search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமித்ஷா"

    • நாட்டின் வளர்ச்சிக்காக காங்கிரஸ் கட்சியால் பாடுபட முடியாது.
    • வாக்கு வங்கி அரசியலுக்காக மட்டுமே காங்கிரசால் செயல்பட முடியும்.

    ஜோத்பூர்:

    கன்னியாகுமரியில் தொடங்கி காஷ்மீர் வரை ராகுல்காந்தி மேற்கொண்டுள்ள இந்திய ஒற்றுமை பயணம் குறித்து பாஜக கடும் விமர்சனங்களை வைத்துள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி அதற்கு பதிலடி கொடுத்து வருகிறது.

    இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் பாஜக தொண்டர்கள் மத்தியில் உரையாற்றிய மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கூறியுள்ளதாவது:

    இந்தியா குறித்து பாராளுமன்றத்தில் ராகுல்காந்தி ஆற்றிய உரையை காங்கிரஸ்காரர்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். இந்தியா ஒரு தேசமே இல்லை என்று ராகுல் கூறியிருந்தார். இதை எந்த புத்தகத்தில் படித்தீர்கள்? லட்சக்கணக்கான மக்கள் வாழும் தேசம் இது. இந்த தேசத்திற்காக பலர் தங்கள் உயிரை தியாகம் செய்துள்ளனர்.

    தற்போது பாரதத்தை இணைக்க வெளிநாட்டு உடை அணிந்து ராகுல் காந்தி சென்றுள்ளார், ஆனால் அவர் இந்திய வரலாற்றைப் படிக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். நாட்டின் வளர்ச்சிக்காக காங்கிரஸால் பாடுபட முடியாது, (சிலரை) திருப்திப்படுத்தவும், வாக்கு வங்கி அரசியலுக்காகவும் மட்டுமே (காங்கிரசால்) செயல்பட முடியும்.

    • அமிர்த பெருவிழாவை முன்னிட்டு பிரதமர் மூன்று இலக்குகளை நிர்ணயித்திருந்தார்.
    • இந்தியா அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்குவதற்கான பாதையை வகுக்க வேண்டும்.

    நாட்டின் 75வது சுதந்திர தின கொண்டாட்ட அமிர்தப் பெருவிழாவின் ஒரு பகுதியாக, 10 பெண்கள் உட்பட 120 பேர், 75 மோட்டார் சைக்கிள்களில் 75 நாட்கள் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்கின்றனர். 18,000 கிமீ தூரம் பயணித்து, தேசிய தலைநகருக்குத் அவர்கள் திரும்புகிறார்கள். இந்நிலையில் மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா, டெல்லியில் நடைபெற்ற ஃபிட் இந்தியா ஃப்ரீடம் ரைடர் பைக் பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். 


    நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

    பிரதமர் மோடியின் தலைமையில், நாடு விடுதலையின் அமிர்தப்பெருவிழாவை கொண்டாடுகிறது. இதை சுதந்திரத்துடன் தொடர்புபடுத்தியதோடு,பல பரிமாணங்களாக மாற்றியது, பிரதமரின் புதிய சிந்தனையை காட்டுகிறது.

    அமிர்தப்பெருவிழாவைவையொட்டி பிரதமர் மோடி மூன்று இலக்குகளை நிர்ணயித்திருந்தார். முதலாவதாக, புதிய தலைமுறை, இளைஞர்கள், இளம் பருவத்தினர் மற்றும் குழந்தைகளுக்கு நமது சுதந்திரப் போராட்டம் மற்றும் உயிர்நீத்த சுதந்திரப் போராட்ட தியாகிகளை அறிமுகப்படுத்துவதும் ஆகும்.

    அடுத்ததாக 75 ஆண்டுகளில் நமது நாடு செய்த சாதனைகளைப் பற்றிய பெருமித உணர்வை ஏற்படுத்துவதே இதன் இரண்டாவது குறிக்கோள் ஆகும். மூன்றாவதாக, 2047ல் நாம் சுதந்திரத்தின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் போது இந்தியாவுக்கான இலக்குகளைத் தீர்மானிக்க வேண்டும்.

    இந்தியா அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்குவதற்கான பாதையை நாம் வகுத்துக் கொள்ள வேண்டும் என்று மோடி கூறியுள்ளார். அமிர்த பெருவிழாவை மக்களிடம் கொண்டு செல்வதில் பிரதமர் வெற்றி பெற்றுள்ளார். இவ்வாறு அமித் ஷா தெரிவித்தார்.

    • 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.
    • 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.

    புதுடெல்லி :

    கடந்த 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா தொடர்ந்து 2-வது தடவையாக மத்தியில் ஆட்சியை கைப்பற்றியது. அடுத்த பாராளுமன்ற தேர்தல் 2024-ம் ஆண்டு நடக்கிறது. அதிலும் வெற்றியை தக்க வைத்துக்கொள்ள திட்டமிட்டுள்ளது.

    அந்த வகையில் நாடு முழுவதும் தொகுதி நிலவரத்தை அலசியபோது 144 தொகுதிகளில் பா.ஜனதா பலவீனமாகவும், வெற்றி பெறுவது கடினமாகவும் இருப்பது கண்டறியப்பட்டது.

    இவற்றில் பெரும்பாலானவை கடந்த தேர்தலில் பா.ஜனதா தோல்வி அடைந்த தொகுதிகளாக இருந்தாலும், வெற்றி பெற்ற தொகுதிகளும் உள்ளன. மேற்கு வங்காளம், மராட்டியம், தெலுங்கானா, பஞ்சாப், உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இவை அமைந்துள்ளன.

    அங்கு வெற்றி வாய்ப்பை அதிகரிக்கும் நோக்கத்தில் 3 அல்லது 4 தொகுதிகளுக்கு ஒரு மத்திய மந்திரி வீதம் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டனர். அந்த தொகுதிகளுக்கு நேரில் சென்று வாக்காளர்களின் மனநிலையை அறியுமாறு அவர்களுக்கு உத்தரவிடப்பட்டது. அவர்களும் தொகுதிகளுக்கு சென்று வந்து விட்டனர்.

    பலம், பலவீனம், வாய்ப்பு, அச்சுறுத்தல் ஆகிய அம்சங்களை ஆய்வு செய்தனர். வெற்றி பெற எடுக்க வேண்டிய நடவடிக்கைகளையும் முடிவு செய்தனர்.

    இந்த நிலையில் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்ட பூபேந்தர் யாதவ், கிரிராஜ் சிங், ஸ்மிரிதி இரானி, பர்ஷோத்தம் ருபாலா, கஜேந்திரசிங் ஷெகாவத் உள்பட 25 மத்திய மந்திரிகளுடன் பா.ஜனதா தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோர் நேற்று ஆலோசனை நடத்தினர். கட்சி தலைவர்கள் சிலரும் பங்கேற்றனர்.

    அந்தந்த தொகுதிகளில் தாங்கள் செய்த பணிகள் குறித்து மத்திய மந்திரிகள் எடுத்துரைத்தனர். அவை பற்றி அமித்ஷாவும், நட்டாவும் விவாதித்தனர். வெற்றிவாய்ப்பை அதிகரிக்க யோசனைகளை தெரிவித்தனர்.

    சம்பந்தப்பட்ட 144 தொகுதிகளில் வாக்குச்சாவடி முகவர்களை அதிகரிக்கவும், மத்திய அரசு திட்டங்களால் பலனடைந்த சமூகத்தினரை குறிவைத்து இழுக்கவும் பா.ஜனதா திட்டமிட்டுள்ளது.

    தொகுதிவாரியாக வாக்காளர்களின் சாதி, மதம், அவர்களின் விருப்பம், அதற்கான காரணங்கள் ஆகிய தகவல்கள் அடிப்படையில் விரிவான அறிக்கையை பா.ஜனதா தயாரித்துள்ளது.

    • மும்பையில் உள்ள லால்பாக்ராஜா மண்டலில் அமித்ஷா சாமி தரிசனம் செய்தார்.
    • தற்போது உண்மையான சிவசேனா நம்முடன் உள்ளது.

    மும்பை

    2014 சட்டசபை தேர்தலில் சிவசேனா - பா.ஜனதா கூட்டணி உடைந்தது. 2 கட்சிகளும் தேர்தலை தனித்தனியாக சந்தித்தன. தேர்தலில் பா.ஜனதா 120 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இதையடுத்து பா.ஜனதா-சிவசேனா கட்சிகள் தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி வைத்து ஆட்சி அமைத்தன.

    இருப்பினும் 2017-ம் ஆண்டு நடந்த மும்பை மாநகராட்சி தேர்தலை பா.ஜனதா, சிவசேனா கட்சிகள் தனித்தனியாக சந்தித்தன. இந்த தேர்தலிலும் பா.ஜனதா 82 இடங்களில் வெற்றி பெற்று மற்ற கட்சிகளுக்கு அதிர்ச்சி அளித்தது. எனினும் 2 இடங்களில் (84 இடங்கள்) கூடுதலாக வெற்றி பெற்ற சிவசேனாவுக்கு மாநகராட்சியை விட்டு கொடுத்தது.

    இந்தநிலையில் 2019 சட்டசபை தேர்தலில் பா.ஜனதா-சிவசேனா கட்சிகள் கூட்டணி வைத்து போட்டியிட்டு வெற்றி பெற்றது. முதல்-மந்திரி பதவி போட்டியில் கூட்டணியை முறித்து கொண்ட சிவசேனா, கொள்கை முரண்பாடு கொண்ட தேசியவாத காங்கிரஸ், காங்கிரசுடன் கூட்டணி வைத்து ஆட்சி அமைத்தது.

    எதிர்பாராத திருப்பமாக கடந்த ஜூன் மாதம் ஏக்நாத் ஷிண்டே, 39 ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் சிவசேனா தலைமைக்கு எதிராக திரும்பினார். மேலும் அவர் பா.ஜனதா ஆதரவுடன் முதல்-மந்திரி ஆனார்.

    இந்தநிலையில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா விநாயகர் சதுர்த்தியையொட்டி நேற்று மும்பை வந்தார். அவர் மும்பையில் உள்ள பிரசித்தி பெற்ற லால்பாக்ராஜா மண்டலில் சாமி தரிசனம் செய்தார்.

    இதேபோல மலபார்ஹில் பகுதியில் உள்ள முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே அரசு பங்களா, துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் அரசு பங்களாவில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகளையும் வழிபட்டார். பாந்திரா பகுதியில் பிரதிஷ்டை செய்யப்பட்ட கணபதியையும் தரிசித்தார்.

    பின்னர் அவர் மும்பையை சேர்ந்த பா.ஜனதா கட்சியின் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மற்றும் முன்னாள் கவுன்சிலர்கள், முக்கிய நிர்வாகிகளை சந்தித்தார். இதில் துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், மாநில தலைவர் சந்திரசேகர் பவன்குலே, மும்பை தலைவர் ஆஷிஸ் செலார், தேசிய நிர்வாகி வினோத் தாவ்டே உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    மும்பை மாநகராட்சியில் சுமார் 30 ஆண்டுகளாக அதிகாரம் செலுத்தி வரும் சிவசேனாவிடம் இருந்து தட்டிப்பறிக்க வியூகம் வகுப்பது தொடர்பாக இந்த ஆலோசனை நடந்தது.

    கட்சி நிர்வாகிகள் மத்தியில் அமித்ஷா பேசியதாவது:-

    நீங்கள் ஒருவரை வேறு இடத்தில் அடித்தால் அவருக்கு வலிக்காது. ஆனால் அவரை அவரது சொந்த இடத்தில் அடிக்கும் போது, அந்த வலி ஆழமாக இருக்கும். எனவே சிவசேனாவின் சொந்த மைதானத்தில் (மும்பை மாநகராட்சி), அந்த கட்சிக்கு ஆழமான காயத்தை ஏற்படுத்த வேண்டும்.

    பா.ஜனதா மும்பை மாநகராட்சியை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வரவில்லை எனில், நாம் மராட்டியத்தை வெல்ல முடியாது. தற்போது உண்மையான சிவசேனா நம்முடன் உள்ளது. எனவே உத்தவ் தாக்கரேக்கு அவருக்கான இடத்தை காட்டும் நேரம் வந்துவிட்டது.

    நீங்கள் (உத்தவ் தாக்கரே) பிரதமர் மோடி மற்றும் அப்போதைய முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசின் பெயரை சொல்லி ஓட்டு கேட்டீர்கள். ஆனால் உங்களுக்கு பேராசை வந்தவுடன் சரத்பவாருடன் உட்கார்ந்து கொண்டீர்கள். நீங்கள் வாழ்நாள் முழுவதும் தேசியவாத காங்கிரசை எதிர்த்து வந்தீர்கள். ஆனால் முதல்-மந்திரி பதவிக்காக நீங்கள் தேசியவாத காங்கிரஸ், காங்கிரசுடன் சமரசம் செய்து கொண்டீர்கள்.

    ஒருவர் அநீதியை பொறுத்து கொள்ளலாம். ஆனால் துரோகத்தை பொறுத்துகொள்ள கூடாது. துரோகம், கொள்கையை விட்டு கொடுத்தற்காக அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். அவர்களுக்கு, அவர்களுக்குரிய இடத்தை காட்டும் நேரம் வந்துவிட்டது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    மும்பை மாநகராட்சி தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அமித்ஷா, உத்தவ் தாக்கரேயை கடுமையாக விமர்சித்தது மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • மத்திய அரசு மாதிரி சிறைச் சட்டத்தை கொண்டு வர திட்டமிட்டுள்ளது.
    • சிறைச்சாலைகளை சமூகம் பார்க்கும் விதத்திலும் மாற்றம் தேவை.

    அகமதாபாத்:

    குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள கன்காரியாவில் 6வது இந்திய சிறைப்பணிகள் கூட்டத்தை மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா தொடங்கி வைத்து உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    நமது எல்லைகளின் பாதுகாப்பு மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு தொடர்பாக நாடு முழுவதும் ஒரு பொதுவான திட்டம் உருவாக்கப்பட்டு வருகிறது. உள்நாட்டு பாதுகாப்பில் சிறை நிர்வாகமும் ஒரு முக்கிய அங்கம், அதை நாம் புறக்கணிக்க முடியாது. 


    சிறைச்சாலைகளை சமூகம் பார்க்கும் விதத்திலும் மாற்றம் தேவை. தண்டனை இல்லை என்றால் பயம் இருக்காது, பயம் இல்லை என்றால் ஒழுக்கம் இருக்காது, ஒழுக்கம் இல்லையென்றால் ஆரோக்கியமான சமுதாயத்தை கற்பனை செய்து பார்க்க முடியாது.

    கைதிகள் விடுதலைக்கு பிறகு சமூகத்திற்கு அவர்களை சிறந்த மனிதர்களாக தர வேண்டியது சிறை நிர்வாகத்தின் பொறுப்பாகும். மத்திய அரசு மாதிரி சிறைச் சட்டத்தை கொண்டு வர திட்டமிட்டுள்ளது. இது பிரிட்டிஷ் காலத்தில் இருந்து தொடரும் சட்டத்தில் தேவையான மாற்றங்களைக் கொண்டுவரும்.

    மாநிலங்களுடன் விரிவாக விவாதிக்கப்பட்டு, அடுத்த 6 மாதங்களுக்குள், அனைத்து சிறைகளையும் தொழில்நுட்ப ரீதியாக அதிநவீனமாக மாற்றும் வகையில் மாதிரி சிறைச் சட்டம் கொண்டு வரப்படும். ஒவ்வொரு மாவட்ட சிறைகளையும் நீதிமன்றங்களுடன் இணைக்கும் வகையில் காணொலி வசதியை மாநிலங்கள் வழங்க வேண்டும்.

    தீவிரவாதிகள் மற்றும் போதைப்பொருள் குற்றங்களுக்காக தண்டனை பெற்ற கைதிகளை தனித்தனியாக வைக்க ஏற்பாடு செய்ய வேண்டிய அவசியம் உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். நிகழ்ச்சியில் குஜராத் முதல்வர் பூபேந்திர படேல், மத்திய உள்துறை செயலாளர் உள்பட பல உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • ஆமதாபாத்தில் 36-வது தேசிய விளையாட்டுப் போட்டிகளின் முன்னோட்ட நிகழ்ச்சி இன்று நடைபெற உள்ளது.
    • தேசிய விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறோம்.

    புதுடெல்லி:

    குஜராத்தின் ஆமதாபாதில் உள்ள இகேஏ அரீனா டிரான்ஸ் ஸ்டேடியாவில் 36வது தேசிய விளையாட்டுப் போட்டிகளின் முன்னோட்ட நிகழ்வு ஞாயிறு மாலை நடைபெற உள்ளது. விளையாட்டின் மூலம் ஒற்றுமையைக் கொண்டாடுவோம் என்ற மையப்பொருளில், ஏழு ஆண்டு இடைவெளிக்குப் பின் செப்டம்பர் 29 முதல் அக்டோபர் 12 வரை, 36-வது தேசிய விளையாட்டுப் போட்டி நடைபெறவுள்ளது. கடைசியாக இந்த விளையாட்டுப் போட்டிகள் 2015-ம் ஆண்டு கேரளாவில் நடைபெற்றன.

    மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, குஜராத் முதல் மந்திரி பூபேந்திர படேல் மற்றும் மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுக்கள் துறை மந்திரி அனுராக் தாக்கூர் ஆகியோருடன் இந்த மாபெரும் நிகழ்வில் கலந்துகொள்கிறார்.

    இந்த முன்னோட்ட நிகழ்வில், விளையாட்டுக்கள் கீதம் மற்றும் சின்னம் வெளியிடுதல், இணையதளம் மற்றும் செல்பேசி செயலி வெளியிடுதல் ஆகியவையும் இருக்கும். 9,000-க்கும் அதிகமான சிறப்பு விருந்தினர்கள் இந்த வண்ணமிகு விழாவில் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    "தேசிய விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறோம். இந்தியாவின் சிறந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் அதிகாரிகளுக்காக நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம், இதை எப்போதும் இல்லாத வகையில் சிறந்த விளையாட்டுகளாக மாற்ற எந்தவொரு முயற்சியையும் விட்டுவைக்கவில்லை" என்று பூபேந்திர படேல் கூறினார்.

    பாரம்பரிய ஒலிம்பிக் விளையாட்டுகள் உட்பட 36 போட்டிகளில் 28 மாநிலங்கள் மற்றும் எட்டு யூனியன் பிரதேசங்களிலிருந்து 7,000 தடகள வீரர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மல்லகம்பம், யோகாசனம் போன்ற உள்நாட்டு விளையாட்டுகளும் முதல்முறையாக தேசிய விளையாட்டுப் போட்டிகளில் இடம்பெறும்.

    • நதிநீர் பங்கீடு பிரச்சனைகளுக்கு மாநிலங்கள் கூட்டுத் தீர்வு காண வேண்டும்.
    • ஒவ்வொரு கிராமத்திலும் வங்கி வசதி ஏற்படுத்த வேண்டும்.

    கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் நேற்று நடைபெற்ற 30வது தென் மண்டல கவுன்சில் கூட்டத்திற்கு தலைமை வகித்த மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பேசியதாவது:

    பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கப்பட்ட 'இல்லந்தோறும் மூவண்ணக் கொடி' பிரச்சாரத்தில், நாட்டு மக்கள் ஜாதி, மதம் கடந்து , தங்கள் வீடுகளில் மூவண்ணக் கொடியை ஏற்றி ஒற்றுமை மற்றும் தேசபக்திக்கு சிறந்த முன்மாதிரியாகத் திகழ்கிறார்கள். விடுதலையின் அமிர்தப் பெருவிழாவைக் கொண்டாடிய அனைத்து மாநிலங்களுக்கும் நன்றி. நாட்டின் ஒளிமயமான எதிர்காலத்திற்காக, அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். 


    தென்னிந்தியா மீது பிரதமர் மோடிக்கு சிறப்பு அக்கரை உள்ளது, அதனால்தான் முக்கியத் துறைமுகங்களை மேம்படுத்த பல்வேறு திட்டங்களை அவர் தொடங்கினார். இவற்றில் ரூ. 76,000 கோடி மதிப்பிலான 108 திட்டங்கள் முடிக்கப்பட்டுள்ளன. 1,32,000 கோடி மதிப்பிலான 98 திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    தென் மாநிலங்களில் மீன்வள உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதித் திட்டத்திற்கு ரூ.4,206 கோடி அனுமதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் 56 திட்டங்களுக்கு மாநிலங்களில் துறைமுகங்கள் மற்றும் மீன்வளத்தின் அடிப்படைக் கட்டமைப்பு மேம்பாட்டிற்காக ரூ. 2,711 கோடி அனுமதிக்கப்பட்டுள்ளது.

    தென் மண்டல கவுன்சிலின் அனைத்து உறுப்பு மாநிலங்களும் நதிநீர் பங்கீடு தொடர்பான பிரச்சனைகளுக்கு கூட்டுத் தீர்வு காண வேண்டும். பரஸ்பர ஒப்பந்தத்தின் மூலம் மத்திய மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான மோதல்களை சுமுகமாகத் தீர்த்து வைப்பது மண்டல கவுன்சில் கூட்டத்தின் முக்கிய நோக்கம்.

    நாட்டின் அனைத்துத் துறை வளர்ச்சிக்காக, பிரதமர் மோடி டீம் இந்தியா என்ற கருத்தை முன் வைத்துள்ளார்.  அனைத்து மாநிலங்களும் இணைந்து டீம் இந்தியாவை உருவாக்குகின்றன. மத்திய உள்துறை அமைச்சகம் போதைப்பொருள் பிரச்சனையை மிகக் கண்டிப்புடன் ஒடுக்க முயற்சி வருகிறது.

    ஒவ்வொரு ஐந்து கிலோமீட்டருக்கும் ஒரு வங்கிக் கிளை வேண்டும் என்பதே மோடி அரசின் இலக்கு. இதற்காக தென் மாநிலங்கள் தங்கள் பகுதியில் உள்ள ஒவ்வொரு கிராமத்திலிருந்தும் வங்கி வசதிகளை ஏற்படுத்த வேண்டும். வங்கிகளின் கிளைகளை திறக்க வேண்டும். இது அரசு திட்டங்களின் பலன்கள் நேரடியாக பயனாளிகளுக்கு வழங்க உதவும். கூட்டுறவு நிறுவனங்களை வலுப்படுத்தவும் முயற்சி எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • தென் மாநில முதல்-மந்திரிகள் கூட்டம் திருவனந்தபுரத்தில் இன்று நடக்கிறது.
    • கூட்டத்தில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொள்கிறார்.

    புதுடெல்லி :

    தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, கர்நாடகம், ஆந்திரா, தெலுங்கானா ஆகிய 6 மாநிலங்கள் தென் மண்டல கவுன்சிலில் அங்கம் வகிக்கின்றன.

    இந்த தென் மண்டல கவுன்சிலில் இடம் பெற்றுள்ள தென் மாநிலங்களின் முதல்-மந்திரிகள் கூட்டம், கேரள மாநிலத்தின் தலைநகரான திருவனந்தபுரத்தில் இன்று நடக்கிறது.

    இந்த கூட்டத்துக்கு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தலைமை தாங்குகிறார்.

    கூட்டத்தில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமி கலந்துகொள்கிறார்கள். மேலும், பிற தென் மாநில முதல்-மந்திரிகளான பினராயி விஜயன் (கேரளா), பசவராஜ் பொம்மை (கர்நாடகம்), ஜெகன்மோகன் ரெட்டி (ஆந்திரா), சந்திரசேகரராவ் (தெலுங்கானா) ஆகியோரும், மூத்த மந்திரிகளும், தலைமைச்செயலாளர்களும், முதன்மைச் செயலாளர்களும், மத்திய அரசின் மூத்த அதிகாரிகளும் கலந்து கொள்வார்கள் என மத்திய உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.

    இந்த கூட்டத்தில் பொதுவான பிரச்சினைகளான நதிநீர் பகிர்வு, கடலோர பாதுகாப்பு, இணைப்பை ஏற்படுத்துதல், எரிசக்தி உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படும்.

    தென் மாநில முதல்-மந்திரிகள் கூட்டத்தில் எல்லை தொடர்பாக பிரச்சினைகள், பாதுகாப்பு, சாலை, போக்குவரத்து, தொழில், நீர், எரிசக்தி, காடு, சுற்றுச்சூழல், வீட்டு வசதி, கல்வி, உணவு பாதுகாப்பு, சுற்றுலா, போக்குவரத்து உள்ளிட்ட பல விஷயங்களும் விவாதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஏற்கனவே நிறுவப்பட்ட நடைமுறை மற்றும் வழக்கத்தின்படி, மண்டல கவுன்சில் கூட்டத்திற்கு முன்னதாக அதன் நிலைக்குழு கூட்டம் நடைபெறும். அதில் தென்மாநில முதல்-மந்திரிகள் கூட்டத்தில் முன் வைக்கப்படும் நிகழ்ச்சி நிரல் ஆராயப்பட்டு முன்னுரிமை அளிக்கப்படும்.

    • பாரதிய ஜனதா கட்சி விதிப்படி ஒரு நபர் இரண்டு முறைதான் தலைவர் பதவியில் அமர முடியும்.
    • உபேந்திர யாதவ் பெயரும் பாரதிய ஜனதா கட்சி தலைவர் பதவிக்கு அடிபடுகிறது.

    புதுடெல்லி:

    பாரதிய ஜனதா கட்சிக்கு தற்போது ஜே.பி.நட்டா தலைவராக இருக்கிறார். பாரதிய ஜனதாவில் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதிய தலைவர் தேர்வு செய்யப்படுவது மரபாக உள்ளது.

    ஜே.பி.நட்டாவின் பதவி காலம் ஜனவரி மாதம் நிறைவு பெற உள்ளது. இதையடுத்து புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான ஆலோசனையில் மோடி, அமித்ஷா, ராஜ்நாத்சிங் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் ஈடுபட்டு உள்ளனர்.

    பாரதிய ஜனதா கட்சி விதிப்படி ஒரு நபர் இரண்டு முறைதான் தலைவர் பதவியில் அமர முடியும். எனவே ஜே.பி.நட்டாவுக்கு மேலும் 3 ஆண்டுகளுக்கு தலைவர் பதவி நீடிப்பு வழங்கப்படலாம் என்றுகூறப்படுகிறது.

    அதில் ஒருமித்த கருத்து ஏற்படாத பட்சத்தில் அடுத்த ஆண்டு நடக்கும் சட்டசபை தேர்தல்களை மனதில் கொண்டு அவர் ஓராண்டு பதவி நீடிப்பு செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. ஓராண்டுக்கு பிறகு புதிய தலைவரை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் என்று விவாதிக்கப்பட்டு வருகிறது.

    ஜே.பி.நட்டாவுக்கு பதில் இந்த ஆண்டு இறுதிக்குள் புதிய தலைவர் தேர்வு செய்யப்பட வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டால் மத்திய கல்வி மந்திரி தர்மேந்திரபிரதானை தலைவர் ஆக்கலாம் என்று பிரதமர் மோடியும், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவும் கருத்து தெரிவித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இதற்கிடையே உபேந்திர யாதவ் பெயரும் பாரதிய ஜனதா கட்சி தலைவர் பதவிக்கு அடிபடுகிறது. இவர் சமீபத்தில்தான் பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் குழுவில் இணைக்கப்பட்டார். இவரை தேர்வு செய்யவும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

    இன்னும் ஓரிரு மாதங்களில் பாரதிய ஜனதாவின் தலைவர் யார்? என்பது தெரிந்து விடும்.

    • ஜம்மு காஷ்மீரில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி நடைபெறுகிறது.
    • இந்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெறலாம் என்று கருதப்படுகிறது.

    ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த மூத்த காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத் இன்று அக்கட்சியில் இருந்து விலகி உள்ளார். மேலும் அந்த மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகளும் குலாம் நபிக்கு ஆதரவாக காங்கிரசில் இருந்து விலகியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஜம்மு-ஷ்மீரைச் சேர்ந்த பாஜக முக்கியக் குழு உறுப்பினர்களுடன் இன்று ஆலோசனை நடத்தினார். டெல்லியில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அந்த யூனியன் பிரதேசத்தின் தற்போதைய அரசியல் சூழல் மற்றும் அமைப்பு சார்ந்த பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    இந்த கூட்டத்தில் ஜம்மு காஷ்மீர் பாஜக தலைவர் ரவீந்தர் ரெய்னா மற்றும் மத்திய மந்திரி ஜிதேந்திர சிங், தேவேந்திர சிங் ராணா, ஜம்முகாஷ்மீர் பாஜக மேலிட பொறுப்பாளர் தருண் சுக் உள்பட கட்சியின் மூத்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    முன்னதாக ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹாவும், அமித்ஷாவை சந்தித்துப் பேசினார். ஜம்மு காஷ்மீரில் தற்போது நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி முடிந்ததும் அந்த யூனியன் பிரதேசத்தில் இந்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடத்தப்படலாம் என்று கருதப்படுகிறது. 

    • ஆறுகள் அல்லது மலைகளால் மட்டுமே ஒரு நாடு சிறந்த நாடாக மாறாது.
    • புதிய தேசிய கல்விக் கொள்கை இந்தியாவை சிறந்த தேசமாக மாற்றும்.

    மத்திய பிரதேச மாநிலம் போபாலில் நடைபெற்ற இந்தியாவின் புதிய கல்விக் கொள்கை குறித்த கருத்தரங்கில் கலந்து கொண்ட உள்துறை மந்திரி அமித்ஷா கூறியுள்ளதாவது:

    தேசிய கல்விக் கொள்கை, பொதுமக்களின் ஆசைகளை பிரதிபலிக்கிறது. இதற்கு முந்தைய கல்விக் கொள்கை ஒரு மாணவரை வெற்றிகரமான நிபுணராக மாற்ற வடிவமைக்கப்பட்டது. ஆனால் புதிய கல்விக் கொள்கை ஒரு மாணவனை சிறந்த மனிதனாக மாற்றுவது மட்டுமல்லாமல், இந்தியாவை சிறந்த தேசமாக மாற்றும்.

    ஒரு நாடு ஆறுகள் அல்லது மலைகளால் மட்டுமே சிறந்த நாடாக மாறாது, சிறந்த நிலையை அடைய சிறந்த ஆளுமைகள் தேவை. தேசிய கல்விக் கொள்கை இந்தியாவின் ஆன்மாவை பிரதிபலிக்கும். ஆங்கிலத்தில் மட்டுமே கவனம் செலுத்துவதன் மூலம், ஆங்கிலேயர்கள் இந்தியர்களிடையே தாழ்வு மனப்பான்மையை வளர்த்து, தங்கள் காலனித்துவ ஆட்சியை நீட்டிக்க முயன்றனர். புதிய கல்விக் கொள்கையில் இந்திய கலைகள், கலாச்சாரம், தாய்மொழி ஆகியவற்றிற்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. வெளிநாட்டு மாணவர்களையும் நிச்சயம் இது ஈர்க்கும்.

    கல்வித் துறையுடன் தொடர்புடைய அனைவரும் தேசிய கல்விக் கொள்கை குறித்து படித்து தெரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • பல்வேறு குற்றங்கள் குறித்த தரவுத் தளத்தை மத்திய அரசு தயாரித்து வருகிறது.
    • போதைப்பொருள் கடத்தல் கும்பலை அடிவேர் வரை முற்றிலுமாக அகற்றுவது முக்கியம்.

    தலைநகர் டெல்லியில் தேசிய பாதுகாப்புக்கான உத்திகள் குறித்த இரண்டு நாள் மாநாடு நடைபெற்றது. இதில் அனைத்து மாநில காவல்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா, பேசியதாவது:

    தேசிய பாதுகாப்பு பிரச்சினைகளுக்கு மாநிலங்கள் முன்னுரிமை அளிக்க வேண்டும். கடந்த 2014-ஆம் ஆண்டு பிரதமா் மோடி பதவியேற்றது முதல் உள்நாட்டுப் பாதுகாப்பு மட்டுமல்ல, அனைத்துத் பாதுகாப்பு அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்ளும் வழிமுறைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. அண்டை நாடுகளுடனான நமது எல்லைப்பகுதிகளில் உள்ள மாவட்டங்களில் மக்கள் தொகை மாற்றங்கள் நடைபெறுகின்றன. அது குறித்த தகவல்களைச் சேகரிப்பது மாநில காவல்துறை தலைவா்களின் பொறுப்பு.


    ஜம்மு காஷ்மீர் பயங்கரவாதம், வடகிழக்கு தீவிரவாதக் குழுக்கள் மற்றும் இடதுசாரி தீவிரவாதம் ஆகியவற்றை ஒழிப்பதில் மத்திய அரசு பெரும் வெற்றியை பெற்றுள்ளது. போதை பொருள் சரக்கைப் பிடிப்பது மட்டும் போதாது, போதைப்பொருள் கடத்தல் கும்பலை அடிவேர் வரை முற்றிலுமாக அகற்றுவது மிகவும் முக்கியம்.

    பல்வேறு வகையான குற்றங்கள் குறித்த தரவுத்தளத்தை மத்திய அரசு தயாரித்து வருகிறது. அறிவியல் அணுகுமுறையுடன், பணிகள் நடைபெறுகின்றன. பாதுகாப்பு அமைப்பை வலுப்படுத்த 5ஜி தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும், தொழில் நுட்பத்துடன், மனித நுண்ணறிவைப் பயன்படுத்துவதற்கும் சம அளவு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ×