search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமித்ஷா"

    • கேரள மக்கள் வன்முறையை விரும்பாதவர்கள்.
    • தேசிய பாதுகாப்பை மனதில் வைத்து எடுக்கப்பட்ட நடவடிக்கை.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் திருச்சூரில் பாரதிய ஜனதா கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் மத்திய மந்திரி அமித்ஷா கலந்து கொண்டார். அவர் பேசியதாவது:

    கேரள மக்கள் வன்முறையை விரும்பாதவர்கள். கம்யூனிஸ்டுகளின் வன்முறை அரசியலையும் அவர்கள் ஏற்கவில்லை. இது எனக்கு நன்றாக தெரியும்.

    கேரள மாநில மக்களை பாதுகாக்கவே மத்தியில் ஆளும் மோடி அரசு பாப்புலர் பிரண்ட் அமைப்புக்கு தடை விதித்தது. இது தேசிய பாதுகாப்பை மனதில் வைத்து எடுக்கப்பட்ட நடவடிக்கை.

    ஆனால் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகள் வாக்கு வங்கி அரசியல் நடத்துவதால் இதனை விரும்பவில்லை. இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் நடிகர் சுரேஷ் கோபியும் கலந்து கொண்டார். அவர் பேசியதாவது:

    திருச்சூர் பாராளுமன்ற தொகுதியில் நான் போட்டியிட தயாராக இருக்கிறேன். இல்லையேல் கம்யூனிஸ்டுகள் பலம் வாய்ந்ததாக கருதும் கண்ணூர் தொகுதியிலும் போட்டியிட நான் தயார் என்றார்.

    திருச்சூர் தொகுதியில் சுரேஷ் கோபி ஏற்கனவே போட்டியிட்டு தோல்வியை தழுவி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • பா.ஜனதா மீது மீண்டும் ஒருமுறை நம்பிக்கை வைத்ததற்காக திரிபுரா மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
    • நாகாலாந்தில் தேசிய ஜனநாயக கூட்டணியை மீண்டும் தேர்ந்தெடுத்த மக்களுக்கு இதயத்தின் அடித்தளத்தில் இருந்து நன்றி தெரிவிக்கிறேன்.

    3 மாநில சட்டசபை தேர்தல்களில் பா.ஜனதா பெற்ற வெற்றிக்கு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா வரவேற்பு தெரிவித்துள்ளார்.

    அவர் தனது 'டுவிட்டர்' பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    வடகிழக்கு பகுதிக்கு இது வரலாற்று சிறப்புமிக்க நாள். பா.ஜனதா மீது மீண்டும் ஒருமுறை நம்பிக்கை வைத்ததற்காக திரிபுரா மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

    பா.ஜனதா முன்னெடுத்த வளர்ச்சி சார்ந்த அரசியலுக்கு கிடைத்த வெற்றி.

    வளர்ச்சி மற்றும் வளமைக்காக பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜனதாதான், மக்களின் முதல் விருப்பம் என்பது நிரூபணமாகி விட்டது.

    நாகாலாந்தில் தேசிய ஜனநாயக கூட்டணியை மீண்டும் தேர்ந்தெடுத்த மக்களுக்கு இதயத்தின் அடித்தளத்தில் இருந்து நன்றி தெரிவிக்கிறேன். மேகாலயா மக்களுக்கும் நன்றி.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • முதல் மந்திரி நிதிஷ்குமாருக்கு பீகார் மக்கள் பாடம் கற்பிக்க வேண்டும் என அமித்ஷா கூறினார்.
    • பீகாரில் அதிகரித்து வரும் கள்ளச்சாராய விற்பனையை தடுத்து நிறுத்த வேண்டும் என்றார்.

    பாட்னா:

    பீகார் மாநிலத்தில் உள்ள மேற்கு சம்பாரன் பகுதியில் நடைபெற்ற பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கலந்து கொண்டு பேசியதாவது:

    பீகார் மாநிலத்தில் சட்டம், ஒழுங்கு மிகவும் மோசமான நிலையில் உள்ளது. பீகாரில் அதிகரித்து வரும் கள்ளச்சாராய விற்பனையை தடுத்து நிறுத்த வேண்டும்.

    முதல் மந்திரி நிதிஷ்குமாருக்கு பீகார் மக்கள் பாடம் கற்பிக்க வேண்டும்.

    பீகார் மாநிலத்திற்கு 1 லட்சத்து 9 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை பிரதமர் மோடி வழங்கியுள்ளார்.

    மத்திய மந்திரிகளாக இருந்த நிதிஷ்குமார் மற்றும் லாலு பிரசாத் ஆகியோர் பீகாருக்கு செய்தது என்ன?

    காலம் முழுவதும் காங்கிரஸ் கட்சியை எதிர்த்து வந்த முதல் மந்திரி நிதிஷ்குமார், பிரதமர் பதவி மீது கொண்ட பேராசை காரணமாக சோனியாவிடம் தஞ்சம் அடைந்துள்ளார். அதுமட்டுமின்றி, லாலுவின் ஜாதி வெறி மற்றும் ஊழல் அரசியலுக்கு எதிராக போராட வேண்டிய நிதிஷ்குமார் பிரதமர் பதவி மோகத்தில் லாலுவின் மடியில் அமர்ந்துள்ளார் என குற்றம்சாட்டினார்.

    • காங்கிரசுக்கு வாக்களித்தால், கர்நாடகத்தை ஏ.டி.எம்.மாக சித்தராமையா மாற்றி விடுவார்.
    • பிரதமர் மோடி மற்றும் எடியூரப்பா மீது நீங்கள் நம்பிக்கை வையுங்கள்.

    பெங்களூரு :

    கர்நாடக சட்டசபைக்கு மே மாதம் 2-வது வாரத்தில் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளது. சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்களே இருப்பதால், கர்நாடகத்தில் பா.ஜனதா தேசிய தலைவர்கள் முகாமிட்டு தீவிரமாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில், பல்லாரி மாவட்டம் சண்டூரில் நேற்று பா.ஜனதா பொதுக்கூட்டம் நடந்தது. இதில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    கர்நாடக சட்டசபைக்கு நடைபெறும் தேர்தலில் பா.ஜனதாவை மக்கள் தனிப்பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற வைக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். கர்நாடகத்தில் பா.ஜனதாவுக்கு தனிப்பெரும்பான்மை பலத்துடன் வெற்றி கிடைத்தால், தென்னிந்தியாவில் முதல் மாநிலமாக கர்நாடகம் மாற்றப்படும். ராகுல்காந்தி கூட்டத்தை கூட்டிக் கொண்டு நாட்டை பிளவுப்படுத்தும் வேலையில் ஈடுபட்டு வருகிறார். பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்பான அரசு செயல்பட்டு வருவதால், நாட்டை இணைக்கும் வேலைகள் நடைபெற்று வருகிறது. ஜனதாதளம் (எஸ்) கட்சிக்கு நீங்கள் ஓட்டுப் போட்டால், அது காங்கிரஸ் கட்சிக்கு சென்று விடும்.

    காங்கிரசுக்கு வாக்களித்தால், கர்நாடகத்தை ஏ.டி.எம்.மாக சித்தராமையா மாற்றி விடுவார். குடும்ப அரசியலில் ஈடுபடும் காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) கட்சியினர், ஊழலிலும் மூழ்கி விட்டார்கள். குடும்ப அரசியலில் ஈடுபடும் கட்சிகளால் நாட்டின் வளர்ச்சி, மக்கள் பணிகளில் ஈடுபடுவது சாத்தியமில்லை. மத்தியில் 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த காங்கிரசால், பாகிஸ்தானுக்கு அறிவுரை சொல்ல கூட முடியாமல் போனது.

    பா.ஜனதா ஆட்சியில் தான் துல்லிய தாக்குதல் நடத்தி பாகிஸ்தானுக்கு தக்க பாடம் புகட்டப்பட்டது. பிரதமர் மோடி மற்றும் எடியூரப்பா மீது நீங்கள் நம்பிக்கை வையுங்கள். ஊழல் மற்றும் முறைகேடுகள் இல்லாத தென்னிந்தியாவின் முதல் மாநிலமாக கர்நாடகம் மாற்றப்படும். பா.ஜனதாவுக்கு மாநில மக்கள் அபாரமான ஆதரவு அளித்து வருவது, இங்கு கூடி இருக்கும் மக்கள் மூலமாக அறிந்து கொள்ள முடிகிறது. கர்நாடகத்தில் காங்கிரசில் முதல்-மந்திரி பதவிக்காக சித்தராமையா மற்றும் டி.கே.சிவக்குமார் இடையே போட்டி ஏற்பட்டுள்ளது. அவர்களால் கர்நாடகத்தில் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள சாத்தியமில்லை.

    இவ்வாறு அமித்ஷா கூறினார்.

    • அமித்ஷாவின் கருணை இருந்ததால் ஷிண்டேக்கு சின்னம் கிடைத்தது.
    • சிவசேனா இப்பொழுதும், எப்போழுதும் தாக்கரேக்கு சொந்தமானது தான்.

    மும்பை :

    தேர்தல் ஆணையம் ஏக்நாத் ஷிண்டே தரப்பு தான் உண்மையான சிவசேனா என அறிவித்தது. இதனால் கட்சியின் பெயர், சின்னத்தை முன்னாள் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே கட்சி பறிகொடுத்துள்ளது.

    இதையடுத்து தேர்தல் ஆணையம் பிரதமர் மோடியின் அடிமையாக மாறி உள்ளது என உத்தவ் தாக்கரே கடுமையாக விமர்சித்தார். அவர் தேர்தல் ஆணையத்தின் முடிவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்து உள்ளார்.

    கடந்த சில நாட்களுக்கு முன் மகாராஷ்டிரா வந்து இருந்த மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, உத்தவ் தாக்கரேயை கடுமையாக விமர்சித்து இருந்தார்.

    இந்தநிலையில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தான் மகாராஷ்டிராவின் முதல் எதிரி என உத்தவ் தாக்கரேயின் கட்சி நாளேடான 'சாம்னா' பத்திரிகையில் கடுமையாக தாக்கி எழுதப்பட்டு உள்ளது.

    இதுதொடர்பாக அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    சிவசேனாவின் பெயர், சின்னத்தை வாங்கிய பிறகு, தாமரையின் கால்கள் உடையும் வரை பா.ஜனதா ஆட்டம் போட்டது. ஏக்நாத் ஷிண்டே அணியை விட பா.ஜனதா தான் மகிழ்ச்சி அடைந்தது. டெல்லியின் கால் அடியில் விழுந்து கிடக்கும் மனநிலையில், தாக்கரேயால் உருவாக்கப்பட்டு, வளர்க்கப்பட்ட சிவசேனாவை தேர்தல் ஆணையம் ஒப்படைத்து உள்ளது.

    சத்ரபதி சிவாஜி ஜெயந்தி அன்று ஷிண்டேக்கு சிவசேனா சின்னம் ஒதுக்கப்பட்டதற்கு அமித்ஷா மகிழ்ச்சி தெரிவித்தார். அமித்ஷாவின் கருணை இருந்ததால் ஷிண்டேக்கு சின்னம் கிடைத்தது. அதை தற்போது அவர் மறைக்கிறாரா?. இந்த மனிதர் (அமித்ஷா) மகாராஷ்டிரா, மகாராஷ்டிரா மக்களுக்கு முதல் எதிரி. தங்கள் சொந்த ஆசைகளை அமித்ஷாவுக்கு பின்னால் நின்று மறைப்பவர்களும் மகாராஷ்டிராவின் எதிரிகள் தான். சிவசேனா இப்பொழுதும், எப்போழுதும் தாக்கரேக்கு சொந்தமானது தான். மகாராஷ்டிராவில் ஆட்சியை அமைக்கவும். வில், அம்பு சின்னத்தை வாங்கவும் ரூ.2 ஆயிரம் கோடி பேரம் நடந்து உள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நாங்கள் அதிகார பேராசை கொண்டவர்கள் அல்ல.
    • நாங்கள் எங்கள் கொள்கைகளை எதற்காகவும் தியாகம் செய்வது இல்லை.

    மும்பை :

    மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா மராட்டியத்தில் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட அவர், 2-வது நாளாக நேற்று கோலாப்பூரில் நடந்த பா.ஜனதா கட்சி கூட்டத்தில் தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

    2019-ம் ஆண்டு பா.ஜனதா மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 48 நாடாளுமன்ற தொகுதிகளில் 42 இடங்களில் வெற்றி பெற்றது. இந்தமுறை பா.ஜனதா 48 இடங்களிலும் வெற்றி பெறவேண்டும். முன்னாள் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவின் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா சரத்பவாரின் காலடியில் சரணடைந்துவிட்டது.

    உத்தவ் தாக்கரே கடந்த சட்டமன்ற தேர்தலில் பா.ஜனதாவுடன் இணைந்து பிரதமர் நரேந்திர மோடியின் மிகப்பெரிய கட்-அவுட்டுடன் தேர்தலை சந்தித்தார்.

    ஆனால் முடிவுகள் வெளியான பிறகு அவர், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரின் காலடியில் சரணடைந்துவிட்டார்.

    நாங்கள் அதிகார பேராசை கொண்டவர்கள் அல்ல. நாங்கள் எங்கள் கொள்கைகளை எதற்காகவும் தியாகம் செய்வது இல்லை.

    கடந்த மராட்டிய சட்டசபை தேர்தலில் அப்போதைய முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசின் தலைமையில் தான் எங்கள் கூட்டணி போட்டியிட்டது. இதை நானும், பிரதமர் நரேந்திர மோடியும் பொதுக்கூட்டங்களின்போது வெளிப்படையாக தெரிவித்தோம். இருந்தபோதிலும் முன்னாள் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே எதிர்க்கட்சிகளுடன் கைகோர்த்தார்.

    முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டேவின் அணியை உண்மையான சிவசேனா என்று அங்கீகரித்து வில் அம்பு சின்னத்தை வழங்கிய தேர்தல் ஆணையத்தின் முடிவை பாராட்டுகிறேன். உத்தவ் தாக்கரே அணியினர் தற்போது பாடம் கற்றிருப்பார்கள்.

    வஞ்சகத்தால் நீங்கள் சில நாட்களுக்கு அதிகாரத்தை கைப்பற்றலாம். ஆனால் போர்க்களத்திற்கு வரும்போது வெற்றி பெறுவதற்கு உங்களுக்கு தைரியம் தேவை.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • பிரதமர் மோடி ஆட்சியில் பயங்கரவாதம், கிளர்ச்சி சம்பவங்கள் 80 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளது.
    • உலகளவில் இந்தியாவை முதலிடம் கொண்டு செல்வதே பிரதமர் மோடியின் நோக்கம் என்றார் உள்துறை மந்திரி.

    மும்பை:

    மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் நடந்த சுதந்திரப் போராட்ட வீரர் ஜவஹர்லால் டார்டாவின் நூற்றாண்டு பிறந்த தின விழாவில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் அமித்ஷா பேசியதாவது:

    பிரதமர் மோடி ஆட்சிக்கு முன்பு வரை காஷ்மீர், வடகிழக்கு மற்றும் இடதுசாரி தீவிரவாதத்தால் உள்நாட்டு பாதுகாப்பு சவால்களை சந்தித்து வந்தது. ஆனால் பிரதமர் மோடி ஆட்சியில் இன்று காஷ்மீர் பயங்கரவாதம், வடகிழக்கு மாநிலங்களில் கிளர்ச்சி, இடதுசாரி தீவிரவாதம் போன்றவை 80 சதவீதம் அளவுக்கு குறைந்திருப்பதை என்னால் உறுதியாக சொல்ல முடியும்.

    காஷ்மீர் பள்ளத்தாக்கு ஓராண்டில் மட்டும் 1.8 கோடி சுற்றுலா பயணிகளைப் பார்த்திருக்கிறது. இது மிகப்பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது. மாநிலத்தில் கடந்த 70 ஆண்டுகளில் ரூ.12 ஆயிரம் கோடி அளவுக்கே முதலீடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆனால் மோடி ஆட்சியில் வெறும் 3 ஆண்டுகளில் மட்டுமே ரூ.12 ஆயிரம் கோடி முதலீடு பெறப்பட்டுள்ளது.

    இதைப்போல வடகிழக்கு மாநிலங்களில் கிளர்ச்சி சம்பவங்கள் கணிசமாகக் குறைந்திருக்கிறது. வடகிழக்கு மாநிலங்களில் 60 சதவீத பகுதிகளில் சர்ச்சைக்குரிய ஆயுதப்படைகள் சிறப்பு அதிகார சட்டம் திரும்ப பெறப்பட்டுள்ளது.

    உலக அளவில் இந்தியாவை முதலிடத்தில் கொண்டு செல்வதே பிரதமர் மோடியின் நோக்கம் ஆகும். ராணுவ தளவாட உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு பெற்று வருகிறது. பிரதமர் மோடி தலைமையின் கீழ் உற்பத்தி மையமாக மாறி வருகிறது. மக்களுக்கு பலனளிக்கக்கூடிய முடிவுகளை அரசு எடுத்து வருகிறது. அடுத்த 2 அல்லது 3 ஆண்டுகளில் ஹைட்ரஜன் உற்பத்தியில் உலகின் முன்னணி நாடாக இந்தியா மாறும். அதேபோல், செயற்கைக்கோள் துறையில் இந்தியா இன்னும் 4 அல்லது 5 ஆண்டுகளில் முன்னேறும்.

    இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்த பிரதமர் மோடி மேற்கொண்ட முயற்சிகள் சிறப்பானவை. பொது முடக்கத்துக்கு அவர் விடுத்த அழைப்புக்கு மிகப்பெரிய ஆதரவு கிடைத்தது என தெரிவித்தார்.

    • பயங்கரவாத சம்பவங்கள் குறைந்துள்ளன.
    • குற்ற புலனாய்வில் தடயவியல் விசாரணை முக்கிய பங்கு வகிக்கிறது.

    புதுடெல்லி :

    டெல்லி காவல்துறை தொடங்கப்பட்டு 76 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, நேற்று டெல்லி போலீசின் 76-வது நிறுவன தின நிகழ்ச்சி நடந்தது. அதில், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கலந்து கொண்டார்.

    அங்கு அவர் பேசியதாவது:-

    கடந்த 2014-ம் ஆண்டில் இருந்து உள்நாட்டு பாதுகாப்பு கணிசமாக அதிகரித்துள்ளது. காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த பிறகு, அங்கு பயங்கரவாதம் கட்டுப்பாட்டில் உள்ளது.

    பயங்கரவாத சம்பவங்கள் குறைந்துள்ளன. கல் எறியும் சம்பவங்கள் குறைந்துள்ளன. அங்கு சுற்றுலா பயணிகள் செல்ல தொடங்கி விட்டனர்.

    உள்நாட்டு பாதுகாப்பை மேலும் வலுப்படுத்த இந்திய தண்டனை சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம், சாட்சியங்கள் சட்டம் ஆகியவற்றில் திருத்தம் கொண்டுவரப்படும். தற்காலத்துக்கு ஏற்றவகையில் அந்த சட்டங்கள் திருத்தப்படும்.

    குற்ற புலனாய்வில் தடயவியல் விசாரணை முக்கிய பங்கு வகிக்கிறது. நாடு முழுவதும் தடயவியல் கட்டமைப்பு அதிகரிக்கப்படும். அதற்காக 6 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை விதிக்கத்தக்க குற்ற சம்பவங்களின்போது தடயவியல் குழுக்கள் நேரில் செல்வதை கட்டாயமாக்க போகிறோம்.

    டெல்லியில் பாஸ்போர்ட் சரிபார்ப்பு பணி தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இதுவரை 15 நாட்கள் ஆகும் இப்பணி, இனிமேல் 5 நாட்களில் முடிந்து விடும்.

    டெல்லியில் ஜி20 மாநாட்டு நிகழ்ச்சிகளுக்கு சர்வதேச பிரதிநிதிகள் வருவதால், போலீசார் உஷாராக இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • கர்நாடகாவை பா.ஜ.க.வால் மட்டும்தான் பாதுகாக்க முடியும் என்று அமித்ஷா கூறி இருக்கிறார்.
    • மதக்கலவரங்கள் நிகழும் மாநிலமாக கர்நாடகா உள்ளது.

    திருவனந்தபுரம்:

    கர்நாடகாவின் புத்தூர் நகருக்கு சில தினங்களுக்கு முன்பு சென்ற மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசும்போது, "கர்நாடகாவுக்கு அருகில் கேரளா இருக்கிறது. நான் அதிகம் சொல்ல விரும்பவில்லை. கர்நாடகா பாதுகாப்பாக இருக்க வேண்டுமானால் அது பா.ஜ.க.வால் மட்டும்தான் முடியும். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசால் மட்டும்தான் முடியும். காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பை சேர்ந்த 1,700 கைதிகள் விடுவிக்கப்பட்டனர். பிரதமர் நரேந்திர மோடி, அந்த அமைப்பையே நிரந்தரமாக தடை செய்து விட்டார். தேச விரோத சக்திகளை வளர்க்கக்கூடிய கட்சி காங்கிரஸ். அவர்களால் ஒரு போதும் கர்நாடகாவிற்கு பாதுகாப்பு கிடைக்காது" என்று கூறினார்.

    அவரது இந்த பேச்சுக்கு கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் பதில் அளித்துள்ளார். இதுகுறித்து நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசியதாவது:-

    கர்நாடகாவுக்கு அருகிலேயே கேரளா இருக்கிறது என்றும், கர்நாடகாவை பா.ஜ.க.வால் மட்டும்தான் பாதுகாக்க முடியும் என்றும் அமித்ஷா கூறி இருக்கிறார். இதன் மூலம் அவர் என்ன சொல்ல வருகிறார். அண்டை மாநிலமாக கேரளா இருப்பதால் என்ன தவறு? கேரளாவில் அனைத்து மத மக்களும், மத நம்பிக்கை இல்லாதவர்களும் அமைதியாக வாழ முடியும்.

    ஆனால், கர்நாடகா என்ன நிலைமையில் இருக்கிறது? மதக்கலவரங்கள் நிகழும் மாநிலமாக அது உள்ளது. சிக்மகளூருவில் 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த தேவாலயம் கடந்த 2021-ம் ஆண்டு சங் பரிவார் அமைப்பால் தாக்கப்பட்டது. கர்நாடகாவில் உள்ள சிறுபான்மை மக்கள் சங் பரிவார் அமைப்பினரால் தாக்கப்படுகின்றனர். ஒரு குறிப்பிட்ட மதத்தை பின்பற்றுவதால், கேரளாவில் யாருக்கும் எந்த தீங்கும் நேருவதில்லை. இங்கு மக்கள் ஒற்றுமையாக வாழ்கிறார்கள். கேரளாவைப் போல இருக்க வேண்டும் என்று கர்நாடகாவுக்கு உள்துறை மந்திரி அமித்ஷா கூறி இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கடந்த 70 ஆண்டுகள் உள்நாட்டு பாதுகாப்பு விஷயங்களில் பல்வேறு சவால்களையும் ஏற்ற, தாழ்வுகளையும் இந்தியா சந்தித்து உள்ளது.
    • ஜனநாயகம் வலுப்பெற அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறோம்.

    ஐதராபாத்தில் இன்று ஐ.பி.எஸ் அதிகாரிகள் பயிற்சி முகாம் நடந்தது. இதனை தொடங்கி வைத்து மத்திய மந்திரி அமித்ஷா பேசியதாவது:-

    மத்தியில் பாரதீய ஜனதா ஆட்சி பதவி ஏற்ற 8 ஆண்டு காலத்தில் ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் கணிசமான அளவு பயங்கரவாத செயல்கள் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது.

    வடகிழக்கு மாநிலங்களில் அரசுக்கு எதிராக இயங்கிய நக்சலைட்டு மற்றும் மாவோயிஸ்டு இயக்கங்களின் செயல்பாடுகளும் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு உள்ளது. மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் ஏஜென்சிகள் மற்றும் நாடு முழுவதும் போலீஸ் படையினர் வெற்றிகரமாக நடத்திய சோதனையில் ஒரே நாளில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா போன்ற அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டன.

    சமீபத்தில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டது. இந்த நடவடிக்கையால் உலகமே இந்தியாவை வியந்து பார்க்கிறது.

    பயங்கரவாத செயல்கள் முற்றிலும் தடுக்கப்பட்டுவிட்டது. கடந்த 70 ஆண்டுகள் உள்நாட்டு பாதுகாப்பு விஷயங்களில் பல்வேறு சவால்களையும் ஏற்ற, தாழ்வுகளையும் இந்தியா சந்தித்து உள்ளது.

    இதற்காக 36 ஆயிரம் போலீசார் மற்றும் அதிகாரிகள் தங்கள் உயிர்களை தியாகம் செய்து உள்ளனர். ஜனநாயகம் வலுப்பெற அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறோம்.

    இவ்வாறு அமித்ஷா பேசினார்.

    • நாங்கள் ஜிஎஸ்டி கொண்டுவந்த போது அதற்கு எதிர்ப்பு இருந்தது.
    • மோடி அரசு பிரச்சினைகளை குறுகிய கண்ணோட்டத்துடன் பார்ப்பதில்லை.

    புதுடெல்லி:

    மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா, மத்திய அரசின் முந்தைய அரசுகளை கடுமையாக சாடினார், ஒவ்வொரு அடியும் வாக்கு வங்கியை மனதில் கொண்டு மக்களின் மகிழ்ச்சிக்காக கொள்கைகளை உருவாக்காமல், அவர்களின் வளர்ச்சிக்காக கொள்கைகளை உருவாக்குவதே மோடி அரசின் நோக்கம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், "நரேந்திர மோடி நாட்டின் பிரதமராக வந்த பின்னர் இங்கு பெரிய மாற்றங்கள் நடந்துள்ளன. முந்தைய அரசாங்கத்தின் கொள்கைகள் வாக்கு வங்கியை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டன. மோடி தலைமையிலான அரசு மக்களை மகிழ்விக்கும் திட்டங்களை உருவாக்குதில்லை மாறாக அவர்களின் வளர்ச்சிக்கான திட்டங்களை உருவாக்குகிறது.

    நாங்கள் ஜிஎஸ்டி கொண்டுவந்த போது அதற்கு எதிர்ப்பு இருந்தது. நாங்கள் டிபிடி (நேரடி பலன் பரிமாற்றம்) கொண்டு வந்த போது எதிர்ப்பு அதிகமாக இருந்தது. கண்டிப்பாக இடைத்தரகர்கள் இதனை விரும்ப மாட்டார்கள். இது போல தான் அரசு எடுக்கும் முடிவுகள் மக்களுக்கு கடினமானதாக இருந்தாலும் அவர்களின் நலன் சார்ந்தே அவைகள் இருக்கும்.

    மோடி அரசு, பிரச்சினைகளை குறுகிய கண்ணோட்டத்துடன் பார்ப்பதில்லை. முன்பு அடிப்படை பிரச்சினைகளுக்கு முழுமையான தீர்வுகள் உருவாக்கப்படவில்லை. மோடி அரசானது கொள்கைகளின் அளவில் மாற்றம் கொண்டு வந்துள்ளது" என்று அமித்ஷா கூறினார்.

    • தமிழக அரசியலில் கவர்னர் உரை விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் அமித்ஷாவை அண்ணாமலை சந்தித்து ஆலோசனை நடத்தி இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
    • சந்திப்பின்போது தமிழக கவர்னராக ஆர்.என்.ரவியே நீடிப்பார் என அமித்ஷா திட்டவட்டமாக தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    புதுடெல்லி:

    தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை நேற்று டெல்லி சென்றார். அங்கு அவர் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்து பேசினார். அவர்கள் 20 நிமிடங்கள் பேச்சு நடத்தினார்கள்.

    இந்த சந்திப்பின்போது தமிழக அரசியல் நிலவரம் குறித்து இருவரும் விவாதித்தனர். இதில் தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை, போதை பொருள் கடத்தல் உள்ளிட்டவை தொடர்பாக அமித்ஷாவிடம் அண்ணாமலை புகார் தெரிவித்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது.

    மேலும் சட்டசபையில் கவர்னர் உரையின்போது நடந்த நிகழ்ச்சிகள் குறித்தும் ஆலோசித்ததாக தெரிகிறது. அதேபோல் தமிழகத்தில், தான் மேற்கொள்ளவுள்ள பாத யாத்திரை குறித்தும் அமித் ஷாவிடம் அண்ணாமலை விளக்கினார்.

    இந்த சந்திப்பின்போது தமிழக கவர்னராக ஆர்.என்.ரவியே நீடிப்பார் என அமித்ஷா திட்டவட்டமாக தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    தமிழக அரசியலில் கவர்னர் உரை விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் அமித்ஷாவை அண்ணாமலை சந்தித்து ஆலோசனை நடத்தி இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    ×