search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மின்கம்பம்"

    திருத்துறைப்பூண்டி அருகே கஜா புயல் சீரமைப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ஒப்பந்த ஊழியர் மீது மின்கம்பம் இடித்ததில் பரிதாபமாக உயிரிழந்தார்.
    திருத்துறைப்பூண்டி:

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட திருவாரூர் மாவட்டத்தில் தொடர்ந்து சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த சீரமைப்பு பணிக்காக கோயம்புத்தூர், ஈரோடு, கரூர், நாமக்கல், திண்டிவனம், விழுப்புரம், திருவண்ணாமலை, காஞ்சீபுரம், சென்னை, திருச்சி உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்து மின்ஊழியர்கள் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

    இந்த நிலையில் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள குன்னலூர் ஊராட்சி எக்கல் வினோபா கிராமத்தில் 10-க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் மின்சாரம் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது மின் கம்பங்களை தூக்கும் கிரேன் வாகனத்தை ஆறுமுகம் என்பவர் ஓட்டியுள்ளார். கிரேன் மூலம் தூக்கி சென்ற மின்கம்பங்கள் மீது கோயம்புத்தூர் திருமலைபாளையம் சர்ச் காலனி ஊமைத்துரை தெருவை சேர்ந்த ஒப்பந்த மின் ஊழியர் டேவிட்(வயது 38) அமர்ந்து சென்றார். அப்போது ஒரு திருப்பத்தில் திரும்பியபோது கிரேனில் இருந்து டேவிட் கீழே விழுந்தார். அவர் மீது மின்கம்பம் இடித்ததாக தெரிகிறது. இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், டேவிட் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுபற்றி தகவல் அறிந்து பள்ளங்கோவில் கோட்ட துணை பொறியாளர் உமாமகேஸ்வரி, இணை மின் பொறியாளர் குமார், ஆடலரசன் எம்.எல்.ஏ. ஆகியோர் மருத்துவமனைக்கு வந்தனர். உயரிழந்த டேவிட்டுக்கு திருமணமாகி மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். 

    இதேபோல கடந்த 10 நாட்களுக்கு முன்பு திருத்துறைப்பூண்டி அருகே உள்ள மேட்டுபாளையத்தில் மின்சார சீரமைப்பு பணியில் ஈடுபட்டு இருந்த ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த ஒப்பந்த தொழிலாளி முத்துக்குமார் என்பவர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
    கஜா புயலால் சாய்ந்து நிற்கும் மின்கம்பத்தை உயிர்பலி ஏற்படும் முன் மின்வாரியம் சரிசெய்து அச்சத்தை போக்கிட வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். #GajaCyclone
    மெலட்டூர்:

    தஞ்சாவூர் மாவட்டம், அம்மாபேட்டை ஒன்றியம், பள்ளியஅக்ரஹாரம் மின்பகிர்மான வட்டம், கொத்தங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட குண்டூர் கிராமத்தில் சாலையோரம் அமைக்கப்பட்டிருந்த இரு மின் கம்பங்கள் தெருவோரம் உள்ள வீடுகள் மீது சாய்ந்த நிலையில் உள்ளது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் குடியிருப்பு வாசிகள் எந்த நேரத்திலும் மின் கம்பம் வீட்டின் மீது சாய்ந்து விடுமோ? என்ற அச்சத்தில் வசித்து வருகின்றனர். இது குறித்து கிராம மக்கள் கூறியதாவது:-

    குண்டூர் கிராமத்தில் உள்ள 3 மின் கம்பங்கள் சாய்ந்த நிலையில் இருந்தன. அவை தற்போது வீசிய கஜா புயலால் மேலும் சாய்ந்து விட்டது. எந்த நேரத்திலும் வீட்டின் மீது விழுந்தது விடும் அபாயம் உள்ளது இதனால் கிராம மக்கள் அச்சத்தில் இருந்து வருகிறோம். வெண்ணுகுடி, எடக்குடி உதாரமங்களம் உள்பட பல கிராமத்திற்கு செல்லும் முக்கிய சாலையோரம் உள்ள மின்கம்பம் மிகவும் சாய்ந்த நிலையில் உள்ளதால் இந்த சாலையில் செல்லும் கிராம மக்கள், பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.

    உயிர்பலி ஏற்படும் முன் மின்வாரியம் சாய்ந்த நிலையில் உள்ள மின்கம்பத்தை சரிசெய்து அச்சத்தை போக்கிட வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். #GajaCyclone

    சின்னதாராபுரம் அருகே 3 மின் கம்பங்கள் உடைந்து விழுந்தது. இதனால் தொடர் மின்வெட்டு ஏற்பட்டதால் அந்த பகுதி பொதுமக்கள் அவதி அடைந்தனர்.
    க.பரமத்தி: 

    சின்னதாராபுரம் அருகே உள்ள நஞ்சைகாளி குறிச்சி கிராமத்தில் தேவேந்திரன் நகர் உள்ளது. இங்கு ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்தநகர் பகுதியில் 10-க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் உள்ளன. இந்த மின்கம்பங்கள் அனைத்தும் சேதடைந்த நிலையில் உள்ளது. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம். 

    இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு திடீரென தேவேந்திரன் நகரில் உள்ள 3 மின்கம்பங்கள் உடைந்து விழுந்தன. இதில் ஒரு மின்கம்பம் அருகில் உள்ள வீட்டின் கூரை மீது விழுந்தது. அப்போது உடனடியாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

    இந்த மின்கம்பங்கள் உடைந்து விழுந்ததால் தேவேந்திரன் நகர் பகுதியில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று மதியம் வரை தொடர் மின்வெட்டு ஏற்பட்டு மின்வினியோகம் பாதிக்கப்பட்டது. இதனால் இப்பகுதி பொதுமக்கள், குழந்தைகள், முதியவர்கள் இரவு முழுவதும் தூக்கம் இல்லாமல் மிகவும் அவதி அடைந்தனர். மின் கம்பங்கள் உடைந்து விழுந்தபோது, அருகில் யாரும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. எனவே இப்பகுதியில் சேதமடைந்த மின்கம்பங்கள் அனைத்தையும் உடனடியாக மின்சார வாரியத்துறையினர் அகற்றி புதிய மின்கம்பங்கள் நட வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    மின்கம்பத்தில் ஏறி பழுதை சரிசெய்த போது எதிர்பாராதவிதமாக மின்கம்பத்தில் இருந்து தவறி கீழே விழுந்ததில், படுகாயமடைந்த ஊழியர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
    கன்னிவாடி:

    கன்னிவாடி அருகேயுள்ள அம்மாபட்டியை சேர்ந்தவர் முத்தையா (வயது 45). இவர் அம்மாபட்டியில் உள்ள மின்சார வாரிய அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் ரெட்டியபட்டியை சேர்ந்த சின்னப்பொண்ணு என்பவரின் விவசாய தோட்டத்தில் உள்ள மின்கம்பத்தில் பழுது ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து முத்தையா மின்கம்பத்தில் ஏறி பழுதை சரிசெய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்கம்பத்தில் இருந்து தவறி கீழே விழுந்ததில், படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    இதுகுறித்து தகவலறிந்த கன்னிவாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் கோட்டைச்சாமி, சப்-இன்ஸ்பெக்டர் பெருமாள் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அவருடைய உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த முத்தையாவுக்கு ரேவதி என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். 
    ஆடு, மாடுகளை மின் கம்பத்திலோ, மின்கம்ப இழுவைகளிலோ கட்டுவதை தவிர்க்க வேண்டும் என்று மின் செயற் பொறியாளர் குணவர்த்தினி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    சேலம்:

    சேலம் நகர மின் செயற் பொறியாளர் குணவர்த்தினி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சேலம், தாதுபாய்குட்டை கடை வீதி, பழையபேருந்து நிலையம், கோட்டை, கலெக்டர்அலுவலகம், அரசு மருத்துவமனை, செவ்வாய் பேட்டை, ஒரு பகுதி, முதல் அக்ரகறாரம் ஒரு பகுதி, மேட்டுத் தெரு, செரி ரோடு, பிரட்ஸ் ரோடு, மரக்கடை வீதி, கருங்கல் பட்டி, களரம் பட்டி, பில்லுக்கடை, குகை, எருமாபாளையம், சீலநாயக்கன்பட்டி, தாசநாயக்கன்பட்டி, தாதகாபட்டி, கிச்சிப்பாளையம், சன்னியாசிகுண்டு, நாராயணநகர், பொன்னம்மாபேட்டை ஒரு பகுதி, பட்டைக் கோவில், டவுன் ரெயில்வே ஸ்டே‌ஷன் மற்றும் நான்கு ரோடு ஒரு பகுதி, பொன்னம்மாபேட்டை கேட், தில்லைநகர், அண்ணாநகர், கொய்யாதோப்பு,தீரனூர், காந்திபுரம் காலனி, நில வாரம்பட்டி, சாமியப்பாநகர், கெஜல்நாயக்கன்பட்டி, நாட்டாமங்கலம், நாழிக்கல்பட்டி, ஜருகுமலை, நெத்திமேடு, மணியனூர், கே.பி கரடு, ஊத்துமலை, ஜி.ஆர் நகர், காஞ்சி நகர், போன்ற பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மின் விபத்தினை தவிர்த்து பாதுகாப்பாக இருக்க தாழ்வாக உள்ள மின் கம்பிகள், சாய்ந்த நிலையில் உள்ளமின் கம்பங்கள், பழுதடைந்த மின் கம்பங்கள், உடைந்து பாதுகாப்பற்ற நிலையில் உள்ள மின் இணைப்பு பெட்டிகள் போன்ற குறைகளை கண்டறிந்தால் பொதுமக்கள் அதன் அருகில் செல்லாமலும், தொடாமலும் உடனடியாக அப்பகுதியில் உள்ள மின் வாரிய அலுவலகத்திற்கு தகவல் கொடுக்கவேண்டும்.

    பொதுமக்கள் ஆடு, மாடுகளை மின் கம்பத்திலோ, மின்கம்ப இழுவைகளிலோ கட்டுவதை தவிர்க்கவும் மழைக் காலங்களில் மின்மாற்றி (டிரான்ஸ் பார்மர்) மின்கம்பங்கள், மின் கம்ப இழுவைகள் அறுந்து கிடக்கும் மின்கம்பிகளை, அருகில் சென்று தொடுதல் கூடாது, விபத்துக்களை தவிர்க்க வேண்டுமாய் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    மேலும் மின்சாரம் சம்மந்தமாக புகார்களை மின் வாரிய “வாட்ஸ் ஆப்” எண் 94458 51912-க்கு புகைப்படங்கள் மூலமாகவோ எழுத்துக்கள் மூலமாகவோ தெரிவிக்கலாம் இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    ×