search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தடுப்பணைகள்"

    ஆந்திர மாநிலத்தில் பாலாற்றின் குறுக்கே ஏற்கனவே 21 தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ள நிலையில், மேலும் 30 தடுப்பணைகள் கட்ட அம்மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. #Reservoir #PalarRiver
    வேலூர்:

    கர்நாடக மாநிலத்தில் சிக்பெல்லாபூர் மாவட்டம், நந்திதுர்கம் மலையில் உற்பத்தியாகும் பாலாறு, கர்நாடகத்தில் 93 கிலோ மீட்டரும், ஆந்திர மாநிலத்தில் 33 கிலோ மீட்டரும் பாய்ந்து வாணியம்பாடி அருகே புல்லூர் என்ற இடத்தில் தமிழகத்துக்குள் நுழைகிறது.

    தமிழகத்தில்தான் அதிக அளவாக 222 கி.மீ. தூரம் பயணித்து காஞ்சிபுரம் மாவட்டம், வயலூர் அருகே வங்காள விரிகுடாவில் கலக்கிறது.



    உச்சநீதிமன்ற உத்தரவுகளை மீறி ஏற்கெனவே கர்நாடகத்தில் பாலாற்றின் குறுக்கே 3 தடுப்பணைகளும், ஆந்திர மாநிலத்தில் சிறியதும், பெரியதுமாக 21 தடுப்பணைகளும் கட்டப்பட்டதால் தமிழகத்தில் பாலாறு வறண்டு கிடக்கிறது.

    ஆந்திர மாநிலத்தில் உள்ள 21 தடுப்பணைகளின் உயரத்தை அதிகரிக்க அம்மாநில அரசு கடந்த நவம்பர் மாதம் ரூ.41.70 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தற்போது பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதற்கு பாலாற்று பாசன விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

    இந்த நிலையில், தற்போது 500 மீட்டருக்கு ஒரு தடுப்பணை என்ற அடிப்படையில் பாலாற்றின் குறுக்கே புதிதாக மேலும் 30 தடுப்பணைகளைக் கட்ட ஆந்திர அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

    இதுதொடர்பாக, அம்மாநில நீர்வள ஆதாரத்துறையின் சித்தூர், பலமநேர் கண்காணிப்பு பொறியாளர்கள் அலுவலகம் மூலம் ஆந்திர அரசுக்கு கருத்துரு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

    இதை வேலூர் மேம்பாலாறு வடிநில கோட்ட செயற்பொறியாளர் அன்பரசன், வேலூர் நீர்வள ஆதாரத்துறை கண்காணிப்பு பொறியாளருக்கு அனுப்பியுள்ள கடிதமும் உறுதிப்படுத்துகிறது.

    ஆந்திராவில் பாலாற்றின் குறுக்கே மேலும் 30 தடுப்பணைகள் கட்டப்பட்டால் தமிழகத்தில் பாலாறு பாலைவனமாக மாறி விடும் என்று விவசாயிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

    பாலாற்றின் குறுக்கே மேலும் 30 தடுப்பணைகள் கட்டப்படுவதைத் தடுத்து நிறுத்தக்கோரி பிரதமர் மோடி, முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பல்வேறு துறை அமைச்சர்கள், அதிகாரிகள் ஆகியோருக்கு மனு அனுப்பியிருப்பதாக வேலூர் மாவட்ட சுற்றுச்சூழல் மறுசீரமைப்புக் குழு உறுப்பினர் அசோகன் தெரிவித்தார்.

    இதுகுறித்து, அவர் மேலும் கூறியதாவது:-

    கடந்த 2000-2005ஆம் ஆண்டுகளில் ஆந்திர மாநிலம், கணேசபுரம் பகுதியில் பாலாற்றின் குறுக்கே அணைகட்டி 40 அடி உயரத்துக்கு தண்ணீரைத் தேக்குவதற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது.

    இதையடுத்து, அந்த தண்ணீரை பல தடுப்பணைகள் கட்டித் தேக்குவதற்கு திட்டமிட்டு தொடர்ந்து தடுப்பணைகள் கட்டப்பட்டு வருகின்றன.

    இதனால், பாலாற்றுப் படுகை பகுதியில் வேலூர், குடியாத்தம், ஜோலார்பேட்டை, பேர்ணாம்பட்டு, திருப்பத்தூர் ஆகிய மேல்பாலாற்றுப் பகுதிகள் ஏற்கெனவே கருப்பு வட்டங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.

    இந்நிலையில், ஆந்திர மாநிலத்தில் மேலும் 30 தடுப்பணைகள் கட்டப்பட்டால் தமிழகத்துக்கு ஒருசொட்டு தண்ணீர் கூட வராமல் பாலாறு பாலைவனமாக மாறிவிடும்.

    பாலாற்றுப் படுகையில் ஆந்திரா தொடர்ந்து தடுப்பணைகளைக் கட்டுவதைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் இனியாவது விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். #Reservoir #PalarRiver




    வைகை அணையில் மேலும் 2 தடுப்பணைகள் கட்டப்பட உள்ளதாகவும், அதற்கான பணிகள் 10 நாட்களில் தொடங்கும் என்றும் அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார். #ministerrbudhayakumar

    மதுரை:

    மேலூர் அருகே உள்ள புலிப்பட்டியில் பெரியாறு பிரதான கால்வாய் உள்ளது. இங்கிருந்து கருங்காலக்குடி மற்றும் சிவகங்கை மாவட்ட பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

    இதனை ஏற்று பெரியாறு பிரதான கால்வாயில் இருந்து இன்று தண்ணீர் திறக்கப்பட்டது. அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மதகு களை திறந்து வைத்தார்.

    பின்னர் அவர் கூறுகையில், மேலூர் தொகுதி எம்.எல்.ஏ. பெரிய புள்ளான், சிவகங்கை மாவட்ட அமைச்சர் பாஸ்கரன் கோரிக்கையை ஏற்று பெரியாறு பிரதான கால்வாயில் இருந்து தண்ணீர் திறக்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.

    அதன்படி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மேலூர் தொகுதிக்குட்பட்ட மேல வளவு, கச்சிராயன்பட்டி, வஞ்சிநகரம், கருங்காலக்குடி உள்ளிட்ட 8 கிராமங்களுக்கும் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தென் சிங்கம்புணரி, வடசிங்கம்புணரி, எஸ்.எஸ். கோட்டை உள்ளிட்ட 11 கிரா மங்களுக்கும் பாசன வசதி கிடைக்கும். 22 ஆயிரத்து 700 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்றார்.

    பின்னர் அவர் நிருபர் களிடம் கூறியதாவது:-

    வைகை அணையில் மேலும் 2 தடுப்பணைகள் அமைக்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுத்துள்ளார். அதற்கான பணிகள் 10 நாளில் தொடங்கும்.

    முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் பிரதமர் மோடியை தனித்தனியாக சந்தித்து குறை கூறி வருவதாக தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் கூறியுள்ளார். அவர் ஒட்டு கேட்கும் வேலை செய்கிறாரா? அதில் ஈடுபட வேண்டாம். ஓட்டு கேட்கட்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் நடராஜன், எம்.எல். ஏ.க்கள் பெரியபுள்ளான், சரவணன், முன்னாள் எம். எல்.ஏ. தமிழரசன், முன் னாள் ஊராட்சி மன்ற மாவட்ட துணைத்தலைவர் ஜபார், எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் பெரியசாமி, ஒன்றிய செயலாளர்கள் பொன்னுச்சாமி, வெற்றி செழியன், மணிகண்டன் மற்றும் அன்புச்செல்வன், மேலூர் பெரியாறு ஒரு போக பாசன சங்கத் தலைவர் முருகன், பொதுப் பணித்துறை செயலாளர் சுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். #ministerrbudhayakumar

    தடுப்பணை கட்ட ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் இந்த திட்டம் 3 ஆண்டுகளில் நிறைவேற்றப்படும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். #TNCM #EdappadiPalaniswami
    சேலம்:

    சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள கோனேரிப்பட்டியில் கட்டப்பட்டுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலைய புதிய கட்டிடத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

    அம்மாவின் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் நம்முடைய சேலம் மாவட்டத்தில் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களாக தரம் உயர்த்தப்பட்டு இருக்கின்றன. கொங்கணாபுரம், சித்தூர், பனமரத்துப்பட்டி, மல்லியகரை போன்ற 12 இடங்களில் ஆரம்ப சுகாதார நிலையங்களை மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையங்களாக தரம் உயர்த்தப்பட்டு போதிய அளவிற்கு மருத்துவர்கள் நியமிக்கப்பட்டு, உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறது என்பதை இந்நேரத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். புதியதாக 11 ஆரம்ப சுகாதார நிலையங்கள் உருவாக்கப்பட்டு, கட்டப்பட்டு இருக்கின்றன.

    நீர் எவ்வளவு வீணாகி கடலில் கலக்கின்றது என்பதை கணக்கீட்டு, எந்தந்த இடத்தில் தடுப்பணை கட்ட வேண்டும். எந்தந்த நதியின் குறுக்கே தடுப்பணை கட்ட வேண்டும். எந்த பகுதியில் இருந்து நீர் எடுக்கப்பட்டு, எந்தந்த பகுதிக்கு நீர் விநியோகம் செய்ய முடியும். எந்த ஏரியில் நீர் நிரப்ப முடியும் என்ற ஓர் ஆய்வு பணியை மேற்கொண்டு, அந்த பணிகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

    பருவ மழை காலத்தில் பெய்கின்ற மழைநீர் வீணாக கடலில் போய் கலக்கின்றது. அப்படி பெய்கின்ற மழை நீர் அந்தந்த பகுதிகளில் இருக்கின்ற ஏரிகள், குளங்கள், ஓடைகள் வழியாக நாம் சேமித்து வைக்கின்ற நீர் மூலமாக நிலத்தடி நீர் உயரும்.

    ஆகவே, அப்படிப்பட்ட பணிகளை செய்வதற்காக முதற்கட்டமாக அம்மாவுடைய அரசு நிதி ஒதுக்கி 1519 ஏரிகளை எடுத்து அந்த பணிகள் தொடங்கப்பட்டு முடிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆண்டு 1511 ஏரிகள் தேர்வு செய்யப்பட்டு அதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அந்த பணிகள் தொடங்கப்பட்டு இன்றைக்கு நடைபெற்று கொண்டிருக்கின்றன. அம்மாவுடைய அரசு குடிமாரமத்து என்ற அற்புதமான திட்டத்தை கொடுத்து இன்றைக்கு அந்த திட்டத்தின் வாயிலாக ஏரிகள், குளங்கள், தடுப்பணைகள் மூலமாக நதிகள், ஓடைகள் மூலமாக தண்ணீரை தேக்கி நீரை சேமித்து மக்களுக்கு வழங்குகிற ஆட்சி அம்மாவுடைய ஆட்சி என்பதை இந்த நேரத்தில் பெருமையோடு சுட்டிக்காட்ட கடமைப்பட்டிருக்கிறேன்.

    அதுபோல தடுப்பணைக்காக ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டம் 3 ஆண்டுகளில் நிறைவேற்றப்படும்.

    ஏரியில், குளங்களில் இருக்கின்ற வண்டல் மண் பல ஆண்டுகளாக அள்ளப்படாமல் இருந்தது. வண்டல் மண் படித்த காரணத்தினாலே நீரின் கொள்ளளவு குறைந்து விட்டது. அந்த நீரின் அளவை அதிகரிக்கவும், அதே நேரத்தில் வண்டல் மண்ணை அள்ளுவதன் மூலமாக விவசாயிகள் தங்களுடைய நிலத்திற்கு உரம் இடுவதற்கு பதிலாக இந்த வண்டல் மண் பயன்படுத்தப்படுகிறது.

    வண்டல் மண் அள்ளுவதால் ஏரிகள் ஆழமாகிறது. இந்த வண்டல் மண்ணை விவசாயிகள் பயன்படுத்துவதன் மூலமாக இயற்கை உரமாக இது பயன்படுகிறது.


    மேட்டூர் அணை கட்டப்பட்டு 83 ஆண்டு காலமாகிறது. 83 ஆண்டு காலமாக அந்த அணையில் இருந்து தூர்வாரப்படவில்லை. ஆகவே அம்மாவுடைய அரசு மேட்டூர் அணையில் தூர்வாருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு, தினந்தோறும் 3 ஆயிரம் லாரிகள் மூலமாக நம்முடைய விவசாய பெருமக்கள் வண்டல் மண்ணை எடுத்து தங்களுடைய நிலத்திற்கு பயன்படுத்தினர்.

    இப்படிப்பட்ட சரித்திர சாதனைகளை படைத்துக் கொண்டிருக்கிறோம். இது மக்களுடைய அரசு, விவசாயிகளுடைய அரசு, விவசாயிகளுக்கு தேவையான அத்தனை நண்மைகளையும் செய்யக் கூடிய அரசு. விவசாயிகள், தொழிலாளர்கள் வளம் பெறுவதற்கான அரசு என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இந்த பகுதியில் மருத்துவமனை அமைந்திருக்கின்றது. மருத்துவமனை அமைந்த காரணத்தினாலே இங்கு சந்தை அமையாமல் போய் விடும் என்ற தவறான கருத்துக்களை பரப்பி வருகின்றனர். ஏற்கனவே, இந்த பகுதியில் எப்படி சந்தை கூடியதோ, அதே போல் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் சந்தை கூடுவதற்கான இடத்தை அவர்களுக்கு வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார். #TNCM #EdappadiPalaniswami
    டெல்டா மாவட்டங்களில் மழை நீரை சேமிக்க தேவையான இடங்களில் தடுப்பணைகள் கட்ட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    தஞ்சாவூர்:

    கர்நாடகாவில் கனமழை பெய்து ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக அங்கிருந்து உபரி நீர் மேட்டூர் அணைக்கு திறந்து விடப்பட்டது.

    இதனால் மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியது. இதையடுத்து டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் கல்லணை கால்வாய்க்கு வந்து அங்கிருந்து மற்ற ஆறுகளுக்கு பிரித்து விடப்படுகிறது.

    ஆறுகளுக்கு திருப்பி அனுப்பியது போக உபரி தண்ணீர் கொள்ளிடம் ஆற்றில் திறந்து விடப்படுகிறது. கொள்ளிடத்தில் இருந்து பாசனத்திற்காக திறந்து விடப்படும் தண்ணீர் பெரும்பாலும் தடுப்பணைகள் இல்லாமல் கடலில் தான் போய் கலக்கிறது.

    முன்பு தமிழகத்தில் அதிகளவு மழை பெய்தது. இதனால் தண்ணீர் அதிகளவு சேமிப்பதற்கான அவசியம் ஏற்படவில்லை. ஆனால் இன்றைய சூழ்நிலையில் தண்ணீர் இல்லாமல் கடந்த 5 ஆண்டுகளாக டெல்டா மாவட்டங்கள் வறட்சியில் சிக்கின. கர்நாடகாவில் இருந்து தண்ணீர் கேட்டும் ஏமாற்றமே மிஞ்சியது. இதனால் தற்போது வரும் தண்ணீரை கடலுக்கு அனுப்பாமல் தண்ணீரை சேமித்து வைக்க தடுப்பணைகளை கட்டி அதற்கான கட்டமைப்புளை அரசு ஏற்படுத்த வேண்டும்.

    தஞ்சை மாவட்டத்தில் கொள்ளிடம் ஆற்றில் மேலணைக்கும், கீழணைக்கும் இடையில் கோவிலடி சுக்காம்பார், வைத்தியநாதன் பேட்டை, தேவன்குடி, கருப்பூர்புத்தூர், கூகூர், குடிதாங்கி, திருவைகாவூர் ஆகிய இடங்களில் கதவணைகள் அமைத்தால் அப்பகுதியில் உள்ள நிலத்தடி நீர்மட்டம் உயரும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

    மேலும் இத்திட்டத்தை செயல்படுத்தினால் கொள்ளிடத்தின் இரு கரைகளுக்கும் அருகில் உள்ள சுமார் 2.40 லட்சம் ஏக்கர் நிலங்களுக்கு நிரந்தரமாக பாசன வசதி கிடைக்கும்.

    மேலும் கும்பகோணத்தை அடுத்த அணைக்கரையில் உள்ள கீழணையின் அருகே ஆதனூர், குமாரமங்கலம் பகுதியில் ரூ.400 கோடி மதிப்பீட்டில் தடுப்பணை கட்ட திட்டமிடப்பட்டு அதற்காக பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளை விரைவில் முடிக்க வேண்டும் என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

    அணைக்கரையில் கீழணை வடக்கு பிரிவில் 30 கண்மாய்களும், தெற்கு பிரிவில் 40 கண்மாய்களும் உள்ளன. இந்த கண்மாய்கள் வழியாக வடக்கு ராஜன் வாய்க்கால் மற்றும் தெற்கு ராஜன் வாய்க்கால்களுக்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதனால் தஞ்சை, நாகை, கடலூர் ஆகிய 3 மாவட்டங்களில் உள்ள 1 லட்சத்து 31 ஆயிரத்து 903 ஏக்கர் விளைநிலம் பாசன வசதி பெறுகிறது.

    டெல்டா மாவட்டங்களில் பல பகுதிகளில் தடுப்பணைகள் இல்லாததாலும், கால்வாய்கள் முறையாக தூர்வாரப்படாததாலும் பாசன தண்ணீர் சேமித்து வைக்க முடியாமல் கடலுக்கு சென்று விடுகிறது. எனவே டெல்டா மாவட்டங்களில் தேவையான இடங்களில் தடுப்பணைகள் கட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் வறட்சியை போக்க தடுப்பணைகள் கட்ட வேண்டும் என்று தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு கூறினார்.
    திருவண்ணாமலை:

    மரபணு மாற்றப்பட்ட விதைகளை கொண்டு விவசாயம் செய்வதை தடை செய்யக்கோரியும், நதிநீர் இணைப்பை அமைக்கக் கோரியும் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு மற்றும் நிர்வாகிகள் தமிழகத்தில் 100 நாள் சுற்று பயணம் மேற்கொண்டு உள்ளனர். இந்த நிலையில் நேற்று அய்யாக்கண்ணு திருவண்ணாமலைக்கு வந்தார். பின்னர் அவர், சங்க நிர்வாகிகளுடன் கலெக்டர் கே.எஸ்.கந்தசாமியை சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் குறித்து மனு அளித்தார்.

    முன்னதாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    விவசாயிகள் விளைவிக்கும் நெல்லுக்கு உரிய விலை நிர்ணயிக்க வேண்டும். ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நெல்லுக்கு ரூ.16.50 அரசு விலை நிர்ணயம் செய்து உள்ளது. ஆனால் நெல்லுக்கு விலை குறைத்து வழங்கப்படுகிறது. சில இடங்களில் நெல் விற்பனை செய்ய 40 கிலோ மூட்டைக்கு ரூ.50 கமிஷன் கேட்கிறார்கள். கூட்டுறவு சங்கங்களில் அனைத்து விவசாயிகளுக்கும் கடன் கிடைக்கவும், காப்பீடு, நஷ்ட ஈடு கிடைக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் வறட்சியை போக்க தடுப்பணைகள் கட்ட மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பாலாற்றையும், செய்யாற்றையும் இணைத்து திருவண்ணாமலை மாவட்டத்திற்கு தண்ணீர் கொண்டு வர வேண்டும்.

    கார்ப்பரேட் கம்பெனிகள் லாபம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக மரபணு மாற்றப்பட்ட விதைகள் மூலம் உற்பத்தி செய்த உணவு பொருட்களை மக்களுக்கு கொடுத்து பாதிப்பை ஏற்படுத்துகின்றனர். எனவே, மரபணு மாற்றப்பட்ட விதைகளை கொண்டு விவசாயம் செய்வதை தடை செய்ய வேண்டும்.

    மத்திய அரசு அனைத்து விவசாயிகளின் கடனையும் தள்ளுபடி செய்ய வேண்டும். ஆறுகளில் தடுப்பணைகள் கட்டவும், ஏரி, குளம், வரத்து கால்வாய்கள் அமைக்கவும், சீமை கருவேல மரங்களை அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசு நதிகளை தேசிய மயமாக்கி அரபிக் கடலிலும், வங்காள விரிகுடாவிலும் வீணாக கடலில் கலக்கும் தண்ணீரை தென்னகத்திற்கு குறிப்பாக தமிழகத்திற்கு திருப்பி விட வேண்டும்.

    விவசாயிகளுக்கு கரும்பு நிலுவை தொகை உடனே வழங்க வேண்டும். இன்னும் 21 நாட்களில் சென்னை செல்ல உள்ளோம். பின்னர் முதல்- அமைச்சரை சந்திக்க உள்ளோம். உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அவரது வீட்டில் அல்லது அலுவலகத்தில் கோரிக்கை நிறைவேறும் வரை அங்கேயே இருந்து போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்.

    இது சம்பந்தமாக உயர்நீதி மன்றத்தில் வழக்கும் தொடரப்பட உள்ளது. பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிப்பதில் மத்திய அரசு மக்களை ஏமாற்றுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார். 
    ×