search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வருகை"

    அண்ணா அறிவாலயத்தில் நடைபெறவுள்ள கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பங்கேற்க காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி ஒப்புதல் அளித்துள்ளார் என திமுக தெரிவித்துள்ளது. #DMK #KarunanidhiStatue #SoniaGandhi
    சென்னை:

    கடந்த ஆகஸ்டு மாதம் மரணம் அடைந்த கருணாநிதிக்கு தி.மு.க. தலைமை அலுவலகமான சென்னை அண்ணா அறிவாலயத்தில் பிரமாண்டமான முழு உருவ சிலை அமைக்கப்பட உள்ளது. கருணாநிதி சிலையுடன் தி.மு.க. நிறுவனர் அண்ணாவுக்கும் புதிய சிலை அமைக்கப்பட உள்ளது. மேலும் மிக பிரமாண்டமான தி.மு.க. கொடி கம்பம் ஒன்றும் அங்கு நிறுவப்பட உள்ளது.

    அண்ணா-கருணாநிதி ஆகியோரின் சிலைகள் திறப்பு விழா டிசம்பர் 16-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவை தேசிய அளவில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் விழாவாக மாற்ற ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

    பாஜகவுக்கு எதிராக உள்ள காங்கிரஸ் மற்றும் அனைத்து மாநில கட்சிகளையும் கருணாநிதி சிலை திறப்பு விழாவுக்கு அழைப்பதற்கு மு.க. ஸ்டாலின் முடிவு செய்துள்ளார். இதற்காக அவர் தி.மு.க. மூத்த தலைவர்களை பல்வேறு மாநிலங்களுக்கும் அனுப்பி எதிர்க்கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுத்து வருகிறார்.

    இந்நிலையில், அண்ணா அறிவாலயத்தில் நடைபெறவுள்ள கருணாநிதி சிலை திறப்பு விழாவுக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி சென்னைக்கு வருகிறார் என திமுக தெரிவித்துள்ளது.



    இதுதொடர்பாக திமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், அறிவாலயத்தில் நடைபெறவுள்ள கருணாநிதி சிலை திறப்பு விழாவில் கலந்து கொள்ள வருமாறு காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்திக்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் அழைப்பு விடுத்திருந்தார்.

    அவரது அழைப்பை ஏற்று சிலை திறப்பு விழாவில் பங்கேற்க உள்ளதை காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி உறுதி செய்துள்ளார். 

    இதையடுத்து, டிசம்பர் 16-ம் தேதி அண்ணா அறிவாலயத்தில் நடைபெறவுள்ள கருணாநிதியின் சிலை திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி ஒப்புதல் அளித்துள்ளார் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #DMK #KarunanidhiStatue #SoniaGandhi
    கஜா புயல் காரணமாக மாவட்ட நிர்வாகம் சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரக்கோணத்திலிருந்து 25 பேர் கொண்ட தேசிய பேரிடர் குழு இன்று காலை கடலூர் வந்தனர். #GajaCyclone #GajaStorm
    கடலூர்:

    கஜா புயல், கடலூர்- பாம்பன் இடையே கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் கடலூர் மாவட்டத்துக்கு பாதிப்பு ஏற்படலாம் என்று கூறப்படுகிறது.



    இதையொட்டி மாவட்ட நிர்வாகம் சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இன்று காலை அரக்கோணத்திலிருந்து வேன் மூலம் 25 தேசிய பேரிடர் குழுவினர் கடலூர் வந்தனர்.

    மஞ்சக்குப்பத்தில் உள்ள அண்ணா மைதானத்தில் அவர்கள் தங்கியுள்ளனர். கடலூர் மாவட்டத்தில் அதிகமாக வெள்ளத்தால் பாதிக்கப்படும் இடங்களை கண்டறிந்து அவர்கள் அங்கு அனுப்பப்படுவார்கள்.

    கடலூருக்கு வந்த தேசிய பேரிடர் மீட்பு குழுவை சேர்ந்த சிவக்குமார் கூறியதாவது:-

    அரக்கோணத்திலிருந்து தேசிய பேரிடர் மீட்பு படையில் இருந்து நாங்கள் 25 பேர் வந்துள்ளோம். பேரிடர் காலத்தில் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் அவர்களை காப்பாற்றுவோம்.

    கடலூர், புதுவை, நாகப்பட்டினம், காரைக்கால், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு 8 குழுக்களாக சென்றுள்ளோம். குழு கமாண்டர் நிஷால் தலைமையில் 25 பேர் கடலூர் மாவட்டத்துக்கு வந்துள்ளோம்.

    படகுகள், லைட்டுகள் உள்ளிட்ட பல்வேறு தேவையான பொருட்கள் கொண்டு வந்துள்ளோம். புயலை எதிர்கொள்ள எங்கள் பேரிடர் மீட்பு குழுவினர் தயாராக உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #GajaCyclone #GajaStorm #NationalDisasterRescueTeam



    தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று மாலை 6.30 மணிக்கு கோவை வருகிறார். #ADMK #EdappadiPalaniswami
    கோவை:

    தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று மாலை 6.30 மணிக்கு கோவை வருகிறார்.

    விமான நிலையத்தில் அவருக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.

    அங்கிருந்து ஈச்சனாரி செல்லும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அங்கு நடைபெறும் சட்டமன்ற துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் இல்ல திருமண வரவேற்பு விழாவில் பங்கேற்று பேசுகிறார். பின்னர் இரவு அரசு விருந்தினர் மாளிகையில் தங்குகிறார்.

    நாளை(சனிக்கிழமை) காலை கொடிசியாவில் நடைபெற உள்ள ‘உயிர்’ அமைப்பு தொடக்க விழாவில் பங்கேற்கிறார். தமிழ் நாட்டில் விபத்து உயிரிழப்பு நடைபெறும் நகரங்களில் சென்னைக்கு அடுத்தபடியாக கோவை நகரம் உள்ளது.

    விபத்து உயிரிழப்புகளை தடுக்கவும், விபத்தினால் உடல் ஊனம் ஏற்படுவதை தவிர்க்கவும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் கோவை நகரின் தொழில் அதிபர்கள், முக்கிய பிரமுகர்களால் ‘உயிர்’ அமைப்பு தொடங்கப்பட்டு உள்ளது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ‘உயிர்’ அமைப்பை தொடங்கி வைத்து பேசுகிறார். நிகழ்ச்சியில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கலந்து கொள்கிறார்கள்.

    பின்னர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உக்கடம் ஆத்துப்பாலம் மேம்பாலப்பணிகள், உக்கடம் பெரியகுளம் உள்பட ‘ஸ்மார்ட் சிட்டி’ பணிகளை பார்வையிடுகிறார்.

    பின்னர் கவுண்டம்பாளையம் கூட்டு குடிநீர் திட்டப்பணிகளை பார்வையிடுகிறார். மாலையில் பல்லடம் எம்.எல்.ஏ. கரைப்புதூர் நடராஜன் இல்லத் திருமண விழாவில் பங்கேற்கிறார். பின்னர் இரவு கோவை திரும்பி விமானம் மூலம் சென்னை புறப்பட்டு செல்கிறார்.

    முதல்-அமைச்சர் வருகையையொட்டி அ.தி.மு.க. தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். கோவை நகரின் பல இடங்களில், முதல்-அமைச்சர் பங்கேற்கும் நிகழ்ச்சி நடைபெறும் இடங்களிலும் அவரை வரவேற்று அ.தி.மு.க. கொடி, தோரணங்கள், பிளக்ஸ் பேனர்கள் வைத்துள்ளனர். #ADMK #EdappadiPalaniswami
    தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வருகிற 3- ந்தேதி திருவாரூர் வருகை தர உள்ளார். #TNGovernor #BanwarilalPurohit
    திருவாரூர்:

    தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வருகிற 3- ந்தேதி திருவாரூர் வருகை தர உள்ளார்.

    3-ந்தேதி மதியம் திருவாரூருக்கு வருகை தரும் புரோகித்திற்கு மாவட்ட எல்லையான வலங்கைமானில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மாவட்ட கலெக்டர் நிர்மல்ராஜ் தலைமையில் வரவேற்பு அளிக்கப்படுகிறது.

    அதனை தொடர்ந்து திருவாரூர் வருகை தரும் கவர்னர் பன்வாரிலால் திருவாரூர் விளமல் சுற்றுலா மாளிகையில் மாவட்ட அளவிலான அதிகாரிகளுடன் வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு செய்கிறார்.

    இதனை தொடர்ந்து மதியம் 2 மணி முதல் 4.20 மணி வரை பொதுமக்களை சந்தித்து மனுக்கள பெறுகிறார். அதன் பின்னர் திருவாரூர் தெற்குவீதியில் அமைக்கப்பட்டுள்ள மத்திய அரசின் நலத்திட்டங்கள் குறித்த கண்காட்சியை திறந்து வைத்து பார்வையிடுகிறார்.

    அதன் பிறகு அகர திருநல்லூர் கிராமத்திற்கு சென்று சுகாதார பணிகளை பார்வையிடுகிறார். தூய்மை செய்யும் பணியிலும் தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறார். அதன்பின்னர் திருவாரூர் விளமல் சுற்றுலா மாளிகை வரும் ஆளுநர் இரவு ஓய்வு எடுக்கிறார். அன்று இரவு கவர்னர் பன்வாரிலால் திருவாரூரில் இருந்து கார் மூலம் திருச்சிக்கு புறப்பட்டு அங்கிருந்து விமானம் மூலம் சென்னைக்கு புறப்பட்டு செல்கிறார்.

    முன்னதாக 3-ந் தேதி காலை கும்பகோணத்துக்கு கவர்னர் பன்வாரிலால் செல்கிறார். காலை 10.30 மணிக்கு கும்பகோணம் அருகே அருகே உள்ள திப்பிராஜபுரம் அரசுபள்ளியில் புதிய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

    அதனைத்தொடர்ந்து கே.ஆர்.எஸ். கவுசல்யா மகாலில் டாக்டர் செண்பகராமன் பிள்ளையின் உருவச்சிலையை திறந்து வைத்து பேசுகிறார். பின்னர் பிரதமரின் பசுமை புரட்சி திட்டத்தின் சார்பில் திப்பிராஜபுரத்தை தத்து எடுத்து கொள்வதை முறைப்படி அறிவித்து, பல்வேறு துறையில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்ற 50 வயதுக்கு மேற்பட்ட 4 பேரை பாராட்டி நினைவு பரிசு வழங்குகிறார். திப்புராஜபுரம் கிராமத்தில் 20 இடங்களில் கண்காணிப்பு கேமிரா பொருத்தியுள்ளதை இயக்கி வைக்கிறார்.

    இதில் தஞ்சை மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை, அறக்கட்டளையின் கிராமிய திட்ட ஆலோசகர் சென்னை கீதா ராஜசேகர் ஆகியோர் பேசுகின்றனர்.

    விழா நிகழ்ச்சிகளை முடித்து கொண்டு கும்பகோணத்தில் இருந்து கார் மூலம் கவர்னர் பன்வாரிலால் திருவாரூருக்கு புறப்பட்டு செல்கிறார். #TNGovernor #BanwarilalPurohit
    தமிழக கவர்னர் பன்வாரிலால்புரோகித் அனைத்து மாவட்டங்களுக்கும் நேரில் சென்று மக்களை சந்தித்து கோரிக்கை மனு பெற்று வருகிறார். அதன்படி திருவாரூர் மாவட்டத்துக்கு வருகிற 3-ந் தேதி(புதன்கிழமை) கவர்னர் வருகிறார்.
    திருவாரூர்:

    தமிழக கவர்னர் பன்வாரிலால்புரோகித் அனைத்து மாவட்டங்களுக்கும் நேரில் சென்று மக்களை சந்தித்து கோரிக்கை மனு பெற்று வருகிறார். அதன்படி திருவாரூர் மாவட்டத்துக்கு வருகிற 3-ந் தேதி(புதன்கிழமை) கவர்னர் வருகிறார். திருவாரூர் விளமலில் உள்ள சுற்றுலா மாளிகையில் 3-ந் தேதி மதியம் 2 மணி முதல் மாலை 4.20 வரை தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள், அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் பொதுமக்களை சந்தித்து கவர்னர் கோரிக்கை மனு பெறுகிறார். இந்த தகவலை திருவாரூர் மாவட்ட கலெக்டர் நிர்மல்ராஜ் தெரிவித்துள்ளார். 
    தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஒருநாள் சுற்றுப்பயணமாக இன்று காலை ஈரோடு வந்தார். அவரை மாவட்ட கலெக்டர் பிரபாகர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். #TNGovernor #BanwarilalPurohit

    ஈரோடு:

    தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஒருநாள் சுற்றுப்பயணமாக இன்று ஈரோடு வந்தார்.

    ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் சென்னையில் இருந்து இன்று காலை 5.30 மணிக்கு ஈரோடு ரெயில் நிலையத்துக்கு வந்த அவரை ஈரோடு மாவட்ட கலெக்டர் பிரபாகர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

    மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன், ஏ.டி.எஸ்.பி. பாலாஜி சரவணன், டவுண் டி.எஸ்.பி. ராதாகிருஷ்ணன் ஆகியோரும் வரவேற்றனர்.

    மேலும் அதே ரெயிலில் வந்த மின்வாரியத்துறை அமைச்சர் தங்கமணியும் கவர்னர் பன்வாரிலாலை வரவேற்றார்.

    வரவேற்பை பெற்றுக்கொண்ட கவர்னர் பிறகு நேராக காலிங்கராயன் அரசினர் விருந்தினர் மாளிகைக்கு சென்று ஓய்வெடுத்தார்.

    அங்கு போலீசாரின் அணிவகுப்பு மரியாதை நடந்தது. அதனை கவர்னர் ஏற்றுக் கொண்டார். தொடர்ந்து காலை 9 மணி அளவில் கவர்னர் பன்வாரிலால் கோபிக்கு காரில் புறப்பட்டு சென்றார்.

    கவர்னர் வருகையையொட்டி கோபிக்கு செல்லும் இரு வழியிலும் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    கோபி வாய்க்கால் ரோட்டில் உள்ள டி.எஸ். ராமன் விடுதியில் உள்ள தியாகி லட்சுமணன் சிலை திறப்பு விழா நடக்கிறது. விழாவில் தியாகி லட்சுமணன் சிலையை கவர்னர் பன்வாரிலால் திறந்து வைத்து சிறப்புரை ஆற்றுகிறார்.

    விழாவில் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், கலெக்டர் பிரபாகர் மற்றும் அரசு உயர் அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள்.

    விழா முடிந்ததும் மதியம் மீண்டும் காலிங்கராயன் விருந்தினர் மாளிகைக்கு வருகிறார்.

    அங்கு பொதுமக்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களை சேர்ந்தவர்களிடம் மனுக்களை வாங்கி குறைகளை கேட்கிறார்.

    மாலை 4.30 மணிக்கு ஈரோடு பஸ் நிலையத்தில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் சுகாதார பணியை மேற்கொள்கிறார். #TNGovernor #BanwarilalPurohit
    பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக அம்மா மக்கள் முன்னேற்றக்கழக துணைப்பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் நாளை சிவகங்கை வருகிறார்.
    தேவகோட்டை:

    பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக அம்மா மக்கள் முன்னேற்றக்கழக துணைப்பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் நாளை (29-ந் தேதி) சிவகங்கை வருகிறார்.

    காளையார்கோவிலில் கட்சி பிரமுகரின் இல்லத் திருமண விழாவை நடத்தி வைக்கும் தினகரன் பின்னர் பனங்குடி, சொக்கநாதபுரம், செம்பனூர், ஆலங்குடி, மானகிரி ஆகிய பகுதிகளில் நடைபெறும் கொடியேற்று விழாக்களிலும் கலந்து கொள்கிறார்.

    தொடர்ந்து தேவகோட்டையில் வடக்கு ஒன்றியம், முள்ளிக்குண்டு ஆகிய இடங்களில் கட்சிக் கொடி ஏற்றுகிறார். சாத்தான்கோட்டையில் கட்சி பிரமுகரின் இல்ல விழாவில் பங்கேற்கிறார்.

    இறகுசேரியில் குமார் இல்ல புதுமனை விழாவில் பங்கேற்கும் தினகரன் பின்னர் முன்னாள் எம்.எல்.ஏ. சொர்ணலிங்கம், முன்னாள் மாவட்டச் செயலாளர் கருப்பையா ஆகியோர் வீடுகளுக்கு செல்கிறார்.

    டி.டி.வி. தினகரன் சிவகங்கை மாவட்டம் வருவதையொட்டி அவருக்கு மேள,தாளங்கள் முழங்க பல்வேறு இடங்களில் உற்சாக வரவேற்பு மாவட்டச் செயலாளர் உமாதேவன் தலைமையில் அளிக்கப்பட உள்ளது.

    இதற்கான ஏற்பாடுகளை இளைஞரணி இணைச் செயலாளர் முருகன், தேவகோட்டை நகரச் செயலாளர் கமலக்கண்ணன், கண்ணன் குடி ஒன்றியம் சரவண மெய்யப்பன் என்ற கார்த்திக், இறகு சேரி குமார், தமிழ்குமரன், கண்ணன், நிலவழகன், செந்தில் குமார் ஆகியோர் செய்து வருகின்றனர்.
    தென்மேற்கு பருவமழை பெய்து வருவதால், ஊட்டிக்கு சுற்றுலா பயணிகளின் வருகை தொடர்ந்து குறைந்து வருகிறது.
    ஊட்டி:

    மலைகளின் அரசி என அழைக்கப்படும் நீலகிரி சர்வதேச அளவில் புகழ் பெற்றது. ஊட்டியில் ரோஜா பூங்கா, தாவரவியல் பூங்கா, அரசு அருங்காட்சியகம், தொட்டபெட்டா மலைசிகரம், தேயிலை பூங்கா, மூலிகை பண்ணை, ரெயில் நிலையம், படகு இல்லம், கேர்ன்ஹில் வனப்பகுதி உள்ளது.

    ஊட்டி வெளிவட்டாரங்களில் பைன் பாரஸ்ட், சூட்டிங்மட்டம், பைக்காரா படகு இல்லம், பைக்காரா நீர்வீழ்ச்சி உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் காணப்படுகின்றன. சீசன் காலங்கள், தொடர் மற்றும் கோடை விடுமுறை காலங்களில் குளு, குளு காலநிலையை அனுபவிக்கவும், இயற்கை அழகை ரசிக்கவும் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வருகை தருகிறார்கள்.

    இதனால் விடுமுறை காலங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும். மேலும் சீசன் இல்லாத காலங்களிலும் சுற்றுலா பயணிகளின் வருகை கணிசமான அளவில் இருக்கும். தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் கடந்த சில வாரங்களாக ஊட்டி, கூடலூர் பகுதியில் தொடர் மழை பெய்தது.

    இதனால் பல இடங்களில் மரங்கள் சரிந்து விழுந்தது. மின்கம்பிகள் அறுந்து விழுந்ததால் அடிக்கடி மின்சார வினியோகம் பாதிக்கப்பட்டது. மேலும் கடுங்குளிர் நிலவியது.

    இதனால் விடுமுறை காலங்களில் ஊட்டிக்கு சுற்றுலா வரக்கூடிய பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. தாவரவியல் பூங்கா, ரோஜா மலர் பூங்கா, படகு இல்லம் உள்பட பல முக்கிய சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை குறைவாக உள்ளது. மேலும் கமர்சியல், எட்டின்ஸ், சேரிங்கிராஸ் உள்ளிட்ட சாலைகளில் உள்ளூர் வாகனங்கள் மட்டுமே இயக்கப் படுகிறது.

    சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் பெருமளவு இல்லாததால் சாலைகளில் போக்குவரத்து நெருக்கடி இல்லை. தாவரவியல் பூங்காவில் மட்டும் கணிசமான அளவில் சுற்றுலா பயணிகள் வந்து இருந்தனர்.

    ஆனால் ரோஜா பூங்காவில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அடியோடு குறைந்து இருந்தது. இந்த நிலையில் சுற்றுலா பயணிகளின் வருகை தொடர்ந்து குறைந்து காணப்படுவதால் தாவரவியல் பூங்கா, படகு இல்லம் உள்ளிட்ட இடங்களில் போதிய வியாபாரம் இல்லாமல் வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த வாரம் தாவரவியல் பூங்காவுக்கு வெள்ளிக்கிழமை தொடங்கி ஞாயிற்றுக்கிழமை வரை சராசரியாக 2 ஆயிரத்து 700 சுற்றுலா பயணிகள் மட்டுமே வந்துள்ளனர். கடந்த 3 நாட்களில் இதே எண்ணிக்கையிலான சுற்றுலா பயணிகள் மட்டுமே வருகை தந்துள்ளனர். இதனால் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை.

    இதனிடையே ஊட்டியில் நேற்று மதியம் 2 மணிக்கு சாரல் மழை பெய்தது. இதனால் ஊட்டி சேரிங்கிராஸ், கமர்சியல் சாலை, நகராட்சி மார்க்கெட், மத்திய பஸ் நிலையம், ஏ.டி.சி., லோயர் பஜார், மெயின் பஜார் உள்ளிட்ட பகுதிகளில் குடைகளை பிடித்தபடி பொதுமக்கள் நடந்து சென்றனர். 
    கடந்த 2017-ம் ஆண்டில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகையில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடம் பெற்றதை அறிவித்து, மத்திய சுற்றுலாத்துறை கடிதம் வழங்கியுள்ளது. #Domestic #ForeignVist #Tourist
    சென்னை:

    உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகையில் தமிழகம் முதலிடம் வகிப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    உலகின் பழமையான கலாசாரம், வரலாற்றுச் சிறப்புமிக்க நினைவுச் சின்னங்கள், பிரமிக்கத்தக்க கோவில் கட்டிடக்கலை, சிற்பக்கலை, மனதை வசீகரிக்கும் இயற்கைத் தோற்றங்கள், வனப்பகுதிகள் மற்றும் யுனெஸ்கோ அறிவித்துள்ள உலக பாரம்பரியச் சின்னங்கள் ஆகியவை தமிழ்நாட்டில் உள்ளன.

    எனவே உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை அதிகளவில் கவர்வதில் தமிழ்நாடு தொடர்ந்து தனிச்சிறப்புடன் திகழ்ந்து வருகிறது. இதுபோன்ற சுற்றுலாச் சிறப்புகளைக் கொண்ட தமிழ்நாடு, கடந்த 2017-ம் ஆண்டில், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகையில் இந்தியாவிலேயே முதலிடத்தை பெற்றது.

    இதை மத்திய அரசின் சுற்றுலாத்துறை அறிவித்துள்ளது. உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகையில் 2013-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரை, தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாகவும்; வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகையில் 2014-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரை, தொடர்ந்து நான்கு ஆண்டுகளாகவும் தமிழ்நாடு, இந்தியாவிலேயே முதலிடத்தை பெற்று வந்துள்ளது.

    2017-ம் ஆண்டில் 34 கோடியே 50 லட்சம் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளும், 48 லட்சத்து 60 ஆயிரம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் தமிழ்நாட்டிற்கு வந்து சென்றுள்ளனர்.

    2017-ம் ஆண்டில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகையில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடம் பெற்றதை அறிவித்து, மத்திய சுற்றுலாத்துறை கடிதம் வழங்கியுள்ளது. இந்தக் கடிதத்தை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமியிடம், சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் காண்பித்து வாழ்த்து பெற்றார்.

    இந்த நிகழ்வின்போது, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அபூர்வ வர்மா, சுற்றுலா ஆணையர் பழனிக்குமார் உடனிருந்தனர்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.  #Domestic #ForeignVist #Tourist #tamilnews
    புதுச்சேரி, சென்னைக்கு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வருகையையொட்டி கடலோர காவல்படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
    கடலூர் முதுநகர்:

    துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு 2 நாட்கள் சென்னை, புதுச்சேரியில் தங்கி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். இதற்காக அவர் புதுச்சேரியில் தங்கி உள்ளார். அவர் வருகையையொட்டி கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி கடலோர பகுதிகளில் கடலோர காவல் படையினர் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கடலோர காவல்படை இன்ஸ்பெக்டர் நவீன், சப்-இன்ஸ்பெக்டர் சிவகுருநாதன் மற்றும் போலீசார் கடலூர் மாவட்டம் கிள்ளை முதல் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் வரை படகில் சென்று கடற்கரையோரம் தீவிரமாக கண்காணித்தனர். மேலும் கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த மீனவர்களிடம் விசாரணை நடத்தி, சந்தேகப்படும் படியாக யாராவது வந்தால் உடனடியாக கடலோர காவல் படைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் அவர்கள் அறிவுறுத்தினர். இந்த ரோந்து பணி நாளை (ஞாயிற்றுக்கிழமை) வரை தொடர்ந்து நடைபெறும் என்று கடலோர காவல் படையினர் தெரிவித்தனர். 
    குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நாளை முதல் 2 நாள் அரசு முறை பயணமாக கோவா செல்ல இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #RamNathGovind #Goa
    புதுடெல்லி:

    கோவா மாநில பல்கலைகழகத்தின் 30-வது ஆண்டு பட்டமளிப்பு விழா நாளை நடைபெற உள்ளது. இந்த விழா உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் நாளை கோவா செல்ல உள்ளார்.

    பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை அடுத்து, மாநில அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்படும் வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளதாகவும், ஞாயிற்று கிழமை பாம் ஜீசஸ் தேவாலயம் உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. #RamNathGovind #Goa
    துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு அரசு முறை பயணமாக இன்று புதுவை வந்தார். துணை ஜனாதிபதியின் புதுவை வருகையையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. #VenkaiahNaidu
    புதுச்சேரி:

    துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு அரசு முறை பயணமாக இன்று புதுவை வந்தார்.

    சென்னையில் இருந்து தனி ஹெலிகாப்டர் மூலம் லாஸ்பேட்டை விமான நிலையத்துக்கு 10.45 மணிக்கு வருகை தந்தார். அவரை கவர்னர் கிரண்பேடி, முதல்- அமைச்சர் நாராயணசாமி, முன்னாள் முதல்-அமைச்சர் ரங்கசாமி மற்றும் அமைச்சர்கள், அரசியல் பிரமுகர்கள் வரவேற்றனர்.

    இதையடுத்து துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கார் மூலம் காலாப்பட்டில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்துக்கு சென்றார்.

    அங்கு நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மாணவர்களுடன் வெங்கையா நாயுடு கலந்துரையாடினார். இந்நிகழ்ச்சியில் கவர்னர் கிரண்பேடி, முதல்- அமைச்சர் நாராயணசாமி, பல்கலைக்கழக துணை வேந்தர் குர்மீத்சிங் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

    இதன் பின்னர் அங்கிருந்து கார் மூலம் வெங்கையா நாயுடு கவர்னர் மாளிகைக்கு திரும்பினார். அங்கு மதிய உணவுக்கு பின் சிறிது நேரம் ஓய்வு எடுத்தார்.

    இன்று மாலை இந்திய விளையாட்டு ஆணையம் மூலம் கட்டப்பட்டு உள்ள உள் விளையாட்டு அரங்கம் மற்றும் நீச்சல் குளம், விடுதி கட்டிடத்துக்கு அடிக்கல் நாட்டு விழா ஆகியவை கம்பன் கலையரங்கில் நடைபெறுகிறது. அதில் வெங்கையா நாயுடு பங்கேற்கிறார்.

    இந்த நிகழ்ச்சி முடிந்ததும் கார் மூலம் மீண்டும் லாஸ்பேட்டை விமான நிலையத்துக்கு செல்கிறார். அங்கு ஹெலிகாப்டர் மூலம் சென்னை செல்கிறார்.

    துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு புதுவை வருகையையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. அவர் செல்லும் சாலைகளின் இருபுறமும் தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டு 50 அடி தூரத்துக்கு ஒரு போலீசார் நிறுத்தப்பட்டு இருந்தனர். #VenkaiahNaidu
    ×