search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 230629"

    • கோனாதி ரெயில்வே கேட் பகுதியில் மது விற்பனை செய்யப்படுவதாக மறைமலைநகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • மது விற்ற பெண்கள் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மறைமலைநகர்:

    செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரியை அடுத்த கோனாதி ரெயில்வே கேட் பகுதியில் மது விற்பனை செய்யப்படுவதாக மறைமலைநகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில், சம்பவ இடத்திற்கு போலீசார் ரோந்து சென்று சோதனை செய்தனர். அப்போது அங்கு பெண்கள் மது விற்பனை செய்துகொண்டிருந்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் காட்டாங்கொளத்தூர் திருப்பாணாழ்வார் தெருவைச்சேர்ந்த பானுமதி (வயது 50), வள்ளி (57), சித்ரா (40) ஆகியோரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 19 மதுப் பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இதேபோல சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் மது விற்பனை செய்து கொண்டிருந்த சிவகங்கை மாவட்டத்தைச்சேர்ந்த மணி (32) என்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 37 மதுப்பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    • சப்-இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் கல்லிமேடு பஸ் நிறுத்தத்தில் சோதனை செய்தனர்.
    • 8 பேரையும் போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    கோவை,

    கோவை இடையர்பாளையம் கல்லிமேடு பஸ் நிறுத்தம் அருகே கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக சுல்தான்பேட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் கல்லிமேடு பஸ் நிறுத்தத்தில் சோதனை செய்தனர். அப்போது அந்த பகுதியில் வாலிபர் ஒருவர் நின்று கொண்டு இருந்தார்.

    போலீசாரை பார்த்ததும் அங்கிருந்து ஓட முயன்றார். உடனே சுதாரித்து கொண்ட போலீசார் அவரை மடக்கி பிடித்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தியதில் அவர் சூலூர் பாப்பம் பட்டியை சேர்ந்த திருமால்சாமி (வயது 53) என்பதும், கஞ்சா விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரிடம் இருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

    இதேபோல் மேட்டுப்பாளையம், கே.ஜி சாவடி, கோமங்களம், சூலூர் மற்றும் அன்னூர் ஆகிய பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்ததாக கார்த்திக் (22), ஸ்டீபன்ராஜ் (21), முகமது ரபிக் (18), நந்தலால் (43), அஜித்குமார் (22), அரவிந் (21), மனோகரன் (51) ஆகியோரை போலீசார் பிடித்தனர். அவர்களிடம் இருந்து மொத்தம் 700 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் 8 பேரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • விருத்தாச்சலம் மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சக்தி மோட்டார் சைக்கிளில் வந்தவரை மடக்கி பிடித்து சோதனை மேற்கொண்டார்.
    • அவர் 2 லாரி ட்யூப்களில் சுமார் 110 லிட்டர் சாராயம் கடத்தி வந்தது தெரிய வந்தது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சக்தி மற்றும் போலீசார் மதுகடத்தல் சம்பந்தமாக சிறுபாக்கம் ஒரங்கூரிலிருந்து ஓலக்கூர் செல்லும் பாதையில் மா.கொத்தனூரில் சோதனை நடத்தினர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்தவரை மடக்கி பிடித்து சோதனை மேற்கொண்டார். அவர் 2 லாரி ட்யூப்களில் சுமார் 110 லிட்டர் சாராயம் கடத்தி வந்தது தெரிய வந்தது. பின்னர் அந்த நபரை பிடித்து விசாரணை நடத்தியதில், ஒலங்கூர் சேர்ந்த சுதாகர் (வயது 39) என்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர் மீது விருத்தாச்சலம் மதுவிலக்கு அமல் பிரிவு மற்றும் சிறுபாக்கம் போலீஸ் நிலையத்தில் 9 சாராய வழக்குகள் உள்ளன.

    இவரின் குற்றச்செயலை கட்டுப்படுத்தும் விதமாக கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு இராஜாராம் பரிந்துரையின்பேரில் மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டுள்ளார்.

    • கர்ப்பத்தை மாத்திரை கொடுத்து கலைத்தார்
    • வழக்கு பதிந்து போலீசார் வாலிபர், அவரின் அத்தையை கைது செய்தனர்

    பெரம்பலூர், 

    பெரம்பலூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 26 வயதுடைய பட்டதாரி பெண்ணுக்கும், சேலம் மாவட்டம், ஆத்தூர் வட்டம், சாத்தப்பாடி கிராமத்தை சேர்ந்த மாணிக்கவாசுவின் மகன் கிஷோர்குமார் (வயது 24) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு, பின்னர் காதலாக மாறியது. அந்த பெண்ணை விட கிஷோர்குமார் 2 வயது குறைந்தவராக இருப்பினும், கடந்த 3½ வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். கிஷோர்குமார், அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி நெருங்கி பழகியதால், அந்த பெண் கர்ப்பமடைந்தார். இதையடுத்து, கிஷோர்குமாரின் அத்தை முறை உறவினரான சித்ரா, அந்த பெண்ணுக்கு கருக்கலைப்பு மாத்திரைகளை கொடுத்து கருக்கலைப்பு செய்ததாக தெரிகிறது. இந்த நிலையில், தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு அந்த ெபண், கிஷோர்குமாரிடம் பலமுறை வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால் கிஷோர்குமார், அவரை திருமணம் செய்ய மறுத்துள்ளார். மேலும் அவரது தாய் அமுதா (50), தம்பி ஹரிசங்கர் (22) ஆகியோர் அந்த பெண்ணை தவறாக பேசி, அவரை தாக்கி விரட்டியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த பெண் இது குறித்து பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார், கிஷோர்குமார் மீது பாலியல் பலாத்காரம், எஸ்சி.எஸ்டி. வன்கொடுமை தடுப்புச் சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை நேற்று கைது செய்து, பெரம்பலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இந்த வழக்கில் கிஷோர்குமாரின் அத்தை சித்ராவும் கைது செய்யப்பட்டார்.

    • ஆட்டோவில் இருந்த மொபைல் போனை திருடியவர்கள்
    • கரூர் டவுன் போலீசார் நடவடிக்கை

    கரூர்,

    கரூர் அருகே, ஆட்டோ டிரைவரிடம், மொபைல் போன் திருடியதாக, இரண்டு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.கரூர், எல்.என்.எஸ்., சத்திரம் பகுதியை சேர்ந்தவர் முரளி (வயது 47) ஆட்டோ டிரைவர். இவர், திருகாம்புலியூரில் உள்ள ஸ்டாண்டில், ஆட்டோவை நிறுத்தி விட்டு அருகில் உள்ள, டீக்கடைக்கு சென்றுள்ளார். அப்போது, ஆட்டோவில் இருந்த மொபைல் போனை, இரண்டு வாலிபர்கள் திருடி கொண்டு, இரு சக்கர வாகனத்தில் தப் பினர். முரளி கொடுத்த புகார்படி, மொபைல் போனை திருடியதாக தஞ்சாவூரை சேர்ந்த பாலமுருகன் (22), வினோத் (21) ஆகியோரை கரூர் டவுன் போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.

    • அருண்குமாரின் செல்போன் எண்ணை வைத்து ஆய்வு செய்தபோது அவர் திருவள்ளூர் மாவட்டம் காட்டூரில் பதுங்கி இருப்பது தெரிய வந்தது.
    • போலீசார் அருண்குமார், பிரவீன் மற்றும் சுரேந்தர் ஆகிய 3 பேரையும் கோட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    கோவை:

    கோவை புலியகுளம் ரோடு கிரீன் பீல்ட் காலனி சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மனைவி ராஜேஸ்வரி (வயது 63). இவருக்கு சிங்காநல்லூரை சேர்ந்த வர்ஷினி என்பவர் ரியல் எஸ்டேட் தொழில் மூலமாக பழக்கம் ஏற்பட்டது.

    இதனால் அடிக்கடி வர்ஷினி ராஜேஸ்வரியின் வீட்டுக்கு வந்து சென்றார். கடந்த மார்ச் மாதம் 20-ந் தேதி இரவு வர்ஷினி, ராஜேஸ்வரி வீட்டுக்கு சென்றார். அங்கு வர்ஷினி ராஜேஸ்வரிக்கு இரவு உணவு கொடுத்து தூங்க வைத்தார்.

    பின்னர் நள்ளிரவு 12.30 மணி அளவில் ராஜேஸ்வரியின் படுக்கை அறையில் கப்போர்டில் வைத்திருந்த 100 பவுன் தங்கம் மற்றும் வைர நகைகள், ரூ. 2.50 கோடி ரொக்க பணம் ஆகியவற்றை தனது கூட்டாளிகளான அருண்குமார், கார் டிரைவர் நவீன் குமார் ஆகியோருடன் சேர்ந்து கொள்ளையடித்து தப்பி சென்றார்.

    இதுகுறித்து ராஜேஸ்வரி ராமநாதபுரம் போலீஸ் புகார் அளித்தார் புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி தலைமறைவாக இருந்த வர்ஷினி, அருண்குமார், நவீன் குமார் ஆகியோரை தேடி வந்தனர். இந்த நிலையில் மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில், துணை கமிஷனர் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் பிரபா தேவி, சப்-இன்ஸ்பெக்டர் ஜெசிஸ் உதயராஜ் தலைமையில் தனிப்படை அமைக்கப்படுகிறது. தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர்.

    அருண்குமாரின் செல்போன் எண்ணை வைத்து ஆய்வு செய்தபோது அவர் திருவள்ளூர் மாவட்டம் காட்டூரில் பதுங்கி இருப்பது தெரிய வந்தது.

    இதனையடுத்து தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அங்குள்ள வீட்டில் பதுங்கி இருந்த திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே உள்ள மேட்டு தெருவை சேர்ந்த அருண்குமார் (37), அவருக்கு உதவிய பிரவீன் (32), மற்றும் சுரேந்தர் (25)ஆகியோரை கைது செய்தனர்.

    அப்போது அருண்குமார் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:-

    கொள்ளையடித்த பணத்தில் இருந்து ரூ. 33 லட்சத்து 20 ஆயிரம், மற்றும் 6 ஜோடி தங்க வளையல்களை வர்ஷினியிடமிருந்து வாங்கிக் கொண்டு எனது நண்பர்களான கார்த்திக் மற்றும் சுரேந்தர் ஆகியோரிடம் கொடுத்து வைத்திருந்தேன்.

    கார்த்திக்கிடம் கொடுத்து அனுப்பிய பணம் ரூ. 31 லட்சத்து 20 ஆயிரத்து 500 சேலம் வருமானவரித்துறை அதிகாரியிடம் பிடிபட்டது. நகைகளை தனது மற்றொரு நண்பரான சுரேந்தரிடம் கொடுத்து வைத்துள்ளேன்.

    இவர் அவர் கூறினார்.

    அவரிடம் இருந்து போலீசார் கொள்ளையடிக்கப்பட்ட ரூ. 2 லட்சம் ரொக்க பணம் 6 ஜோடி தங்க வளையல்கள் ஆகியவற்றை கைப்பற்றினர். பின்னர் போலீசார் அருண்குமார், பிரவீன் மற்றும் சுரேந்தர் ஆகிய 3 பேரையும் கோட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான வர்ஷினி, கார்த்திக், நவீன் குமார் ஆகியோரை தேடி வருகின்றனர்.

    • நகை, பணத்திற்காக கொலை செய்ததாக வாக்குமூலம்
    • புதுக்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டனர்

    பொன்னமராவதி,

    புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே வேந்தன்பட்டி மாப்படைச்சான் ஊரணி வீதியை சேர்ந்தவர் பழனியப்பன் (வயது 54), கட்டிட பொறியாளர். இவருக்கு கரூரில் ஆசிரியையாக பணிபுரியும் உஷா என்ற மனைவியும், ஸ்ரீராம் என்ற மகனும் உள்ளனர்.இந்நிலையில் கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 23-ந் தேதி அன்று இரவு பழனியப்பன் பூர்வீக வீட்டில் வசிக்கும் அவரது தாயார் சிகப்பிக்கு (75) உணவு வழங்க சென்றார். அப்போது பழனியப்பன் மற்றும் சிகப்பி இருவரும் மர்ம நபர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்தனர்.இதுகுறித்து பொன்னமராவதி போலீஸ் இன்ஸ்பெக்டர் தனபாலன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார். இந்நிலையில் இந்த வழக்கு சம்பந்தமாக புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே உத்தரவின் பேரில், 5 தனிப்படைகள் அமைத்து வேந்தன்பட்டி, புதுக்கோட்டை, சிவகங்கை உள்ளிட்ட பகுதிகளில் மர்மநபர்களை வலைவீசி தேடி வந்தனர்.இந்தநிலையில் பொன்னமராவதி இன்ஸ்பெக்டர் தனபாலன் மற்றும் போலீசார் இடையபுதூர் பஸ் ஸ்டாப் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்.அப்போது சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி தாலுகா கள்ளங்காலப்பட்டியை சேர்ந்த சின்னையா மகன் சக்திவேல் (33), தேவகோட்டை தாலுகா உருவாட்டி மாவிலிக்கோட்டை கிராமத்தை சேர்ந்த சுந்தரம் மகன் அலெக்ஸ் என்கிற அலெக்சாண்டர் (36) ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தினார்.விசாரணையில், வேந்தன்பட்டி கிராமத்தை சேர்ந்த பழனியப்பன் மற்றும் அவரது தாய் சிகப்பி ஆகியோரை பணத்திற்காகவும், நகைக்காகவும் திட்டம் தீட்டி கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து 2 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டது. கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட கட்டை, கையுறை ஆகியவைகளும் கைப்பற்றப்பட்டது.இதையடுத்து கொலையாளிகள் 2 பேரையும் போலீசார் பொன்னமராவதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புதுக்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டனர்.இந்த இரட்டை கொலை வழக்கில் குற்றவாளிகளை கைது செய்த தனிப்படை அதிகாரிகள் மற்றும் போலீசாரை நேரடியாக வரவழைத்து போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே வெகுமதி வழங்கி பாராட்டு தெரிவித்தார். கொலை குற்றவாளிகளை கண்டுபிடித்த காவல்துறைக்கு வேந்தன்பட்டி பொதுமக்கள் நன்றி கூறினர்.

    • சிவகாசியில் சிவமுருகன் என்பவர் நடத்தும் உடற்பயிற்சி கூடத்துக்கு 3 பேர் வந்து அதிகாரிகள்போல் நடித்து பணம் கேட்டனர்.
    • அதிகாரிகள்போல் நடித்து உடற் பயிற்சி கூடங்களில் பணம் வசூல் செய்யப்பட்ட சம்பவம் சிவகாசி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    சிவகாசி:

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி பகுதியில் ஏராளமான உடற்பயிற்சி கூடங்கள் செயல்பட்டு வருகின்றன. அவைகளில் ஏராளமானோர் உறுப்பினர்களாக இருந்து உடற்பயிற்சி செய்து வருகின்றனர்.

    தனியார் உடற்பயிற்சி கூடங்களுக்கு கட்டணம் மூலம் அதிக வருமானம் வருவதால் அதிகாரிகள்போல் நடித்து ஒரு கும்பல் உடற்பயிற்சி கூடங்களில் அரசின் விதி முறைகள் சரியாக கடைபிடிக்கப்படவில்லை. எனவே உரிமத்தை ரத்து செய்து விடுவோம் என மிரட்டி பண வசூலில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

    சமீபத்தில் உடற்பயிற்சி கூடம் வைத்து நடத்தும் உரிமையாளர்களிடம் உரிமம் உள்ளதா? பயிற்சியாளர்கள் பயிற்சி அளிப்பதற்குண்டான சான்றிதழ் பெற்றுள்ளனரா? உடற் பயிற்சி எடுத்துக்கொள்ள வருபவர்களுக்கு சத்தான உணவு வகைகள் வழங்கப்படுகிறதா? முறையான கட்டணம் வசூலிக்கப்படுகிறதா? என்பது போன்ற கேள்விகளை எழுப்பி மோசடி கும்பல் அதிகாரிகள் போர்வையில் வசூல் வேட்டை நடத்தி உள்ளது.

    அந்த கும்பல் உடற்பயிற்சி கூடம் நடத்தும் உரிமையாளர்கள் முறையாக பதிலளிக்காவிட்டால் அபராதம் விதிக்கப்போவதாக மிரட்டி ஒவ்வொரு உடற்பயிற்சி கூடம் நடத்தும் உரிமையாளர்களிடம் இருந்தும் பணம் வசூலித்து, கடந்த 2 மாதத்தில் மட்டும் லட்சக்கணக்கில் பணம் வசூல் செய்துள்ளது.

    இந்த மோசடியில் ஈடுபட்ட பெண் உள்பட 3 பேர் மீது உடற்பயிற்சி கூட உரிமையாளர்களுக்கு சந்தேகம் எழுந்தது. இதற்கிடையே மோசடி நபர்களிடம் பணம் கொடுத்து ஏமாந்த சில உடற்பயிற்சி கூட உரிமையாளர்கள் மற்ற உடற்பயிற்சி கூட உரிமையாளர்களிடம் மோசடி கும்பல் குறித்து தெரிவித்தனர்.

    இதனால் மற்ற உடற்பயிற்சி கூட உரிமையாளர்கள் மோசடி கும்பல் வந்தால் அவர்களை பிடிக்க வேண்டும் என்று திட்டமிட்டனர். இந்த நிலையில் சிவகாசியில் சிவமுருகன் என்பவர் நடத்தும் உடற்பயிற்சி கூடத்துக்கு 3 பேர் வந்து அதிகாரிகள்போல் நடித்து பணம் கேட்டனர்.

    அவர்கள் மீது சந்தேகமடைந்த சிவமுருகன், சிவகாசி கிழக்கு போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் விரைந்து வந்த போலீசார் 3 பேரையும் போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர்கள் மதுரை திருவள்ளுவர் நகரைச்சேர்ந்த சாமி ராஜ் (வயது 30), தினமணி நகரை சேர்ந்த மார்க்கரெட் இன்சென்ட்ஜெனிபர் (28), வில்லாபுரத்தை சேர்ந்த ரங்கராஜ் (26) என்பது தெரியவந்தது.

    அவர்கள் அதிகாரிகள் போல் நடித்து உடற்பயிற்சி கூடங்களில் பணம் வசூலில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அதிகாரிகள்போல் நடித்து உடற் பயிற்சி கூடங்களில் பணம் வசூல் செய்யப்பட்ட சம்பவம் சிவகாசி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள பக்கிங்காம் அரண்மனையின் நுழைவு வாயிலில் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கி தோட்டாக்களை வீசினார்.
    • துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாகவோ, அதிகாரிகள் அல்லது பொதுமக்களுக்கு காயம் ஏற்பட்டதாகவோ எந்த புகாரும் இல்லை.

    லண்டன்:

    இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள பக்கிங்காம் அரண்மனையின் நுழைவு வாயிலில் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கி தோட்டாக்களை வீசினார்.

    அந்த தோட்டாக்கள் அரண்மனையின் மைதானத்தில் விழுந்தது. உடனே அந்த நபரை பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் கைது செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அப்பகுதியில் உள்ள சாலைகள் மூடப்பட்டன. தடுப்புகள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது.

    இச்சம்பவம் தொடர்பாக போலீஸ் தலைமை கண்காணிப்பாளர் ஜோசப் மெக் டொனால்ட் கூறும்போது, அரண்மனைக்குள் தோட்டாக்கள் வீசியது தொடர்பாக சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் சந்தேகத்திற்குரிய பை ஒன்று இருந்தது.

    அவர் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார். துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாகவோ, அதிகாரிகள் அல்லது பொதுமக்களுக்கு காயம் ஏற்பட்டதாகவோ எந்த புகாரும் இல்லை.

    இச்சம்பவத்தையடுத்து மூடப்பட்ட சாலைகள் சிறிது நேரத்துக்கு பிறகு திறக்கப்பட்டன என்றார்.

    இங்கிலாந்து மன்னர் சார்லஸ், ராணி கமீலாவின் முடிசூட்டு விழா வருகிற 6-ந்தேதி லண்டனில் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகிறது.

    இந்த நிலையில்தான் பக்கிங்காம் அரண்மனைக்குள் துப்பாக்கி தோட்டாக்கள் வீசப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் கடைகளில் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசியத்தகவல் கிடைத்தது.
    • போலீசார் அவர்களிடம் இருந்த குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரத்தில் உள்ள சிவகாஞ்சி பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் கடைகளில் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசியத்தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் சிவகாஞ்சி போலீசார் அப்பகுதியில் உள்ள கடைகளில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு விற்பனைக்காக குட்கா பொருட்கள் வைத்திருந்தது தெரியவந்தது.

    இதனையடுத்து ஏகாம்பரபுரம் தெருவைச்சேர்ந்த ஜெயபால் (வயது57), செங்கழுநீரோடை தெருவைச்சேர்ந்த முருகன் (51) ஆகிய 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும் போலீசார் அவர்களிடம் இருந்த குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.

    • மனைவியை கத்தியால் குத்தியவர் கைது செய்யப்பட்டார்.
    • கீரைத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து துரைப்பாண்டியை கைது செய்தனர்.

    மதுரை

    வில்லாபுரம் வேலு தெருவை சேர்ந்தவர் துரைப்பாண்டி (வயது 25). இவரை சந்திராதேவி (27) என்பவர், 2-வதாக திருமணம் செய்துள்ளார். துரைப்பாண்டிக்கு குடிப்பழக்கம் உண்டு. இதன் காரணமாக குடும்பத்தில் அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டது. சம்பவத்தன்று துரைப்பாண்டி குடிபோதையில் வீட்டுக்கு வந்தார். கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த துரைப்பாண்டி சந்திராதேவியை கத்தியால் குத்தி விட்டு தப்பினார். இதுகுறித்த புகாரின் பேரில் கீரைத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து துரைப்பாண்டியை கைது செய்தனர்.

    மதுரை கண்மாய் கரையைச் சேர்ந்தவர் ராஜா (39). சம்பவத்தன்று இரவு இவர் காந்திபுரம் சென்றார். அங்கு வந்த 5 பேர் கும்பல், அவரிடமிருந்து அரிவாள் முனையில் ரூ.550-ஐ பறித்து தப்பியது. இதுகுறித்த புகாரின் பேரில் புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து காந்திபுரம் ராமு மகன் பிரகாஷ் (23), பாஸ்கரன் மகன் பூனை மணிகண்டன் (19), மருதுபாண்டியர் தெரு முத்துப்பாண்டி மகன் சேது பாண்டி (18), சீர்காழி மகன் சிவகுருநாதன் (19), வீரகாளியம்மன் கோவில் தெரு கார்த்திக் (23) ஆகியோரை கைது செய்தனர்.

    • செலவுக்கு பணம் கொடுக்காததால் தம்பியை கத்தியால் குத்திய அண்ணன் கைதானார்.
    • பணம் கேட்டு தகராறு செய்து வந்தார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் காளிமுத்து நகரை சேர்ந்தவர் முருகவேல் (வயது 26). இவர் தனது தாயுடன் வசித்து வருகிறார். திருத்தங்கல் ஆலாவூரணி பகுதியைச் சேர்ந்தவர் வைரமுத்து (36), ஆட்டோ டிரைவர். முருகவேலின் சகோதரரான இவர் மனைவியை பிரிந்து தனியே வசித்து வருகிறார் .

    மதுப்பழக்கத்திற்கு அடிமையான இவர் அடிக்கடி தனது தாயிடம் பணம் கேட்டு தகராறு செய்து வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று தாய் மற்றும் சகோதரர் முருகவேலிடம் பணம் கேட்டு தகராறு செய்தார்.

    ஆனால் அவர்கள் தங்களிடம் பணம் இல்லை என கூறியுள்ளனர். இதில் ஆத்திரமடைந்த வைரமுத்து தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் முருகவேலை தாக்கிவிட்டு தப்பிச் சென்றார். இதில் காயமடைந்த முருகவேல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதுகுறித்து திருத்தங்கல் போலீஸ் நிலையத்தில் முருகவேல் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வைரமுத்துவை கைது செய்தனர்.

    ×