search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆன்லைன் மோசடி"

    • தொடர்ந்து வழங்கப்பட்ட ‘டாஸ்க்’ செய்து முடித்தவுடன் அடுத்தடுத்து ரூ.175, ரூ.225 வங்கி கணக்கில் பணம் வந்தது.
    • கிரெடிட் ஸ்கோர் குறைவாக இருப்பதால் ரூ.4 லட்சம் டெபாசிட் செய்தால் தான் பணத்தை எடுக்க முடியும் என தெரிவித்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை லாஸ்பேட்டையை சேர்ந்தவர் சசிதரன் (வயது 23). இவர் புதுவை அரசு மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ். 4-ம் ஆண்டு படித்து வருகிறார். இவரது வாட்ஸ்அப் எண்ணிற்கு கடந்த 3-ந்தேதி ஒரு குறுஞ்செய்தி வந்தது.

    அதில் 3 ஓட்டல்களுக்கு 'ரேட்டிங்' கொடுத்தால் ரூ.150 சம்பாதிக்கலாம் என்று ஒரு 'டாஸ்க்' வழங்கப்பட்டது.

    அதை செய்ததும் ரூ.150-ஐ பெறுவதற்கு டெலிகிராம் மூலமாக லிங்க் வந்தது. அந்த இணைப்பில் கேட்கப்பட்ட அனைத்து விவரங்களையும் சசிதரன் பதிவிட்டார். உடனே அவரின் வங்கி கணக்கில் ரூ.150 வரவு வைக்கப்பட்டது.

    அவருக்கு தொடர்ந்து வழங்கப்பட்ட 'டாஸ்க்' செய்து முடித்தவுடன் அடுத்தடுத்து ரூ.175, ரூ.225 வங்கி கணக்கில் பணம் வந்தது. மேலும் ரூ.ஆயிரம் டெபாசிட் செய்து ரூ.1,300 பெற்றிருக்கிறார். தொடர்ந்து ஆன்லைன் மற்றும் வங்கி கணக்கு மூலமாக 23 முறை ரூ.7 லட்சத்து 78 ஆயிரத்து 232 செலுத்தினார்.

    அதன்பின் அவரது வங்கி கணக்கில் ரூ.13 லட்சத்து 44 ஆயிரத்து 384 இருப்பு உள்ளதாக காட்டியது. அந்த தொகையை சசிதரனால் எடுக்க முடியவில்லை. அப்போது அவரின் வங்கி கணக்கு முடக்கப்பட்டு இருந்தது.

    இதுபற்றி கேட்டபோது கிரெடிட் ஸ்கோர் குறைவாக இருப்பதால் ரூ.4 லட்சம் டெபாசிட் செய்தால் தான் பணத்தை எடுக்க முடியும் என தெரிவித்தனர்.

    அதன் பின்னரே அவர்கள் பணம் மோசடி செய்திருப்பது சசிதரனுக்கு தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் மோசடி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    சைபர் கிரைம் போலீசார் கூறுகையில், 'ஆன்லைனில் யாரும் முதலீடு செய்ய வேண்டாம். புதுவையில் நாளுக்கு நாள் ஆன்லைனில் முதலீடு செய்து பலர் லட்சக்கணக்கில் பணத்தை இழக்கிறார்கள். இதில் படித்தவர்கள் தான் அதிக பேர் ஏமாறுகிறார்கள் என்பது வேதனைக்குரியது.

    ஆன்லைனில் முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம் தருகிறோம், கூடுதல் வட்டி தருகிறோம் என்று சொன்னால் பொதுமக்கள் நம்ப வேண்டாம்' எனக்கூறினர்.

    • அமித்சர்மா அனுப்பிய கியூ.ஆர்.கோடை பூர்ண சந்திரராவ் ஸ்கேன் செய்தார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபரை தேடிவருகிறார்கள்.

    பெங்களூரு :

    பெங்களூரு விஜயநகர் பகுதியில் வசித்து வருபவர் பூர்ண சந்திரராவ் (வயது 41). என்ஜினீயரான இவர், தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். பூர்ண சந்திரராவ் வீட்டில் ஒரு பழைய குளிர்பதன பெட்டி (பிரிட்ஜ்) இருந்தது. அதனை விற்று விட்டு புதிதாக வாங்க முடிவு செய்தார். இதையடுத்து, தனது வீட்டில் உள்ள அந்த குளிர்பதன பெட்டியை புகைப்படம் எடுத்து, அது விற்பனைக்கு இருப்பதாக கூறி ஆன்லைன் நிறுவனமான 'ஓ.எல்.எக்ஸ்.' என்ற இணையதளத்தில் விளம்பரம் செய்திருந்தார்.

    இந்த நிலையில், பூர்ண சந்திரராவை தொடர்பு கொண்டு ஒருநபர் பேசினார். அப்போது அவர் தனது பெயரை அமித் சர்மா என்று கூறிக் கொண்டார். மேலும் தான் ஒரு ராணுவ வீரர் என்றும், உங்களது குளிர்பதன பெட்டியை வாங்க தான் முடிவு செய்திருப்பதாகவும் பூர்ண சந்திரராவிடம் அமித் சர்மா கூறினார். இதனை அவரும் நம்பினார்.

    மேலும் ராணுவத்தில் பணியாற்றுபவர்கள் அதிக பணத்தை பரிமாற்றம் செய்ய முடியாது, தான் அனுப்பும் கியூ.ஆர்.கோடை ஸ்கேன் செய்து உங்களது வங்கி கணக்கு தகவல்களை தெரிவித்தால், அதன் மூலமாகவே பணம் அனுப்புவதாக கூறினார். இதையடுத்து, அமித்சர்மா அனுப்பிய கியூ.ஆர்.கோடை பூர்ண சந்திரராவ் ஸ்கேன் செய்தார்.

    அப்போது அவரது கணக்கில் இருந்த ரூ.99 ஆயிரத்தையும் எடுத்து மர்மநபர் மோசடி செய்து விட்டார். இதனால் பூர்ண சந்திரராவ் அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி மேற்கு மண்டல சைபர் கிரைம் போலீசில் அவர் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபரை தேடிவருகிறார்கள்.

    • புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • ஆன்லைன் மூலம் தொடரும் பணமோசடி குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட மக்களிடையே அதிக அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியை அடுத்த மூக்கம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் தமிழரசன் (வயது35). இவர் தனியார் பள்ளி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது செல்போனுக்கு டெலிகிராமில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்ம நபர் குறுத்தகவல் அனுப்பி இருந்தார்.

    அதில் பகுதிநேர வேலை இருப்பதாகவும், இதில் குறைந்த அளவில் பணம் முதலீடு செய்தால், அதிக கமிஷன் பணம் தருவதாக வந்தது.

    இதனை நம்பிய தமிழரசன் மர்ம நபர் அனுப்பிய வங்கி கணக்கில் ரூ.5 லட்சத்து 89 ஆயிரம் செலுத்தினார். இதைத்தொடர்ந்து அந்த நபரை தொடர்பு கொண்டு வேலை தருமாறு கேட்டார்.

    ஆனால், அந்த மர்ம நபரை சமூக வலைத்தளத்தில் இருந்து காணாமல் போய்விட்டார். அவரது செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டபோது அந்த எண் சுவிட்ச் ஆப் என்று வந்தது. இதனால் தமிழரசன் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்தார்.

    இதுகுறித்து அவர் கிருஷ்ணகிரி மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் பிரிவில் புகார் அளித்தார். புகாரின்பேரில் சைபர்கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் காந்திமதி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஓசூரில் உள்ள கே.சி.சி. நகரைச் சேர்ந்த ஸ்ரீக் (22) என்பவர் பெங்களூருவில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

    இவரது செல்போன் வாட்ஸ் அப்பில் கடந்த சிலநாட்களுக்கு முன்பு வந்த குறுத்தகவலை நம்பி அதிக கமிஷனுக்கு மர்ம நபர் கூறிய வங்கி கணக்கில் ரூ.5 லட்சத்து 95 ஆயிரத்தை செலுத்தியுள்ளார்.

    அதன்பின்பு அந்த நபரின் செல்போன் எண்ணை அவர் தொடர்பு கொண்டபோது சுவிட்ச் ஆப் என்று வந்தது.

    இதேபோன்று பெத்தமேலுபள்ளி அண்ணாநகரைச் சேர்ந்த சவீன் என்பவர் தனது செல்போனில் வந்த மெசேஜை நம்பி மர்ம நபரின் வங்கி கணக்கில் ரூ.14லட்சத்து 24 ஆயிரத்தை செலுத்தியுள்ளார். அதன்பிறகு அந்த நபர் தனது செல்போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டார்.

    இந்த தொடர் மோசடிகளை குறித்து ஸ்ரீக் மற்றும் சவீன் ஆகியோர் மாவட்ட சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் தெரிவித்தனர். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆன்லைன் மூலம் தொடரும் பணமோசடி குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட மக்களிடையே அதிக அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • போனில் பேசிய நபர் மாணவியின் ஆண் நண்பரை போலவே குரலை மாற்றி பேசி ஏமாற்றி இருப்பது விசாரணையில் தெரிய வந்தது.
    • மாணவிக்கு தெரிந்த நபர்கள் யாரும் இதுபோன்று பேசி ஏமாற்றினார்களா? என்பது பற்றியும் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    சென்னை:

    சென்னை ஐ.ஐ.டி.யில் படித்து வரும் மாணவி ஒருவருக்கு நேற்று செல்போன் அழைப்பு வந்தது. போனில் பேசிய நபர் மாணவியின் ஆண் நண்பர் போலவே பேசினார்.

    அப்போது அவர் தனக்கு அவசரமாக மருத்துவ செலவுக்கு பணம் தேவைப்படுவதாகவும், உடனடியாக ரூ. 50 ஆயிரம் பணம் அனுப்பமுடியுமா? என்றும் கேட்டுள்ளார்.

    இதை உண்மை என்று நம்பிய மாணவி ஆண் நண்பர் கூறிய எண்ணுக்கு 50 ஆயிரம் ரூபாயை அனுப்பி வைத்துள்ளார். பின்னர் இது தொடர்பாக தனது நண்பரை தொடர்பு கொண்டு மாணவி கேட்டபோதுதான் மோசடி நபர் ஏமாற்றி இருப்பது தெரிய வந்தது.

    போனில் பேசிய நபர் மாணவியின் ஆண் நண்பரை போலவே குரலை மாற்றி பேசி ஏமாற்றி இருப்பது விசாரணையில் தெரிய வந்தது. இது தொடர்பாக மாணவி அளித்த புகாரின் பேரில் கோட்டூர்புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மோசடி நபர் தொழில்நுட்ப ரீதியாக மாணவியின் ஆண் நண்பரின் குரலை தெரிந்து கொண்டு வெளி மாநிலத்தில் இருந்து ஏமாற்றினாரா? என்பது பற்றி விசாரணை நடைபெற்று வருகிறது.

    அதே நேரத்தில் மாணவிக்கு தெரிந்த நபர்கள் யாரும் இதுபோன்று பேசி ஏமாற்றினார்களா? என்பது பற்றியும் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    • தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப, மோசடிகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.
    • உங்கள் செல்போனுக்கு வந்த ஓ.டி.பி., கூறுமாறு கேட்டு மோசடியில் ஈடுபடுகின்றனர்.

    பல்லடம் :

    பல்லடம் துணை போலீஸ் சூப்பிரண்டு சவுமியா கூறியதாவது :- தற்போது தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப, மோசடிகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இது குறித்து பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். ஆன்லைன் மோசடி நபர்கள் பல்வேறு வழிகளை கையாண்டு பொதுமக்களை ஏமாற்றுகின்றனர். உதாரணமாக ஆன்லைனில் நீங்கள் ஆர்டர் செய்யாத உணவுகள் உங்களுக்கு வந்திருப்பதாக கூறி, அதை திருப்பி அனுப்ப உங்கள் செல்போனுக்கு வந்த ஓ.டி.பி., கூறுமாறு கேட்டு மோசடியில் ஈடுபடுகின்றனர்.மேலும் கூரியர் அலுவலகத்தில் இருந்து பேசுவதாக கூறி, நீங்கள் அனுப்பிய பார்சலில் சட்டவிரோத பொருள் உள்ளது. தடையின்மை சான்று பெற பணம் கட்டவும் என்று சொல்லி மோசடியில் ஈடுபடுகின்றனர். மேலும் ஆன்லைன் ஷாப்பிங் ஆப்களை மிக கவனமாக கையாள வேண்டும். ஏ.டி.எம்.,.மற்றும் கிரெடிட் கார்டு விபரங்களை எந்த வங்கியும் தொலைபேசி வாயிலாக கேட்பதில்லை.

    வங்கி கணக்கு சம்பந்தமான தகவல்களை யாரிடமும் பகிராமல் இருப்பது நல்லது. லோன் ஆப் வாயிலாக குறைந்த வட்டிக்கு உடனடியாக பணம் பெறலாம் என விளம்பரப்படுத்தி உங்களது அனைத்து தனிப்பட்ட விபரங்களையும் பெற்று சமூக வலைதளங்களில் தவறாக சித்தரித்து வெளியிடுவதாக மிரட்டக் கூடும்.இது போன்ற அழைப்புகள் வந்தால், நேரில் வருவதாக கூறி உடனடியாக போலீஸ் உதவியை பொதுமக்கள் நாட வேண்டும். மேலும் அங்கீகாரம் இல்லாத லோன் ஆப்களில் கடன் பெறுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.உங்கள் மொபைல் போனில் உள்ள ப்ளூடூத்தை நீங்கள் ஆப் செய்யாமல் இருக்கும்போது, அதை சைபர் கிரைம் குற்றவாளிகள், உங்கள் மொபைல் போனில் உள்ள தகவல் மற்றும் டேட்டாக்களை திருடுகின்றனர்.எனவே தேவையற்ற நேரங்களில் ப்ளூடூத் ஆப் செய்து வைத்தல் நல்லது. பொது இடங்களில் கிடைக்கும் இலவச 'வைபை' வசதியை நீங்கள் பயன்படுத்தும் போது, உங்களுக்கு தெரியாமல், உங்களது மொபைல் போனில் உள்ள வங்கி சம்பந்தமான தகவல்களை இணைய வழியாக திருடர்கள் திருட வாய்ப்பு உள்ளது.

    சமூக வலைதளங்களில் போலியான கணக்குகளை தொடங்கி அதன் வாயிலாக நட்பு அழைப்புகளை அனுப்பி பேசி பழகி ஏமாற்றும் நபர்களிடம், எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். முகம் தெரியாத நபர்களிடம் சமூக வலைதள நட்பு வைக்க வேண்டாம்.எனவே பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருந்து டிஜிட்டல் மோசடிகளில் சிக்காமல் இருக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

    • தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப, ஆன்லைன் மோசடிகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.
    • கூரியர் அலுவலகத்தில் இருந்து பேசுவதாக கூறி, தங்கள் அனுப்பிய பார்சலில் சட்டவிரோத பொருள் உள்ளது.

    திருப்பூர்:

    தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப, ஆன்லைன் மோசடிகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இது குறித்து பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என போலீசார் அறிவுரை கூறி வருகின்றனர்.மோசடி நபர்கள் பல்வேறு யுக்திகளை கையாண்டு ஏமாற்றும் செயலில் ஈடுபடுகின்றனர். இது குறித்து போலீசார் கூறியதாவது:-

    கூரியர் அலுவலகத்தில் இருந்து பேசுவதாக கூறி, தங்கள் அனுப்பிய பார்சலில் சட்டவிரோத பொருள் உள்ளது.தடையின்மை சான்று பெற பணம் கட்டவும் என்று சொல்லி மோசடியில் ஈடுபடலாம். நேரில் வருவதாக கூறி, போலீஸ் உதவியை உடனடியாக பொதுமக்கள் நாட வேண்டும்.

    தங்கள் துறை சார்ந்த உயர் அதிகாரி போல் சமூக வலைதளங்களில் தங்களை தொடர்பு கொண்டு, தான் அவசர வேலையாக இருப்பதாக கூறி, கிப்ட் கார்டுவாங்கி அனுப்புமாறு கேட்டு மோசடியில் ஈடுபடலாம்.ஆன்லைனில் ஆர்டர் செய்யாத உணவுகள் தங்களுக்கு வந்திருப்பதாக கூறிஅதை திருப்பி அனுப்ப தங்கள் மொபைல்போனுக்கு வந்த ஓ.டி.பி., கூறுமாறு கேட்டு மோசடியில் ஈடுபடும் நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.பே லேட்டர் வசதியை பயன்படுத்தி ஆன்லைனில் தங்களது கணக்கில் மற்ற நபர்கள் பொருட்களை வாங்கிவிட்டு அந்த நிறுவனத்தால் பணம் கேட்டு தங்களுக்கு அறிக்கை வரலாம். ஆன்லைன் ஷாப்பிங் ஆப்களை மிக கவனமாக கையாள வேண்டும்.ஏ.டி.எம்., மற்றும் கிரெடிட் கார்டு விபரங்களை எந்த வங்கியும் தொலைபேசி வாயிலாக கேட்பதில்லை. வங்கி கணக்கு சம்பந்தமான தகவல்களை யாரிடமும் பகிராமல் இருப்பது நல்லது.லோன் ஆப் வாயிலாக குறைந்த வட்டிக்கு உடனடியாக பணம் பெறலாம் என விளம்பரப்படுத்தி உங்களது அனைத்து தனிப்பட்ட விபரங்களையும் பெற்று சமூக வலைதளங்களில் தவறாக சித்தரித்து வெளியிடுவதாக மிரட்டக் கூடும்.

    அங்கீகாரம் இல்லாத லோன் ஆப்களில் கடன் பெறுவதை தவிர்க்க வேண்டும்.உங்கள் மொபைல் போனில் உள்ள ப்ளூடூத்தை நீங்கள் ஆப் செய்யாமல் இருக்கும்போது, அதை குற்றவாளிகள், அவர்களுக்கு சாதமாக பயன்படுத்தி, உங்கள் மொபைல் போனில் உள்ள தகவல் மற்றும் போட்டோக்களை திருடுகின்றனர். தேவையற்ற நேரங்களில் ப்ளூடூத் ஆப் செய்து வைத்தல் நல்லது. பொது இடங்களில் கிடைக்கும் இலவச 'வைபை' வசதியை நீங்கள் பயன்படுத்தும் போது, உங்களுக்கு தெரியாமல், உங்களது மொபைல் போனில் உள்ள வங்கி சம்பந்தமான தகவல்களை இணைய வழியாக திருடர்கள் திருட வாய்ப்பு உள்ளது. சமூக வலைதளங்களில் போலியான கணக்குகளை தொடங்கி அதன் வாயிலாக நட்பு அழைப்புகளை அனுப்பி பேசி பழகி ஏமாற்றும் நபர்களிடம், எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். முகம் தெரியாத நட்பு வேண்டாம்.இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

    சைபர் குற்றங்களில் பொதுமக்கள் சிக்கி பணத்தை இழந்தால் உடனடியாக 1930 என்ற இலவச எண்ணை அழைத்து, தங்களது புகாரை பதிவு செய்யவும். கால தாமதம் இன்றி பதிவு செய்யப்படும் புகார் மீதான நடவடிக்கை விரைவானதாக இருக்கும் என்றனர்.

    சென்னை ஐ.டி. எ.எஸ்., துணை பாதுகாப்பு கணக்குகள் கட்டுப்பாட்டாளர் தனசேகர் கூறியதாவது:-

    ஸ்பார்ஸ் என்பது தேசிய அளவில் முப்படையின் கீழ் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களுக்கு சிக்கல்கள் இன்றிஒற்றை சாளரமுறையில் ஓய்வூதியம்செல்வதற்கு உருவாக்கப்பட்ட டிஜிட்டல் தளம்.இதில் 35 லட்சம் ஓய்வூதியதாரர்களில் 12 முதல் 13 லட்சம் பேரை தவிர்த்து மற்றவர்கள் அனைவரும் இணைக்கப்பட்டுள்ளனர்.மீதமுள்ளவர்களையும் இணைக்கும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.ஓய்வூதியதாரர்கள் அனைவரும் தங்கள் நாமினியுடன் தற்போதேஇருவரும் இணைந்த வங்கிக்கணக்கு துவக்கிக்கொள்ள வேண்டும்.

    தற்போது அனைத்தும் டிஜிட்டல்மயம் ஆகியுள்ளதால், அதில் நடக்கும் மோசடிகளில் சிக்காமல் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும்.ஓ.டி.பி., தகவலை, எக்காரணம் கொண்டும் செல்போன் வாயிலாக ஒருவருக்கும் தெரிவிக்கக்கூடாது. செல்போன் வாயிலாக ஒரு போதும் தரக்கூடாது என்றார்.

    • சவிதா கடவுச் சொல் பதிவிட்ட அடுத்த தருணத்தில் தொலைபேசியின் கட்டுப்பாட்டை அவர் இழந்தார்.
    • சரியான நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், பலர் அதற்கு இரையாகக்கூடும் என்றார்.

    தென் மேற்கு டெல்லியை சேர்ந்த 40 வயது மதிக்கத்தக்க பெண் சவிதா சர்மா. இவர் வங்கியில் மூத்த நிர்வாகியா பணிபுரிந்து வருகிறார்.

    கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 27ம் தேதி அன்று சவிதா பேஸ்புக் பக்கம் மூலம் ஒரு தாலி (உணவுத் தட்டு) வாங்கினால் மற்றொன்று இலவசம் என்ற சலுகையால் ஈர்க்கப்பட்டார். இந்த சலுகை பற்றி அறிந்துக் கொள்வதற்காக அதில் கொடுக்கப்பட்டிருந்த எண்ணை தொடர்புக் கொண்டார்.

    ஆனால் அவர்கள் போன் எடுக்கவில்லை. என்றாலும் சில மணி நேரத்திற்கு பிறகு சவிதாவிற்கு அழைப்பு வந்துள்ளது. சாகர் ரத்னா என்கிற பிரபல உணவகத்தில் இருந்து இலவச உணவுத் தட்டு பெற்றுக் கொள்ளலாம் என்றும் இந்த சலுகையை பெற லிங்க் உள்ளே நுழைந்து பதிவு செய்யவும் கூறியுள்ளனர். 

    அதன்படி சவிதா கடவுச் சொல் பதிவிட்ட அடுத்த தருணத்தில் தொலைபேசியின் கட்டுப்பாட்டை அவர் இழந்தார். செல்போன் ஹேக் செய்யப்பட்டு அவரது கணக்கில் இருந்து முதலில் ரூ.40 ஆயிரமும், இன்னும் சில வினாடிகளில் மீண்டும் ரூ.50 ஆயிரம் எடுத்ததாக குறுச்செய்தி வந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பெண் உடனடியாக தனது கிரெடிட் கார்டு பயன்பாட்டை புகார் மூலம் ரத்து செய்துள்ளார்.

    இதையடுத்து மே 2ம் தேதி அன்று, சவிதா சர்மா இதுகுறித்து போலீசில் புகார் தெரிவித்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதுபோன்ற மோசடி சலுகைகளின் வலை இணைப்புகள் வாட்ஸ்அப் மூலம் இன்னும் மக்களிடையே பரவி வருவதாகவும், சரியான நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், பலர் அதற்கு இரையாகக்கூடும் என்றும் சர்மா கூறியுள்ளார்.

    • பூங்கோதையின் வாட்ஸ் அப்பிற்கு கடந்த 13-ந் தேதி மர்ம நபர் ஒருவர் குறுஞ்செய்தியை ஒன்று அனுப்பினார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து பூங்கோதைக்கு வந்த செல்போன் எண்ணை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரியில் உள்ள கோவிந்த செட்டி தெருவைச் சேர்ந்தவர் சிவயோகி. இவரது மனைவி பூங்கோதை (வயது38). சிவயோகி கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இதன் காரணமாக பூங்கோதை காவேரிபட்டணத்தில் தனியாக வசித்து வருகிறார். இந்த நிலையில் அவர் 2-வது திருமணம் செய்து கொள்வதற்காக தனியார் திருமணம் தகவல் மையத்தில் பதிவு செய்து வைத்திருந்தார்.

    இந்த நிலையில் பூங்கோதையின் வாட்ஸ் அப்பிற்கு கடந்த 13-ந் தேதி மர்ம நபர் ஒருவர் குறுஞ்செய்தியை ஒன்று அனுப்பினார். அதில் அவர் தான் துபாயில் வேலை செய்வதாகவும், பூங்கோதையை 2-வது திருமணம் செய்து கொள்ள தயார் என்று அனுப்பி வைத்தார். மேலும் தான் தற்போது துபாயில் இருந்து இந்தியாவிற்கு வந்துள்ளதாகவும், டெல்லி விமான நிலையத்தில் தன்னை பரிசோதித்த சுங்க துறை அதிகாரிகள் தன்னிடம் உள்ள வெளிநாட்டு பணத்திற்கு அபராதம் விதித்துள்ளனர் என்றும் கூறியுள்ளார். இதனை நம்பிய பூங்கோதை மர்ம நபர் அனுப்பிய வங்கி கணக்கில் ரூ.17 லட்சத்து 500-யை அனுப்பியுள்ளார். அதன்பிறகு அந்த மர்ம நபரை அவர் தொடர்பு கொண்டபோது செல்போன் சுவிட்ச் ஆப் என்று வந்தது. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை பூங்கோதை அறிந்து கொண்டார்.

    இதுகுறித்து அவர் கிருஷ்ணகிரி மாவட்ட சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பூங்கோதைக்கு வந்த செல்போன் எண்ணை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • புதுவை சைபர் கிரைம் போலீசார் சென்னை ஓரகடம் பகுதிக்கு சென்று அசாமுதீன் அன்சாரி, மகேஷ்குமார் 2 பேரையும் கைது செய்தனர்.
    • ஜார்க்கண்டில் இணையதளம் வழியாக பணம் திருட தனி குழுக்கள் செயல்பட்டு வருகின்றன.

    புதுச்சேரி:

    புதுவை துத்திப்பட்டு பகுதி கடப்பேரிகுப்பத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணசர்மா (39). ஜிப்மர் காவலாளி. இவர் கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஆன்லைன் செயலி மூலம் வீட்டுக்கான பொருள் வாங்க முயற்சித்தார். ஆனால் பொருள் அவருக்கு கிடைக்கவில்லை.

    இதுகுறித்து விசாரிக்க வாடிக்கையாளர் சேவை பிரிவை இணையத்தில் தேடினார். அப்போது குறிப்பிட்ட செல்போன் எண் கிடைத்துள்ளது. அதில் பேசிய மர்மநபர், கிருஷ்ணசர்மாவின் விவரங்களை குறிப்பிட்ட செயலியில் பதிவிடும்படி கூறியுள்ளார்.

    அதன்படி கிருஷ்ணசர்மா பதிவு செய்தார். அப்போது அவரது வங்கிக் கணக்கிலிருந்து ரூ.1 ¾ லட்சம் மர்மநபர்களால் அபகரிக்கப்பட்டது.

    இதுகுறித்து புதுவை சைபர் கிரைம் போலீசில் கிருஷ்ணசர்மா புகார் அளித்தார். விசாரணையில் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த அசாமுதீன் அன்சாரி (30), மகேஷ்குமார் (28) ஆகியோர் வங்கிக் கணக்கில் கிருஷ்ண சர்மாவின் பணம் செலுத்தப்பட்டது தெரிய வந்தது.

    தொடர் விசாரணையில் அசாமுதீன் அன்சாரி, மகேஷ்குமார் இருவரும் சென்னை ஓரகடத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தது தெரிந்தது.

    இதையடுத்து புதுவை சைபர் கிரைம் போலீசார் சென்னை ஓரகடம் பகுதிக்கு சென்று அசாமுதீன் அன்சாரி, மகேஷ்குமார் 2 பேரையும் கைது செய்தனர்.

    அவர்களிடமிருந்து 3 ஏ.டி.எம் கார்டுகள், 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவர்கள் தங்களது வங்கி கணக்கை தங்களது சொந்த மாநிலமான ஜார்க்கண்டில் உள்ள ஒரு நபரிடம் அளித்துள்ளதாகவும், அதற்காக தங்களுக்கு கமிஷன் கிடைக்கும் என்றும், ஆகவே பணம் தங்களது வங்கிக்கணக்குக்கு எப்படி பரிமாற்றப்படுகிறது என தெரியாது என்றும் கூறியுள்ளனர்.

    கைதான 2 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

    கைது செய்யப்பட்ட இருவரிடம் நடத்திய விசாரணையில், பல திடுக்கிடும் தகவல் கிடைத்தது. ஜார்க்கண்டில் இணையதளம் வழியாக பணம் திருட தனி குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. அந்த குழுவினர் வடமாநிலத்தில் இருந்து தமிழகத்தில் தங்கி வேலை செய்யும் நபர்களின் வங்கி கணக்குகளை வாங்கி கொள்கின்றனர்.

    'ஆன்லைன்' மூலம் திருடப்படும் பணத்தை தமிழகத்தில் தங்கி வேலை செய்யும் நபர்களின் வங்கி கணக்கில் செலுத்துகின்றனர். ஒரு குறிப்பிட்ட தொகையை வங்கி கணக்கு வைத்திருப்பவருக்கு கமிஷனாக கொடுத்து விட்டு, மீதி தொகையை மோசடி கும்பல் பெற்றுக் கொள்கிறது.

    இதனால், மோசடி கும்பலை கைது செய்ய புதுவை சைபர் கிரைம் போலீசார் ஜார்கண்ட் செல்ல திட்டமிட்டுள்ளனர்.

    • வீட்டில் இருந்த நகையை அடகு வைத்து ஏமாந்த அவலம்
    • பொதுமக்கள் எந்த காரணத்தை கொண்டும் ஏமாற வேண்டாம் என போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

    வேலூர்:

    வேலூரை சேர்ந்த வாலிபர் ஒருவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய செல்போனுக்கு வீட்டிலிருந்தே வேலை தருவதாக கூறி ஆன்லைனில் விளம்பரம் வந்தது.

    அதனை வாலிபர் பின் தொடர்ந்தார். அப்போது மர்ம நபர்கள் செல்போனுக்கு ஒரே லிங்க் அனுப்பினர்.

    அதில் அதிக பொருட்கள் மற்றும் ஓட்டல்களை காட்டி இதில் முதலீடு செய்தால் இரட்டிப்பாக பணம் கிடைக்கும் என தெரிவித்தனர். முதலில் 100 ரூபாய் 150 ரூபாய் என வாலிபர் அந்த லிங்கில் முதலீடு செய்தார்.

    அதில் அவருக்கு இரண்டு முதல் 3 மடங்கு லாபம் கிடைத்ததாக கணக்கு காட்டியது.

    அதிக பணம் கிடைக்கும் என்று ஆசையில் தொடர்ந்து வாலிபர் தன்னிடம் இருந்த பணத்தை எல்லாம் ஆன்லைனில் முதலீடு செய்து கொண்டே இருந்தார். ஒரு கட்டத்தில் அவரிடம் இருந்த பணம் தீர்ந்து போனது.

    இதனால் வீட்டில் இருந்த நகைகளை அடகு வைத்து பணத்தை கொண்டு வந்து ஆன்லைனில் முதலீடு செய்தார். மேலும் வங்கியில் கடன் வாங்கியும் அவர் பணம் கட்டியுள்ளார். ரூ.32 லட்சம் வரை வாலிபர் பணத்தை கட்டிய பிறகு அதனை எடுக்க முயன்றார்.

    ஆனால் முடியவில்லை. ஆன்லைன் முதலீடுகளை முழுவதாக முடித்தால்தான் பணத்தை எடுக்க முடியும் என அதில் தெரிவித்தனர்.

    அப்போதுதான் வாலிபர் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்தார். இது குறித்து வேலூர் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் அபர்ணா மற்றும் போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆன்லைன் மோசடிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதில் வரும் வங்கி கணக்குகளில் பணத்தை செலுத்தி பொதுமக்கள் எந்த காரணத்தை கொண்டும் ஏமாற வேண்டாம் என போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

    • பல்வேறு தவணைகளாக அந்த வங்கி கணக்கிற்கு ரூ.8 லட்சத்து 87 ஆயிரம் அனுப்பினார்.
    • செலுத்திய தொகைக்கான லாபத்தொகையோ அல்லது செலுத்திய பணத்தையோ திருப்பி கொடுக்கவில்லை.

    கோவை:

    கோவை கள்ளிமடையை சேர்ந்தவர் பிரியங்கா (வயது 30). இவருடைய செல்போனுக்கு டெலிகிராமில் இருந்து ஒரு குறுஞ்செய்தி ஒன்று வந்தது. அதில் ஆன்லைனில் பகுதி நேர வேலை செய்தால் நல்ல ஊதியம் கிடைக்கும் எனவும், அதில் உள்ள லிங்கை அழுத்தவும் என்று கூறப்பட்டு இருந்தது.

    உடனே அவர் அந்த லிங்கை அழுத்தி உள்ளே சென்றார். பின்னர் சிறிது நேரத்தில் அவரது செல்போனுக்கு ஒருவர் தொடர்பு கொண்டு பேசியதுடன், டெலிகிராமில் குரூப் தொடங்கப்பட்டு உள்ளது, அதில் உங்கள் எண்ணையும் இணைத்து உள்ளோம். உங்களுக்கு ஆன்லைனில் நல்ல வேலை இருக்கிறது. உங்களுக்கு கொடுக்கப்படும் வேலை தொடர்பாக அந்த குரூப்பிலேயே தகவல் அனுப்பி வைக்கப்படும் என்றனர்.

    மேலும் அதை வைத்து நீங்கள் வேலை செய்தால் அதிகளவில் பணம் சம்பாதிக்கலாம் என்றும், அதற்காக நீங்கள் அவ்வப்போது பணமும் செலுத்த வேண்டும் என்றும் கூறி இருந்தது. இதனை நம்பிய அவர் பல்வேறு தவணைகளாக அந்த வங்கி கணக்கிற்கு ரூ.8 லட்சத்து 87 ஆயிரம் அனுப்பினார். ஆனால் அவர்கள் கூறியபடி அவருக்கு செலுத்திய தொகைக்கான லாபத்தொகையோ அல்லது செலுத்திய பணத்தையோ திருப்பி கொடுக்கவில்லை.

    இதுகுறித்து அந்த குழுவில் அவர் கேட்டபோது, மேலும் அதிக பணம் அனுப்புமாறு கூறியுள்ளது. அப்போதுதான் அவருக்கு அந்த நிறுவனம் போலி என்பதும், தனக்கு ஆன்லைனில் தகுந்த வேலை கொடுப்பதாக கூறி நூதன முறையில் பணம் பெற்று ஏமாற்றியதும் தெரியவந்தது. இது தொடர்பாக பிரியங்கா, கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கடந்த 2மாதங்களில் 8 பேர் ஆன்லைன் மோசடியில் பணத்தை இழந்துள்ளனர்.
    • வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் லிங்கில் வரும் விளம்பரத்தை நம்பி முதலீடு செய்யாதீர்கள்.

    புதுச்சேரி:

    புதுவையில் சமீபகாலமாக ஆன்லைன் மோசடிகள் அதிகளவில் நடந்து வருகிறது.

    பகுதிநேர வேலை, சினிமா விமர்சனம், பணம் இரட்டிப்பு என பலவிதமான மோசடிகள் அரங்கேறி வருகிறது. இதில் பணத்தை இழந்தவர்கள் பெரும்பாலனவர்கள் வெளியில் சொல்வதில்லை. அதேநேரத்தில் சைபர் கிரைம் போலீசார் பண மோசடி குறித்து வெளிப்படையாக புகார் தெரிவிக்க வரும்படி அழைப்பு விடுக்கின்றனர்.

    மோசடிகளை கண்டறிய நவீன மென்பொருட்கள் தங்களிடம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில் கடந்த 2மாதங்களில் 8 பேர் ஆன்லைன் மோசடியில் பணத்தை இழந்துள்ளனர். ஒட்டுமொத்தமாக ரூ.2 கோடி அளவில் பணத்தை இழந்துள்ளது தெரியவந்துள்ளது.

    இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரு சில மோசடி நபரை கைது செய்துள்ளனர்.

    வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் லிங்கில் வரும் விளம்பரத்தை நம்பி முதலீடு செய்யாதீர்கள். இல்லாவிட்டால் அதிக பணத்தை இழக்க நேரிடும் என சைபர் கிரைம் சீனியர் எஸ்.பி. விஷ்ணு, இன்ஸ்பெக்டர்கள் கீர்த்தி, கார்த்திகேயன் ஆகியோர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    ×