search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வயநாடு"

    • வயநாட்டில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.
    • இந்தப் பகுதிகள் சேறும், சகதியுமாகவும், இடிபாடுகள் நிறைந்தும் காணப்படுகிறது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் வயநாட்டில் பெய்த அதி கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

    வயநாட்டில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடந்துவருகின்றன. இந்த பகுதிகள் முற்றிலும் சேறும், சகதியுமாகவும், இடிபாடுகள் நிறைந்ததாகவும் காணப்படுகிறது.

    இந்நிலையில், கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் இன்று செய்தியாளளைச் சந்தித்தார். அப்போது வயநாடு நிலச்சரிவு பாதிப்பு குறித்து அவர் கூறியதாவது:

    கேரளாவில் முழு வீச்சில் மீட்புப் பணிகள், நிவாரணப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    உணவுப்பொருட்களை கொண்டு செல்ல கடற்படையின் உதவி கோரப்பட்டுள்ளது.


    கடலோர காவல் படையினர் உள்பட 1,257 பேர் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

    தடயவியல் நிபுணர்களின் உதவியுடன் பிரேத பரிசோதனை வேகமாக நடைபெறுகிறது.

    நிலச்சரிவில் சிக்கி 5,500-க்கும் மேற்பட்டோர் இதுவரை மீட்கப்பட்டுள்ளனர்.

    நிலச்சரிவில் சிக்கி 191 பேர் மாயமாகி உள்ளனர். மீட்கப்பட்ட 144 சடலங்களில் 76 ஆண்கள் மற்றும் 64 பெண்களும் உள்ளனர்.

    மீட்கப்பட்ட சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வருகிறது.

    வயநாட்டில் உள்ள 82 நிவாரண முகாம்களில் 19 கர்ப்பிணி பெண்கள் உட்பட 8,017 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் கடந்த 48 மணி நேரத்தில் 572 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.

    நிலச்சரிவு ஏற்பட்ட 30-ம் தேதி மாலைதான் ரெட் அலர்ட் எச்சரிக்கை கொடுக்கப்பட்டது.

    வயநாடு நிலச்சரிவு பேரிடர் நிவாரணப் பணிகளுக்காக கேரள மாநில அமைச்சர்களின் ஒரு மாத சம்பளம் முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு வழங்கப்படுகிறது.

    வயநாடு நிலச்சரிவு சம்பவம் தொடர்பாக நாளை அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற உள்ளது என தெரிவித்தார்.

    • வயநாடு நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 200 ஆக உயர்ந்துள்ளது.
    • கேரளாவிற்கு சிறப்பு நிவாரண தொகுப்பு வழங்க வேண்டும் என்றார்.

    புதுடெல்லி:

    கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 200 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 200-க்கு மேற்பட்டோரை காணவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

    பலர் மாயமான நிலையில், பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.

    இந்நிலையில், பாராளுமன்றத்தின் மாநிலங்களவையில் அ.தி.மு.க.வின் தம்பிதுரை வயநாடு நிலச்சரிவு குறித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:


    பாதிக்கப்பட்டவர்களுக்கு அ.தி.மு.க. சார்பில் எங்களது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

    மீட்புப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பதை மத்திய அரசு ஏற்கனவே இந்த அவையில் கூறி இருக்கிறது.

    ஆனால், எங்களது கோரிக்கை மறு சீரமைப்புகளுக்கான தொகையினையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்பதுதான்.

    இதை தேசிய பேரிடராக அறிவிப்பதோடு, சிறப்பு நிவாரண தொகுப்பும் கேரளாவிற்கு வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.

    • வயநாட்டிற்கு தமிழகம் சார்பாக உதவி.
    • முதலமைச்சர் நிவாரண நிதியில் இருந்து ரூ.5 கோடி அளிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    கொளத்தூரில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பிறகு நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    வயநாடு நிலச்சரிவு சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு சார்பாக அனைத்து உதவிகளையும் செய்வதாக சொல்லி உள்ளோம். இதற்காக 2 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கொண்ட குழுவை அனுப்பி உள்ளோம். அது மட்டுமின்றி தமிழக அரசு சார்பில் முதலமைச்சர் நிவாரண நிதியில் இருந்து ரூ.5 கோடியை அனுப்பி வைத்துள்ளோம். இன்னும் தேவைப்பட்டால் உதவி செய்வதாக கூறி உள்ளோம்.

    கேள்வி:- பாராளுமன்றத்தில் ராகுல்காந்தி மீது ஜாதி ரீதியான தாக்குதல்கள் செய்யப்பட்டுள்ளது?

    பதில்:- இது கேட்க வேண்டிய கேள்வியே இல்லை.

    கேள்வி:- கவர்னர் ஆர்.என்.ரவி பதவி காலம் முடிகிறதே. அவரது பதவி நீட்டிக்கப்படும் என தெரிகிறதே?

    பதில்:- நான் ஜனாதிபதியும் அல்ல, பிரதமரும் அல்ல இவ்வாறு கூறி விட்டு அங்கிருந்து புறப்பட்டார்.

    • சாமிதாஸ் மிகவும் கவலை அடைந்துள்ளார்.
    • உடல்கள் அனைத்தும் மேப்பாடியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு வரப்படுகிறது.

    கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி இதுவரை 160 பேர் உயிரிழந்துள்ளனர்.

    இந்த நிலையில் சூரல்மலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி நீலகிரியை சேர்ந்த மாணவி ஒருவர் மாயமாகி உள்ளார். இதுபற்றிய விவரம் வருமாறு:-

    நீலகிரி மாவட்டம் பந்தலூரை சேர்ந்தவர் சாமிதாஸ். இவருக்கு 9 வயதில் மகள் உள்ளார். சாமிதாசின் மனைவி சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார்.

    சாமிதாசின் மகள் தனது பாட்டி வீட்டில் தங்கி படிக்க ஆசைப்பட்டார். இதையடுத்து சாமிதாஸ் தனது மகளை, வயநாடு மாவட்டம் சூரல்மலையில் உள்ள தனது மனைவியின் பெற்றோர் வீட்டில் விட்டார்.

    இவரது மாமனார், மாமியார் அங்குள்ள தேயிலை தோட்டங்களில் வேலை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. சாமிதாசின் மகள் சூரல்மலையில் உள்ள பள்ளியில் படித்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று அதிகாலை சூரல்மலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சாமிதாசின் மாமனார் குடும்பம் முழுவதும் சிக்கி மாயமானது.


    மீட்பு படைவீரர்கள் விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டு, இந்த குடும்பத்தை சேர்ந்த 3 பேரின் உடல்களை மீட்டுள்ளனர். ஆனால் சாமிதாசின் மாமனார், மாமியார் மற்றும் சாமிதாசின் மகள் ஆகியோரின் நிலை இதுவரை என்னவென்றே தெரியவில்லை.

    மகள் நிலச்சரிவில் சிக்கிய தகவல் அறிந்ததும் சாமிதாஸ் உடனடியாக தனது உறவினர்கள் சிலருடன் கேரளா விரைந்தார்.

    சூரல்மலை பகுதிக்கு சென்ற அவர், அங்கு தனது மகள் மற்றும் உறவினர்களை தேடும் பணியில் ஈடுபட்டார். ஆனால் அவர்கள் உயிருடன் இருக்கிறார்களா? என்ன ஆனார்கள் என்பது இதுவரை தெரியவில்லை.

    மகளின் நிலை என்ன என்பது தெரியாததால், சாமிதாஸ் மிகவும் கவலை அடைந்துள்ளார். தற்போது அவர் மேப்பாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ளார்.

    சூரல்மலை பகுதியில் நிலச்சரிவில் சிக்கியவர்களின் உடல்கள் அனைத்தும் மேப்பாடியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு வரப்படுகிறது.

    அங்கு ஆஸ்பத்திரியின் நுழைவு வாயிலில் நிற்கும் சாமிதாஸ், ஆஸ்பத்திரிக்கு எடுத்து வரப்படும் உடல்கள் மற்றும், சிகிச்சைக்கு அழைத்து வருபவர்களை ஓடி சென்று அது தனது மகளாக இருக்குமோ என பார்த்து வருகிறார். ஆஸ்பத்திரியில் அவர் அங்கும் மிங்குமாக சென்று வருவது மற்றவர்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

    இதுவரை அவரது மகள் பற்றிய எந்தவொரு தகவலும் இல்லாததால் ஆஸ்பத்திரி வாசலில் அவர், கண்ணீர் மல்க தனது மகள் வருகைக்காக காத்து கொண்டிருக்கிறார். தனது மகளை எப்படியாவது கண்டுபிடித்து தாருங்கள் என கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளார்.

    • நாங்கள் தூங்குவதற்கு முன்பாக இடியுடன் கூடிய மழை பெய்தது.
    • எனது பக்கத்து வீட்டை சேர்ந்தவர்களை வீட்டிலிருந்து வெளியே வருமாறு அழைத்தேன்.

    வயநாடு:

    வயநாடு நிலச்சரிவில் சூரல்மலா கிராமத்தை சேர்ந்த லாட்டரி வியாபாரி பொன்னையன் என்பவர் நிலச்சரிவில் சிக்காமல் குடும்பத்துடன் உயிர்த்தப்பினார்.

    எனது வீட்டின் அருகே நடு இரவில் ஒரு பெரிய மரம் சாய்ந்து விழுந்தது. சத்தம் கேட்டு நான் என்னுடைய குடும்பத்துடன் வீட்டை விட்டு வெளியேறினேன். என்னுடைய மனைவி ஜிசா மற்றும் மகன்கள் ஸ்ரீராக், விகாஸ் ஆகியோருடன் என்னுடைய லாட்டரி கடைக்கு வந்தேன்.

    நாங்கள் தூங்குவதற்கு முன்பாக இடியுடன் கூடிய மழை பெய்தது. இடைவிடாத மழை பெய்ததால் அசம்பாவிதம் நடக்கலாம் என மனதிற்குள் தோன்றியது.


    இதனால் எனது பக்கத்து வீட்டை சேர்ந்தவர்களை வீட்டிலிருந்து வெளியே வருமாறு அழைத்தேன். அவர்கள் வரவில்லை. கடையில் குடும்பத்துடன் தங்கி இருந்த நான் நள்ளிரவில் எழுந்து பார்த்தேன்.

    வெளியில் கனமழை பெய்தது. காலையில் கடை ஷட்டரை உயர்த்த முயற்சித்தேன். அப்போது சேற்று நீர் உள்ளே வர ஆரம்பித்தது. சட்டர்களை உடனே இறக்கிவிட்டு கடையின் கூரையின் மீது மனைவி குழந்தைகளுடன் ஏரி அமர்ந்து கொண்டோம்.

    அப்போது அருகில் இருந்த ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. மரங்களை வேரோடு பிடுங்கிக் கொண்டு வெள்ளம் ஊருக்குள் பாய்ந்து கொண்டிருந்தது. இதனை கண்டதும் பதறினோம்.

    உதவிக்காக சத்தமாக அழுதேன். ஆனால் அருகில் யாரும் இல்லை. அவர்கள் பலியாகி விட்டனர். உயரமான இடத்திற்கு சென்றதால் குடும்பத்துடன் தப்பித்தேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வயநாடு மாவட்டத்தில் முண்டகையில் பயங்கர நிலச்சரிவும், காட்டாற்று வெள்ளமும் ஏற்பட்டது.
    • மக்கள் பணியில் ஈடுபட்டுள்ள நடிகையை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.

    கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளது. இதனால் திருச்சூர், கோழிக்கோடு, மலப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நேற்று முன்தினம் முதல் கனமழை பெய்தது. இதனால் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டி உள்ள இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. வயநாடு மாவட்டத்தில் முண்டகையில் பயங்கர நிலச்சரிவும், காட்டாற்று வெள்ளமும் ஏற்பட்டது.

    இதனால், வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 160-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இன்னும் பலர் சிக்கி உள்ளதால் மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த இயற்கை பேரிடர் இந்தியா முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இதனிடையே நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து மக்களும் உதவ வேண்டும் என கேரள மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன் மற்றும் அம்மாநில கவர்னர் ஆரிப் முகமது கான் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    இந்நிலையில், நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்கள் வழங்கும் பணியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினருடன் இணைந்து நடிகை நிகிலா விமல் ஈடுபட்டு வருகிறார். இதுதொடர்பான காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    நடிகை நிகிலா விமல், மலையாளம், தமிழ், தெலுங்கு மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். மலையாளத்தில் இவர் நடித்து வெளியான 'குருவாயூர் அம்பலநடையில்' ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து தற்போது மக்கள் பணியில் ஈடுபட்டுள்ள நடிகையை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.

    • வயநாட்டில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவு நாடு முழுவதும் கவலையை ஏற்படுத்தி உள்ளது.
    • நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நாட்டில் உள்ள அனைத்து மக்களும் ஒன்றிணைந்து உதவவேண்டும்.

    கேரளாவில் பெய்த பருவமழையின் கோர தாண்டவத்தால் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் 160 பேர் பலியாகி உள்ளனர்.

    வயநாட்டில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவு நாடு முழுவதும் கவலையை ஏற்படுத்தி உள்ளது. அங்கு மேற்கொள்ள வேண்டிய மீட்பு நடவடிக்கைகளை முதல்-மந்திரி பினராயி விஜயன் துரிதப்படுத்தி உள்ளார். மேலும் அவர் நிலச்சரிவில் சிக்கி பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் நிதியுதவி வழங்க வேண்டுகோள் விடுத்துள்ளார். அதனை முதல்-மந்திரி நிவாரண நிதிக்கு வழங்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

    அதேபோல் நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நாட்டில் உள்ள அனைத்து மக்களும் ஒன்றிணைந்து உதவவேண்டும் என்று கவர்னர் ஆரிப் முகமது கான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    • ஏராளமான மாவட்டங்கள் மலையோர பகுதிகளை ஒட்டி இருக்கின்றன.
    • நூற்றுக்கணக்கான வீடுகள் மண்ணுக்குள் புதைந்துள்ளன.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் ஏராளமான மாவட்டங்கள் மலையோர பகுதிகளை ஒட்டி இருக்கின்றன. கனமழை பெய்யும்போது மலை பகுதிகளில் நிலச்சரிவு ஏற்படுவது வழக்கமான ஒன்றாகவே இருக்கிறது. அவ்வாறு ஏற்படும் நேரத்தில் உயிர்பலியும் ஏற்பட்டு விடுகிறது.

    தற்போது வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவு மிகப்பெரிய சம்பவமாக மாறி இருக்கிறது. அதிலும் முண்டக்கை பகுதி மிகப்பெரிய அழிவை சந்தித்து இருக்கிறது. அங்கிருந்த நூற்றுக்கணக்கான வீடுகள் மண்ணுக்குள் புதைந்துள்ளன. இதனால் அந்த இடத்தில் வீடுகள் தடமே இல்லாமல் காட்சி அளிக்கிறது.

    முண்டகை இதற்கு முன்பும் ஒருமுறை மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. தற்போது நிலச்சரிவு ஏற்பட்ட அேத இடத்தில் கடந்த 1984-ம் ஆண்டு இந்த பகுதி யில் கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது. அந்த நிலச்சரிவில் 14 பேர் பலியாகி இருக்கின்றனர். ஏராளமானோர் கை, கால்களை இழந்தனர்.

    அந்த நிலச்சரிவின் போதும், தற்போது இருப்பது போன்றே முண்டகை பகுதி தரை மட்டமாகி இருக்கிறது. அனைத்து இடங்களும் மண்ணாலும், மரங்கள் மற்றும் பாறைகளாலும் மூழ்கடிக்கப்பட்டுள்ளன.

    அந்த நிலச்சரிவின்போது எடுக்கப் பட்ட புகைப்படத்தை கேரள மாநில பேரிடர் மேலாண்மை ஆணைய உறுப்பினர் செயலாளராக இருக்கும் சேகர் குரியகோஸ், "கேரளாவின் மேற்கு தொடர்ச்சி மலையில் நிலச்சரிவு ஏற்படக்கூடிய வரலாறு மற்றும் நிலச்சரிவு பாதிப்புக்குள்ளான பகுதிகளின் வரலாறு" என்ற கட்டுரையில் நினைவு கூர்ந்துள்ளார்.

    1984-ம் ஆண்டு எடுக்கப் பட்ட புகைப்படம் மற்றும் தற்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 1958-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் கோட்டயம் கூட்டிக்கல் பகுதியில் நடந்த நிலச்சரிவில் 29 பேர் பலியாகினர்.
    • 2020-ம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் இடுக்கி பெட்டி முடி பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் 66 பேர் பலி யானார்கள்.

    கடவுளின் தேசம் என்று அழைக்கப்படும் கேரள மாநிலத்தில் அடிக்கடி பேரழிவு ஏற்படுகிறது. கனமழை பெய்யும்போது நிலச்சரிவு, கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பொதுமக்கள் பாதிக்கப்படுகிறார்கள். இதுபோன்று நடக்கும்போது உயிர்ப்பலியும் ஏற்பட்டு பேரழிவு ஏற்படுகிறது.

    அதிலும் வயநாடு உள்ளிட்ட பகுதிகளில் ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதங்களிலும், அதனையொட்டிய மாதங்களிலும் பல பேரழிவுகள் நடந்திருக்கின்றன. நேற்று (ஜூலை 30-ந்தேதி) வயநாட்டில் ஏற்பட்ட கடும் நிலச்சரிவில் 150-க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி விட்டனர்.

    இதேபோன்று 1974-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் இடுக்கி அடிமாலி பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் 33 பேர் பலியாகினர். 1958-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் கோட்டயம் கூட்டிக்கல் பகுதியில் நடந்த நிலச்சரிவில் 29 பேர் பலியாகினர்.

    2019-ம் ஆண்டு வயநாடு புதுமலை, மலப்புரம் காவலப்பாறை, கோழிக்கோடு விலங்காடு ஆகிய இடங்களில் ஆகஸ்டு மாதத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 60 பேர் இறந்து விட்டனர். 11 பேர் காணாமல் போயினர்.

    2020-ம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் இடுக்கி பெட்டி முடி பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் 66 பேர் பலி யானார்கள். இதேபோன்று 2001-ம் ஆண்டு திருவனந்தபுரம் ஆம்புரியில் ஏற்பட்ட நிலச்சரிவில் 38 பேரும், 2021-ம் ஆண்டு இடுக்கி கொட்டிக்கல் மற்றும் கொக்கையார் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் 21 பேரும் பலியாகி இருக்கின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வயநாட்டில் நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
    • அமைச்சர் வீணா ஜார்ஜ் சென்ற வாகனம் மலப்புரம் மாவட்டம் மஞ்சேரி அருகே இன்று விபத்துக்குள்ளானது.

    கேரளாவில் பெய்த பருவமழையின் கோர தாண்டவத்தால் மலைக்கிராமங்கள் மண்ணில் புதைந்தன. வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 160 பேர் பலியானார்கள். மேலும் நிலச்சரிவில் சிக்கியுள்ள பலரின் கதி என்ன? என்பது தெரியாத நிலையில், ராணுவம் மீட்புப்பணியில் இறங்கி உள்ளது. வயநாட்டில் நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    இந்நிலையில் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் 160 பேர் பலியாகியுள்ள நிலையில், கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் சென்ற வாகனம் மலப்புரம் மாவட்டம் மஞ்சேரி அருகே இன்று விபத்துக்குள்ளானது.

    அவர் வயநாடுக்கு சென்றபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. காயமடைந்த அவர் மஞ்சேரி மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வருகிறார் என்று அம்மாநில சுகாதாரத் துறை மற்றும் உள்ளூர் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    • கடந்த 2000-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் மும்பையில் பெய்த கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சுமார் 67 பேர் பலியானார்கள்.
    • கேரள மாநிலம் அம்பூரியில் கனமழை காரணமாக கடந்த 2001-ம் ஆண்டு நவம்பர் 9-ம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவில் சுமார் 40 பேர் இறந்தனர்.

    கேரள மாநிலம் வயநாட்டில் கனமழையால் நள்ளிரவில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. வயநாடு மாவட்டத்தில் உள்ள மேம்பாடி, சூரல்மலை, முண்டகை ஆகிய பகுதிகளில் அடுத்தடுத்து நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இதில் இதுவரை 150-க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.

    இந்தியாவில் கடந்த காலங்களில் பல்வேறு இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. அதில் பலர் மாண்டுள்ளனர்.

    கடந்த காலங்களில் நாட்டை உலுக்கிய மிக மோசமான நிலச்சரிவுகள் பற்றிய விவரம் வருமாறு:-

    * அசாம் மாநிலம் கவுஹாத்தி: கனமழை காரணமாக 1948-ம் ஆண்டு செப்டம்பர் 18-ம் தேதி அன்று நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த நிலச்சரிவால் ஒரு கிராமம் முழுவதும் புதையுண்டது.

    * மேற்குவங்காள மாநிலம் டார்ஜிலிங்: கடந்த 1968-ம் ஆண்டு அக்டோபர் 4-ம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவில் 60 கி.மீ நீளமுள்ள நெடுஞ்சாலை 91 பகுதிகளாக சிதைந்தது. நிலச்சரிவில் சிக்கி ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியானார்கள்.

    * உத்தரகாண்ட் மாநிலம் மல்பா: 1998-ம் ஆண்டு ஆகஸ்டு 11 முதல் 17-ம் தேதி வரை இங்கு தொடர்ச்சியான நிலச்சரிவுகள் ஏற்பட்டன. அதில் 380-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

    * மகாராஷ்டிரா மாநிலம் மும்பை: கடந்த 2000-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் இங்கு பெய்த கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சுமார் 67 பேர் பலியானார்கள். ரெயில்களும் தடம்புரண்டு விபத்துக்குள்ளாயின.

    * கேரள மாநிலம் அம்பூரி: கனமழை காரணமாக கடந்த 2001-ம் ஆண்டு நவம்பர் 9-ம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவில் சுமார் 40 பேர் இறந்தனர். அதே நேரம் பாதிப்புகளும் மிக அதிகமாக இருந்தன.

    * உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத்: கடந்த 2013-ம் ஆண்டு ஜூன் 16-ம் தேதி உத்தரகாண்டில் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, ஏற்பட்ட நிலச்சரிவில் 5,700-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். இதில் தமிழகத்தில் இருந்து ஆன்மிக பயணம் செய்தவர்களும் அடங்குவார்கள். சுமார் 4,200-க்கும் மேற்பட்ட கிராமங்கள் பாதிக்கப்பட்டன. நாட்டின் மிக மோசமான நிலச்சரிவாக கேதார்நாத் சம்பவம் பார்க்கப்படுகிறது.

    * மகாராஷ்டிரா மாநிலம் மாலின்: கடந்த 2014-ம் ஆண்டு ஜூலை 30-ம் தேதி மாலினில் உள்ள ஒரு கிராமத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 151 பேர் இறந்தனர் மற்றும் 100 பேர் காணாமல் போயினர்.

    * கேரள மாநிலம் மூணாறு: கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் இந்த பகுதியில் பெய்த கனமழை காரணமாக நள்ளிரவு நேரத்தில் மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 67 பேர் பலியானார்கள்.

    • நாங்கள் விரைவில் நேரில் வந்து மக்களுக்கு தேவையான உதவிகளை செய்வோம்.
    • வயநாட்டில் உள்ள சூழ்நிலையை தொடர்ந்து கவனித்து, தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருகிறோம்.

    புதுடெல்லி:

    கேரளாவின் வயநாட்டில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலர் இறந்துள்ளனர். மக்களவை எதிர்க்கட்சி தலைவரும், வயநாடு தொகுதி முன்னாள் எம்.பி.யுமான ராகுல் காந்தி, பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூற இன்று வயநாடு செல்ல திட்டமிட்டு இருந்தார்.

    அவருடன் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியும் செல்ல இருந்தார். இதற்கிடையே ராகுல் காந்தியின் வயநாடு பயணம் நேற்று இரவு திடீரென ரத்து செய்யப்பட்டது.

    இதுதொடர்பாக ராகுல்காந்தி தனது எக்ஸ் தளத்தில், 'வயநாட்டுக்கு சகோதரி பிரியங்காவுடன் நேரில் சென்று மக்களுக்கு ஆறுதல் கூற திட்டமிட்டு இருந்தேன். ஆனால், கனமழை, மோசமான வானிலை காரணமாக நாங்கள் அங்கு செல்ல இயலாது என்று அதிகாரிகள் தெரிவித்து விட்டனர். நாங்கள் விரைவில் நேரில் வந்து மக்களுக்கு தேவையான உதவிகளை செய்வோம். வயநாட்டில் உள்ள சூழ்நிலையை தொடர்ந்து கவனித்து, தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருகிறோம்' என்று பதிவிட்டுள்ளார்.

    ×