search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 130456"

    தேனி பகுதிகளில் மக்காச்சோள அறுவடை பணிகள் தீவிரம் அடைந்து உள்ளது.
    தேனி:

    தேனி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கொடுவிலார்பட்டி, நாகலாபுரம், ஸ்ரீரெங்காபுரம், வெங்கடாசலபுரம், தருமாபுரி, தாடிச்சேரி, கோட்டூர், சீலையம்பட்டி, வேப்பம்பட்டி உள்பட பல்வேறு இடங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் மக்காச்சோளம் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. கண்மாய் பாசனம், கிணற்றுப் பாசனம், மானாவாரி என இடத்துக்கு ஏற்ப சாகுபடி செய்யப்பட்டது.

    இங்கு சாகுபடி செய்யப்பட்ட மக்காச்சோளம் விளைச்சல் அடைந்து உள்ளதை தொடர்ந்து அறுவடை பணிகள் தொடங்கி உள்ளது. சில நாட்களாக அறுவடை பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இப்பகுதிகளில் போதிய அளவில் கதிரடிக்கும் களம் வசதி இல்லாததால் சாலைகளில் கொட்டி மக்காச்சோளத்தை பிரித்தெடுத்து வருகின்றனர்.

    இதனால், அரண்மனைப்புதூர்-காமாட்சிபுரம் சாலையில் பல இடங்களில் மக்காச்சோளக் கதிர்களை கொட்டி சோளத்தை பிரித்து எடுக்கும் பணிகள் நடந்து வருகிறது. வியாபாரிகள் நேரில் வந்தே கொள்முதல் செய்கின்றனர்.

    ஈரப்பதத்துடன் கூடிய மக்காச்சோளம் ஒரு குவிண்டால் (100 கிலோ) ரூ.1,750-க்கும், ஈரப்பதம் இல்லாமல் உலர வைத்தது ஒரு குவிண்டால் ரூ.1,900-க்கும் வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்படுகிறது. வியாபாரிகள் நேரில் வந்து வாங்கிச் செல்வதால் விவசாயிகள் அவர்களிடம் விற்பனை செய்து வருகின்றனர்.
    பிளாஸ்டிக் தடையை எதிர்த்து விக்கிரமராஜா தலைமையில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட முயன்ற 5 ஆயிரம் வியாபாரிகளை போலீசார் கைது செய்தனர்.

    சென்னை:

    பிளாஸ்டிக் பொருட்களுக்கு அரசு தடை விதிப்பு, அதனை பயன்படுத்தும் வியாபாரிகளிடம் இருந்து பறிமுதல், அபராத நடவடிக்கை எடுக்கப்படுவதை கண்டித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் தலைவர் விக்கிரமராஜா தலைமையில் இன்று சட்டசபை முற்றுகை போராட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

    திருவல்லிக்கேணி போலீஸ் நிலையம் அருகில் வியாபாரிகள், பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் திரண்டனர்.

    பொதுச்செயலாளர் கோவிந்தராஜுலு, பொருளாளர் சதக்அப்துல்லா, மண்டல தலைவர் ஜோதிலிங்கம், கூடுதல் செயலாளர் வி.பி. மணி, பாண்டிய ராஜன், மாவட்ட தலைவர் அயனாவரம் சாமுவேல், என்.டி. மோகன், ஆதிகுருசாமி, ஜெயபால், அம்பத்தூர் காஜிமுகமது, கொளத்தூர் ரவி, ஆவடி அய்யாத்துரை, தேசிகன், சின்னவன், ஆர். எம்.பழனியப்பன், சுப்பிர மணியன், கே.ஏ.மாரியப்பன், அருணாசலமூர்த்தி, எம்.பி. ரமேஷ், சங்கர் உள்ளிட்ட நிர்வாகிகள் குவிந்தனர்.

    அங்கிருந்து பேரணியாக சட்டசபை நோக்கி புறப்பட்டு சென்றனர். சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் வியாபாரிகள் அனைவரையும் போலீசார் தடுத்து கைது செய்தனர்.

    முன்னதாக விக்கிரமராஜா நிருபர்களிடம் கூறியதாவது:-

    பிளாஸ்டிக் தயாரிக்கின்ற வியாபாரிகளை அரசு அழைத்து பேச வேண்டும். பன்னாட்டு நிறுவனங்கள் தயாரித்து அனுப்பும் பிஸ்கட், சாக்லெட் போன்ற தின்பண்டங்களில் பிளாஸ்டிக் சுற்றப்பட்டு விற்க அனுமதிக்கப்படுகிறது.

    அதே பிளாஸ்டிக் பொருட்களை உள்ளூர் வியாபாரிகள் உபயோகப்படுத்தினால் அரசு பறிமுதல் செய்து அபராதம் விதிக்கிறது. பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஒரு நியதி, உள்ளூர் வியாபாரிகளுக்கு ஒரு நியதியா?

    எனவே அரசு இதில் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். பிளாஸ்டிக்கை தடை செய்வதற்கு உரிய கால அவகாசம் அளிக்க வேண்டும். கோரிக்கை நிறைவேறவில்லை என்றால் தொடர் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கோயம்பேடு மார்க்கெட்டில் சட்ட விரோதமாக செயல்படும் காய்கறி கடைகள் மீது நடவடிக்கை எடுத்து அவற்றை இழுத்து மூட மார்க்கெட் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. #Koyambedumarket

    சென்னை:

    கோயம்பேடு வணிக வளாகம் ஆசியாவின் மிகப் பெரிய மார்க்கெட்டாக விளங்குகிறது.

    சென்னை பெருநகர வளர்ச்சி குழும நிர்வாகத்தின் கீழ் செயல்படும் கோயம்பேடு மார்க்கெட் நிர்வாக கமிட்டி இந்த வணிக வளாகத்தில் வியாபாரிகளுக்கு கடைகள் ஒதுக்கீடு செய்து கண்காணித்து வருகிறது. இங்கு காய்கறி மார்க்கெட்டில் 1900 காய்கறி கடைகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இதில் 1600 கடைகள் சட்டவிரோதமாக செயல்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    அங்கு காய்கறி கடை வைத்திருப்பவர்களுக்கு அதற்கான உரிய அனுமதி ஆணை எதுவும் இல்லை. வேறொருவர் காய்கறி கடைக்கு அனுமதி பெற்று அதை மற்றவருக்கு வாடகைக்கோ அல்லது குத்தகைக்கோ விடப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

    இதற்கான முறைப்படியான ஒப்பந்தம் எதுவும் செய்யப்படாமல் சட்ட விரோதமாக செயல்படுவதாக மார்க்கெட் நிர்வாக கமிட்டி தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்துக்கு அறிக்கையாக அளித்துள்ளது. அதில் மொத்தம் உள்ள 1900 கடைகளில் 1600 கடைகள் சட்ட விரோதமாக இயங்குவதாக குறிப்பிடப்பட்டு அந்த கடைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

    இதையடுத்து சட்ட விரோதமாக செயல்படும் காய்கறி கடைகள் மீது நடவடிக்கை எடுத்து அவற்றை இழுத்து மூட மார்க்கெட் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

    ஒட்டு மொத்தமாக 1600 கடைகள் மீது நடவடிக்கை எடுத்து மூடப்பட்டால் சென்னை நகரில் காய்கறி சப்ளை பாதிக்கப்படும் நிலை ஏற்படும். எனவே காய்கறி சப்ளை பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுப்பது பற்றி அதிகாரிகள் ஆலோசித்து வருகிறார்கள்.

    கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தமிழ்நாடு மற்றும் பக்கத்து மாநிலங்களில் இருந்து 450 லோடு காய்கறிகள் வருகின்றன. இங்கிருந்து சென்னை நகரில் உள்ள சிறிய மார்க்கெட்டுகள், சிறிய கடைகளுக்கு சப்ளை செய்யப்படுகிறது.

    இதேபோல் சென்னை புறநகர் பகுதி வியாபாரிகளும் கோயம்பேடு வந்து காய்கறிகளை வாங்கிச் சென்று சில்லரை வியாபாரம் செய்கிறார்கள்.

    இதற்கிடையே சட்ட விரோதமாக செயல்படும் காய்கறி கடைகளுக்கு உரிய அனுமதி பெற வருகிற மார்ச் மாதம் 31-ந்தேதி வரை கெடு விதிக்கப்பட்டுள்ளது. இதற்குள் முறைப்படி அனுமதி பெற வேண்டும், ஒதுக்கீடுதாரர்கள் மட்டுமே கடை நடத்த வேண்டும் என்று மார்க்கெட் நிர்வாக கமிட்டி அதிகாரி தெரிவித்துள்ளார். #Koyambedumarket

    குமரி மாவட்டத்தில் உள்ள கடை வியாபாரிகள் தாங்களாகவே முன்வந்து பிளாஸ்டிக் ஒழிப்பில் ஈடுபட்டுள்ளனர். #plasticban
    குமரி மாவட்டத்தில் உள்ள கடை வியாபாரிகள் தாங்களாகவே முன்வந்து பிளாஸ்டிக் ஒழிப்பில் ஈடுபட்டுள்ளனர். பிளாஸ்டிக் பைகள், கப்புகள், பிளேட்டுகளை கடைகளில் இருந்து அகற்றி அவற்றுக்கு பதில் மாற்று பொருட்களை பயன்படுத்தி வருகிறார்கள்.

    கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள் கட்டாயம் துணிப்பை கொண்டு வரும்படி அறிவுறுத்துகிறார்கள். அவ்வாறு துணிப்பை கொண்டு வராத வாடிக்கையாளர்களுக்கு அட்டைப் பெட்டிகளில் பொருட்களை கொடுத்து வருகிறார்கள்.

    இதேபோல துணிக்கடைகளிலும் பிளாஸ்டிக் பைகளுக்கு பதில் வாடிக்கையாளர்களுக்கு துணிப்பைகள் வினியோகிக்கப்பட்டன.

    மீனாட்சிபுரம், கோட்டார், வடசேரி பகுதியில் உள்ள டீக்கடைகளில் பார்சல் டீ-க்கு வழங்கப்படும் பிளாஸ்டிக் பைகள் நிறுத்தப்பட்டன. பேப்பர் கப்புகளும் அப்புறப்படுத்தப்பட்டன. அவற்றுக்கு பதிலாக பார்சல் டீ, காபி வாங்குபவர்கள் கட்டாயம் பாத்திரம் கொண்டு வர அறிவுறுத்தப்பட்டனர். டாஸ்மாக்கடைகளில் உள்ள பார் உரிமையாளர்களுக்கு ஏற்கனவே அதிகாரிகள் பல்வேறு அறிவுரைகளை வழங்கி இருந்தனர். பார்களில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுவது கண்டுபிடிக்கப்பட்டால் அதற்கு பார் உரிமையாளர் தான் பொறுப்பேற்க வேண்டும் என உத்தர விடப்பட்டது.

    இதனால் டாஸ்மாக் கடைகளில் பிளாஸ்டிக் பொருட்கள் தவிர்க்கப்பட்டன. பிளாஸ்டிக் கப்புகளுக்கு பதிலாக கண்ணாடி டம்ளர்கள், தண்ணீர் பாக்கெட்டுகளுக்கு பதிலாக வாட்டர் பாட்டில்கள் பயன்படுத்தப்பட்டன. தின்பண்டங்களுக்கு வழங்கப்படும் பேப்பர் தட்டுகளுக்கு பதில் சில்வர் தட்டுகள் வினியோகிக்கப்பட்டது. #plasticban
    தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடை நேற்று முதல் அமலுக்கு வந்தது. இதனால் பெரும்பாலான வியாபாரிகள் நேற்று துணிப்பைகளுக்கு மாறினர். இந்த திட்டத்துக்கு பொதுமக்களும் வரவேற்பு அளித்துள்ளனர். #PlasticBan
    சென்னை:

    பிளாஸ்டிக்கால் ஆன தட்டு, தேநீர் குவளை, தண்ணீர் பாக்கெட், உறிஞ்சு குழல், கைப்பை உள்பட 14 வகையான பொருட்களுக்கு தமிழக அரசு தடை விதித்திருந்தது. அந்த தடை நேற்று முதல் அமலுக்கு வந்தது.

    மக்களது அன்றாட பயன்பாட்டில் பிளாஸ்டிக் பொருட்கள் பெரிதும் கையாளப்பட்டு வருகின்றன. மக்களிடம் இருந்து பிளாஸ்டிக்கை பிரிக்கவே முடியாது என்ற சூழ்நிலையில், அரசின் இந்த தடை உத்தரவு நேற்று பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

    சாலையோர உணவகங்கள் மற்றும் ஏராளமான ஓட்டல்களில் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகமாகவே இருந்து வந்தது. தடை உத்தரவு அமல்படுத்தப்பட்ட நேற்று ஓட்டல்களில் பிளாஸ்டிக் பயன்பாடு பெரிதும் குறைக்கப்பட்டது. வாழை இலைகளிலேயே உணவு பரிமாறப்பட்டது.

    அதேபோல ‘பார்சல்’ கேட்டு வருவோரிடம் பாத்திரங்களை கொண்டுவருமாறு கடைக்காரர்கள் தெரிவித்தனர். இதனால் தூக்குச்சட்டி, கிண்ணம் போன்ற பாத்திரங்களை கொண்டுவந்து வேண்டிய உணவு வகைகளை வாடிக்கையாளர்கள் வாங்கி சென்றனர்.

    இட்லி-தோசை மாவு விற்பனை செய்பவர்களும் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்துவதை கைவிட்டனர். வாடிக்கையாளர்களிடம் வீட்டில் இருந்து பாத்திரங்களை கொண்டு வாருங்கள் என வேண்டுகோள் விடுத்தனர். அந்தவகையில் நீண்ட நாட்களுக்கு பிறகு நேற்று காலையில் பெண்மணிகள் பாத்திரங்களில் இட்லி-தோசை மாவு வாங்கி செல்வதை பார்க்க முடிந்தது. இதனால் பாத்திரங்கள் மீண்டும் மறு பிரவேசம் எடுத்திருக்கின்றன.

    இறைச்சி கடைகளிலும் தையல் இலைகள் எனும் மந்தார இலை, வாழை இலைகளிலேயே இறைச்சி தரப்பட்டது. எப்போதும் பயன்படுத்தப்படும் கருப்பு நிற பிளாஸ்டிக் கவர்களை இறைச்சி கடைகளில் நேற்று பார்க்க முடியவில்லை.



    காய்கறி-பலசரக்கு போன்ற ‘பெரும்பாலான கடைகளில் ‘பிளாஸ்டிக் பை பயன்பாடு இல்லை’, ‘கடைக்கு செல்லும்போது கைப்பை எடுத்து செல்வோம்’ போன்ற வாசகங்கள் பெரிய அட்டைகளில் எழுதி வைக்கப்பட்டிருந்தது.

    கடைகளுக்கு வருவோர் மஞ்சப்பை, துணிப்பைகள் மற்றும் கூடைகளை எடுத்து வந்து காய்கறி மற்றும் மளிகை பொருட்களை வாங்கி சென்றனர். #PlasticBan

    வானகரம், திரு.வி.க.நகர் உள்பட நகரின் முக்கிய மீன் மார்க்கெட்களிலும் பிளாஸ்டிக் பை பயன்பாடு நேற்று பெருமளவு குறைந்திருந்தது. வாழை இலைகளிலேயே மீன்களை வியாபாரிகள் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்தனர். வாடிக்கையாளர்களும் தேவையான பாத்திரங்கள் மற்றும் துணிப்பைகளை கடைகளுக்கு எடுத்து வந்தனர். டீக்கடைகளிலும் பெரும்பாலும் கண்ணாடி டம்ளர்களே பயன்படுத்தப்பட்டன.

    மளிகை கடை முதல் அனைத்து கடைகளுக்கும் கைப்பையின் தேவை அதிகரித்து இருப்பதால் பெண்களின் அத்தியாவசிய பொருளாக துணிப்பைகள் மாறி வருகின்றன. ஆண்களின் மோட்டார் சைக்கிள் மற்றும் சைக்கிள்களிலும் ஒரு துணிப்பை கட்டாயம் இடம்பிடிக்க தொடங்கி இருக்கிறது.

    கோவில்களில் அர்ச்சனை செய்வதற்கான பூஜை பொருட்களை மொத்தமாக பிளாஸ்டிக் பைகளில் கட்டி விற்கும் வியாபாரிகள் நேற்று பூஜைக்கு தேவையான பொருட்களை துணிப்பையில் வைத்தே விற்பனை செய்தனர். இந்த துணிப்பைகளுக்கு தனியாக ரூ.5 வசூலித்து கொண்டனர்.

    நகரத்து மக்களின் முக்கிய தேவையான துணிப்பைகளின் மவுசு ஒரே நாளில் இப்படி அதிகரிக்கும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க முடியாது. அந்தவகையில் பிளாஸ்டிக் பயன்பாட்டை நேற்று மறக்க மக்கள் அதிகமாக முயற்சித்திருந்தனர்.

    ஆனாலும் சில இடங்களில் பிளாஸ்டிக் பொருட்களை காண முடிந்தது. குறிப்பாக சாலையோரம் பூ வியாபாரம் மற்றும் பழ வியாபாரத்தில் ஈடுபடுவோர் நேற்று வழக்கம்போலவே பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தினர். சிலர் பிளாஸ்டிக் பை மீதான தடை குறித்து கேள்வி எழுப்பும்போது, ‘கொஞ்சம் கொஞ்சமாகத்தான் மாற முடியும். வாங்கி வச்ச சரக்க என்ன பண்றது. கொஞ்ச நாளில் மாறிக்கலாம் சார்’, என்று சலிப்பாக பதில் அளித்தனர்.

    எது எப்படியோ பிளாஸ்டிக் மீதான தடையை மக்கள் ஏற்க தொடங்கி விட்டனர். இதுகுறித்து சென்னை மீர்சாகிப்பேட்டையை சேர்ந்த இல்லத்தரசிகள் வி.ஜெயந்தி, ஜெ.ஜோதி ஆகியோர் கூறுகையில், “பிளாஸ்டிக் பொருட்களை புறக்கணிப்பது தற்போது கடினமாகத்தான் இருக்கும். ஆனால் எதிர்காலத்தில் அது மிகப்பெரிய பலனை தரும். அரசின் இந்த திட்டம் நிச்சயம் வரவேற்கத்தக்கது”, என்றனர்.

    அதேபோல பெருநகர சென்னை மாநகராட்சி மூலம் அந்தந்த மண்டலங்களில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் கிடங்குகளில் பொதுமக்கள் பிளாஸ்டிக் கழிவுகளை ஒப்படைத்து வருகின்றனர். இக்கழிவுகள் உடனுக்குடன் அகற்றப்பட்டு கொடுங்கையூருக்கு எடுத்து செல்லப்படுகிறது.

    இதுகுறித்து மாநகராட்சி மண்டல அதிகாரி ஆ.பரந்தாமன் கூறுகையில், “பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற மாநகராட்சி கடும் முயற்சி எடுத்து வருகிறது. இதற்காக சுழற்சி முறையில் பணியாளர்கள் பணிபுரிகிறார்கள். 24 மணி நேரமும் செயல்படும் அறிவிக்கப்பட்ட கிடங்குகளில் பொதுமக்கள் தங்களிடம் உள்ள பிளாஸ்டிக் கழிவுகளை கொடுக்கலாம்”, என்றார். #PlasticBan
    பிளாஸ்டிக் தடை காரணமாக ஓட்டல் மற்றும் கடைகளில் எளிதில் மக்கும் வகையிலான கைப்பைகள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது. இதுபோன்ற கைப்பைகளுக்கு அளவு, தரத்துக்கு ஏற்ப தனியாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. #PlasticBan
    சென்னை:

    பிளாஸ்டிக் தட்டு, பிளாஸ்டிக் தேநீர் குவளை, பிளாஸ்டிக் தண்ணீர் குவளை, பிளாஸ்டிக் தண்ணீர் பாக்கெட், பிளாஸ்டிக் உறிஞ்சு குழல், பிளாஸ்டிக் கைப்பை, பிளாஸ்டிக் கொடி உள்பட 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு இன்று (1-ந்தேதி) முதல் தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    இதனால், பெரும்பாலான ஓட்டல் மற்றும் கடைகளில் பிளாஸ்டிக் கைப்பைகளை போன்று வடிவமைக்கப்பட்டுள்ள எளிதில் மக்கும் வகையிலான கைப்பையை பொதுமக்களுக்கு வழங்க தொடங்கி உள்ளனர். பொருட்கள் வாங்கும் பொதுமக்களுக்கு பிளாஸ்டிக் கைப்பைகளை இலவசமாக வழங்கி வந்த வியாபாரிகள் எளிதில் மக்கும் வகையிலான கைப்பைக்கு விலை நிர்ணயம் செய்துள்ளனர்.

    அளவு மற்றும் தரத்துக்கு ஏற்றாற்போல் ஒரு ரூபாய் முதல் 8 ரூபாய் வரை இந்த கைப்பைகளுக்கு என தனியாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. வேறு வழியில்லாமல் பொதுமக்களில் பலர் விலை கொடுத்து இதுபோன்ற கைப்பைகளை வாங்கி செல்கின்றனர்.

    பிளாஸ்டிக் தடை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்ற அரசின் அறிவிப்பால் கடந்த சில நாட்களுக்கு முன்பிருந்தே ஓட்டல்கள், பலசரக்கு கடை, காய்கறி கடை, இறைச்சி கடை, இட்லி, தோசை மாவு கடை போன்றவற்றில் வழக்கமாக பொருட்கள் வாங்க வரும் பொதுமக்களிடம் ‘அடுத்தமுறை வரும் போது வீட்டில் இருந்து கைப்பை எடுத்து வரவும்’ என்று வியாபாரிகள் அறிவுறுத்தி வந்தனர்.

    அதன்படி, பொதுமக்களில் பலர் வீட்டில் இருந்து கைப்பையை எடுத்து சென்று பொருட்கள் வாங்கும் நிலைக்கு மாறி உள்ளனர்.



    பிளாஸ்டிக் கைப்பை, பிளாஸ்டிக் தட்டு, பிளாஸ்டிக் தேநீர் குவளை என முழுவதும் பிளாஸ்டிக் பொருட்களை கொண்ட கடைகளை நடத்தி வந்த பலர் பிளாஸ்டிக் பொருட்களை முழுவதுமாக அகற்றி விட்டு எளிதில் மக்கக்கூடிய கைப்பைகள், துணிப்பைகள், சணல் பைகள், பாக்குமட்டை தட்டுகள், பேப்பர் குவளைகள், பேப்பர் உறிஞ்சுகுழல், மரக்கட்டையிலான ஸ்பூண்கள் போன்றவற்றை மட்டுமே விற்பனை செய்யும் கடைகளாக மாற்றி உள்ளனர்.

    சென்னை பிராட்வே என்.எஸ்.சி. போஸ் சாலையில் முழுவதும் பிளாஸ்டிக் கைப்பைகளை கொண்ட கடையை நடத்தி வந்த சதக்கத்துல்லா என்பவர் தனது கடையை எளிதில் மக்கக்கூடிய கைப்பைகளை கொண்ட கடையாகவும், துணிப்பை மற்றும் சணல் பை கடையாகவும் மாற்றி உள்ளார்.

    அவர் கூறும்போது, ‘பிளாஸ்டிக் கைப்பைக்கு முழுமையான தடை வரப்போகிறது என்று தெரிந்ததும் ஏற்கனவே விற்பனைக்காக வைத்திருந்த பிளாஸ்டிக் கைப்பையை மிக குறைந்த விலைக்கு விற்பனை செய்து விட்டேன். அதன்பின்னர், கொஞ்சம் கொஞ்சமாக எளிதில் மக்கும் கைப்பை, துணிப்பை ஆகியவற்றை வாங்கி விற்பனை செய்ய தொடங்கினேன். தற்போது பிளாஸ்டிக் கைப்பை விற்பனைக்கு இல்லை என்ற நிலையில் கடையை நடத்தி வருகிறேன். எளிதில் மக்கக்கூடிய கைப்பைகள், துணிப்பைகளை விட பிளாஸ்டிக் கைப்பைகள் விலை மிக குறைவு தான் என்ற போதிலும் சூழ்நிலைக்கு ஏற்ப நம்மை மாற்றிக்கொள்வது தான் சரியாக இருக்கும்’ என்றார்.

    இதேபோன்று கொடிகள் விற்பனை செய்யப்படும் கடைகளில் பிளாஸ்டிக் கொடிகளுக்கு பதிலாக பேப்பரினால் ஆன கொடிகள் அதிக அளவில் விற்பனைக்கு வந்துள்ளன.

    இதுகுறித்து பிராட்வே என்.எஸ்.சி. போஸ் சாலையில் கொடிகள் விற்பனை செய்யும் கடை நடத்தி வரும் எஸ்.எம்.மூர்த்தி கூறும்போது, ‘கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தான் பிளாஸ்டிக் கொடி விற்பனைக்கு வந்தது. அதன்பின்னர், பேப்பர் கொடி கண்ணுக்கு தெரியாமல் போய்விட்டது. அதற்கு முக்கிய காரணம், பிளாஸ்டிக் கொடிகள் விழா நடக்கும் இடங்களில் எளிதாக கட்டுவதற்கு வசதியாக கயிற்றுடன் இணைக்கப்பட்டு விற்பனைக்கு வந்தது. பேப்பர் கொடிகளை பொறுத்தமட்டில் அதற்கென்று தனியாக சணல் வாங்கி பசை மூலம் சணலில் ஒட்டி கட்ட வேண்டும். இதற்கு வேலைப்பாடு அதிகம் என்று கருதியே அரசியல் கட்சி மற்றும் பொது நிகழ்ச்சிகளுக்கு பிளாஸ்டிக் கொடிகளை பொதுமக்கள் அதிகம் வாங்கி சென்றனர். பிளாஸ்டிக் கொடியை விட பேப்பர் கொடி விலை சற்று அதிகம் தான். கொடி அலங்காரத்துக்கான வேலைப்பாடும் அதிகம், விலையும் அதிகம் என்ற போதிலும் சுற்றுச்சூழல் பாதிப்பு தடுக்கப்படுகிறது என்பதை கருத்தில் கொள்ள வேண்டியது அவசியமாகும்’ என்றார்.

    இன்று முதல் பிளாஸ்டிக்கிற்கு தடை என்பதால் வாடிக்கையாளர்களுக்கு வழங்க எளிதில் மக்கும் வகையிலான கைப்பைகளை சென்னை பிராட்வே என்.எஸ்.சி. போஸ் சாலையில் உள்ள கடைகளில் ஏராளமான சிறு வியாபாரிகள் வாங்கி சென்றனர். #PlasticBan
    புத்தாண்டையொட்டி தோவாளை பூ மார்க்கெட்டில் பூக்கல் விலை உயர்ந்துள்ளது. பிச்சிப்பூ ரூ.1500-க்கு விற்பனை செய்யப்படுகிறது. #thovalaimarket
    நாகர்கோவில்:

    தோவாளை பூ மார்க்கெட்டுக்கு நெல்லை, குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.

    கடந்த ஒரு மாத காலமாக கடுமையான பனிப்பொழிவு உள்ளதால் பூக்கள் வரத்து குறைந்துள்ளது. இதனால் பூக்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. புத்தாண்டையொட்டி பூக்கள் வாங்குவதற்கு ஏராளமான வியாபாரிகள் இன்று காலையில் தோவாளை பூ மார்க் கெட்டில் குவிந்திருந்தனர். இதனால் மார்க்கெட் களை கட்டி இருந்தது.

    மல்லிகை, பிச்சிப்பூக்களின் வரத்து குறைவாக இருந்ததால் விலை அதிகமாக இருந்தது. பிச்சிப்பூ கிலோ ரூ.1500-க்கு விற்கப்பட்டது. இதேபோல் மல்லிகைப்பூவும் நேற்றையவிட இன்று விலை உயர்ந்து காணப்பட்டது. கிலோ ரூ.2200-க்கு விற்கப்பட்டது.

    சம்பங்கி ரூ.40, கேந்தி ரூ.60, ரோஜா ரூ.90, கோழிப் பூ ரூ.40, வாடாமல்லி ரூ.40, கனகாம்பரம் ரூ.800, துளசி ரூ.30, சிவந்தி ரூ.80-க்கு விற்பனையானது.

    விலை உயர்வு குறித்து வியாபாரி ஒருவர் கூறுகையில், பனிப்பொழிவின் காரணமாக பூக்கள் குறைந்த அளவுதான் வருகின்றன. ஆனால் பூக்களின் தேவை அதிகமாக உள்ளது. இதனால் விலை உயர்ந்துள்ளதாக தெரிவித்தார். #thovalaimarket
    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கரூர் பகுதிகளில் வெல்லம் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. #diwali
    நொய்யல்:

    தீபாவளி பண்டிகை வருகிற நவம்பர் மாதம் 6-ந்தேதி(செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுகிறது. தீபாவளி என்றாலே இனிப்பு வகைகள் பிரதானமாக இருக்கும். இதற்காக வெல்லம் தயாரிக்கும் பணி கரூர் பகுதிகளில் தீவிரமாக நடந்து வருகிறது. முத்தனூர், கவுண்டன்புதூர், நடையனூர், கரைப்பாளையம், நொய்யல், சேமங்கி, கொளத்துப்பாளையம், வேட்டமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள் கரும்பு பயிரிட்டுள்ளனர்.

    நிலத்தில் கரணை பதித்தவுடன் பல விவசாயிகள் புகளூரில் உள்ள தனியார் சர்க்கரை ஆலைக்கு கரும்பு வெட்டிச் செல்வதற்கு பதிவு செய்கின்றனர். பதிவு செய்யாத விவசாயிகள் கரும்பு விளைந்தவுடன் பல்வேறு பகுதிகளில் உள்ள வெல்லம் தயாரிக்கும் ஆலை அதிபர்களுக்கு டன் ஒன்றுக்கு ரூ.2,300-க்கு விற்பனை செய்கின்றனர்.

    கொள்முதல் செய்யப்படும் கரும்புகளை நவீன எந்திரத்தின் மூலம் சாறு பிழிந்து இரும்பு கொப்பரையில் ஊற்றி காய வைத்து சரியான பதத்துடன் பாகு வந்தவுடன், மர அச்சுத் தொட்டியில் ஊற்றி உலர வைத்து குப்புற கவிழ்த்து மர சுத்தியலால் தட்டுகின்றனர். அதிலிருந்து அச்சு வெல்லம் விழுகிறது.

    அதேபோல மரத்தொட்டியில் கரும்பு பாகை ஊற்றி உலர வைத்து துணிகள் மூலம் உருண்டை பிடித்து உருண்டை வெல்லம் தயாரிக்கப்படுகிறது. பின்னர் நன்கு உலர வைத்து சாக்குகளில் 30 கிலோ கொண்ட சிப்பங்களாக தயாரிக்கப்படுகிறது. தயார் செய்யப்பட்ட வெல்ல சிப்பங்களை வியாபாரிகள் வாங்கி லாரிகள் மூலம் ஆந்திரா, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், சண்டிகார் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும், தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கின்றனர்.

    தீபாவளிக்கு இன்னும் சிறிது நாட்களே உள்ளதால் இந்த பகுதிகளில் வெல்லம் தயாரிக்கும் பணி இரவு-பகலாக நடந்து வருகிறது. கடந்த வாரம் 30 கிலோ கொண்ட உருண்டை வெல்லம் ஒரு சிப்பம் ரூ.1,150-க்கும், அச்சு வெல்லம் ஒரு சிப்பம் ரூ.1,150-க்கும் வியாபாரிகள் வாங்கிச்சென்றனர். இந்த வாரம் ஒரு சிப்பம் உருண்டை வெல்லம் ரூ.1,200-க்கும், அச்சு வெல்லம் ரூ.1200-க்கும் வாங்கிச் செல்கின்றனர். வெல்லத்துக்கு ஓரளவு விலை கிடைப்பதால், விவசாயிகளும், வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். #diwali
    பான் பராக், குட்கா விற்பனை செய்யும் வணிகர்களின் உணவு பாதுகாப்பு உரிமம் உடனடியாக ரத்து செய்யப்படும் என காஞ்சீபுரம் கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார். #Gutka
    காஞ்சீபுரம்:

    தமிழகத்தில் புகையிலை, குட்கா விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. எனினும் கடைகளில் புகையிலை பொருட்கள் தாராளமாக விற்கப்படுகின்றன.

    அதிகாரிகள் தொடர்ந்து வேட்டை நடத்தியும் வெளிமாநிலங்களில் இருந்து கடத்தி வரப்படும் புகையிலையை கட்டுப்படுத்த முடியவில்லை.

    இதேபோல காஞ்சீபுரம் மாவட்டத்திலும் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை தாராளமாக நடக்கிறது. இதையடுத்து குட்கா, புகையிலை விற்பனை செய்யும் வியாபாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் பொன்னையா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    பான்பராக், குட்கா பொருட்கள் விற்பனையை தமிழக அரசு தடை செய்துள்ளது. அதன்படி மாவட்டத்தில் இதுவரை 1,36,707 கிலோ பான்பராக் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்துள்ளது.

    உணவு மாதிரிகள் எடுக்கப்பட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    இந்த வழக்குகளில் இதுவரை 2,24,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பான் பராக், குட்கா விற்பனை செய்யும் வணிகர்களின் உணவு பாதுகாப்பு உரிமம் உடனடியாக ரத்து செய்யப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #Gutka
    பெட்ரோல் - டீசல் விலை உயர்வை கண்டித்து தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டத்தில் இன்று வியாபாரிகள் கடைகளை அடைத்தும், மீனவர்கள் கடலுக்கு செல்லாமலும் பேராட்டத்தில் ஈடுபட்டனர். #PetrolDieselPriceHike
    தஞ்சாவூர்:

    பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும், மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையை கண்டித்தும் நாடு முழுவதும் இன்று முழு அடைப்பு போராட்டம் நடந்து வருகிறது.

    தமிழகத்தில் இந்த முழு அடைப்பு போராட்டத்தில் வணிகர் சங்கத்தினர், லாரி உரிமையாளர்கள் சங்கம், மணல் லாரி உரிமையாளர்கள் சங்கமும், மீனவர்களும் இந்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

    தஞ்சை மாவட்டத்திலும் தி.மு.க., காங்கிரஸ், பா.ம.க, ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க. என பல கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. மேலும் லாரி உரிமையாளர்கள் சங்கம், ஆட்டோ உரிமையாளர்கள் சங்கங்களும் ஆதரவு தெரிவித்துள்ளன.

    தஞ்சை மாவட்டத்தை பொறுத்தவரை அரசு பஸ்கள் இன்று வழக்கம் போல் இயக்கப்பட்டன. தனியார் பஸ்கள் மட்டும் இயக்கப்படவில்லை. இதன் காரணமாக பஸ்களில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    தஞ்சை மாவட்டத்தில் ஆட்டோக்கள், வேன்கள், லாரிகள் இயங்கவில்லை. தஞ்சையில் ரெயில் நிலையம், புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம் உள்ளிட்ட நகரின் முக்கிய பகுதிகளில் போலீசார் பாதுகாப்பிற்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.

    தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணம், திருவிடை மருதூர், பட்டுக்கோட்டை, மதுக்கூர், பாபநாசம், பூதலூர், திருக்காட்டுப்பள்ளி, திருவோணம், திருவையாறு உள்ளிட்ட பகுதிகளில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. இதனால் தஞ்சை மாவட்டத்தில் சுமார் 70 சதவீத கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.

    இதேபோல் தஞ்சை மாவட்டத்தில் சேதுபாவாசத்திரம், மல்லிபட்டினம் ஆகிய பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லவில்லை.

    திருவாரூர் மாவட்டத்தில் வழக்கம் போல் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. லாரி, ஆட்டோக்கள் மட்டும் ஓடவில்லை. மேலும் தனியார் பஸ்களும் இயக்கப்படவில்லை.

    திருவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, குடவாசல், பேரளம், நன்னிலம், வலங்கைமான், கோட்டூர், நீடாமங்கலம் ஆகிய பகுதிகளில் இன்று பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.

    பெட்ரோல் - டீசல் விலை உயர்வை கண்டித்து திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர், மன்னார்குடி, பேரளம், கொரடாச்சேரி, திருத்துறைப்பூண்டி, நன்னிலம், குடவாசல் உள்ளிட்ட 16 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் தி.மு.க., காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு , மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க., பாட்டாளி மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.

    நாகை மாவட்டத்தில் அரசு பஸ்கள் வழக்கம் போல் இயங்கின. ஒரு சில தனியார் பஸ்கள் மட்டும் இயங்கின. மேலும் ஆட்டோக்கள், வேன்கள், லாரிகள் ஓடவில்லை.

    நாகை, மயிலாடுதுறை, சீர்காழி, திருவெண்காடு, வைத்தீஸ்வரன் கோவில், வேதாரண்யம், தலைஞாயிறு, தரங்கம்பாடி, பொறையாறு, குத்தாலம் ஆகிய இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.

    நாகை மாவட்டத்தில் நாகை, வேதாரண்யம், ஆறுக்காட்டுத்துறை, கோடியக்கரை பகுதிகளில் சுமார் 2 ஆயிரம் மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லவில்லை. #PetrolDieselPriceHike
    அய்யலூர் அருகே இரவு நேரங்களில் களைகட்டும் சூதாட்டம் சமூக ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

    வடமதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள தோட்டங்களிலும் தோப்பு வீடுகளிலும் இரவு நேர சூதாட்டம் களைகட்டி வருகிறது. கிராம புறங்களில் திரைப்படங்களை காண்பித்து பொதுமக்கள் அங்கு சென்றவுடன் இது போன்ற சூதாட்டம் அமோகமாக நடைபெற்று வருகிறது.

    ஏராளமான விவசாயிகள், கூலித் தொழிலாளர்கள் வியாபாரிகள் இது போன்ற சூதாட்டத்தில் ஈடுபடுகின்றனர். பணத்தை இழக்கும் நபர்கள் மீண்டும் தங்கள் ஆட்டத்தை தொடர்வதற்காக அதே இடத்தில் பணம் கடனாக வழங்கப்படுகிறது.

    வெற்று பேப்பரில் கையெழுத்து வாங்கிக் கொண்டு பணத்தை பெற்று விளையாட்டை தொடர்கின்றனர். இதனால் பணத்தை இழப்பதுடன் வீடு மற்றும் உடைமைகளையும் பறிகொடுத்து ஊரை விட்டு ஓடும் நிலைமைக்கு தள்ளப்படுகின்றனர்.

    இது போன்ற சூதாட்டத்துக்கு போலீசாரும் உடந்தையாக உள்ளனர் என்று அப்பகுதி பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். தற்போது இது குறித்த வீடியோ பேஸ்புக், வாட்ஸ் அப் போன்ற சமூக ஊடகங்களில் வெளியாகி மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. எனவே சமூக சீரழிவுக்கு காரணமாக உள்ள சூதாட்டத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இதனை ஊக்கப்படுத்தும் வகையில் செயல்படும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு கடை வைக்க விரும்புவோர் வருகிற 30-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என நாமக்கல் கலெக்டர் ஆசியா மரியம் தெரிவித்து உள்ளார்.
    நாமக்கல்:

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    இந்த ஆண்டு நவம்பர் மாதம் 6-ந் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு பட்டாசு கடை வைப்பதற்கு வெடிமருந்து சட்ட விதிகளின்படி கடை உரிமையாளர்கள் அதற்கு உரிய விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். அதனுடன் ரூ.10-க்கு நீதிமன்ற கட்டண வில்லை ஒட்டியும், உரிம கட்டணம் ரூ.500-ஐ கருவூலத்தில் அல்லது பாரத ஸ்டேட் வங்கியில் செலுத்தியும், அசல் சலானுடன் வரைபடம் (5 நகல்கள்), வாடகை ஒப்பந்தப்பத்திரம், சொந்த கட்டிடம் எனில் வீட்டுவரி ரசீது ஆகியவற்றுடன் வருகிற 30-ந் தேதி மாலை 5 மணிக்குள் நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கிடைக்கும் வகையில் அனுப்பி வைக்க வேண்டும்.

    மேலும் வெடிமருந்து விற்பனை செய்ய உள்ள கடை தரைதளத்தில் தான் இருக்க வேண்டும். இரண்டு கதவுகளும், அவசர வழியும் இருக்க வேண்டும். மேல் தளத்தில் குடியிருப்பு இருக்கக்கூடாது. படிக்கட்டு, லிப்ட் ஆகியவைக்கு அருகில் வெடிமருந்து விற்பனை செய்யக்கூடாது.

    ஒரு வேளை தீ விபத்து ஏற்பட்டால் அந்த இடத்திற்கு தீயணைப்பு லாரிகள் செல்ல கூடிய விசாலமான சாலையில் தான் பட்டாசு கடை இருக்க வேண்டும். பட்டாசு பொருட்கள் எளிதில் தீப்பிடிக்காத பொருளினால் அமைக்கப்பட்ட கூடாரம் அல்லது கட்டிடத்தில் வைக்கப்பட வேண்டும். இரண்டு பட்டாசு கடைகளுக்கு இடையே குறைந்தபட்சம் 10 மீட்டர் இருக்க வேண்டும்.

    வருகிற 30-ந் தேதி மாலை 5 மணிக்கு பிறகு பட்டாசு உரிமம் கேட்டு வரும் மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்து கொள்ளப்பட மாட்டாது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
    ×