டு வந்தன. இதற்காக தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத்துறை மருத்துவக்குழுவினரால் யானைகளுக்கு பாதக்குளியல் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  #RejuvenationCamp #Elephants #Mettupalayam
     


    ஒட்டன்சத்திரம் அருகே வடகாடு மலைப் பகுதியைச் சேர்ந்த பெத்தேல்புரத்தில் யானைகள் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருவதால் பொதுமக்கள் பெரிதும் அச்சத்திற்குள்ளாகி வருகின்றனர்.

    ஒட்டன்சத்திரம்:

    பெத்தேல்புரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதிக்குள் அடிக்கடி யானை புகுந்து குடிசைகளையும், விளை நிலங்களையும் மிதித்து சேதப்படுத்தி வருவதை வழக்கமாக கொண்டுள்ளது. இந்நிலையில் திங்கள்கிழமை நள்ளிரவு ஊருக்குள் வந்த யானை அங்குள்ள ரேசன் கடை ஓடுகளை பிரித்து சேதப்படுத்தியது. மேலும் அருகே இருந்த பள்ளியில் நடப்பட்டிருந்த தென்னை மற்றும் வாழை மரங்களையும் சேதப்படுத்தியது. இதை கண்ட பொதுமக்கள் ஒன்று சேர்ந்து யானையை விரட்டினர். இதே பகுதியில் தான் கடந்த சில வருடங்களுக்கு முன்பு யாணை ஒருவரை மிதித்து கொன்றது.

    இப்பகுதியில் அடிக்கடி யானைகள் புகுந்து, விலை நிலங்களையும், உடமைகளையும் சேதப்படுத்தி வருவது அங்குள்ள பொது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வரும் யானையிடமிருந்து மக்களை பாதுகாக்க தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    நீலகிரி மாவட்டத்தில் யானை வழித் தடத்தில் உள்ள 275 கட்டிடங்களுக்கு நாளை சீல் வைக்கப்படுகிறது.#elephant

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் சீகூர் பள்ளத்தாக்கு பகுதியில் சீகூர் முதல் சிங்காரா வரையிலான 50 கி.மீ. தூரத்தில் யானைகள் வழித்தட நிலங்களாக கண்டறியப்பட்டுள்ள 6 ஆயிரம் ஏக்கர் வனப் பகுதியில் விதி முறைகளை மீறி குடியிருப்புக்கான அனுமதி பெற்று வணிக நோக்கத்தில் ரிசார்ட்டுகளை கட்டியது தெரிய வந்தது.

    இது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் வக்கீல் யானை ராஜேந்திரன் கடந்த 2008-ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார்.

    அப்போது யானைகள் வழி தட நிலங்களில் உள்ள கட்டிடங்களை அகற்ற வேண்டும் என சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

    இந்த வழக்கின் விசாரணை கடந்த மாதம் நடைபெற்றது. அப்போது யானைகள் வழித் தட நிலம் தொடர்பான உண்மை நிலைமையும், அதில் உள்ள கட்டிடங்களின் தன்மை குறித்தும் நேரில் ஆய்வு செய்து ஆகஸ்டு 8-ந் தேதிக்குள் அறிக்கை சமர்பிக்க வேண்டும் என நீலகிரி மாவட்ட கலெக்டருக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

    அதன்படி நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா சுப்ரீம் கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்தார். அதில் யானைகள் வழித்தட நிலத்தில் 39 ரிசார்ட்டுகள் இருப்பதாகவும், அவற்றில் உணவகம், தங்கும் விடுதி உள்ளிட்ட தனித் தனியாக 309 கட்டிடங்கள் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டு இருந்தது.

    இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது 27 ரிசார்ட் வளாகங்களின் உரிமையாளர்கள் பங்கேற்கவில்லை. 12 ரிசார்ட் வளாகங்கள் சார்பில் பங்கேற்ற உரிமையாளர்கள் தங்களிடம் உரிய ஆவணங்கள் இருப்பதாக தெரிவித்து இருந்தனர்.

    இந்த ஆவணங்களை கலெக்டரிடம் காண்பித்து 48 மணி நேரத்துக்குள் சரி பார்த்து கொள்ள வேண்டும்.

    மீதி உள்ள 27 ரிசார்ட் வளாகங்களை 48 மணி நேரத்தில் பூட்டி சீல் வைக்க வேண்டும் எனவும், உரிய ஆவணங்கள் இல்லாத பட்சத்தில் மீதமுள்ள 12 ரிசார்ட் வளாகங்களுக்கும் சீல் வைக்க வேண்டும் என நேற்று முன்தினம் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

    கோர்ட்டு உத்தரவை தொடர்ந்து 27 ரிசார்ட்டுகளில் உள்ள 275 கட்டடிடங்களுக்கு சீல் வைக்கும் பணி தொடங்கியது. இந்த ரிசார்ட் உரிமையாளர்களுக்கு நேற்று நோட்டீஸ் வழங்கப்பட்டது. சில இடங்களில் அதிகாரிகள் ரிசார்ட்டுகளில் அறிவிப்பு நோட்டீஸ் ஒட்டி சென்றனர்.

    விடுதிகளில் உள்ள பொருட்களை எடுக்க ஒரு நாள் அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது. நாளை (ஞாயிற்றுக் கிழமை ) மதியம் முதல் 27 ரிசார்ட்டுகளுக்கும் சீல் வைக்கப்படுகிறது.

    மாவட்ட நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ள ரிசார்டுகளின் பெயர் வருமாறு-

    பேர் மவுண்டன், இன்தி வைல்டு, புளுவேலி, கிளடன் பேரடைஸ், அவலாஞ்சி ரிசார்ட்ஸ், வெஸ்லி வுட் எஸ்டேட், பெல் மவுண்ட் ரிட்ரீட், சபாரி லேண்ட், மவுண்ட் வியூ பார்ம், கிங்ஸ் ரேஞ்ச் ரிசார்ட்,தீனதயாளன் ரிசார்ட், சாஜித்கான், ஹான் பில் கிளப், மவுண்ட் மிஸ்ட் ரிசார்ட், கிளன் வியூ ரிசார்ட், நிக்கேரா நீல்கிரீஸ், ஆன சோலை லாட்ஜ், எக்கோ கேம்ப், ஜெனிபர் பிரிசில்லா கிறிஸ்டி தாஸ், நிஜாமுதின், நார்தன் ஹே எஸ்டேட், தி வைல்டுஸ், வெஸ்டர்ன் பார்ம் ரிசார்ட், வைல்டு இன், வைல்டு அட்வெஞ்சர் பார்ம் ஹவுஸ்,எலிபென்ட் என்கிளைவ், தாமோதரன் ஆகியவை ஆகும்.

    இது குறித்து கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறும் போது, யானைகள் வழித் தட நிலத்தின் கீழ் சில கட்டிடங்கள் வராவிட்டாலும் தமிழ்நாடு தனியார் வனப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அனுமதி பெறாமல் கட்டப்பட்டுள்ளதால் அந்த சட்டத்தின் படியும் நடவடிக்கை எடுக்க வாய்ப்பு உள்ளது என்றார். #elephant

    நீலகிரி மாவட்டத்தில் யானைகள் வழித் தடத்தில் கட்டப்பட்டு இருந்த 27 தனியார் ஓட்டல்களுக்கு நோட்டீஸ் அனுப்பும் பணி இன்று தொடங்கியது. #elephant

    காந்தல்:

    நீலகிரி மாவட்டத்தில் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட சீகூர், சிங்காரா மற்றும் முதுமலை வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் உள்ளது. யானைகளின் வழித் தடங்களான மசின குடி, மாயார், மாவல்லா, வாழைத் தோட்டம், பொக்காபுரம் உள்ளிட்ட பகுதிகளில் 400-க்கும் மேற்பட்ட ஓட்டல்கள், ரிசார்ட்டுகள் உள்ளது. இவைகள் யானைகள் வழித் தடத்தை மறித்து கட்டப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

    இது தொடர்பாக வக்கீல் யானை ராஜேந்திரன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

    இதனை தொடர்ந்து யானைகள் வழித் தடங்களை ஆக்கிரமித்து விடுதி மற்றும் ஓட்டல்கள் கட்டுவதற்கு கடந்த 2011-ம் ஆண்டு சென்னை ஐகோர்ட்டு தடை விதித்தது.

    மேலும் யானை வழித்தடம் என வரையறுக்கப்பட்ட பகுதிகளில் இருந்து விவசாய நில உரிமையாளர்கள், விடுதி உரிமையாளர்கள் தங்கள் குடியிருப்புகளை காலி செய்து மாவட்ட கலெக்டரிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது.

    இந்த உத்தரவை எதிர்த்து பாதிக்கப்பட்ட விடுதி உரிமையாளர்கள் மற்றும் விவசாயிகள் என 50-க்கும் மேற்பட்டோர் சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு செய்தனர்.

    இந்த வழக்கு ஜூலை 12-ந் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் யானை வழித் தடம் குறித்த செயல் திட்டத்தை நீலகிரி மாவட்ட கலெக்டர் 4 வாரங்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என கூறி இருந்தனர்.

    அதன்படி கலெக்டர் தாக்கல் செய்த அறிக்கையில் யானைகள் வழித் தடங்களில் 39 ரிசார்ட்டுகள் இருப்பதாக கூறப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில் இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் மதன் பி லோகுர், தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கலெக்டர் தாக்கல் செய்த அறிக்கையின் அடிப்படையில் 27 ரிசார்ட்டுகளுக்கு 48 மணி நேரத்தில் சீல் வைக்கவும், 12 ரிசார்ட் உரிமையாளர்கள் கலெக்டரிடம் 48 மணி நேரத்தில் ஆவணங்களை சமர்பிக்க அவகாசம் வழங்கியும் உத்தரவிட்டனர்.

    இவர்கள் அளிக்கும் ஆவணங்களில் தகவல்கள் முழுமையாக இல்லாமல் இருந்தாலோ, அனுமதி அளிக்கப்படாமல் இருந்ததாக தெரிய வந்தாலோ, அந்த ரிசார்ட்டுகளையும் உடனடியாக மாவட்ட கலெக்டர் மூடி சீல் வைக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை தொடர்ந்து யானை வழித் தடங்களை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள 27 ரிசார்ட்டுகளுக்கு இன்று நோட்டீஸ் அனுப்பப்படுள்ளது. நாளை முதல் கட்டிடங்களுக்கு சீல் வைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதற்கான பணியை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா முடுக்கி விட்டுள்ளார்.

    குன்னூர் நகராட்சிக்கு உட்பட்ட காட்டேரி பகுதியில் தனியார் நிலத்தில் கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டிடம் நகராட்சி அனுமதி பெறாமல் கட்டப்பட்டு வருவது தெரிய வந்தது. இந்த கட்டிடத்தை நகராட்சி ஆணையாளர் சரஸ்வதி, நகர வடிவமைப்பு அலுவலர் மதியழகன் ஆகியோர் தலைமையில் நகராட்சி ஊழியர்கள் ஆய்வு செய்தனர்.

    அப்போது நகராட்சி அனுமதி பெறாமல் கட்டப்படுவது உறுதியானது. இதனை தொடர்ந்து அதிகாரிகள் கட்டிட பணியை நிறுத்தி கட்டிடத்துக்கு சீல் வைத்தனர்.

    ஓசூர் அருகே யானைகள் ஊருக்குள் புகுந்ததால் கிராம மக்கள் பீதியில் உள்ளனர். #elephant

    ஓசூர்:

    ஓசூர் அருகே செட்டிப் பள்ளி வனப்பகுதியில் முகாமிட்டிருந்த 6 யானைகள், பேரண்டப்பள்ளி வனப்பகுதிக்கு இடம் பெயர்ந்து உள்ளன.

    இந்த யானைகள் பகல் நேரத்தில், வனப்பகுதியில் முகாமிட்டு ஓய்வெடுப்பதும், இரவு நேரத்தில் அருகில் உள்ள விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தியும் வருகின்றனர். நேற்று பட்டப்பகலிலேயே இந்த யானைகள் ஊருக்கு அருகில் சுற்றித்திரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    இது குறித்து வனத்துறை அதிகாரிக்கு அந்த பகுதிமக்கள் தகவல் கொடுத்தனர். அதன் பேரில் வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து யானைகளை வனத்துறையினர் வெடி காட்டுக்குள் விரட்டி விட்டனர். இதனால் அந்த பகுதிமக்கள் நிம்மதி அடைந்தனர். மேலும் இரவு நேரங்களில் யானைகள் கிராமத்துக்குள் வருவது வழக்கம். ஆனால் நேற்று பட்டப்பகலில் யானைகள் கிராமத்திற்கு வந்ததால் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.

    யானைகள் நடமாட்டம் காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள், சுற்றுப்புற கிராம மக்கள் பாதுகாப்பாகவும், எச்சரிக்கையாகவும் இருக்குமாறு வனத்துறை அதிகாரிகள் வேண்டுகோள்விடுத்துள்ளனர்.

    கூடலூர் வனப்பகுதியை ஒட்டியுள்ள விளை நிலங்களில் விவசாயிகள் வாழை பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர். இந்த வாழை பயிர்களை யானைகள் நாசம் செய்து வருவதால் விவசாயிகள் அச்சம் அடைந்து உள்ளனர்.

    கூடலூர்:

    தேனி அருகே கூடலூர் மலையடிவாரம் ஒட்டிய பகுதியில் அமைந்துள்ளது. இந்த மலை பகுதியில் விலை உயர்ந்த மரங்களும், மான், யானை, கரடி, காட்டுப்பன்றி, குரங்குள் உள்ளிட்ட பலவகை இன உயிரினங்களும் உள்ளன.

    வனப்பகுதியை ஒட்டியுள்ள விளை நிலங்களில் விவசாயிகள் வாழை, கரும்பு, தென்னை, மா உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர். இதனால் வன விலங்குள் அடிக்கடி விளைநிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வந்தது. இது குறித்து அப்பகுதி விவசாயிகள் கொடுத்த புகாரின் பேரில் வனத்துறையினர் சில இடங்களில் மட்டும் அகழிகள் அமைத்தும், சூரிய மின்வேலி கம்பிகள் அமைக்கப்பட்டது.

    தற்போது அகழிகள் மழையினால் சேதம் அடைந்து விட்டது. மின்வேலி கம்பிகளும் செயல்படாமல் உள்ளது. இதனால் வன விலங்குகள் அடிக்கடி விளைநிலங்களில் புகுந்து வாழை, தென்னை மரங்களை சேதப்படுத்தி வருகிறது.

    கூடலூர் வனச்சரகம், வெட்டுக்காடு பகுதியில் உள்ள தனியார் வாழை தோட்டத்திற்குள் புகுந்து வாழை மரங்களை சேதப்படுத்தி விட்டு விடியும் நேரத்தில் யானைகள் வனப்பகுதிக்குள் சென்று விடுகிறது. இதனால் அந்தப் பகுதி விவசாயிகள் அச்சம் அடைந்து வருகின்றனர்.

    கொடைக்கானல் மலை கிராமங்களில் மீண்டும் காட்டு யானைகள் விவசாய பயிர்களை சேதப்படுத்தியதால் கவலையடைந்துள்ளனர்.

    பெருமாள்மலை:

    கொடைக்கானல் கீழ் மலைப்பகுதிகளான பாச்சலூர், பெருங்காடு, பெரும்பாறை, பேத்துப்பாறை, அஞ்சு வீடு பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் காபி, வாழை, ஆரஞ்சு, பலா, அவரை உள்ளிட்ட மலை காய்கறிகள் விளைகின்றன. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக காட்டு யானைகள் விவசாய நிலங்களை சேதப்படுத்தி வருகின்றன.

    இதனை தொடர்ந்து நேற்று சுமார் 3 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட அவரை பயிர்கள் மற்றும் வாழை மரங்களை காட்டுயானைகள் பெரிதும் சேதப்படுத்தி அழித்துவிட்டது. இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிப்பு அடைந்துள்ளனர்

    மேலும் விவசாய நிலத்திற்குள் காட்டு யானைகள் அடிக்கடி வருவதால் மலை வாழ் விவசாய மக்கள் பெரிதும் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர். இதற்கு கொடைக்கானல் வனத்துறை விவசாய நிலத்திற்குள் காட்டுயானைகள் வரமால் இருக்க தடுப்பு சுவர் அமைத்து கொடுத்தால் அச்சமின்றி விவசாயம் செய்ய ஏதுவாக இருக்கும் என கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் பாதிக்கப்பட்ட விவசாயிக்கு தமிழக அரசு உதவி தொகை வழங்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் வேண்டுகோள் வைத்தனர்

    ×