search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நீதிமன்றம்"

    • ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் இன்று காலை தேசிய மக்கள் நீதிமன்றம் கூடியது.
    • சமரச நீதிமன்றம் மூலம் வழக்குகள் விரைந்து முடிக்கப்படுகிறது. இதனால் நீதிமன்ற கட்டணம் உடனே திருப்பி வழங்கப்படுகிறது. இது தவிர நேரம் மீதமாகிறது.

    சேலம்:

    சேலம் அஸ்தம்பட்டி அருகே உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் இன்று காலை தேசிய மக்கள் நீதிமன்றம் கூடியது. இதனை தொழிலாளர் நல நீதிமன்ற நீதிபதி எஸ்.சுமதி தலைமை வகித்து தொடங்கி வைத்தார்.

    பின்னர் அவர் பேசியதாவது, சமரச நீதிமன்றம் மூலம் வழக்குகள் விரைந்து முடிக்கப்படுகிறது. இதனால் நீதிமன்ற கட்டணம் உடனே திருப்பி வழங்கப்படுகிறது. இது தவிர நேரம் மீதமாகிறது.

    சமரச நீதிமன்றம் மூலம் தீர்வு காணப்பட்ட வழக்குகளுக்கு மேல்முறையீடு செய்ய முடியாது. சமரச மையம் மூலம் தீர்வு காண்பவர்கள் உறவினர்களிடமும், பொதுமக்களிடமும், விளக்கி இம்மையம் மூலம் தீர்வு காண உதவிட வேண்டும். இதேபோல் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க வழக்கறிஞர்கள் உதவிட வேண்டும். இவ்வாறு நீதிபதி சுமதி பேசினார்.

    சேலத்தைச் சேர்ந்த பார்த்திபன் என்பவர் கடந்த 2017-ம் ஆண்டு கார் மோதி தலை மற்றும் உடல் முழுவதும் பலத்த படுகாயம் அடைந்தார். சிகிச்சை பின் குணமடைந்த அவர், சமரச தீர்வு மையம் மூலம் வழக்கு தொடர்ந்தார்.

    இதனை நீதிபதிகள் விசாரித்து படுகாயம் அடைந்த பார்த்திபனுக்கு ரூ.52 லட்சத்து 78 ஆயிரத்து 642 நஷ்ட ஈடு தொகை வழங்க உத்தரவிட்டனர். பார்த்திபனுக்காக வழக்கறிஞர் ரகுபதி வாதாடினார்.

    இதற்கான காசோலையை, இன்று நீதிபதிகள் பார்த்தீபனிடம் வழங்கினர். இதேபோல் ராணி என்பவரின் மகன் விபத்தில் இறந்துவிட்டார். இதனையடுத்து ராணிக்கு ரூ.12 லட்சத்து 50 ஆயிரத்திற்கான காசோலை இன்று வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் நீதிபதிகள் ஜெகநாதன், தங்கராஜ், ஸ்ரீ ராம ஜெயம், மதிவாணன் மற்றும் வழக்கறிஞர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். 

    • செங்கோட்டை நீதிமன்ற வளாகத்தில் சட்ட விழிப்புணா்வு முகாம் நடந்தது.
    • வாகன ஓட்டிகளுக்கு சட்டம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து நீதிபதி சுனில்ராஜா விளக்கி பேசினார்.

    செங்கோட்டை:

    செங்கோட்டை நீதிமன்ற வளாகத்தில் வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் சட்ட விழிப்புணா்வு முகாம் நடந்தது. முகாமிற்கு வட்ட சட்டப்பபணிகள் குழு தலைவரும், மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவரும் நீதிபதியுமான சுனில்ராஜா தலைமை தாங்கினார். வக்கீல் சங்க துணைத்தலை வா் முத்துக்குமாரசாமி முன்னிலை வகித்தார். வட்டசட்டப்பணிகள் குழு தன்னார்வ பணியாளா் ஜெயராமசுப்பிரமணியன் வரவேற்று பேசினார். அதனை தொடா்ந்து மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டிய குற்றத்திற்காக அபாரதம் செலுத்த வந்த வாகன ஓட்டிகளுக்கு சட்டம் சார்ந்த பிரச்சினைகள் மற்றும் அதன் பாதிப்புகள் குறித்து நீதிபதி சுனில்ராஜா, விளக்கி பேசினார்.

    நிகழ்ச்சியில் வக்கீல்கள் சக்திவேல், வெங்கடேஷ், ஜெயகணேஷ், சிதம்பரம், சாமி, ஆசாத், நித்யானந்தன். பைரவன் உள்பட பலா் கலந்து கொண்டனா். முடிவில் மூத்த வக்கீல் பழனிக்குமார் நன்றி கூறினார்.

    • மனித உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் பிரிவின் கீழ் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளது.
    • பாதிக்கப்பட்டவரின் செலவுத் தொகையை அரசு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

    மகாராஷ்டிரா மாநிலம் மரைன் டிரைவ் பகுதியில் ஸ்விக்கி விநியோக நிர்வாகி கடந்த 2020-ம் ஆண்டு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது, தெரு நாய் ஒன்று எதிர்பாராதவிதமாக திடீரென குறுக்கே வர, ஸ்விக்கி விநியோக நிர்வாகி மனாஸ் காட்போல் சென்ற மோட்டார் சைக்கிள் நாய் மீது மோதியுள்ளது.

    இந்த விபத்தில் நாய் காயமடைய, பெண் ஒருவர் விபத்தை ஏற்படுத்திய மனாஸ் மீது நடவடிக்கை எடுக்கும்படி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் இந்திய தண்டனைச் சட்டம் 279 உள்பட சில பிரிவுகளில் (மனித உயிருக்கு ஆபத்து ஏற்படுத்துதல்) வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    இது மனாஸ்க்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர் தனக்கு எதிரான புகாரை எதிர்த்து மகாராஷ்டிரா மாநில உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

    இந்த வழக்கை தீவிரமாக விசாரித்த ரேவதி மோகித் டேர், பிரித்விராஸ் சவான் கொண்ட டிவிசன் பெஞ்ச், இந்த எஃப்.ஐ.ஆர். நியாயமற்றது என கேன்சல் செய்ததோடு, பாதிக்கபட்ட மனாஸ்க்கு வழக்கு செலவாக 20 ஆயிரம் ரூபாயை வழங்க வேண்டும் என மகாராஷ்டிரா மாநில அரசுக்கு நீதிபதிகள் அதிரடி உத்தரவு வழங்கியுள்ளனர்.

    நீதிபதிகள் தங்களது உத்தரவில் கூறியிருப்பதாவது:-

    நாய், பூனை அவர்களது உரிமையாளர்களுக்கு குழந்தை அல்லது குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள் போன்று நடத்தப்படும் என்பதில் எந்த சந்தேகம் இல்லை. ஆனால், அடிப்படையில் உயிரியல் என்ன சொல்கிறது என்றால், அவைகள் மனித உயிரினங்கள் இல்லை.

    இந்த தண்டனைச் சட்டம் 279 மற்றும் 337 ஆகியவை, மனித உயிருக்கு ஆபத்து விளைவித்தல், அல்லது எந்த நபருக்கும் காயம் ஏற்படுத்துதல் என்பதை குறிப்பிடுகின்றன.

    குறிப்பாக 279 பிரிவு, மற்றவர்களுக்கான தனிப்பட்ட பாதுகாப்பு, உயிருக்கு ஆபத்து விளைவித்தல் ஆகிய குற்றத்திற்காக பயன்படுத்தப்படுகிறது. எனவே, சட்டப்பூர்வமாக பார்த்தால், இதற்கு பொருந்தாது. மனித உயிரினங்களை தவிர்த்து மற்றவைக்கு காயத்தை ஏற்படுத்தும்போது, இந்த சட்டப்பிரிவுகள் பயன்படுத்த அங்கீகரிக்கப்படவில்லை.

    அந்த எஃப்.ஐ.ஆர். நியாயமான முறையில் பதிவு செய்யப்படவில்லை என்பது தெளிவுப்படுத்தப்படுகிறது. எந்தவொரு குற்றமும் வெளிப்படுத்தப்படாத போதிலும், போலீசார் மேற்படி வழக்குப் பதிவு செய்திருப்பதைக் கருத்தில் கொண்டு, பாதிக்கப்பட்ட நபருக்கு 20 ஆயிரம் அரசு வழங்க வேண்டும் என்பது பொருத்தமானதாக இருக்கும் என கருதுகிறோம்.

    இந்த பணம் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்து, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய காரணமாக இருந்து அதிகாரிகளின் சம்பளத்தில் இருந்து வசூலிக்க வேண்டும்.

    இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

    • தேசத்தின் நுகர்வோர் நீதி நிர்வாகம் வலிமையாக இருக்க வேண்டும் என மாவட்ட ஆணைய நீதிபதி பேசினார்
    • பாதிக்கப்படும் நுகர்வோர் பொதுநல வழக்குகளை தாக்கல் செய்து நுகர்வோர் நீதியைப் பெற நுகர்வோர் நீதிமன்றங்களை அணுகலாம்

    அரியலூர்:

    அரியலூரிலுள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற வழக்குரைஞர்களுக்கான நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் குறித்த மாநாட்டில் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய நீதிபதி வீ.ராமராஜ் கலந்து கொண்டு பேசினார். மனிதன் பிறந்தது முதல் இறக்கும் வரை ஏதாவது ஒரு வகையில் நுகர்வோராக உள்ளதால் தேசத்தின் நுகர்வோர் நீதி நிர்வாகம் வலிமையாக இருக்க வேண்டும். இதனை வலுப்படுத்த நுகர்வோர்களும், வழக்குரைஞர்களும் முன் வரவேண்டும். நுகர்வோர் நீதிமன்றங்களில், 60- க்கும் மேற்பட்ட வகையான பிரச்னைகளுக்கு புகார் தாக்கல் செய்யவும், பலவகையான தீர்வுகளை பெறவும் புதிய நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் வழிவகை செய்துள்ளது. இணையதளம் மூலம் நடத்தப்படும் விளையாட்டு போட்டி போன்ற தன்மையிலான வணிகங்கள் உட்பட அனைத்து வகையான நுகர்வோரின் இணையதள பயன்பாடுகளில் பிரச்னை ஏற்படும் போது எங்கு அணுகுவது என்ற குழப்பமான நிலை பொதுமக்களுக்கு ஏற்படுகிறது. மாறிவரும் இணையதள யுகத்தில் ஏற்படும் இத்தகைய சவால்களை முறியடிக்கவும் புதிய நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் வழிவகுத்துள்ளது. பாதிக்கப்படும் நுகர்வோர் பொதுநல வழக்குகளை தாக்கல் செய்து நுகர்வோர் நீதியைப் பெற நுகர்வோர் நீதிமன்றங்களை அணுகலாம். பணம் செலுத்தி பெறக்கூடிய பொருள்கள் மற்றும் சேவைகள் குறித்த பிரச்னைகளுக்கு மட்டுமே நுகர்வோர் நீதிமன்றங்களை அணுக இயலும். கட்டணம் இல்லாமல் அரசு வழங்கும் பல்வேறு சேவைகளில் பிரச்னை ஏற்படும்போது மக்களுக்கு நீதி வழங்க தமிழக அரசு நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தில் மாநில அளவிலான திருத்தங்களை மேற்கொண்டு நுகர்வோர் குறைதீர் ஆணையங்களை நுகர்வோர் குறைதீர் ஆணையம் மற்றும் சேவை உரிமை தீர்ப்பாயங்களாக மாற்றலாம். இத்தகைய நடவடிக்கையை மேற்கொண்டால் நமது மாநிலம் மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக இருக்கும் என்றார். சட்டப் பேரவை உறுப்பினர் கு.சின்னப்பா மாநாட்டை தொடக்கி வைத்து பேசினார். மாநாட்டில், வழக்குரைஞர் சங்கச் தலைவர் மனேகோரன், செந்துறை வழக்குரைஞர் சங்கத் தலைவர் சின்னதுரை, அரியலூர் வழக்குரைஞர் சுகுமார் உள்ளிட்ட வழக்குரைஞர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக அரசு வழக்குரைஞர் ஏ.கதிரவன் வரவேற்றார். முடிவில் அரியலூர் மாவட்ட வழக்குரைஞர் சங்கச் செயலர் வி.முத்துகுமார் நன்றி தெரிவித்தார்.


    • சேவை குறைபாட்டால் பாதிக்கப்பட்டவருக்கு ரூ.75ஆயிரம் நஷ்டஈடு வழங்க நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது
    • ஒயிட் சிமெண்ட் தரக்குறைவாகவும், கலப்படம் நிறைந்ததாகவும் இருந்துள்ளது

    பெரம்பலூர்:சேவைகுறைபாட்டால் பாதிக்கப்பட்டவருக்கு நஷ்ட ஈடு வழங்கவேண்டும் என சிமெண்ட் ஏஜென்சீசுக்கு பெரம்பலூர் நுகர்வோர் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.பெரம்பலூர் நிர்மலா நகரை சேர்ந்தவர் குலாம் மொய்தீன் மகன் முகமது சபீக் (வயது 38). இவர் புதிதாக கட்டிடம் கட்டியுள்ளார். கடந்த 2019ம் ஆண்டு மார்ச் மாதம் 25ம்தேதி கட்டிடத்திற்கு பூச்சு மற்றும் பட்டி பார்ப்பதற்காக பெரம்பலூர் பழைய ஆர்டிஓ அலுவலகம் எதிரில் உள்ள ஒரு ஏஜென்சியில் 35 மூட்டை ஒயிட் சிமெண்ட் வாங்கியுள்ளார். அந்த ஒயிட் சிமெண்டை பயன்படுத்தியபோது கட்டிட சுவற்றில் ஒட்டாத சாதாரண சுண்ணாம்பு போல் இருந்துள்ளது. அந்த ஒயிட் சிமெண்ட் தரக்குறைவாகவும், கலப்படம் நிறைந்ததாகவும் இருந்துள்ளது.இதையடுத்து முகமது சபீக் விக்னேஷ் ஏஜென்சீசுக்கு சென்று அதன உரிமையாளரிடம் ஓயிட் சிமெண்ட் தரமற்றதாகவும், கலப்படம் உள்ளதால் தான் சுவற்றில் ஒட்டவில்லையே என கேட்டதற்கு அவர் நான் சென்னை, சைதாபேட்டையில் உள்ள அல்டிரா டெக் சிமெண்ட் லிமிடெட் மேலாளரிடம் இருந்து தான் ஓயிட் சிமெண்ட் ஏஜென்சீஸ் எடுத்து விற்பனை செய்து வருகிறேன் எனவும், அங்கிருந்து வந்ததை தான் நான் உங்களுக்கு விற்பனை செய்தேன் என கூறியுள்ளார்.பின்னர் முகமது சபீக் வேறு கடையில் ஓய்ட் சிமெண்ட் வாங்கி கட்டித்திற்கு பயன்படுத்தியுள்ளார்.இதனால் மனஉளைச்சல் அடைந்த முகமது சபீக் சேவை குறைபாடு புரிந்தற்காக ரூ. 4 லட்சம் நஷ்ட ஈடும், வழக்கு செலவு தொகையும் வழங்க கோரி கடந்த 2019ம் ஆண்டு ஜூன் மாதம் 25ம்தேதி பெரம்பலூர் மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.வழக்கை விசாரித்த ஆணைய தலைவர் ஜவஹர், உறுப்பினர்கள் திலகா, முத்துக்குமரன் ஆகியோர் அளித்த தீர்ப்பில், விக்னேஷ் ஏஜென்சீஸ் உரிமையாளர் சேவை குறைபாடு புரிந்தால் பாதிக்கப்பட்ட முகமது சபீக்கு ரூ.75 ஆயிரம் நஷ்ட ஈடும், வழக்கு செலவிற்கு ரூ.10 ஆயிரம் என மொத்தம் ரூ.85 ஆயிரம் வழங்கவேண்டும் எனவும், பெரம்பலூர் ஏஜென்சீஸ் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டனர்.

    • நீதிமன்ற தீர்ப்பை தமிழில் வெளியிட வேண்டும்
    • பழைய ஓய்வூதிய திட்டத்தை விரைந்து அமல்படுத்த வேண்டும்

    அரியலூர்:

    நீதிமன்ற தீர்ப்புகளை தமிழில் வெளியிட வேண்டும் என்று உடையார்பாளையம் வட்டார அகில பாரத மூத்த குடிமக்கள் மற்றும் பென்சனர் சங்கத்தினர் வலியுறுத்தினர்.ஜெயங்கொ ண்டத்திலுள்ள ஒரு தனியார் கூட்டரங்கங்கில் நடைபெற்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட இதர தீர்மானங்கள்:பழைய ஓய்வூதிய திட்டத்தை விரைந்து அமல்படுத்த வேண்டும்,வழக்கு மன்றங்களில் தமிழில் தீர்ப்பு வெளியிடப்பட வேண்டும், அனைத்து பள்ளிகளிலும் தமிழ் கட்டாயமாக கற்பிக்க வேண்டும், காலியாக உள்ள அனைத்து அரசு பணியிடங்களையும் முழுமையாக நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கூட்டத்துக்கு அச்சங்கத்தின் வட்டாரத் தலைவர் சுந்தரேசன் தலைமை வகித்தார். முன்னாள் தலைவர் சிவசிதம்பரம் முன்னிலை வகித்தார்.செயலர் கலியமூர்த்தி அறிக்கை வாசித்தார். பொருளாளர் ராமூர்த்தி வரவு செலவு கணக்குகளை சமர்பித்தார். முன்னதாக சங்க நிர்வாகி வரவேற்றார். முடிவில் ராமையன் நன்றி தெரிவித்தார்.




    • 2019 ஆம் ஆண்டு ஜனவரி 31ஆம் தேதி, 1வருடம் சிறைதண்டணையும், 25 லட்சம் ரூபாய் நஷ்டஈடும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
    • இரண்டு மாத காலமாக தலைமறைவாக இருந்த நிலையில் காவல்து றையினரால் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

    பட்டுக்கோட்டை:

    தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை, கண்டியன் தெருவில் வசித்து வந்த சின்னதம்பி மகன் பிரபாகரன்.

    இவரிடம் தஞ்சாவூர் மாவ ட்டம், ஒரத்தநாடு வட்டம், ஆம்பலாப்பட்டு தெற்குதெரு, கொல்லிபத்தை முகவரியில் வசி க்கும் ஜோதிவேல் மகன் இரனதிவே என்பவர் 25 லட்சம் ரூபாய் பணம் பெற்றுக்கொண்டு, அதற்கு காசோலை கொடுத்து மோசடி செய்ததால் பிரபாகரன், இரனதிவே மீது பட்டுக்கோட்டை குற்றவியல் விரைவு நீதிமன்றத்தில் கடந்த 2016 ம் ஆண்டு காசோலை மோசடி வழக்கு தாக்கல் செய்து இரனதிவேக்கு கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனவரி 31ஆம் தேதி, 1வருடம் சிறைதண்டணையும், 25 லட்சம் ரூபாய் நஷ்டஈடும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

    அதனைத் தொடர்ந்து மேற்கண்ட தீர்ப்பை எதிர்த்து இரனதிவே பட்டுக்கோட்டை 3-வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து, மேல்மு றையீடு தள்ளுபடி செய்யப்பட்டு நீதிமன்றம் விதித்த தண்டணை சரியானது என்றும், இரணதிவேயை கைதுசெய்து சிறையில் அடைக்க கடந்த அக்டோபர் மாதம் 12 ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

    அதனைத் தொ டர்ந்து இரனதிவே கடந்த இரண்டு மாத காலமாக தலைமறைவாக இருந்த நிலையில் காவல்து றையினரால் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

    • திருவாரூர் பனகல் சாலையில் உள்ள ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி கிளையில் நீண்ட நாட்களாக சுப்பிரமணியன் கணக்கு வைத்துள்ளார்.
    • வங்கி கணக்கு மூலம் மாதம் தோறும் ரூ.18 ஆயிரத்து 226 ஓய்வூதியமாக பெற்று வந்தார்.

    திருவாரூர்:

    திருவாரூர் விஜயபுரம் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவர் தென்னக ரெயில்வேயில் பணிபுரிந்து கடந்த 2011 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஓய்வு பெற்றார்.

    மேலும் திருவாரூர் பனகல் சாலையில் உள்ள ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி கிளையில் நீண்ட நாட்களாக கணக்கு வைத்துள்ளார். அந்த வங்கி கணக்கு மூலம் மாதம் தோறும் ரூ.18 ஆயிரத்து 226 ஓய்வூதியமாக பெற்று வந்தார்.

    இந்த நிலையில் கடந்த 27.5.2020 இல் இவரது வங்கி கணக்கில் ஓய்வூதியம் வரவு வைக்கப்பட்டது. இதனை எடுப்பதற்காக அடுத்த நாள் சுப்பிரமணியன் வங்கிக்கு சென்றபோது இவர் தன்னுடன் பணிபுரிந்த நண்பர் ஒருவரின் கடனுக்காக போட்ட ஜாமீன் கையெழுத்து காரணமாக இவரது ஓய்வூதியத்தை எடுக்க முடியாமல் நிறுத்தி வைத்துள்ளதாக வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    அந்த மாதம் கொரோனா ஊரடங்கு என்பதால் அவரது மார்ச் மாதத்திற்கான ஓய்வூதியம் தாமதமாக தான் வந்தது.

    இந்த நிலையில் அதை வைத்து வாழ்க்கை நடத்தி வரும் அவர் அந்த ஓய்வூதியம் கிடைக்காமல் மிகவும் பாதிக்கப்பட்டார். அதனைத்தொடர்ந்து பலமுறை இவரது வங்கி கணக்கில் பணம் எடுக்க முடியாமல் நிறுத்தி வைக்கப்பட்டது.

    இதனால் மனவேதனை அடைந்த சுப்பிரமணியன் வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியதும் குறிப்பிட்ட அளவு பணத்தை விடுவிப்பது மீதமுள்ள பெருமளவு பணத்தை நிறுத்தி வைப்பதுமாக தொடர்ந்து அந்த வங்கி நிர்வாகம் செய்து வந்துள்ளது.

    இதுகுறித்து அவர் திருவாரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீராணையத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் சக்கரவர்த்தி, உறுப்பினர்கள் பாக்கியலட்சுமி லட்சுமணன் அடங்கிய அமர்வு, புகார்தாரர் மேற்கோள் காட்டிய இரண்டு தீர்ப்புகள் மற்றும் சட்ட பிரிவுகள் அனைத்தும் புகார்தாரின் கூற்றிற்கு மிகவும் பொருத்தமாக உள்ளது. இந்த மேற்கோள்களின் மூலம் எக்காரணத்தைக் கொண்டும் ஓய்வூதியம் மற்றும் கிராஜுவேட்டியை நிறுத்தி வைக்க கூடாது என்பது தெளிவாகிறது.

    மேலும் புகார்தாரருக்கு மாதந்தோறும் ஓய்வூதியத் தொகை அவரது வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்பதை நன்கு அறிந்தும் பணத்தை வங்கி நிறுத்தி வைத்துள்ளது சேவை குறைபாடு என்று இந்த ஆணையம் கருதுகிறது. அவரது பணத்தை நிறுத்தி வைத்து வங்கியில் இருந்து அத்தியாவசிய தேவைக்கு பணத்தை எடுக்க விடாமல் வங்கி தடுத்துள்ளது.

    எனவே புகார்தாரருக்கு வங்கி சேவை குறைபாடு மற்றும் நியாயமற்ற வர்த்தக நடைமுறை செய்ததற்கு இழப்பீடாக ரூ.1 லட்சமும், புகார்தாரருக்கு ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் பொருள் நஷ்டத்திற்கு இழப்பீடாக ரூ.1 லட்சம் மற்றும் வழக்கு செலவு தொகையாக ரூ.10 ஆயிரம் என மொத்தம் ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்து உத்தரவிட்டது.

    மேலும் உத்தரவு பிறப்பித்த நாளிலிருந்து ஆறு வார காலத்திற்குள் புகார்தாரருக்கு இந்த தொகையினை வங்கி கிளை வழங்காவிட்டால் வழக்கு செலவு தொகை நீங்கலாக மீதமுள்ள தொகைக்கு 9 சதவீத வட்டியுடன் சேர்த்து வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

    • 4 நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகிறது.
    • வழக்குகள் அனைத்தும் இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.

    தாராபுரம் :

    தாராபுரம் சர்ச் வீதியில் நீதிமன்றம் அமைந்துள்ளது. இங்கு மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், மாவட்ட கூடுதல் சார்பு நீதிமன்றம் , தாலுகா அலுவலகம் அருகில் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் என 4நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகிறது. உச்ச நீதிமன்ற ஆணையின் படி நீதிமன்ற பணிகள், தினசரி வழக்குகள் அனைத்தும் இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.

    இந்த பதிவு செய்யப்பட்ட விபரங்களை வழக்கறிஞர்களும் பொதுமக்களும் தினசரி பார்த்துக் கொள்ளும் வசதிகள் உள்ளன. இந்தநிலையில் நீதிமன்ற வளாக இணையதள சேவையில் அடிக்கடி பழுது ஏற்பட்டு வருகிறது. இதனால் பணி , வழக்கு விவரங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்ய முடியாத நிலை உள்ளது. எனவே இணையதள சேவையை உடனடியாக சரி செய்ய வேண்டும் என தாராபுரம் வக்கீல் ராஜேந்திரன் மற்றும் பலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.  

    • திருச்செந்தூர் சார்பு நீதிமன்றத்தில் லோக் அதாலக் நடைபெற்றது.
    • 4 வழக்குகளில் விவாகரத்து கோரியிருந்த தம்பதியினர் சேர்த்து வைக்கப்பட்டனர்.

    திருச்செந்தூர்:

    தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் தூத்துக்குடி முதன்மை மாவட்ட நீதிபதி உத்தரவின்படி திருச்செந்தூர் சார்பு நீதிமன்றத்தில் லோக் அதாலக் நடைபெற்றது. இதில் சார்பு நீதிமன்ற நீதிபதி வஷீத்குமார் தலைமையில் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிபதி.வரதராஜன் முன்னிலையில் 286 வழக்குகளுக்கு சமரச தீர்வு காணப்பட்டது.

    இதில் இந்து திருமண அசல் வழக்கு, வங்கி வராக்கடன், பயிர்கடன், கல்வி கடன் வழக்குகள், சிறு, குறு வழக்குகள், உரிமையியல் வழக்குகள் உட்பட 286 வழக்குகளுக்கு ரூ.3,21,59,053-க்கு தீர்வு காணப்பட்டது.

    மேலும் 4 வழக்குகளில் விவாகரத்து கோரியிருந்த தம்பதியினர் சேர்த்து வைக்கப்பட்டனர். இதில் திருச்செந்தூர் வக்கீல் சங்க தலைவர் சந்திரசேகரன், வக்கீல்கள், நீதிமன்ற ஊழியர்கள், வங்கி அதிகாரிகள், அரசு அலுவலர்கள், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளது
    • வருகின்ற 12-ந் தேதி நடைபெறுகிறது

    கரூர்:

    கரூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவர் சண்முகசுந்தரம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

    தேசிய சட்டப்பணிகள் மற் றும் மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவி பேரில் நாடு முழுதும் வரும் 12 -ந் தேதி தேசிய மக்கள் நீதி மன்றம் கருர் மாவட்டத்தில் நடைபெறவுள்ளது. வழக்காடிகள் மற்றும் பொதுமக்கள் நிலுவையில் உள்ள வழக்குகளை தேசிய மக்கள் நீதிமன்றத்தில் எடுத் துக் கொள்ள சம்பந்தப்பட்ட நீதிமன்றத்திலோ அல்லது கரூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் குளித் தலை வட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவிடம் தெரி வித்து பயனடைமாறு கேட் டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள அனைத்து வங்கி கடன், நிதி நிறுவன கடன்களும், ஏனைய பிரச்னைகளும் மக்கள் நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

    தேசிய மக்கள் நீதிமன்றத்தில் விவாகரத்து தவிர இதர மண வாழ்க்கை சம்பந்தப்பட்ட வழக்குகள், மோட்டார் வாகன விபத்துக்கள். காசோலை மோசடி வழக்குகள், வங்கி கடன் வழக்குகள், தொழிலாளர் நல வழக்குகள் மற்றும் நுகர்வோர் வழக்குகள் உட்பட அனைத்து வழக்குகளும் மக்கள் நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்படும். மேலும், 11ம்தேதி வரை பணியில் உள்ள நீதிபதிகள் கொண்ட அமர்வு ஏற்படுத்த நிலுவையில் உள்ள வழக்குகள் தீர்வுக்கு எடுத்துக் கொள்ளப்படும். அந்த நீதிமன்ற அமர்வு கரூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் அமைந் துள்ள கூட்டரங்கில் பிற்பகல் 3.30மணி முதல் 5.30மணி வரை இயங்கும் எனவும் தெரிவிக் கப்படுகிறது. எனவே, வழக் காடிகள் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ள கேட் டுக்கொள்ளப்படுகிறது. சந்தேகம் இருப்பின், கரூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தொலைபேசி எண் 04324 296570ல் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரி வித்துள்ளார்.

    • சட்டத்துறை அமைச்சரிடம் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. கோரிக்கை
    • கிள்ளியூர் சட்டமன்ற தொகுதியில் சுமார் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வாழ்கின்றனர்.

    கன்னியகுமரி:

    குமரி மாவட்டத்தில் தனியார் சட்டக்கல்லூரி தொடக்க விழாவில் கலந்து கொண்ட தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதியை, தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சியின் துணை தலைவர் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. சந்தித்து கோரிக்கை மனு வழங்கினார். அந்த மனுவில் அவர் கூறியுள்ளதாவது:-

    கன்னியாகுமரி மாவட்டம், கிள்ளி யூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அனைத்து வருவாய் கிராமங்களையும் உட்படுத்தி கடந்த 19-02-2019 -ல் புதிதாக கிள்ளியூர் தாலுகா உருவாக்கப்பட்டது. கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கருங்கல், புதுக்கடை, நித்திரவிளை, கொல்லங்கோடு ஆகிய போலீஸ் நிலையங்கள் உள்ளன.

    கிள்ளியூர் சட்டமன்ற தொகுதியில் சுமார் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வாழ்கின்றனர். மேலும், கன்னியாகுமரி மேற்கு கடற்கரையோரம் குறும்பனை முதல் நீரோடி வரை 30 கிலோ மீட்டர் தூரத்திற்குட்பட்ட பகுதியில் சுமார் 1 லட்சம் மீனவ மக்கள் வாழ்கின்றனர்.

    புதிதாக கிள்ளியூர் தாலுகா உருவாக்கப்பட்டதால் கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மக்கள் மிகுந்த பயனடைந்துள்ளனர். ஆனால், கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்குள் நீதிமன்றம் இல்லாததால் மக்கள் நெடுந்தொலைவு பயணம் செய்து இரணியல், குழித்துறை போன்ற நீதிமன்றங்களுக்கு செல்ல வேண்டியுள்ளது.

    மேற்படி நீதிமன்றங்களில் அதிகமான வழக்குகள் நிலுவையில் இருப்பதால் உடனடியாக நீதி கிடைக்க முடியாத சூழல் உள்ளது. ஆகவே, தாலுகாவிற்கு ஒரு நீதிமன்றம் என்கிற அடிப்படையில் கிள்ளி யூர் சட்டமன்ற தொகுதி யிலுள்ள அனைத்து வருவாய் கிராமங்களையும் உட்படுத்தி கிள்ளியூர் தாலுகாவிற்குட்பட்ட பகுதியில் உரிமையியல் நீதிமன்றம் மற்றும் குற்றவியல் நீதிமன்றம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    ×